மனைவியின் முகத்தைப் பார்த்தே அவள் கலக்கம் படித்தவனும், மற்ற மாணவர்களின் பொறுப்பை உடன் வந்த விரிவுரையாளர்களிடமும், ராமிடமும் ஒப்படைத்து விட்டு,
“வா கேர்ள்.” என்று சிற்பியை அழைத்துக் கொண்டு குளியலறைப் பக்கம் சென்று இருந்தான்.
அதுவரை ராமின் பக்கமே திரும்பி இராதவள், செழியன் சிற்பியுடன் சென்ற மறு நிமிடம், “ராம் சார், இந்த இடம் எனக்கு சுத்தமா புரியல. கொஞ்சம் சொல்லி தர்ரீங்களா?” என்று கேட்டபடி, கையில் ஒரு புத்தகத்தோடு ராம்சரணை நெருங்கி நின்றாள் யாழினி.
அதைகண்டு, “ஆரம்பிச்சுட்டா” என்று பல்லைக் கடித்தவனும், “இது கொஞ்சம் முன்னதான செழியன் சார் அவ்ளோ விரிவா சொல்லி கொடுத்தாரு. அப்றம் என்ன டவுட்?” என்று பலமாக முறைத்தபடியே அவளை விட்டு விலகி நின்றான் ராம்சரண்.
ஆனால் அவன் முறைப்பை எல்லாம் அசட்டை செய்தவளோ, “அண்ணன் எவ்ளோ சொல்லி கொடுத்தாலும், நீங்க சொல்லிக் கொடுக்குற போல புரிய மாட்டிங்குது ராம்சார்!” என்று அப்பட்டமாகவே வழிந்தாள் யாழினி.
அவள் என்ன வழிந்தாலும், சிறிதும் வளைந்து கொடுக்காதவன், “சொல்லி கொடுக்குறது புரியனும்னா, முதல்ல கவனம் படிப்புல இருக்கணும் யாழி. பார்வையை கண்ட இடத்திலையும் அலைபாயவிட்டா அப்டித்தான்!” என்று அவள் செயல்களுக்கு சிறு குட்டும் வைத்தவன், தங்களைச் சுற்றி நின்ற ஆசிரியர்கள் மற்றும், மாணவர்களையும் கருத்தில் கொண்டு, வேறு வழியில்லாது, அவள் கேட்ட பாடத்தையும், அவளுக்கு படிப்பித்துக் கொடுத்தான்.
அவன் ஏதோ பாராட்டுப் பத்திரம் வாசித்தது போல், ஈயென்று சிரித்து வைத்தவள், பாடத்தை கவனிப்பது போல், அவன் பாடம் சொல்லிக் கொடுக்கும் அழகை தான் விழி எடுக்காது ரசித்து விட்டு, “இனிமேல் கண்ட பக்கமும் பாக்காம, உங்களை மட்டுமே சரியா பாக்குறேன் ராம்!
ஐ லவ் யூ!” என்றும் யாருமறியாமல் கண்ணடித்தும் சென்று இருந்தாள் யாழினி.
சமீப நாட்களாகவே, சரியாகச் சொல்லப்போனால் செழியன் சிற்பியின் திருமணத்திற்குப் பின், சற்று எல்லை மீறியே சென்று இருக்கும், பெண்ணின் அந்த நெருக்கத்தை ஏற்கவும் இயலாமல், விலக்கவும் முடியாமல் திண்டாடிப் போனவனை, சுற்றுப் புறமும் கட்டிப்போட, “இவளை!” என்று பற்களை நறநறத்தபடி, பிற மாணவர்களை கவனிக்கத் துவங்கினான் ராம்சரண்.
அங்கே கணவனுடன் சென்று குளியலறைக்குள் நுழைந்தவளும், சிறிது நேரம் கழித்தே உள்ளிருந்து வெளியே வந்தாள் சிற்பி.
அடித்து கழுவப்பட்ட முகமும், லேசாகத் தடித்துச் சிவந்த விழிகளுமே, அவள் அழுது வந்ததை பறைசாற்ற, நொடியும் தாமதியாமல் அவளை நெருங்கியவன், “என்னாச்சு கேர்ள்? அழுதியா? ஏன்மா?” என்று அவள் கையைப் பற்றினான் செழியன்.
