நாட்கள் அப்படியே நகர, அன்று மட்டுமல்லாது, அடுத்து வந்த ஒருமாத காலத்திற்கும், தேர்வுக்கு தயார் செய்கிறேன் பேர்வழி என்று மனைவியை, ஒருவழி ஆக்கிக் கொண்டிருந்தான் செந்தமிழ்ச் செழியன்.
சிற்பியோடு சேர்த்து யாழினிக்கும் இது இறுதிப் பரீட்சை ஆதலால், கல்லூரியில் விரைவிலே பணி முடித்து வருபவன், அவனே அருகில் அமர்ந்து, மேற்பார்வை பார்த்து, இருவரின் இறுதிப் பரீட்சைக்கும் அவர்களை ஆயத்தம் செய்தான்.
இத்தனை தினங்கள் அண்ணனோடு சரியான உரையாடல்கள் இல்லாததாலோ, அல்லது பரீட்சைக்குப் பிறகு வரப்போகும், ராமுடனான பந்தத்தை எண்ணியோ அண்ணனுடனும், தோழியுடனும் ஆன அந்த படிக்கும் நேரங்கள் யாழினிக்கு, மிகவுமே மகிழ்ச்சியானதாய் அமைந்திருக்க, முதல் இணைவுக்குப் பிறகான நாளிலிருந்தே, முற்றும் முழுதாக ஆசிரியனாய் மட்டுமே மாறி இருக்கும், கணவனிடம் கணவன் பார்வையைத் தான் எதிர்பார்த்து ஏங்கியது பெண்ணின் மனது.
ஆனால் படிப்பு முடிவதற்கு முன்னாலே அவளிடம் கணவனாக நடந்து கொண்டு விட்டதில், ஏற்கனவே சிறு குற்ற உணர்வில் இருப்பவன், கடந்த ஒரு மாத காலமாய் வெறுமனே கன்னத்து முத்தங்களுக்குக் கூட அவளை நெருங்காது இருந்தான் செந்தமிழ்ச் செழியன்.
இறுதி வருடப் படிப்பும், அதில் அவள் நல்லதொரு மதிப்பெண்கள் எடுக்க அவன் எடுக்கும் முனைப்பும், அவளுக்கும் நன்றாகவே புரிந்தாலும், முதல் இணைவிற்குப் பிறகு ஆண்கள் எல்லாம், மனைவியை விட்டு விலகவே மாட்டார்கள். அவளையே சுற்றி சுற்றி வருவார்கள். என்றெல்லாம், சினிமாக்களிலும், கதைகளிலும் பார்த்ததும், படித்ததும் அவள் கன்னி மனதில் கலகத்தை மூட்டி இருந்தது.
அன்று நடந்தது கனவோ என்று எண்ணும் வகையில், தற்சமயம் அவன் தங்களுக்கிடையில் மேற்கொண்டிருக்கும் இடைவெளியில், ‘இவரால் மட்டும் எப்படி இப்டி, வொயிஃப கண்டுக்காம இருக்க முடியுது? ஒருவேளை அன்னிக்கு அவங்க சொன்னதுல சில விஷயம், நா செய்யாததால, அவங்களுக்கு என்மேல கோபமோ?’ என்றெல்லாம் ஏதேதோ எண்ணிய பெண்ணவளால் படிக்க மட்டும் இயலவே இல்லை.
போதாதற்கு அவன் அருகில் அமர்ந்து பாடம் சொல்லிக் கொடுக்கும் சமயம், ஆடவனின் மேனியில் இருந்து, வெளியேறும், அவனுக்கே உரிய பிரத்தியேக வாசனையும், பார்வையிலே வசியம் செய்யும் நேர்கொண்ட பார்வையும், கிரேக்கச் சிற்பத்தையும் தோற்கடிக்கும், நிமிர்ந்த தோற்றமும், எந்த தீய பழக்கமும் இல்லாத ரோஸ் நிற உதடுகளும், சில வாரங்கள் முன்பு, அது அவளிடம் நிகழ்த்திய மாயங்களும் தான், தற்சமயம் அவள் சிந்தையை வந்து நிறைத்து, பாடப் புத்தகத்தை விட்டு அவனை மட்டுமே பார்க்கத் தூண்டியது.
