அன்று மாலை கல்லூரியில் இருந்து மிகுந்த உற்சாகத்துடன் வீடு வந்து சேர்ந்தாள் கிருஷ்ணா.
அவள் கையில் மருத்துவர்கள் அணியும் வெள்ளை கோட்’ மற்றும் ‘stethoscope’ இருந்தது.
“அண்ணி அண்ணி…” என்று குரல் கொடுத்தவாறே வீட்டிற்குள் நுழைந்தவளின் முகத்தில் அவ்வளவு பரபரப்பும் எதிர்பார்ப்பும் கொட்டிக் கிடந்தது.
நடையில் ஒரு துள்ளல்! விவரிக்க முடியாத உற்சாக ஊற்று அவளிடம்!
மகளின் குரலில் அறையை விட்டு வெளியே வந்திருந்தார் வசுந்தலா.
அண்ணியை அழைக்கவென மாடிப் படிகளில் ஏறவிருந்தவள் வசுந்தலாவைக் கண்டதும் ஒரு நொடி தேங்கி விட்டு மீண்டும் படிகளில் ஏற,
“தேனு இங்க இல்ல ரூபி. வேலை முடிஞ்சு வந்ததும் அவ அம்மாவைப் பாக்க அவுங்க வீட்டுக்கு போயிருக்கா” என்று கூற, மௌனமான தலை அசைப்புடன் அவர் கூறிய தகவலை ஏற்றுக் கொண்டவள், “நானும் அங்க கிளம்பறேன்” என்று தகவல் போல் கூறி விட்டு வாசல் பக்கம் நடந்தாள்.
“என்ன விஷயம் ரூபி? ஏதாவது முக்கியமான விஷயமா? வந்ததும் வராததுமா தேனுவை தேடி கிளம்புற? எதுவும் சாப்பிடவும் இல்ல. காஃபி தரவா. குடிச்சிட்டு கிளம்பு” என்று வசுந்தலா சிறு எதிர்பார்ப்புடன் மகளிடம் பேச்சை நீட்டித்தபடி அடுக்களை பக்கம் நகர்ந்தார்.
“ஹ்ம்ம். அண்ணியை பாக்கணும். காஃபி வேண்டாம்” என்று ரத்தின சுருக்கமாக பதில் சொல்லியவள், “போய்ட்டு வரேன்” என்று கிளம்பி இருந்தாள். அவரின் தலை அசைப்பிற்கோ ஒப்புதலுக்கோ அவள் அங்கே நிற்கவில்லை.
செல்லும் மகளை பாரமான மனதுடன் பார்த்த வசுந்தலாவும் அறைக்குள் சென்று மறைந்தார்.
தினமும் தாரமங்கலத்தில் இருந்து தான் சேலத்தில் உள்ள கல்லூரிக்கு சென்று வருகிறாள் கிருஷ்ணா.
வழக்கம் போல் அவளை அழைத்துச் செல்வதும் வருவதும் சேதுதான்.
சேதுவிடம் வந்தவள் “காரை ஷெட்ல நிறுத்த வேண்டாம் அங்கிள். மங்கை அத்தை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க” என்று சொல்ல, அவரும் அவள் சொன்னதை செய்தார்.
அத்தை வீட்டிற்குள் நுழைந்தவள் கண்டது மங்கையின் வீங்கிய பாதங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்த திவாகரனைதான்.
கூடவே அவன் மங்கையை கடிந்து கொள்வதும் நன்றாக காதில் விழுந்தது.
“ஏன்மா இப்படிப் பண்ற? எத்தனை தடவை சொல்றது? இந்த வயசுல உனக்கு இந்த வேண்டுதல் எல்லாம் தேவையா? அதுவும் அந்தக் கோவிலை நூத்தி எட்டு சுத்து சுத்தி வந்தா தான் ஆச்சா? மூணு சுத்து சுத்தினா போதாதா?” என்று கோபமாகப் பேசினாலும், அவன் கைகள் தாயின் வீங்கிய பாதங்களுக்கு மருந்து பூசிக் கொண்டிருந்தன.
“தேனு மாதிரி சும்மா நீயும் திட்டாத திவா. நான் என்ன வேணும்னா கோவிலை சுத்தி வந்தேன். வேண்டிகிட்டு தான சுத்தி வந்தேன். அதுக்குப் போய் அண்ணனும் தங்கச்சியும் இந்த குதி குதிக்குறீங்க” என்று குறைபட்டார் மங்கை!
