அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தான், இறுதி வருடம் முடித்ததற்கான பரீட்சை முடிவுகள் வந்திருப்பதாய், கல்லூரியில் இருந்து அழைப்பு வர, வெகு நாட்களுக்குப் பிறகு, தோழ, தோழியரைப் பார்க்கப் போகும் துள்ளலில் சிற்பியும், காலம் முழுதும் தோள் கொடுப்பான் என்று காத்துக் கொண்டிருப்பவனைப் பார்க்கப் போகும் ஆவலில் யாழினியும், கல்லூரிக்குக் கிளம்பினர்.
செழியனுக்கு சில வகுப்புகள் இருந்ததால், அவன் முன்னரே கல்லூரிக்குச் சென்று இருக்க, தோழிகள் இருவரும், தங்கள் பழைய தோழிகளோடு சென்று, அவரவர் முடிவுகளைப் பார்த்தனர்.
அவர்கள் டிப்பார்ட்மெண்டின் மொத்த மாணவர்களிலே, யாழி முதலாம் இடமும், (கிரேடு) சிற்பி இரண்டாம் இடமும் பெற்று இருக்க, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களும் சொல்லி மகிழ்ந்தபடியே அளவளாவிக் கொண்டிருந்தனர்.
பேச்சு தோழிகளிடம் இருந்தாலும், யாழினியின் பார்வை மட்டும், சுற்றும் முற்றும் அலைந்து கொண்டிருந்தது .
அவள் எதிர்பார்ப்பாள் என்று அறிந்தவன் போலவே, முகமெல்லாம் புன்னகையோடும், கையில் சிறு பூக்களோடும், அவளை நோக்கி வந்திருந்தான் ராம்சரண்.
அவர்கள் நேசம் எல்லாம் அறிந்தபடியால், “ஹேய், ராம்சார் உன்னதான் பார்க்க வர்றாரு. நீங்க பேசிட்டு இருங்க. நாங்க கேண்டின் போய்ட்டு வர்றோம்” என்று சிற்பிதான் தோழிகளையும் அழைத்துக் கொண்டு செல்ல முயல,
“சிற்பி” என்று தோழியின் கையைப் பற்றியவள், “இல்லடி, இருங்க நானும் வர்றேன்” என்று தவிப்பாய் சொன்னாள் யாழினி.
அவள் அப்படிக் கூறுவதற்கான காரணம் அறிந்த சிற்பியும், “இதைவிட்டா இப்டி ஒரு சந்தர்ப்பம், அடுத்து எப்போ கிடைக்குமோ தெரியலடி. லூசு மாறி பண்ணிட்டு இருக்காம, ஒழுங்கா அண்ணாகிட்ட பேசு யாழி. ட்ரைனர் வந்தா, நா மேனேஜ் பண்ணிக்கிறேன்.” என்று தைரியம் கொடுத்து, விலகிச் செல்ல,
அதுவரை யாழினியையே விழி எடுக்காது பார்த்திருந்தவன், “காலேஜ் டாப்பர் வந்ததுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் யாழி.” என்று அவள் முன்னால் கையில் இருந்த பரிசையும் நீட்டினான் ராம்சரண். அவள் மதிப்பெண்களையும் அறிந்து தான் அவளைத் தேடி வந்திருந்தான்.
கிட்டத்தட்ட ஒருமாத காலத்திற்குப் பிறகு, இன்று தான் இருவருமே இத்தனை அருகில் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கின்றனர்.
அன்று செழியனுக்கு உண்மை தெரிந்து, கண்டித்த நாளில் இருந்தே, அவர்கள் எதிரேதிரே பார்ப்பது கூட அரிதாகிப் போயிருக்க, தவிர்க்க இயலாத விஷயம் என்றால் மட்டும், குறுஞ்செய்தியில் பரிமாறிக் கொள்பவர்கள், தங்கள் காதல், கல்யாணத்தில் முடியுமா? செழியன் தங்களை சேர்த்து வைப்பானா? என்ற கலக்கத்துடன் தான் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.
செழியனை சந்திக்கவென்று எப்போதாவது, ராம்சரண் அவர்கள் வீட்டிற்கே வந்து போனாலும், செழியன் இன்னும் அவர்கள் நேசத்தை ஏற்காத நிலையில், அவனை மீறிப் பார்த்துப் பேசக்கூட இருவருக்குமே தைரியம் இருக்கவில்லை.
