அன்று ஞாயிற்றுக் கிழமை மகளையும், மருமகனையும் சந்திக்க வந்த, சிற்பியின் பெற்றோரும், செழியன் வீட்டில் தான் அமர்ந்து இருக்க, பத்திரிக்கையும் தாம்பூலமுமாக, வீட்டிற்குள் நுழைந்த ராம்சரணைக் கண்டு, ஏதேதோ எண்ணங்களில் அனைவரின் விழிகளும், அதிர்ந்து விரிந்தது.
அவன் திடீர் வருகையின் காரணம் தெரியாத யாழினியும் கூட, அவனை குழப்பமாய் தான் பார்த்து நிற்க, அப்படி எந்த குழப்பமும் இல்லாது, “வாங்க அண்ணா வாங்க, ஏன் அங்கயே நின்னுட்டிங்க. உள்ள வந்து உக்காருங்கண்ணா” என்று புன்னகை முகமாய் அவனை வரவேற்றது என்னவோ சிற்பிகா தான்.
அதன் பின்னரே மற்றவர்களும் சேர்ந்து அவனோடு அளவளாவத் துவங்கி, அவனுக்கு தேநீரும் பரிமாறப்பட, அனைவரிடமும் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தாலும், அவன் பார்வை அவ்வப்போது யாழினியின் மீதும் படிந்து விட்டே விலகியது.
“வேற எதுக்கா இருக்கும் உன்ன சைட்டடிக்கதான் வந்திருப்பாரோ என்னவோ? பாரேன் கடிச்சு சாப்பிடுற போல பாக்குறாரு” என்று தன் காதுக்குள் கிசுகிசுத்த சிற்பியின் கூற்றில், அவள் கலக்கத்தையும் மீறி, பெண்ணின் கன்னங்கள் இரண்டும் சிவக்கத் தொடங்கியது.
அதுவரை இருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்திருந்த செழியனுக்கோ, இருவரின் நேசத்தின் அளவும் நன்றாகப் புரிந்தாலும், எங்கே அவன் வருகை சுசீலாவிற்குப் பிடிக்காமல் ஏதாவது பேசப்போய், அதில், தங்கைக்கும், மனைவிக்கும் மனக்கஷ்டம் ஏதும் வந்து விடுமோ, இப்பொழுது தான் சற்றே சகஜமாகி, அன்னையிடம் முகம் திருப்பாது அமைதி காக்கும் மனைவி, மீண்டும் முறுக்கிக் கொண்டு சண்டை பிடிக்கத் துவங்கி விடுவாளோ, என்றெல்லாம் பலவித கவலையும் கூடவே எழுந்தது.
அச்சமயம், “ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வந்தேன் சார். பெரியவங்களும் இங்கயே இருக்கது ரொம்ப வசதியாப் போச்சு” என்று ஆரம்பித்த ராமின் கூற்றில், அவன் பெண் கேட்கத்தான் வந்திருக்கிறான் என்று உறுதியாக எண்ணியவன், “இதுபத்தி நாம அப்றம் தனியாப் பேசலாமே ராம்.” என்று அவனைத் தடுக்கத்தான் முனைந்தான்.
ஆனால், அப்படி எல்லாம், எந்த இக்கட்டிலும் உங்களை நிறுத்த மாட்டேன் என்பது போல், அவனைப் பார்த்து அழகாய் புன்னகைத்த ராமோ, “இல்ல ட்ரைனர், தனியாப் பேசுற விஷயமோ, யாருக்கும் தர்ம சங்கடம் கொடுக்கிற விஷயமோ நா இப்ப பேச வரல்ல. முன்ன உங்ககிட்ட சொல்லிட்டு இருந்த போல, புதுசா ஒரு டியூசன் சென்டர் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன். வர்ற வெள்ளிக்கிழமை திறப்பு விழா பங்க்சன். அதுக்கு, நீங்க, அம்மா, தங்கச்சி, வேதாசார், மேடம்னு எல்லாருமே வரணும் ட்ரைனர். பெரியவங்க தான் சென்டரை திறந்தும் வைக்கணும்.” என்று இரு பத்திரிகையும் கொடுத்து அனைவரையும் முறைப்படி அழைத்தான் ராம்சரண்.
