மண்வாசம் 26 :
தென்னை ஆராய்ச்சி நிலையம்!
காணும் திசையெங்கும் அரிய வகை மரங்களும் மலர்ச்செடிகளும் அணிவகுக்க, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட தென்னை ஆராய்ச்சி நிலையத்தையும் மண் பரிசோதனை நிலையத்தையும் தன்னுள் கொண்டிருந்தது அந்த பெரிய கட்டிடம்.
அங்கு தான் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாள் அரும்பு.
ஆம்! அவள் கனவு கைசேர்ந்திருந்தது. சேர்த்திருந்தான் அவள் மாமன்.
சில நிமிடங்களில் அவள் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை எடுத்துக்கொண்டு அவள் அறைக்குத் திரும்பினாள் அரும்பு. அதை கோப்பில் வைத்துவிட்டு அவள் இருக்கைக்கு வர, அதில் அவளை அமரவைக்க அவள் மாமன் மேற்கொண்ட செயல்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் உடல் சிலிர்த்தது.
இருக்கையின் கைப்பிடியை அழுந்தப் பற்றினாள். அவள் மனம் அந்நிகழ்வை மெல்ல எண்ணியது.
அன்று நேர்காணலில் தேர்வாகி இருந்தும் குறிப்பிட்ட ஒரு தொகையை அளிக்காது அவளுக்கான பணி நியமனத்தை பெற முடியாது என்ற நிலை. படிப்பு மட்டும் போதாது பணம் கொடுத்தால் தான் பணி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது அவள் தன் கனவையே துறக்க இருந்த சமயம், பெரிதோர் தொகையை அளித்து கட்டாயப்படுத்தி அவளை வேலையில் சேர்த்திருந்தான் குலசேகரன்.
“ஏது மாமா இவ்வளவு பணம்?” கடன் வாங்கி வைத்துவிட்டானோ என்ற பயத்தில் கேட்க,
“எல்லாம் உன்ர பணந்தான்” என்றிருந்தான் குலசேகரன்.
வருமானம் அனைத்தும் அவள் கட்டுப்பாட்டில் இருக்க இது எங்கிருந்து வந்ததென்று புரியாது பார்த்தாள். அவள் பார்வை அறிந்து,
“அரும்பு! நான் என்ர பதினாரு வயசுல இருந்து சொந்தக் காலுல நிக்குறவன். என்ர ஒருத்தனுக்கு செலவுன்னு பெருசா எதுவும் இருந்ததில்ல. என்ர சம்பாத்தியம் எல்லாமே சேமிப்புல தான் போய் சேரும். மூணு வருசத்துக்கு முன்னால காங்கேயம் காளைகள மட்டும் ஒரு லச்சத்துக்கு வித்தேன். சொசைட்டில சேமிப்பு கணக்கு தொவங்கி எனக்கு வர்ற வருமானத்தை எல்லாம் உனக்கும் என்ர அக்காளுக்கும் தனியா பிரிச்சு அதுல போட்டுட்டு வந்தேன். உன்ர கல்யாணத்துக்கு தாய் மாமன் சீர்னு தனியா எடுத்து வெச்சிருந்ததுதேன் இந்தப் பணம். இதையெல்லாம் இதுவரைக்கும் நான் உன்ரகிட்ட சொன்னதில்ல” என, வியப்பாய் இருந்தது அரும்பிற்கு.
“இதையெல்லாம் நீ முன்னாலையே சொல்லி இருக்கலாமே மாமா. அன்னைக்கு எங்கப்பத்தா உன்னைய எப்படி மட்டு மரியாதை இல்லாம பேசுச்சு. நீ இவ்வளவு சேத்து வெச்சிருக்குறது தெரிஞ்சிருந்தா உன்ரமுன்னால ஆரும் நின்னிருக்க மாட்டாங்க” என்றாள்.
