Skip to content
Post Views: 4,956
தூறல் – 22
பொங்கிப் பெருகிய அவளது கண்ணீரை தன் இரு பெருவிரல் கொண்டு துடைத்தான் குரு. அழக்கூடாது என்று கண்களால் மிரட்டி காதலாய் முறைத்தான். நெருக்கமாக உரிமையாக அவள் கண்களோடு கண்கள் கலந்து காதலை கொடுத்து எடுக்கும் தருணம்.
Advertisement
“காதல் இருக்கிறவர்தான் வேற ஒருத்தனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணினீங்க இல்லையா..?”
இதற்குமுன் இதைப்பற்றி கேட்டபோது அவள் வெளிப்படுத்திய குரலின் தாக்கமும் சீற்றமும் வேறு. ஆனால் இந்த நொடி அப்படி ஒரு அமைதி, கெஞ்சல், கொஞ்சல், ஆதங்கம்.
Advertisement
Advertisement
“அப்படியே பேசி முடிச்சாலும் என்னை தனியா விட்டுட்டு கல்யாணம் பண்ணிட்டு போயிடுவியா..?”
அர்ஜுன் தாஸ் குரல் பாடகி வசுந்தரா தாஸின் குரல்போல் குழைந்தது.
Advertisement
“சொல்லுடி… என்னை விட்டு போயிடுவியா…?”
அவள் கன்னம் பற்றியிருந்த விரல்களுக்கு அழுத்தம் கொடுத்து தன்னை நோக்கி இன்னும் நிமிர்த்தினான்.
இல்லை… வாய்ப்பே இல்லை என்பதுபோல் அழுத்தமாய் இடவலமாய் தலையசைத்தவளின் கண்களில் மீண்டும் கண்ணீர்.
அந்த ஈரக் கண்களில் தன் இதழ்களை பதித்து நீர் வரத்தை நிறுத்தி இருந்தான் அவள் அமிதாப்பச்சன்.
அவன் இதழ் சுவைத்த அந்த கண்ணீரில் உவர்ப்பில்லை… தித்தித்தது… அது அவளது ஆனந்தத்தின் வெளிப்பாடு அல்லவா. உரிமையான அவனது முதல் முத்தம்… அவளுக்கே அவளுக்கான முத்தம்… முழுமையான காதலை மட்டுமே சுமந்த நேச முத்தம்.
“பணத்தைக் கொடுத்து என் மனசை மொத்தமா நொறுக்கிட்டியேடி… அந்த நிமிஷம் மணலா சரிஞ்சு போனேன் தெரியுமா..?”
அந்த எஃகு குரலில் தெறித்து வந்த வலியில் துடித்துப் போனவள் இறுக்கமாய் அவனை முதுகோடு அணைத்து நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவனும் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான். கண்மூடி நின்றவர்கள் நொடிகளை நிமிடங்களாக மாற்றிக் கொண்டிருந்தனர்.
புண் படிந்து புரையோடிக் கிடந்த அவர்கள் காயங்கள் அனைத்தும் இந்த ஒற்றை அணைப்பில் உயிர் தீண்டிய தழுவலில் மந்திரக்கோல் பட்டதுபோல் மறைந்து போயின.
“இன்னும் மனசுக்குள்ள வேற ஏதாவது குழப்பம் இருக்கா என் செல்லக் கிறுக்கிக்கு..?”
அவள் உச்சந்தலையில் கன்னம் சாய்த்து சிரித்தபடியே கேட்டான் குரு.
பட்டென தலையை நிமிர்த்தியவள் “செல்லக் கிறுக்கியா..?” என்றாள் அவன் முகம் பார்த்தபடி.
அவளது பிறை நெற்றி அவன் இதழ்களில் உரச மென்மையாய் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தவன் “ஆமா… எப்பவும் இந்த வாயாடி என் செல்லக் கிறுக்கிதான்…” என்றான் கண்களில் குறும்பு கொப்பளிக்க.
“நான் வாயாடியா..?”
முறைப்புடன் கேட்டவள் அவன் அடர்ந்த மீசையை செல்லமாய் பிடித்து இழுத்தாள்.
