29.3 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,119
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 29.3
.
‘உறங்காத கண்ணில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்
பரிவான நண்பன் தந்த கனிவான தோள்கள் கண்டேன்
அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு’
கல்லூரிக் காலங்களில் நண்பர்களோடு மேடையில் பாடிய பாட்டை, வருடங்களுக்குப் பின் இன்று அரவிந்தனின் மனம் அசைபோட்டது. பாடலை நினைவுபடுத்திய கௌதமனை பார்த்தார்.
“குழந்த காலையில இருந்து அழுதுட்டு இருந்திருக்கா… நீ ‘என்ட்ட சொல்ல வேண்டியது தானே’ன்னு சாவகாசமா கேக்குற. நீ இன்னைக்கு காலையில வீட்டுக்கு போறதா சொன்னத நம்பின என்னை சொல்லணும்! நீ அவ அம்மான்னு அப்பப்போ நினைவு படுத்த வேண்டி இருக்கு. சரி விடு. நாளைக்கு வந்திடுவேன்” எனக் குரல் உயர்த்தாது பேசிக் கொண்டிருந்தான்.
மனைவியாக இருக்கும் எனப் புரிந்தது அரவிந்தனுக்கு. பாரமாக இருந்த மனம் இப்பொழுது அந்த கனத்தை இறக்கி வைத்திருக்க, மார்பில் இறுக்கம் தளர்ந்தது போல் தோன்றியது. மூச்சை இழுத்துவிட்டார். எந்தத் தடையுமின்றி சீராக மூச்சு வெளிவந்தது. மூச்சு விடுவதற்கெல்லாம் மகிழ்ந்து போகும் காலம் வரும் என மனிதன் நினைத்திருப்பாரா? சிரிப்பு வந்தது அரவிந்தனுக்கு.
‘வீல்’ என்ற சத்தம் இருவரையும் அவரவர் உலகிலிருந்து இழுத்து வர, அழுகை வந்த திசையை நோக்கினர். கீழே விழுந்திருந்த மூன்று வயது சிறுமி எழுந்து கொள்ளாது, அம்மா தூக்குவார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட வீரிட்டுக் கொண்டிருந்தாள்.
அம்மாவின் ஒரு கரத்தில் கைக்குழந்தை இருக்க,“எழுந்துக்கோ பட்டுக் குட்டி” என மகளோடு மாரடித்துக் கொண்டிருந்தாள். தூக்க வந்த மற்ற ஒருவரையும் தூக்க விடாது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த சிறுமியைப் பார்த்திருந்தவனுக்கு மலைப்பாக இருந்திருக்க வேண்டும்.
“என்ன ஒரு பிடிவாதம்” என்றான் கௌதமன்.
“குழந்தைங்க அப்படித்தான் பா இருப்பாங்க” என்றார். ஆமோதித்தான். அவன் மகள் மட்டும் எப்படியாம்? ஐயோ… மகள் வந்திருப்பாளே. என்னைத் தேடுவாளே என மனம் எடுத்துக் கொடுத்தது. கைப்பேசியில் அவர்கள் எங்கு வருகிறார்கள் எனப் பார்த்தான், அவர்கள் வந்து சேர நேரம் இருந்தது.
பெரியவர், “நீ எப்படி?” எனக் கேட்டார் புன்னகை முகமாய்.
“பையனோ… பொண்ணோ… உங்களுக்கு எல்லாம் அம்மா தான் இல்ல? என் மகளுக்கும் எல்லாம் அவ அம்மா தான். முன்ன எல்லாம் அப்படியே எல்லாத்துலயும் அவ அம்மா மாதிரியே இருப்பா. இப்போ எல்லாம் மாறி போச்சு” நீண்ட பெருமூச்சொன்றை விட்டார்.
“எத்தன முறை கீழ விழுந்தாலும் அதே வேகத்துல எழுந்திடுவா… தைரியம்… மனோதிடம்ன்னு அப்படியே என் மனைவியை என் மககிட்ட பாக்கலாம். இப்போ அது எல்லாம் எங்கயோ போச்சு. போதாதுக்கு இப்போ புதுசா பிடிவாத குணம் வந்து சேர்ந்திருக்கு… வாழ்க்கை இன்னும் என்ன என்ன எனக்கு வச்சிருக்கோ தெரியல” என்றவரிடம், “கண்ணுல விரல விட்டு ஆட்டுவாங்க போல” என அவன் சிரிக்க, அவரும் சத்தமாகவே சிரித்தார்.
