நேரம் நள்ளிரவைக் கடந்து விடியலை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதை பறைசாற்றும் விதமாக மணி மூன்றை தொட்டிருந்தது.
அலாரத்தின் தொடர் சப்தத்தில் பிரிய மறுத்த இமைகளை முயன்று பிரித்தாள் தேன்மலர்.
கட்டிலுக்கு பக்கவாட்டில் இருந்த அலாரத்தை நிறுத்த வேண்டி போர்வைக்குள் இருந்தபடியே அவள் நகர முயற்சிக்க, துளி அளவு கூட நகர முடியாத வண்ணம் அவள் இடையில் கை கோர்த்து அவள் முதுகோடு ஒன்றியபடி அதே போர்வைக்குள் உறங்கிக் கொண்டிருந்தான் அமுதகீதன்.
“கீதன்.. எழுந்திருங்க..” என்றவள் அவன் புறமாக திரும்பி மெல்லிய குரலில் கூற, உறக்கத்தின் பிடியிலிருந்து விலகாமல் “மலர்..” என்றானே தவிர கண் திறக்கவில்லை.
“தூக்கத்துல கூட மலர் மலர்னு உருக வேண்டியது. இவருக்கு மலர்தாசன்னு என் நண்பன் ரஞ்சி பேரு வச்சதுல தப்பே இல்ல” என்று குறும்பாக அவன் முகம் பார்த்து கூறியவள், அவனின் மீசையை வருட, வருடிய மீசை முத்தமிடத் தூண்ட, மனம் விழைந்ததை மறுக்காமல் செய்தாள் மலர்!
மனைவியின் முத்தத்தில் அன்றைய காலை விடியும் என்று எதிர்பாராதாவன், முத்தத்தில் மொத்தமாக உறக்கத்தை கை விட்டு மலரை மேலும் தன்னோடு இறுக்கிக் கொள்ள, அவன் நோக்கம் புரிந்தவள், அவனை தன்னிடமிருந்து பிரித்து “குளிச்சிட்டு சீக்கிரம் ஏற்காடு கிளம்பணும் நாம. ஆறு மணிக்கெல்லாம் பூஜை ஆரம்பிக்கணும். மறந்துடுச்சா? எழுந்திருங்க முதல்ல” என்று அதட்டலாக சொல்லியவளை முறைத்தவன்,
“நானா உன்னை கிஸ் கொடுத்து எழுப்ப சொன்னேன்..? நீயா வந்து மீசையை பிடிச்சு இழுத்து முத்தம் வச்சிட்டு அப்புறம் தள்ளி விட்டா என்ன அர்த்தம்?” என்றான் நொடிப்பாக.
அவன் சொன்ன விதத்தில் சிரித்து விட்டாள் தேன்மலர். அந்த சிரிப்பில் சிதறியவனாய், மனைவியை தன்னோடு அணைத்துக் கொண்டு அவளையும் மயக்கி, தானும் மயங்கினான்!
விடியாத வேளையில் தொடங்கிய கூடல் தேன் சிந்த வைத்து, அமுதினைப் பொழிய வைத்து, கீதம் பாட வைத்து, மலரென முனங்க வைத்து, மலரை விரிந்து மலர வைத்திருந்தது.
ஒரு வழியாக இருவரும் குளித்துத் தயாராக, அமுதகீதன் பட்டு வேட்டி சட்டையிலும், தேன்மலர் ஆகாய நீல நிற பட்டுப் புடவையிலும் தயாராகி இருந்தனர்.
கீழே வசந்தலாவின் குரல் கேட்க, “ஐயோ போச்சு..! அத்தை கூப்பிட்டாங்க. சீக்கிரம் வாங்க கீழ போலாம்..” அவசரத்தில் படபடவென பேசிய மனைவியை தன்னருகே இழுத்துக் கொண்டவன், அவள் இதழில் அழுந்த முத்தம் வைத்து, அது போதாமல் மீண்டும் மீண்டும் முத்தம் வைத்து, “இப்ப போகலாம்..” என்று கண் சிமிட்டி விட்டு முன்னால் செல்ல, கிறங்கிய தலையை உலுக்கிக் கொண்டவள், “கீதன்… அக்மார்க் மலர் பைத்தியம் ஆகிட்டார்” என்று செல்லமாக முனங்கியபடி அவனை பின் தொடர்ந்தாள் தேன்மலர்.