அதில் மீண்டுமே உடைப்பெடுத்த விழிகளோடு அவனை ஏறிட்டுப் பார்த்தவள், “என்னால என்னால இந்த போட்டில கலந்துக்க முடியும்னு சுத்தமா தோணல ட்ரைனர். மனசெல்லாம் ஒருமாதிரி கலக்கமா இருக்கு. என்னை பெத்தவங்களே, என்மேல நம்பிக்கை இல்லாம, சென்னை போக வேணாம் சொல்லியும், என்ன மெனக்கெடுத்து இங்க அழைச்சு வந்திருக்கீங்க. ஆனா நா போட்டில சரியா பர்ஃபார்ம் பண்ணலின்னா உங்களுக்கும் தானே அந்த தோல்வி. அதான் ரொம்ப பயமா இருக்கு ட்ரைனர்” என்று மென்மேலும் கண்ணீர் வடித்தாள் பெண்ணவள்.
தான் கஷ்டத்தில் இருக்கும் சூழ்நிலையிலும், அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுத்து விடக்கூடாது என்று என்னும் பெண்ணின் அந்த குணத்தில், “ஹோ பெண்ணே” என்று பற்றி இருந்த அவளின் கரத்தை லேசாக இழுத்து, தனக்கு நெருக்கமாகக் கொண்டு வந்தவன், “சாதாரண ஒரு போட்டியை நினைச்சு பயப்புட, நீ முன்ன போல வெறும் சிற்பிகா தேவி மட்டுமில்ல கேர்ள். தமிழ்ல பி ஹெச் டி முடிச்சு, ஹோல் காலேஜ்கும் ஹெட்டா இருக்க செந்தமிழ்ச் செழியனோட மிஸஸ் நீங்க. யாரு உங்களை நம்பலைன்னாலும், என்னோட தேவி இந்த போட்டில முதல் ஆளா வின் பண்ணுவான்னு உங்க புருஷன் எக்சைட்மென்ட்டா காத்துட்டு இருக்கேன். அதை ரெட்டிப்பாக்குற கடமை உங்களுக்குத்தான் இருக்கு. முதல்ல கண்ணை துடைங்க மேடம்!” என்று பலவிதமாய் பேசி, தன் கைக்குட்டையை எடுத்து, தானே அவள் கண்களையும் துடைத்து இருந்தான்.
கூடவே, “நம்ம மேல, நமக்கு முதல்ல நம்பிக்கை இருக்கணும் கேர்ள். அந்த நம்பிக்கை தான் நம்மள வெற்றிப் படியில ஏத்தி நிக்க வைக்கும். பல உயரங்களையும் உனக்கு பெற்றுக் கொடுக்கும். அப்படி நீ உயர்ந்து நிக்கிற சமயம், இன்னிக்கு உன்ன நம்பாத எல்லாருமே, உன்னை ஆச்சரியமா திரும்பி பார்ப்பாங்க. எனக்கு என் மனைவியை அப்படி ஒரு உயரத்துல பாக்கணும்னு தான் ஆசை.” என்று அவள் காதோரம் சிதறி நின்ற குழல் கற்றைகளை, அவள் செவியோடு ஒதுக்கிவிட்டுப் பொறுமையாக எடுத்துக் கூறியவன், “என் ஆசையை நிறைவேத்தி வைப்பதானே?” என்றும் வலப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.
ஆணின் அந்த புருவத் தூக்கலில் அவள் கலக்கம் எல்லாம் சட்டென்று மறைய, அன்னிச்சையாக தலையை அசைத்து, “ஷ்யர் ட்ரைனர்!” என்று சொல்லிக் கொண்டவள் அப்பொழுது தான் தங்களின் நெருக்கத்தையும் உள் வாங்கினாள்.
அதில் அவனைவிட்டு விலக முயன்று, பின்னே சாயப் போனவளை, அங்கிருந்த பெருங்கல்லைப் பார்த்து, “ஹேய் ஹேய் பார்த்துமா” என்று நொடியில் இழுத்து அணைத்திருந்தான் செந்தமிழ்ச் செழியன்.
பட்டும் படாத அணைப்பு என்றாலும் இருவருக்குமான முதல் முதல் அணைப்பு அது, ஆணின் உணர்வுகளை தட்டி எழுப்பியது.
விழப்போகிறாளே என்கிற பயத்தில் வேகமாக அவளை அணைத்துக் கொண்டாலும், பெண்ணின் மென்மையான ஸ்பரிசமானது, அவள்மீது அவனுக்கு உள்ள உரிமையும் தூண்டி விட்டு இருக்க, அவளை இம்மியும் விலக்கத் தோணாமல், “ஆர் யூ ஓகே கேர்ள்?” என்று அவள் முதுகை வளைத்துப் பிடித்து, அவள் முகம் பார்த்து வினவினான் செழியன்.