மகளை எப்படி விட்டுக் கொடுப்பார்? “ரொம்ப நல்ல பிள்ள என் மக. கோபமோ பிடிவாதமோ… அது அவளோட வச்சுப்பா. கோபம் வந்தாலும் எதிராளிய காயப்படுத்தத் தெரியாத தங்கமான குணம் என் பொண்ணுக்கு. இந்த யான பொம்மைக்கு கோபப்பட்டுட்டு போனாளே அந்த மாதிரி, குட்டி பாப்பா கோபம்! கோபத்த இழுத்துப் பிடிக்கத் தெரியாத குழந்த குணம் என் மகளுக்கு” என்றவருக்கு மீண்டுமாகக் காலையில் நடந்த அனைத்தும் நினைவில் வந்து அமர்ந்து கொண்டது.
அவர் அருகில் இருந்த யானை சிற்பத்தை அவன் நீவிக் கொடுப்பதைக் கண்டவர், “என் பொண்ணுக்கு இந்த யானை மேல கோபம் இல்ல. என் மேல… அத இப்படி காட்டிட்டு போயிருக்கா. என் மேல தான் தப்பு. என் மக மேல மத்தவங்களுக்கும் அக்கறை இருக்கும்ன்னு நினைச்சது என் தப்பு தான?” என அவர் பேசியது அவனுக்கு புரியவில்லை என்றாலும் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“வெளுத்தது எல்லாம் பால் ஆகாதுன்னு கேட்டிருக்கேன். இன்னைக்குத் தான் பார்த்தேன்” என அவர் முடிக்க, அவனுக்கு அவரை பார்க்கப் பாவமாக இருந்தது. ஏதோ ஒரு வலி. தெரிந்தவரிடம் பகிரமுடியாது கடவுளிடம் முறையிடுவது போல் தன்னிடம் மனதைக் கொட்டுகிறார் எனப் புரிந்தது.
கைப்பேசியிலிருந்த புகைப்படத்தைக் காட்டினார். ஆஹா ஓஹோ என்றில்லை என்றாலும், பாஸ்போட் அளவு புகைப்படத்தில் ‘இவனுக்கு என்ன கேடு?’ என்பது போல் இருந்தான் ஒருவன். இருபதுகளின் இடையே இருந்தவனைப் பார்த்த கௌதமன், “யார் இவங்க?” எனக் கேட்டான்.
“என் பொண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளைன்னு சொன்ன பையன்” என்றவருக்குக் குரல் எழும்பவே இல்லை.
‘என்னது? பொண்ணு ஸ்கூல் போற வயசில்லையா?’ என விழித்தான் கௌதமன். “அவங்க கோவிச்சுட்டு போனாங்க சொல்லவும், குட்டி பொண்ணா இருக்கும்ன்னு நினைச்சேன்” என புன்னகைத்தான்.
“என்ன சொல்லுவா? எப்பவும் போல கல்யாணமே வேண்டாம் பா. உங்க கூடவே இருந்திடுறேன்னு சொல்றா. அதுக்காக அப்படியே விடமுடியாதே” என்றவருக்கு கோபித்துச் சென்ற மகளின் முகம் தான் நினைவில் வந்தது.
என்ன சொல்லுவது எனத் தெரியாது, “ஓஹ்…” என இழுத்தான்.
“இந்த பையன தான் என் பொண்ணுக்கு சொன்னாங்க. நல்லா தானே இருக்கான்னு நினைச்சேன். சின்ன வயசு… கெட்ட பழக்கம் இல்லாத நல்ல பிள்ளை, படிப்பு இல்லைனாலும் சுயமா தொழில் செய்றான்… இப்படி எல்லாம் சொல்லவும் பாக்க வந்தேன். ஆனா நேத்து நேர்ல பார்த்தபோ தான் தெரிஞ்சுது அவங்க கொடுத்த இந்த ஃபோட்டோ இப்போ எடுத்தது இல்லன்னு.”
“என்னது?” என விழித்தான் கௌதமன். “நேர்ல பாக்க நல்லா இல்லையா?”
சிற்பங்களுக்கு இடையே இருவர் நிற்கும் புகைப்படம் ஒன்றைக் காட்டினார்.