அதில் அனைவரின் விழிகளும் மகிழ்ச்சியாக விரிய, “குட் ஜாப் ராம். ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. எனக்கு அப்பவே தெரியும். நீ ஆக்டிவான பையன், ஏதாச்சும் ஸ்பெஷலா செய்வன்னு.” என்று சிலாகித்த வேதாச்சலம், “எந்த ஏரியால சென்டர் இருக்கு? என்னென்ன டிபார்மென்ட்கு எல்லாம் லெக்சரர்ஸ் ஏற்பாடு செஞ்சிருக்க ராம்?” என்று மற்ற விபரங்கள் எல்லாம் விசாரிக்கத் தொடங்கினார்.
அவருக்கு உரிய பதிலைக் கொடுத்து முடித்த ராமும், “ட்ரைனர், பத்திரிகையை பிரிச்சுப் பாருங்க” என்று செழியனிடமும் கூற, அத்தனை நேரமும், அவனை தவறாக எண்ணி விட்டோமே, என்ற எண்ணத்தோடு, அவன் சாதனையை தன் சாதனையாய் எண்ணிய பெருமையும் சேர, “கங்க்ராட்ஸ் ராம். வெரி வெரி ப்ரௌட் ஆப் யூ” என்று அவனுக்கு கைகுலுக்கி விட்டு
பத்திரிகையைப் பிரித்துப் பார்த்த செழியனுக்கோ, அதில் இருந்த “ராமயாழி” என்ற ஸ்தாபனத்தின் பெயரைக் கண்டு விழிகள் இரண்டும் விரிந்தது.
அதே அதிர்ச்சியில் தான், தோழி நீட்டிய பத்திரிகையைப் பார்த்த யாழினியும், விழியில் நீர் தழும்ப, “என், என், என், பேருமா?” என்று அவனை ஏறெடுத்துப் பார்க்க, ‘எஸ், நீதானே என் பொண்டாட்டி’ என்பது போல் லேசாகக் கண் சிமிட்டிச் சிரித்தவனும், “பிடிச்சிருக்கா?” என்று விழியாலே கேட்டான்.
அதில் இன்னுமே உணர்ச்சிவசப் பட்டுப் போனவள், கையில் இருந்த பத்திரிகையை நெஞ்சோடு இறுக்கி, அதன் முனையில் சிறு முத்தமும் பதிக்க, அவள் அவனுக்கே முத்தமிட்டது போல், உள்ளம் குளிர்ந்து போனவன்,
“எல்லாரையும் கூட்டிட்டு கட்டாயம் வந்துடுங்க ட்ரைனர். அத்தை வந்து தான் பூஜையே தொடங்கணும்” என்று எல்லாரிடமும் மீண்டும் கூறிவிட்டு, உரியவளிடம் சிறு தலையசைப்பும் செய்துவிட்டே, வெளியேறிவனைப் பார்த்து, அங்கிருந்த அனைவருக்குமே அப்படி ஒரு நிறைவுதான்.
செழியன் அன்று கூறிய வார்த்தைகளை மதித்து, நேரடியாக பெண் என்று கேட்க வில்லையானாலும், எத்தனை காலம் ஆகினும், யாழிதான் என் மனைவி, அதை யாராலும் மாற்ற முடியாது, என்று, அவனது ஒவ்வொரு செயலிலும் உணர்த்தத் தொடங்கியவன், எல்லோர் மனதிலும் தன் இடத்தையும் பிடிக்கத் தொடங்கினான்.
அப்படியே அந்த வாரமும் கழிய, யாழினி உட்பட, அனைவருமே ராம் அழைத்த விசேஷத்திற்குச் சென்று இருக்க, வேதாவும், சுசீலாவும் கூட, அவர்கள் வீட்டிலிருந்து வந்து இறங்கினர்.
