அன்று மதியத்துக்கு வகைவகையாக சமைத்து ஒரு பெரும் விருந்தே படைத்திருந்தாள் சரசு. வசுமதி ரசித்து சாப்பிட்டாள். மாணிக்கத்துக்கு வீடு நிறைந்தாற்போல் இருந்தது. எப்போதுமே கலகலப்பாகப் பேசும் மதன் அன்று அமைதியாகச் சாப்பிட்டான்.
“என்னடா ஆச்சு உனக்கு? உடம்பு ஏதும் சரியில்லையா..ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என்று கேட்டாள் சரசு.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா.” என்று மதன் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்தான் சங்கர்.
சாப்பிட்டு முடித்ததும் முதல் ஆளாய் சங்கரின் அறையில் வந்து அமர்ந்து கொண்டான் மதன்.
பாத்திரங்களை எடுத்து வைக்க முயன்ற வசுமதியைத் தடுத்தாள் சரசு.
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேம்மா,, நீ போயி அவங்களோட பேசிட்டு இரு.”
வசுமதிக்கு அதுவும் பிடித்திருந்தது. நண்பர்களுக்கு இடையே இருந்தால் நேரம் போவதே தெரியாது. மனதுக்கு இதமாக இருக்கும். அவளும் சங்கரின் அறைக்கு வந்தாள்.
“என்னாச்சு மதன்.. வரும்போது நல்லாத்தானே இருந்தீங்க?” என்றபடி வந்து சங்கருக்கு அருகே அமர்ந்து கொண்டாள்.
“சரி, எதோ முக்கியமான விசயம் பேசணும்னு சொன்னியே.. என்ன அது?” என்ற சங்கரின் கேள்விக்கு,
“அது.. அது வந்து..” வசுமதியைப் பார்த்தபடி சற்றுத்தயங்கினான் மதன்.
“இனிமே நாங்க ரெண்டுபேரும் ஒண்ணுதானேடா.. ஏன் தயங்குறே?”
“அதுக்கில்ல சங்கர், என்னப்பத்தி உனக்குத் தெரிஞ்சதெல்லாம் இவங்களுக்கும் தெரியணும்ல.”
“அதை நான் சொல்லிக்கிறேன். இப்ப பிரச்சினை என்னன்னு நீ சொல்லு.”
“என் அம்மாவோட ஃப்ரெண்டுன்னு சொல்லிட்டு ஒரு லேடி வந்திருக்காங்க.”
“..?”
“எனக்கு அவங்களைப் பார்க்கப் பிடிக்கலை. இனிமேல் பாட்டியைத்தவிர வேறெந்த உறவும் எனக்குத் தேவையில்லை.”
“ஏன்? உனக்கு உங்க அம்மா மேலதானே கோவம். அவங்க ஃப்ரெண்டைப் பார்க்கிறதுல என்ன பிரச்சினை?”
“அவங்க சம்பந்தப்பட்ட எந்த விஷயமும் எனக்கு வேண்டாம்.”
வசுமதியைப் பார்த்துப் பேசலானான் மதன்.
“என்னோட ரெண்டு வயசுல அப்பா இறந்துட்டாராம். அவங்க ஒரு நர்ஸ். எனக்கு அஞ்சு வயசு ஆகும்போது அவங்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைச்சதாம். போயிட்டாங்க. அதுக்கப்புறம் ஆறேழு முறை லெட்டர் போட்ருக்காங்க. என்னையும் பாட்டியையும் விசாரிச்சி. நான் ஏழு படிக்கிறவரைக்கும் பணம் அனுப்பிட்டு இருந்திருக்காங்க. அதுக்கப்புறம் எந்தத் தொடர்பும் இல்ல. என்னோட குழந்தைப்பருவம் முழுக்க எனக்கு தாய்ப்பாசம் கிடைக்கல. அவங்க முகம்கூட ஞாபகத்துல இல்ல. அது தவிப்போ, ஏக்கமோ அல்லது பெருங்கோபமோ.. உங்களால புரிஞ்சிக்க முடியுமா என்னோட உணர்வுகள் எப்படி இருக்கும்னு?”
பதில் சொல்லமுடியாமல் விக்கித்து நின்றாள் வசுமதி. மனதில் இத்தனை துயரத்தை வைத்துக்கொண்டு வெளிப்பார்வைக்கு இந்த உலகத்திலேயே சந்தோசமான மனிதனாக எப்படி இவனால் இருக்க முடிகிறது.
