அத்தனை நேரம் அவள் பின்னேயே நின்று இருந்தவன், அக்கேள்வியில் தான் முன்னே வந்து, “என்ன கேட்ட யாழி?” என்று அவள் முகத்தை முழுங்கும் பார்வை பார்க்க,
அவளுக்கோ, தான் என்ன கேட்டோம் என்பது கூட மறந்து விட்டு இருந்தது.
அதில், இதழ்களுக்குள்ளே சிரித்தபடி, அவள் கையிலிருந்த பிளாஸ்கை வாங்கி, அவனே அரை தம்ளர் மட்டும் பாலை ஊற்றியவன், “விடிய விடிய தேவைப்படும் போது, கொஞ்சம் கொஞ்சமா குடுச்சிக்கலாம். இப்போதைக்கு இதை மட்டும் குடிப்போமா?” என்று கேட்டான்.
அதில் விலுக்கென்று நிமிர்ந்தவளைப் பார்த்து, ஒற்றைக் கண்ணைச் சிமிட்டியவன், “விடிய விடிய எதுக்கு தேவைப்படும்னு தெரியும் தான உனக்கு? இல்ல நா சொல்லித்தரட்டுமா?” என்று வேறு, ஒரு மாதிரிக் குரலில் கேட்க,
அப்பொழுது தான் வெளியே தோழிகள் பேசிக்கொண்டதை எல்லாம் அவன் கேட்டுவிட்டான் என்று உணர்ந்தவளுக்கு, “அச்சோ” என்று தலையை அப்படியே தரையில் புதைத்துக் கொள்ளலாம் போல அப்படி ஒரு வெட்கம் பிடுங்கித் தின்றது.
பெண்ணின் அந்த வெட்கத்தை, அவளுக்கு ஈடாகக் குனிந்து, விழி எடுக்காது பார்த்து ரசித்தவன், “இப்ப தான் என்ன முதல்முதல்ல பாக்குற போல, அப்டி என்ன வெட்கம் யாழி இது? இட்ஸ் ரியலி டெம்ப்டிங்” என்று அவள் கையைப் பற்றி சட்டென இழுத்து தன் மேனியோடு சேர்த்து நிறுத்தினான் ராம்சரண்.
அதில், “அய்யோ ராம், பால் சிந்தப்போகுது” என்று பதறிவளைக் கண்டு, “சிந்தப்போறது பால் மட்டும் இல்ல கண்ணம்மா. உன் வெட்கமும் தான்” என்று அவள் கன்னங்களில் அழுந்த முத்தமிட்டவன், “இந்த பாலை முதல்ல குடிச்சி முடிச்சுடலாமா?” என்று, பால் முழுதும் தன் வாயிலே ஊற்றிக் கொண்டு, வெறும் தம்ளரை மட்டும் அவளிடம் தந்தான்.
பாலை குடிக்கலாமா என்று கேட்டுவிட்டு வெறும் தம்ளரை மட்டும் தன் கையில் வைத்தவனை, அவளோ குழப்பமாக ஏறிட்டுப் பார்க்க, விழிகள் கொள்ளா விசமத்தோடு, அவள் முகம் நோக்கிக் குனிந்தவன், தன் வாயில் இருந்த பாலதனை அவள் இதழுக்கு இடம் மாற்றி, அவ்விதழ்களிலே இளைப்பாறத் துவங்கினான்.
துவக்கம் வன்மையாக இருந்தாலும், இதழ் ஒற்றலின் தூரம், மென்மையிலும் மென்மையாய் நீண்டு கொண்டிருக்க, எப்பொழுதும் நின்று நிதானமாக, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்யும் ஆணின் அந்த அதிரடியில், அவள் கையிலிருந்த காலித் தம்ளரதோ, தரையில் விழுந்து உருளத் தொடங்கியது.
அரை தம்ளர் பால் அதனை, மாறி மாறிச் சுவைத்து, சொட்டு சொட்டாய் குடித்து முடித்தவர்கள், வீணையும் தந்தியுமாய் படுக்கையில் வீழ, ஆணின் கரங்களும், உதடுகளுமே பெண் எனும் வீணையை நேசமாய் மீட்ட, சொர்க்கத்தின் பாதையதில் காதலோடு காமமும் கலந்து, மெதுமெதுவாக பயணிக்கத் துவங்கினர் அந்த காதல் புறாக்கள்.
