ரிசார்ட்டின் திறப்பு விழா இனிதே நடந்தேறிக் கொண்டிருக்க, அதற்கு விட்டேனா என்பது போல் மதியம் மேலாகத் தான் கணவருடன் கமலம் வந்திறங்கினார்.
அதுவும் ரஞ்சிதன், அவனது மனைவி கமலி, தங்கை மித்ரா என இளையவர்கள் யாரும் வராமல் இருவர் மட்டுமே வந்திருக்க, அவர்களை நல்ல முறையில் வரவேற்றனர் இன்பசேகரன் குடும்பம்.
“எங்க வேற யாரையும் காணோம்?” என்று இன்பசேகரன் பொதுவாக தம்பியிடம் விசாரிக்க, அதுவரை மலரின் பெயரில் இருந்த ரிசார்ட்டினை அப்படி ஒரு பொறாமைத் தீயுடன் பார்த்துக் கொண்டிருந்த கமலம், இன்பசேகரன் கேட்ட கேள்வியில் கணவரை முந்திக் கொண்டு பதில் கூறத் தொடங்கினார்.
“மித்ராவிற்கு எக்ஸாம். அதனால அவ வரல. அப்புறம் எங்க மருமக கமலி மாசமா இருக்கா. ரெண்டு மாசம். அதால டாக்டர் டிராவல் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டார். இந்த நேரத்துல அவ கூட துணைக்கு ரஞ்சியும் இருக்கணுமே. அதான் அவுங்க ரெண்டு பேரும் சென்னைலயே இருக்காங்க” என்று அதிகப்படியான பெருமையும் பூரிப்பும் நிறைந்த குரலில் அவர் கூற,
சுப நாளில் ஒரு சுபச் செய்தியைக் கேட்டதும் “ரொம்ப சந்தோஷம்..” என்று தங்களின் மகிழ்வினைத் தெரியப் படுத்தினார்கள் இன்பசேகரன் தம்பதியினர்.
அப்போது தான் மேல் தளத்தில் இருந்து கணவனுடன் கீழே வந்தாள் தேன்மலர்.
அவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி!
அவளது பெயருக்கு ஏற்றார் போல் தேன் சிந்தும் மலராக மலர்ந்து கிடந்தது மலரின் முகம்!
அந்த மலர்ச்சியை அடியோடு அடித்து வீழ்த்தும் வேகம் அதிகரித்தது கமலத்திற்கு.
இருவரும் பெரியவர்களை வரவேற்றதும் அவர்களுக்கும் விஷயம் பகிரப் பட, நண்பனுக்காக அளவு கடந்து சந்தோஷித்தாள் தேன்மலர்.
கமலத்திற்கோ உள்ளம் காந்தியது!
காரணம்….
ரிசார்ட் திறப்பு விழாவிற்கு அவர்கள் பத்திரிக்கை வைத்து விட்டு சென்றதும் ஞானமங்கை தன் பங்கிற்கு அலைபேசியில் அழைத்து சம்பிரதாயமாக நலம் விசாரித்து, தானும் அவருக்கு அழைப்பு விடுத்திருக்க,
“என்னமோ அது உன்னோட சொந்த ரிசார்ட் மாதிரி நீ எல்லாம் கூப்பிட்டு அழைப்பு வைக்கிறியே மங்கை?” என்று கமலம் இளக்காரமாகக் கேட்க,
மங்கையோ அதற்கு மேல் நக்கல் வடியும் குரலில் “என்னோட சொந்த ரெசார்ட் இல்ல தான் அண்ணி.. ஆனா பாருங்க.. மாப்பிள்ளை அந்த ரிசார்ட்ட என் மக பெயரில தான் ரெஜிஸ்டர் பண்ணி இருக்காரு. அப்போ என்னோட மக ரிசார்ட் திறப்பு விழாக்கு நானும் என் பங்குக்கு போன் பண்ணி அழைப்பு வைக்கிறதுல தப்பு ஒன்னும் இல்லையே..” வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் நாசுக்காக பேசினார். கமலத்திற்கு நெஞ்சே வெடித்து விட்டது.
மங்கை மகள் மலரின் பெயரில் அந்த ரிசார்ட்டா???