“நேத்து பாக்க போனபோது எடுத்தது.” என்றவர் குரலில் ஜீவனே இல்லை.
இருபுகைப்படங்களுக்கும் அப்பா மகன் வித்தியாசம் இருந்தது. இப்படி எல்லாம் கூட புகைப்படம் காட்டுவார்களா என்ன? நேரில் பார்த்தால் தெரிந்துவிடும் என்று கூடவா இவர்களுக்குத் தெரியாது?
“இது என்ன இவருக்கு நாப்பது கிட்ட இருக்கும் போலவே” என வாய் பிளந்தான்.
“யாரோ சொன்ன வரனா இருந்தா கூட பரவால. எங்க ரெண்டு பேருக்கும் சொந்தம் இவங்க. எப்படி மனசாட்சியே இல்லாம… நான் கேட்டேனா என் பொண்ணுக்கு வரன் பார்த்து கொடுன்னு! என்ன மனுஷங்க… ப்ச்” என்றவர் அதற்கு மேல் பேச முடியாது நிறுத்தினார்.
“போட்டோ வரைக்கும் தானே பேச்சு போயிருக்கு, வேண்டாம் பிடிக்கலன்னு சொல்லிட்டு விடுங்க ஐயா. இத எல்லாம் நினைச்சு வருத்த படாதீங்க. போட்டோவ பார்த்துட்டு மணமேடைக்கு வந்து உக்காருவாங்கன்னு நினைக்கிற அளவுக்குத் தான் அவங்களுக்கு அறிவுன்னு ஒதுக்கி விடுங்கையா.” என்றவனுக்கு ‘இதெல்லாம் ஒரு மேட்டரா?’ என்ற எண்ணமே.
“பிரச்சனை ஃபோட்டோவோ… இந்த வரனோ இல்லத் தம்பி. இப்போ பிரச்சனையாகி போனது என் மக என் மேல வச்சிருக்க நம்பிக்கை! சொந்தங்கிற பேர்ல என் முதுகுல குத்தப்பட்டதுல எனக்குமே இவங்க மேல எல்லாம் இருந்த மதிப்பும் நம்பிக்கையும் போச்சே… இது எல்லாம் தான் பிரச்சினை.
இன்னார் இருக்காங்க பாருங்க. உங்களுக்கு பிடிச்சா மட்டுமே அந்தப் பக்கம் பேசலாம்ன்னு சொன்னதும், மதிச்சு சொல்றாங்கன்னு நினைச்சேன். சொந்தம்ன்னு நம்பி வந்தேன். இப்படி சபையைக் கூட்டி எங்கள அவமான படுத்துவாங்கன்னு நிஜமாவே எதிர்பார்க்கல.
யார் வீட்டு விசேஷத்துக்கோ வந்திருக்க, அவங்க வீட்டுல வச்சு, முன்னப்பின்ன தெரியாத யாரோ என் பொண்ண கேட்டுத் தட்டும் கையுமா வந்து நிக்கிறாங்க. என்னவோ என் பொண்ணுக்கு இவங்கள விட்டா வேற பையனே கிடைக்காத மாதிரியும், இவங்க வாழ்க்கை கொடுத்தாத் தான் ஆச்சுங்கிற மாதிரியும் என்னென்னவோ பேசிட்டாங்க. மனசே ஆறல”
“இவங்க எல்லாம் ஒரு ஆளான்னு நினைச்சாலும், இவங்களால என் பக்கம் பாதிப்பு அதிகம். அதுதான் ஆதங்கம் தாங்கல. என் மகளுக்குக் கல்யாணம் பண்ணக் கொஞ்சமும் விருப்பமே இல்லாத நேரம் இப்படி ஆகிடிச்சு! இனி அவ என்னை நம்பி எங்கேயும் வர மாட்டா. கல்யாணப் பேச்சையே எடுக்க முடியாதபடி ஆகிடுச்சு” என்றார் வருத்தத்தோடே.
“கொஞ்சம் டைம் குடுங்க ஐயா. வேண்டாம்ன்னு சொல்ல ஏதாவது காரணம் கண்டிப்பா இருக்கும். பொறுமையா பேசுங்க. சரி ஆகும்”
“நேரம்! அது எனக்கு இருக்கானே தெரியலையே. ஏற்கனவே என் மனைவி போனதும் ஒரு ஹார்ட் அட்டாக் வந்து தப்பி பிழைச்சேன். நாளைக்கே எனக்கு ஒண்ணுன்னா அவ தனியாகிட மாட்டாளா? வாய் பேச முடியாத என் குழந்த இந்த உலகத்துல தனியா எப்படி தாக்குப்பிடிப்பா…” வாக்கியத்தோடு மனிதனின் குரலும் சேர்ந்தே உடைந்து போனது.