“மனுசனுக்குத்தேன் மதிப்பும் மருவாதையும் கொடுக்கோணுமே தவிர அவன் கிட்ட இருக்குற சொத்துபத்துக்கு கொடுக்க கூடாது. ஆனா உங்கூட்டுல அப்படியா?” என்றவன்,
“இப்போவும் என்ர கிட்ட பெருசா எதுவும் இல்ல எலிக்குட்டி. இதெல்லாம் நான் உனக்கும் எங்கக்காளுக்கும் சேர்த்து வெச்சது. என்ர அக்காளுக்கு ஒரு பிடிமானம் வேணும்னு நெனச்சேன். அது பேருல சொத்தோ பணமோ இருந்தாத்தேன் கடைசி காலத்துலயாவது உங்கப்பத்தா எங்கக்காள மதிக்கும்” என, அரும்பிற்கு நா எழவே இல்லை.
“இருந்தாலும் இத்தனை பணத்தை கொடுத்து இந்த வேலைய வாங்கி இருக்கக் கூடாது மாமா. படிச்ச படிப்புக்கு என்ன பிரயோசனம். மனசு ரொம்ப வலிக்குது” என்றாள், வேர்வை சிந்தி உழைத்த காசை சாதாரணமாய் எவருக்கோ தூக்கிக் கொடுத்த வருத்தத்தில்.
“அது லஞ்சம் வாங்குறவன் யோசிக்கோணும். இன்னொருத்தன் வயித்துல அடிச்சு சம்பாரிக்கோணும்னு நெனைக்குறான் பாரு, அவன் கோடி கோடியா சொத்து சேத்து வெச்சாலும் சல்லி காசுக்கு பிரயோசனம் இல்ல. புள்ள குட்டிகளுக்கு புண்ணியத்தை சேத்து வைக்குறதுதேன் உண்மையான சொத்து” என்றவன்,
“நீ இதைய வேண்டாம்னு சொல்லிட்டு வந்திருந்தாலும் இன்னொருத்தன் அந்த வேலைக்கு வந்திருப்பான். இந்த வேலை கெடைக்க இவ்வளவு பணத்தை தூக்கிக் கொடுத்திருக்கோமே இதைய வெச்சே நம்மளும் நாலு காசு பாக்கோணும்னு நெனச்சு, வர்ற ஏழை பாழைக கிட்ட அவன் பணம் பறிக்க பாத்தா?” என்று கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள் அரும்பு.
“உன்னையோட்டமே அல்லாரும் சேவை செய்யோணும்னு நெனச்சு வர்றதில்ல. உனக்கு இந்த வேலை கெடைச்சா நாலுபேர் நல்லா இருப்பாங்க. நீ போன பணத்தை பத்தி எல்லாம் கவலை படாத. ஒரு நல்ல விசயத்துக்கு போடுற முதலீடா நெனச்சுக்கோ. நம்ம எண்ணம் நல்லா இருந்தா போனதெல்லாம் இன்னொரு வழில நமக்கு வந்து சேரும்” என்று தைரியம் ஊட்டினான்.
இருந்தும் மனம் கேட்கவில்லை அரும்பிற்கு.
“நாந்தேன் படிக்கலை ஆனா நீ நல்ல நெலமைக்கு வரோணும் அரும்பு. எனக்கு மருவாதை கொடுக்காதவங்க எல்லாம் உனக்கு மருவாதை கொடுத்து பேசுறதை பாக்குறதுதேன் எனக்கு சந்தோசம். அந்த சந்தோசத்துக்கு முன்னால இந்த பணங்காசெல்லாம் பெருசில்ல” என்றான்.
தன் கனவை தான் மட்டும் சுமக்கவில்லை தன்னவனும் சேர்ந்து சுமக்கிறான் என்றறிந்து கண்களில் நீர் பெருகப் பார்த்திருந்தாள் தன் மாமனை.