தைரியம் என்பதை விட, இருவருமே அவன் மீது கொண்டிருக்கும், பாசமும், மரியாதையும் அவர்கள் கையோடு, வாயையும் கட்டிப்போட்டு வைத்திருந்தது.
வெகு நாட்கள் கழித்துக் கிட்டிய இணையின் தரிசனத்தில், இருவருக்குமே விழிகள் இரண்டும் ஒளிர, சிறிதே தயக்கம் இருந்தாலும், “தேங்க்ஸ் சார்” என்று மெல்ல மெல்ல கையை நீட்டி, அவன் கொடுத்த பரிசை பெற்றுக் கொண்டாள் பாவை.
“சாரா?” என்று புருவமுயர்த்தியவன், “முன்ன, நா விலகி விலகி போனப்போவெல்லாம், ஹே, ராம், ஹே, ராம்னு, என்ன சுத்தி சுத்தி வந்து, காதல் பைத்தியமா ஆக்கிட்டு, இப்போ மேடம்கு நா சார் ஆகிட்டேனா?” என்றான் ராம்சரண்.
கேள்வி, கேலி போல இருந்தாலும், காதல், வேள்வியாய் வதைப்பது நன்றாகத் தெரிந்தது ஆடவனின் குரலில்.
“இல்ல ராம், அது, சும்மா” என்று அவன் முகத்தை தவிப்பாய் ஏறிட்டு, இதழ்களை அழுந்தக் கடித்து, தன் உணர்வுகளை அடக்கியவள், கையிலிருந்த பரிசை குனிந்து பார்க்க,
அதிலோ, பெரியதோர் சாக்லேட் பாரும், பந்தாகச் சுற்றப்பட்ட, மல்லிகைப் பூக்களும், வாசத்தோடு இருந்தது.
அவன் நினைத்தால் ஒற்றை ரோஜாவை வாங்கிக் கொடுத்து, நான் உன் காதலன் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் ஆள் மயக்கும் மல்லியைக் கொடுத்து, என்றாகினும், நானே உன் மணவாளன், என்று சொல்லாமல் சொல்லியிருந்தான் ராம்சரண்.
அதை கைகளில் ஏந்தியவளுக்கும், கண்ணில் இருந்து, நீர்மணிகள் இறங்க, சிறிதும் யோசியாது, சட்டென அதைப் பிரித்து பூக்களை எல்லாம் தலையில் சூடிக்கொண்டாள் யாழினி.
அதில் அவனுக்கும் உணர்வுகள் பெருக்கெடுக்க, “யாழி” என்று அவள் கரத்தைப் பற்ற வந்து, சுற்றம் கருதி பின்னே இழுத்துக் கொண்டவன், “ட்ரைனர், ஏதாவது சொன்னாங்களா?” என்று தவிப்பாகக் கேட்டான்.
‘இல்லை’ என்று தலையை ஆட்டியவளும், “நம்ம நேசம் கல்யாணத்துல முடியுமா ராம்? படிப்பு முடிஞ்சு இவ்ளோ நாள் ஆகியும் அண்ணா அமைதியா இருக்கதைப் பார்த்தா, வேற யாரையும் மாப்பிள்ளையா கூட்டி வந்துருவாங்களோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று கரகரத்த குரலில் கூறினாள்.
அதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல், “ஹேய் யாழி என்ன இது? எதுக்கு இப்டி எல்லாம் பேசுற?” என்று அவள் கையை இறுகப் பற்றிக் கோர்த்துக் கொண்டவன், “நீ தைரியமா இருக்க போய் தான் யாழி, நா பொறுமையா இருந்துட்டு இருக்கேன். எனக்கு ட்ரைனர் மேல நம்பிக்கை இருக்குமா. ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாத” என்று பட்டும் படாமல் அவள் தலையையும் தடவி விட்டான்.
அவன் விழிகளை ஏறிட்டுப் பார்த்தவளும், “அதே நம்பிக்கைல தான் நானும் இவ்ளோ நாளா பேசாம இருக்கேன் ராம். ஆனாலும் அண்ணனோட அமைதி என்ன உள்ளுக்குள்ளயே உருக்குது” என்று தன் கரத்தைப் பற்றிய கரத்தினை உயர்த்தி, கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள் யாழினி.
