கார்த்திகேயன் அவரது வலைப்பக்கத்தில் இந்த கவிதையை பதிவு செய்துவிட்டு மடிகணினியை அப்படியே மூடிவைத்தார்.
நம்மை வெளிப்படுத்திக்கொள்வதே ஒரு விடுதலைதானே? இசையாக, எழுத்தாக, ஓவியமாக ஏதேனும் ஒரு கலையாக நம்மை நாமே பிரதியெடுத்துகொள்வது நம்மிது நமக்கான பிரியத்தைக் காட்டும்.
கார்த்திகேயனுக்கு ரேவதி போவது சுத்தமாக மனத்திற்கு ஒப்பவில்லை. இருந்தாலும், என்ன செய்து அவரை நிறுத்தவென்று தெரியவில்லை. அலைபாய்ந்த மனத்தை எழுத்தைக் கொண்டு ஒரு நிலைப்படுத்த எண்ணி கவிதை என்று எதையோ எழுதியவருக்கு அதைத் தொடரவும் மனமில்லை. மடி கணினியை மூடிவிட்டு நிமிர்ந்து அவரது ஸ்டடி டேபிளைப் பார்க்க,
‘The Forty Rules of Love’ என்று ‘Elif Shafak’ எழுதிய புத்தகத்தைக் கண்டார். வெகு நாட்களாக அது அங்கே புறக்கணிக்கப்பட்டு கிடந்தது. என்றைக்கோ தொடங்கிவிட்டு தொடராமல் மறந்து விட்டிருந்தார். நினைவூட்டி முடிக்க வைக்க சொல்லாத புத்தகம். ஆனந்தன் படித்துவிட்டு வைத்த ஞாபகம். Elif Shafak துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர். ப்ரான்ஸில் பிறந்து, துருக்கியில் வளர்ந்து, அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வேலை செய்துள்ளவரின் பார்வை விசாலமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை.
ஒவ்வொரு புத்தகத்திற்குள்ளிருந்தும் ரகசியமான இசை ஒன்று வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எவரது காதுகளுக்கு அந்த இசை கேட்கிறதோ அவரே அந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கிறார்கள் என்று சீனாவில் ஒரு நம்பிக்கை என்று எஸ்.ரா எழுதிய நூலக மனிதர்கள் வாயிலாக கார்த்திகேயன் அறிந்துகொண்டார். அப்படித்தான் அக்கணம், அந்தப் புத்தகத்தை எடுக்க ஒரு உந்துதல். ஒரு பெண், பெண்ணைப் பற்றி எழுதியதே அக்கதை. அதன் தொடக்கம் அப்படியிருக்கும். ஒருவேளை அது கார்த்திகேயனுக்கு அப்போது ருசிக்காமல் இருந்திருக்கலாம்.
அதுவும் புனைவு என்பதினால் ஈர்ப்பில்லாமல் இருந்திருக்கக் கூடும். இன்று அந்தப் புத்தகத்தின் ரகசிய இசை இன்று கார்த்திகேயனுக்குக் கேட்டிருக்கலாம்.
எல்லா(Ella) என்ற பின் நாற்பதில் இருக்கும் பெண்ணின் கதையாக ‘காதலின் நாற்பது விதிகள் தொடங்குகிறது’. ஒரு கதையைப் படித்து அதனை பற்றிக் கருத்து தெரிவிப்பதே அவளுக்கு இப்போது கிடைத்திருக்கும் வேலை. அவள் படிக்கும் கதை பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூமி என்ற சூஃபியைப் பற்றியது. சூஃபி தத்துவம் எனப்படுவது இஸ்லாமின் உட்பிரிவு. ஞானத்தை அடைய ஒரு வழியாக சூஃபி தத்துவம் பார்க்கப்படுகிறது.
அந்த புத்தகத்தின் முதல் பத்து பக்கங்களைத் தாண்டுவது கடினமாக இருந்தது. புதிதாக ஒரு பாதையில் செல்லும்போது ஏற்படுகின்ற ஒரு இடர் போல. அந்த எழுத்தாளரின் நடைக்கும், வேகமில்லாத நடைக்கும் பழகினார். அதன்பின் ஐம்பது பக்கங்களை எப்படி கடந்தார் என்றே தெரியவில்லை.