“அப்படி எல்லாம் பேசாதீங்க ஐயா. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. யாரோ ஒருத்தர் அவங்க லக்க டிரை பண்ணுவோமேன்னு கொண்டுவந்த ஒரு வரன். அதுக்கு இவ்வளவு உடைஞ்சு போகலாமா? பாத்துக்கலாம்ன்னு தைரியமா இருங்க” எனக் கூறியவனைப் பார்த்தவர் புன்னகைத்தார்.
இந்தப் புன்னகைக்கான அர்த்தத்தை இவன் அறிவானே. ‘எல்லாம் சரி ஆகிடும் கௌதமா. எழுந்து நடந்திடுவ பாரு.’ ‘வலி சரி ஆகிடும். முன்ன மாதிரி ஆகிடுவ பாரேன்’ என இவன் வலியில் செத்துச் செத்து பிழைத்த காலங்களில் இவனை ஆறுதல் படுத்தவென வந்த வார்த்தைகள் இவை. அப்பொழுது இப்படித் தான் புன்னகையைப் பதிலாகக் கொடுப்பான். அதே வலியை இவர் புன்னகையில் பார்த்தவனுக்கு மனம் உடைந்தே போனது.
“ஐயா…” என்றான்.
அவன் அழைப்பில் மனிதன் நிலை குலைந்து போனார். எல்லா வலிக்கும் ஆரம்பப் புள்ளியை நினைத்தவர் மனம் பிசைந்தது.
“ஒரு ஆறு மாசமா தான் ஓரளவுக்கு வெளி உலகத்தைப் பாக்க ஆரம்பிச்சேன். அன்னைல இருந்து இப்படியான வரன் தான் வருது. பத்து வயசு பையனோட அப்பாக்கு கேட்டாங்க. சொன்னவர்கிட்டயே மனசு பொறுக்காம கேட்டா… இது தான் நிதர்சனம். ஏத்துக்க பாருங்கன்னு சொன்னார். தானம் கொடுக்கிற மாட்டோட பல்லைப் பிடிச்சு பதம் பார்க்காதன்னு அறிவுரை கிடைச்சுது.
இன்னைக்கு? பையனுக்குப் படிப்பும் இல்ல, வயசும் அதிகம். போதாததுக்கு அவனுக்கும் பேசவும் வராது. காதும் கேக்காது! மனசு ஆராம இவ சித்திக்கு போன் போட்டு கேட்டா, ‘வயசு வித்தியாசம்னாலும் ரெண்டாந்தாரமாவா கேக்கறாங்க? படிப்பில்லன்னா என்ன… நல்லா சம்பாதிக்கிறான். பேசினா என்ன பேசாட்ட என்ன? அவன் பேசினா மட்டும் அவ பதிலா பேச போறா? இல்ல அவ பேசிட்டு அவனுக்கு கேக்கலன்னு கம்ளெயினா பண்ண போறா? ரெண்டு பேரும் ஊமை பாஷை தானே பேச போறாங்க அதுக்கு அவனுக்கு எதுக்குக் காது கேக்கணும்ன்னு சொல்றாங்க!”
கூறியவர் இரு உள்ளங்கை கொண்டும் இரு கண்களையும் அழுந்த தேய்த்துக் கொண்டார். ஏதோ வேகத்தில் கூறியவர் அதன் பின் வாயைத் திறக்கவில்லை.
ஒருவரின் சோகம் அவருக்கும் மட்டும் தான் என்பதால் உலகம் அதன் போல் சுழன்று கொண்டிருந்தது. காற்று வீசயது. சருகுகள் பறந்தன. குரங்கு பண்டத்தை விழுங்கிக் கொண்டிருந்தது. உயிரற்ற கற்சிலைகள் நடனமாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் நின்றிருந்தன. இருவர் மட்டும் உயிரிருந்தும் சிரிப்பற்ற சிலைகளாக மாறியிருந்தனர்.