ஒருவேளை மங்கை பொய் கூறி இருக்கலாமோ என்று சந்தேகத்துடன் கணவரிடம் விசாரிக்க, இளவழகனும் மங்கை கூறியதையே கூறி மேலும் மனைவியின் நெஞ்சை நொறுங்க செய்திருந்தார்.
இப்போது பூரித்து மலர்ந்து விகசித்த முகத்துடன் வந்து நிற்கும் தேன்மலரை கண்டு கமலத்திற்கு அத்தனை புகைச்சல்! பொறாமை! வன்மம்!
கூடவே, திவாகரன் திருந்தி புத்தம் புது மனிதனாக மாறி இருப்பது வேறு அவருள் இன்னும் வயிற்றெரிச்சலை உண்டாக்கி இருந்தது.
குடும்பம் சகிதமாக அவர்கள் நிற்பதை கண்டு மனம் வெந்த நிலையில் இருந்தவருக்கு எதையாவது பேசி அவர்களின் மகிழ்வை குலைக்க வேண்டும் என்கிற தீய எண்ணமே உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அதற்கு முதல் படியாக தேன்மலரின் முகத்தில் தென்படும் மலர்ந்த புன்னகையை துடைத்தெரியும் நோக்குடன் “அப்புறம் தேனு.. உங்களுக்கு அடுத்து தான் என் மகன் ரஞ்சிக்கே கல்யாணம் ஆச்சு.. அவனே நல்ல விஷயம் சொல்லிட்டான்! நீங்க எப்ப நல்ல விஷயம் சொல்லப் போறீங்க? கல்யாணமாகி ஏழு மாசம் வேற ஆச்சு…?? இன்னும் உண்டாகாம இருக்க போல..?” என்று எள்ளலும் நக்கலும் நிறைந்த குரூரமான குரலில் அவர் கேட்க,
அவர் கேட்ட விதமும், வார்த்தைகளில் தெரிந்த விஷமத்தனமும் ஒரு நொடி அங்கிருந்த எல்லோரின் முகத்திலும் புன்னகையை குறையச் செய்திருந்தது. மலரின் மலர்ந்த புன்னகையைத் தவிர!
தன்னிச்சையாக அமுதனின் விரல்கள் மனைவியின் விரல்களோடு பிணைந்து கொள்ள, பார்வை கமலத்தை அழுத்தமும் கோபமுமாகத் தீண்டியது.
இன்பசேகரனும் நொடியில் மாறிவிட்ட முகத்துடன் கமலத்தினை பார்த்திருக்க, மனைவியின் வார்த்தைகளில் திகைத்த இளவழகன், எல்லோரின் முகமும் மாறக் கண்டு, “கமலம் என்ன பேசுற..?” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டார்.
“அப்படி நான் என்னங்க தப்பா கேட்டேன்..? விசேஷங்கள்ல கூடும் போது கல்யாணமான பொண்ணுங்க கிட்ட இதெல்லாம் கேக்குறது சகஜம் தானே.. அதே மாதிரி தான் நம்ம தேனுகிட்டயும் நான் கேட்டேன். அவ உங்க தங்கச்சி மக. உங்க அண்ணனோட மருமக. நம்ம குடும்பம். அதனால ஒரு அக்கறைல கேட்டேன். இதில என்ன தப்பு இருக்கு..?” கமலம் அப்பாவியாக கணவனிடம் பேச, தேன்மலரின் முகத்திலோ புன்னகை கிஞ்சித்தும் குறையவில்லை.
கமலத்தை பற்றி அவள் அறியாததா? அவளுக்குத் தெரியாததா?
மாறாத மலர்ந்த புன்னகையுடன் இளைய தாய் மாமனை ஏறிட்டவள், “விடுங்க மாமா அத்தை சொல்ற மாதிரி இதெல்லாம் சகஜம் தானே..” என சாதாரணமாக கூறியவள், கமலத்திடம் பார்வையை கொண்டு வந்து “கமலி உண்டானது ரொம்ப சந்தோஷம் அத்த!!” மெய்யான மகிழ்ச்சி நிறைந்த குரலில் கூறினாள்.
