இதயத்தின்
ஆழத்தில்
இறுகிக்கிடக்கும்
உணர்வுகளையுடைத்துச்
சொற்களாக்கி,
பின்னிக்
கொண்டிருக்கிறேன்.
கவிதையாய்
வடித்துன்
படைக்கும்முன்
நீயில்லாது போகலாம்,
இருந்து படித்து இளகி
கரையும் உன்
உணர்வு காண,
நானில்லாது
போகலாம்.
பிறவிகளாய்
உயிர்த்திருக்கும்
நமது அன்பு
உறைந்திருக்கும்
இன்னொரு
காதலுக்காய்.
மெல்லியலாளே!
ஆகாஷின் தங்கை ஆனந்தியின் திருமணத்திற்குப் பிறகு அவளைச் சென்று பார்க்கவில்லை என்ற பெற்றோரின் நச்சரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அவனுக்குமே திருமணத்தின் போது பார்த்த தங்கையை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனை கிளம்ப வைத்திருந்தது.
போனில் அடிக்கடிப் பேசிக் கொண்டாலும் நேரில் பார்ப்பதுபோல் அமையாதே. அதனால் விடுமுறைக்கு வரும்போது, தங்கையைப் பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறியிருந்ததால், ஆனந்தியைப் பார்க்க ஓசூர் சென்று கொண்டிருந்தான்.
அப்படி அவன் பயணம் செய்த பேருந்தில் நடந்தது தான் இவையெல்லாம். பேருந்தில் ஏறியதுமே சோர்வில் உறங்கிவிட்டவனின் காதில் ஒரு ஆணின் அலறல் சத்தம் கேட்க, விபத்து எதுவும் நடந்துவிட்டதோ என்று அடித்துப் பிடித்து எழுந்தான்.
எழுந்த வேகத்தில் பார்த்தவனுக்கு, ருத்ரதேவியாய் கோபம் கொண்டு நின்ற ஒரு பெண்ணை சத்தியமாய் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த ஆணைப் போட்டு அவள் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தாள்.
என்னதான் தவறு செய்திருந்தாலும் இத்தனைபேர் மத்தியில் ஒரு ஆணைப் போட்டு அடிப்பது தவறு என்று பட்டது… பின் நாளை அவனாலையே அந்தப் பெண்ணிற்கும் ஏதேனும் பிரச்சினைகளும் வரலாம், என்ற எண்ணமும் தோன்ற, அவளைத் தடுக்கப் போனான்.
அவன் அருகில் இருப்பவர் அவனைத் தடுத்து விபரத்தைக் கூறி அமர செய்துவிட்டார். அவர் கூறியதும் ஒரு ஆண்மகனாய் வெட்கித் தலைகுனிந்தவன், அந்தப் பொறுக்கியை அடித்து நொறுக்கும் அளவுக்கு கோபம் பொங்கியது அவனுக்குமே.
ஒரு ஆண்மகனாக அவன் மேல் வானளவு கோபமும் ஆத்திரமும் வந்தாலும், ஒரு மருத்துவனாக அதைக் காண சகிக்காது, அவளைத் தடுக்கப் போனான். அப்போது அவனிடம் மான்யா பேசிய வார்த்தைகள் அவனை சிலையென நிற்க வைத்தது.
தானும் இரு பெண்களுடன் பிறந்தவன் என்பதை மனதில் கொண்டு நின்ற இடத்திலையே அமைதியாகி, அங்கு நடப்பதை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.
அதன் பிறகு நடந்த ஒவ்வொரு செய்கையிலும் அவளின் மேல் அவனுக்கு மரியாதை தோன்றியது. பெண் என்றால் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் விதையாக அவனுக்குள் விழுந்தது.
அடக்கி , ஒடுக்கி பெண்களை ஒதுக்கும் சமூகத்தில் மான்யாவின் மீதும், அவளை இப்படி வளர்த்த மான்யாவின் பெற்றோர் மீதும் அவனுக்கு நன்மதிப்பு உண்டானது. தொடர்ந்து பேருந்தில் நடந்த அனைத்தையும் பார்த்தவனுக்கு அவளது குறும்புத்தனம் கண்டு ‘மேடம் செம வாழு போல..’ என்று நினைத்து புன்னகைத்துக் கொண்டான்.