அங்கோ யாழினியை அறைக்குள் அனுப்பி விட்டு, தோழிகளிடம் திரும்பிய சிற்பியை, “யாழிக்கு அட்வைஸ் எல்லாம் தூள் பறக்குது. அந்த விஷயத்துல மேடம்கு செம்ம ட்ரைனிங் போல. அதுல இங்கிட்டும் கொஞ்சம் தள்றது. நாங்களும் பியூச்சர் புதுப்பொண்ணுக தானே” என்று வழியிலே பிடித்துக் கொண்டு கலாட்டா செய்தனர் இன்னும் திருமணமாகாத ஒருசில தோழிகள்.
“ஹேய் போங்கடி, அதெல்லாம் சொல்றதுக்கு இல்ல. எல்லாரும் பிராக்டிக்கலா தெரிஞ்சுக்கோங்க” என்று அவர்களோடு சேர்ந்து பேசிச் சிரித்து, இரவுணவும் பரிமாறி, அனுப்பி வைத்தவள், தன் பெற்றோரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, வீட்டில் தங்கி இருந்த ஒருசில நெருங்கிய உறவுகளுக்கும், உறங்குவதற்கு ஆயத்தம் செய்து கொடுத்தாள்.
அதில் வீட்டில் மீதம் இருந்த ஒரு படுக்கையறையும், வரவேற்பறையும் கூட நிறைந்து இருக்க, அதை கவனித்தபடியே, அவளிடம் வந்த மீனாட்சியோ, “சிற்பிமா, நீ வேணா இங்க சோபால கொஞ்சம் அஜ்ஜஸ் பண்ணி படுத்துக்கடா. இன்னிக்கு ஒரு நைட்தான். அத்தை, சித்தி எல்லாம் நாளைக்கு போயிருவாங்க” என்று தயக்கமாகச் சொன்னார்.
அவரை வாஞ்சையாய் பார்த்த மருமகளும், “இல்ல அத்தை நா படுக்க லேட் ஆகும். உங்க புள்ளையும் சாப்பிட்டாங்களா தெரியல. அவங்களைப் போய் பார்த்துட்டு, அப்றம் நா படுத்துக்கறேன். நீங்க சோபால படுங்க. எத்தனை நாள்னாலும், நா மேனேஜ் பண்ணிப்பேன்த்தை” என்று அவர் போட வேண்டிய மாத்திரைகளையும் போடச் செய்தப் பின்னரே கணவனைத் தேடி மாடிப்பக்கம் விரைந்தாள் சிற்பிகாதேவி.
சற்று முன்னர் தான், விடைபெற்ற உறவுகளை எல்லாம் வழி அனுப்பி விட்டு, பாய் தலையணையோடு மாடி ஏறிச் சென்றவன், அவளிடம் மேலே வருமாறு கண்காட்டியும் சென்று இருக்க, “ட்ரைனர், ட்ரைனர்” என்ற அழைப்போடு படிகளின் முடிவை நெருங்கியவளை, “தேவி, மை ஏஞ்சல் கேர்ள்” என்று அலேக்காகத் தூக்கிச் சுழற்றி இருந்தான் செழியன்.
முதலில் அதிர்ந்து, பின் மகிழ்ந்து, பின் கணவனின் கரங்கள் கொடுத்த கூச்சத்தில் நெளிந்தவள், “அய்யோ யூபி, என்ன இது? என்னாச்சு உங்களுக்கு? இறக்கி விடுங்க, ப்ளீஸ்” என்று அவன் கழுத்தை கட்டிக் கொண்டு சிணுங்கினாள் சிற்பி.
பெண்ணின் அந்த சிணுங்கலில், அணைப்பை இன்னும் இறுக்கி, “நீதான் கேர்ள் என்னென்னவோ ஆக வைக்கிற. இப்போல்லாம் நான் நானாவே இல்ல கேர்ள்” என்று அவள் மூக்கோடு மூக்கை வைத்து உரசியவாறே, அவளை ஏந்தி வந்து, அங்கிருந்த பாயில் அமர வைத்தான் செழியன்.
எப்பொழுதாவது, வீட்டிற்கு வரும் உறவினர்களின் வருகையால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், இப்படி மாடியில் வந்து படுப்பது அவர்கள் வீட்டில் பழக்கமான ஒன்று தான். இளம் தம்பதியருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றும் கூட.