பத்திரிகையில் சிறிதாக இருந்த அதே ராமயாழி என்ற பெயர்தான், அங்கே ஸ்தாபனத்தின் முகப்பில், கொட்டை வடிவில் மின்னிக் கொண்டிருக்க, அதைப் பார்த்தபடியே உள்ளே நுழைந்த அனைவருக்கும், அவன் அந்நியன் என்றே எண்ணத் தோன்றவில்லை.
வந்தவர்களை எல்லாம், வாசலுக்கே ஓடிச்சென்று வரவேற்று உபசரித்தவன், அவன் வீட்டு உறவுகள் என்று வந்திருந்த, ஒருசில நபர்களுக்கும் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
பின், வயதிலும், அனுபவத்திலும், மூத்தவர் என்ற முறையில், சிற்பியின் தந்தை வேதாச்சலத்தை நிறுவனத்தை திறக்கச் செய்தவன்,
சுசீலா, மீனாட்சி இருவரையும் தான் சாமி கும்மிட்டு, பூஜை செய்ய வேண்டும் என்று அன்பாய் கேட்டுக் கொண்டான்.
பின் சிற்பியிடம் வந்து, உரிமையாக தங்கச்சி என்று அழைத்து குத்துவிளக்கை ஏற்றக் கூறியவன், யாழியையும் விழியாலே அழைக்க, அவள் தன் அண்ணனைத்தான் ஏறிட்டுப் பார்த்தாள்.
அவனோ, தங்கைப் பார்ப்பதை அறிந்தும் அறியாதவனாய், நின்று இருக்க, “ஹேய் யாழி, நீயும் வா. நம்ம ராம் சாரோட டியூசன் சென்டர், சிறப்பா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு விளக்கை ஏத்து.” என்று அவளே தோழியை விளக்கேற்ற வைத்து, கணவன் செய்ய வேண்டியதை தான் செய்து முடித்திருந்தாள் சிற்பி.
யாழினி விளக்கேற்றிய சமயம், முகம் கொள்ளாப் புன்னகையோடு, அருகருகே நின்றிருந்த, ராமையும் மகளையும் கண்ட மீனாட்சிக்கும் கூட, இருவரின் ஜோடிப்பொருத்தம், மனதை நிறைப்பதாய் இருக்க,
‘பேசாமல் மகனிடம் சென்று நாமே அவர்கள் திருமணம் பற்றிப் பேசி விடுவோமா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தார் மீனாட்சி.
ராமின் சிறு வயதிலே, தந்தை இறந்திருக்க, சில வருடங்கள் முன்னர் தான், தாயையும் இழந்து விட்ட நிலையில், அவனுக்காகப் பெண் கேட்டுச் செல்லக்கூட ஆள் இல்லாமல் தான் இருந்தது.
செழியனிடம் அன்று கொடுத்த வாக்கிற்காக, ராமும், அமைதியாக இருக்க, பெண்ணைப் பெற்றவரான மீனாட்சிக்குத் தான் எங்கே, ராம் போன்ற நல்ல மாப்பிள்ளையை இழந்து விடுவோமோ என்றெல்லாம் எண்ணங்கள் செல்லத் தொடங்க, அப்படியே உணவும் முடிந்து, அனைவரும் கிளம்பி, இரு தரப்பு வீட்டினர்கள் மட்டுமே, ஓய்வாக அமர்ந்திருந்த சமயம், “மாப்பிள்ளை, உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்று அழைத்தபடி செழியனை நெருங்கினார் சுசீலா.
“சொல்லுங்க அத்தை?”
