அவன் சொன்னது போலவே அதிகாலையில் அவள் எழும் நேரத்தை கணித்து அவளை அழைத்தான்.
அந்நேரம் அவளின் முகம் வெளிறி போய் இருந்தது.
“பிரித்வி” என்ற அவள் குரலில், அவ்வளவு பதற்றம்.
“என்ன ஆழி? ஏன் இப்படியிருக்க? கண்ணெல்லாம் வீங்கியிருக்கு. அழுதியா?”
“பிரித்வி.. எனக்கு ப்ளீட் ஆகுது..” இருவரின் இதயத் துடிப்பும் ஓர் நொடி நின்று துடிக்க பதறித் துடித்தார்கள்.
“அம்மாகிட்ட சொன்னியா? டாக்டருக்கு கால் பண்ணியா? அவங்க என்ன சொன்னாங்க ஆழி? பேசாம உடனே கிளம்பி ஹாஸ்பிடல் போ. நான் அம்மாகிட்ட சொல்றேன். ஒன்னும் இருக்காது. பயப்படாத” என்று கத்தினான்.
அவசர அவசரமாக மருத்துவமனை சென்றாள். அதற்குள் அவளுக்கு ரத்தப்போக்கு அதிகரித்திருந்தது.
பிரித்வி அலாஸ்காவில் இருந்து சியாட்டல் வருவதற்குள் ஆழினிக்கு எல்லாமே முடிந்திருந்தது.
“ப்ளசெண்ட்டல் அப்ரப்சன் (Placental abruption)” காரணமாக அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு அதனால் ஐந்து மாதக் கருவாக இருந்த குழந்தையை இழந்திருந்தார்கள்.
அந்த இழப்பை பகிர்ந்து ஆழினிக்கு ஆறுதல் சொல்லக் கூட அவன் இல்லாதது அவளை அதிகம் பாதித்தது.
குழந்தை உருவானதையும் அவனோடு இணைந்து கொண்டாட முடியவில்லை. குழந்தையின் இழப்பையும், துக்கத்தையும் பகிர, அழுது புலம்ப, ஆறுதலாக தோள் சாய அவன் அங்கில்லை. அது அவளை மனத்தளவில் அடித்து போட்டது.
ஐந்து மாத கருவை இயற்கை முறையில் வலிக்க வலிக்க பெற்றெடுத்த ஆழினிக்கு வலி மரத்துப் போன உணர்வு.
மூன்றாம் நாள் அவளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதாக சொன்னார்கள். அன்றுதான் பிரித்வியும் வந்தான்.
“ஆழி” என்றான் உடைந்த கரகரத்த குரலில். அவனை நிமிர்ந்து பார்த்த ஆழியின் கண்ணில் ஆழி தேங்கி நின்றது. அப்படியே அவளை தன் வயிறோடு சேர்த்தணைத்து, “சாரி ஆழி.” என்றவன் கண்களிலும் கண்ணீர். அன்று பிடிவாதமாக அம்மா வீடு சென்றாள் ஆழினி. பிரித்வியும் அவளோடு சென்றான்.
அவர்களின் துக்கத்தை தூரம் அதிகரிக்கச் செய்திருந்தது. ஆனால் பக்கம் வந்தப் பின்பும் பிரியம் கூடவில்லை. நெருக்கம் நேசத்தை நிறைக்கவில்லை. நிம்மதியையும் தரவில்லை.
பிரித்வி அவசர விடுமுறை எடுத்து மனைவியிடம் வருவதற்கே மூன்று நாள்கள் ஆகியிருந்தது. அலாஸ்கா, சியாட்டல் அங்கிருந்து தோஹா வழியே சென்னை வந்திருந்தான். பயண அலைச்சலை விட பிள்ளையை இழந்த தவிப்புதான் அதிகம் அவனுக்கு.
ஆழினி ஆசைப்பட்டபடி, “ஆண் குழந்தை”. ஆனால் அவனை கையில் ஏந்தும் வரம் அவளின் கை வராமல் போனதில் மனமுடைந்து போனாள்.
அவளை முழுதாக இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியிருந்தார் மருத்துவர். அவள் அம்மா வீட்டில் இருந்தாலும் அத்தை, மாமாவும் அடிக்கடி வந்து பார்த்துச் சென்றார்கள்.