எல்லோரும் கிளம்பி ஏற்காடு வந்திருக்க, மற்றொரு காரில், திவாகரனின் குடும்பமும் வந்திறங்கி இருந்தனர்.
கவிரத்னாவிற்கு உடல் நிலை நன்றாக தேறி இருக்க, பயணம் மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் கூறிய பின்னர் தான் அவளை அழைத்து வந்திருந்தனர்.
கோகுலன் திவாகரனின் தோளில் உறங்கிய நிலையில் இருந்தான். இப்போதெல்லாம் அவன் தந்தையிடம் சென்றாலும்
அவ்வப்போது பழைய நினைவில் பயம் கொள்கிறான்தான்.
அச்சமயங்களில் மங்கையும், கவியும் குழந்தைக்கு புரிய வைப்பார்கள். அதுவும் கவி திவாகரனுடன் இணக்கமாக பேசவில்லை என்றாலும் குழந்தையிடம் அவனது மாற்றத்தை வலியுறுத்திக் கொண்டே இருந்தாள்.
தாய் சொன்ன பின்பு குழந்தை அவனோடு ஒன்றிக் கொண்டாலும், அதிகமாக கவியைத் தான் நாடுவான் குழந்தை.
இப்போதும் தந்தையின் தோளில் உறங்கிக் கொண்டிருந்தாலும், காரை விட்டு இறங்கியதும் உறக்கம் விலகா குரலில் “அம்மா…” என்று சிணுங்க, மகனின் முதுகை தட்டிக் கொடுத்த திவா, “அம்மா நம்ம கூட தான் இருக்காங்க கோகுல். நீ தூங்கு..” என்று மேலும் அவனை தன் கைகளுக்குள் பாந்தமாய் பொத்தி வைத்துக் கொள்ள, குழந்தை சுகமாக உறக்கத்தில் ஆழ்ந்து போனான்.
அவனது ஒரு கை, பிள்ளையை பற்றி இருக்க, மறு கை மனைவி காரை விட்டு இறங்க உதவி செய்தது. மங்கையும் மறு புறம் இருந்து இறங்கிக் கொள்ள, குடும்பமாக அவர்களைப் பார்க்க கண்கள் நிறைந்து போனது மலருக்கு.
அண்ணன் தோள் வளைவில் பாந்தமாய் உறங்கும் குழந்தை. மற்றொரு கையால் அண்ணியின் கையை பற்றிக் கொண்டு அவன் உள்ளே வருவது, மங்கையின் முகத்தில் இருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் என அத்தனையும் அவளை நெஞ்சம் நிறையச் செய்வதாய்..!
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வாரத்திற்கு முன்பு ரிசார்ட் திறப்பு விழாவிற்கு பத்திரிக்கை வைக்கவென மங்கையின் இல்லத்திற்கு எல்லோரும் சென்றிருக்க, அப்போது மங்கை செய்த செயலும், செய்திருந்த செயல்களும் எல்லோரையும் வாயடைக்கச் செய்திருந்தது.
முறையாக பத்திரிக்கை கொடுத்து அழைப்பு விடுக்கும் படலம் முடிந்ததும் ஒரு லெதர் பேகினை தன் அறையில் இருந்து எடுத்து வந்த மங்கை, அதை அண்ணன் அண்ணியின் முன்பு வைத்தவர், மேலும் கையில் இருந்த இரு நோட் புக் போன்ற குட்டி புக்’கினை கவியின் கைகளில் கொடுத்தார்.