வெள்ளிநிலாக் காயும் இனிதான வேளையதில் மாடியின் கைப்பிடி ஓரத்தில், சில பல செடிகளுக்கு மத்தியில், ஜாதி மல்லிக் கொடி ஒன்றும் ஆள் உயரக் கம்பைச்சுற்றிப் பந்தல் போல் படர்ந்து, அந்த இடத்தையே அழகாக்கி இருக்க, அதன் மேல், லேசான துணி ஒன்றைப் போர்த்தி, குட்டியான அறை போலவே அவ்விடத்தை தயார் செய்திருந்தான் ஆடவன்.
சிறிய பாயும், ஒரே ஒரு தலையணையும் மட்டுமே, அந்த பூவறைக்குள் விரித்துக் கிக்க, மனைவியை அமர வைத்து, அக்கடா என்று தானும் அமர்ந்தவனைப் பார்த்து, “என்ன யூபி, ஒரு பில்லோவ் தான் இருக்கு? என்னோட பில்லோவ எடுத்துட்டு வரலையா?” என்று சிரித்தவாறே கேட்டாள் சிற்பி.
“அதான் இவ்வளவு பெரிய பில்லோ நான் இருக்கேனே கேர்ள். பின்ன என்ன?” என்று அவளை இழுத்து மார்பில் போட்டுக் கொண்டவன் தலையணையில் சரிந்திருந்தான்.
“அதுவும் சரிதான்” என்றபடியே, அவன் மார்பில் வாகாய் சாய்ந்து கொண்டவள், சற்றே உள்ளாடையை ஒதுக்கி, வழக்கமான வழக்கமாய், அவன் மார்பில் இருந்த தன் பெயரின் மேல் சிறு முத்தம் பதித்தாள் சிற்பி.
அவன் கேளாமலே கிடைக்கும் முத்தமதனை, விழிகள் மூடி அனுபவித்துக் கொண்டவன், “தேவி, மை கேர்ள்” என்று பெண்ணின் நெற்றி வருடி, கார் குழல் ஒதுக்கி, கவிதையாய் பெண்ணவளின் கன்னம் நிமிண்ட,
அதில், “யூபி” என்று உருகிக் கரைந்தவளும், “சாப்பிடாமலே மேல வந்துட்டிங்க. பசிக்கலியா உங்களுக்கு. சாப்பாடு எடுத்துட்டு வரவா?” என்று அவன் மார்பில் இருந்த டாட்டூவை மெல்ல வருடிக் கொடுத்தாள் பாவை.
“இல்லமா, எனக்கு கொஞ்சமும் பசியில்லை. உடம்பும், மனசும் அப்டி ஒரு நிறைவா இருக்கு.” என்று அப்பிஞ்சு விரல்களைப் பற்றிப் பிடித்தவன், “இந்த நிறைவுக்கு நீ மட்டும் தான் காரணம் கேர்ள். யாழினியோட மேரேஜ் எந்தவித தடங்களும் இல்லாம இவ்ளோ சிறப்பா நடந்தேறி இருக்குன்னா, அதுக்கு உன்னோட முயற்சிதான் முழுக்க முழுக்க காரணம். உனக்கு தேங்க்ஸ்னு ஒரு வார்த்தை சொல்லி, நீ செஞ்சிருக்க விஷயத்தை சின்னதாக்க விரும்பல கேர்ள்” என்று ஒவ்வொரு விரலாய் முத்தி எடுத்து, முத்தத்தாலே நன்றி நவின்றான் செழியன்.
