நேரம் இரவு பத்தை கடந்து விட்டது.. இன்னும் அண்ணன் வரவில்லை என்ற கோபத்தில் மாறனின் வரவிற்காக காத்திருந்தாள் பவானி..
கோவிலுக்கு சென்று இசையின் அம்மாவையும் அழைத்துக் கொண்டு அரை மணி நேரம் தாமதமாகி ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..
கோமதி யார் என்று தெரியாதவர் வீட்டுக்கு வர மாட்டேன் என்று ஒத்துக்கொள்ளாமல் இருந்தார்.. பெண் பிள்ளையை ரோட்டில் வைத்துக்கொண்டு தனியாக இருக்க வேண்டாம் ஒரு இரவு மட்டும் தங்கள் வீட்டில் தங்கி விட்டு காலை உங்கள் முடிவை பார்த்துக் கொள்ளுங்கள்.. என்று ஒரு வழியாக கூறி மாறன் அழைத்து வந்து விட்டான்..
கோமதிக்கும் அது சரி என்று படவும் ஒரு இரவு மட்டும் தானே என்று நினைத்து அவர்களுடன் புறப்பட்டு சென்று விட்டார்..
ஆனால் அது மீண்டு வர முடியாத பந்தம் என அப்போது கோமதிக்கோ, இசைக்கோ தெரியவில்லை..
அண்ணனின் பைக் சத்தமும் அதனை தொடர்ந்து ஆட்டோ சத்தமும் கேட்டு பவானி கதவை திறந்து வெளியே வந்து பார்த்தாள்..
மாறனும் நட்டுவும் பைக்கில் இருந்து இறங்கவும் கோமதியும் இசையும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்..
ரோட்டில் வைத்து எதுவும் பேச வேண்டாம் என்று கதவை திறந்து விட்டு பவானி உள்ளே சென்றாள்..
மாறனை முந்திக்கொண்டு நட்டுதான் இவர்கள் யார் எங்கிருந்து அழைத்து வந்தார்கள் என்ற விவரத்தை பவானியிடம் கூறினான்..
பொதுவில் கூறியதால் இசை தற்கொலை செய்ய முற்பட்டதை கூற முடியாமல் போனது..
மூவருக்கும் மட்டும் தான் உணவு இருந்தது.. உடனடியாக மாவு இருக்கவும் இட்லி ஊத்தி அடுப்பில் வைத்து விட்டு.. மதியம் வைத்த காரக்குழம்போடு சட்னியும் வைத்து வீட்டுக்கு வந்தவர்களுக்கும் அண்ணனுக்கும் பரிமாறி விட்டு அவளும் உண்டதும் வேறு ஒன்றும் கேட்டுக் கொள்ளாமல் அவர்களுக்கான அறையை ஒழுங்குபடுத்தி கொடுதாள்..
அடுத்த நாள் காலை வழமை போல் பவானி நேரத்தோடு எழுந்து அண்ணனை வேலைக்கு அனுப்புவதற்காக காலை உணவையும் காபியும் தயார் படுத்திவிட்டு மீதம் இருந்த வேலைகளை செய்ய ஆரம்பிக்கும்போது தான் இசை எழுந்து வெளியே வந்தாள்..
மாறனும் வீட்டின் பின் கதவு வழியாக குளித்துவிட்டு வரும்பொழுது இசையும் கொட்டாவி விட்டுக்கொண்டு எதிரே வந்தவள் மாறன் மீது மோதி கீழே விழுந்தாள்..
“ ஐயோ சாரி, சாரி. நான் கவனிக்கல சார்..” என்று கீழே விழுந்தவளை பவானி வந்து தூக்கி விடவும் எழுந்தவள் மாறனுடன் மோதியதற்காக மன்னிப்பு கேட்டும் அவன் அவளை முறைத்து விட்டு “ கொஞ்சம் கண்ணை திறந்து எதிரில் வர்றவங்களை பாருங்க.. எப்பவுமே கண்மூடித்தனமான வேலை பார்க்கிறதே பழக்கம் போல..” என்று அவளுக்கு திட்டிவிட்டு அவளை கடந்து சென்று விட்டான்..