“என்ன மங்கை இது?” என்று இன்பசேகரன் புரியாமல் கேட்க அங்கிருந்த அனைவரின் முகத்திலும் அந்தக் கேள்வி வியாபித்திருந்தது.
“பேக்’கை திறந்து பாருங்க அண்ணே..” என்று அவரிடம் சொல்லியவர், மருமகளிடம் திரும்பி “நீயும் அந்த நோட்டை பிரிச்சு பாரு கவி” என்றார்.
இன்பசேகரன் கேள்வியுடன் அந்த லெதர் பேகினை திறக்க, உள்ளிருந்து அடுக்கடுக்காக பெட்டிகள் தென்பட்டது. பார்த்ததும் புரிந்து போனது அவை நகைப் பெட்டிகள் என!
சற்றே திகைத்து தங்கையை நிமிர்ந்து பார்த்தவர் “என்ன மங்கை இவ்வளவு நகை?” என்று கேட்க,
“ஆமாண்ணே. அம்பது பவுன் நகை. தேனுக்காக நான் சேர்த்தது” என்றதும் எல்லோரும் இன்னும் திகைத்துப் போய் மங்கையை பார்த்தனர்.
“என்னடா கல்யாணத்தப்ப ஒரு பொட்டு நகை போடாம விட்டவ இப்ப அம்பது பவுன் நகை கொண்டு வந்து கொடுக்கிறேன்னு பார்க்கிறீங்களா?” என்றவர், அதற்கான பதிலை தானே கூறத் தொடங்கினார்.
“கல்யாணத்தப்ப எல்லாமே நீங்களே செய்யறதா சொல்லிட்டீங்க. நானும் அப்படியே விட்டுட்டேன். இந்த நகைங்கள எல்லாம் அன்னைக்கே என்னால கொடுத்திருக்க முடியும். ஆனா, நான் செய்யல. அதுக்கு காரணம் என் மகன். அவன் மேல எனக்கில்லாத நம்பிக்கை!” என்றதும் திவாகரன் குன்றலுடன் அன்னையை பார்த்தான்.
“காசோ நாகையோ ஏதாவது திவா கைக்கு கிடைச்சா அது குடிக்க தான் கரையும்னு எனக்கு நல்லா தெரியும். அவனுக்கு பயந்தே இவ்வளவு நகையையும் நான் பேங்க் லாக்கர் விட்டு வெளிய எடுக்கல. கல்யாணத்தப்ப உங்க கிட்ட சேர்த்து இருந்திருக்கலாம் தான். ஆனா எங்க திவா என்கிட்ட சண்டை போடுவானோ எப்படி இவ்வளவு நகை அவளுக்கு சேர்த்தேன்னு கேட்பானோ.. இன்னும் வச்சிருந்தா கொடுன்னு தொல்லை பண்ணுவானோன்னு எனக்கு பயமா இருந்தது. அதான் கொடுக்கல” என்றவர்,
“இதெல்லாம் நம்ம அப்பா கொடுத்த கடை காம்ப்ளக்ஸ் வாடகைல வந்த பணத்துல சேமிச்சு வாங்கினது தான் அண்ணே. எல்லா காசையும் என் மகனை மாத்துறதுக்காக நான் செலவு பண்ணிடல. என் பொண்ணுக்கும் அப்பப்ப முடிஞ்சத சேமிச்சு வச்சு இந்த நகைங்களை வாங்கி வச்சேன். தயவு செஞ்சு இதை மறுக்காம நீங்க ஏத்துக்கணும்” என்றதும் எல்லோரும் பேசக் கூட மறந்து போனவர்களாக அவரையே பார்த்திருந்தனர்.
தேன்மலருக்கோ அன்னையின் செயலையும், வார்த்தைகளையும் கண்டு பேச்சற்ற நிலை!
அன்னையிடம் முற்றிலும் இதனை எதிர் பார்க்கவில்லை அவள்.