“மேடம்” என்ற குரலில் தன் சிந்தனை கலைந்து அரும்பு நிமிர்ந்து பார்க்க,
“மண் பரிசோதனை ரிசல்ட் வாங்க ஒருத்தர் வந்திருக்காருங். வெளிய வெயிட் பண்ண சொல்லிருக்கேனுங்” என அங்கு வேலை பார்க்கும் ஆள் சொல்லவும்,
“ரிப்போர்ட் வந்ததும் அவரை உள்ள வர சொல்லுங்க” என்றுவிட்டு அவள் பணியைத் தொடர்ந்தாள்.
மாறனின் வீட்டு வாசலின் முன்பு நின்றிருந்தார் சாரதா.
காலம் கனிந்தால் அனைத்தும் மாறும் என்று சாரதா காத்திருக்க, காலம் என்னவோ கனியாது காயாகவே இருந்தது.
ரங்கநாயகி வேறு அவருக்கு அழைத்து,
“என்ன சாரதா நீ இருக்குற தகுரியத்துல தானோ தமிழை அனுப்பி வெச்சேன். என்ர மவன் சொல்ல மீற முடியாம நாந்தேன் ஒத்தைல கெடந்து அடிச்சிட்டு இருக்குறேன்னா நீயாச்சும் ஒரெட்டு போய் பாக்குறது இல்லையா?” என்று வருத்தமாய் வினவ,
“இல்லைங் என்ர ஊட்டுக்காரரு..” என்று சாரதா தயங்க,
“உன்ர ஊட்டுக்கு வாழவந்த புள்ள. உன்ர குடும்பத்து வாரிசை சுமக்குது. தாயில்லாத புள்ளய நீயும் ஒதுக்கி வெச்சுடாத சாமி” என குரல் கம்ம பேசிவிட்டு வைக்க, மனமெல்லாம் ரணமானது சாரதாவிற்கு.
இத்தனை நாட்களாய் பல்லைக் கடித்து பொறுத்துப் பார்த்தவர் இதற்குமேலும் முடியாது கந்தசாமிக்கு தெரியாமல் மாறனின் வீட்டிற்கே கிளம்பி வந்துவிட்டிருந்தார்.
அந்நேரம் அருந்தமிழ் வாந்தி எடுத்த சோர்வில் நின்றிருக்க, அவளுக்கு குடிக்க வெந்நீர் வைத்துக் கொடுத்த மாறன் அவளை இன்று பள்ளிக்கு விடுப்பு எடுக்குமாறு தெரிவித்துவிட்டு காய் நறுக்கிக் கொண்டிருந்தான்.
அவன் காய் நறுக்குவதை வேடிக்கை பார்த்திருந்த தமிழ் மெல்லத் திரும்ப அங்கு சாரதா நின்றிருப்பதை கண்டு திக்கு முக்காடிப் போனாள்.
“அத்தை” என அவரருகில் வந்து கையை பற்றிக் கொள்ள,
“நல்லா இருக்கியா கண்ணு” என்று தமிழிடம் கேட்டவர் மாறனைப் பார்க்க, உடனே கத்தியை தனக்கு பின்னால் மறைத்தான்.
“என்னடா காய் எல்லாம் நறுக்குறயோட்டம்” என்றவர் மருமகளிடம் திரும்பி,
“இவன் எனக்கு பாத்திரந்தேன் கழுவிக் கொடுத்தானே தவற ஒரு நாளும் காய் நறுக்கி கொடுத்ததில்ல ம்மா. இப்போ பாரு உனக்கு என்னவெல்லாம் பண்ணுறான்னு” என்றார்.