அவன் தன்னை பார்த்ததிலிருந்து ஏன் எரிந்து விழுகிறான்?.. என்று தெரியாமல் வீட்டின் பின் வழியாக அவளும் சென்று முகத்தை கழுவி விட்டு வரவும் அவளுக்கும் கோமதிக்கும் காபி எடுத்து வந்து பவானி கொடுத்தாள்..
வெளியே யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு பவானி வெளியே வந்தாள்..
வாசலில் திருநா நின்றான்..
பவானிக்கு திருநாவை யார் என்றே தெரியவில்லை..
அவனும் அதிகம் வெளியே செல்வதில்லை.. இவளும் அதிகம் வெளியே செல்வதில்லை..
அதனால் ஒருவருக்கு ஒருவர் யார் என்று தெரிந்து கொள்ளவில்லை..
“ யார் நீங்க?..” என்றாள் பவானி..
அவனுக்கும் மாமா மகள் ஒன்று இருக்கிறாள் என்று தெரியும்..
அவள் தானோ என்று நினைத்து “ பவானியா?. நீங்க.. நான் மாறன் அத்தானை பாக்கணும்.. ” என்றான்..
வயதுக்குத் தகுந்த எதையும் அவன் செய்வதில்லை.. அதனால் அவனுக்கு துக்கத்தை கூட மறைக்க தெரியாமல் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது..
பவானிக்கு அவனை பார்க்கவே பாவமாக இருந்தது தன்னையும் கேட்டான்.. அண்ணனையும் உறவு முறை சொல்லி அழைக்கிறான் யார் என்று அவளுக்கு தற்பொழுது தான் பிடிபட்டது..
“ திருநாவா?.. நீங்க.. ” என்றாள்..
சொந்தங்களை கூட யார் என்று பெயர் கேட்டு தெரிந்து கொள்ளக்கூடிய நிலைமை அவர்களுக்கு..
“ ஆமாங்க பவானி கொஞ்சம் சீக்கிரம் அத்தானை வரச்சொல்லுங்க அவசரம்..” என்றான்..
“கொஞ்சம் இருங்க அண்ணாவை வரச் சொல்றேன்..” என்று கூறி அண்ணனை அழைக்க சென்றாள் பவானி..
அவள் உள்ளே அழைக்காததால் அவனும் உள்ளே செல்லாமல் வாசலிலேயே காத்திருந்தான்..
சொந்த தாய்மாமன் வீட்டுக்கு கூட உரிமையாக செல்ல முடியாத அவல நிலையை அவனுக்கு அவன் தந்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் அதை அவன் அனுபவிக்கிறான்..
தற்போது தான் குளித்துவிட்டு அறைக்கு சென்ற மாறனை அழைத்தாள் பவானி..
“ அண்ணே. அண்ணே..” என்றாள்..
பவானி மாறனை அழைக்கும் சத்தம் கேட்டு இசையும் கோமதியும் கூட அங்கே வந்து விட்டார்கள்..
தங்கையின் குரல் கேட்டு அவனும் என்னவென்று பார்ப்பதற்காக வெளியே வந்தான்..
ஜீன்ஸ் அணிய முதல் தங்கை அழைத்ததால் லுங்கி கட்டி கொண்டு வந்தான்..
மேலே பனியன் போட்டு இருந்தான்.. அவனது மார் அழகை இசை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்..
அவசரமாக வந்ததால் அப்பொழுதுதான் அவனும் அந்நிய பெண் முன்னால் தான் இப்படி நிற்பதை உணர்ந்து வேகமாக உள்ளே சென்று மேலே ஒரு டீ சர்ட் போட்டுக் கொண்டு வந்தான்..
“ என்னம்மா பவானி?.. ” என்றான்..
“ வெளியே திருநா வந்து அழுதுட்டு உன்னை கேட்டு நிக்கிறாங்க அண்ணே.. ஏதோ அவசரமா பேசணுமாம் உங்களை கொஞ்சம் சீக்கிரமா வரட்டுமாம்..” என்றாள்..
திருநா என்றால் மாறனுக்கு யார் என்று தெரியும்..
அதனால் அவன் எதுவும் அலட்டிக் கொள்ளாமல் என்னவென்று பார்ப்பதற்காக வெளியே சென்றான்..
மாறன் வரும் போதும் கூட திருநா அழுது கொண்டுதான் இருந்தான்..