எல்லோரும் அமைதியாக இருக்க, அடுத்ததாக கவி “அத்தை….” என்று திகைத்து அழைத்ததில் எல்லோரின் கவனமும் அவள் புறம் சென்றது.
“என்ன அத்த இதெல்லாம்…?” என்று அந்த நோட்டை அவர் முன்பு நீட்டி கவி அதிர்வாக கேட்க, மங்கை மௌனமாக இருந்தார்.
அண்ணியின் அதிர்வுக் குரலில் தன்னை மீட்டுக்கொண்ட தேன்மலர், அவள் கையில் இருந்த நோட்டை வாங்கிப் பார்க்க அவள் கண்களும் விரிந்து கொண்டது.
தேன்மலர் திகைத்து சிலையாக நிற்க, அமுதன் அவள் கையில் இருந்ததை வாங்கிப் பார்த்துவிட்டு புரியாமல் மனைவியையும் கவியையும் பார்த்தான்.
கணவனின் கேள்வியான பார்வையை உணர்ந்தவள் “அம்மா அண்ணியோட சம்பள பணத்திலிருந்து மாசம் இருபது இருபத்தஞ்சு ஆயிரம்னு வாங்கிருவாங்க. நாங்க அதை அவங்க அண்ணாவை மாத்துறதுக்காக சாமியாருங்க காலடில கொண்டு போய் கொட்றாங்கன்னு நினைச்சோம். ஆனா… ஆனா… அம்மா அண்ணி பேர்ல ஒரு கோல்ட் ஸ்கீம் ஓபன் பண்ணி அதுல அந்த காசை எல்லாம் கோல்டா சேர்த்து வச்சிருக்காங்க” என்றாள் குரல் தழுதழுக்க.
அத்தனை நாட்களும் அவளிடம் வாங்கிய பகுதி சம்பளப் பணத்தினை கவிரத்னாவின் பெயரில் ‘நகைச் சீட்டு’ ஒன்றினை துவங்கி, அந்தப் பணத்திற்குண்டான தங்கமாக வரவு வைத்திருந்தார் ஞானமங்கை!
கிட்டத்தட்ட நாற்பது பவுனுக்கும் மேல் வரவு வைத்திருந்தார்.
தங்கை இவ்வளவு தூரம் சுதாரித்து யோசித்து செயல்பட்டு இருப்பதை கண்ட இன்பசேகரனுக்கு என்ன சொல்வது பேசுவது என்று புரியவில்லை!
அதுவும் கவி கண்களில் வழிந்த கண்ணீருடன் மாமியாரை பார்த்திருக்க, “உன்கிட்ட நான் வேணும்னு சம்பள பணத்தை வாங்கல கவி.
எப்படியும் இந்த திவா உன்ன நொச்சு பண்ணி உன் கிட்ட இருந்து காச கரந்திடுவான்னு தெரியும். அதான் நான் அவனுக்கு முன்னாடி உன்கிட்ட இருந்து காசை வாங்கிடுவேன். வாங்கின காசை முதல்ல என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல. ரொம்ப நாளா தேனு ரூம்ல அவ பழைய சுடிதார் வச்சிருந்த பையில மறைச்சு வச்சிருந்தேன். ஏன்னா அவ ரூம்ல தான் திவா கை வைக்க மாட்டான். அப்புறம் லட்சத்தை தாண்டி காசு சேரவும் இதுக்கு மேல காசை வீட்டுக்குள்ள வச்சா பாதுகாப்பில்லைன்னு தான் எனக்கு தெரிஞ்ச வகையில தங்கத்தில முதலீடு பண்ணி வைக்கலாமுன்னு தங்கக் கடையில உன் பேருல சீட்டு போட ஆரம்பிச்சேன். மூனு மாசம் முன்னாடி வரைக்கும் உன்கிட்ட வாங்கின காசை எல்லாம் அதுல கட்டிட்டேன். உனக்கு எப்ப வேணுமோ நீ போய் நகையா வாங்கிக்கோ” என்றார் ஞானமங்கை.