அன்றும் அப்படித்தான் சிற்பியோடு அமர்ந்து, அதே பாடத்தைத் படித்துக் கொண்டிருந்த யாழினி, சற்று முன்னர் தான் படித்து முடித்து உறங்கச் சென்று இருக்க, மணிக்கணக்காய் தன் பாடத்தை முடிக்கும் மார்க்கமே இல்லாது அமர்ந்து இருந்தவளுக்கோ, மனமெல்லாம் அப்படி ஒரு சலிப்புத்தான்.
தன் வேலையில் ஒரு கண்ணும், பெண் சோலையில் ஒரு கண்ணுமாய் அமர்ந்து இருந்தவனும், பெண்ணின் அந்தச் சலிப்பில், சட்டென எழுந்து அவள் முன்னால் வந்து அமர்ந்தவன்,
“என்னவாம் தேவிக்கு?” என்று புருவம் உயர்த்தினான்.
கடந்த சில பல வாரங்களாகவே, அவன் அவளிடம் ஆசிரியனாய் மட்டுமே நடந்து கொண்டபடியால்,
தற்போதைய கேள்விக்கும்,
“அது, அது, அதெல்லாம் ஒண்ணுமில்லையே ட்ரைனர், எனக்கு ஒண்ணுமில்லயே” என்று திக்கித் திணறினாள் சிற்பி.
அவள் திணறலிலே அவளுள்
ஏதோ இருப்பதை உணர்ந்து கொண்டவன், “பொதுவா கேர்ள்ஸ் ஏதும் இல்லைன்னாலே, எதுவோ இருக்குன்னு தான் அர்த்தம். அதிலயும், எள்ளுன்னா எண்ணையா நிக்கிற, மை கேர்ள், இவ்ளோ நேரம் ஒரே பாடத்தை படிச்சிட்டு இருக்கான்னா, கண்டிப்பா சம்திங், சம்திங்” என்று கூர்ந்து பார்த்தவன், “என்னனு சொல்லுடி” என்று அவள் முகத்தை கையில் ஏந்திக் கேட்டான்.
ஆணின் அந்த அருகாமையில் அன்னிச்சையாகவே தைரியம் வரப் பெற்றவளும், “அது அது அது வந்து,” என்று தன்னைப் பார்த்தவளை, “யூ பி சொல்லு கேர்ள்” என்று அவனும் ஏறிட்டுப் பார்த்தான்.
அதில் முகம் மலர்ந்து சிரித்தவளும், “அது வந்து யூபி.” என்று அப்பொழுதும் சற்றுத் தயங்கி, திட்டக்கூடாது என்று உறுதியும் பெற்றுக் கொண்டவள், “புதுசா, ஒயிஃபோட இண்டிமேட்டா இருந்த ஹஸ்பெண்ட், ஒயிஃப கொஞ்சம் கூட தனியாவே விட மாட்டாங்களாம். எப்போ பாத்தாலும், அவங்களோட நெருக்கமா இருக்கதான் விரும்புவாங்களாம். ஆனா நீங்க, நீங்க மட்டும், அன்னிக்கு நாள் அப்றம் என்ன, என்ன விட்டு தள்ளி தள்ளியே போறீங்க? அதான் ஏன்னு?” என்று உள்ளே போன குரலிலே, இழுத்து நிறுத்தினாள் சிற்பி.
ஏதோ ஒரு தைரியத்தில் கேட்டு விட்டாலும், அவள் மீதே படிந்து இருக்கும் ஆடவனின் கூர்ந்த பார்வையில், திட்டிக்கிட்டி விடுவானோ, என்று பயப்பார்வை பார்த்தவளைக் கண்டு, “தேவி, மை ப்ரெட்டி கேர்ள்” என்று இழுத்து அணைத்துக் கொண்டவன், “இதுக்குதான் கண்ட கண்ட சினிமா எல்லாம் பாக்கக் கூடாதுன்னு பெரியவங்க சொல்றாங்க போல” என்று வாய்விட்டே சிரிக்கத் தொடங்கினான் ஆடவன்.