மாறனை பார்த்ததும் திருநா இன்னும் அதிகமாக அழுதான்..
“ அத்தான் இதை அம்மா உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க.. பிளீஸ் கொஞ்சம் சீக்கிரமா உங்களை அம்மா வரட்டுமாம்.. ” என்று கூறி மாறன் கையில் ஒரு காகிதத்தை திருநா கொடுத்தான்..
மாறனுக்கும் அதை வாங்க மனசில்லை தன் தாய் மற்றும் தந்தை மரணத்திற்கு வெளியாள் போல் வந்து தலையைக் காட்டி விட்டு சென்றார் சந்திரா.. அதனால் அவர்களுக்கு எந்தவித உதவியும் செய்ய அவனுக்கு விருப்பமில்லை..
தங்கை கண் ஜாடை காட்ட அதை வாங்கி படித்தான்..
“ திரு உன்னை தூக்கி வளர்த்த அத்தை சந்திராடா நான்.. திருமாறன் என்று பெயர் வைத்ததே நான் தான்.. அதிகம் எழுத எனக்கு நேரம் இல்ல திரு.. உன் மேல நான் உங்க மாமா கிட்ட சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன் திரு..
நான் சாகுற வரைக்கும் உங்களை பாக்க மாட்டேன்.. பேச மாட்டேன்.. உங்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன். அப்படின்னு.. அந்த மனுஷன் சத்தியம் கேட்கும் போதே உன்னை காட்டித்தான் சத்தியம் கேட்டார்.. வேறு யாரையும் காட்டவில்லை.. அப்புறம் எப்படி நான் உன் மேல சத்தியம் பண்ணிவிட்டு அதை மீறுவேன்..
நான் வளர்த்த பிள்ளையை எமனுக்கு காவு கொடுப்பதற்காகவா நான் உன்னை வளர்த்தேன்..
உங்களை வந்து நான் பார்த்து உங்களோடு உறவு கொண்டாட எப்படி எனக்கு முடியும்.. மனசு வரும்.. இன்னைக்கு காலைல இருந்து எனக்கு ரொம்ப அதிகமா நெஞ்சு வலியா இருந்தது திரு..
திருநா கிட்ட சொல்லி அவன் தான் என்னை ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்த்தான்.. இன்னும் நான் ஹாஸ்பிடல் இருக்கிறது உங்க மாமாக்கு கூட தெரியாது.. நான் சத்தியம் பண்ணின மாதிரி சாகுற வரைக்கும் உன்னை பாக்க விரும்பல.. நான் பிழைத்துக்கொண்டால் சரி திடீர்னு எனக்கு ஏதாவது நடந்தால் என் பிள்ளை திருநா-வை நீ கை விட்டுடாத திரு.. உன் தம்பி தங்கச்சிய நீ எப்படி பொறுப்பா பார்த்துகிறியோ அப்படி திருநா-வையும் பார்த்து அவனுக்கும் ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடு திரு.. அவனை அங்க விட்டுடாத.. அத்தை பேச்சை மதிக்காமல் நீ அங்க விட்ட அவன் வாழ்க்கையே கெட்டு சீரழிஞ்சு போயிடும்.. அப்புறம் அத்தை ஆத்மா சாந்தி அடையாது..
இவ்வளவு காலமும் தள்ளி இருந்துட்டு இப்ப அத்தை இப்படி எல்லாம் பேசுறேன்னு தவறாக நினைக்காமல் அத்தையை மன்னிச்சுடு திரு..
நான் வளர்த்த பிள்ளை உன் மேல சத்தியம் பண்ணிட்டு எப்படி அதை மீறுவேன்..
என் உடம்பு தான் அங்கு இருக்கும்.. உசுரு எப்பவுமே உங்கள சுத்தி தான் இருக்கும்.. கடவுள் கிட்ட என் அண்ணன் பிள்ளைகளை காப்பாத்துங்கனு நான் வேண்டாத நாளே இல்லை..
நீ சிறு வயதில் உன் மாமா குணம் தெரியாமல் அவர் வீட்டுக்கு திருநா கூட விளையாட வருவ அது அவருக்கு பிடிக்காது..
அப்போ அவர் உன்னை அடிச்சி வெளிய அனுப்ப கோவத்தோட வருவார்..