தாயின், முன் எச்சரிக்கைகள் நிறைந்த செயலில் அவரின் அன்பே கண்களுக்குத் தெரிய தேன்மலர் முதல்முறையாக தாயை கட்டிக்கொண்டு அழுதே விட்டாள்!
அதற்கும் மேல் திவா அன்னையின் காலடியில் விழுந்து அழுது கரைந்து மன்னிப்பை வேண்டினான்.
பிள்ளைகளை கட்டிக் கொண்டு மங்கையும் அழுதிருந்தார்.
அவ்வளவு நெகிழ்வான, உணர்ச்சிவசமான தருணங்களை இப்போது நினைத்தாலும் மனம் நிறைந்து வழிந்தது மலருக்கு.
அதே நெகிழ்வுடன் முகம் மலர அண்ணன் குடும்பத்தை கணவனுடன் நின்று வரவேற்றாள் தேன்மலர்.
மாப்பிள்ளையின் இரண்டாவது ரிசார்ட்டினை முதல்முறையாக சுற்றிப் பார்த்த மங்கைக்கு மனம் துள்ளி குதிக்காத குறை தான்.
இருக்காதா பின்னே?
இந்த ரிசார்டினை தேன்மலரின் பெயரில் அல்லவா ரெஜிஸ்டர் செய்திருந்தான் அமுதகீதன்!
வேலைகள் அனைத்தும் முடிந்து ரிசார்ட் கட்டிடத்தின் உரிமையை பதிவு செய்யும் போது மனைவியின் பெயரிலேயே பதிவினை செய்ய ஏற்பாடு செய்திருந்தான் அமுதகீதன்.
இதைக் குறித்து முன்பே நந்தனிடம் அவன் தெரியப்படுத்தி இருக்க, “டேய்.. கமர்ஷியல் ப்ராபர்ட்டிடா.. டாக்ஸ் அது இதுன்னு நிறைய ஃபார்மாலிட்டி வரும்..” என்றவனை, “அந்த செலவெல்லாம் நானே பார்த்துக்கிறேன் நந்தா. ஆனா, என் பேருக்கு பதிலா மலர் பேர்ல தான் ரெஜிஸ்டர் பண்ணனும்” என்று அமுதன் உறுதியாக கூறி விட, நந்தனும் அவன் வீட்டில் கலந்து பேசிவிட்டு அவனும் தன் பங்கினை மனைவியின் பேரிலேயே பதிவு செய்ய முடிவெடுத்திருந்தான்.
இப்போது அந்த ரிசார்ட்டின் உரிமையாளர் நந்தனோ அமுதனோ இல்லை! அவர்களின் மனைவி தான்!
இதனைக் குறித்து தன்னிடம் கணவன் கூறிய போது அதிர்ந்து திகைத்து கோபம் கொண்டு முடியவே முடியாது என்று பிடிவாதமாக மறுத்திருந்தாள் தேன்மலர்.
அமுதனோ அவளுக்கும் மேல் அழுத்தமாக பிடிவாதம் பிடித்து “உன் பேர்ல தான் ரிஜிஸ்டர் பண்றோம் மலர். டாட்” என்று முடிவாகக் கூறியிருந்தான்.
இந்த விஷயத்தில் இருவருக்கும் நன்றாகவே முட்டிக்கொண்டது! வாய் தகராறு முதல் வார்த்தை தகராறு வரை வந்து நிற்க, வாதம் விவாதம் என எல்லாம் அவர்களுக்குள் நடந்தது!
இருவருமே அவரவர் பிடியில் பிடிவாதமாக நிற்க, இந்த விஷயத்தில் அமுதனோ கொஞ்சம் கூட இளகவில்லை.
வேறு வழியே இல்லாமல் தேன்மலர் தான் இறங்கி வர வேண்டியதாக இருந்தது.