என்று அவனும், அவரை கேள்வியாகப் பார்க்க,
“ராம், சிற்பிய எந்த முறையில தங்கைன்னு கூப்பிடுறாப்லன்னு எனக்குத் தெரியல. ஆனா அன்னிக்கு என் பொண்ணு காணாமப் போய் திரும்பி வந்த அன்னில இருந்தே, நா அவரை என் பையன் போலத்தான் பாக்குறேன். அவருக்கு, பெத்தவங்கன்னு யாரும் இல்லன்னு, சிற்பி, அப்பாட்ட ரொம்ப வருத்தப்பட்டு சொன்னா. அந்த இடத்தில இருந்து நாங்க அவருக்காக பெண் கேக்குறோம் மாப்பிள்ளை. இதெல்லாம் செஞ்சா என் பொண்ணோட கோபம் குறையும்ங்கறதுக்காக மட்டும், நா இதை கேக்கல. உண்மையான நேசம் வச்சுருக்க ஒரு ஜோடிய, பிரிச்ச பாவம் எனக்கு வேணாம் மாப்பிள்ளை. உங்க தங்கை யாழினியை, என் பையன் ராமுக்கே கட்டிக் கொடுத்திருங்க.” என்று அனைவரின் தேடலுக்கும் சுசீலாவே ஒரு தீர்வைக் கொண்டு வந்திருந்தார்.
அன்று கல்லூரியில் தான் அத்தனை கேவலமாகப் பேசியவர்களுக்காக, இன்று அவரே முன்நின்று பேசியிருக்க, அவரை எண்ணியே இவ்வளவு தினங்கள் தயங்கிய செழியனுக்கோ, மாமியாரைப் பார்த்த பார்வையில் அப்படி ஒரு மகிழ்ச்சியும், சந்தோசமும் பொங்கிப் பெறுக, “சீக்கிரமே கல்யாணத்துக்கு நாள் பார்த்துடலாம் அத்தை” என்று யோசியாமலே பதில் மொழிந்தான்.
சுசீலாவின் அந்தச் செயலில், அத்தனை தினங்கள் அன்னையிடம் முகம் திருப்பிச் சென்றிருந்த சிற்பியும், “ம்மா” என்று ஓடி, “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா. உங்ககிட்ட இருந்து, இப்படி ஒரு செயலை நா எதிர்பாக்கவே இல்லைமா. இப்போ தான் என்னோட அம்மான்னு ப்ரூப் பண்ணி இருக்கீங்க” என்று அவரை கட்டிக் கொண்டு முத்தமழை பொழிய, ராமும் யாழினியும், விழியில் வழியும் நீரோடு, அவருக்கு கைகூப்பியே நின்று விட்டார்கள்.
“ரொம்ப ரொம்ப சந்தோசம் சம்பந்தி. என் நெஞ்சில பாலை வாத்துட்டிங்க” என்று மருமகளோடு அவள் அன்னையையும் சேர்த்தே அணைத்து கொண்ட மீனாட்சியின் நிலையோ, சொல்லவே தேவையில்லாததாய் இருக்க, மனைவியைக் கண்டு மெச்சுதலாக புருவமுயர்த்தி, விழியாலே பாராட்டினர் வேதாச்சலம்.
அதைத் தொடர்ந்து வேதாவும், செழியனும் சேர்ந்து, ராமின் உறவுகளிடமும், விஷயத்தைக் கூறி அடுத்தடுத்து ஆக வேண்டியதைப் பேச, ராமயாழி என்ற கற்பிக்கும் ஸ்தாபனத்தை திறந்து வைக்கக் கூடியவர்கள், அடுத்த சில மணி நேரங்களில், ராம் யாழினியின் திருமணத்திற்கான நாளையும் குறித்து விட்டுத்தான் வீடு திரும்பினர்.
அன்றிலிருந்து, சரியாக, இரு மாதம் கழித்து, திருமண நாளைக் குறித்து இருந்தவர்கள், ராமிற்கு பெற்றோர் இல்லாததால், தங்களோடு ராமையும் சேர்த்துக் கொண்டு, அவன் பக்க வேலைகளையும் ஒன்றாகவே செய்து முடித்தனர்.