அதில் அச்சப்பார்வையை, குழப்பப் பார்வையாய் மாற்றியவளின் தலையைப் பற்றி மென்மையாய் ஆட்டி விட்டவன், “நம்மல்லாம் சாதாரண ஹியூமன் பியிங்ஸ் தானே கேர்ள். பசி, தூக்கம், போல அந்த உணர்வும் பார்ட் ஆப் பீலிங் தான்மா. இண்டிமேட் புதுசுன்னாலும் நம்ம ஒன்னும் நியூ கப்பில்ஸ் இல்லையே? எந்நேரமும் அதே நினைப்போடவே சுத்திட்டு இருக்க முடியுமா?” என்று கேட்டவன், “சினிமா, அண்ட் நாவல்ஸ்ல எல்லாம் சுவாரஷ்யம் சேக்குறதுக்கு, இதை ஓவர் இமேஜினா காட்டி இருப்பாங்கணு நினைக்கிறேன். அதெல்லாம் சில பர்சென்ட் கூட உண்மை இல்ல கேர்ள்.” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னவே, “அதுக்குன்னு ஒன் மந்த்கு மேல கூட, ஒருத்தரால” என்று மேலே சொல்ல முடியாது திருதிருத்து விழித்தவளைக் கண்டு, அவள் சொல்ல வந்ததை யூகித்துக் கொண்டவன், “கேர்ள், இன்னிக்கு உனக்கு என்னாச்சு?” என்று கலகலவென்று நகைக்கத் தொடங்கினான்.
கூடவே, “மனைவி நல்ல முறையில் எக்ஸாம் முடிக்கணும்னு நினைக்கிற ஒருத்தரால, ஒன் மந்த் இல்ல, எத்தனை வருசம் வேணா கட்டுப்பாடா இருக்க முடியும் கேர்ள். இப்போதைக்கு உனக்கு படிப்பு மட்டும் தான் மைண்ட்ல இருக்கணும். வேற எதையும் யோசிக்காம, அதை முதல்ல பாரு” என்று பற்றியிருந்த கன்னத்தை மெதுவாகக் கிள்ளினான் செழியன்.
அதில் மூடத் தொடங்கிய பெண்ணின் விழிகளைக் கண்டு, ‘பி கன்ட்ரோல் செழியா’ என்று சட்டென கரத்தினை விலக்கி, விலகிக் கொண்டவனைப் பார்த்து, “ம்க்கும், அந்த மைண்ட் தான் என் பேச்சையே கேக்க மாட்டிதே. நா எவ்ளோ தடுத்தாலும், லாஸ்ட்டா உங்ககிட்ட தான் வந்து நிக்கிது. ஆனா உங்களுக்குத்தான் என்னோட நினைப்பே இல்ல போல” என்று வாய்க்குள்ளே முனகிக் கொண்டவாறு, எழுந்து நின்றவளை சிறு சிரிப்போடு மீண்டும் அணைத்து இருந்தவன், “என்னோட மைண்டும், எங்க சுத்துனாலும் உன்கிட்ட தான் வந்து நிக்கிது கேர்ள். உனக்கு எக்ஸாம்ஸ் டைம் மட்டும் இல்லாம இருந்திருந்தா, இந்நேரம் உன்ன ஊர் கடத்தியே கொண்டு போயிருப்பேன். ஆனா, இது உன் கரியர்ல முக்கியமான பகுதி. உன்னோட முதல் பட்டத்திற்கான முழு உழைப்பை நீ கொடுக்க வேண்டிய நேரம் கேர்ள். என்னோட நெருக்கம், உன்ன எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ணிடக் கூடாதுன்னு தான், நா தள்ளி இருக்கேன். அதை மனசுல வச்சு நீயும் சமத்துப் பொண்ணா எக்ஸாம் முடிக்கணும். ஓகேவா?” என்று மழலைக்குச் சொல்வது போல், ஆடவனின் வார்த்தைகள் அத்தனை மென்மையாய் பெண்ணின் செவியைத் தீண்டியது.
ஆடவனின் அந்த விளக்கத்தில், அத்தனை நேரம் இருந்த குழப்பம் எல்லாம் விலகி, ஒருவித இதமும் தோன்றிவிட்டு இருந்தாலும், “ம்ம்ம்” என்று தலையை மட்டும் ஆட்டிக் கொண்டவள், புத்தகத்தை மூடிவிட்டு, கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டாள்.