“அதெல்லாம் இருக்கட்டும். நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்ல மாட்டேங்குறயே? ஏன்..? நல்ல சேதி சொல்றதுக்கு நல்ல விஷயம் ஒன்னும் நடக்கலையா.. இல்ல நடக்க வாய்ப்பில்லையா..?” என்று வன்மமாகக் கேட்க,
“கமலம்” என்று இன்பசேகரனின் அழுத்தமான குரலும், “சித்தி” என்ற அமுதனின் ஆத்திரம் நிறைந்த குரலும் கமலத்தை நடுங்க வைக்க,
“மாமா, கீதன்.. இதுக்கு ஏன் டென்ஷன் ஆகுறீங்க” என்று கண்களால் அவர்களை ஆற்றுப்படுத்தினாள் தேன்மலர்.
மங்கை கமலத்தை நன்றாகவே முறைக்க, இளவழகன் மனைவியை கடிந்து கொண்டார். ஆனாலும் கமலம் அசராமல் பதில் வேண்டி தேன்மலரையே பார்க்க, தேன்மலரும் அவருக்கு பதில் கூறத் துவங்கினாள்.
“இவ்வளவு வருஷமும் இல்லாம இப்போ இந்த நிமிஷம் திடீர்னு என் மேல முளைச்ச அக்கறையால தான் நீங்க இந்தக் கேள்வியை கேக்குறீங்க!! அப்படித் தானே..” என்றவள்,
“அப்போ நீங்க எதிர் பார்த்த மாதிரி நானும் குட் நியூஸ் சொல்லிட்டேன்னா எனக்காக நீங்க மொட்டை அடிச்சு அலகு கூட குத்திக்குவீங்க தானே அத்தை..” என்றவள்,
“ஏற்கனவே என் அண்ணன் மாறனும்னு நீங்க அவ்வளவு நல்ல மனசோட எங்க அம்மாவை திருவண்ணாமலை திருநீறு சுவாமிகள் வரைக்கும் போகச் சொல்லி இருந்தீங்க. இப்ப என் மேல அக்கறை பட்டு நல்ல விஷயம் நடக்க வாய்ப்பில்லையான்னு வேற கேக்குறீங்க.. சோ,
நீங்க எனக்காக மொட்டை அடிச்சு அலகு குத்திக்கிறீங்கன்னா சொல்லுங்க. நானும் கண்டிப்பா குட் நியூஸ் சொல்லிடுறேன்..” என்று அந்தப் பேச்சையே கிண்டலாகக் கூறி விட்டு அவரையே அழுத்தமான புன்னகையுடன் பார்த்தாள் தேன்மலர்.
அவளின் பேச்சில் தென்பட்ட குத்தலும் கிண்டலும் கமலத்தின் கோபத்தை உச்சிக்கே கொண்டு சென்றது. அத்தோடு மட்டுமல்லாமல் மனதிற்குள் மொட்டை போட்டு அலகு குத்தி மஞ்சள் புடவையை கட்டிக்கொண்டு அவரின் கனத்த சரீரத்தை கற்பனையில் கண்டதும் காணக்கூடாததை கண்டது போல் தலையை பலமாக உலுக்கிக் கொண்டார்.
அவரின் அந்த செய்கையில் எல்லோரின் முகத்திலும் அடக்கப்பட்ட புன்னகை!
கமலம் அடுத்துப் பேச வாய் திறப்பதற்கு முன் அவரை தள்ளிக்கொண்டு ரிசார்ட்டிற்குள் பார்வையிட சென்று விட்டார் இளவழகன்.
எல்லோரும் உள்ளே செல்ல, அண்ணியை நெருங்கிய கிருஷ்ணரூபி “இந்த கமலம் சித்தி ஏன் அண்ணி இப்படி பேசிட்டு போறாங்க?” என்று வருத்தமும் கலங்கிவிட்ட முகமாகக் கேட்க,
கணவன் பற்றி இராத மற்றொரு கரத்தினால் சட்டென்று அவளது கன்னத்தினை தட்டிக் கொடுத்த தேன்மலர் “ஹே கிருஷ்ணாம்மா.. இதுக்கெல்லாம் நீ ஏன் டல்லாகுற. பெரியவங்க இந்த மாதிரி ஏதாவது பேசிட்டே தான் இருப்பாங்க. அதெல்லாம் கண்டுக்க கூடாதுடா” என்று வாஞ்சையான குரலில் கூறியவள்,
“நீ போய் சாப்பிடு. நானும் உன்னோட அண்ணாவும் பின்னாடியே வரோம்..” என்றதும் கிருஷ்ணா அங்கிருந்து நகர்ந்து விட,
பற்றிய மனைவியின் கையை விடாது அவளது முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் அமுதகீதன்.
