அன்று கணவனை திட்டி விட்டுச் சென்றவளும், அடுத்தடுத்த நாட்களிலும், யாருமறியாத வண்ணம், அவனை புசுபுசுவென்று முறைப்பதும், உதட்டைச் சுழிப்பதுமாகவும் இருக்க, அவள் அந்த பொருட்களை எல்லாம் என்ன செய்யப் போகிறாள் என்ற ஆர்வம் தான் அவனுக்கு அதிகரித்துக் கொண்டே சென்றது.
இதற்கிடையில் இனியும் அமைதியாக இருப்பது நல்லது இல்லை என்று, தெரிந்த ஆட்கள் மூலம், அர்ஜுன் எங்கு இருக்கிறான், என்ன செய்கிறான் என்று, அறிந்து கொள்ளும் முயற்சியிலும், இறங்கி இருந்தான் செழியன்.
அப்படியே மேலும் பல தினங்கள் கழிந்திருக்க, அன்று தன் அறைக்குள் நின்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனின் செவியில்,
“இன்னும் ஒரு வாரத்தில புள்ளைக்கு கல்யாணம் வச்சிருக்கோம் மீனாட்சி அம்மா. நீங்க கட்டாத புடவை, பாப்பாங்க போடாத டிரஸ்சுன்னு கொஞ்சம் நல்லதா இருந்தா கொடுத்து உதவுங்க” என்று அவர்கள் வீட்டில் அவ்வப்போது வந்து பாத்திரம் துலக்கும் பெண்மணியின் குரல் சற்றே தயக்கமாக ஒலித்தது.
அதில் அவர்கள் புறம் கவனம் வைத்தவன், “கமலாக்கா பொண்ணுக்கு கல்யாணம் போல” என்று முனகியபடி, தன் சட்டைப் பையலிருந்து, ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேவர,
அப்பொழுது வேகமாக அவள் அறையில் இருந்து வெளியே வந்தவள், “கமலாக்கா, கமலாக்கா கொஞ்சம் நில்லுங்க. இதோ வந்துடறேன்” என்று விட்டு, அங்கிருந்த அலுமாரியை நோக்கி ஓடோடிச் சென்றாள் சிற்பி.
அதில் செழியனும் அறை முன்னேயே நின்று விட்டவன், மனைவியின் செயல்களை தான் பார்த்துக் கொண்டிருக்க, அங்கு அலுமாரிக்குள் இருந்து, அன்று அர்ஜுன் அனுப்பிய பட்டுப் புடவையும் கொலுசும் எடுத்துக் கொண்டு, கமலாக்காவிடம் செல்லப் போனவள், பின் வேகமாக கணவனை நோக்கி வந்து, “கொஞ்சம் பணம் இருந்தா கொடுங்களேன். கமலாக்கா பொண்ணுக்கு கல்யாணமாம்” என்று உரிமையோடே கேட்டாள்.
‘தான் பணம் கொடுக்க எண்ணியது போலவே தன் மனைவியும் நினைக்கிறாளே?!’ என்று வியந்தவனுக்கு, ட்ரைனர் என்ற விளிப்பில்லாது, அவள் குரலில் வெளிப்பட்ட உரிமையிலும், விழிகள் இரண்டும் மலர, மறுசொல் சொல்லாமல் கையிலிருந்த பணத்தை மனைவியிடம் கொடுத்தான் செழியன்.
அத்தனை தினங்கள் சினத்தில், அவனைப் பாராமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றவள், இக்கணம், ‘அன்றைய உன் கேள்விக்கு பதில் இதோ!’ என்பது போல் அவன் விழிகளைப் பார்த்து விட்டே, பணிப்பெண்ணிடம் விரைந்து, கையிலிருந்த அனைத்தும் அவரிடம் கொடுத்தாள்.