தன்னவளின் அந்த ஸ்பரிசம், அவளவனுக்கும் தேவையாக இருக்க,
சில நொடிகள் கண்மூடி அதை அனுபவித்து விட்டு, பின் சுதாரித்துக் கொண்டவனாய், “யாழி, இது காலேஜ்மா. ப்ளீஸ் கையை விடு. நம்மலாள ஒரு தரம் ட்ரைனர் அனுபவிச்ச கஷ்டமே போதும்” என்று அவளிடமிருந்த, கரத்தினை மெல்லவே இழுத்துக் கொண்டான் ராம்சரண்.
அவளை தலை குப்புற வீழ வைக்கும், ஆணின் அந்த குணத்தில், “வேற எந்த காரணம் இல்லாட்டியும், உங்களோட இந்த ஒரு குணத்துக்காகவாவது, வாழ்க்கை முழுசும் உங்ககூட நா வாழ ஆசைப்படுறேன் ராம்” என்று உயிர் கரையும் குரலில் சொல்லி, அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் யாழினி.
பெண்ணின் அந்தக் கூற்றில், அவன் நேசமும், பொங்கிக் கொண்டு எழும்ப, “நிச்சயம் நடக்கும் கண்ணம்மா. நம்பிக்கையோட இரு” என்று விழிகளை மூடித் திறக்க, அச்சமயம், வகுப்புகள் எல்லாம் முடிந்து அவர்களைத் தேடி வந்திருந்த செழியனின் விழிகளோ, சற்று தொலைவில் ராமோடு நின்ற தங்கையில் படிந்து, அதிருப்தியாய் சுருங்கியது.
கூடவே, அன்று நடந்த நிகழ்வுகளும் ஞாபகம் வந்து, “இது காலேஜ்னு நினைப்பு இருக்கா இல்லியா இவங்களுக்கு? திரும்பத் திரும்ப அதே தப்பதான் பண்றாங்க. யாழிய ராம் கூட விட்டுட்டு, இந்த தேவி எங்க போனா?” என்று தாடை இறுக திட்டிக் கொண்டவன், சுற்றி முற்றியும் தேடியபடியே அவர்களை நோக்கி அடி எடுத்து வைக்க,
“நா இங்க தான் இருக்கேன் யூ பி. இப்ப நீங்க எங்க போறீங்க?” என்று அவன் கையைப் பற்றி நிறுத்தினாள் சிற்பி.
அவளைத் திரும்பிப் பார்த்தவனின் சினமெல்லாம் மனைவியின் யூபி யில் அவள் மீது திரும்ப, “காலேஜ்ல வச்சு யூபி அது இதுன்னு என்ன கேர்ள் இது?. கால் மீ ட்ரைனர்” என்று சொன்னான்.
“அதான் எக்ஸாம் முடிஞ்சு ரிசல்ட்டே வந்துடுச்சே, இனிமேல் என்ன ட்ரைனர்?” என்று அவளும் பதிலுக்குக் கேட்க,
“இதுவே வீடா இருந்திருந்தா, நா உனக்கு காலம் முழுசும் ட்ரைனர் தான்னு புரியற போல பதில் சொல்லி இருப்பேன். காலேஜா போனதால தப்பிச்சுட்ட கேர்ள்” என்று அவளை ஏகத்துக்கும் முறைத்தவன், “தேவி மேடம், பெரிய பெரிய வேலை எல்லாம் பாக்குறீங்க போல?” என்றும் ஒரு மாதிரிக் குரலில் கேட்டான்.
அதில் திருதிருத்து விழித்தவளும், “அப்படியென்ன வேலை பாத்தேன் ட்ரைனர்? ரெண்டு மஷ்ரூம் பப்ஸ்,
ஒரு முட்டை போண்டா, அப்றம் ஒரு மெங்கோ ஜுஸ். வித் ஒன் காஃபி. இவ்ளோ தானே சாப்பிட்டு வந்தேன். இது அப்டியொன்னும் பெரிய வேலை இல்லியே?” என்று வேண்டுமென்றே விழிகளைக் கொட்டினாள் விரிவுரையாளனின் மனைவி.
பெண்ணின் அந்த பாவத்திலும், அவள் உண்டதாய்க் கூறிய சிற்றுண்டியின் அட்டவணையிலும், விழிகள் இன்னும் விரிந்து, அவனுள் இருந்த சினமெல்லாம் சிலமடங்கு பெறுகியது.