2008 இல் நடந்த எல்லா’வின் வாழ்க்கைக்கும் பதிமூன்றாம் நூற்றாண்டிற்கும் காலச்சக்கரமின்றி, அந்த காகிதங்களின் வழி வேகமாக சென்றுவந்தார்.
என்ன செய்வதென்றே தெரியாத ஒரு வெறுமை சூழ இருந்தார் கார்த்திகேயன். செய்வதற்கு வேலைகள் வரிசைக்கட்டி நின்றன. நனையாத மழை நனையாமல் அப்படியே நின்றது. எழுத சரியான எழுத்தைத் தேடிக்கொண்டிருந்தார். எதையோ எழுதி நிறைவு செய்ய அவரால முடியாது. அதே நேரம் ஒரு முடிக்கப்படாத கதை எழுத்தாளனுக்குத் தருகின்ற அழுத்தத்தை சொல்ல எழுத்தில்லை. எப்போதுமே நிறையாத ஒரு குடம் போல அவன் மனம் இருக்கும். சரியான நேரத்தில் சரியான மனிதர்களை சந்திப்பது போலத்தான், தேவைப்படும் நேரம் ஒரு புத்தகத்தைப் படிப்பதும்.
Let us choose one another as companions!
Let us sit at each other’s feet!
என்ற வரிகளைப் படிக்கும்போது கார்த்திகேயன் உள்ளத்தில் ஒரே பெயர்தான் உலா போனது. ஒவ்வொரு வயதிலும் ஒருவகையான துணையை மனம் எதிர் நோக்கும். அவரின் இந்த வயதில் ‘துணையை’ மட்டுமே எதிர்ப்பார்த்தார்.
அந்த வரிகளில் நிரம்பிய இருந்த அன்பினை அள்ளிப்பருக நினைத்தவருக்கு உள்ளம் நிரம்பிய உணர்வு. கால்கள் பக்கமாக இருக்க, அருகருகே உட்காருகின்றதில் இருக்கின்ற நெருக்கத்தைத் தவிர வேறென்ன எதிர்ப்பார்த்திட போகிறது இந்த மனம்? அலைந்து திரிந்து, களைத்து வருகையில் மரத்தின் நிழலைத் தேடுவதைப் போலத்தான் வாழ்க்கையில் துணை தேடுவது. குளிர், வெயில், பனி என்று எல்லா வானிலையிலும் கால நிலையிலும் மரம் நிழலாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அதே நேரம் ஒரே ஆள் எப்போதும் மரமாக, நிழலாக தொடர்ந்திட முடியாது. ஒரு நேரம் ஒருவர் மரமாக இருந்தால், இன்னொரு நேரம் மரமாய் இன்னொருவர் மாறிட வேண்டும். அன்பு அதனை பகிரும்போதே முழுமையடைகிறது. கொடுத்துக் கொண்டே இருந்தாலும், பெற்றுக்கொண்டே இருந்தாலும் சலித்துவிடும்.
ஐம்பது பக்கங்களே கார்த்திகேயனின் மன நிலையை மாற்றிட போதுமானதாக இருந்தன. அதுவரை இருந்த வெறுமை, எரிச்சல், இயலாமை எல்லாம் நீங்கி நிறைந்தவுணர்வு. ஒரு நீடமைதி!( Tranquility).
அந்த கதையின் தொடக்கத்தில், ‘Little did she know that this was going to be not just any book, but the book that changed her life’ என்ற வரிகளை இயல்பாகக் கடந்தார்.
ஒரு புத்தகம் ஒரு பயணத்தைப் போன்றது. அதனை நீங்கள் தொடங்கும் போது இருந்த இடத்தில் எப்போதும் இருக்க மாட்டீர்கள். தூரமாக, தொலைந்து போய்விடுவீர்கள். இருக்கும் மன நிலையை மாற்றாமல் இருந்தால் அந்த எழுத்தில் என்ன பயன்?