அதில், “கேர்ள்” என்று அழைத்தவன், “என்ன கேர்ள் படுத்துட்ட, படிக்கலியா?” என்று வினவ,
“முடிஞ்சா படிக்க மாட்டேனாங்க. புக்ஸத் திறந்தாலே எனக்கு தலை எல்லாம் சுத்துது. என்னென்னவோ தோணுது. என்னால முடியல யூபி” என்று உரத்த குரலில் தொடங்கி சுரத்தில்லாது முடித்தவளைக் கண்டு, சிந்தனை வயப்பட்டவனாய் விளக்கை அணைத்து விட்டு, அவனும் படுக்கையில் விழுந்தான் செழியன்.
எப்பொழுதும் படுத்த உடனே அவன் மார்புக்குள் புகுந்து கொள்ளும் பெண்ணவளோ, இன்று முதுகு காட்டிப் படுத்திருக்க,
“ஹேய் கேர்ள், என்னாச்சுடி உனக்கு. ஏன் நமக்குள்ள இவ்ளோ டிஸ்டன்ஸ்?” என்று அவள் கையைப் பற்றி இழுத்தான்.
அதை மெதுவாகவே எடுத்து விட்டவளோ, “கொஞ்சம் முன்ன நீங்க தான சொன்னீங்க. உங்க நெருக்கம் இல்லாட்டி தான், நா டிஸ்டர்ப் ஆகாம இருப்பேன்னு. அதான் தள்ளி படுத்துருக்கேன்.” என்று இன்னும் கொஞ்சம் தள்ளி ஓரம் சென்று படுத்தாள் சிற்பி.
சிறு பிள்ளைகள், தனக்கு நெருக்கமானவர்களிடம் காட்டும் செல்லக் கோபம் போல், முறுக்கிக் கொண்டு கிடக்கும் பெண்ணின் அந்தச் செயலில், இதழ்கள் கொள்ளாது சிரித்து, “தேவி, மை சுட்டி கேர்ள்” என்று அவளை மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டவன்,
அவள் என்ன ஏதென்று உணரும் முன்னரே, அவள் முகம் நோக்கிக் குனிந்து, அவள் சினத்திற்கான காரணத்தை களை எடுக்கத் துவங்கினான்.
களை எடுப்பில் துவங்கிய, ஆணின் செயல்கள், அடுத்த சில நிமிடங்களில், இன்ப விழுமியங்கள், எங்கே அதிகம் என்ற கணக்கெடுப்பாய் மாற, முதலில் அதிர்ந்து, பின் சிவந்து, பின்னர் கிறங்கி, அவனுள் மயங்கி, இறுதியில் களைத்துக் களைந்து மார்பில் விழுந்த பெண்ணவளோடு, மஞ்சத்தில் விழுந்தவனுக்கோ,
பல தினங்கள் கழித்து, பனிக்கடலில் மூழ்கி முக்குளித்து வந்தது போல் அப்படி ஒரு இன்ப அதிர்வு, ஆடவனின் மேனி முழுதும்.
அவனுக்கு இம்மியும் குறையாத அதே சிலிர்ப்பில், பெரிய பெரிய மூச்சுக்களோடு, பெண்ணின் முகமும் கனிந்து, மலர்ந்திருக்க, அவளின் கனி போன்ற இதழ்களில், தன் தகிக்கும் அதரங்களை, ஆதூரமாய் ஒற்றி எடுத்தவன், “தேவியின் தேவை தீர்ந்ததா தேவி?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டான்.