அவைகளை வாங்கிக் கொண்டு கைகூப்பி நன்றி கூறியவரைப் பார்த்து, “பரவாயில்லை கமலாக்கா. இதுல பணம் மட்டும் தான் எங்களோடது. பொருள் வேற ஒருத்தரோடது. அவருக்காகவும் கொஞ்சம் கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க” என்றும் கூறிவிட்டு சமையலறைக்குள் சென்று நுழைந்து கொண்டவளைப் பார்த்து, அங்கிருந்த அனைவருக்குமே அப்படி ஒரு நிம்மதியும், ஆசுவாசமும் உள்ளம் முழுதும் பரவியது.
என்னதான் மீனாட்சியும் மகனைப் போலவே, அவளது முந்தைய பழக்கத்தை ஒரு பொருட்டாய் எண்ணவில்லை என்றாலும், அர்ஜுனிடமிருந்து பார்சல் வந்த அன்றிலிருந்து அவருக்குமே இதயம் படபடத்துக் கொண்டு தானே இருக்கின்றது.
ஆனால் இக்கணம் சிற்பிகா செய்து இருந்த செயல் அதோ, அனைவரின் நெஞ்சிலுமே பாலை வார்த்திருக்க,
“வன பத்ரகாளி, ரொம்ப ரொம்ப நன்றிம்மா” என்று முணுமுணுத்தபடியே அங்கிருந்த பூஜை அறைக்குள்ளும் நுழைந்து கொண்டார் மீனாட்சி.
ஆனால் சுற்றி நடந்த எதுவும் அவன் சிந்தையில் பதிந்ததா? என்று எண்ணும் வகையில், மனைவியின் சற்று முந்தைய செயலிலே, ஒருமாதிரி பரவச நிலையில் நின்று இருந்தவன், அடிமேல் அடி வைத்து, சமையலறைக்குள் நுழைந்தான் செந்தமிழ்ச் செழியன்.
அங்கு அவளோ, அடுப்பில் இருந்த பாத்திரத்தில் அவனுக்கான தேநீரை தான் வைத்துக் கொண்டிருக்க, பெண்ணின் காலை நேர எழில் தோற்றமதோ, அவன் விழிகளை மென்மேலும் கிறங்க வைக்க, “என்ன செய்றீங்க தேவி மேடம்?” என்று வினவியபடியே அவள் பின்னால் சென்று நின்றான் விரிவுரையாளன்.
நின்றாலும் தள்ளி எல்லாம் நிற்காமல், அவள் சற்று நகர்ந்தாலும் அவனது மொத்த மேனி மீதும் அவள் மேனி மோதும் இடைவெளியில் நெருக்கமாக நின்று, தேநீரை எட்டிப் பார்த்தவனின் நெருக்கத்தில் விழிகள் இரண்டும் ஆழியாய் விரிந்தது பெண்ணிற்கு.
கூடவே அவன் மீது இத்தனை தினங்கள் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த கோபம் கூட, எங்கோ சென்று ஒளிந்து கொள்ள, “டீ டீ, உங்களுக்கு தான் டீ போடுறேங்க” என்று வாயாலே தந்தியடித்தாள் சிற்பி.
சற்று முன்னர் போலவே இப்பொழுதும் அவள் ட்ரைனர் என்ற விளிப்பை தவிர்த்திருக்க, அதில் ஆணின் தகிப்போ மென்மேலும் கூட,
“நா இதைக் கேக்கல தேவியாரே. கொஞ்சம் முன்ன வெளிய செஞ்சிங்களே அதைக் கேட்டேன்” என்று குழைந்த குரலில் கூறியவன் தன் கண் முன்னால் தெரிந்த பெண்ணவளின் பிடரி முடிகளையும் ஊப் என்று ஊதி விட்டான்.
அவன் கேள்வி ஒரு புறம் அவளை இம்சை செய்தது என்றால், என்றுமில்லாத அளவு இன்றைய அவன் நெருக்கமோ பேரிம்சை கொடுக்க, “என்ன என்ன என்ன செஞ்சேன்?” என்று ஒன்றும் தெரியாதவள் போல் வினவி தன் தடுமாற்றத்தை மறைத்தாள் சிற்பி.