“நான் அப்பவே சொன்னேன். நான் சொன்னதை கேட்டிருக்கலாம் நீ. லீவ் எடுத்து வீட்ல இருந்திருக்கலாம்” என்றார் கற்பகம். அவருக்குமே அத்தனை வருத்தம். மருத்துவனையில் கேள்வி கேட்டு சண்டை போட்டு குழந்தையை காப்பாற்ற முடியாது என்றதும் மருமகளுக்கு துணையாக நின்றிருந்தார்.
அந்த துக்கமெல்லாம் இன்று கையாலாகாத கோபமாக மாறியிருந்தது. அவரின் புலம்பலை கேட்டும் ஆழினி அமைதியாக படுத்திருந்தாள்.
“நான்தான் வந்துட்டேன் இல்ல ஆழி. இனி உன் கூடவே இருப்பேன்” என்று பிரித்வி திரும்ப திரும்ப சொன்னது அவளைத் தொடவேயில்லாதது போல எதிர்வினையின்றி மௌனமாக படுத்திருந்தாள். மென்மையாய் அவளின் பாதம் பற்றி அழுத்திக் கொடுத்தான். அவளின் மனஅழுத்தத்திற்குதான் அவனிடம் மருந்தில்லை.
அவள் பணி புரிந்ததே மருத்துவமனை என்பதால் அவளின் உடல் நிலையையும், மனநிலையையும் புரிந்துக் கொண்டார்கள் நிர்வாகத்தினர். அதிலும் மருத்துவர் கார்த்திக்கின் மருத்துவமனை என்பதால் அவளுக்கு முழுதாக இரண்டு மாதம் விடுமுறை கிடைத்தது.
பிரித்வியும் நான்கு மாத விடுமுறையில் வீடு வந்திருந்தான். மனைவியை விட்டு நகராமல் அவளுடன் இருந்தான். அவள் தேடிய போது கிடைக்காத நெருக்கம் இப்போது கிடைத்திருந்தது. ஆனால், அவளால்தான் அதே நெருக்கத்தை காண்பிக்க முடியவில்லை. தனக்குள் ஒடுங்கி போனாள்.
இரண்டாம் மாதம், “நம்ம வீட்டுக்கு போவோமா ஆழி?” என்று அவன் கேட்டதும், சரியென்று தலையசைத்தாள்.
மூன்றாம் மாத தொடக்கத்தில், “நான் நெக்ஸ்ட் வீக் ஹாஸ்பிட்டல் ஜாயின் பண்ணணும் பிரித்வி. போகவா? வேணாமா?” என்று அவள் கேட்க, “இதென்ன கேள்வி ஆழி. போய்ட்டு வா. உன்னை நான் வந்து ட்ராப் பண்றேன். இப்படி வீட்லயே இருக்கிறதை விட வேலைக்கு போய்ட்டு வர்றது உனக்கொரு நல்ல சேஞ்ச்சா இருக்கும்” என்றான்.
அவள் பதிலே பேசவில்லை.
இம்முறை அவள் வேலைக்கு செல்வதை இந்திராணியே விரும்பவில்லை. அப்புறம் கற்பகம் விடுவாரா என்ன?
“என்னம்மா ஆழி, இவ்வளவு சீக்கிரம் வேலைக்கு போறேங்கற? உன் உடம்பு முழுசா தேற வேணாமா?” என்று கேட்டார்.
“பிரித்வி லீவ்ல இருக்கான்ல? அவனோட நீயும் வீட்ல இரு. குழந்தை போய்டுச்சேன்னு அதையே நினைச்சுட்டு இருக்காம. அடுத்தத பாருங்க” என்று அறிவுரை சொன்னார். அவரை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அவள்.
“வேலையை விட்டுடு” என்றார் முடிவாக.
எதற்கும் பதில் பேசவில்லை அவள். மௌனத்தால் தன் எதிர்ப்பை தெரிவித்தாள். அவ்வளவுதான்.
அவள் மருத்துவமனை செல்லத் தொடங்கியதும், அவள் நடவடிக்கையில் கொஞ்சம் மாற்றம் வரும் என்று பிரித்வி எதிர்பார்த்தானோ என்னவோ. ஆனால் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.
பிரித்வி நெருங்கினாலே ஒதுங்கினாள். முதல் இரு மாதங்கள் ஆறுதல், அணைப்பு அதற்கெல்லாம் தடை போடவில்லை அவள். அதன் பிறகு ஒதுக்கம் காண்பித்தாள்.
அவளுள் அனிச்சையாக ஒரு பயம் உருவாகியிருந்தது. ஒருவேளை நாளையே நான் திரும்ப கருவுற்றால், திரும்பவும் தனியாகத்தான் தவிக்கப் போகிறேனா? அதற்கு தள்ளியே இருப்பது மேல் என்று ஒதுங்கினாள்.
