அடுத்து வந்த நாட்களில் அமுதனின் காயங்கள் ஓரளவிற்கு குணமாகி இருந்தன.
இடைப்பட்ட ஒரு நாளில் மங்கையும் கவியும் அமுதனை வந்து பார்த்து விட்டுச் சென்றிருந்தனர். அதுவும் மாப்பிள்ளைக்கு விபத்து என்றதும் மங்கை அழுது புலம்பித் தீர்த்து விட்டார்.
“யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல. என் மாப்பிள்ளைக்கு இப்படி அடி பட்டிருக்கே.. கடவுளே இதெல்லாம் உனக்கே நியாயமா இருக்கா? அவருக்கு எதாவது ஒன்னுன்னா என் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகும்? ஐயோ.. கடவுளே..” என்று அவர் அழுத அழுகை ஒரு நாள் முழுவதும் ஓயவே இல்லை.
அவரைத் தேற்றுவதற்குள் ஒரு வழி ஆகி இருந்தனர் எல்லோரும்!
“அதான் ஒன்னும் ஆகல தான மங்க? எதுக்கு இப்படி கண்ணக் கசக்கிட்டு இருக்க? அமுதன் நல்ல படியா வந்துட்டான். அதை முதல்ல மனசுல பதிய வை. சும்மா அழுதிட்டு இருக்காத” என்று உரிமையுடன் அதட்டிய
இன்பசேகரன் முதல், “அண்ணாக்கு எதுவும் இல்ல அத்த. நல்லா தான் இருக்காங்க. நீங்க அழாதீங்க” என்று அன்புடன் அவரைத் தேற்றிய கிருஷ்ணரூபி வரை எல்லோரும் ஆறுதல் வார்த்தைகள் கூறி மங்கையை தேற்றி இருந்தனர்.
அண்ணன் பேசியதுமே மங்கை சற்று தேறி இருந்தார். சிறு பெண் தான் என்றாலும் கிருஷ்ணா அவ்வளவு அன்பாக பாசத்துடன் தன் கண்ணீரைத் துடைத்து விட்டு ஆறுதல் வார்த்தைகள் கூறிய விதம் மங்கையின் கலக்கத்தை முற்றிலும் அகற்றியிருந்தது.
கவி தேன்மலரை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினாள். அத்தனை நாட்கள் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் தேன்மலரால் கவியிடம் தன் மன பயத்தை மறைக்க முடியவில்லை.
அவளைக் கட்டிக் கொண்டு உடைந்து அழுதாள்.
“நெத்தில.. கைலன்னு நல்ல காயத்தோட வந்து நின்னாங்க அண்ணி. எனக்கு பாத்ததும் உயிரே போற மாதிரி இருந்தது. ரொம்ப பயந்துட்டேன்” அன்றைய நாளின் தாக்கம் இன்றும் அவளை அச்சுறுத்த, நடுங்கிய குரலில் தன் அண்ணியிடம் மன வேதனையை பகிர்ந்தாள்.
கவியிடம் மனம் விட்டு அழும் மனைவியைப் பார்த்தவனுக்கு நெஞ்சம் கனத்துப் போனது.
இத்தனை நாட்களும் தைரியமாக இயல்புடன் வீட்டிற்குள் நடமாடினாலும் உள்ளுக்குள் மிகவும் பயந்து உடைந்து போய் இருக்கிறாள் மனைவி என்பதை அவளின் கண்ணீர் பறைசாற்ற வலியுடன் அவளைப் பார்த்திருந்தான்.
“ஷ்ஷ்.. தேனு. அதான் தம்பி நல்ல படியா வந்துட்டாரே! அழக் கூடாது. எங்களோட தேனு ரொம்ப தைரியசாலி! இப்படி அழலாமா?” என்று அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி இருந்தாள் கவிரத்னா.
அத்தை அழுவது பொறுக்காமல் கோகுலன் அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டு “அத்த அழ வேண்டா..” என்று கூற கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தேற்றி கொண்டாள்.