அதில் இன்னுமே அவனுக்கு விழியெல்லாம் ஒளிர,
“அதான், காலங்காத்தாலயே, பெரிய அன்னபூரணி போல, பணம் எல்லாம் வாங்கி கமலாக்காக்கு உதவிலாம் பண்ணீங்களே. என்னவாம்?” என்றான் இப்பொழுது அவள் கழுத்தோரம் குனிந்து ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு.
முன்னே இருந்த பீங்கானில், தேநீர் கொதிப்பதை விடவும், ஆணின் மூச்சுக்காற்றோ அவள் மீது, அனலாக மோத, சர்க்கரை எடுத்துக் கொண்டிருந்த கரமோ அந்தரத்தில் நிற்க, “என்ன செய்றாங்க இவங்க?’ என்று மேனி நடுங்கிப் போனவள்,
“அதெல்லாம் ஒன்னும் இல்லயே. விடுங்க என்ன” என்று அவனை விட்டு விலகப் போனாள்.
அவனோ அவளை செல்ல விடாது இருபுறமும் கையூன்றித் தடுக்க, அதில் எக்குத் தப்பாக அவன் மீது மோதித் திரும்பியவள், இப்பொழுது அவன் முகத்திற்கு நேராய் தன் முகம் காட்டி நின்றாள்.
அது இன்னுமே ஆணவனுக்கு வசதியாகிப் போக, “ம்ஹும், என்னனு சொல்லாம இங்க இருந்து ஒரு இன்ச் கூட நகர முடியாது தேவியாரே” என்று எச்சரிக்கை போல கூறியவன், அவள் கன்னத்தை உரசிக் கொண்டிருந்த கூந்தல் கற்றைகளையும் காதோரம் ஒதுக்கி விட்டான்.
அதில் அவளையும் அறியாது
மூட முயன்ற விழிகளை வலுக்கட்டாயமாகப் பிரித்து,
“அது, அது, அடுத்தவங்களுக்கு உதவி பண்ணா, நமக்கு புண்ணியம்னு அத்தை சொன்னாங்க. அதான் அப்டி பண்ணேன்!” என்று குரலிலும் முகத்திலும் இளக்கம் காட்டாது சொன்னாள் சிற்பி.
“ஓ அப்போ புண்ணியத்துக்காக மட்டும் தான் தேவி மேடம் அதை எல்லாம் கமலாக்கா கிட்ட கொடுத்தீங்க. வ்ரைட்?” என்று கேட்க,
“அஃப்கோர்ஸ்” என்று தலையை ஆட்டியவள், “சார் என்ன நினைசிங்களாம்?” என்றாள் இப்பொழுது சீண்டலான குரலில்.
திருமணம் முடிந்து, பல மாதங்கள் கடந்தும், ஆசிரியன் மாணவி என்ற கோட்டை விட்டு வெளிவராது இருந்தவர்கள், இக்கணம் அக்மார்க் கணவன் மனைவியாகி, ஒருவரை ஒருவர் முட்டி மோதி நின்றனர்.
அவள் சீண்டலைப் புரிந்து கொண்டவனுக்கோ, மென்மேலும் உள்ளம் குதியாட்டம் போட,
“நா என்னவெல்லாமோ நினைச்சேன், ஆனா ஊருக்கெல்லாம் நல்லது பண்ற தேவியார், கட்டுன புருஷனையும் கொஞ்சம் கவனிக்கலாமே?” என்றான் குரல் ஏகத்துக்கும் குழைய.
ஆணின் அந்தக் குரலும், அவன் நின்று இருந்த நெருக்கமுமே, அவள் வயிற்றில் பல அமிலக் கலவைகளை உற்பத்தி செய்ய, “நீங்க இப்டி வழி மறிச்சு நின்னா நா எப்டி கவனிக்கிறதாம்? கொஞ்சம் வழிய விட்டா டீயை இறுத்து ஆத்தி தருவேன்” என்று அவளும் அவன் நெருக்கம் தன்னை பாதிக்காதது போலவே காட்டிக் கொள்ள முனைந்தாள்.