தமிழ் சிரிப்பை அடக்க,
“நீங்க பேசிட்டு இருங்க நான் இளநி வெட்டிட்டு வர்றேன்” என்று மாமியாரையும் மருமகளையும் தனித்து விட்டு அங்கிருந்து நகர்ந்து கொண்டான். மாறன் சென்றதும்,
“நான் வேண்டாம்னு தான் சொன்னங் அத்தை அவரு தான் கேக்காம..” என தமிழ் தயங்க,
“பண்ணட்டும் விடு கண்ணு. நம்மூட்டுல வேலை செய்யுறதுக்கு என்னோ. ஒரு நாள் நீ வீடு கூட்டு. மறுநாள் அவன் கூட்டட்டும். ஆரு கூட்டுனா என்னோ வீடு பளிச்சுன்னு ஆனா சரி” என்று சொல்ல, புன்னகைத்த தமிழ்
“மாமா வரலையாங் அத்தை” என்று கேட்க,
“உங்க மாமனுக்கு தெரியாமத்தேன் நானே வந்தங்கண்ணு” என்று சொல்லவும் அவள் முகம் நொடியில் வாடிப்போனது. அதற்குள் மீண்டும் குமட்டத் துவங்க அருந்தமிழ் எழுந்து செல்லவும் சாரதாவும் அவள் பின்னால் சென்றார்.
சில நிமிடங்களில் தன்னை சுத்தப் படுத்திக்கொண்டு அவரோடு வந்தமர்ந்தாள். சோர்வாய் அமர்ந்திருக்கும் மருமகளையே பார்த்தவர்,
“இந்த மாற நேரத்துல நான் உன்ர கூடயே இருந்து பாத்துக்கோணும். ஆனா இப்படி தனியா கஷ்டப்பட விட்டுப்போட்டேன். இந்த அத்தைய மன்னிச்சிரு தமிழு” என்று கண்கலங்கியபடி அவள் தலையை வருட,
“என்னங் அத்தை என்ரகிட்ட போய் பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு. நீங்க என்னைய பாக்க இங்க வந்ததே போதுங் எனக்கு” என்றவள்,
“நான் பண்ணுன தப்புக்கு அவரும் என்ரகூட சேர்ந்து தண்டனை அனுபவிக்குறாரு. உங்க மகனை உங்ககிட்ட இருந்து பிரிச்சுட்டேன்னு நெனைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்குதுங். என்னைய மன்னிச்சிருங் அத்தை” என வருந்த,
“விடு கண்ணு. எல்லாம் சீக்கிரம் சரியா போய்டும். பேரனோ பேத்தியோ வரட்டும் அப்பறம் பாரு, கௌரவத்தை கட்டிகிட்டே சுத்துற அவங்க அப்பாரையும் அப்புச்சியையும் கடவாய் கடவாயா இடிக்க சொல்லோணும்” என்று தமிழை இலகுவாக்க முயன்றார்.
“மாறன் உன்னைய நல்லா பாத்துக்குறானா கண்ணு?” என்று கேட்க, ஆம்பலென விரிந்த அருந்தமிழின் முகமே சொல்லியது பதிலை.
“மாறன் என்ர வயித்துல இருந்தப்போ அவங்க அப்பாதேன் வீடு தொடைப்பாரு. என்ர துணி மணியெல்லாம் தொவச்சு போடுவாரு. என்னைய அப்படி தாங்குவாரு. இவனும் அப்படியே அவங்க அப்பாவோட்டம்” என்று சாரதா பேசிக் கொண்டிருக்க, வெளியே கேட்ட சத்தத்தில் மாறன் தான் வந்து விட்டானோ என்று தமிழ் எட்டிப் பார்த்தாள்.
அங்கே கந்தசாமி வருவது தெரிய,
“மாமா வர்றாருங் அத்த” என்று சாரதாவிடம் சொல்ல,
‘ஐயோ இந்த மனுஷன் எங்க இங்க வந்தாரு’ என நினைத்து,
“என்ர மவன் வந்தா சொல்லிரு மருமவளே” என்றுவிட்டு பின்வாசல் வழியே ஓட்டமெடுத்தார் சாரதா. அருந்தமிழ் செய்வது புரியாது வெளியே வர, கந்தசாமி முன்னேறாது முன்வாசலிலேயே நின்றிருந்தார்.