எல்லோரும் கணவனைப் பார்க்க வீட்டிற்கு வந்திருக்க, தன் உடன் பிறந்தவன் மட்டும் வராமல் இருந்தது தேன்மலருக்கு கசந்தது.
எப்படியும் தங்கையின் கணவனுக்கு விபத்து என்று அவனுக்குத் தெரிந்திருக்கும் தானே? வந்து பார்த்து விட்டு சென்றால் என்ன?
அந்த சூழலிலும் குடிக்க தான் சென்று விட்டான் என்கிற நினைப்பை ஒரு வித வலியுடன் உள்வாங்கினாள்.
அண்ணியை எண்ணி வழமை போல் உள்ளம் அழுதது. பொறுக்க முடியாமல் எல்லோர் முன்பும் “இந்த மாதிரியான சூழல்ல கூட உங்க கூட அவன் வரலயா அண்ணி? எப்படியும் நீங்க இங்க தான் வரீங்கன்னு அவனுக்குத் தெரியும் தான! அப்புறம் ஏன் உங்க கூட வரல. குடிச்சு குடிச்சு அவன் சீரழியிறது மட்டுமில்லாம உங்க வாழ்க்கையையும் கெடுக்குறான். கல்யாணம் ஆன பின்னாடி நான் இன்னும் அவனைப் பாக்கவே இல்ல! ஆனா, பாக்குற அன்னைக்கு அவனை சும்மா விட மாட்டேன்! இனி அவனுக்கு தங்கச்சியா இருந்தது எல்லாம் போதும். நல்லா நாலு அறை வச்சு அவனை வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டு வைக்குறேன். அப்ப தான் உருப்படுவான் போல” வேதனையில் ஆரம்பித்தவளின் பேச்சு ஆக்ரோஷத்தில் வந்து நின்றது!
தேன்மலரின் பேச்சில் எல்லோரும் பேரமைதியாகி விட்டனர். ஆனால், மங்கை மற்றும் கவியின் பார்வை ஒரு முறை அமுதனை தொட்டு மீண்டது!
அதுவும் மங்கை மருமகனை கலக்கத்துடன் பார்க்க, அமுதனோ எதுவும் சொல்லாதீர்கள் என்பது போல் பார்வையாலேயே அவரை எச்சரித்தான்!
கவி நிதானமாக அமுதனை பார்க்க, அவளிடம் தைரியமாக இருக்கும் படி கண்கள் மூடித் திறந்தவன், கோபமாக இருக்கும் மனைவியை சுட்டிக் காட்டி அவளிடம் பேசும் படி சைகை செய்தான்.
கவியும் அவனின் பார்வையில் ஆசுவாசத்துடன் “எல்லாம் சீக்கிரம் சரியாகும் தேனு. விடு. நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற. முதல்ல தம்பியை கவனி. அப்புறம் உன் அண்ணனை கவனிக்கலாம்” என்று மட்டும் கூறினாள்.
தேன்மலரும் மனதிற்குள் கணவனுக்கு குணமானதும் அண்ணனை ஒரு வழி செய்ய வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டாள்!
அவளின் மனசாட்சியோ இந்த முடிவினை முன்பே எடுத்திருக்க வேண்டும்! என்று அவளிடம் கூற, பெருமூச்சுடன் கண்களை மூடித் திறந்தாள்.
அவனை விட இளையவள் என்பதாலோ.. அவனின் குடி பழக்கம் தெரிந்த போது பள்ளிச் சிறுமியாக இருந்ததாலோ.. திவாகரனை நாலு போடு போட்டு திருத்துவதற்கான மனதிடமும் தெள்ளத் தெளிவும் அன்றைய சூழ்நிலையில் அவளுக்கு இருக்கவில்லை. இருக்கவும் முடியாது! அது தான் நிதர்சனம்!