தாயை ஏகத்திற்கும் முறைத்தவன், “நீ சுத்தி வந்ததா இப்ப பிரச்சனை? கோவிலை சுத்தி வீட்டுக்கு வந்து தலை சுத்தி மயங்கி விழுந்தது தான் பிரச்சனை. எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா? அதான் அவசர அவசரமா தேனுக்கு கூப்பிட்டு வர சொன்னோம்” என்றவன்,
“இனிமேல் இந்த வேண்டுதல், நேர்த்திக் கடன், இதை எல்லாம் விடும்மா. பாத்த தான. தேனு எப்படி கோபப் பட்டான்னு.. நம்ம தேனுவோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும். நீ இப்படி ஏதாவது பண்ணி உடம்புக்கு எதையும் இழுத்து வைக்காத” என்று கடிந்தவன், மருந்தினை பூசி முடித்திருந்தான்.
திவாகரன் இப்போது அவ்வீட்டின் பொறுப்புள்ள குடும்பத் தலைவன்!
மங்கை எதிர்பார்த்த மகனாக, கவி எதிர்பார்த்த கணவனாக, தேன்மலர் எதிர்பார்த்த தமையனாக, கோகுலனுக்கு சிறந்த தந்தையாக, மற்றவரின் மரியாதையைப் பெரும் சிறந்த மனிதனாக விளங்குகிறான்.
இந்த ஒன்றரை ஆண்டு காலமாக சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிகிறான். வீட்டில் இருந்தே பார்க்கும் படியான வேலையைத் தான் தேர்வு செய்திருந்தான்.
நேரடியாக சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு தினம் சென்று வேலை பார்க்க அவன் பிரியப்பட்டாலும், கவி பயந்தாள்.
எங்கே மீண்டும் கணவன் குடிக்கு அடிமையாகி விடுவானோ.. தான் தனியே சமாளிக்க வேண்டுமோ.. முன்பு போல் எதுவும் ஆகி விடுமோ என்று அவளுள் மிகுந்த அச்சம்.
மனைவியின் பயத்தை உணர்ந்து பாரம் கொண்டாலும் அவளுக்காகவே ‘வர்க் ஃப்ரம் ஹோம்’ தான் வேண்டும் என்று கேட்டு, தாய் தாரத்தின் கண் அருகிலேயே இருந்து பணி புரிகிறான்.
நல்ல வேலை. நல்ல பதவி. அவனும் இப்போது நல்ல மனிதனாக!! எல்லோருக்கும் அவன் மாற்றம் மகிழ்ச்சியாக!!
மகன் கூறியதைக் கேட்டு மங்கை முகத்தில் அளவு கடந்த வேதனை.
“அவ நல்ல மனசுக்கு நல்லது நடந்தா பரவாயில்லையேடா திவா. ரெண்டரை வருஷம் ஆச்சு. இன்னும் அவ உண்டாகல. என்ன குறையோ குத்தமோ. என் மகளுக்கு ஒரு நல்லது நடந்தா தானே எனக்கு நிம்மதியா இருக்கும். ஆனா அவளுக்கு என் கவலை எல்லாம் எங்க புரியப் போகுது.. கோவில் பூஜைன்னு தான் வரல. செக் அப் போடின்னா அதுக்கும் போக மாட்டேங்கிறா. எனக்கு தான் என்னவோ ஏதோன்னு திக்கு திக்குன்னு இருக்கு..” என்று வருத்தமாக கூறியபடி மங்கை மூக்கை உறிஞ்சினார்.
“அத்த…” என்றபடி வந்தாள் கிருஷ்ணா.
அவளைக் கண்டதும் “அடடே.. வாடா ரூபி” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மங்கை வரவேற்க, “வாம்மா ரூபி” என்று திவாகரனும் புன்னகையுடன் வரவேற்றான்.