அவன் மார்பில் நாடியூன்றியபடியே அவனை ஏறெடுத்துப் பார்த்தவள், “நா என்ன பண்ணேன் யூபி?” என்று ஒன்றும் தெரியாத போலவே கேட்க,
அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்துக் கொண்டவனும், “உன்னோட தலையீடு இல்லாம, அத்தை இவ்ளோ தூரம் ராமுக்கு ஏத்துக்கிட்டு பேசிருக்க மாட்டாங்க கேர்ள். அவங்களைப் பத்தி எனக்கும் ஓரளவு தெரியும். உனக்காக மட்டும் தான், அவங்க இதெல்லாம் பண்ணி இருக்காங்கன்னு கூட புரிஞ்சிக்க முடியாதவனா நான்? நீ உன் அம்மாகிட்ட என்ன பேசுன, எப்டிப் பேசுனன்னு, எனக்கு எதுவும் தெரியாது. ஆனா இப்போ இந்த நிமிஷம், இந்த வீடும், வீட்டு மனுஷங்களும், இவ்ளோ சந்தோசமா இருக்கோம்னா, அதுக்கு நீதான் காரணம் கேர்ள். நீ வந்து ராம்காக பொண்ணு கேட்டிருந்தாக் கூட, என்னால முழுமனசா சம்மதிச்சிருக்க முடியாது. ஆனா, யார் அன்னிக்கு இந்த உறவை தப்பா பேசுனாங்களோ, அவங்களை வச்சே இந்த கல்யாணத்தை நடத்தி முடிச்சுருக்க கேர்ள் நீ. இவ்ளோ நாளா உன்ன சின்னப்பொண்ணுனு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நீ ரொம்ப ரொம்ப பெரிய பொண்ணுன்னு, உன்னோட ஒவ்வொரு செயல்லையும் நிரூபிச்சிட்டே இருக்க” என்று உணர்வுகளின் குவியலாய் பேசிக் கொண்டே சென்றவனுக்கு, குரல் கூட கரகரத்து வெளியேறியது.
“அய்யோ யூபி, என்ன இது, நா அம்மா கிட்ட பேசினதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. யாழி உங்களுக்கு தங்கச்சின்னா, எனக்கு உயிருக்குயிரான தோழிங்க. அவளுக்காக நா பேசாம வேற யாரு பேசணும்?” என்று இன்னுமே அவன் மார்பில் வாகாய் சாய்ந்து கொண்டவள், “அம்மாவும் ரொம்ப மோசமானவங்க எல்லாம் இல்ல யூபி. நீங்க தயங்குறது, அவங்களை நினைச்சுதான்னு எனக்கு நல்லாத் தெரியும். இந்த மேரேஜ் பத்தி, நீங்க தான்மா அவருகிட்ட பேசணும்னு, மட்டும் தான் நா சொன்னேன். ஆனா அவங்களே முன்ன நின்னு கல்யாண விசேஷம் மொத்தமும் நடத்தி வைச்சுட்டாங்க. அவங்க பேசுனதெல்லாம் நாம மறந்துடுவோம் யூபி. பாவம் பெரியவங்க” என்று வழக்கத்திற்கு மாறாக, இன்று அவன் செயலை தனதாக்கினாள் சிற்பிகா தேவி.
அதில் அவளை ரசனையாகப் பார்த்துக் கொண்டவன், “என்ன, வழக்கத்துக்கு மாறா, வண்டி இன்னிக்கு ரிவர்ஸ்ல போகுது?” என்று அடக்கப்பட்ட சிரிப்போடு கேட்க,
“ரிவர்ஸ்ல போனாலும், ரூட் சரியா இருந்தா சரிதானே யூபி?” என்று புருவம் தூக்கி கேட்டவளின் கூற்றில், “அது சரி” என்று வாய்விட்டே நகைக்கத் தொடங்கினான் ஆடவன்.
அடித்தாலும் பிடித்தாலும் அம்மா என்ற உறவு அற்புதமான உறவல்லவா, என்ற நிதர்சனமும் அவன் முகத்தைப் பொலிவாக்க, “நீ காரணமோ, இல்ல அத்தை காரணமோ, ஆனா நா இன்னிக்கு ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன் கேர்ள். உனக்கு என்ன வேணும்ணு சொல்லு. வாங்கித் தர்றேன்” என்று அவள் நாடி நிமிர்த்திக் கேட்டவனின் கூற்றில், இரண்டு மூன்று நாட்களாகவே, அவனிடம் வாங்கிக் கேட்க நினைத்த ஒன்று ஞாபகம் வந்து, இதழ்களை அழுந்தக் கடித்துக் கொண்டவள், அவன் செவியில் ஏதோ கிசுகிசுத்து இருந்தாள்.
அதைக்கேட்டு, அடித்து பிடித்து எழுந்தே விட்டவனோ, “கேர்ள், என்ன சொல்ற நீ? உண்மையாவா?” என்று உச்சகட்ட அதிர்வில் வினவ,
“தெரியலங்க, ஆனா டவுட்டா இருக்கு.” என்று விழிகளைக் கொட்டினாள் பாவை.