“இல்லேன்னு பொய் சொல்லச் சொல்றியா..?”
கேட்டவனின் இதழ்கள் குறும்பாய் முறுவலித்தன.
“அந்த வாய் இல்லேன்னா நீங்க பரசுராமன் பட்டாபிராமன்னு சொல்லி ஏதாவது வில்லங்கத்தை இழுத்துட்டே இருந்திருப்பீங்க. சரியான அழுத்தக்காரன் நீங்க… இன்னொரு ஆளை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கும்போதே உங்க மனசுக்குள்ள நான் முழுசா இருந்திருக்கேன். தியாகின்னு நினைப்பா இல்ல மூளை கழண்டு போனதால அப்படி யோசிச்சீங்களா..?”
“நான் ஏன் அப்படி யோசிச்சேன்னு அப்புறம் விளக்கமா சொல்றேன்…”
“இப்ப மட்டும் எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்னு தைரியம் வந்துருச்சோ..?”
இருவரும் ஒருவரை ஒருவர் விலக்கிக் கொள்ளவில்லை… விலகவும் விரும்பவில்லை… அவள் இடுப்பை கட்டிக் கொண்டு அவனும் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அவளும் பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தனர்.
“ஆமா… தைரியம் வந்துடுச்சு… அப்படி ஒரு தைரியத்தை எனக்குள்ள கொடுத்துட்டா என் அஞ்சு…” என்று சிரித்தவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்ட அவனது அஞ்சு என்று அழைப்பில் அவளுக்குள் பரவசம்.
திடீரென ஏதோ நினைத்துக் கொண்டு வெடித்துச் சிரித்தான் குரு. என்ன என்பதுபோல் புருவம் ஏற்றி இறக்கி கேட்டாள் அஞ்சலி.
“எனக்கு தெரிஞ்சு யானைதான் 18 லிருந்து 22 மாசம் வரைக்கும் குட்டியை சுமக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். நீ என் நண்பனை 32 மாசம் சுமந்து பெத்த அதிசய மனுஷன்னு அன்டைக்கு சொன்ன பாரு…” என்றவன் மீண்டும் குபீரென சிரித்தான்.
“கொஞ்ச நஞ்ச வெறியையா எனக்குள்ள கிளப்பி விட்டீங்க..?” என்றவள் செல்லமாக முறுக்கிக் கொண்டாள்.
“சந்தடி சாக்குல குரங்கு பன்னி அப்படி இப்படின்னு எனக்கு எவ்வளவு திட்டு…”
“பின்ன..? என்னை நோண்டிவிட்டு பார்த்தா வாய மூடிட்டு பேசாம இருக்க முடியுமா..?”
முகத்தை சுருக்கி செல்லமாகக் கூறி மீண்டும் அவன் நெஞ்சில் உரிமையாக சாய்ந்து கொண்டு சட்டை பட்டனை திருகினாள்.
ஆனந்தமாக அவளை இன்னும் அழுத்தமாக அணைத்துக் கொண்டான் குரு.
“நீங்க சரியாவே சாப்பிடல…”
அவன் வலது பக்க மார்பு சட்டையை மெல்ல நீவியபடியே அவள் கூற,
“நீ சுத்தமா சாப்பிடல…”
கலைந்து போன அவளது அடர்ந்த முடியை வருடி சரி செய்தபடியே அவன் கூறினான்.
“உங்களுக்காக ஆப்பத்துக்கு ஆசை ஆசையா ஆட்டி வச்சேன் தெரியுமா..?”
“ஆசை ஆசையா செய்யணும்னு நினைச்சவதான் பணத்தை கொடுத்து அங்கே இருந்து என்னை பத்தி விட்டியா..?”
“எல்லாம் பத்திரமா ஃபிரிட்ஜ்ல எடுத்து வச்சுட்டுதான் வந்திருக்கேன்… நம்ம வீட்டுக்கு போகலாமா..?”