“ஹாய் மாமா..” என்று அவனிடம் கூறியவள், மங்கையின் காலடியில் அமர்ந்து “நீங்க இப்படி கஷ்டப் பட்டு வைக்கிற பிரார்த்தனைக்கு எல்லாம் கண்டிப்பா பலன் கிடைக்கும் அத்த. ஆனா உங்க உடம்பை கெடுத்து பிரார்த்தனை பண்ணாதீங்க. நீங்க நல்லா இருந்தா தானே அண்ணியோட பேபியை நல்லா பாத்துக்க முடியும்” என்று புன்னகையுடன் சொல்ல, அவளின் வார்த்தைகளில் மங்கை மனம் நெகிழ்ந்து விட்டது.
“நீ என்னடா திடீர்னு வந்து நிக்கிற..” என்று மங்கை தன்னை சமன் படுத்திக் கொண்டு கேட்க,
“காலேஜ்ல இன்னைக்கு ‘White Coat Ceremony’ அத்த” என்று தன் கைகளில் கிடந்த வெள்ளை அங்கியை சுட்டிக் காட்டி கூறியவள், “அதான் அண்ணி கிட்ட காட்டி அவுங்களுக்கு போட்டு விட ஆசையும் ஆர்வமுமா இருந்தது. அண்ணி இங்க இருக்காங்கன்னு தெரிஞ்சதும் உடனே கிளம்பி வந்துட்டேன்” என்றவள், “எங்க என் அண்ணி?” என்று கேட்டபடி பார்வையை வீடு முழுவதும் ஓட விட்டாள் கிருஷ்ணா.
புன்னகையுடன் அவளைப் பார்த்த திவா “உன் அண்ணி அவுங்க அண்ணி கூட மொட்டை மாடில இருக்காங்க. அம்மா மயங்கி விழுந்தது தெரிஞ்சதும் தேனுவுக்கு ரொம்ப பயம். மயக்கம் தெளிஞ்சதும் பயம் போய் கோபம் வந்திடுச்சு. அம்மா மேல மொத்த கோபத்தையும் இறக்கிட்டு மாடிக்கு போய்ட்டா. அவளை சமாதானப் படுத்த கவி போயிருக்காமா” என்றவன், குளிர் சாதனப் பெட்டியில் இருந்து மூன்று கோன்’ ஐஸ் க்ரீம்களை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.
“கோகுல ஸ்கூல்ல இருந்து அழைச்சிட்டு வரும் போது எல்லாருக்கும் ஐஸ் வாங்கிட்டு வந்தேன் ரூபி. சூடா இருக்க உன் அண்ணிக்கு கொண்டு போய் கொடுத்து, நீயும் அவளை சமாதானப் படுத்து” என்றவன்,
“அண்ட்… அதுல ப்ளாக் கரண்ட் ஃபிளேவர் கவிக்கு. பட்டர் ஸ்காட்ச் உனக்கும் தேனுக்கும்” என்று கூற, குறும்புச் சிரிப்புடன் அவனைப் பார்த்த கிருஷ்ணா,
“அது ஏன் மாமா கவி அக்காவுக்கு மட்டும் ப்ளாக் கரண்ட்.. எங்களுக்கு எல்லாம் அதில்லையா?” என்று கிண்டலாகக் கேட்க,
“பாருடா… திவா மாமாவா இது..??!??? சூப்பர் போங்க…” என்றவள்,
“கவி அக்கா..இதோ உங்க புருஷர் கொடுத்த ப்ளாக் கரண்ட்டோட மேல வரேன்..” என்று புன்னகை சிந்தும் குரலில் உற்சாகமாக கூறியவள், மாடிப் படிகளில் ஏறினாள்.
இந்த இரண்டரை ஆண்டுகளில் தேன்மலரிடம் மட்டுமல்லாது அவளது குடும்பத்தோடும் நன்றாக பழகி அவர்களுள் ஒருத்தியாக மாறி இருந்தாள் கிருஷ்ணரூபி.
தேன்மலர் இங்கே வரும் போது அவளோடு ஸ்கூட்டியில் தொற்றிக் கொண்டு அவளும் இங்கே வந்து விடுவாள்.
எனவே, மங்கை முதல் திவாகரன் வரை எல்லோருக்கும் செல்லப் பிள்ளை ஆகிப் போனாள் கிருஷ்ணா.
துள்ளி ஓடிச் செல்லும் அவளைக் கண்டு இடமும் வளமும் தலையசைத்து புன்னகை சிந்திய திவாகரன், தாயை அறைக்குள் அழைத்துச் சென்று படுக்க உதவி செய்து விட்டு, லேப்டாப்பில் கவனம் பதித்து வேலையில் மூழ்கிப் போனான்.