“சாப்பிடுறதையே வேலையா வச்சுட்டு பேச்சைப் பாரு. ஒரு மணி நேரத்தில இவ்ளோ ஸ்னாக்ஸ் சாப்பிட்டா என்ன ஆகுறது கேர்ள்?” என்று அவள் தலையில் நறுக்கென்று கொட்டியவன், “ஒரு பக்கம் காலேஜ் சேர்மனோட பொண்ணு நீ, ஒரு பக்கம், காலேஜ் ட்ரைனருக்கு மனைவி. ஆனா நீ பாத்துட்டிருக்க வேலைக்கு பேர் என்னனு தெரியுமா? மேடமோட காவல்ல தான், அவங்க காதல் இவ்ளோ நாளா வளருது, வ்ரைட்?” என்று கேட்டவன், “இரு உன்ன வீட்டுல வந்து வச்சுக்கிறேன்” என்றும் திட்டி விட்டு, அங்கு மரத்தடியில் நின்றவர்களை நோக்கி விறுவிறுவென்று விரைந்தான் செழியன்.
அவன் வேகம் கண்டு, எச்சில் கூட்டி விழுங்கியவளும், “அய்யோ, ட்ரைனர், அவங்க மேல எந்த தப்பும் இல்ல. நான்தான் வருங்கால தம்பதிங்க, கொஞ்சம் பேசிட்டு இருக்கட்டும்னு” என்று ஏதோ சொல்ல வந்து, அவன் முறைப்பில் விழுங்கிக் கொண்டவள், “ப்ளீஸ் ட்ரைனர், அவங்களை ஏதும் சொல்லிடாதீங்க. பாவம் ரொம்ப வருசக் காதலர்கள் இப்ப உங்களுக்காக யாரோ போலதானே இருக்காங்க” என்று அவன் பின்னோடே ஓடியவளின் சமாதானம் எல்லாம், அவன் சினத்தை கூட்டுவதாகவே இருந்தது.
அவன் அவர்களை நெருங்குவதற்குள், அவனைப் பார்த்து விட்டவர்களும், “அய்யோ ட்ரைனர்” என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே வேகமாக விலகி நிற்க, “ரிசல்ட் பார்த்ததும் வீட்டுக்குக் கிளம்பாம இங்க நின்னு என்ன செய்ற யாழி?” என்று சிறு கண்டிப்புக் குரலில் கேட்டு, இருவரையும் கண்டனமாகப் பார்த்தான் செழியன்.
அதில் தவறு செய்தவர்களாய் இருவருமே தலை குனிந்து நின்றிருக்க, “அது அது, ஒண்ணுமில்ல ட்ரைனர். யாழி காலேஜ் டாப்பர் வந்ததுக்கு, ராம்சார் விஷ் பண்ணதான் வந்தாரு. இல்லடி யாழி? பாருங்க சாக்லேட் கூட கொடுத்து இருக்காரு” என்று யாழினியின் கையில் இருந்த இனிப்பைக் காட்டினாள் சிற்பி.
ஆனால் அண்ணனான அவனுக்கோ, யாழினியின் தலையில் இருந்த மல்லிகைப் பூவின் வாசம்தான் மூக்கைத் துளைக்க, வேண்டுமென்றே, “அப்டியா கேர்ள். நீ கூடத்தான் 2ண்ட் ப்ளேஸ் வந்துருக்க. உனக்கு சாக்லேட் கொடுத்தாரா உங்க சார்?” என்று புருவம் தூக்கினான் செந்தமிழ்ச் செழியன்.
அதைக்கேட்டு, தவறு செய்தவனாய் தலைகுனிய வேண்டியவன், ‘நான் ஒன்றும் பெரிய தவறெல்லாம் செய்து விடவில்லை’ என்பது போல், சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு, “சிற்பிக்கு மட்டுமில்ல ட்ரைனர்.
என் கிளாஸ் ஸ்டுடென்ட்ஸ் எல்லாருக்குமே சாக்லேட் உண்டு” என்று கையிலிருந்த பையில் இருந்து, யாழினிக்குக் கொடுத்த போல அதே இனிப்புகளை எடுத்து பெண்கள் இருவரிடமும் கொடுத்து, வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் கொடுக்கக் கூறினான் ராம்சரண்.