அப்ப நான் அவரை தடுத்து உன்னை கோவமா திட்டுற போல திட்டி வெளிய அனுப்பிடுவேன்..
அது என் சூழ்நிலை திரு.. இப்ப நீ அதை புரிஞ்சிக்கணும்..
பவானி பிறந்தப்ப எனக்கு திருநா-விற்கு பவானியை கட்டி கொடுக்க தான் விருப்பம்.. ஆனால் அது எப்பவும் நடக்காது என்று எனக்கு தெரியும்..
நான் இல்லாம போன திருநா உங்க வீட்டில் இருக்கிறது சரி வராது.. பவானி கல்யாணம் பண்ணாம இருக்கிறதுக்கு அது முறை இல்ல..
எங்க சித்தப்பா மகன் மாரி அண்ணா பொண்ணு வீட்ல திருநா-வை விடு திரு..
ராதா கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தனியே இருக்கு..
என் இடத்தில் இருந்து ராதா என் பிள்ளையின் உடல் பாரத்தை பாரமா நினைக்காம நல்லபடியா பார்த்துக்துகுவா.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு..
இந்நேரம் ராதாவுக்கும் நான் அனுப்பின கடிதம் கிடைத்திருக்கும்..
அத்தை க்கு நீ செய்ய வேண்டியது ரெண்டே ரெண்டு விஷயம் தான்
ஒன்னு. ராதா கிட்ட திருநாவை ஒப்படச்சாலும் நீயும் ஒரு பார்வை அவன் மேல் வச்சுக்கோ..
இரண்டு என் இறுதி பயணத்தில் நீயும் என்னை தூக்கி செல்ல வேண்டும்..
வேலைக்கு என்று வெளியே சென்றால் மனைவி சாப்பிட்டாளா?..இல்லையா?.. என்று கவலைப்படாத ரகத்தில் உன் மாமா மிகப்பெரியவர்..
சரியாக மதியம் 12 30 க்கு மதிய உணவு சாப்பிட வீட்டுக்கு வந்து விடுவார்.. இன்று அவர் வாழ்நாளில் சாப்பிட முடியாத உணவு வகையாக என் உடல் அவருக்கு காத்திருக்கும்..
அப்போது தெரிந்து கொள்ளட்டும் அவர்..
என் இறுதி நிமிடங்கள் அவர் என் அருகில் இல்லாததே நான் அவருக்கு கொடுக்கும் தண்டனை..
அண்ணனும் அண்ணியும் என்னை மன்னித்து இருப்பார்களா தெரியாது?..
ஆனால் நீங்கள் மூவரும் என்னை தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள்..
இது அத்தையின் இறுதி ஆசை..
நான் வளர்த்த என் திருக்குட்டிக்கு அத்தையின் ஆயிரம் முத்தங்கள்..
இப்படிக்கு உன் அத்தை சந்திரா..” என்று அந்த கடிதம் முடிந்திருந்தது..
மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் சந்திரா சொல்ல சொல்ல திருநாதன் மாறனுக்கும், ராதாவுக்கும் கடிதம் எழுதினான்..
கடிதத்தை எடுத்துக்கொண்டு கொடுக்கச் சொன்னார் சந்திரா.. அப்போது தாயை விட்டு போக மாட்டேன் என்று தான் அடம் பிடித்தான் திருநா.. ஆனால் கண்டிப்பாக போய் தான் ஆக வேண்டும் போய்விட்டு சீக்கிரம் வா..! என்று கூறி அனுப்பி வைத்தார்..
இறுக்கமாக இருக்கும் மாறன் கண்ணில் கூட இரு துளி நீர் அந்த கடிதத்தை படித்ததும் வெளியே வந்து அவனும் உணர்வுகள் கொண்ட சக மனிதன் என்பதை அங்கு இருப்பவர்களுக்கு காட்டிக் கொடுத்தது..
ஒரு நாள் இரவு அங்கே தங்கியதற்கு நன்றி கூறி புறப்படுவதற்காக அனைத்தையும் தயார் படுத்திவிட்டு அங்கே வந்த போது தான் கோமதியும், இசையும் அதை பார்த்தார்கள்..
பவானி மற்றும் மாறன் கண்ணில் கலக்கத்தை பார்த்து தற்போது சூழ்நிலை சரியில்லை என்பதை புரிந்து கொண்டு செல்லும் பயணத்தை சற்று தாமதித்தார்கள் ..