*******************
கையில் குளிர்ந்த பனிக்கூழ்களுடன் மொட்டை மாடிப் படிகளில் ஏற இருந்த சமயம் அமுதனிடம் இருந்து கிருஷ்ணாவுக்கு அழைப்பு வந்தது!!
வெள்ளை கோட்’டை தோளில் போட்டுக் கொண்டவள், ஒரு கையில் ஐஸ் க்ரீம்களை பற்றிக் கொண்டு மறு கையால் சுடிதார் பேண்ட் பாக்கட்டில் இருந்த போனை எடுத்தாள்.
“சொல்லுண்ணா…” என்றாள் கிருஷ்ணா.
“அத்த வீட்லயா ரூபி இருக்க?” என்று அந்தப் பக்கமிருந்து அமுதன் கேட்க,
“ஹ்ம்ம் ண்ணா. அண்ணியை பாக்க வந்தேன்” என்றவள், மங்கையின் வேண்டுதல், மயங்கி விழுந்தது, பாதத்தில் உள்ள காயம் என எல்லாம் சொல்லி, “அண்ணி கோபப் பட்டுட்டாங்க போலண்ணா. திவா மாமா சொன்னாங்க” என்றவள், படிகளில் ஏறத் துவங்கி இருந்தாள்.
தங்கை சொன்னதைக் கேட்ட அமுதனின் நெஞ்சில் அத்தனை பாரம்.
அண்ணனின் அமைதியில் வருத்தமடைந்தவள் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் “நீ அண்ணியை நினைச்சு ஃபீல் பண்ணாதண்ணா. அவுங்களை இயல்பாக்கி நான் வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்” என்றவள், பேச்சை மாற்றும் பொருட்டு,
“எப்பண்ணா ஏற்காடுல இருந்து கிளம்புற..” என்று கேட்க, “நாளைக்கு ஈவ்னிங் கிளம்பி வந்துடுவேன் கிருஷ்ணா” என்றான் அமுதன்.
“ஓ.. சரிண்ணா..” என்று பேசிக் கொண்டே மாடியை அடையும் இறுதி இரண்டு படிகளில் கால் வைத்தவள், தன் அண்ணி அவளது அண்ணியோடு பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு அப்படியே உறைந்து நின்று விட்டாள்!
***********************
மொட்டை மாடியில்…
“தேனு.. இந்த விஷயம் நான் உன் கிட்ட கேக்கக் கூடாது. ஆனா, நீ பிடிவாதமா இருக்கதால இதைப் பத்தி உன் கிட்ட கேக்க தோணுது..” என்று கவி தயக்கத்துடன் பேச்சினை ஆரம்பித்தாள் கவி.
“என் கிட்ட என்ன அண்ணி தயக்கம்? கேக்க வந்ததை கேளுங்க” அத்தனை நேரமும் அன்னை மீதிருந்த கோபம் சற்று நீங்கி இருக்க, தணிந்த குரலில் தயங்கி நிற்கும் அண்ணியை கேட்கச் சொல்லி ஊக்கினாள் தேன்மலர்.
“அத்தையும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டாங்க.. அவுங்க கூட கோவில், குளம், பரிகாரம் பூஜைன்னு போக வேண்டாம்.. ஆனா, நீ ட்ரீட்மென்ட் போக மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறது ஏன் தேனு? அமுதன் தம்பியும் முடியாது.. அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடாராம்” என்றவள்,
“இவ்வளவு தூரம் ரெண்டு பேரும் உறுதியா இருந்தீங்கன்னா.. ட்ரீட்மென்ட் போக அவசியமில்லன்னு தான் அர்த்தம். அப்போ ரெண்டு பேரும் கொஞ்ச வருஷத்துக்கு குழந்தை வேண்டாம்னு பிளான்ல இருக்கீங்களா?” என்று தான் நினைத்ததை மனம் திறந்து கேட்டு விட்டாள் கவிரத்னா.