‘நம்ம வீடு…’ அந்த வார்த்தை தொலைந்து போன அவனது அடையாளத்தை மீட்டுக் கொடுத்த உணர்வு. இதயம் உணர்ச்சிப் பெருக்கில் தள்ளாடியது. ஏதோ நினைத்துக் கொண்டவன் பட்டென அவளை தன்னிலிருந்து விலக்கி கண்கள் சுருக்கி அவளைப் பார்த்தான்.
“ஃபிரிட்ஜ் ஏதுடி..? நான் வாங்கிக் கொடுக்கவே இல்லையே…”
“மாசா மாசம் பணம் கட்டுற மாதிரி ஒரு கடையில இருந்து எடுத்தேன்…”
அவன் அவளை முறைக்க “நானும் சம்பாதிக்கிறேன்தானே… உங்க ஒருத்தர் சம்பாத்தியத்துல எல்லா செலவுகளையும் பார்க்க முடியாது… நமக்கு தலைநாள்ல பொம்பளப்புள்ள இருக்கா… எவ்வளவு செலவு இருக்கு… பொறுப்பான பொண்டாட்டியா நடந்துக்கிறேன்னு சந்தோசப்படுங்க…” என்றவள் சுழிந்திருந்த அவனது அடர்ந்த புருவத்தை நீவ நீர்பட்ட கங்காய் அப்படியே கோபம் வடிந்து அவளை மீண்டும் அணைத்து தோளில் புதைந்து கொண்டான் குரு.
அவள் சிந்திச் சிதறடிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அவனை தன்னிலை இழக்கச் செய்கின்றன. இதயம் குருவி இறகாக மேலே எம்பி பறக்கிறது. அவன் தேடிய தாயின் மடியும் தாரத்தின் நெடியும் அவளிடம் மட்டுமே புதைந்து கிடக்கிறது என்பதை முழுமையாக நம்பியது அவன் மனம்.
மெல்லிதான அவனது உடல் நடுக்கத்தில் அவன் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள் அஞ்சலி. அந்த பரந்த முதுகினை புன்னகையோடு மெல்ல வருடினாள்… அவன் அடர்ந்த பிடரி கேசத்தில் விரல் கோர்த்து கோதினாள்.
“இன்டைக்கே எல்லா ஆறுதலையும் சந்தோசத்தையும் மொத்தமா கொடுத்து மூச்சடைக்க வச்சு என்னை கொன்னுடாதடி…”
அவளை விட்டு விலகாமலே தொண்டை அடைக்க கரகரப்பாய் கூறியவன் இன்னும் இறுக்கி அணைத்தான்.
மோனத்தில் அமைதியாய் அதே நிலையில் மீண்டும் இருவரும் கண்மூடி தங்களை மகிழ்ச்சியோடு ஆசுவாசம் செய்தனர். அவர்களது தவக்கோலத்தை கலைத்தது அவனது கைப்பேசி அழைப்பு… விருப்பமே இல்லாமல் விலகி தன் சட்டைப் பையில் இருந்து எடுத்தான்.
பெயரைப் பார்த்தவன் இதழ்களில் பளீரென புன்னகை.
அவள்புறம் செல்போனை திருப்பிக் காட்ட பரசு காலிங் என்று வந்தது.
“இவன்தான் அந்த 32 மாச அதிசயப் பிறவி… உன் பாஷையில அந்த பன்னி மூஞ்சி வாயன்…” என்றவன் அடக்க முடியாமல் கடகடவென சிரிக்க அவன் தோளில் செல்லமாய் அடித்தவள் “எடுத்து பேசுங்க…” என்று கூறி அவனை விலகி நடக்க ஒற்றைக் கையால் அவளைப் பிடித்து இழுத்து இடுப்போடு வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் மறு கையால் அழைப்பினை ஏற்றான்.
“சொல்லுடா…” புது துள்ளலுடன் இவனது குரல்.
“மச்சி… எங்க இருக்க..?”
“அத்தை வீட்ல டா…”
“சரி அங்கேயே இரு… பத்து நிமிஷத்துல வரேன்… ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…” என்றவன் இணைப்பை துண்டித்திருந்தான்.
“பால் இருக்கா அஞ்சு… பரசு இங்கே வர்றானாம்…”
“எதுக்கு..?” என்று ஒரு மார்க்கமாக அவனை பார்த்தாள் அஞ்சலி.