நகை நட்டு, சீர் செனத்தி என்று எதுவும் வேண்டாம் என்று ராம் சொல்லி விட்டாலும், ஏற்கனவே யாழினிக்கென்று சேர்த்திருந்த அணிமணிகளோடும், அனைவரின் ஆசீர்வாதமும் பெற்று, பூலோக தேவதையாய் மணவறையில் அமர்ந்திருந்தாள் செழியனின் செல்லத் தங்கை.
அன்று ராமை மகன் என்று கூறியது, பேச்சிற்கு மட்டுமல்ல, என்று உணர்த்தும் விதமாய், வேதாவும், சுசீலாவுமே, ராமின் பெற்றோராய் முன் நின்று சாங்கியங்கள் எல்லாம் செய்ய, யாழினியின் பெற்றோராய் அவள் கரம் பிடித்து, ராமின் கையில் ஒப்புக் கொடுத்தார்கள் செழியன் சிற்பிகா தம்பதி.
மேள தாள வாத்தியங்கள் முழங்க, கெட்டிமேளம் சப்தங்கள் மண்டபத்தையே நிறைக்க, “மாங்கல்ய தாரணம் பண்ணுங்கோ” என்ற ஐயரின் கூற்றில், மெஜந்தா வண்ணப் பட்டுப்புடவையில், தங்கத் தாரகையாய் அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணின் கழுத்தில், பட்டுவேஷ்டி சட்டையில், புது மாப்பிள்ளைக்கே உரிய கம்பீரத்தோடு, அமர்ந்திருந்த ராம்சரண், மூன்று முடிச்சுக்களையும் அவனே இட்டு, அவளை தன்னின் சிறந்த பாதியாக ஏற்று இருந்தான்.
விழியில் வழியும் கண்ணீரோடு, அந்த தேவ கணங்களை உள்வாங்கத் தொடங்கியவளின் நெற்றியில், “லவ் யூ சோ மச் டி கண்ணம்மா” என்று தன் உதடுகளையும் புதைத்து எடுக்க,
“மீ டூ ராம்” என்று முனகிக் கொண்டவளின் விழிகளோ வெட்கத்தில் விரிந்தது.
அந்த விழிகளுக்குள் விழுந்தவாறே, அவள் நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்து விட்டவன், “ரொம்ப அழகுடி நீ” என்று அவள் முன் உச்சியில் மீண்டும் ஒரு முத்திரையைப் பதித்தான்.
அதில், அங்கே நின்றிருந்த உறவுகளுக்குக் கூட, சற்றே வெட்கமாகி விட, “உன் அண்ணனவிட, என் அண்ணன், பெரிய, ரோமியோவா இருப்பாரு போலவேடி, மணவரையிலே, ரெண்டு முத்தம்னா, முதலிரவு அறையில, நீ ஒரு வழிதான்” என்று தோழியின் செவியில் கிசுகிசுத்து, கிண்டல் செய்தாள் சிற்பி.
அதில் யாழினியின் வெட்கம் இன்னுமின்னும் பெறுக, “ச்சீ போடி, இப்படியெல்லாம் பேசாத” என்று சிணுங்கிக் கொண்டவளைப் பார்த்து,
“என்னடி, அதுக்குள்ள என்ன விரட்டுற. நைட்டு வரயாச்சும் உன்கூட இருக்க விடேண்டி!” என்று இன்னுமின்னும் சீண்டினாள் சிற்பி.
அதில் ஏகத்துக்கும் முகம் சிவந்து, அவளைப் பார்த்து முறைத்த யாழினி, முறைப்புக்கு மாறான நெகிழ்ந்த குரலில், “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டி. நீ மட்டும் இல்லன்னா, இப்டி ஒருநாள் என் வாழ்க்கைல வந்திருக்குமான்னே தெரியல” என்று விழியில் துளிர்த்த நீரோடு தோழியின் கரத்தை விடாது பற்றிக்கொள்ள, அவள் உணர்வுகளை உணர்ந்தார் போல்,
“வீ ஆர் பிரண்ட்ஸ்டி. நமக்குள்ள தேங்க்ஸ்லாம் வந்துச்சு, பல்லை உடைச்சுடுவேன். போ போய் அண்ணாகூட நின்னு போட்டோக்கு போஸ் குடு” என்று அவள் கரத்தினை அழுத்திக் கொடுத்து, அனுப்பி வைத்தாள் சிற்பிகாதேவி.