ஆணின் அந்த ஸ்பரிசத்தில், தன்னை மறந்து, அவன் நெஞ்சோடு கன்னம் பதித்து, நின்றவளும், செவிமடல் தீண்டிய கணவனின் குழைந்த குரலில் தான், இமைகளைக் கொட்டி நிமிர்ந்து பார்த்தவள், “ம்ம்ம், ம்ம்ம், ஓகே ட்ரைனர்” என்று வேகமாக விலகிக் கொண்டாள்.
அதில் ஒரு ஏக்கப் பெருமூச்சை விட்டுக் கொண்டவனும், ‘கொஞ்சம் நேரம் கழிச்சே இந்த கேள்வியை கேட்டு இருக்கலாமோ?’ என்று முணுமுணுத்தபடியே, “போலாமா கேர்ள்?” என்றும் கேட்க,
அச்சமயம் ஒலிப்பெருக்கியில், சிற்பியின் பெயர் அழைக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, அவளது கைபேசியும் யாழினியின் எண்ணைக் காட்ட, ஒருவரை ஒருவர், சிநேகப் பார்வை பார்த்தபடியே மேடையை நோக்கி விரைந்தனர்.
அதன்பின்னர், அவளோடு மற்ற மாணவர்களும் நல்ல முறையிலே போட்டியில் கலந்து கொண்டு, தங்கள் கல்லூரிக்கென்று இரண்டாவது பரிசையும் பெற்று இருக்க, “ட்ரைனர், நாம வின் பண்ணிட்டோம்!” என்று முகமெல்லாம் புன்னகையோடு அதைக் கொண்டு வந்து கணவன் கையில் கொடுத்த சிற்பியின் முகமோ அத்தனை வர்ணஜாலங்களை கணவன் கண்களுக்கு விருந்தாக்கியது.
“ஹார்ட்லி கங்க்ராட்ஸ் ஸ்டுடென்ட்ஸ். நீங்க ஒருஒருத்தவங்களும் இந்த டிராபிக்கு தகுதியானவங்க தான்” என்று அனைவருக்கும் பொதுவாக வாழ்த்துக் கூறினாலும், மகிழ்ச்சியில் மலர்ந்திருந்த மனைவியின் முகத்தை விட்டு பார்வையை விலக்குவதற்குள் படாதபாடு பட்டுப் போனான் செந்தமிழ்ச் செழியன்.
பின்னர் அனைவரும் அங்கேயே இரவு உணவும் முடித்துக் கொண்டு தங்கள் ஊருக்குத் திரும்ப ஆயத்தம் ஆக, அவர்களுக்கு கிட்டி இருந்தது என்னவோ, சொகுசுப் பேருந்துப் பயணம் தான்.
இரவு நேரப் பயணமாதலால் அவரவர்களுக்கு என்று பதிவு செய்யப்பட்டிருந்த சாய்வு இருக்கையில் அனைவரும் சென்று முடங்கிக் கொள்ள, விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு பேருந்தும் இயக்கப்பட்ட சமயம், ராம்சரணின் இருக்கை பின்னே இருந்ததால், செழியனின் அருகில் அமர்ந்து இருந்த யாழினிக்குத் தான் இருப்பே கொள்ளவில்லை.
அநேக நேரங்களில் அவனைக் கண்களால் பார்த்து மட்டுமே,
தன் காதலுக்குத் தீனி போட்டுக் கொண்டிருப்பவள், இருக்கையை விட்டு எழுந்து, “அண்ணா, இங்க காத்தே வரலண்ணா. நா சீட் மாறி உக்காந்துக்கறேன்” என்று சொன்னாள்.
“அது எப்டி முடியும் யாழி? எல்லாரும் தான் அவங்கவங்க சீட்ல உக்காந்து, தூங்கவே ஆரம்பிச்சிட்டாங்களே?” என்று அவளை குழப்பமாய் பார்த்தான் செழியன்.