அவர்களும் செழியனிடமிருந்து தப்பித்து, ராம் கொடுத்த இனிப்புகளை விநியோகிக்க,
அதை வாங்கிக் கொண்ட மாணவர்கள் எல்லாம், அவனிடம் ஓடிவந்து நன்றி கூறி சந்தோசப் பட்டனர்.
அவனும், உண்மையான அன்புடனே, அனைவரும் மேற்படிப்பு படித்து பெரிய இடத்திற்கு வரவேண்டும் என்று வாழ்த்துக் கூறி அனுப்பி இருக்க, எந்த ஒரு நாடகத்தனமும் இல்லாது, தன் மாணவர்களிடம் அவன் நடந்து கொள்ளும் முறையையும், அவன் ஆசிரியப் பணி மீது அவன் கொண்டிருக்கும் ஆசையையும், மெச்சாமல் இருக்க முடியவில்லை செந்தமிழ்ச் செழியனால்.
சில நொடிகள் அவனையே பார்த்து இருந்தவனுக்கு, ‘இப்படி ஒருவனை உன் தங்கைக்கு மணமுடிப்பதில் என்ன தவறு?’ என்ற வழக்கமான கேள்வியும் எழும்பி, அவனிடம் பேச வந்த வார்த்தைகள் எல்லாம் அப்படியே அமுங்கி இருக்க, “குட் ஜாப் ராம். கீப் இட் அப்” என்று மட்டும் சொல்லிவிட்டு, தங்கை, மனைவி இருவரையுமே அழைத்துக் கொண்டு வீடு வந்தான் செந்தமிழ்ச் செழியன்.
அன்று முழுதுமே, ராம் கொடுத்த பூக்களோடே யாழினி, ஒருமாதிரி மோன நிலையில் உலாவர, வெளிப்படையாய் பெண்ணை கட்டிக் கொடுங்கள் என்று கேட்கவில்லையானாலும்,
அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு மட்டும் கொடுத்தவன், தங்கைக்கு மட்டும் பூக்களும் கொடுத்திருப்பதிலே, என்று இருந்தாலும் அவள் மட்டும் தான் என் மனைவி என்று சொல்லாமல் சொல்லியதாய் தான் செழியனுக்குத் தோன்றியது. இருந்தும் அவர்களின் முந்தைய உறவு நிலையும், சுசீலாவை எண்ணிய தயக்கமும், அவனுக்கு ஒரு முடிவைக் கொடுக்க மறுத்தது.
அச்சமயம் செழியனிடம் வந்த சிற்பியோ, “ஏன் யூபி, கொஞ்சம் முன்ன ராம் சார்கிட்ட, குட் ஜாப் கீப் இட் அப் னு சொல்லிட்டு வந்தீங்களே. அது யாழினி கூட பேசிட்டு இருந்ததுக்கா? இல்ல ஸ்டுடென்ட்ஸ்கு சாக்லேட் கொடுத்ததுக்கா? ஏன்னா இனிமேல் நாங்க அவங்க ஸ்டுடென்ட்ஸா காலேஜ்கு போக மாட்டோம் இல்லியா? அப்போ யாழினி கூடப் பேசத்தானே என்கரேஜ் பண்ணீங்க?” என்று அப்பாவி போல் கேட்டாள் மனைவி.
அதில் அவளை எக்குத்தப்பாக முறைத்தவன், “அடிங்க, உனக்கு வாய் ரொம்ப அதிகம் ஆகிடுச்சு கேர்ள். பனிஷ்மென்ட் கொடுத்தா தான் பேசாம இருப்ப” என்று மனைவியைத் துரத்து துரத்தென்று துரத்தி, தன் குழப்பங்களையும்
அவள் அண்மையில் தீர்க்கத் தொடங்கினான் செழியன்.
அப்படியே மேலும் சில நாட்கள் கழிந்திருக்க, அண்ணன் அழைத்து ராமை பெண் கேட்டு வரச்சொல்லம்மா என்று கூறும் நாளுக்காய் தங்கையும் ஆவலோடு காத்திருக்க, அன்று மாலை கையில் தாம்பூலத் தட்டோடு, சிறு பத்திரிகையும் வைத்துக் கொண்டு, தங்கள் வீட்டிற்குள் நுழைந்த ராம்சரணைக் கண்டு, யாழினி உட்பட அனைவரின் விழிகளும் அதிர்ந்து விரிந்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.