ஆனால் பெண்ணின் நாட்டியம் ஆடும் விழிகளிலே, அவள் உணர்வுகளைப் படித்துக் கொண்டவன், “என் கைக்குள்ளவே இருந்தபடியும், என்ன கவனிக்கலாம் தேவையாரே. அன்னிக்குக் கூட டெமோ காட்டினேனே” என்றவனின் பார்வை அவள் இதழ்களை மொய்க்கும் வண்டாய்.
அவன் பார்வை படிந்த இடத்தை வைத்தே, அவன் எந்த கவனிப்பைக் கூறுகிறான் என்று புரிந்து கொண்டவளுக்கு, அன்று ஆடவன் இட்ட நெற்றி முத்தத்தின் நினைவில், இன்றுமே அவ்விடம் குறுகுறுப்பது போல் இருக்க, சட்டெனக் குனிந்து நெற்றியை துடைத்துக் கொண்டவள்,
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. ப்ளீஸ் வழிய விடுங்களேன்!” என்று சிறு பிள்ளையாய் சிணுங்கினாள்.
மனைவியின் அந்த சிணுங்கள், கணவனின் சில்மிஷத்திற்கு மென்மேலும் சுருதி சேர்க்க,
“அன்னிக்கு டெமோ மட்டும் காட்டுனதால மறந்துட்ட போல, இன்னிக்கு ட்ரைன் பண்ணுறேன். கவனமா கத்துக்கோ!” என்று ஒரு ட்ரைனராகவும் பேசியவன், அவள் கன்னங்கள் இரண்டும் கரங்களில் ஏந்தி, அவள் என்ன ஏதேன்று உணரும் முன்னரே, அவள் நெற்றி வகிட்டினில் தன் உதடுகளைப் புதைத்திருந்தான்.
அன்று ஆறுதலுக்காக கொடுத்த முத்தமதே பெண்ணின் அடிவருடிச் சென்று இருக்க, இன்று ஆசையாய் புதைத்த உதடுகளோ, அவள் நெற்றியிலே இளைப்பாறிக் கிடக்க,
அவன் மீசையின் குறுகுறுப்பைத் தாங்காது, ட்ரைனர் என்று தவிப்பாக மூடிக் கொண்டது பாவையவளின் பவள விழிகள்.
அவள் விழிகளுக்குப் போட்டியாக, பெண்ணின் விரல்களும், யோகா செய்து செய்தே, உரமேறி இருந்த கணவனின் கரளைக் கரங்களை பற்று கோலாய் பிடித்துக் கொள்ள,
அவள் நெற்றியில் இருந்து உதட்டைப் பிரித்து, “இனிமேல் ட்ரைனர் சொல்லக்கூடாது. என்னங்க சொல்லுங்க தேவியாரே!” என்று காதோரம் கிசுகிசுத்தவன், மூடி இருந்த அவள் விழிகளின் மீதும், மென் முத்தம் பதித்தான்.
அதில் மூடி இருந்த விழிகள் இரண்டும் பட்டென்று திறந்து, ஆடவனை படபடப்பாய்ப் பார்க்க,
அதற்குள், சிற்பிமா என்று வெளியே கேட்ட மீனாட்சியின் குரலில், சாவதானமாகவே அவளை விட்டு விலகிக் கொண்டவன், “ட்ரைனிங் வில் கன்டினியூ கேர்ள்” என்று ஒற்றைக் கண்ணையும் சிமிட்டி விட்டே, அங்கிருந்து வெளியேறி இருந்தான் செந்தமிழ்ச் செழியன்.