அண்ணி கேட்ட கேள்வியில் ஓர் நொடி மௌனமாக இருந்த தேன்மலர், பின்பு ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
கவி மெல்லத் திகைத்து “ஆனா ஏன் தேனு.. தம்பியோட முடிவா இது?” என்று கேட்க, “இல்ல அண்ணி இந்த முடிவை எடுக்கணும்னு முதல்ல முடிவு பண்ணது நான் தான். அவர் முதல்ல நிறைய விஷயத்தை யோசிச்சு தயங்கினாலும் என் முடிவுக்கு அவர் மறுப்பு சொல்லல” என்று கணவனுக்கான நேசத்துடன் பேசியவள்,
“இப்ப இது எங்களோட முடிவு தான் அண்ணி. எங்களோட கிருஷ்ணாக்காக” என்று ஆத்மார்த்தமான குரலில் அவள் கூறியதும், கவிரத்னாவின் முகத்தில் இன்னும் திகைப்பு கூடியது.
கேட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணாவின் இதயமும் அதன் துடிப்பினை இரு மடங்காக அதிகரித்திருந்தது.
“ரூபிக்காகவா..?” பேரதிர்வுடன் கேட்டாள் கவிரத்னா. கணவன் மனைவியின் இந்த முடிவுக்கு பின்னே கிருஷ்ணரூபி இருப்பாள் என்று அவள் நினைக்கவில்லை. எனவே அதிர்வுடன் கவிரத்னா தேன்மலரை பார்த்திருக்க,
ஆமோதிப்பாய் தலையசைத்த தேன்மலர் கிருஷ்ணாவின் இள வயது இன்னல்களை எல்லாம் சொல்லி, தாயிடம் இருந்து அவள் அனுபவிக்காத தாயன்பை பற்றியும் சொல்லி விட்டு “இதெல்லாம் கீதன் என்கிட்ட சொன்ன போது என்னால ஜீரணிக்கவே முடியல அண்ணி. சின்ன குழந்தை அவளுக்கு என்ன தெரியும்..? அவளை போய் ஒதுக்கி வச்சு.. கஷ்டப்படுத்தி.. எப்ப பாரு அதட்டி, அவ மேல கோபப்பட்டு..” தொண்டை அடைக்க பேசியவள்,
“எங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் கூட அத்த, கிருஷ்ணா மேல வெறுப்போட கோபப் பட்டதை நான் பாத்திருக்கேன். அவ முகம் எப்படி சுண்டிப் போயிரும் தெரியுமா. அப்படியே வாடிடுவா. இப்போ.. அவங்க தப்ப எல்லாம் உணர்ந்து நெருங்கி வராங்க. ஆனா கிருஷ்ணா… அவ அவுங்களோட நெருங்க தயாரா இல்ல” என்று கனத்த குரலில் கூறியவள்,
“எப்படி அண்ணி முடியும்? இத்தனை வருஷமும் அவ மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்.. அரவணைக்க வேண்டிய காலத்தில அரவணைக்காம காலம் கடந்த பின்ன அவுங்களோட அரவணைப்பை எப்படி அவ ஏத்துக்குவா…?”
“ஒரு தடவை நாங்க கோயில் போகும்போது கீதன் என்கிட்ட சொன்னாரு.. தாகம் தீர்ந்த பின்ன தண்ணி கொடுத்து எந்த பிரயோஜனமும் இல்லைன்னு.. அந்த மாதிரி தான் அத்தையோட பாசமும்” என்றாள் பாரத்துடன்.
என்ன சொல்வதென்று கூட கவிரத்னாவிற்கு தெரியவில்லை. வசந்தலாவிற்கும் கிருஷ்ணரூபிக்கும் நிரப்ப முடியாத இடைவெளிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
“அவளுக்காக தான் அண்ணி நாங்க குழந்தை வேண்டாம்ன்ற முடிவில இருக்கோம். எங்களுக்கு ஒரு குழந்தை வந்துட்டா நாங்க கிருஷ்ணாவ அதிகம் கவனிக்க முடியாது. அவ கூட இருக்க முடியாது. அவளுக்கான நேரத்தை எங்களால கொடுக்க முடியாது. எல்லாம் யோசிச்சு தான் நான் இந்த முடிவை எடுத்தேன். ஆனா நீங்க கவலைப்படாதீங்க. ரொம்ப வருஷம் எல்லாம் இல்ல. இன்னும் ஒரு டூ இயர்ஸ்.. அவளும் காலேஜ் தேர்ட் இயர் போய்டுவா. மெடிசன் வேற படிக்கிறா..” என்ற தேன்மலரின் குரலில் கிருஷ்ணா மீதான பெருமையும், பாசமும் பொங்கி வழிந்தது.