அப்படியே தாலி கட்டும் சம்பிராதாயங்கள் முடிந்து, விருந்து உபசரிப்புகளும் தொடங்க,
மனைவியின் கையைப் பற்றியே உணவுன்னும் இடத்திற்கு அழைத்து வந்தவன், யாரும் கூறாமலே, முதல் வாய் உணவை எடுத்து, மனைவிக்கு தான் ஊட்டி விட்டான் ராம்சரண்.
அதில் அவர்களைச் சுற்றி நின்ற இளவட்டங்கள் எல்லாம், “ராம் சார் டோட்டல் ஃபிளாட் போல” என்று கைதட்டி ஆர்ப்பரிக்க, அதைக்கேட்டு இருவரின் முகமும் காட்டிய வர்ணஜாலங்களில், அவர்களையே புன்னகையோடு, பார்த்திருந்த செந்தமிழ்ச் செழியனிற்கோ, கண்களும் கால்களும், அன்னிச்சியாக மனைவியிடம் செல்ல, ஆணின் வலிய கரங்களோ, யாருமறியாது, பெண்ணின் பூங்கரங்களோடு தன்னைப் பிணைத்துக் கொண்டது.
கணவனின் அந்தப் பற்றுதலில், எப்பொழுதும், அவன் கேட்கும் கேள்வியை, இப்பொழுது “என்னவாம் யூபிக்கு?” என்று அவள் கேட்டு புருவமுயர்த்த,
“ப்ச் ஒண்ணுமில்ல, சும்மா” என்று தலையை ஆட்டியவனின் விழிகள் இரண்டும், அவள் மேல் கொண்ட நேசம் மொத்தம், அவளுள் அனுப்பியது.
இரு ஜோடிகளும், அவரவர் உலகில் சஞ்சரித்து, விழியாலே உறவாடிக் கொண்டிருக்க, புதுப் பெண்ணான யாழினியின் அருகில் செல்ல இயலாது, சிற்பியின் அருகில் வந்த தோழிகளோ, “ரெண்டு பேரும் ஒன்னும் தெரியாத ஊமச்சிக மாறி இருந்து, எங்கள எல்லாம், பாடம் சொல்லிக் கொடுக்குற சாரைப் பாக்குறது தப்புன்னு, படிக்க வச்சுட்டு, நீங்க மட்டும் ஆளுக்கொரு லெக்சரரை மேரேஜ் பண்ணிட்டிங்கள்ளடி? எப்டியோ, நல்லா இருங்கடி.” என்று ஆற்றாமையாகச் சொன்னவர்கள், “இன்னிக்கு யாழிக்கு தான்டி மேரேஜ். உனக்கில்ல. இங்க நின்னு, ட்ரைனரையே சைட்டடிச்சிட்டு இருக்காம, அங்க வந்து பொண்ணுக்கு அண்ணியா பொறுப்பா இருடி” என்று கையோடு சிற்பியை அழைத்தே சென்று இருந்தனர்.
அதன் பின்னர் நேரங்கள் அப்படியே கழிய, மண்டபத்தில் அனைத்தும் முடிந்து, வந்தவர்களும் கிளம்பியிருக்க, பெண் மாப்பிள்ளை இருவரையும் தங்களோடு அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர், செழியன் குடும்பத்தினர்.
ராம் தனியாளாகத் தான் வசித்து வரும் காரணத்தால், புதுமணத் தம்பதி, இரண்டொரு தினங்கள், செழியன் வீட்டிலே தங்குவதாக ஏற்பாடாகி இருக்க, பூக்களும், நறுமணங்களும் கொண்டு தங்களின் அறையை தான், அவர்களின் முதல் இணைவு நாளிற்கு தயார் செய்திருந்தாள் சிற்பிகாதேவி.