“இதை நான் செய்யறது என் அன்ப வெளிக்காட்டவோ உனக்கான முக்கியத்துவத்தை நிரூபிக்கவோ கிடையாது மலர். என்னுடைய எல்லாத்துலயும் என் மலருக்கு சரி பங்கு உண்டு. உன்னோட எல்லாத்துலயும் உன்னோட கீதனுக்கும் சரி பங்கு உண்டு. அதனால தானே உன்னோட சேலரியைக் கூட என் பேருல ஜாயிண்ட் அக்கவுண்ட் ஓபன் பண்ணி அதிலேயே போடுற. அப்ப நான் மட்டும் நம்மளோட புது ரிசார்ட்ட உன் பேர்ல ரிஜிஸ்டர் பண்றதுல என்ன தப்பு இருக்கு?” என்றான் அழுத்தமாக.
எதற்கும் எதற்கும் முடிச்சிடுகிறான் என்று மலருக்கு கோபமாக வந்தது.
அதே சமயம் அவன் என்ன சொன்னாலும் மலரால் இதனை ஏற்கவே முடியவில்லை! முதல் ரிசார்ட் திறப்பு விழாவிற்கு தங்களுக்கு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்று அன்று தான் அவனிடம் கோபமும் வருத்தமுமாகப் பேசியதை நினைவில் வைத்து தான் இதை செய்திருக்கிறான் என்று புரியாமலும் இல்லை!
ஆனால்…. அவனின் உழைப்பால் அவன் கட்டிய ரிசார்டிற்கு தன்னை உரிமையாளர் ஆக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்றே தோன்றியது.
அதை அவனிடம் வெளிப்படையாகவே கூறி விட, “ஹே..மலர்! இதுல நியாய அநியாயம் எங்கிருந்து வந்தது? நீ என்னோட பொண்டாட்டி. என் பொண்டாட்டி பேருல நான் கட்டின ரிசார்ட் பில்டிங் ரிஜிஸ்டர் பண்றதுல தப்பா? சொல்லப்போனா நான் இந்த முடிவ சொன்னதும் நந்தனும் அவனோட வைஃப் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிக்கிறதா சொல்லிட்டான். சிம்பிள்..” என்றான் கண் சிமிட்டி சாதாரணமாக.
மலருக்கோ மனம் முரண்டியது!
சஞ்சலம் நிறைந்த அவளின் முகத்தை கையில் ஏந்தி கொண்டவன், “ரொம்ப யோசிக்காதடா மலர். இதை செய்யறதுல எனக்கு அவ்வளவு சந்தோஷம். சொல்லப் போனா ரொம்ப ரொம்ப சந்தோஷம். நானே மொத்தமா இந்த மலருக்கு தான்ன போது… இந்த ரிசார்ட்.. என் மலரோடத இருக்கதுல எனக்கு எந்தக் கஷ்டமும் இல்ல. கொள்ளை இஷ்டம் தான். மறுக்காத மலர்… ப்ளீஸ்..” என அவன் கொஞ்சி, கெஞ்சி கேட்ட விதத்தில் அதற்கு மேல் மலரால் மறுக்க முடியவில்லை!
அதே சமயம் கோபத்தையும் கைவிடவில்லை. பதிவு செய்யும் நாள் வரும் வரை உர் என்ற முகத்துடன்தான் இருந்தாள்!
எல்லாவற்றையும் தாண்டி பத்திரத்தில் கையொப்பமிடும்போது கண்ணில் கண்ணீர் மல்கியது!
அக்கண்ணீர் கணவனின் மீதான அளப்பரியா காதலை பிரதிபலித்தது!
அதே அளப்பரியா காதலுடன் அவனைப் பார்த்திருக்க, மனைவியின் பார்வையை உணர்ந்தவன் “என்ன அப்பறமே நல்லா ரசிச்சு பாரு மலர்! இப்ப வா.. எல்லாரும் வந்தாச்சு. பூஜையை ஆரம்பிக்கணும்…” என்றவன் மனைவியோடு சென்று பூஜை இடத்தில் அமர்ந்தான்.