‘எப்டி இது? நாம ப்ரொடக்ட்டா தானே இருந்தோம்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவன், “எவ்ளோ டேய்ஸ் தள்ளி போயிருக்கு கேர்ள்?” என்றும் பரபரப்பாகக் கேட்க,
“ட்வெண்ட்டி ஃபைவ் டேஸ்” என்று மென்குரலில் சொன்னவள், “யாழி கல்யாண வேலையா அலைஞ்சதில கவனிக்கலங்க” என்றும் சேர்த்துச் சொல்ல,
மனைவியின் மேற்படிப்பு கருதி, குழந்தை வரவை தள்ளிப்போட நினைத்தவனுக்கோ, இன்பமா, துன்பமா, மகிழ்ச்சியா, குழப்பமா என்ற தடுமாற்ற மனநிலைதான்.
முதலில் இது குழந்தை தான் என்று உறுதி செய்தப்பின் மற்றதை யோசிக்கலாம் என்று எண்ணி, சட்டென எழுந்து கொண்டவன், “ஒரு டென் மினிட்ஸ்ல வந்தர்றேன் கேர்ள். நீ இங்கயே பத்திரமா இரு. இந்த இடத்தை விட்டு எங்கயும் நகரக்கூடாது” என்று மனைவியின் கன்னம் வருடிச் சொல்லிவிட்டு, போர்க்காள அவசரமாய் மாடிப்படிகளில் தடதடத்து இறங்கினான் செழியன்.
தேவையானதை வாங்கிக் கொண்டு சொன்ன நேரத்திற்கு உள்ளாகவே, வீடு திரும்பி, மனைவியை குளியலறைக்குள் அனுப்பி வைத்தவனுக்கு, அவள் திரும்பி வரும் வரை கடந்து சென்ற, ஐந்து நிமிட நேரங்கள், ஐந்து யுகம் போலத்தான் கழிந்தது.
மூன்றரை வருடங்களுக்கும் முன்னால் சந்தர்ப்ப சூழ்நிலையால், மனைவியாகிப் போன, தன் மாணவியவளை, இப்பொழுது தான் மனைவியாகவே பார்க்கத் துவங்கி இருப்பவனுக்கு, இன்னும் உயர் படிப்பைக் கூட முடிக்காத சிறு பெண்ணவளைத் தாய்மைக் கோலத்தில் எண்ணவே, ஒருமாதிரி சஞ்சலமாகத்தான் இருந்தது.
குட்டிபோட்ட பூனைபோல், மாடியின் பரப்பளவை அளந்து கொண்டிருந்தவன், சிறிதான தயக்க நடையோடு, தன்னை நெருங்கி வந்த மனைவி, தன்னிடம் நீட்டிய குழந்தை உதிப்பை உறுதி செய்யும் மருத்துவ கிட்டை வாங்கிப் பார்த்தவன், அதிலிருந்த இரட்டைக் கோடுகளைக் கண்ட நொடி, “தேவி, மை பேபி கேர்ள்” என்று அவளை இறுக அணைத்திருந்தான்.
அதுவரை, தங்கள் உறவில் தான், இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டுமோ, என்று தன்னைத்தானே கடிந்து கொண்டிருந்தவன், தங்கள் இருவரின் சாயலில், கை கால் முளைத்த குட்டி ரோஜாவாய், பொக்கை வாய் திறந்து, தன்னைப் பார்த்துச் சிரித்த, மழலையின் முகம் சிந்தையில் வந்து உதிக்கவும், அப்படியே தடுமாறித்தான் போனான்.
பின் அவள் நாடியைப் பற்றி நிமிர்த்தியவன், “கேர்ள், இதுல உனக்கு வருத்தம் எதுவும் இல்லையே? இன்னும் பிஜி கூட முடிக்கல நீ. ஜாப்கும் ட்ரை பண்ணல. அதுக்குள்ள பேபியான்னு ஏதும் நினைக்கிறியா?” என்று சிறு தவிப்புக் குரலிலும் வினவ,
அவனை கண்டனமாக பார்த்து வைத்தவளோ, “இது நம்ம பேபியா மட்டும் நா பாக்கல யூபி. நம்மளோட இணையில்லா நேசத்துக்கு, கடவுள் கொடுத்த அழகான கிப்டா தான் பாக்குறேன். அதை எப்டி நான் பாரமா நினைப்பேன்? இனிமேல் இப்படியெல்லாம் கேட்காதீங்க” என்று தன் வயிற்றில் கை வைத்தபடி மென் குரலில் சொன்ன மனைவியின் கூற்றில், அவள்மீது கொண்ட அன்பின் ஆழம், இன்னுமின்னும் ஆள்துளையிட்டுப் புகுற, “லவ் யூ மச் தேவிமா. ஐம் நாட் கண்ட்ரோல் மை ஹாப்பினஸ் கேர்ள்” என்று அவளை மீண்டும் இறுக அணைத்து, அவள் நெற்றி, கன்னம், இமைகள் என்று முகமெல்லாம் முத்தமழை பொழிந்தவன், இறுதியில், அவள் இதழ்களிலும், சில நிமிட நேரங்கள் இளைப்பாறிக் கிடந்தான்.