புது மாப்பிள்ளை ராமை செழியனோடு சேர்ந்து, ஆண்கள் சிலர் பார்த்துக் கொள்ள, அறையை தயார் செய்த கையோடு, தோழியையும் ஆயத்தம் செய்து, பெரியவர்களிடம் ஆசியும் பெற வைத்து, வழக்கம் போல் சொம்பில் அல்லாது, பிளாஸ்கில் ஸ்பெஷல் பாலையும் கொடுத்து, அழைத்து வந்தவள், “டீ யாழி, போனதும் பாலை நிறைய ஊத்தி அண்ணனுக்கு கொடுத்துடாத. தேவைப்படும் போது, கொஞ்சம் கொஞ்சமா குடு. நீயும் குடி. அப்போ தான் விடிய, விடிய, விழிச்சிருக்க தெம்பு கிடைக்கும்” என்று அவள் தோளில் இடித்து, செவியிலும் ஏதோ ரகசியம் கூறி, சோபன அறைக்குள் அனுப்பி வைத்தாள் சிற்பி.
அங்கோ அறைக்குள் ஏற்கனவே
ஆறடி உயர ஆணழகனாய், பட்டு வேஷ்டி சட்டையில் ராம்சரண், கண்ணுக்கு நிறைவாய் அமர்ந்திருக்க, இருபத்தி ஒரு வயது நிரம்பிய, நான்கு வருடங்கள் அவனை உயிருக்கு உயிராய் நேசித்து கரம் பிடித்த, தைரியமான பருவ மங்கையாய் இருந்த போதும், அவள் அறைக்குள் நுழைந்த கணத்தில் இருந்து, தன்னையே கடித்து உண்பது போல் பார்த்தபடி, அடிமேல் அடி வைத்து நெருங்கியவனைக் கண்டு, நெஞ்சமெல்லாம் தடதடக்க, தலையைக் குனிந்தாள் யாழினி.
அதைக்கண்ட ஆணுக்கோ இதழ்கள் இனிதாய் விரிய, பட்டும் படாமல் அவள் மேனியில் உரசியவாறே அவளைத் தாண்டிச் சென்று அறைக்கதவை தாழிட்டு வந்தான் ராம்சரண்.
மேனிகள் தான் பட்டுபடாமல் உரசிச் சென்றதே தவிர, அவள் உயிரைக் கரைத்து, தன் மடியிலே விழ வைப்பது போலான, ஆணின் விழி மொழிகள், பெண்ணின் வதனத்தோடு, அவள் வசீகரங்களிலும், ஆற அமர உலா வர,
“வெல்கம் மிஸஸ் யாழினி ராம்சரண். வெல்கம் அவர் ஒண்டெர்புல் லைஃப்” என்று அவள் காதோரம் கூறிய வார்த்தையில் அவளுக்கு கால்கள் இரண்டும் நிற்க மறுத்தது.
கூடவே சில வருடக் காத்திருப்பின் தாகம் எல்லாம், உஷ்ண மூச்சாய் வெளியேறி, பெண்ணின் செவியோடு மேனியையும் சிலிர்க்க வைக்க, இன்னும் உதடுகளை விலக்காது, “எத்தனை நாளைய கனவு தெரியுமா இந்த நிமிடம்?
மோஸ்ட் மோஸ்ட் ஹாபியஸ்ட் மூமன்ட் பார் எவர்” என்று அவள் செவிமடலில் உதடு பதித்த ஆணின் செயலில், கையிலிருந்த பால் பிளாஸ்கை, அழுத்திப் பிடித்து, தன்னை நிலைப்படுத்த முயன்றவள்,
“பால், பால் ஊத்தித் தரவாங்க?” என்று மெதுவாகக் கேட்டாள் யாழினி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.