“வாங்க மாமா” என அவரை அன்போடு வரவேற்க,
மகனாய் இருந்திருந்தால் மட்டை மில்லிற்கு வாடகை வாங்க மட்டுமே வந்தேன் என்று விரைப்பாய் சொல்லியிருப்பார். ஆனால் மருமகளின் முகத்தை பார்த்தவருக்கு எதுவும் மறுத்துப் பேச முடியவில்லை. உள்ளே வந்து நாற்காலியில் அமர,
“இருங் மாமா மோர் எடுத்துட்டு வர்றேனுங்” என்று தமிழ் சமையலறைக்குள் சென்றுகொள்ள, வீட்டை சுற்றியும் பார்வையை ஓட்டினார் கந்தசாமி.
அவர் பிறந்ததில் இருந்து பார்க்கும் அதே ஓட்டு வீடுதான் என்றாலுமே அதை ரசித்துப் பார்க்கும்படி அவ்வளவு அழகாய் அலங்கரித்திருந்தாள் அருந்தமிழ்.
சில நிமிடங்களில் அவள் மோரோடு வரவும் அதை வாங்கிக் கொண்டவர்,
“இன்னைக்கு பள்ளிக்கூடத்துக்கு போகலையா” என்று வினவ,
“கொஞ்சம் உடம்புக்கு முடியலைங் மாமா. அவரும் வீட்லையே இருக்க சொல்லிட்டாருங்” என்று சொல்லவும் அவர் கையில் வைத்திருந்த டம்ளர் லேசாய் சாய அதிலிருத்த மோர் அவர்மீது சிந்தியது. உறவென்று அத்தனை பேர் இருந்தும் அருந்தமிழை இப்படி தனியே விட்டுவிட்டோமே என்று வருந்தினார்.
“பாத்துங் மாமா” என அவரருகில் வந்தவள் டம்ளரை கையில் வாங்கிக்கொள்ள, கந்தசாமி அங்கிருந்து எழுந்து கை கழுவி வரச் சென்றார்.
அந்நேரம் பார்த்து இளநீரோடு உள்ளே வந்த மாறன்,
“அம்மா எங்கைங் தமிழ்?” என தமிழிடம் கேட்க, அவள் உடனே தூணின் அருகில் நின்றிருந்த கந்தசாமியை பார்க்க, அவரோ அங்கிருந்தபடி மாறனைப் பார்த்திருந்தார்.
தமிழ் இடவலமாய் தலையசைத்து கண்களால் மாறனுக்கு செய்தி சொல்ல, அது புரியாத அவனோ
“அதுக்குள்ள போய்ட்டாங்களா? ஏன் என்ர கிட்ட கூட சொல்லிக்காமையே போய்ட்டாங்க. ஆனா வாசல்ல அவங்க செருப்ப பார்த்தனுங்களே” என,
“எ.. என்னங்க நான் மோர் கலக்கி வெச்சிருக்கேன் வாங்க உள்ளார போய் குடிச்சிட்டே பேசலாம்” என தமிழ் மாறனை உள்ளே அழைக்க,
“தமிழ்! உங்ககிட்ட எத்தனை வாட்டி சொல்லுறதுங்க. ரெஸ்ட் எடுக்காம இந்த வேலை எல்லாம் நீங்க எதுக்கு பண்ணுறீங்க. நான் என்னத்துக்கு இருக்குறேன்” என,
“என்னங்க.. மாமா” என அவனுக்கும் பின்னால் பார்த்தபடி சொல்ல,
“எங்கப்பாவா! அவரும் எங்கம்மாவுக்கு இது மாற உதவி எல்லாம் செஞ்சிருக்காருங்ளாமா. அம்மா சொல்லிருக்காங்க. இப்போவும் நான் இல்லாத நேரமா பாத்து செஞ்சு கொடுப்பாரா இருக்கும்” என,
“க்கும்..” என்ற குரலில் மெல்லத் திரும்பிய மாறன் அங்கிருந்த தந்தையைக் கண்டு மடித்துக் கட்டியிருந்த வேட்டியை கீழே இறக்கிவிட்டான்.