பிரித்வி எல்லை மீற நினைக்கவில்லை. ஆறுதலை கூட அணைப்பின் வழியே கடத்த விரும்பிய ஆண் மகனுக்கு அவளின் ஒதுக்கம் மனதளவில் பலத்த அடியை கொடுத்ததோ?
“என்ன ஆழி பிரச்சினை உனக்கு? ஏன் இப்படி பண்ற?” என்று சமயங்களில் கோபப்பட்டான்.
“ப்ச், விடுங்க பிரித்வி. உங்கம்மா வரப் போறாங்க” அவன் தொடுகையில் உடல் உருகினாலும் மனம் இறுகியிருந்த காரணத்தினால் உதறிச் சென்றாள்.
“இன்னும் ரெண்டு வாரத்துல நான் ஷிப்புக்கு கிளம்பணும் ஆழி” என்று பிரித்வி சொன்ன போது அவனை அப்பட்டமான அதிர்ச்சியுடன் ஏறிட்டாள்.
“மீண்டும் பிரிவா?” என்று மனம் நொந்து போனாள்.
அவன் கப்பலுக்கு செல்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, “உன் கூட இன்னும் கொஞ்சம் நாள் இருக்கணும் போலருக்கு ஆழி” என்று உணர்ச்சிகரமாக அவன் சொன்ன போது, “அப்போ என் கூடவே இங்கேயே இருந்துடுங்க” என்றாள் அழுத்தமாக. அவன் கண் பார்த்து.
பிரித்வி அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.
“ஆழி என்ன சொல்ற?”
“நான் சொன்னது உங்களுக்கு நல்லாவே கேட்டிருக்கும்”
“நான் காண்ட்ராக்ட் சைன் பண்ணிட்டேன் ஆழி. இப்போ போய் இப்படி சொல்ற?”
இம்முறை பிரிவின் தாக்கம் இருவருக்குமே அதிகமாக இருந்தது.
அடுத்த ஆறு மாதங்கள் முன்பு போல அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. தூரம் எப்படி நெருக்கத்தை தரும்?
எத்தனை வாக்குவாதம் செய்தாலும், சண்டையிட்டாலும், கோபமோ, தாபமோ அருகில் இருந்தால் முறைத்து, பேசி, அடித்து, பிடித்து, ஆறுதல் சொல்லி, அணைத்து, ஊடல் கூடலாக முடிந்திருக்கும். குறைந்தப்பட்சம் மற்றவரின் மனத்தை, மனநிலையை புரிந்து தெரிந்து நடந்துக் கொண்டிருப்பார்கள்.
இப்போதோ அவனது பகலில் அவள் உறங்க, அவனது இரவில் அவள் பணியில் மும்முரமாக இருந்தாள். இருவருக்கும் இடையில் விழுந்த இடைவெளியை நிரப்பத் தெரியாமல், அவர்களுக்கு நடுவில் வந்திருந்த ஆழி தூரத்தை கடக்கத் தெரியாமல் தத்தளித்தார்கள். மூழ்கினார்கள்.
பிரித்வி ஆறு மாத வேலை முடிந்து வீடு வந்த போது ஆழினி மாறியிருந்தாள்.
“அப்பாடா ஆழி. நீ இன்னமும் என் மேல கோபமா இருக்கியோன்னு நினைச்சேன்” என்று அவன் பெருமூச்சு விட்டான்.
அந்த விடுமுறையில் அவர்களுக்குள் நெருக்கம் இருந்தாலும் ஆழினி கர்ப்பமாகி விடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அவனை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொன்னாள். அவளும் மருத்துவரின் பரிந்துரையில் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டாள்.
“நீ தேவையில்லாம பயப்படுற ஆழி”
“இருக்கலாம் பிரித்வி. பட் இனிமே என்னால தனியா இருக்க முடியாது” என்றாள் திட்டவட்டமாக.
“தனியா இருக்க முடியாதுன்னா? என்ன அர்த்தம்? உன் கூட எங்கம்மாப்பா இருக்காங்களே. அப்புறம் என்ன?”
“நான் கல்யாணம் பண்ணது உங்களை”
“என் வேலையை தெரிஞ்சுதான் கல்யாணத்துக்கு ஓகே சொன்ன நீ? அது தெரிஞ்சு தானே எனக்கு கழுத்தை நீட்டின? நான் ஒன்னும் கட்டாயப்படுத்தி உனக்கு தாலி கட்டலையே?”