உடனடியாக திருநாவும் மாறனும் பைக்கில் செல்ல பவானி செல்வதற்கு நட்டு ஆட்டோ அழைத்து கொண்டு வந்த போது நட்டு முன்பக்கமும் பவானி பின் பக்கம் ஏறும் போது அவளுக்கு துணையாக கோமதியும் இசையும் அவர்களுடன் சென்றார்கள்..
இவர்கள் போல் கடிதம் கிடைத்ததும் ராதாவும் அவளது ஒரு வயது கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வேகமாக சென்று சந்திராவின் அருகே நின்று கொண்டாள்..
நீண்ட நாட்களாக இதயத்தில் இருந்த அடைப்பு காரணமாக அடிக்கடி சந்திராவிற்கு நெஞ்சுவலி வரும் அதை அவர் கணக்கில் கொள்ளாமல் தவிர்த்து வந்தார்.
சரியான முறையில் சிகிச்சை செய்யாமல் இருந்ததால் அதன் செயல்பாட்டை நிறுத்தும் நேரம் நெருங்கி விட்டது..
ஏதோ வெளியே சத்தம் கேட்கவும் சந்திரா சொல்லி ராதா வெளியே வந்து திருநாவை உள்ளே அழைத்துச் சென்றாள்..
ராதா விற்கும் சொல்லப்பட்டது அனைத்தையும் அவள் படித்திருந்தாள்..
அதனால் இருவருக்கும் நடக்கப் போவது தெரியும்..
ராதாவிடம் நேரடியாகவே தன் மகனைப் பார்த்துக் கொள்ளும்படியும் திருமணம் செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார் சந்திரா..
அவளும் அதற்கு சம்மதித்தாள்..
திருநா-வின் கையைப் பிடித்து ராதாவின் கையில் வைத்ததும் சந்திராவின் இறுதி மூச்சும் அடங்கியது..
உள்ளே அவர்கள் அழும் சத்தம் கேட்ட பின்பு தான் வேகமாக மாறன் உள்ளே சென்றான்..
இறக்கும் போது கூட கணவனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பதற்காக சந்திரா மாறனை தவிர்த்ததை நினைத்து அவனுக்கு கோபமும் அழுகையும் வந்தது..
ஆனால் உணர்வுகளை காட்ட இது நேரம் இல்லை என்பதை புரிந்து கொண்டு அடுத்த வேகமாக ஆக வேண்டிய வேலைகளை பார்த்தான் மாறன்..
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தபடியால் எந்த கேள்விகளும் இல்லாமல் சீக்கிரமாக சந்திராவின் பாடி அவர்களுக்கு கிடைத்தது..
சந்திராவின் ஆசைப்படி சரியாக சந்திராவை எடுத்துக்கொண்டு வந்து அவர்களது வீட்டு ஹாலில் சவப்பெட்டியில் வைத்திருந்தார்கள்.. அப்பொழுது சரியாக ஏதோ கைபேசியில் பேசிய படி உள்ளே வந்தார் பாலச்சந்திரன்..
ஒரு கணம் நிமிர்ந்து பார்த்த பொழுது அங்கே நடப்பவற்றை அவரால் ஜீரணிக்க முடியவில்லை..
ராதா உட்பட வேறு யாரெல்லாம் அங்கே வரக்கூடாது என்று அவர் சட்டம் போட்டிருந்தாரோ அவர்கள் எல்லாம் இன்று அவர் வீட்டில் நடு ஹாலில் உள்ளார்கள்..
வீட்டில் அவரும் சந்திராவும் திருநாவும் மூவர் மட்டுமே..
அவரும் திருநாவும் கண்ணெதிரே இருக்கும் பொழுது அப்போது சந்திராவுக்கு தான் எதுவோ என்று புரிந்து கொள்ள அதிக நேரம் தேவைவில்லை..
கையில் இருந்த அவரது பேகை கீழே போட்டு விட்டு சந்திராவின் அருகே வந்து சவப் பெட்டியை எட்டிப் பார்த்தார்..
ஒரு நிமிடம் தான் அவரது உடல் எல்லாம் ஆடி அடங்கி விட்டது..