“அவ மெடிசன் ஜாயின் பண்ணதும் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா அண்ணி.. அதுவும் மெரிட்’ல! அப்படியே அவளைத் தூக்கிக் கொஞ்சி சுத்தணும் போல இருந்தது. அவ டென்த் படிச்சுக்கிட்டு இருக்கப்ப ஒரு நாள் கோவில்ல என் கிட்ட சொன்னா.. நான் இனிமேல் அவரேஜ் ஸ்டுடென்ட்டா இருக்க மாட்டேன் அண்ணி. நல்லா படிப்பேன். நீட் எக்ஸாம் எழுதுவேன். டாக்டர் ஆகி காட்டுவேன்னு.. அதே மாதிரி இப்ப நல்லா படிச்சு மெடிசின் சேர்ந்துட்டா. எனக்கு அவ்ளோ சந்தோஷம் என் கிருஷ்ணாவை நினைச்சு” முகத்தில் புன்னகை வாடாமல் பேசினாள் மலர்.
“அவளுக்காக இந்த முடிவெடுத்ததுல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல அண்ணி. ஊரும் உறவும் என்ன வேணும்னாலும் பேசட்டும். எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலை இல்லை. எனக்கு என்னோட கிருஷ்ணா முக்கியம்” என்றாள் மனதார.
“யாரும் யாருக்காகவும் தன்னோட தாய்மையை தாமதப்படுத்துற அளவுக்கான முடிவு எடுக்க மாட்டாங்கடா தேனு. ஆனா நீ எடுத்திருக்க. உண்மையாவே என் தேனு கிரேட்” என்று நெகிழ்ந்த குரலில் சொன்னாள் கவி.
பதிலுக்கு மலர்ந்து சிரித்த தேன்மலர் “என்னோட அண்ணியும் கிரேட் தான். என் வாழ்க்கைக்காக அவங்களோட வாழ்க்கையை என்னோட மாஜி குடிகார அண்ணனோட சகிச்சுக்கிட்டவங்க ஆச்சே.. அப்படிப் பார்த்தா நீங்க என்னை விட க்ரேட் அண்ணி” என்றாள் உள்ளார்ந்த அன்புடன்.
இப்போது கவி திவாகரனிடம் சற்று நெருங்கி இருந்தாள். அவனின் மாற்றம் அவளிடமும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
“இப்ப உங்க அண்ணன் தான் மாறிட்டாரே..” என்றவளின் குரல் கரகரத்து கிடந்தது.
“ஹ்ம்ம்.. இப்பல்லாம் ஐயா சின்சியர் சிங்காரமா தான் இருக்கான்..” என்றான் தேன்மலரும்.
இருவருமே நெகிழ்ந்து உணர்ச்சி வசப்பட்டிருந்தனர்.
ஆனால் அவர்களின் பேச்சை கேட்டிருந்த கிருஷ்ணாவோ, உணர்வுகளின் மிகுதியில் உடைந்து போயிருந்தாள்.
அது மட்டுமல்லாமல், அலைபேசியில் இருந்த அமுதனுக்கும் கவி கேட்டவையும் மனைவி பேசியவையும் எல்லாம் காதில் விழ, அதிர்ந்து திகைத்து, அலைபேசியை தாங்கி இருக்கும் தங்கையின் நிலை என்னவோ என்று நடுங்கி அந்த சிறிது நொடிகளில் அவ்வளவு உணர்வுப் போராட்டம் அவனுள்.
“கிருஷ்ணா.. கிருஷ்ணா.. கிருஷ்ணா…”
“………..”
அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
“கிருஷ்ணாம்மா…” என்று பதறி அழைத்தான் அமுதன்.
“……..”
“கிருஷ்ணா…. அண்ணா பேசுறது கேக்குதாடா…” என்று அமுதன் பதகளிப்புடன் தொடர்ந்து குரல் கொடுக்க, அழைப்பு துண்டிக்கப் பட்டதற்கான அறிகுறியாக திரையில் ஒளி குறைந்திருந்தது. அமுதனின் நெஞ்சதிலும் ஒளி குறைந்திருந்தது.