ஆனால், இன்றைய நிலையில் அப்படியே அவனை விட்டு விடவும் முடியாது.
இத்தனைக்கும் வேலைக்கு சென்றதில் இருந்து அவனை நிறைய முறை மிரட்டி இருக்கிறாள். கோபத்துடன் வார்த்தைகளை தீக் கங்குகள் என அவன் மீது வீசி இருக்கிறாள்! போலீஸிடம் சென்று விடுவேன் என்று எச்சரிக்கை கூட செய்திருக்கிறாள்!
ஆனால், இனி இவை யாவும் வேலைக்கு ஆகாது! இப்படியே அவனை விடவும் கூடாது! தனி அறையில் போட்டு பூட்டி கட்டி வைத்தாவது உடன் பிறந்தவனை திருத்த வேண்டும் என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டாள்!
அதன் பின்னர் தான் அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
ஆனால்…
மனைவியின் மன எண்ணங்களுக்கு நிகராகத் தான் அவளுடைய கீதன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறான் என்று தேன்மலருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை!
அமுதனும் தெரியப்படுத்த நினைக்கவில்லை!
ஆம்!
திவாகரன் இப்போது அமுதனின் கட்டுப்பாட்டில்!
அதை அவன் மனைவியிடம் தெரியப் படுத்த நினைக்கவில்லை!
எல்லாம் முடியட்டும்! பிறகு சொல்லிக் கொள்ளலாம்..
ஒரு வேளை நினைத்தது போல் திவாகரனிடம் மாற்றம் வரவில்லை என்றால்.. மீண்டும் மனைவி வேதனை கொள்வாள்! எனவே, எல்லாம் சீரான பின்பு சொல்லிக் கொள்ளலாம் என்றவன் மனைவியிடம் இதைப் பற்றி மூச்சு விடவில்லை.
மங்கை மற்றும் கவியிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறி விட்டான். அமுதன் ஏற்காடு கிளம்பிய தினத்தின் காலையில் இதைக் குறித்து வீடு வந்து பேசிய போது இருவரும் முதலில் தயங்கினாலும் அவன் சொன்ன காரணங்களை ஏற்றுக் கொண்ட கவிரத்னா தான் “தம்பி இவ்வளவு சொல்லும் போது நாம தேனு கிட்ட சொல்றது சரியில்ல அத்த. பாப்போம். உங்க புள்ள இனியாவது திருந்துறாரான்னு.. அதுவரைக்கும் தேனு கிட்ட சொல்ல வேண்டாம்” என்று முடிவாகக் கூறி விட, மங்கையும் மகளிடம் வாய் திறக்கவில்லை.
மகன் நல்ல முறையில் திருந்தி வந்தால் அதுவே போதும் என்று வழமை போல் கடவுளிடம் ஏகப் பட்ட வேண்டுதல்களை வைத்துக் கொண்டார்.
அடுத்த நான்கு நாட்கள் வேகமாக ஓடி இருக்க, அமுதனின் காயம் முற்றிலும் குணமடைந்து கையில் இருந்த தையலையும் பிரித்திருந்தார்கள்.
மருத்துவமனை விட்டு வந்த அடுத்த நாள் தேன்மலர் கோவில் சென்று விட்டு வரலாம் என்று கணவனிடம் கூற, அவனும் தயாராகி கிளம்பி கீழே வந்தான்.
சோர்வாக அறையில் இருந்து வெளியே வந்த தங்கையிடம் “நீயும் வா கிருஷ்ணா.. கோவிலுக்கு போய்ட்டு வரலாம்” என்று கூற, அவள் பதில் சொல்வதற்கு முன்னர் “அவளுக்கு வீட்டுக்கு தூரம் அமுதா. காலைல இருந்து ரூம் விட்டு வெளில வராம இருந்தா. நல்ல வயிறு வலி போல. நீயும் தேனுவும் போய்ட்டு வாங்க. அவளுக்கு தூரம் முடிஞ்சதும் அவளை இன்னொரு நாள் கூட்டிட்டு போய்ட்டு வாங்க” என்று பதில் கூறியது வசுந்தலாவே!