“இல்லதான். ஃபர்ஸ்ட் டைம் உங்களை மீட் பண்ணப்பவே உங்களை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு சொன்னேன் தானே நான்? அன்னைக்கே உங்களை அப்படியே விட்டுட்டு போய் இருக்கணும் நான். தெரியாம வந்து இப்படி தனியா கிடந்து சாகு..” என்றாள் இறுதியாக.
“ஆ..ழி..னி” என்று ஒவ்வொரு எழுத்தாக கோபத்துடன் உச்சரித்தான்.
அதன் பிறகு இதே காரணத்துக்காக அடிக்கடி அவர்களுக்குள் முட்டிக் கொண்டது.
கற்பகம் மகனுக்கு சாதகமாகவே பேசினார். அவளைத்தான் வேலையை விட சொன்னார்.
“என் பையனை வேலைக்கு போக வேணாம்னு சொல்லுவியா நீ? முதல்ல நீ வேலைக்கு போகாம வீட்ல இருந்து ஒழுங்கா உடம்பை தேத்தி இந்த டைம் நல்லபடியா பிள்ளை பெத்துக்கற வழியை பாரு” என்று அவளுக்குதான் அறிவுரை சொன்னார்.
அவளுள் கனன்று கொண்டிருந்த திரியை தூண்டி பற்ற வைத்தது அவரின் வார்த்தைகள்.
“அம்மா..” என்று அதட்டி, பிரித்வி அவரைக் கண்டித்தாலும் கற்பகம் தன் பிடியில் இருந்து மாறவில்லை.
“உன் பொண்டாட்டியை வேலையை விட்டுட்டு வீட்ல இருக்கச் சொல்லு பிரித்வி. உங்களுக்கு கல்யாணமாகி மூனு வருஷமாக போகுது. உனக்கு வயசாகுதா இல்லையா? இப்போ பிள்ளை பெத்துக்காம...”
“அதுக்கு நான் ஏன் வேலைக்கு போகாம இருக்கணும்?” என்று கேள்வி கேட்டாள் ஆழி.
“ஹான், அப்புறம் வேலைக்கு போனா..” என்று கற்பகம் பேசும் போதே கோபமாக அறைக்கு சென்று விட்டாள்.
வேலையை நிரந்தரமாக விட்டுவிட்டு வீட்டில் அமர்ந்து, தனிமையில் பிரித்வி இல்லாத பொழுதுகளில் அவனை நினைத்து தவித்து, அவனுக்காக ஏங்கி அவளுக்கு நிச்சயமாக பைத்தியம் பிடித்து விடும்.
பிரித்வி அவள் பின்னேயே அறைக்குள் வந்து, “ஆழி, அம்மா சொல்றதுலாம் பெருசா எடுத்துக்காத பிளீஸ்” என்று அவளை சமாதானப்படுத்த நெருங்கினான்.
“நீங்க நான் சொல்றதையும் இதே போல லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்றீங்க தானே? என் பேச்சை பெருசா எடுத்துக்காம? கண்டுக்காம? ம்ம்?”
“இப்ப என்னதான் பண்ண சொல்ற என்னை?”
“உங்களை ஒன்னும் பண்ண சொல்லல நான். என்னை விட்டுடுங்க பிரித்வி. என்னால இதுக்கும் மேல சமாளிக்க முடியும்னு தோனல. இதுதான் என் முடிவு. உங்களால உங்களை மாத்திக்க முடியாதப்போ, அதுவும் எனக்காக உங்களால மாற முடியாதப்போ, நான் மட்டும் உங்களுக்காக மாறணும்னு எப்படி எதிர்பார்க்கலாம் நீங்க?”
“என்னதான் உன் முடிவு ஆழி? தெளிவா சொல்லு” அத்தனை நெருக்கத்தில் நின்று பிரித்வி கேட்க, தடுமாறி சற்றே பின்னகர்ந்து நின்றவள், பதிலே சொல்லவில்லை. ஆனால், அவனைப் பிரிந்து அம்மா வீடு வந்து செயலில் தன் முடிவை சொன்னாள்.
அவள் முடிவை மாற்ற அவன் எந்தவித முயற்சிகளும் செய்யவில்லை. அவள் விலகி வரவும், அத்தோடு முடிந்தது என அவனும் விலகிக் கொண்டான். அப்போதிருந்த கோபத்தில் நிம்மதியாக உணர்ந்தாள். இப்பொழுது யோசித்தால் அழுகை வந்து தொலைத்தது.