கந்தசாமி இந்த வீட்டில் கால் வைப்பார் என்று அவன் கனவிலும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை.
“அப்…பா! எப்..ப வந்தீங்” என்று கேட்க, அவர் மகனை முறைக்க
“இருங் ப்பா இப்ப வந்திர்றேன்ங்” என சமையல் கட்டுக்குள் புகுந்து கொண்டான்.
“நீங் உக்காருங் மாமா. நான் வேற மோர் கொண்டுட்டு வர்றேன்ங்” என்று தமிழும் சமையலறைக்குள் சென்றுகொள்ள, அங்கு முழித்துக் கொண்டு நின்றிருந்த மாறன்
“ஏங்க தமிழ்! அப்பா வந்திருக்காருன்னு சொல்லுறது இல்லைங்களா” என்று தமிழிடம் கேட்க,
“நீங்க தானங்க நான் சொல்ல வந்ததை கேக்காம பேசிட்டே இருந்தீங்க” என்று சிரித்தாள் அவள்.
“என்னைய மாட்டி விட்டுட்டு நீங்க சிரிக்குறீங்களா” என,
“டேய் மாறா” என்று வெளியே ஒலித்த கந்தசாமியின் குரலில்
“சொல்லுங் ப்பா” என்று அவர் முன் வந்து நின்றிருந்தான்.
“மருமகள தனியா விட்டுப்போட்டு மட்ட மில்லுக்கு எல்லாம் வரவேண்டாம். இங்கயே இருந்து கணக்கு வழக்கெல்லாம் பாத்துக்கோ” என, சரியென தலையசைத்தான்.
“எத்தனை நாளைக்கு இப்படியே இருக்குறதா உத்தேசம்? உன்ர மாமனாரை பாத்து பேசுறது இல்லையா. அவங்க அப்பா கூட இருக்கோணும்னு தமிழு ஆசைப்படாதா. பொறுப்பில்லாம சுத்திட்டு இருந்தா என்ன அர்த்தம். சட்டுபுட்டுன்னு பேசி உங்களை ஏத்துக்க வைக்க பாருங்க” என்றார்.
மாறன் தன் தந்தையையே பார்க்க, அருந்தமிழ் சமையல் அறையில் இருந்து மெல்ல எட்டிப் பார்த்தாள்.
“மொதல்ல ஆறுச்சாமி கிட்ட போய் பேசு. அவரு ஏத்துகிட்டாத்தேன் நம்மூட்டுக்குள்ளயும் வரமுடியும்” என,
“சரிங் ப்பா” என்றான்.
அன்று ஒரு வேகத்தில் தன் ஒரே மகனை வீட்டிற்குள் வரக் கூடாது என்றுவிட்டார். மகனை பிரித்து இருக்கவும் முடியவில்லை. அதற்காக அவர்களை ஏற்றுக் கொண்டால் கடைசி வரையுமே ஆறுச்சாமிக்கு தமிழ் மீது கோபம் குறையாது போகலாம் என்று தோன்றவுமே தான் அவரும் இத்தனை நாளாய் விலக்கி வைத்தது.
நாளை வளைகாப்பு என்று வந்துவிட்டால் ஆறுச்சாமி ஏற்கவில்லை என்றாலும் கந்தசாமியால் அவர்களை ஏற்காது இருக்க முடியாது. அதற்குள் அனைத்தையும் சரி செய்துவிட வேண்டும் என்று எண்ணித்தான் அவரே பண்ணை வீட்டிற்கு வந்திருந்தார்.