அவளது பேச்சிலும், செய்கையிலும் அவன் மனம் அவளிடம் சரணடையத் துடிக்க, இப்படி ஒரு பெண்ணை மணந்து வாழும் வாழ்க்கை எத்தனை இனிமையாய் இருக்கும் என்று அவன் மனம் அவனுக்குள் ஆசையை விதைத்தது. அவன் எண்ணம் போன போக்கைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான் ஆகாஷ்.
என்ன செய்கிறேன் நான்..? அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், நான் இப்படி யோசிப்பது எவ்வளவு தவறு என்று உணர்ந்தான்.
மகிழ்ச்சியும், குறும்பும், தன்னமபிக்கையும், தைரியமும் அதையும் தாண்டி பெற்றோர்கள் அவள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை இப்படி எதையும் அவள் தன்னால் இழந்து விடக்கூடாது என்று உறுதியாய் நினைத்தான்.
அதோடு நிமிடத்தில் தோன்றிய இந்த ஆசை ஒருவேளை வெறும் ஈர்ப்பாக கூட இருக்கலாம், அதை வைத்து எந்த முடிவும் எடுக்கக் கூடாது. முதலில் நான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.. அப்போதும் அது ஈர்ப்பையும் மீறிய அன்பாக இருந்தாலும் கூட, அது என்னளவிலையே முடிந்து விட வேண்டும்.
இப்படி ஒருவன் தன்னைப் பார்த்தான், நினைத்தான், உருகி மருகிப்போனான் என்ற எதுவுமே அவளுக்குத் தெரியாமல் போகட்டும் என்று தீர்க்க யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
இதுதான் ஆகாஷ்… தன்னை மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்களையும் வைத்தே பிரச்சினையை யோசிப்பான். எந்த விதத்திலும் தன்னால் மற்றவர்களுக்கு பிரச்சினை வந்து, அதனால் அவர்கள் துளியும் வருந்தி விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருப்பான்.
அதையேதான் மான்யாவின் விசயத்திலும் செய்ய நினைத்தான். ஏதோ ஒரு பயணத்தில் கிடைத்த ஒரு நட்பு போல எண்ணி, இந்தப் பயணத்தோடு சேர்த்து அவளையும் மறந்து விட துடித்தான்.
ஆனால் காலமோ பயணங்கள் முடிவதில்லை என்று பச்சை விளக்கை ஜெக ஜோதியாய் எரிய வைத்தது அவன் வாழ்வில்.
தங்கையைப் பார்த்துவிட்டு வந்தவன், அதன்பிறகு அந்த ஊருக்குச் செல்வதையேத் தவிர்த்தான். என்னதான் அவள் வேண்டாம் என்ற முடிவில் அவன் திண்ணமாய் இருந்தாலும், ஒரு சில நேரங்களில் அவனையும் மீறி வெளியேறும் அவளது நினைவுகளைத் தடுக்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
காலநேரங்கள் அதன் வேலையைச் செவ்வனே செய்ய, சிபி, ஆகாஷ் மற்றும் தீபக் மூவரும் ராணுவத்தில் சேர்ந்து அதற்கான முதற்கட்டப் பயிற்சியில் இருந்தனர்.
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அவளைப் பார்த்திருந்தாலும், பேசவோ பழகவோ இல்லை.. ஆனால் பல ஜென்மங்கள் அவளுடன் வாழ்ந்த உணர்வுகளை கொடுத்தது அவளது நினைவுகள். அவள் அடுத்தவரின் மனைவி, அவளை இப்படி நினைக்கக்கூடாது என்றெல்லாம் யோசித்தாலும், தன்னுடைய காதலியைப் பற்றி நினைப்பதற்கு நான் ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணம் மரமாய் வளர்ந்தது.
தனக்குள் உண்டாகும் இந்த உணர்வுகளை நண்பர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளவில்லை ஆகாஷ். ஷானு, வித்யா மற்றும் நண்பர்கள் இருக்கும்போது மான்யாவைப் பற்றிக் கூறியிருந்தான் அவ்வளவே. மற்றபடி எதையும் அவர்களிடம் பகிர அவனுக்கு விருப்பம் இல்லை… விருப்பம் இல்லை என்பதை விட, பயம் இருந்தது எங்கே தன்னைத் தவறாக நினைத்து விடுவார்களோ என்று…
ஆனால் ஆகாஷின் முகத்தில் தோன்றிய கவலைகளைப் பார்த்து, தோண்டித் துருவி உண்மையை வாங்கியதுமில்லாமல், மான்யாவின் போட்டோவையும் வாங்கியிருந்தாள் ஷானவி. அந்தப் போட்டோதான் அவன் வாழ்க்கையில் மாற்றம் தரப்போவது தெரியாமல்….!