குழந்தை குறித்து கவி கேட்டதும் மலர் பதில் சொன்னதும் தங்கையின் காதில் விழுந்திருக்குமோ என்று துடித்துப் போனான்.
நெஞ்சை கையால் அழுத்திக் கொண்டவன் மீண்டும் தங்கைக்கு அழைப்பு விடுத்தான்.
கண்ணில் வழிந்த கண்ணீரைக் கூட துடைக்கத் தோன்றாமல் அதிர்வின் உச்சத்தில், உணர்வுகள் மடிந்த நிலையில் இரண்டாக ஒடிந்து மாடிப் படிகளில் தொப்பென்று அமர்ந்து விட்டாள் கிருஷ்ணா.
தன் செவிகளில் விழுந்த வார்த்தைகளை அவளால் நம்ப முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை!!
தன்னால் தானா…?
தனக்காகத் தானா…?
அண்ணி இந்த இரண்டரை ஆண்டு காலமாக கருவுறாமல் இருப்பது தன்னாலா?
எனக்குத் தாயாக விளங்க வேண்டும் என்று அவளின் தாய்மையை தள்ளி வைத்திருக்கும் பேரன்பை எப்படி எடுத்துக் கொள்வது என்றே அவளுக்குப் புரியவில்லை!
நெஞ்சமெல்லாம் ரணமாய் வலித்தது. தொண்டை அடைத்தது.
அதீத அதிர்ச்சியை தாங்க வியலாமல் மூச்சு முட்டியது.
இதயத்தை குற்ற உணர்வும், தாங்கொண்ணா துக்கமும் அழுத்த கண்ணில் நீர் மல்கியது.
இத்தனை நாட்களும் ஊரார் உறவினர் ஏச்சுப் பேச்சினை எல்லாம் கண்டு கொள்ளாது, அவைகளை புறந்தள்ளி, அனைத்தையும் தாங்கிக் கொண்டு தாய்மையடையாமல் இருக்கும் அண்ணியின் பாசத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
தங்கள் வீட்டில் சின்னஞ்சிறு மழலையின் குரல் கேட்காமல் இருப்பதற்கும் நானே காரணம்!
எல்லாவற்றிற்கும் அவளே.. அவள் ஒரு ஒருவளே காரணம்!
அத்தனை நாட்களும் அண்ணியின் பாசத்தில் மூழ்கி அவளோடு உயிர் சொந்தமாக நெருங்கியதெல்லாம் இப்போது மனதிற்குள் சொல்ல முடியாத உணர்வைத் தந்தது.
மொத்தமாக உடைந்தாள் கிருஷ்ணா. சத்தமே இல்லாமல் குலுங்கி அழுதவள், கையில் இருந்த பனிக்கூழ் உருகி வழிந்ததும் தான் சுய நினைவிற்கே வந்தாள்.
அண்ணன் விடாது அழைத்துக் கொண்டிருப்பதிலேயே தனக்கு அனைத்தும் தெரிந்து விட்டதென அவனுக்கு தெரிந்து விட்டது என்பதை புரிந்து கொண்டவள், அழைப்பை ஏற்காமல் துண்டித்தாள்.
கையோடு அலைபேசியை அணைத்தவள், எழுந்து கொண்டாள். கையில் இருந்த பனிக்கூழ்களை அங்கேயே வைத்து விட்டு சத்தம் எழுப்பாமல் அப்படியே கீழே வந்தவள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியே வந்து காரிற்குள் ஏறி அமர்ந்து கொண்டாள்.
“கிளம்பலாமா பாப்பா?” என்று சேது கேட்டதற்கு ஒற்றை தலையசைப்பை மட்டும் கொடுத்தாள்.
வீட்டிற்கு வந்ததும் விறுவிறுவென அறைக்குள் சென்று மறைந்தவள், கட்டிலின் கீழ் சாய்ந்து முழங்காலில் முகம் புதைத்து கேவலுடன் அழ ஆரம்பித்தாள்.
மனதினோரம் எழுந்த வலியும் அவளின் கண்ணீரைப் போல் அடங்கவே இல்லை!
அண்ணியின் அன்பை எண்ணி எண்ணி, அடங்காத அழுகை கிருஷ்ணாவிடம்!!
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.