ஆணின் அந்த நேரடிக் கேள்வியில், அவன் தன்னைக் கண்டு கொண்டதை உணர்ந்தவளின், முகமெல்லாம் நாணத்தில் சிவந்து, “ம்ம்ம் போங்க, அங்க மட்டும் என்னவாம்?” என்று செல்லமாய்ச் சிணுங்க,
அதைக்கண்டு, மென்மேலும் சிலிர்த்து எழுந்த உணர்வுகளை, முத்தங்களாகவும், அணைப்புகளாகவும் அவளுள் இறக்கியவன், “எப்டி இருந்த என்ன இப்டி மாத்திட்டியேடி. இந்த தேவியோட தேவை, காலத்துக்கும் தீராதடி.” என்று இன்னுமின்னும் தேவியிடம் உள்ள தேவதரிசனங்கள் எல்லாம், தேவைக்கு அதிகமாகவே பெற்றுக் கொண்டவன், அவளை இறுக்கி அணைத்தபடியே நிம்மதியான உறக்கத்தைத் தழுவினான்.
இத்தனை தினங்கள் அவன் கடைபிடித்த இடைவெளியில், ஏதேதோ எண்ணித் தவித்து இருந்தவளும், பல நாளைய ஏக்கம் தீர்ந்தது போல், அவன் மார்பில் படர்ந்த முல்லைக் கொடியாய், ஆழ்ந்த நித்திரை கொண்டிருந்தாள்.
தன்னை யாரோ எழுப்பும் உணர்வில், அவள் மீண்டும் கண் விழித்த சமயம்,
“கேர்ள், கேர்ள். வேக்கப்டா” என்று இடுப்பில் கட்டிய துவாலையோடும், கையில் ஏந்திய தேநீரோடும், இன்னும் இருள்பிரியா, காலையதில் கட்டுடல் மேனியனாய் காட்சி தந்தான் செந்தமிழ்ச் செழியன்.
அதில் அடித்துப் பிடித்து, எழுந்து அமர்ந்தவளை, “ஹேய் ரிலாக்ஸ், ரிலாக்ஸ்மா” என்று அமைதிப் படுத்தியவன், “இன்னிக்குதான கேர்ள் உனக்கு பைனல் எக்ஸாம். நைட்டும் நீ சரியா படிக்கல. அதான் கொஞ்சம் இயர்லியா எழுப்பினேன்” என்று கனிவாய்க் கூறியவன், “குளிக்கிறதுக்கு வெந்நீர், டவல், ட்ரஸ், எல்லாமே உள்ள வச்சுட்டேன் கேர்ள். குளிச்சுட்டு வந்து, இந்த டீயும் குடிச்சிட்டேன்னா, ஃப்ரஷ்ஷா படிக்கலாம். உனக்கு ஈஸியா இருக்கணும்னு, உன் ப்ரொபஸ்ஸர் கிட்ட கேட்டு, யூடுப்ல நோட்ஸ் கூட எடுத்து வச்சுருக்கேன். சீக்கிரம் குளிச்சுட்டு வா கேர்ள்” என்றும் கண் சிமிட்டிச் சொன்னான் செழியன்.
சற்று முன்னர் தான் அவனும் குளித்துவிட்டு வந்ததற்கு அடையாளமாய், ஆணின் துவட்டப்படாத தலையில் இருந்து, நீர்மணிகள் சொட்டு சொட்டாய் வடிந்து, ஆணின் படிக்கட்டு தேகமதில் படிப்படியாய் இறங்கிக் கொண்டிருக்க, அவன் அவளுக்காக செய்து வைத்திருந்த வேலைகளோ, அவன் எழுந்து, எப்படியும், ஒரு மணி நேரத்திற்கும் மேலேயே சென்று இருக்கும் என்று சொல்லாமல் சொல்லியது.
மனைவியை படிக்க அனுமதிக்கும் கணவர்களே, அதிசயமாய் இருக்கும் இந்த சமூகத்தில், தன் மீதான ஆணின் அந்த அக்கறையில், முற்றும் முழுதாய் உருகிக் கரைந்தாள் சிற்பிகாதேவி.
அதில் சட்டென எழுந்து, அவனை கழுத்தோடு இறுக்கிக் கொண்டவள், “லவ் யூ சோ மச் யூபி. உங்களைப்போல ஒரு அக்கறையான கணவன் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க” என்று அவன் முகம், கழுத்து, மார்பு, என்று கிடைத்த இடத்தில் எல்லாம் தன் இதழைப் புதைத்தாள் பாவை.