கண்கள் எங்கோ நிலைத்திருக்க, மனம் முழவதும் ரணமாய் வலிக்க, தனக்குள் இத்தனை நாட்களாய் புதைத்து, புகைந்து கொண்டிருந்த காதலை கூறிவிட்டு அமைதியாய் அமர்ந்திருந்தான் ஆகாஷ்.
ஆகாஷின் வருத்தம் நண்பர்களுக்கும் புரிந்தாலும், இதில் அவர்களாலும் என்ன செய்திட முடியும்…. ஆனால் நண்பனின் இந்த நிலையை மாற்றியே ஆகவேண்டுமே… இல்லையென்றால் கடைசிவரை இப்படியே இருந்து விடுவானே…? என்ன செய்ய..? என யோசிக்க ஆரம்பித்தனர்.
தீபக் தான்… “போதுண்டா உன்னோட மஷ்கிடோ காயில் சுத்துரதை நிறுத்து…. உன்னை தப்பு சொல்லல… உன் அளவுக்கு இது ஓகே தான். பட் அவங்க நிலையில் இருந்து யோசிச்சுப்பாரு எல்லாம் புரியும்..” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே ஷான்வியிடம் இருந்து போன் வந்தது சிபிக்கு…
அவளின் எண்ணைப் பார்த்ததும் கடுப்பானவன் “இவ கேம்ப் னு போனாலும் போனா… டிபன் சரியில்ல, டின்னர் சரியில்ல, குழம்பு தண்ணியா இருக்கு… ஒரு சிக்கன் பீஸ்தான் தராங்கனு புலம்பித் தள்ளுறா.. இனி யாரச்சும் இவளுக்கு சப்போர்ட் பண்ணி வந்தீங்க, அவளோதான் சொல்லிட்டேன்…” என்று திட்டிக்கொண்டே போனை எடுத்துக் காதுக்கு கொடுத்தான்.
சிபியின் புலம்பலில் நண்பர்கள் இருவரும் சிரிக்க, பேசிக் கொண்டிருந்தவனின் முகமோ ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. ஆகாஷ் அதைக் கவனிக்கவில்லை, ஆனால் தீபக் சரியாக கவனித்து விட்டான்.
சிபியிடம் என்னவென்று கேட்க, அவன் கூறிய செய்தியில் ‘கடவுளே இது எதற்காக…? இப்படியும் நடக்குமா..? என அதிர்ச்சியானான் தீபக்.
அந்தமுறை கேம்பிற்கு செல்லும் ஹவுஸ் சர்ஜன் லிஸ்டில் ஷானவி பெயர் மட்டும் இடம் பெற்றிருக்க… வித்யாவிற்கு அடுத்தமுறை என்றானது. தோழிகள் இருவரும் பிரிவது இதுவே முதல்முறை… அதனால் இருவரும் ஆளுக்கொரு பக்கம் பிடில் வாசிக்க, அவர்களை சமாதானப்படுத்தி, ஷானவியை பேக் செய்து அனுப்புவதற்குள் சிபிக்கு போதும் போதும் என்றானது.
கேம்பில் முதல் இரண்டு நாட்கள் வேலை அதிகம் இருக்க, மூன்றாம் நாள் அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்ற பெர்மிசன் கிடைத்தது. தோழிகள் அனைவரும் அந்த நந்தனபுரம் என்ற ஊரையே சுற்றி வந்தனர்.
நீலகிரியில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் அமைந்துள்ள அழகான ஊர் தான் நந்தனபுரம்… இங்கு காப்பி முதன்மை விவசாயமாக இருக்க… இதை அடுத்து மிளகு, ஏலம் கிராம்பு போன்ற பொருட்கள் விளைவிக்கப் படுகின்றன.
கிராமம் என்றுமில்லாமல், நகரம் என்றுமில்லாமல் மிகவும் அழகாய் காட்சியளித்தது நந்தனபுரம். அங்குள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்கும் போதுதான் எதிர்பாராத விதமாக ஷானவி மான்யாவைச் சந்தித்தது.