அவன் சென்று நிமிடங்கள் பல கடந்தும் கூட, அவன் மூச்சுக் காற்றின் வெப்பத்திலிருந்தும், அவன் உதடுகள் தந்த உஷ்ணத்தில் இருந்தும், ‘இந்த ட்ரைனர் என்ன இப்படி மாறிட்டாங்க?’ என்று அவன் வார்த்தைகள் உணர்த்திய செய்தியில் இருந்தும், தன்னை மீட்டுக் கொள்ள இயலாது இருந்தவள், “சிற்பிமா, இன்னுமாடா டீ போடுற?” என்று உள்ளே வந்து அவள் தோள் தொட்ட மீனாட்சியின் குரலில் தான் நடப்பிற்கு வந்து, அந்த வற்றிப் போன டீயை இறுத்தாள்.
அன்று மட்டுமல்லாது அடுத்தடுத்த நாட்களும், யாருமறியாமல் அவளைப் பார்த்துக் கண்ணடிப்பதும், அவ்வப்போது பறக்கும் முத்தங்கள் கொடுப்பதும், எப்போதாவது சிக்கும் அவளை கைகளுக்கு இடையில் பிடித்துக் கொண்டு, “ட்ரைன் பண்ணவா?” என்று கேட்பதும் என்று விரிவுரையாளன் தன் விளையாட்டையும் தொடங்கி இருந்தான்.
என்னதான், வீட்டில், அவளிடம் கணவன் என்ற உரிமையோடு சீண்டிக் கொண்டாலும், கல்வி கற்கும் இடமான கல்லூரியில், அவள் கண்ணைத் தாண்டிக் கூடப் பார்த்து இராதவன், அவள் படிப்புக் கருதியும், தன் உணர்வுகளுக்கு எல்லாம் அணை போட்டுத்தான் வைத்து இருந்தான்.
கல்லூரியிலும் வெளிப்படையாக அவளோடு கதைக்கா விட்டாலும், இப்பொழுதெல்லாம் அடிக்கடி கைபேசியில் குறுஞ்செய்தி வழியாக அவளிடம் எதையாவது கேட்டு, தானும் கூறி, தன், கணவன் உரிமையை அவள் மனதில் நன்றாகவே வேரூன்றி விட்டிருந்தான்.
அப்படியே நாட்களும் மெல்ல நகர்ந்து, மாதங்களாகக் கடக்க, அன்று மதிய இடைவேளையில் தன் உணவை உண்டு முடித்தவன், “சாப்டீங்களா தேவியாரே? வெண்டைக்காய் இன்னிக்கு நீங்க தானே செஞ்சிங்க. ரொம்ப நல்லா இருக்கு” என்று சில பல எமோஜிக்களோடு ஒரு குறுஞ்செய்தியை, சிற்பியின் எண்ணிற்கு அனுப்பி வைத்தவன், ராம்சரணோடு இணைந்து, அவசர அழைப்பிற்காக கல்லூரியின் மறுபுறம் சென்றிருந்தான்.
அச்சமயம் மாணவிகளின் குளியலறைப் பகுதிக்குள் இருந்து, ஏதோ சலசலப்புக்கள் கேட்டு, மாணவிகள் ஒவ்வொருவரும், உள்ளே ஓடுவதும், வெளியே வந்து தங்களுக்குள்ளே பேசிக் கொள்வதுமாக இருக்க, நொடியில் அப்பகுதியை நெருங்கியவன், அங்கிருந்த மாணவியிடம் என்னவென்று விசாரித்தான்.
அதற்கு அந்த மாணவி பதில் கூறும் முன்னரே, அழுது கலங்கிய விழிகளோடு, குளியலறைக்குள் இருந்து வெளியேறியவள், அங்கு ராம்சரணோடு நின்றிருந்தவனைக் கண்டதும், பள்ளம் நோக்கிப் பாயும் வெள்ளமாய் அவனிடம் ஓடி, “ட்ரைனர்” என்ற கூவலோடு, அவன் மார்பிலும் தஞ்சம் புகுந்திருந்தாள் சிற்பிகா தேவி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.