இந்த அளவிற்கு தங்கையைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறாரா அன்னை என்று அவரை
தனக்கு ‘பீரியட்ஸ்’ என்பது எப்படி அவருக்குத் தெரியும் என்பதை கிருஷ்ணா மெல்லிய திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, “ரொம்ப முடியலயா கிருஷ்ணா? பெயின் டேப்லெட் யூஸ் பண்றியா? வாங்கிட்டு வரவா?” என்று ஆதூரமாக தங்கையிடம் கேட்டான்.
“இதைக் குடிச்சிட்டு போய்ப் படுத்து ரெஸ்ட் எடு” என்று கூற, அவரை நிமிர்ந்து பார்க்காமல் அவர் தந்த பழச்சாறை கடகடவென்று குடித்து முடித்ததும் அண்ணனிடம் “பாத்து போய்ட்டு வாங்க அண்ணா” என்று மட்டும் கூறி விட்டு அறைக்குள் சென்று மறைந்தாள்.
வசுந்தலாவும் மகனிடம் சொல்லி விட்டு கிச்சனுக்குள் புகுந்து கொண்டார். இரு வேறு திசையில் சென்றவர்களைப் பார்த்தவன் அவர்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை உணர்ந்தும் உணராத நிலையில் அமர்ந்திருந்தான்.
அவர்களுக்குள் ஒரு பிணைப்பு.. பாசம்.. அன்பு.. இனிமேல் சாத்தியமா.? தாயிடம் தெரியும் மாற்றம் தங்கையின் மன நிலையை எவ்வகையில் மாற்றும்? என்னவாகும்?
அதற்கு மேல் யோசிக்காமல்
பெருமூச்சுடன் மனைவி வரக் காத்திருந்தான்.
தேன்மலரும் கிளம்பி வர, இருவரும் கைலாசநாதர் கோவில் கிளம்பினர்.
புதிதாக வாங்கி இருந்த ‘ஸ்கோடா’ காரினை அமுதன் எடுக்க, அமைதியாக தொடங்கியது பயணம்.
கணவன் முகம் யோசனையில் இருப்பதை கண்ட தேன்மலர் “என்ன ஆச்சு? டல்லா இருக்கீங்க?” என்று கேட்க, காரை ஓட்டிக் கொண்டே சற்று முன்னர் வீட்டில் நடந்தவையைக் கூறினான்.
தேன்மலர் பெருமூச்சுடன் “அன்னைக்கு வள்ளி அண்ணி வந்திருக்கப்ப கிருஷ்ணா பேசின பேச்சைக் கேட்ட பின்ன அத்த கிட்ட நல்லாவே மாற்றம் தெரியுது. ஆனா, கிருஷ்ணா…” என்றவள் பேச முடியாமல் நிறுத்தி விட, “தாகம் தீர்ந்த பின்ன தண்ணீ கொடுக்கிறதுல எந்த பிரயோஜனம் இல்ல மலர்” என்று ஒரே வரியில் முடித்தான் அமுதகீதன்.
அவன் சொன்ன வரியில் உள்ள ஆழமான உண்மை புரிய கிருஷ்ணரூபிக்காக வருந்தினாள் தேன்மலர். எது நிகழ்ந்தாலும் நல்லதாகவே நிகழட்டும் இறைவா என்று மனதோடு வேண்டிக் கொண்டனர் கணவன் மனைவி இருவரும்.
கோவில் வந்து தரிசனம் முடிந்து மனதார வேண்டிக் கொண்டு ஒரு இடத்தில் இருவரும் அமர, மாலை நேரத்தின் குளிர்ந்த காற்றும் கோவிலின் தெய்வீக அமைதியும் மனதில் அமைதியை கொடுத்தது!
அதை உணர்ந்தவன் “என்ன மலர்? எதுவும் பேச மாட்டேங்குற?” என்றான் அவளையே பார்த்தபடி.