“மருமகள நல்லா பாத்துக்கோ” என மாறனின் தோளை தட்டி சொல்லிவிட்டு தமிழிடமும் விடைபெற்று அங்கிருந்து சென்றார்.
பாரம்பரிய விதைகளைப் பற்றிய ஆய்வு அறிக்கையை பார்த்துக் கொண்டிருந்தாள் அரும்பு.
அறைக்குள் ஆள் நுழையவும் அவள் நிமிர்ந்து நோக்க, அரும்பை அங்கு எதிர்பாராது அதிர்ச்சியில் நின்றிருந்தான் சேதுராமன்.
அவனை நேருக்கு நேர் பார்த்தவள்,
“சொல்லுங்க என்ன விஷயம்” என,
“கள்ளக்கா சாகுபடி செஞ்சுதுங் மேடம். சொல்லிக்குற அளவுல மகசூல் இல்லைங். அதான் மண் பரிசோதனை பண்ணலாம்னு வந்தனுங்” என்று தன் கையில் வைத்திருந்த அறிக்கையை அவளிடம் கொடுத்தான்.
அவன் தயங்கியபடியே அமராது நின்றிருக்க,
“உக்காருங்க” என்றவள் மண் பரிசோதனை அறிக்கையை ஆராய்ந்தாள். சில நிமிடங்களில் அதை மூடி வைத்துவிட்டு,
“பயிர் சுழற்சி கேள்வி பட்டிருக்கீங்களா?” என, அவன் புரியாது பார்க்கவும்
“ஒரே பயிரை விதைக்காம சுழற்சி பண்ணி விதைக்கோணும். இப்போ எள்ளு, கடலை எல்லாம் பாத்தீங்கனா மண்ணுல இருக்குற எல்லா சத்தையும் உறிஞ்சிரும். இது வெளச்சதும் அடுத்த போகத்துக்கு பச்சை பயிரு, மக்காச் சோளம் இப்படி பயிரு வகைகள வெளச்சா மண்ணுக்கு அதுமூலம் திரும்ப சத்தும் வந்துடும். களை செடி வளர்ச்சியும் குறையும்” என்றாள்.
“மண்ணுல எதுவும் பிரச்சனை இல்லைங்களே மேடம்”
“மண்ணுல எந்த பிரச்சனையும் இல்ல. நீங்க வேணும்னா கொங்க மழை கோடை மழை பாத்து பசுந்தாள் ஒட்டி விடலாம். அப்பறம் பயிரு போட்டீங்கனா மகசூல் பாதிக்காது”
“எந்த மாற பயிர் சுழற்சி பண்ணுறதுங் மேடம்?”
அவனது மேடம் என்ற அழைப்பில் அரும்பிற்கு சிரிப்பு தான் வந்தது.
“காய்கறி பயிருக்கு அடுத்து தீவனப்பயிரு போடலாம். ஒரு விதையிலை செடியை தொடர்ந்து இருவிதையிலை செடி போடலாம். இப்போ கள்ளக்கா, கடுகு போட்டீங்கனா அடுத்து கோதுமை, கம்பு போடலாம். இப்படி நிறைய இருக்கு. உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் தயங்காம நீங்க வந்து கேக்கலாம்” என்றாள்.
அவள் தயங்காது உதவி செய்வது அவனுக்குத் தான் குற்றவுணர்வாய் இருந்தது. மண்டபத்தில் வைத்துப் பேசியது எல்லாம் அவன் நினைவில் நிற்க, கூனிக் குறுகிப் போய் அமர்ந்திருந்தான் அவள் முன்பு.
அவன் எழுந்துகொள்ள அரும்பு அவள் பணியைத் தொடர, வெளியே சென்றவன் மீண்டும் அவ்வறைக்குள் வந்து
“அரும்பு” என்றழைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“நான் உனக்கு பண்ணுனது எல்லாம் முடிஞ்சா என்னைய மன்னிக்கப் பாரு” என்றுவிட்டு சென்றான்.