“இல்லண்ணா, சிற்பி இன்னும் தூங்கல. நா அவ சீட்க்கு போறேன்ணா. ப்ளீஸ்” என்று சொன்னவளின் வார்த்தையில் பின்னே திரும்பிப் பார்த்தவனுக்கு,
தாங்கள் இருவரும் தம்பதியர் என்று யாருக்கும் சொல்லி இராத நிலையில், அனைவரின் முன்னிலும், அவளோடு தனியாக அமர்வது சரியா என்ற கேள்வி எழுந்தாலும், சில மணி நேரம் முன்பு, அவன் நெஞ்சம் உணர்ந்த பெண்ணவளின் மென்மையான ஸ்பரிசமும், அவளின் கஸ்தூரி வாசமும், அவனை மறுசொல் சொல்லாது தலையை ஆட்ட வைத்தது.
யாழினி சென்று சிற்பியிடம் என்ன கூறினாளோ, எப்படிக் கெஞ்சினாளோ, அடுத்த ஐந்து நிமிடங்களில் சிற்பி செழியனின் பக்கத்து இருக்கையை ஆக்கிரமிக்க,
இங்கே விரிவுரையாளனுக்கோ, விரிவுரையே செய்ய இயலாதபடி, நாடி நரம்பெங்கும் துள்ளாட்டம் போட்டது.
ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாது, நல்ல பிள்ளை போல் சற்றே நகர்ந்து மனைவிக்கு வழி விட்டவன், “இன்னும் தூங்கலியா கேர்ள்?” என்று இருக்கையில் சுகமாக சாய்ந்து கொண்டான்.
“இல்ல ட்ரைனர், தூக்கம் வரல” என்று சொன்ன சிற்பியும் ஜன்னலோர இருக்கையில் சாய்ந்து அமர, இப்பொழுது அவள் நாசியை வந்து தீண்டியது, ஆடவனின் பர்ப்யூம் வாசனை.
அதில் அவளுக்குமே மதியம் ஆணின் அணைப்பில் நின்றிருந்த நினைவுகள் தோன்றிவிட்டு, சட்டென்று ஒரு வெட்கமும், நாணமும் பெண்ணின் உடல்மொழியில் தொத்திக் கொண்டது.
கூடவே, கணவன் மேல் எழும் இந்த உணர்வுகள் எல்லாம் சரிதானா? மதியம் அவன் நெஞ்சில் எனை மறந்து, சாய்ந்து நின்றதற்கு அவன் என்னை, என்ன நினைத்தானோ என்றெல்லாம் இனம்புரியாத கலக்கமும் பெண்ணின் இளமனதை குழப்பத்தில் ஆழ்த்த, அவன் மீது உரசிவிடாதவாறு தன் இருக்கையில் குறுகி அமர்ந்தவளைக் கண்டு, “ஏன் கேர்ள், இடம் பத்தலியா? நல்லா கம்ஃபர்டபிலா உக்காரு” என்று சொன்னவன், “தூக்கம் வருதா கேர்ள். சீட் அட்ஜெஸ்ட் பண்ணவா?” என்றும் அவள் புறம் சரிந்து, அவள் விழியைப் பார்த்துக் கேட்டான்.
அதில் இன்னும் கொஞ்சம் அதிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தவளுக்கு, தன் உள்ளத்தையே ஊடுருவிச் செல்லும் கணவனின் அந்தப் பார்வையில் மூச்சு வாங்கத் தொடங்கியது.
அவனும் ஒரு அக்கறையில் தான் அவளை நெருங்கி இருந்தாலும், இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று மோதியதில், இருவரின் மூச்சுக் காற்றும், உஷ்ணமாய்த் தழுவிக் கொள்ள, அதில் அவஸ்தையாய் புன்னகைத்து, “இல்ல ட்ரைனர் இருக்கட்டும். இதுவே எனக்கு ஓகே தான். நீங்க தூங்குங்க!” என்று அவன் பார்வையை தவிர்த்தாள் பாவை.
அதன்பின்னர் தான் அவனும் சுற்றுப்புறம் உணர்ந்து, ‘ஹோ காட் எனக்கு என்னதான் ஆச்சு?’ என்று அவளை விட்டு விலகி அமர்ந்தவன், “இனி எங்க எனக்கு தூக்கம் வரப்போகுது?” என்று முணுமுணுத்தபடியே, பிடரியை வருடிக் கொண்டே, இருக்கையில் சாய்ந்து விழிகளையும் இறுக்க மூடிக் கொண்டான்.
அடுத்த ஒரு அரை மணி நேரத்தில், அவனையும் மீறி விழிகள் லேசாக சொருகத் தொடங்கிய சமயம் சரியாக, அவன் இடது தோளில் ஏதோ பூச்செண்டை தூக்கி வைத்தார் போல் சிறிதான பாரம் கூட, கண் விழித்துப் பார்த்தவன், கண்டது என்னவோ அவளையும் அறியாமல் உறக்கத்தில் கணவன் தோளில் சாய்ந்திருந்த, மனைவியின் மதி முகத்தைத்தான்.