உண்மையில் இத்தனை நாளும் அப்புத்தகத்தை புறக்கணித்தற்காக ஒரு துளி வருந்தினாலும், தனது முப்பது வருடங்களுக்கு மேலான வாசிப்பனுவத்தில் கார்த்திகேயனுக்கு ஒரு புரிதல் உண்டு. தேவையான நேரத்தில் தேவையான புத்தகம் எப்படியேனும் நம் கை சேர்ந்துவிடுமென்று.
‘Even a speck of love shouldnot go unappreciated’ என்று வரிகளில் அப்படியே ஸ்தம்பித்தார். அந்த கதையின் பிரதான கதாபாத்திரமான எல்லா’விற்கு கதைக்குள் வருகின்ற கதையான (‘Sweet Blasphemy’) இனிய தேவ நிந்தனையில் சொல்லப்படுகின்ற அத்தனையும் அவளுக்கானதாக தோன்றும். அவள் வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற வெறுமையினை வெட்டவெளிச்சமாகக் காட்டுவது போலொரு பிரம்மை.
கார்த்திகேயனுக்கும் சில இடங்கள் தனக்கானதாக, தன் தேடலின் விடையாகத் தோன்றின.
பிரியத்தின் ஒற்றைத் துகளி கூட பாராட்டப்படாததாக இருக்கக் கூடாது என்ற வரி மிகுதியாக அவரைத் தாக்கியது. சிலருக்குத் தோன்றலாம் ஒரு புத்தகம் படித்தால் என்னவாகிவிட போகிறது என்று. புத்தகம் என்பது நமக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத, பார்க்காத ஏதோவொரு நபரால் எழுதப்படுகிறது.
கிட்டத்தட்ட முகம் காணாத ஒரு அறிமுகமற்ற நபரோடு நடக்கின்ற ஒரு அர்த்தமான உரையாடல். அந்த நபரைப் பற்றி ஒன்றுமே தெரியாவிட்டாலும், அந்த புத்தகத்தில் வருகின்ற ஏதோ ஒரு வரி, ஒரு கதாபாத்திரம், ஒரு இடம், ஒரு வார்த்தை, ஒரு பண்போடு நம்மை நாம் நிச்சயம் தொடர்புப்படுத்திக் கொள்ளத்தான் செய்கிறோம். அதனாலயே இலக்கியம் என்பது உலகெங்கிலும் பரவியுள்ளது. நமது திருக்குறளை எல்லாரும் படிப்பது போல, ஏன் துருக்கியில் உள்ள எழுத்தாளரின் உணர்வு கார்த்திகேயனோடு ஒத்துப்போவது போல அது ஒரு மாய நிலை!
கார்த்திகேயனுக்கு அதற்குமேல் யோசனைகள் ஒன்றுமே தோன்றவில்லை. அவரது மனம் தெள்ளத்தெளிவாக இருந்தது.
ஐம்பத்தாறாவது பக்கத்தின் வாயிலாக பாக்தாத்திற்குப் பயணப்பட்ட கார்த்திகேயனை சடாரென்று நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது ஆனந்தனின் ஆனந்த கூச்சல்.
“அப்பா! கார்த்திக்!!!!!!” என்றவனின் கூச்சலில் புத்தகத்தை மூடியவர் மகனை நிமிர்ந்து பார்த்தார்.
“வாவ்! குட் புக்” என்று அப்போதும் ஆனந்தனின் பார்வை அப்பா மூடி வைத்த புத்தகத்தில் பதிந்து மீண்டது.
மகனின் குரலில் கலைந்தாலும், தொலைதூரம் பயணம் செய்து அந்த பயணத்தில் தீடீரென தொலைந்த பயணியின் நிலையில் இருந்தார் கார்த்திகேயன். இன்னும் ஷாம்ஸ்(கதையில் வருகின்ற கதாபாத்திரம்) அவரிடம் பேசும் உணர்வு. அந்த புத்தகம் அவர்களின் உரையாடலைக் காது கொடுத்துக் கேட்டது.
“என்னடா?” என்று கேட்ட தந்தையை எழுப்பிவிட்டு இறுகக் கட்டிக்கொண்டான் ஆனந்தன்.
“வாரிதி ஓகே சொல்லிட்டாப்பா” என்றதும்,
“அடே ஆனந்தா! எவ்வளவு சந்தோஷமான விஷயம்?” என்று மகனை இறுக்கமாக அணைத்துக்கொண்டார்.