பின் அவளை ஆடாமல் அசையாமல் அழைத்து வந்து, படுக்கையில் அமர வைத்தவன், “ஏன் கேர்ள், பிரக்னன்சி டைம்ல, வாமிட்டிங், மயக்கம், அது இதுன்னு, ஹெல்த் இஸ்சுஸ் நிறைய இருக்கும்ணு படிச்சிருக்கேன். பிஜியும் பண்ணிக்கிட்டு, சைல்ட் பெர்தும் நீ மேனேஜ் பண்ணிடுவியா?” என்றும் ஒரு மாதிரிக் கவலைக் குரலில் கேட்டான் செழியன்.
அதில் அவனை வாஞ்சையாகப் பார்த்தவளும், “நானாவது ஒரு பேபியதான் சுமக்க போறேன் யூபி. ஆனா நீங்க, நம்ம பேபியோட சேர்த்து, உங்க கேர்ளையும் சுமக்கப் போறீங்க. என் செல்ல யூபி என்கூடவே இருகறப்போ, இந்த சைல்ட் பெர்த் மட்டுமில்ல, இன்னும் எவ்ளவோ சாதனைகள் என்னால பண்ண முடியும்ங்க” என்று அவன் மார்பில் புகுந்து கொண்டாள் மனைவி.
பெண்ணவள் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில், மனம் முழுதும் மகிழ்ச்சிப் பூக்கள் மலர, “கொஞ்சம் முன்ன,யாழினி விசேஷம் எல்லாம் முடிஞ்ச சமயம்,
இதைவிட சந்தோசம் வேற எதுவும் இருக்காதுன்னு, ரொம்ப நிறைவா உணர்ந்தேன் கேர்ள். ஆனா அதைவிட பல மடங்கு சந்தோஷத்தை, இப்ப எனக்குக் கொடுத்து, என்ன திக்கு முக்காட வச்சிருக்க. தங்க்யூ தங்க்யூ தங்க்யூ சோ மச் கேர்ள்” என்று அவள் கன்னங்களை முத்தத்தாலே குழைய வைத்தவன், “இப்பவாவது ஏதாச்சும் கேளுமா.” என்று ஆவலாய் அவள் முகம் பார்த்தான்.
அவளோ, “ஒன்னே ஒன்னு தான் கேக்கணும் யூபி” என்று சற்றே தயங்கித் தயங்கி அவனை ஏறிட்டுப் பார்த்தவள், “நம்ம, நமக்கு பொறக்க போற குழந்தை கேர்ள் பேபியா இருந்தாலும், நீங்க, நீங்க, அந்த பேபிய கேர்ள்ணு கூப்பிடக் கூடாது. என்ன மட்டும் தான் எப்பவும் கேர்ள்ணு கூப்பிடணும் யூபி. நா மட்டும் தான் எப்பவும் உங்களோட கேர்ளா இருக்கணும்!” என்று அவன் மார்பு ரோமங்களை பிடித்து இழுத்த மனைவியைக் கண்டு, அவன் உள்ளமெல்லாம் ஆர்ப்பரித்துக் கிளம்ப, “என் தேவியின் விருப்பமே, இந்த அடியேனின் பாக்கியம்,
மை கேர்ள்” என்று இன்னுமின்னும் இழுத்து, அவளை மார்புக் கூட்டினுள்ளே பொத்திப் பாதுகாத்துக் கொண்டான் செழியன்.
கல்லூரிப் பாடங்களில் வேண்டுமானால் அவன் அவளுக்குக் கற்பித்துக் கொடுக்கும் ஆசானாக இருந்திருக்கலாம். நேசத்தாலே நெய்யப்படும் வாழ்க்கை எனும் அழகிய ஏட்டில், ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகக் காதலைக் கற்றுக் கொடுக்கும் பெண்ணவள், ஆணவனின் காதல் நூலகம் தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.