அவனது பார்வையில் தேன்மலர் பக் என்று சிரித்து விட்டாள். இரு புருவங்களையும் அழகாக உயர்த்தி இறக்கியவள் “என்ன மிஸ்டர் மலர்தாசன்… அப்படி பாக்குறீங்க..?” என நகைக்கும் குரலில் கேட்க, மனைவி முகத்தில் கிஞ்சித்தும் தென்படாத வருத்தமும், கலக்கமும் அமுதனை தெளிவடையச் செய்தாலும் கமலத்தின் பேச்சு அவனை பாதித்தது நிஜம்.
அதை உணர்ந்தவளும் அவன் கண்களை ஆழமாகப் பார்த்து “அவ்வளவு சீக்கிரம் உங்களோட மலர யாராலயும் வாட வச்சிட முடியாது கீதன்! அதுவும் இந்த கமலம் அத்த எத்தனை முறை எவ்வளவு பேசி இருப்பாங்க..? பத்தோட பதினொன்னா இதுவும் இருந்துட்டு போகட்டுமே! இதுக்காக எல்லாம் நான் சோக கீதம் வாசிப்பேன்னு என்னோட அமுதகீதன் நினைக்க கூடாது! நாம நம்மளோட நிலைல தெளிவா இருந்தோம்னா அடுத்தவங்களோட பேச்சும் எந்த நிலைலயும் நம்மை பாதிக்காது. அப்படிப் பார்த்தா உங்களோட மலர் மனசு தெளிவா தான் இருக்கு. சோ, நீங்க என்னையே உத்து உத்துப் பாக்காம வாங்க சாப்பிட போகலாம்..” என்று சிரிப்புடன் கூற, அவளின் சிரிப்பு அவனையும் தொற்றியது.
மனைவியின் இந்த தைரியம் போதுமே! அவனும் இன்னும் தைரியம் கொண்டவனாக உணர்ந்தான்!
ஆனால் அவர்களுக்கு இருந்த தைரியமும் தெளிவும் வீட்டில் எல்லோருக்கும் இருக்கும் என என்ன நிச்சயம்?
கமலத்தின் அந்தப் பேச்சு அன்றோடு மட்டும் நிற்கவில்லை. கமலியின் வளைகாப்பு தினத்திலும் அவரின் மறைமுக பேச்சுக்கள் எல்லாம் அதிருப்தியை கொடுத்திருந்தது.
அவரோடு இணைந்து இன்னும் சில உறவினர் பெண்களும் தேன்மலர் தாய்மை அடையவில்லையா என்று தொடர்ந்து விசாரணை நடத்த, எல்லோருக்கும் பதில் சொல்வதற்குள் மங்கையும் வசந்தலாவும் ஒரு வழியாகி இருந்தனர்.
அப்போது கூட அவர்கள் பேரப் பிள்ளையின் வரவைக் குறித்து எதையும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், நாட்களும் மாதங்களும் காற்றாய் கரைந்து அமுதனுக்கும் தேன்மலருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டு தொடங்கியதும் தான் பெரியவர்களின் மனதில் மெல்ல கலக்கம் நுழைந்தது.
அதுவும் அவ்வப்போது வீட்டிற்கு வரும் மகளிடம் “இந்த மாசமும் தலைக்கு ஊத்திட்டியா தேனு..” என்று மங்கை மறைமுகமாக கேள்வி கேட்பதில் சிறு வருத்தமும் கவலையும் இழையோடத் துவங்கியிருந்தது.
தாயின் எதிர்பார்ப்பை உணர்ந்தாலும் தேன்மலர் எதையும் கூறவில்லை.
அவர் வருத்தம் கொள்ளும் நேரங்களில் எல்லாம் அமைதியாகவே இருக்கப் பழகிக் கொண்டாள். நான்கு ஆண்டுகள் குழந்தை வேண்டாம் என்று அவர்கள் எடுத்த முடிவில் மிகத் தெளிவாக இருந்தாள் தேன்மலர்.
என்ன ஒன்று.. அந்த முடிவை பற்றி யாரிடமும் அவள் தெரிவிக்கவில்லை. தெரிவித்தால் பிரச்சனை தான் உண்டாகும் என்பதால் இதைப் பற்றி மூச்சு விடவில்லை மலரும் அமுதனும்.