அவரின் ஆனந்தன் ஆனந்திப்பதை விட வேறென்ன ஆனந்தம் அவருக்கு இருந்துவிடப் போகிறது?
“எப்போ?” என்று விசாரித்தவரிடம் ஆனந்தன் கதை சொல்ல, அவரின் கதை எல்லாம் மறந்தே போனது.
“இரு, நான் உடனே தாத்தா, பாட்டி கிட்ட பேசுறேன். வாரிதி வீட்டுக்குப் போறதைப் பத்தி பேசணும்” என்று கார்த்திகேயன் ஆர்வமும் அவசரமும் காட்ட, ஆனந்தன் அப்பாவின் கைப்பிடித்தான்.
“நீங்க எனக்கு செஞ்ச ப்ராமிஸ் என்னாச்சுப்பா? எனக்குத் தாத்தா, பாட்டி எல்லாம் வர வேண்டாம். நீங்கதானே என்னை வளர்த்தீங்க நீங்க மட்டும் போதும், இல்லைன்னா ரேவதிமாவோட வந்து வாரிதி வீட்ல பேசுங்க.” என்றான் திடமாக.
“அது எப்படிடா சரி வரும். ரேவதி ஊருக்குப் போறேன் ஊட்டிக்குப் போறேன்னு நிக்கறாங்க. ஆனந்தா, நம்ம என்ன பேசினாலும் நானும் நீயும் போனா எப்படி வாரிதி வீட்ல ஒத்துப்பாங்க. தாத்தாவும், பாட்டியும் உனக்கு வரன் அமைஞ்சது தெரிஞ்சா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க தெரியுமா?”
உண்மையான மகிழ்வோடு பேசிய தன் தந்தையைப் பார்த்த ஆனந்தனிடம் உவப்பில்லை.
“அவங்ககிட்ட நான் என்ன சொல்லி சண்டைப் போட்டேன்னு ஞாபகமிருக்காப்பா? உங்களைப் பத்தி யோசிக்கல, சின்ன வயசுல நீங்க என்னைத் தனியா அழைச்சிட்டு வந்தப்போ அவங்க நினைச்சிருந்தா உங்களுக்குத் துணையா வந்திருக்கலாம். ஆனால் வரல.. இப்பவும் வேண்டாம்” என்றதும் கார்த்திகேயன் முகம் கசங்கிய காகிதம் போல சுருங்கியது.
“முகத்தை அப்படி வைக்காதீங்க கார்த்திகேயன்! இரிட்டேட் ஆகுது. உங்கப்பா, அம்மா, அண்ணன், தம்பி எல்லாம் கல்யாணத்துக்கு வரட்டும். பொண்ணு வீட்ல பேச எதுக்கு? நம்ம குடும்பம்னு காட்டவா? அப்படி என்னைக்கும் நான் ஃபீல் பண்ணினதே இல்லைப்பா. நீங்க மட்டும்தான் எனக்கு வீடு, குடும்பம், அப்பா, அம்மா, எவிரிதிங் இன் திஸ் வர்ல்ட்” என்ற மகனை கண்கள் கலங்க பார்த்தார் கார்த்திகேயன்.
“யோசிச்சு முடிவு பண்ணுவோம். சரியா?” என்று கார்த்திகேயன் பொறுமையாகக் கேட்க,
“எவ்வளவு யோசிச்சாலும் என் முடிவு இதுதான். நான் போய் ரேவதிமாவைப் பார்த்துட்டு வரேன்” என்றதும்
“வேண்டாம் ஆனந்தா. ரேவதிகிட்ட நீ..” என்ற கார்த்திகேயனை நக்கல் பார்வையில் தடுத்தான் ஆனந்தன்.
“ஹலோ! கார்த்திக் ஸர், உங்களுக்காக ஒன்னும் நான் பேச போகல. நான் என் விஷயம் சொல்லப்போறேன், அவங்களுக்குப் பிடிச்ச வாரிதிக்கு என்னைப் பிடிச்சிருக்குனு சொல்லப்போறேன். ஆசையைப் பாரு” என்று வம்பு செய்துவிட்டே சென்றான் ஆனந்தன்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.