அதில் சற்று முன்னர் சிரமப்பட்டு அடக்கியிருந்த அவள் மீதான உணர்வுகள் எல்லாம் நீரில் அமிழ்த்திய பந்தாய் மேல் எழும்ப, அச்சமயம் அவளோ, “ம்ம்ம்” என்று இன்னும் கொஞ்சம் அவன் மார்போடு ஒன்றினாள்.
அதில் அத்தனை நேரம் சூழ்ந்து இருந்த தயக்கம் எல்லாம் விலகி, நன்றாக அவள் புறம் திரும்பி, அவளை பார்வையாலே பருகத் தொடங்கியவன்,
“ஹேய் பெண்ணே, நீ என்ன ரொம்ப படுத்துற. உன் பக்கத்துல இருக்கும்போது நா உனக்கு ட்ரைனரும் கூடன்னு சுத்தமா மறந்துடுது. எப்படா உன் படிப்பு முடியும்னு இருக்கு கேர்ள்” என்று ஒற்றை விரலால் அவள் கன்னம் வருடிப் பேசியவனின் குரலில்,
அரை விழிப்பாய் கண் விழித்துப் பார்த்தவள், தங்கள் நெருக்கத்தைக் கண்டு அதிர்ந்து, “அய்யோ சாரி ட்ரைனர். தூக்கத்துல தெரியாம சாஞ்சிட்டேன்” என்று அவனில் நின்றும் விலகப் போனாள்.
ஏனோ அவன் இருந்த மயக்க நிலைக்கு, பெண்ணின் அந்த விலகல், சிறு சினத்தைத் தான் தூண்டிவிட்டு இருக்க, சட்டென்று அவள் கரத்தைப் பற்றி இழுத்து, கிட்டத்தட்ட தன் பாதி மேனியில் சாய்த்துக் கொண்டவன், “தெரிஞ்சே சாஞ்சாலும் கொஞ்சமும் தப்பில்ல கேர்ள். ஏன்னா நா உனக்கு ட்ரைனர் மட்டும் இல்ல. உன் புருஷனும் கூடத்தான். ஞாபகம் வச்சுக்கோ” என்று அவள் கழுத்தில் மறைந்து கிடந்த தாலியைத் தொட்டுக் கூறியவனைப் பார்த்து, மலங்க மலங்க விழித்தவள், இதுபோலான பேச்சுக்களின் போது முன்பெல்லாம் அவனிடமிருந்து வரும் ‘ஜஸ்ட் ஃபோர் ஃபன் கேர்ள்’ என்ற வார்த்தையும் வராது போனதில், இமைகளை சிமிட்டாது அமர்ந்து இருந்தாள் சிற்பி.
அவள் பார்வை எல்லாம் சட்டையே செய்யாதவனோ, “நம்ம ஊர் வர்ற வரை இப்டியே தான் தூங்கணும். சரியா கேர்ள்?” என்ற மிரட்டலோடும், அவள் கன்னம் தன் கழுத்தில் உரச, அவள் தலையை நன்றாகவே தன் தோள்மீது வைத்து அழுத்திக் கொண்டான்.
அவன் பேச்சை மீற முடியாதவளும், அவன் தோளில் தொத்தும் கிளியாய் தூங்கிப்போக, இறங்குமிடம் வந்து, அவன் அவளை உசுப்பியப் பின்னரே, கண்ணை கட்டி காட்டில் விட்டதைப் போல் பேருந்தை விட்டு இறங்கினாள் சிற்பிகாதேவி.
போகும் போது இருந்த மனநிலைக்கு முற்றிலும் மாற்றமாக, ஒருவரை ஒருவர் பார்வையால் பருகியபடியே வீட்டை அடைந்தவர்களை மீனாட்சியோடு சேர்ந்து, சிறிதான பரிசுப் பார்சல் ஒன்றும் வரவேற்றது.
மினுமினுவென்ற ஜிகினா தாளினால் சுற்றப்பட்டு இருந்த அப்பார்சலின் மேல் “அன்புள்ள ஸ்வீர்ட் ஹாட்டிற்கு, உன் அர்ச்சுனரின் அன்புப் பரிசு”
என்று குட்டியான கையெழுத்தில் ஆங்கில எழுத்துக்களும் கிறுக்கலாக எழுதி இருந்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.