ஒரு புறம் இவர்கள் தம்பதி சகிதமாக அமர்ந்திருக்க, மற்றொருபுறம் நந்தனும் அவனது மனைவியும் அமர்ந்திருந்தனர்.
பூஜை சிறப்பாகவே முடிய,
நுழைவாயிலின் பகுதியில் இரு மருங்கிலும் இருந்த இரண்டு ஆளுயர வெள்ளிக் குத்து விளக்கினில் தீபம் ஏற்றும் படி ஐயர் கூற, ஒரு விளக்கினில் எண்ணெய் விட்டு ஐந்து பெரிய திரிகளையும் வைத்த வசுந்தலா அதனை ஒளியேற்றாமல், “அமுதா எல்லாம் ரெடிப்பா..” என்று மகனிடம் கூறிவிட்டு ஒதுங்கிக் கொள்ள,
தேன்மலர் அவரிடம் “விளக்கேத்துங்க த்தை..” என்று சொல்லி முடிக்கும் முன்னர், மனைவியின் கையில் தீப்பெட்டியை திணித்தபடி, “நீ முதல்ல விளக்கேத்து மலர்” அமுதன் புன்னகை முகமாக கூறியதும், தேன்மலர் திகைத்து நிற்க, “அதான் அமுதன் சொல்றான் இல்ல. விளக்கை ஏத்துத் தேனு” என்று வசந்தலாவும் வலியுறுத்த, கிருஷ்ணாவும் கையில் இருக்கும் மொபைலில் புகைப்படம் எடுக்கத் தயாராக இருந்தபடி “சீக்கிரம் அண்ணி.. கமான்.. ஏத்துங்க..” என உற்சாகமாகக் குரல் கொடுக்க, தேன்மலருக்கு எதுவும் செவியை எட்டவில்லை.
‘நான் ஏன் முதலாவதாக..’ எனும் கேள்வியே அவளை ஆட்டிப் படைக்க, அவளின் கேள்விக்கு பதிலாக “நீயே என் முதலும் முடிவும்” என்பதை பார்வையால் மனைவிக்கு உணர்த்தி அவளையே இமை கொட்டாமல் பார்த்து நின்றான் அமுதகீதன்! அந்தப் பார்வையில் நிறைந்து நின்றாள் தேன்மலர்.
நேசம் பொங்கும் நெஞ்சத்துடன், தள்ளாடித் ததும்பி வழியும் இதயத்துடன், இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு முதல் தீபத்தை ஏற்றியவள் உள்ளம் சொல்லொண்ணா உணர்வில் அமிழ்ந்து கிடந்தது.
அவள் தீபமேற்றி முடித்ததும் ஞானமங்கையை மற்றொரு தீபத்தினை ஏற்றச் சொன்னவன், அவரைத்தொடர்ந்து கவியிடமும் “அடுத்து நீங்க ஏத்துங்க அக்கா..” என்று கூற, மலரால் அதற்கு மேல் முடியவில்லை.
அடிநெஞ்சம் வரை நிறைத்த சந்தோஷத்தில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் பொங்கிய கண்ணீருடன் கணவனின் முழங்கையில் முகம் புதைத்து எல்லோர் முன்பும் அழுதே விட்டாள்.
மனைவியின் அழுகையில் திகைத்தவன் “மலர்.. என்னமா?” என்று பதறி அவள் முகம் காண முயல, அவன் அழுகையில் எல்லோருமே சற்று திகைத்து தான் போயினர்.
“நல்ல நாள் அதுவுமா இப்படியாடி அழறது..” என்ற மங்கை அதட்டவும் தான், மலரால் நிதானிக்கவே முடிந்தது.
எல்லோரும் முன்பும் அழுதது வேறு ஒரு மாதிரியாகிவிட, “சாரி..” என்றபடி தன்னை சமன் செய்து கொண்டாள்.
வருத்தமாக தன்னை பார்க்கும் கணவனிடம் “ஒன்னும் இல்லங்க கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்..” என்றாள் கரகரத்த குரலில்.