மங்கையோ மகள் கருவுற வேண்டும் என்று தன் பழைய அவதாரத்தினை எடுத்திருந்தார்.
அதான்.. கோவில் குளம் பரிகாரம் என்று இறங்கி இருந்தார். தேன்மலர் எவ்வளவு கடிந்து கொண்டும் அவர் கேட்கவில்லை.
போதாக்குறைக்கு வெள்ளிக்கிழமைகளில் அவளையும் கோவில் குளம் என்று வர சொல்ல, முடியவே முடியாது என்று மறுத்திருந்தாள் தேன்மலர்.
“இப்படியே இருந்தா என்னடி அர்த்தம்? சரி கோவிலுக்கு தான் வரமாட்டேன்ட்ட.. உனக்காக நானே வேண்டிக்குறேன். தயவு செஞ்சு மாப்பிள்ளையும் நீயும் ஹாஸ்பிடல் போய் ஒரு செக்கப் ஆவது பண்ணிட்டு வாங்களேன்..” என்று அடுத்த ஆரம்பிக்க, தேன்மலருக்கு அயர்ச்சியாக இருந்தது.
‘ஐயோ… நீ பயப்படுற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லம்மா’ என்று கத்த வேண்டும் போல் தோன்றியது.
அப்படி கத்தினால் காரியம் கெட்டுவிடும் என்பதால் வாயை மூடிக் கொண்டாள்!
மங்கையும் தன்னால் மகளை சரி கட்ட முடியாது என்று அவளின் மாமியாரை வைத்து காரியத்தை சாதிக்க நினைத்தார்.
வசந்தலாவிடம் சென்று “நான் சொன்னா கேட்கவே மாட்டேங்குற அண்ணி. நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்களேன்..” என்று விடாமல் சொல்ல, வசந்தலாவும் வேறு வழியில்லாமல் இந்த விஷயம் குறித்து மலரிடம் பேசும்படியானது.
ஏதேதோ கூறி தாயை சரி கட்டியவளால் மாமியாரிடமும் அதே போல எதுவும் சாக்குச் சொல்ல முடியவில்லை.
ஆனால் அமுதன் அன்னையிடம் “இப்ப என்னம்மா ஆச்சு..? எங்களுக்கு என்ன இன்னும் வயசு இல்லையா? காலம் இல்லையா? இப்ப எதுக்கு ‘செக் அப்’ போங்கன்னு சொல்றீங்க.. அதெல்லாம் முடியாதும்மா” என்று ஒரே முடிவாக கூறியிருந்தான்.
உள்ளுக்குள் கோபமாக வந்தது. அக்கோபம் அன்று மனைவி மீதும் படர்ந்தது.
“இதுக்குத்தான் மலர் சொன்னேன். கேட்டியா நீ? இப்ப பாரு! ஆள் ஆளுக்கு ஆரம்பிச்சிட்டாங்க. செக் அப் போங்க. ட்ரீட்மென்ட் போங்க. கோவில் போங்க. பரிகாரம் பண்ணுங்கன்னு. எங்கேயாவது விசேஷத்துக்கோ பொது இடத்துக்கோ போனா போதும்.. ஏன் இன்னும் குழந்தை வரல அப்படி இப்படின்னு உன்னை பார்த்து கேள்வியா கேட்க வேண்டியது..” கோபத்தில் ஆரம்பித்தவன் ஆற்றாமையும் சலிப்புமாக முடிக்க, மௌனமாக கணவனை அணைத்துக் கொண்டவள்,
“ரிலாக்ஸ் கீதன்…” என்று அவனின் முதுகினை வருடி கொடுக்க, மலரின் வருடலில் மெல்ல மெல்ல தணிந்தான் அமுதகீதன்.
இரு கரத்தாலும் அவளின் முகத்தை ஏந்திக் கொண்டவன், “நிஜமாவே இதெல்லாம் உன்னை பாதிக்கவே இல்லையாடா மலர்?” என்று உருக்கமாக அவன் கேட்க, இரு கண்களையும் பட்டாம்பூச்சி என சிமிட்டி இல்லை எனும் விதமாக உதடு பிதுக்கினாள் தேன்மலர்.