பெண்ணின் அந்த இதழ் பரிசுகளில், அவன் இதழ்களும் இன்பமாய் விரிய,
“தேவி, மை கேர்ள். இதெல்லாம் பெரிய விஷயமா? இதுக்கு எதுக்கு இவ்ளோ எமோஷன்?” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளைக் குளிக்க அனுப்பினான் கணவன்.
அவள் விரைவாகவே திரும்பி வந்த பொழுதும், உடைமாற்றி, படுக்கையும் மாற்றி, அறையைப் பெருக்கி என்று இன்னும் சில வேலைகளும் செய்து இருந்தவன், அவள் புத்தகத்தோடு அமர்ந்திருக்க, நல்லதொரு மாணவியாய், பவ்யமாக வந்து அவன் முன்னால் அமர்ந்தாள் மனைவி.
அதன்பின்னான நேரங்கள் அவள் படிப்பிலேயே கழிய, இத்தனை தினங்கள், ஒற்றைப் பாடம் படிக்கவே, அத்தனை சிரமப்பட்டவள், இன்று இம்மியும் சலிக்காது, அவன் நோட்ஸ் எடுத்து வைத்திருந்த பாடங்கள் அனைத்தும் சமத்தாகப் படித்துக் கொண்டிருந்தாள்.
கணவனான தான், நெருக்கம் காட்டினால், மனைவியின் கவனம் சிதறுமோ, என்று அவன் இத்தனை தினங்கள் விலகி நின்றிருக்க, பிடித்தவர்களின் அந்த நெருக்கம்தான், அவர்களை விரும்புவர்களுக்கான உற்சாக பானம் என்று, ஆசிரியன் அவனுக்கே வழக்கம் போல் ஆசிரியையாய் உணர்த்தி இருந்தாள் அவன் மாணவி.
சிறிது நேரத்தின் பின்னர் யாழினியும் வந்து அவர்களோடு இணைந்து கொள்ள, படித்து முடித்து, இறைவனை வணங்கி, கல்லூரிக்குக் கிளம்பிய இருவருமே, அவர்களின் இறுதிப் பரீட்சையும் நல்ல முறையிலே முடித்துத் திரும்பினர்.
அதன் பின்னர், இறுதி ஆண்டின் ப்ராஜெக்ட் வேலைகளையும் செழியனின் உதவியில் சிறப்பாகவே செய்து முடித்து, இளம்கலைப் படிப்பும் நல்முறையில் முடிந்து இருக்க, இவ்வளவு காலமும் படிப்பு, பரீட்சை என்று ஓடிக்கொண்டிருந்ததால், அடுத்து வந்த நாட்கள் எல்லாம் இளையவர்களுக்கான கொண்டாட்ட நாளாக மாறிவிட்டு இருந்தது.
குடும்பத்துடனும், தனியாகவும் ஒரு சில வெளியூர் பயணங்களும் சென்று வந்த செழியனுக்கும் சிற்பிக்கும், அடுத்து வந்த நாட்கள் எல்லாம் தேனிலவு தருணங்கள் தான்.
நாட்கள் அப்படியே கடந்து ஓரிரு மாதங்களும் கழிய, பெண்கள் இருவருக்குமே, மேற்படிப்பிற்கான விண்ணப்பங்களைக் கொண்டு வந்தான் செழியன்.
அதில் சிற்பி இன்னுமே காதலாகி, அவனைக் கட்டிக்கொண்டு நன்றி நவில, அண்ணனிடம் வேறு ஒன்றைத்தான் எதிர்பார்த்து ஏமாந்தாளோ பெண்ணவள்?
“எனக்கு பிஜி லாம் வேண்டாம் ண்ணா. நா மேல படிக்கல” என்று தான் சொன்னாள், மனதின் சோகத்தை முகத்தில் காட்டாது மறைக்க முயன்ற யாழினி.
அதில் சிறு முறைப்பினூடே, அவளை ஏறிட்டுப் பார்த்தவன், “பிஜி வேண்டாம்னா, என்ன பண்ணலாம்னு இருக்க யாழி? ஜாப் ஏதும் ட்ரை பண்றியா?” என்று கேட்டதற்கும், ஒன்றும் வேண்டாம் என்றே ஒரேயடியாக மறுத்துவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள் யாழினி
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.