தன் பணிகளை எல்லாம் முடித்துக்கொண்டு மாலைப் பொழுதில் தன் இல்லம் திரும்பினார் கந்தசாமி.
மனையாளை தேடிக்கொண்டு உள்ளே வர, சற்றுமுன் கலையரசன் கொண்டு வந்து கொடுத்த கடிகாரத்தை கையில் வைத்துப் பார்த்திருந்தார் சாரதா.
கந்தசாமியைக் கண்டதும் கடிகாரத்தை மறைத்தவர்,
“அங்க காட்டுச் சாளைல எம்புள்ள கெடந்து என்ன கஷ்டப்படுதோ. மருமகப்புள்ள ஒத்தைல என்ன பண்ணுதோ? வாயும் வயிறுமா இருக்குற நேரத்துல பக்கத்துல வெச்சு பாத்துக்க நம்மனால முடியுதா ஒன்னா. நாளைக்கு பேரப்புள்ள வந்து நாக்கை புடிங்கிக்குற மாற கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்” என்று புலம்பி முந்தானையை எடுத்து கண்களை துடைத்துக் கொண்டிருந்தார்.
“அதெல்லாம் உன்ர மவன் உன்ர மருமவள தாங்கு தாங்குனு தாங்குறான்” என்று கந்தசாமி போகிற போக்கில் சொல்ல,
“உங்களுக்கு எப்படிங் தெரியும்?” என்ற சாரதாவின் கேள்வி அவரை அங்கேயே நிறுத்தியது. பதில் சொல்லாது நகர முடியாது என்று புரிய,
“ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க” என்றவர்,
“ஆமா உன்ர செருப்பு மாறனூட்டுல கெடந்துச்சாமா! இந்த கவின் பய கொண்டாந்து நம்மூட்டு வாசல்ல போட்டுட்டு போறான். அங்கெப்படி போச்சு?” என்று கேட்க, திருதிருந்த சாரதா
“நாய் தூக்கிட்டு போய் அவனூட்டு வாசல்ல போட்டிருக்கும்ங்க” என்றார்.
“ஜோடியாவா…?”
“க்கும்ங்க..” என்று சமாளிப்பாய் புன்னகைத்தவர்,
“உங்க கடிகாரம் எங்கைங்க?” என்று கேட்க, மோர் சிந்தியபோது கடிகாரத்தை கழற்றி வைத்துவிட்டு கை கழுவிக் கொண்டிருந்தது நினைவில் வர அதை மாறனின் இல்லத்திலேயே வைத்துவிட்டு வந்ததை அறிந்தார் கந்தசாமி.
“எங்காச்சு தவறி விழுந்திருக்கும்” என்றுவிட்டு நகரச் செல்ல,
“இதுவா பாருங்க. நம்ம மாறனூட்டுல இருந்துச்சுனு இந்த கலையரசன் கொண்டாந்து கொடுத்தான்” என்றார் சாரதா.
மனையாளின் புறம் திரும்பியவர் அதை வாங்கிப் பார்க்க, அது அவருடைய கடிகாரமே. அமைதியாய் அதை கையில் கட்டிகொண்டு நகர,
“ஆமா உங்க கடிகாரம் எப்படிங்க அவ்வளவு தூரம் போச்சு?” என்றார் சாரதா விடாது,
“என்ன வெட்டியா நாயம் பேசிட்டு இருக்கற சாரதா. உருப்படியா எதாச்சும் வேலை இருந்தா உள்ளாரா போய் பாரு” என துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வேகமாய் உள்ளே சென்றுகொண்டார்.
‘மனசுல இத்தனை பாசத்தை வெச்சுக்கிட்டு இந்த வாய் சவடாலுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல’ என எண்ணி புன்னகைத்துக் கொண்டார் சாரதா.
வாசம் வீசும்..!
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.