“திரும்பவும் முருங்கை மரம் ஏறிடாதடி… உன்னை பார்க்க இல்ல… என்னை பார்க்க… அவன் கல்யாண விஷயமா அவன்கிட்ட பேசினது உண்மை… உன்னைப்பத்தி எல்லாம் எதுவும் சொல்லல… கல்யாணத்திலேயே விருப்பம் இல்லாம இருந்தவன்கிட்ட கல்யாணத்தோட முக்கியத்துவத்தை பத்தி சொல்லி அவன் மனசை கொஞ்சம் கரெக்ட் பண்ணி வச்சிருந்தேன்.. அவ்வளவுதான்… நீ வேற எதையும் கன்ஃப்யூஸ் பண்ணிக்காதே…”
“அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண தெரியுது… அந்த அவசியம் உங்களுக்கும் தேவைன்னு மூளைக்கு உறைக்கலையோ..?”
“அதுதான் மத்தால அடிச்சு விரலை உடைச்சு நல்லா உறைக்கிற மாதிரி சொல்லிட்டியே…”
உதடு மடக்கி சிரித்தபடி அவன் கூற பட்டென அவனிடம் இருந்து விலகி அவன் கைவிரலை பற்றி திருப்பிப் பார்த்தாள்.
வீக்கமும் வலியும் என்றோ சரியாகி இருந்தது.. ஆனாலும் அவனது விரல்களை மெல்ல வருடினாள்.
“ரொம்ப வலிச்சதா..?”
“உண்மையை சொல்லட்டுமா..?”
அவனது நீண்ட விரல்களை தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு சொல் என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தாள் அஞ்சலி.
“சரியான அடி… பயங்கரமான வலி… ஆனா மனசு வலியை உணரல…என் செல்லக் கிறுக்கியோட காதலைத்தான் உணர்ந்தது…”
அவள் கன்னத்தில் பதிந்திருந்த அந்த விரல்களால் ஆசையாக வருடியபடி அவன் கூற நெகிழ்ச்சியோடு அவனையே சில நொடிகள் பார்த்தவள் அவன் உள்ளங்கையில் குறிப்பாக அந்த நடுவிரலில் அழுத்தமாய் முத்தம் பதித்திருந்தாள்.
கண்கள் சிரிக்க அவளைப் பார்த்தவன் மீண்டும் அவள் நெற்றியில் மென்மையாய் முத்தம் பதித்து கூடத்திற்கு செல்ல சமையலறையில் பால் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து தேநீர் தயாரிக்க தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டாள் அஞ்சலி.
சொன்னது போன்றே சில நிமிடங்களில் பரசுராமன் அங்கு வந்திருந்தான். சராசரி உயரத்தில் பார்க்க பந்தமாக அமைதியாக தோற்றமே ஒருவித நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. ராதாவை அவனுக்கு நன்றாக தெரியும். அங்கு அவருக்கு பதிலாக வேறு ஒரு இளம் பெண் இருப்பதைக் கண்டு ஒரு நொடி திகைத்து தன் நண்பனை அவசரமாக திரும்பிப் பார்க்க புன்னகையோடு அவனை ஏறிட்டான் குரு.
“மச்சி…” என்று மெல்லிய குரலில் பரசுராமன் இழுக்க “சொல்றேன்டா… முதல்ல டீ எடுத்துக்கோ…” என்றவன் அஞ்சலி நீட்டிய குவளைகளில் ஒன்றை தான் எடுத்துக் கொண்டு மற்றொன்றை அவனுக்கும் கொடுத்தான்.
“சொல்லுடா… என்ன முக்கியமான விஷயம்..?”
தேநீர் பருகி முடித்து கோப்பைகளை ஓரமாக வைத்து நிமிர்ந்து அமர்ந்தான் குரு.
“ஏதேதோ பேசி எப்படியோ என் மனசை கரைச்சிட்டடா… கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் மச்சி…” சொன்னவனின் முகத்தில் புது வெட்கம்.