“நீங்க நல்லபடியா குணமாகனும், இனிமேல் இப்படி எதுவும் ஆகக் கூடாதுன்னு வேண்டி இருந்தேன். இப்ப கோவில் வந்ததும் மனசுல அமைதி தானா வந்தது. அதான் எதுவும் பேசத் தோணல” என்றாள் சின்ன புன்னகையுடன்.
அவளின் வார்த்தைகளில் தானும் புன்னகைத்தவன் “என்னோட மலர் முகத்துல இப்ப தான் ஒரு ஒளி தெரியுது” என்றவன் அப்போது தான் அவளை நன்றாக கவனித்தான்!
வீட்டில் இருந்து கிளம்பிய போது தங்கை மற்றும் தாயின் எண்ணங்கள் அவனை சிந்தனையில் கையில் சிக்க வைத்திரிந்தது!
காரில் வரும் போது கூட அவர்களைப் பற்றிய பேச்சே எழவும் அவன் மனைவியை கவனித்திருக்கவில்லை!
இப்போது தான் அவளின் மலர்ந்த முகத்தை கண்டான்!
நெற்றியில் சற்று நேரத்திற்கு முன்பு இட்டிருந்த திருநீறும் குங்குமமும் அப்படியே இருக்க, நீண்ட கூந்தலின் தொடக்கத்தில் குண்டு மல்லிச்சரம் அலங்கரித்து இருக்க, மையிடாத விழிகள் அவனுக்கான காதலை பொழிய, அமுதனின் மலர் புத்தம் புது மலராக ஜொலித்தாள்.
கண்களில் புன்னகையும் முகத்தில் அமைதியும் இருக்கும் வண்ணம் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் மேல் வேறு ஒரு உணர்வுடன் அவனின் பார்வை பதிந்தது!
கடவுளை தரிசித்து விட்டு வந்தவன், இப்போது கணவனாக மனைவியை தரிசித்து கொண்டிருந்தான்.
இருக்கும் இடம் அவனின் பார்வையை கட்டுப் படுத்த முயன்றாலும் அது முடியாமல் மனைவியை ரசித்தான்.
கோவில் வர வேண்டும் என்பதற்காக மெல்லிய ஜரிகை வைத்த பச்சையும், தாமரை இதழ் நிறமும் உடைய பட்டுப் புடவை கட்டி இருந்தாள்.
கழுத்தில் வைர முகப்பு வைத்த தாலி சங்கிலி மட்டுமே இருக்க, ‘இன்னொரு குட்டிச் செயின் வாங்கிக் கொடுத்து அதையும் சேத்து போடச் சொல்லணும். அதான் மலருக்கு நல்லா இருக்கும்’ என்று தன் போக்கிற்கு அவன் எண்ணியபடி அமர்ந்திருக்க, அவன் பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல்
“கிளம்பலாமா?” என்று தேன்மலர் கேட்க, அப்போது தான் தன்னிலை மீண்டான் அமுதகீதன்.
ஒரு தலையசைப்புடன் எழுந்து கொண்டவன் மௌனமாகவே இருந்தாலும் பார்வை மலரை விட்டு விலகவே இல்லை.
காரில் வரும் போது கூட ஒரு வித சுகமான மௌனமே இருவரையும் கட்டிப் போட்டிருக்க, இல்லம் வந்து சேரும் வரையும் இருவருக்கும் இடையே அமைதி நிலவியது.
வீட்டிற்குள் வந்தும் கூட அமுதனின் பார்வை மலரையே மொய்த்துக் கொண்டிருக்க, அதை உணர்ந்தவளும் அவன் இருக்கும் பக்கம் செல்லாமல் இரவு உணவிற்கு உதவுகிறேன் எனும் சாக்கில் வசுந்தலாவுடன் அடுக்களைக்குள் ஒரு மணி நேரத்தை கடத்தியவள், அதன் பின்னர் கிருஷ்ணாவுடன் சென்று சிறிது நேரம் இருந்தாள்.