இம்முறை கௌதமனுக்கு கூற எதுவும் இல்லை. அவர் மனதில் இன்னும் எத்தனை வேதனை எனத் தெரியவில்லை. மடியிலிருந்த அவரின் கையில் அழுத்தம் மட்டுமே அவனால் கொடுக்க முடிந்தது. சற்று நேரத்தில் இயல்புக்குத் திரும்பினார்.
கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டினான். மறுக்காது வாங்கி இரண்டு மிடறு உள்ளிறக்கி மீண்டும் அவனிடம் கொடுத்தார்.
“குறை இருக்க பொண்ண வச்சுட்டு வர வரன் மேலக் குறை கண்டுபிடிச்சு தட்டிகழிச்சா, ரெண்டாம் தாரம் இல்லாட்டா இவனை மாதிரி நாப்பது ஆனாலும் உங்க வீட்டுல தான் உங்க பொண்ண வச்சிருக்க வேண்டி வரும்ன்னு சொல்றது சரியா கூட இருக்கலாம். ஆனா அவ என் பொண்ணு. அவளுக்கு ‘இது போதும்’ன்னு சொல்ல இவங்களுக்கு என்ன தெரியும் என் மகள பத்தி?
என் பொண்ணு அவ அம்மா மாதிரியே திறமசாலி, தங்கமான குணம். அத்தனை அழகு என் பொண்ணு. சில வருஷம் முன்ன அவ அம்மா தவறின போது பேச்சு போயிடுச்சு. என் மகள நான் ரொம்ப பாசமா வளர்த்துட்டேன். குரலோட சேர்த்து என் மக நிறைய இழந்து நிக்கிறா. அவளுக்கு ஆறுதலா… அன்பா பேசறவன் இருந்தா நல்லா இருக்கும்ன்னு நான் நினைக்கிறது எப்படித் தப்பாகும்?” என்றவரின் குரல் கமறியது.
பேச முடியாது என்பதக்கு இப்படியான வரன் என்றால், அவள் ஒரு குழந்தைக்குத் தாயானது, புத்தி பிழறியது என அனைத்தும் தெரியும் வேளை தன் மகளின் நிலை? அவளின் எதிர்காலம்? எதார்த்தம் முகத்தில் அறைய அரவிந்தன் உடைந்தே போனார்.
போன வேகத்தில் மீண்டும் அரவிந்தனை தேடி வந்தது நெஞ்சு வலி. நெஞ்சை அவர் நீவி விட்டுக் கொள்ள, கௌதமனுக்கு அவரின் நிலை நிரம்ப வேதனையைக் கொடுத்தது.
“நாலு வருஷம் முன்ன ஒரு விபத்துல என் நட்டெலும்பு செயல் இழந்து போச்சு. விரல அசைக்கக் கூட முடியாத ஒரு வாழ்க்கை. தற்கொலை பண்ணலாம்ன்னு நினைச்சா கூட, அத வேற யாராவது தான் எனக்கு செய்யணும்! ஆறு மாசத்துல என்னோட உறுப்பு எல்லாம் செயலிழக்க ஆரம்பிச்சுது. என்னால அந்த வலியைத் தாங்கவே முடியல. என்னை விடவும் என் அம்மா அப்பா தயாரா இல்லை. அந்த வலி எல்லாம் யாருக்குமே வரக்கூடாது!
மண்ணோட மக்கிப் போயிருக்க வேண்டிய நான் இன்னைக்கு எழுந்து நடமாடுறேன்னா… அது என்னோட முயற்சியோ, நான் செஞ்சப் புண்ணியமோ இல்ல.
என்னைச் சுத்தி இருந்த நல்ல உள்ளங்கள் மட்டுமே அதுக்குக் காரணம். உயிர விடுறதுக்கு முன்ன, யாருக்காவது உதவட்டும்ன்னு தன்னோட உடல் உறுப்புகள் எல்லாத்தையும் தானம் செய்த ஒருத்தரோட நல்ல மனசு மட்டுமே இன்னைக்கு நான் இங்க இருக்கக் காரணம். ‘இந்தா பிழைச்சுக்கோ’ன்னு அவர் கொடுத்துட்டு போனது வெறும் உடம்பை மட்டும் இல்ல… எனக்கு ஒரு வாழ்க்கையை.
அந்த நிலமைல நாங்க இருந்த போதும், எங்களுக்கு உறுதுணையா இருக்க வேண்டிய தாய்மாமா, அப்பாவ ஏமாத்தி சொத்தை திருடீட்டு போயிட்டார்.