“வாவ்… செம டா… கேக்கவே சந்தோசமா இருக்கு மச்சான்… எந்த போதி மரத்துக்கு கீழ போய் உட்கார்ந்தடா..?” என்றவன் சிரித்தபடியே அவன் தொடையில் தட்டினான்.
“நீ சொன்ன நிதர்சனமான சில விஷயங்கள்தான் என்னை நிறைய யோசிக்க வச்சது. துணையில்லாம வாழ்ந்திட முடியும்னு நினைக்கிறது இந்த வயசுக்கு சரிதான். ஆனா இன்னும் பத்து பதினஞ்சு வருஷம் கழிச்சு ஒரு பெரிய வெறுமையை மனசு உணர்ந்திடும். தனிமை ரொம்ப கொடுமை டா… அது எனக்கும் புரியுது… நமக்கான ஒரு துணையும் கண்டிப்பா வேணும்… அதான் முடிவு பண்ணிட்டேன்… பொண்ணுகூட பாத்தாச்சு… தூரத்து சொந்தம்தான்… பெரிய வசதி எல்லாம் இல்ல… சாதாரண குடும்பம்… காசு பணத்தை வச்சு என்ன செஞ்சிட முடியும்..? நிம்மதியும் சந்தோஷமும் நாம வாழப் போற வாழ்க்கையில தானடா இருக்கு…”
நண்பனின் பேச்சில் மகிழ்வோடு தலையாட்டிக் கொண்டான் குரு.
“சரி… இப்ப சொல்லு… இவங்க யாரு..?”
சமையல் அறையின் வாசலில் சுவற்றில் சாய்ந்து ஓரமாக நின்றிருந்த அஞ்சலியை காட்டி மெல்லிய குரலில் கேட்டான் பரசுராமன்.
“இப்போ நீ சொன்னியே… அதெல்லாம் எனக்கும் பொருந்தக்கூடிய வார்த்தைகள்தானே. கடவுள் எனக்கான துணையையும் என்கிட்டயே அனுப்பி வச்சிட்டார்…” மகிழ்வோடு தன்னவளை பார்த்துச் சிரித்தபடி கூறினான் குரு.
“டேய் மச்சி…” மகிழ்ச்சியோடு கூறியவன் தன் நண்பனை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
‘இங்கு வா…’ என்று அஞ்சலியை கண்களால் அழைக்க அவளும் மெல்லிய புன்னகையுடன் அருகில் வந்து நின்றாள்.
“இவ பேரு அஞ்சலி… புஷ்பாஞ்சலி… புதைஞ்சு போன என்னோட வாழ்க்கையை தோண்டி எடுத்து இன்னும் நீ வாழ்ந்து கழிக்க சந்தோஷங்களும் நிம்மதியும் மிச்சமா நிறைய இருக்குன்னு எனக்கு புரிய வச்சவ…”
நிறைவோடு கூற மகிழ்வோடு அவளைப் பார்த்து திருப்தியாக தலையசைத்தான் பரசுராமன்.
“கல்யாணம் பண்ணிட்டியாடா… ஒரு வார்த்தை சொல்லலையே…” மெல்லிய கோபம் பரசுராமனிடம்.
“ஹேய்… இன்னும் இல்லடா… உன்கிட்ட சொல்லாம எப்படி..?”
அதே நேரம் ராதாவும் சவியோடு உள்ளே நுழைந்திருந்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு நண்பனை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பி இருந்தான் குரு. அவனது நெருக்கமான நண்பன்… அவன் குழப்பங்களை தீர்த்து வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தெளிவாக அவனிடம் விளக்கவும் வேண்டி உள்ளது. மனம்விட்டு அவனிடம் பேசுவதற்காகவே தனிமையில் அவனோடு கிளம்பி இருந்தான் குரு.
மருமகனின் முகம் மின்னி ஜொலிப்பதிலும் முகத்தில் தெரிந்த மகிழ்ந்த சிரிப்பிலும் சண்டைக்காரர்கள் இருவரும் சமாதானம் அடைந்துவிட்டனர் என்பதை புரிந்து கொண்ட ராதாவிற்கோ அத்தனை நிம்மதி.
(தொடரும்)
error: Content is protected !!