“பைத்தியக்காரன் மாதிரி, பன்னெண்டு படிக்கிறவரைக்கும் அந்த லெட்டர்ஸை எல்லாம் திரும்பத் திரும்பப் படிச்சி ஏங்கியிருக்கேன். தனியா அழுதுருக்கேன். இப்பக்கூட எப்பவாவது எங்கேயாவது ஸ்கூல் முடிஞ்சி, அம்மாகூட ஸ்கூட்டில போற பசங்களைப் பார்த்தா எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா? சிறகு முளைக்காத குஞ்சுகளுக்கு தாய்ப்பறவை உணவூட்டும் ஒரு படத்தைப் பார்த்தாக்கூட என்னால தாங்க முடியலையே.”
அவனைத் தன்னோடு சாய்த்து அனைத்துக் கொண்டான் சங்கர்.
“விட்றா.. அவங்களே வந்தாலும் நான் பார்க்க மாட்டேன். அவங்க ஃப்ரெண்டைப்போய் எதுக்குப் பார்க்கணும்.”
விலகிக் கொண்டான் மதன்.
மதன் ‘அம்மா’ என்ற வார்த்தையை மறந்தும்கூட உச்சரிக்காதது வசுமதியின் மனதைப் பிசைந்தது.
“நீங்க இழந்த குழந்தைப்பருவ வாழ்க்கையும், உங்க ஏக்கமும் வேதனையும் புரியுது. ஆனா, ஒரு இளம் விதவைத்தாய் தன் மகனின் எதிர்காலத்துக்காக, அல்லது தன்னோட பிழைப்புக்காக கடல் கடந்து போன தாய்க்கு, தன் குழந்தையைப் பார்க்கமுடியாம, அந்த அன்பை உணர முடியாம தனிச்சிப் போக ஏதோவொரு ஸ்ட்ராங்கான காரணம் இல்லாமலா இருந்திருக்கும்?”
வசுமதியின் பேச்சை விளங்கிக்கொள்ள முயற்சி செய்தான் மதன். அவளை அமைதியாகப் பார்த்தான். அவள் சொல்லும் இந்தக் கோணம் புதிதாக இருந்தது.
“அப்படி ஏதோ ஒரு காரணத்தால தனக்கு ஒரு குழந்தை இருந்தும் இல்லாம வாழற வாழ்க்கை ஒரு தாய்க்கு, அதுவும் கணவனை இழந்தவங்களுக்கு எத்தனை வேதனையா இருந்திருக்கும்?”
“எனக்கு அப்படித் தோணல.. அவங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழறதுக்காகக்கூட என்னை விட்டுட்டுப் போயிருக்கலாமே?”
“இருக்கலாம். ஆனா, அப்படியே இருந்தாலும் பெத்து அஞ்சு வயசு வரைக்கும் வளர்த்த தன் குழந்தையை, யாருக்காகவோ அல்லது எதுக்காகவோ விட்டுட்டுப் போறது எந்தப் பொண்ணுக்குமே சுலபம்னு நீங்க நினைக்கிறீங்களா? அது நரக வேதனைதான். இருந்தாலும் ஒரு தாயா உங்களை நெருங்க முடியாத அவங்களோட மன வேதனையோட வெளிப்பாடு அல்லது அந்த வேதனைக்கு முற்றுப்புள்ளிதான் இன்னைக்கு உங்களை ஒருத்தங்க பார்க்க வந்ததுக்கும் காரணமாக்கூட இருக்கலாம் இல்லியா?”
அவளையே கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சங்கர்.
“ஆமாடா.. எது எப்படியோ, நீ அந்த லேடியைப் பார்க்கிறதுதான் சரின்னு தோணுது.”
மதன், தன் இரு கைகளாலும் தலையைப் பிடித்தபடி அமைதியாக இருந்தான்.
“அப்புறம் மதன், அவங்க வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருக்கலாம்கிறது, உங்களோட இந்த வயசுக்கான எண்ணமா இருக்கலாம். ஆனா அப்படி இருந்தாலும் இல்லேன்னாலும் அம்மா அம்மாதானே?
அவங்களை உங்க அம்மாவா நினைக்கலேன்னாலும், ஒரு மகனா சிந்திக்கிறதை விட்டுட்டு யாரோ ஒரு இளைஞனா இருந்து அந்த அபலைப் பெண்ணுக்கு என்ன நடந்துருக்கும்னு தெரிஞ்சிக்கவாச்சும் நீங்க அந்த அம்மாவைப் போய்ப் பார்க்கலாமே?”