“என்னைத் தேடி வரல நீங்க பிரித்வி. என்னைத் தேடவே இல்லையா நீங்க?” என்று இருளில் மூழ்கத் தொடங்கியிருந்த அறையில் அமர்ந்து அவனது புகைப்படத்தை பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த ஸ்கேன் புகைப்படத்தை பார்க்க பார்க்க மனமுடைந்து போக, கண்ணீருடன் அந்தப் புகைப்படத்தை வருடினாள்.
“ஆழி.. ஆழி, மாடில தானே இருக்க?” என்று அம்மாவின் குரல் கேட்கவும், படக்கென்று எழுந்து சென்று முகம் கழுவி வந்தாள்.
“இங்கதான் மா இருக்கேன்” என்று குரல் கொடுத்தாள்.
“உனக்கு காஃபி எடுத்துட்டு வந்தேன். இந்தா குடி” என்று அவர் நீட்டியதை மறுக்காமல் வாங்கி அருந்தினாள்.
மகளின் முகம் பார்த்தவருக்கு வருத்தமாகி போக, அவளின் தலைக் கோதி கொடுத்தார்.
“பவித்ரன் நமக்கு ஹெல்ப் பண்ணுவான்னு நினைச்சேன் மா. ஆனா அவனுக்கு கால் போகவேயில்ல. மதியம் போன்ல பேசினான். இப்போ என்னன்னா.. எனக்கு மட்டும் ஏன்மா இப்படி நடக்குது”
“ஏதாவது வேலையா இருப்பான் ஆழி. நீயா எதையாவது யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காத. அந்தப் பையன் ஹெல்ப் பண்றேன்னு சொன்னான் இல்ல? கண்டிப்பா பண்ணுவான். வெயிட் பண்ணு” என்றார்.
“ம்ம்” காஃபியை அருந்தியபடியே முதலில் கணவனின் எண்ணுக்கு அழைத்துப் பார்த்தாள். அவனது வாட்ஸ்அப், முகநூல், மெயில் என்று மீண்டும் வலம் வந்தாள். ம்ஹூம் எந்த முன்னேற்றமும் இல்லை. அடுத்து பவித்ரனை அழைத்தாள். அவனது எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
கோபமும் இயலாமையும் மனத்தை சோர்வுற செய்ய அலைபேசியை தூக்கி எறிய போனாள்.
“ஆழி” என்று அவளை தடுத்துப் பிடித்தார் இந்திராணி.
“வீட்ல காய்கறி ஒன்னுமே இல்ல. போய் வாங்கிட்டு வருவோமா?”
“இப்பவாம்மா? நாளைக்கு வாங்கிக்கலாம் விடுங்க”
“இப்போ போகலாம் வா ஆழி. கொஞ்சம் பழங்கள், காய்லாம் வாங்கிட்டு வருவோம்”
“வேணாம்னா விடும்மா” என்று சலிப்புடன் சொன்னவளை, அலுத்து அமர விடாமல் வற்புறுத்தி அருகில் இருந்த பல்பொருள் அங்காடிக்கு அனுப்பி வைத்தார் அவர்.
“நீங்க வரலையாம்மா? அப்போ நான் போகலை போங்க. என்னால தனியாலாம் அவ்ளோ தூரம் போக முடியாது” என்று அவள் அடமாக நிற்க, கண்டிப்புடன் அவளை முறைத்து பெரிய பட்டியலுடன் பையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.
அம்மா வீடிருந்த பகுதியில் அமைந்திருந்த அந்த அங்காடியில் அவ்வளவாக கூட்டமில்லை.
மெல்ல ஒவ்வொரு பகுதியாக சென்று பொருள்களை தேடி எடுத்துக் கொண்டிருந்தாள். அச்சமயம் அவளைக் கடந்தவன் அவளை கூர்ந்து பின் தொடர, எரிச்சலுடன் வேகமாக அடுத்த பகுதிக்கு சென்றாள்.
அங்கேயும் தயக்கத்துடன் அவள் பின்னே வந்தவன், “ஹலோ சிஸ்டர்” என்றழைத்து அவளை நிறுத்தினான். ஆழினி திரும்பி பார்த்து நகரப் போக, “மிஸஸ் பிரித்வி” என்று சத்தமாக அழைத்தான்.
அந்தப் பெயர் அவளை பிடித்து நிறுத்தியது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.