உடல் சோர்விலும் வயிறு வலியிலும் இருந்தவளுக்கு உணவைக் கொடுத்து அவள் உண்டு முடித்து உறங்கியதும் வெளியே வர, அமுதன் மாடி ஏறி தங்களின் அறைக்கு சென்றிருந்தான்.
அப்போது தான் நிம்மதியாக மூச்சினை விட்டுக் கொண்டாள் தேன்மலர். இரவு உணவுகளை மேஜை மீது அடுக்கி வைத்த வசுந்தலா, “கோவில் போய்ட்டு வந்ததும் புடவை மாத்தாம அப்படியே இருக்கியே தேனு. போ.. போய் புடவை மாத்திட்டு அமுதனையும் கூட்டிட்டு சாப்பிட வா” என்று கூற, அவளுக்குமே நீண்ட நேரம் பட்டுப் புடவையில் இருந்தது சிறிது அசௌகரியத்தை கொடுத்தது.
எனவே, வசுந்தலா கூறியதை மறுக்காமல் மாடிக்குச் சென்றாள். அறைக்குள் நுழைந்ததும் கண்கள் அறையைச் சுற்றி வட்டமடிக்க குளியலறையில் சத்தம் கேட்கவும் அவன் வருவதற்குள் உடை மாற்றி கீழே சென்று விடலாம் என்று வேக வேகமாக உடை மாற்றும் தடுப்பை நோக்கி நகர்ந்தவள், குளியலறை கதவு திறக்கப் படும் சத்தத்தில் அப்படியே நின்று விட்டாள்!
மனைவியின் முதுகு மட்டுமே தெரிய, “எப்ப மலர் வந்த?” என்றான் அமுதன் மலரைக் கண்டதும்.
அவன் புறம் திரும்பும் திராணி அற்றவளாக “இப்ப தான்.. புடவை மாத்த வந்தேன். ஈவ்னிங்ல இருந்து மாத்தவே இல்ல. அதான்.. அத்த மாத்திட்டு வர சொன்னாங்க. எனக்கும் மாத்தணும் போல இருந்தது” என்று தடுமாற்றத்தில் கடகடவென கூறினாள்.
மலரின் தடுமாற்றத்தில் சப்தம் இல்லாமல் சிரித்தவனின் பாதங்கள் மெதுவாக மனைவியை நெருங்கியது.
மலரோ திரும்பாமல் அப்படியே நின்றாலும் கணவனின் மெல்லிய காலடி ஓசை அவளின் இதய ஓசையை தூண்டிக் கொண்டிருந்தது!
‘நகரு மலர்.. கீதன் உன் கிட்ட நெருங்கி வந்தாச்சு..!’ என்று அவளின் மனம் உள்ளிருந்து அலற, ஏனோ மலரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.
பாதங்கள் பசை போட்டு ஒட்டிக் கொண்டதைப் போல் அங்கேயே தங்கி விட்டன.
தான் வருவதை உணர்ந்தும் மனைவி அசையாமல் நிற்பது அமுதனுள் என்னென்னவோ உணர்வுகளை தட்டி எழுப்ப, கால்களுக்கு வேகம் கொடுத்து இடைவெளியை நிரப்பியவன், அவளின் பின்னே நெருங்கி வந்து, இடது பக்க கழுத்து வளைவை நோக்கி குனிந்து நின்றான்.
நெருக்கத்தில் நின்றாலும் அமுதனின் தேகம் துளி அளவு கூட மலரை உரசவில்லை. அதற்கு மாறாக அவனின் சூடான மூச்சுக் காற்று அவள் சூடி இருந்த மல்லியின் மலர்ந்து விரிந்திருந்த இதழ்களில் பட்டு அவளின் கழுத்து வளைவில் இறங்கியது!