புன்னகைத்தவன், “எப்படி மலர்?” என்று ஆச்சரியத்துடன் கேட்க,
“ஹ்ம்ம்…” என்று தாடையில் ஒரு விரல் வைத்து யோசிப்பது போல் ஜாடை செய்தவள்,
“முதல்ல இந்த மாதிரி பேச்செல்லாம் பழகிடுச்சு. அப்புறம் நான் சொன்ன மாதிரி நம்ம நிலையில நம்ம தெளிவா இருந்தோம்னா அடுத்தவங்க பேச்சு நம்மை பாதிக்காது. நான் தெளிவா இருக்கேன். சோ அடுத்தவங்க பேச்சு என்ன பாதிக்கல. இன்னொரு காரணம் நம்ம கிருஷ்ணா தான்!!” என்றாள் அன்பை தேக்கிய குரலில்.
கிருஷ்ணா என்றாலே மலரின் முகமும் மனமும் இளகி மலர்ந்து விடும்.
அவர்கள் எடுத்த முடிவின் பலனாக மலர் மற்றும் கிருஷ்ணாவின் பந்தம் மெருகேறி உயிர் சொந்தமாக மாறி இருந்தது.
தற்போது கிருஷ்ணரூபி NEET தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று, மருத்துவம் படிப்பதற்கான தகுதியை பெற்றிருந்தாள்.
அமுதனுக்கும் மலருக்கும் அவளின் மருத்துவ தேர்ச்சியை எண்ணி எல்லையற்ற மகிழ்ச்சி!
அவர்களுக்கு மட்டுமல்ல.. அவளை ஈரைந்து மாதம் விருப்பமில்லாமல் சுமந்து பெற்ற வசுந்தலாவிற்கும் இளைய மகளை எண்ணி அவ்வளவு பூரிப்பாக இருந்தது.
இப்போதெல்லாம் வசுந்தலா கிருஷ்ணரூபியிடம் ஒதுக்கம் காண்பிப்பதில்லை! அவளை சிறு பெண்ணாக பாவிப்பதும் இல்லை! அவள் மேல் அனாவசியமாக கோபம் கொள்வதில்லை!
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அவளோடு எத்தனைக்கு எத்தனை ஒன்றாமல் ஒதுங்கி நின்றாரோ இப்போது அத்தனைக்கு அத்தனை நெருங்கி ஒன்ற முயன்றார்!
அவரின் முயற்சி எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்தது. கிருஷ்ணரூபிக்கும் தான்!
புரிந்தவளின் செயல்கள் புதிராகவே இருந்தன. அவர் மாற்றம் உணர்ந்து அவள் மாறிப் போனாள். அவரிடம் மட்டும்!
அவசியத்திற்குக் கூட அவரிடம் பேச்சுக்கள் வைத்துக் கொள்வதில்லை! முயன்ற வரையில் அவரின் முகம் பார்ப்பதை தவிர்த்து விடுகிறாள்!
அவளது அண்ணியுடன் மனம் விட்டு சிரித்து பேசும் சமயங்களில் பெற்றவரின் தலை எட்டிப் பார்த்தாள் அவள் முகத்தில் பூத்திருக்கும் புன்னகை அப்படியே உதிர்ந்து விடும்.
அவளது செய்கைகள் அனைத்தும்
அவரிடம் இருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும் என்பதை பறைசாற்றும் வகையிலேயே இருக்கும்.
வசுந்தலா தான் அவளின் செயல்களில் மிகவும் ஒடுங்கிப் போனார். மனதிற்குள் மலை அளவு குற்ற உணர்வும், தன்னைக் குறித்தே குன்றலும் எழுந்து அவரை மேலும் வேதனை கொள்ள வைத்தது.
மனைவி தவிப்பதை பொறுக்க முடியாமல் மகளுடன் பேசிப் பார்த்தார் இன்பசேகரன்!
மௌனமான புன்னகையுடன் தந்தையை பார்த்தாள் கிருஷ்ணா.
அப்புன்னகைக்கு பின்னால் அவளின் வலிகளும் ஏக்கங்களும் ஏமாற்றங்களும் கூட உயிர்பில்லாததாக மாறி இருந்தது.