மதனின் போன் அடித்தது. பாட்டி பேசினார்.
“எங்கடா இருக்க?”
“சங்கர் வீட்ல.”
“சரி சரி, இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடு. நம்மளைத் தேடி வந்தவங்களைப் பார்க்க மாட்டேன்னு சொல்றது மரியாதை இல்லடா.. வந்துடு, என்ன?”
“வரேன் வரேன்.” போனை வைத்தான்.
“எங்க இருக்காங்களாம்?”
“தெரியலடா.. கிண்டியில் எதோ ஒரு ஹோட்டல்ல தங்கியிருக்காங்களாம். நேத்து மதியம் லேண்ட் லைன்ல பாட்டிகிட்ட பேசினாங்களாம். இன்னிக்கு ஈவ்னிங் வர்றதா சொல்லியிருக்காங்க. அதுக்கப்புறம் மழை, கரண்ட் பிரச்சினை. இதுவரைக்கும் போன் எதுவும் வரலை.”
“நானும் வரவா?”
“வேண்டாம் சங்கர்.. நீ உன் வேலையைப் பாரு. நானே பார்த்துக்கறேன்.” அவனுக்குள் ஒரு தெளிவு பிறந்தாற்போல் இருந்தது.
சரசு மூவருக்கும் டீ கொண்டு வந்தாள்.
“சங்கரு.. டீயைக் குடிச்சதும் இவளைப்போயி இவங்க வீட்ல விட்டுட்டு வந்துடு. அப்பா சொன்னாங்க.”
சரியென்று தலையாட்டினான் சங்கர். இவ்வளவு நேரம் நிம்மதியாக இருந்த வசுமதிக்குள் பயம் பரவியது.
********
வீட்டின் முன்னால் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. மலரும் சரவணனும் எட்டிப் பார்த்தார்கள். கருப்பு முழுக்கை சட்டையும் ப்ளூ ஜீன்ஸும் அணிந்திருந்த ஒரு இளைஞன், பைக்கில் இருந்தபடியே வீட்டைப் பார்த்து நிற்க, அவன் பின்னாலிருந்து கையில் பேக்கோடு வசுமதி இறங்கினாள். அவர்களைத் தொடர்ந்து, டி-ஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்திருந்த இன்னொரு இளைஞனும் தன் வண்டியில் வந்து இறங்கினான். கேட்டைத் திறந்து உள்ளே வந்த வசுமதி, அந்த கருப்புச்சட்டை இளைஞனைப் பார்த்து தயங்கி நின்றாள். அவனும் தன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவளுடன் உள்ளே வந்தான். டி-ஷர்ட் இளைஞன் உள்ளே வராமல் காம்பவுண்ட் கேட்டுக்கு அருகிலேயே நின்று கொண்டான்.
தன் மகள் இந்த அளவுக்குத் துணிவாள் என்று மலர் எதிர்பார்க்கவில்லை. சரவணன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க, பின்னால் தனது கண்ணாடியை சரியாகப் போட்டபடி பிச்சை வாத்தியார் வராண்டாவிலிருந்து பார்த்தார். கூடவே துரைப்பாண்டியும். துரைப்பாண்டியின் கண்களில் அனல் பறந்தது.
“அப்பா, இது சங்கர்.. என்னைக் கட்டிக்கப் போறவர்.” அவனின் கையை தன் கையோடு சேர்த்துப் பற்றியபடி சொன்னாள் வசுமதி. எல்லாவற்றுக்கும் முன்னரே மனதைத் தயார் படுத்திக்கொண்டதால் சரவனனுக்கு இது பெரிய அதிர்ச்சியாகத் தெரியவில்லை. மலருக்குத்தான் என்ன நடக்குமோ என்று வயிற்றில் புளியைக் கரைத்தது.
“நான்.. வந்து.. பெரியவங்களோட முறைப்படி பொண்ணு கேட்டு வர்றதா சொல்லியிருந்தேன். ஆனா, அதுக்குள்ள இவ அவசரப்பட்டுட்டா. இது தப்புன்னு சொல்லி விட்டுட்டுப் போகத்தான் வந்தேன்.”
சங்கர், சரவணனின் கண்களைப் பார்த்துப் பேசினான். அவன் பேசுவதைப் பார்த்து வாயில் கைவைத்தாள் மலர். துரைப்பாண்டி வேட்டியை மடித்துக் கட்டியபடி வராண்டாவிலிருந்து இறங்கினான்.