ஆகாஷ் காட்டிய புகைப்படத்திற்கும், நேரில் பார்ப்பதற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தாள். உடல் மெலிந்து, கருத்து, கண்கள் இரண்டும் ஜீவனற்று ஒரு உயிர்ப்பில்லாத ஓவியம் போல் காட்சியளித்தாள் மான்யா.
ஏன் இப்படி இருக்கிறார்கள்..? கணவருடன் பிரச்சினையா… இல்லை மாமியார் வீட்டில் பிரச்சினையா..? இல்லை உடல்நலம் ஏதும் சரியில்லையா என்று யோசித்தவள் மான்யாவின் அருகில் வரும் பெண்ணைப் பார்த்தாள். இது யார்..? இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்… ஒருவேளை மான்யாவின் கணவர் ஊர் இதுதானோ..? என்று தன் கற்பனைக் குதிரையை அவிழ்த்துவிட்டவள் இருவரையும் மேலிருந்து கீழாக நோட்டம் விட்டாள்.
அப்போதுதான் மான்யாவின் வயிறு சற்றே உப்பியிருப்பதைப் பார்த்து ‘ச்சே ப்ரேக்னண்டா இருக்காங்க… அதான் இப்படி இருக்காங்க என மானசீகமாகத் தன் தலையில் தட்டிக் கொண்டாலும், இல்லையே அப்படி பார்த்தா இப்போ அவங்க ஹேப்பியா தானே இருக்கணும், அப்படி ஒரு சுவடே இல்லையே… அவங்க ஐஸ் ப்ரைட்டா இல்லையே…? ஏதோ பெருசா இழந்த மாதிரி இருக்காங்களே..? என்று நினைத்தவளுக்கு அவளின் மாற்றங்கள் முழுவதும் பட, புதிதாய் யோசிக்க ஆரம்பித்தாள்.
தன் ஆராய்ந்தது அனைத்தும் உண்மையா..? நான் யூகிக்கிறது சரியா…? இருக்காது… இருக்கக்கூடாது… ஓ மை காட்.. என்று தனக்குள்ளே பயத்துடன் முனுமுனுத்தவள், எதுவாக இருந்தாலும் அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவெடுத்தாள்.
அவர்களிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்துக் கண்டுபிடிக்கலாம் என்று அவர்களை நெருங்கினாள். மான்யாவின் அருகில் வரும் பெண் ஏதோ கோபமாகவேப் பேசுவது புரிந்தது. ஷானவி அவர்களை நெருங்கியதும் இருவரும் புரியாமல் பார்க்க, அவளோ ஒரு அசட்டுப் புன்னகையுடன் தன்னைப் பற்றிக் கூறி, தான் வழி மாறி வந்துவிட்டதாகவும், கேம்ப் நடக்கும் இடத்திற்கு வழி கூறுமாறும் தன் பேச்சை ஆரம்பித்தாள்.
மான்யா தோழியை ‘நீ சொல்லு’ எனும் விதமாகப் பார்க்க, அவளோ ஷானவியிடம் கேம்பை பற்றிப் ஏற்கனவே பேச ஆரம்பித்திருந்தாள். சுயவிவரம் பகிர்தல், நலம் விசாரிப்புகள் என்று தொடங்கிய அவர்களது பேச்சு இப்போது மான்யாவைப் பற்றியதாக இருக்க, மான்யாவோ அதை சுத்தமாக விரும்பவில்லை என்று தன் கோபத்துடன் ‘காவேரி’ என அழுத்தத்துடன் கூறி நிறுத்தினாள் மான்யா.
அதேக் கோபத்துடன் ஷானவிக்கும் வழியைக் கூறிவிட்டு, தோழி வருகிறாளா..? இல்லையா..? என்று கூட பார்க்காமல் விறுவிறுவென்று கிளம்பி போய்விட்டாள்.
காவேரியும் தோழியைத் தொடரப் போக ஷான்வியின் கை அழுத்தம் அவளைத் தடுத்து நிறுத்தியது. காவேரியின் முகத்தில் தோன்றிய கேள்வியில் ஷானு தன்னை மட்டுமல்லாது ஆகாஷையும் சேர்த்தே அறிமுகப்படுத்தி கொண்டாள்.