அவன் முகம் இன்னும் தெளியாமல் இருக்க, “நான்தான் ஒன்னும் இல்லைன்னு சொல்றேன்ல. நீங்க நார்மல் ஆகுங்க” என்றாள் முயன்று வரவழைத்த சாதாரண அதட்டல் குரலில்.
அதன் பின்பே அமுதன் தெளிந்தான்.
அடுத்ததாக நந்தன் குடும்பத்தார்கள் விளக்கேற்றினார்கள்.
விளக்கேற்றும் படலம் முடிந்ததும் எல்லோரும் ரிசார்ட்டினை சுற்றி பார்த்து, வந்தவர்களை கவனித்துக் கொண்டிருக்க, தங்களுக்கு கிடைத்த தனிமையில் மனைவியை இரண்டாம் தளத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து வந்தவன், அவளை அணைத்துக் கொண்டு “ஏன் மலர் அவ்வளவு அழுத?” என்றான் தாங்கலாக.
அவன் கேட்டதும் அந்த நொடியின் உணர்ச்சி இந்த நொடியில் அவளுக்குள் புகுந்து விட, கணவனின் முகம் பற்றி அவனின் முகமெங்கும் முத்தங்களை மழையென பொழிந்தவள், இதழில் நீள் முத்தம் வைத்து அவனை கட்டிப் போட்டாள்.
“ஹ்ம்ம்.. நான் கொடுப்பேன்..” மூச்சுக்காற்றுக்கு இடையே புன்னகையுடன் பதில் சொன்னவள், கண்ணீர் மல்க அவனை நிமிர்ந்து பார்த்து “தேங்க்ஸ்..” என்றாள் ஆத்மார்த்தமான குரலில்.
அமுதன் அவளை முறைக்க, “நமக்குள்ள என்ன தேங்க்ஸ்னு நீங்க முறைக்கிறது புரியுது. ஆனா இந்த தேங்க்ஸ் நான் சொல்லியே ஆகணும். என்னோட அடி மனசுல இருக்க வருத்தம் எல்லாமே.. எல்லாமே.. அடியோட இருந்த இடம் தெரியாம போயிடுச்சு. அதுவும் நீங்க என்கிட்ட ஆரம்பிச்சு அண்ணி, அண்ணா முதற்கொண்டு விளக்கேத்த சொல்லி எல்லாரையும் அங்கீகரிச்சதும் என்னால அழுகைய கண்ட்ரோல் பண்ணிக்கவே முடியல. அதான் அந்த நேரம் உங்க கைய கட்டிட்டு அழுதுட்டேன். சாரி….” என்றாள் நெகிழ்ந்த குரலில்.
அவள் சொல்வது அனைத்தையும் புன்னகையுடன் கேட்டிருந்தவன் அவளை தன்னோடு மேலும் இறுக அணைத்துக் கொண்டான்!
“நீ என்னோட மலர்!! என் மலரோட எல்லாமும், எல்லாரும் எனக்கு முக்கியமானவங்க தான்!!” என்றான் அமுதன் அவளின் தலை வருடி.
அவன் அன்பில் மேலும் மேலும் கரைந்தவளுக்கு, அந்த நொடி சிறுவயதில் அவன் மேல் உண்டான கசப்புணர்வு, அவன் மேலிருந்த வருத்தம், மனதில் ஓரத்தில் சிறு சுணக்ககத்தை ஏற்படுத்தும் பழைய விஷயங்கள் என எல்லாம் வெள்ளம் அடித்துச் சென்றது போல் எங்கோ ஓடி மறைந்து… மறந்தே போனது…!!! (அந்தக் கடலை மிட்டாய் விரதத்தை தவிர!!)
அவளுள் அமுதனே நிலை கொள்ளாமல் நிரம்பி வழிந்தான்.
மலரின் மனமெங்கும் அமுதனின் கீதமே எதிரொலித்தது!!!!
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.