பாத விரல்களை நிலத்தில் அழுந்த ஊன்றி நின்றவள், அவன் மூச்சுக் காற்று தன்னுள் எழுப்பும் உணர்வை தாங்க முடியாமல் “நா.. நான் ட்ரெஸ் மாத்திட்டு கீழ போகனும்” என்று மெல்ல முணுமுணுக்க, “போயே ஆகணுமா மலர்..” என்றான் அமுதன் அவளை மேலும் நெருங்கி நின்று.
மலரால் பதில் சொல்ல முடியவில்லை. அவனின் குரலும் அவனின் நெருக்கமும் மலரிதழை மலர விடவில்லை!
மலரின் வாசமும், மலர் சூடி இருந்த மல்லிகையின் வாசமும் அமுதனை மயக்க, “மலர்..” என்றவன் அவளின் மெய் தீண்டும் படி நெருங்கி நின்றான்.
மலருக்குள் ஒரு மெல்லிய நடுக்கம்! ஆனால், அவன் நெருக்கத்தை தடுக்கவில்லை!
இனி தடுக்க என்ன இருக்கிறது?
வெட்கத்தில் விளைந்த தயக்கமும் தடுமாற்றமும் தான் அவளை அவன் புறம் திரும்பச் செய்யாமல் அப்படியே நிற்க வைத்திருந்தது!
அமுதனோ அவள் தன் புறம் திரும்பாமல் நின்றதில் அவஸ்தை கொண்டவனாக
“மலர்… அன்னைக்கு இனிமேல் உங்களை விட்டு தள்ளி இருக்க வேணாம்னு சொன்ன தான. எனக்கும் இனிமேல் உன்னை விட்டு தள்ளி இருக்க வேண்டாம் மலர்” என்றவன்,
அவன் கேட்ட கேள்விக்கு செயலில் பதில் சொல்லும் விதமாக மலர் அப்படியே கண்கள் மூடி பின்னால் சாய்ந்து அவர்களுக்குள் இருந்த துளி அளவு இடைவெளியை குறைத்து அவனோடு ஒன்றினாள்.
அவன் மேல் சாய்ந்ததும் தான் ஒன்றை உணர்ந்தாள்! அவன் அப்போது தான் குளித்து விட்டு வந்திருப்பான் போலும்.. கையில்லாத பனியன் மற்றும் ட்ராக் பேண்ட் மட்டும் அணிந்திருந்தான்.
சொட்டுச் சொட்டாக அவன் மார்பில் இருந்த நீர்த் துளிகள் மலரின் மேல் பட்டு சிலிர்க்க வைத்தது.
அமுதனோ மனைவி தானாக நெருங்கி தன் மேல் சாய்ந்து கொண்டதும் மயங்கிப் போனான்!
கட்டுப் பாடுகள் எல்லாம் தகர்ந்தவன் போல் அவனின் கைகள் நீண்டு மனைவியின் இடையைப் பற்றி தன்னோடு சேர்த்து அழுத்தமாக அணைத்துக் கொண்டது!
“மலர்” என்று அமுதனின் கிறங்கிய அழைப்பு தேன்மலரையும் கிறங்க வைக்க, “கீதன்…” என்றவள் அதற்கு மேல் முடியாமல் அவனை விட்டு விலகி ஓட நினைக்க, விலகியவளின் விரல்களைப் பிடித்து ஒரே இழுவையில் தன்னிடம் கொண்டு வந்தவன் அப்படியே அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.
அள்ளிய வேகத்தில் இதழ்களை தன் வசப் படுத்தி இருந்தான்! அவனின் வேகத்தில் தேன்மலர் தடுமாறி துள்ளி இறுதியில் அவனின் கழுத்தில் கைகளை மாலையாக்கி அவன் முத்தத்தின் ஆட்சியில் கட்டுண்டு கிடந்தாள்!