“இத்தனை நாளும் அவங்க எப்படி இருந்தாங்களோ அப்படியே இருக்கட்டும்பா. எனக்கு அது பழகிடுச்சு. பதினேழு வருஷமா பழகுன ஒன்ன திடீர்னு மாத்த முடியாது. அவங்க என்னை ஒதுக்கி வச்சு பழக்கப்படுத்திட்டாங்க. நானும் ஒதுங்கி இருந்து பழகிட்டேன். அந்தப் பழக்கம் என்னோட வழக்கமாகி என்னோட வாழ்க்கையாகி அதுவே இப்ப என்னோட இயல்பாகிடுச்சுப்பா. அதனாலதான் என்னால அவங்களோட மாற்றத்திற்கு எதிர்வினை கொடுக்க முடியலையோ என்னமோ. ப்ளீஸ்பா.. என்னை இப்படியே விட்டுருங்க” வலி மிகுந்த குரலில் கெஞ்சுதலாக அவள் பேசியது இன்பசேகரனின் மனதை துடிக்க வைத்தது.
காலம் கடந்து கொடுக்கப்படும் அன்பும் பெறுவதற்கு தகுதியற்ற சுமையாகவே மாறிவிடும்!
வசந்தலாவின் காலம் கடந்த அன்பு கிருஷ்ணரூபிக்கு சுமக்க முடியாத சுமக்க இயலாத சுமக்க விரும்பாத சுமையாகவே தோன்றியது.
தாமதமான தாயன்பு கசந்தது!
காலம் கடந்து வந்த கரிசனம் கசந்தது!
அம்மாவை அவள் நாடிய நாட்கள் எல்லாம் ஒதுக்கி வைத்து வதைத்து விட்டு தற்போது நெருங்கி வர நினைப்பவரின் பாசம் பாரமாக அழுத்தியது.
தாய்க்காக ஏங்கிய காலங்கள் எல்லாம் நினைவிலாடி அவளை உவர்ப்பான ஓர் உலகில் தள்ளியது.
சிறுவயதில் அவள் கடந்து வந்த பாதைகளை எல்லாம் திரும்பிப் பார்க்க கூட அவள் நினைக்கவில்லை.
நினைத்தால் உள்ளத்தில் உணர்வலைகள் பொங்கி எழுந்தது.
அன்பைப் பொழியும் அண்ணனும், அக்கறை கொள்ளும் தந்தையும் இல்லை என்றால் கிருஷ்ணரூபி என்பவள் என்றோ மரித்திருப்பாள் என்பது சர்வ நிச்சயம்!
எனவே எதையும் நினைக்காமல் இருக்க அரும்பாடு பட்டாள். அதில் சிறு வெற்றியும் கண்டிருந்தாள்.
மருத்துவ படிப்பில் காலடி எடுத்து வைத்ததும் அவளுக்கு பெரிதாக உதவி இருக்க, அண்ணன் அண்ணி தந்தை என அவளின் உலகம் அவளது இயல்பை மாற்றாமல் அழகாகவே நகர்ந்தது.
அவளைப் பொருத்தமட்டில் எல்லாவற்றையும் மறந்து கடந்து தற்போது ஒரு நிலைக்கு வந்து விட்டாள்.
அந்த நிலையிலிருந்து அவள் மாறத் தயாராக இல்லை.
புதிதாக ஏற்படும் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
எனவே பெற்ற அன்னையிடமிருந்து முற்றிலும் ஒதுங்கினாள்.
வசுந்தலாவிற்கு ரணம் தான். வேதனை தான். காலம் கடந்து பிறந்திருக்கும் அன்பினை அவளிடம் முழுமையாகக் காட்ட முடியாத நிலை நெஞ்சை அறுத்தது.
ஆதியில் தன் செயல்களுக்கு இது தனக்குத் தேவை தான் என்று சுய வெறுப்புடன் கூறிக் கொண்டவர், அவளோடு நெருங்கவில்லை என்றாலும், அவளுக்கான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யத் தொடங்கினார்.
எதற்கும் கிருஷ்ணாவிடம் இருந்து எதிரொலி இருக்காது!
நாட்கள் வேகத்துடன் உருண்டோட, கிருஷ்ணா சேலத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க, அவளுக்காக அமுதனும் மலரும் எடுத்த முடிவும் அவளுக்குத் தெரிய வந்திருந்தது!!
நொறுங்கிப் போனாள் கிருஷ்ணா!!
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.