வழமை போல் இன்று காலையும் மனைவியை ஒரு பாடு படுத்தி விட்டு தான் அவர் அலுவலகம் சென்றார்..
என்ன சமைக்க வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் கூறித்தான் சென்றிருந்தார்.. அதை மனைவி சமைத்து வைத்திருப்பாள் சீக்கிரம் போய் உண்டு விட்டு சற்று நேரம் ஓய்வெடுத்து மீண்டும் ஆபீஸ் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தவருக்கு இடியாக இறங்கியது மனைவியின் மறைவு செய்தி..
எவ்வளவு கொடூரமானவர்களாக இருந்தாலும் சற்று நேரம் வரை தங்களோடு இருந்த ஒருவர் தற்பொழுது இல்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ள சற்றும் மனம் ஒப்புக் கொள்வதில்லை.. அதற்கு பாலச்சந்திரனும் விதிவிலக்கு அல்ல…
என்ன நடந்தது ஏது நடந்தது என்று பாலச்சந்திரன் எதுவும் கேட்கவில்லை யாரிடம் கேட்பார்..
மனைவியின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒரு ஓரத்தில் அவரும் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்..
மாறன் தான் அடுத்தடுத்து ஆக வேண்டிய வேலைகளை பார்த்து இனி சந்திராவை பார்க்க யாரும் வர வேண்டியது இல்லை என்பதால் அன்று மாலையே அவரை தகனம் செய்தார்கள்..
காரியம் முடியும் வரை கொள்ளி வைத்த திருநா வீட்டை விட்டு வரக்கூடாது என்ற காரணத்தால் சந்திராவிற்கு 31 முடியும் வரை திருநா-வை அங்கே இருக்கும்படி மாறன் கூறிவிட்டு பவானியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்..
துக்கம் நடந்த வீட்டில் அவர்கள் தங்களுக்கு உதவி செய்த போது உதவியை வாங்கிக் கொண்டு இப்பொழுது அவர்களுக்கு ஆறுதல் தேவைப்படும்போது கூட இல்லாமல் செல்வது தவறு என்று புரிந்தபடியால் கொஞ்ச நாள் அங்கே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார் கோமதி..
இசைக்கு இந்த ஊரில் இங்கு இருக்க வேண்டாம்.. சென்னைக்கே செல்வோம்.. என்று தாயை வற்புறுத்தி கேட்டாள்.. ஆனால் சென்னை வேண்டாம் வேறு ஊருக்கு செல்லலாம் அவர்கள் கொஞ்சம் நார்மலாக ஆகட்டும் அதுவரை பொறுத்துக் கொள் என்று கூறி இசையை அடக்கி வைத்திருந்தார்..
பவானி சமைத்து கொடுக்க நட்டு தான் சாப்பாடு எடுத்துச் சென்று திருநாவிற்கு கொடுத்துவிட்டு வருவான்..
இப்படியே ஒரு வாரம் கடந்து விட்டது..
தந்தை இழப்பை கண்ணால் பார்த்தவன் இந்த இழப்பு அவனை பாதிக்காமல் இல்லை.. ஆனால் கடந்து தான் வரவேண்டும் என்பதை புரிந்து கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு மெக்கானிக் ஷாப் சென்று விடுபட்ட வேலைகளை ஆரம்பித்து இருந்தான்..
வேலை முடித்துவிட்டு அவன் வரும்பொழுது அவர்கள் வீட்டுக்கு முன்பே கூட்டம் கூட இருந்தது..
பவானி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.. இசை ஒரு பக்கம் கோமதி ஒரு பக்கம் சோகமாக நின்று இருந்தார்கள்..
என்ன பஞ்சாயத்து என்று தெரியாமல் மாறன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி அவர்கள் அருகே வந்தான்..
அந்தக் கூட்டத்தில் இருந்த அவர்களுக்கும் அந்த ஆளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் அதிக உயரத்தோடு அந்த ஊருக்கு பொருத்தமே இல்லாத ஒரு ஆள்ளும் அழகே உருவாக ஒரு பெண்ணும் நின்று இசையை பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்..
அதைக் கேட்ட மாறனுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியாது.
அவ்வளவு ஆட்களுக்கு முன்பு வைத்து இன்றும் இசைக்கு கை ஓங்கி அடித்து விட்டான்..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.