“லேய்.. சும்மா இரு.” அவனைப் பிடித்து இழுத்தார் வாத்தியார்.
“உங்க சம்மதத்தோடுதான் இந்தக் கல்யாணம் நடக்கணும்னு எங்க வீட்ல சொல்லிட்டாங்க. அதுதான் எங்களுக்கும் ஆசை. நீங்க சம்மதிக்கலேன்னாலும் எங்க கல்யாணம் நடக்கும்.”
“யாருலெ நீ? எங்க வந்து என்ன பேசிட்டு இருக்க?” விடுவிடுவென வந்து சங்கரின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான் துரைப்பாண்டி. அவனைப் பிடித்து பின்பக்கமாக இழுத்தார் சரவணன்.
“விடுப்பா.. இதெல்லாம் தப்பு!”
“அத்தான்.. இது இந்த வீட்டுப் பிரச்சினை. நீங்க வராதீங்க.” என்று சீறினாள் வசுமதி. இப்போது கேட்டுக்கு வெளியே நின்றிருந்தவனும் உள்ளே வந்துவிட்டான்.
“இது உங்க ஊரு இல்ல. சட்டுன்னு யாரையும் சட்டையைப் பிடிக்கக் கூடாது.” சங்கர், துரைப்பாண்டியின் கையைப் பிடித்து மெதுவாக இறக்கினான்.
“என்னடா செய்வ.. நீ என்ன பெரிய புடுங்கியா?” சங்கரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான் துரைப்பாண்டி.
“ஏ துரை..” சரவணன் அவனைப் பிடித்து இழுப்பதற்குள் அவன்மீது பாய்ந்தான் அந்த டி-ஷர்ட் இளைஞன்.
இடது கையால் சட்டையைப் பிடித்து, அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
“யே.. மதன் வேண்டாம்.. விட்ருடா.. குடிச்சிக் குடிச்சி ஒடம்பைக் கெடுத்து வச்சிருக்காராம். எதாவது ஆயிடப் போவுது. விடு விடு. நீ போ. நான் பார்த்துக்கறேன்.” சங்கரும் சரவணனும் அவர்களை விலக்கிவிட்டார்கள்.
எங்கிருந்தோ பிரபுவும் ஓடி வந்தான்.
“ஸாரி..ஸாரி மேடம்.. மன்னிச்சிடுங்க. சங்கர் மேல கைவச்சதும் என்னால பார்த்துட்டு இருக்க முடியலை.” சரவணனிடமும் வசுமதியிடமும் மன்னிப்புக் கேட்டான் மதன். வராண்டாவில் ஒட்டிய படியில் உட்கார்ந்த துரைப்பாண்டியை பிரபுவும் பிச்சை வாத்தியாரும் உள்ளே இழுத்துப் போனார்கள்.
சங்கரை தர்மசங்கடமாய்ப் பார்த்தார் சரவனன். “ஸாரிப்பா.. அவன் அறிவில்லாம கை நீட்டிட்டான். எதுவும் மனசுல வச்சிக்காதீங்க. அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.”
“ஐயோ.. பரவால்ல..நீங்க எதுவும் நினைச்சிக்காதீங்க.. என்னோட ஃப்ரெண்டும் இப்படிப் பன்ணியிருக்கக்கூடாது.”
வசுமதி அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவளால் அவன் அவமானப்பட்டது முள்ளாய்க் குத்தியது. அவன் கன்னத்தைத் தடவியபடி பார்வையாலேயே மன்னிப்புக் கேட்டாள். அவளுக்கு அழுகை வரவில்லை. கோபம் வந்தது. அம்மாவின் மேல், அப்பாவின் மேல், அந்தத் துரைப்பாண்டியின் மேல்.. என்று எல்லார் மீதும் கோபம் வந்தது.
“மன்னிப்பு கேட்டா சரியாயிருமா? நான் என் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த ஒருத்தரை அவங்க எப்படி அடிக்கலாம்? இதை நீங்க பார்த்துட்டு சும்மா இருப்பீங்களா?” சரவணனைப் பார்த்து பொரிந்து தள்ளினாள் வசுமதி.
துரைப்பாண்டியை வீட்டுக்குள் விட்டுவிட்டு வெளியே வந்த பிரபு அப்பாவின் அருகே நின்றுகொண்டான்.
“கொஞ்சம் அமைதியா இரும்மா.. தம்பி, நீங்க கிளம்புங்க.. நாம அப்புறம் பேசிக்கலாம். நீ உள்ள போ வசு.” என்றார் சரவணன்.
****
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.