இதழ்கள் பிரியாமல் அப்படியே தன் மலர்ப் பெண்ணை மஞ்சத்தில் கிடத்தியவன், முத்தத்தை தொடர, தேன்மலர் கழுத்தில் இருந்த கைகளை அவன் கன்னங்களில் பதித்துக் கொண்டாள்.
குளித்து விட்டு வந்திருந்தவனின் சில்லென்ற தாடியற்ற ஈரக் கன்னங்கள் மனைவி கைப் பட்டதும் மெல்லிய வெப்பத்தால் கதகதத்தது!
நீண்ட முத்தம் ஒரு கட்டத்தில் முடிந்ததும் இருவரும் விலகி ஒருவர் மற்றொருவர் முகம் பார்க்க, தேன்மலர் கரகரத்த குரலில் கணவனின் முகம் தாங்கி “ரொம்ப வெயிட் பண்ண வச்சுட்டனா?” என்றாள் தவிப்புடன்.
“ஹே மலர்.. அப்படி எல்லாம் இல்ல” என்ற அமுதன் அவளின் தலையை வருடிக் கொடுத்து “உன் வார்த்தைக்கும் நான் மதிப்பு கொடுக்கணும் மலர். அதனால தான் நீ சொல்ற வரைக்கும் நமக்குள்ள இந்த நெருக்கம் வேண்டாம்னு இருந்தேன். உனக்கு நம்ம மேரேஜ் நினைச்சு, நம்ம புரிதலை நினைச்சு பயம் இருக்கத் தானே செஞ்சது! சோ நீ சொன்னதில தப்பில்ல மலர்” என்று புரிதலுடன் கூறியக் கணவனை நேசம் பொங்கும் விழிகளுடன் கண்டவள், அவனை தன்னை நோக்கி இழுத்தாள்.
“ஹ்ம்ம்.. தெரியுமே” என்று அமுதன் அவள் நெற்றியொடு தன் நெற்றியை வைத்து அழுத்தி நாசியோடு நாசி உரச, மலரோ மனதிற்குள் ‘இல்ல உங்களுக்கு தெரியாது..’ என்று கூறியவள், அதற்கு மேல் அந்த சிந்தனையை விடுத்து அவன் முகம் பற்றி “அத்த சாப்பிட கூப்பிட்டாங்க..” என்று தயக்கமும் சங்கடமுமாக கூற, “பசிக்குதா உனக்கு?” பார்வையால் அவளை தடுமாற வைத்துக் கொண்டே!
தாங்கள் இருக்கும் நிலையில் பசி என்கிற உணர்வே அவளுக்கு இல்லை! அதை அவனிடம் சொல்லவும் முடியவில்லை!
எனவே வெட்கத்துடன் மறு புறம் திரும்பிக் கொண்டு இல்லை எனும் விதமாக தலை அசைக்க, “எனக்கும் பசி இல்ல மலர்” என்றவன், அவளின் கழுத்து வளைவில் தன் இதழை பதித்து தேடலைத் துவங்கினான்!
அவனின் மீசை உராய்வில் உயிர் ஆழம் வரை என்னவோ செய்தது மலருக்கு.
கூடலின் அர்த்தமுள்ள எல்லை மீறல்கள் எல்லாம் காதலின் அர்த்தங்களாக மாறி இருந்தன.
“கண்ணைத் திறந்து என்னைப் பாரு மலர்..” என்று அமுதன் மெல்லிய குரலில் கூற,
“ஹ்ம்ம்ஹும்.. முடியாது..” என்றாள் மலர் வெட்கத்திலும் அழுத்தமாக!
அவன் கொடுத்த இன்பங்களும், அதனால் விளைந்த அவஸ்த்தையும், அந்த அவஸ்தையினால் வெளிவந்த முனங்கல்களும் முனங்கினால் ஏற்பட்ட வெட்கங்களும் அவளின் நயனங்களை மலர விடவில்லை!
தித்திக்கும் தேனமுதாக இருவருக்கும் இனிமை சேர்த்தது அவர்களின் முத்தான முதல் கூடல்!
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.