உலகத்தில நல்லவங்களும் பொல்லாதவங்களும் இருக்காங்க. நல்லவங்கள மட்டும் பக்கத்துல சேத்துப்போம். நல்லதே நடக்கும். சொந்தம்ன்னு சொல்லிட்டு உங்க நிம்மதியைக் கெடுக்கிற இவங்க எல்லாம் உங்களுக்கு வேண்டாம் ஐயா. உங்க மகளோட சந்தோஷம்… உங்க நிம்மதி இத கெடுக்காம இருக்க ரெண்டு பேர் போதும்.
உடைஞ்சு போன நான் இன்னைக்கு நிமிர்ந்து நிக்கலையா? உங்க மகளை, அவங்க மனசுக்காக… அவங்களோட வாழ்க்கையைப் பங்குபோட ஒருத்தர் கண்டிப்பா வருவார். அதுவரைக்கும் அவங்களுக்கு டைம் கொடுங்க. நீங்க எதிர்பார்க்காத நேரம் உங்களுக்கானது உங்கட்ட கண்டிப்பா வரும். அதனால, கண்டதையும் நினைச்சு மனசை கெடுத்துகாதீங்க.
உங்க மகளை மாதிரியே வாலு பேபிஸ், பேரன் பேத்தியா வரும் போதும் நெஞ்ச நீவிட்டு இருக்காம, அவங்களோட விளையாட உடம்பை நல்லா பாத்துகோங்க” என்றவனைப் பார்த்தவருக்கு, அவர்களை விட்டுச் சென்றவனே மீண்டும் கண்முன் வந்து நிற்பது போல் தோன்றியது.
“நல்லா பேசற” எனப் புன்னகைத்தவர் புன்னகையில் வருத்தம் இல்லை.
“இதுகூட இல்லன்னா நாய் கூட என்னை மதிக்காதே” என அவனும் சிரித்தான்.
நீண்டதொரு மௌனத்திற்குப் பின், “நான் கேக்கறேன்னு தப்பா நினைக்காத தம்பி.” என ஆரம்பித்தவர், நிறுத்திவிட, “சொல்லுங்க ஐயா” என ஊக்கப்படுத்தினான்.
“அது… இந்தக் காலத்து பிள்ளைங்கள பத்தி தெரிஞ்சுக்க கேக்கிறேன். உனக்குக் கல்யாணம் ஆகலன்னு வச்சுக்கோ…. இந்த மாதிரி பேச வராத பொண்ணோ… இல்ல ஏதோ உடல்ல குறை இருக்க பொண்ண உங்களுக்கு பார்த்தா, ஒத்துபீங்களா?” என அவன் முகம் பார்த்தார்.
முட்டைக் கண்ணை உருட்டி அவனை முறைத்து நின்றாள் ஒருத்தி. கை தடம் பதித்து கன்னத்தைச் சிவக்க வைத்தவள் உடல் மொழியில் அவ்வளவு தைரியம். பார்வையில் அத்தனை துணிவுடன் நின்றிருந்தவளுக்கு நயன மொழி தான் பேசவரும். பந்தை நின்ற இடத்திலிருந்து கூடைக்குள் தூக்கிப் போடும் லாவகமும் திறமையும் இருந்தது. அப்படியான அவளோடு அவனால் வாழ் நாளை கழிக்க முடியுமா என நினைத்தவன், பெரியவரின் கேள்விக்கு விடையை யோசிக்காது, “அவங்களுக்கு ஓகேனா… யோசிக்க அதுல ஒண்ணுமே இல்ல” என்றான்.
தாக்ஷாயினி அவனைப் பார்த்து முறைத்தாள். மனதில் இனிமையும்… இதழில் புன்முறுவலும் பூத்தது. ‘சும்மா டி… அவருக்காக’ என்றான் முறைத்தவளிடம்.
அவரின் கைப்பேசி ஒலிக்கவும், “என் பொண்ணு தான்… லேட் ஆகிடுச்சு… தேடிட்டு இருப்பா… கிளம்பணும்,” எனக் கூறவும், கையிலிருந்த யானை சிற்பத்தை அவர் கையில் திணித்தவன், “வேண்டாம்ன்னு சொல்லிடாதீங்க பிளீஸ். உங்க மக விருப்பப்படுறத வாங்கி தர அப்பா தான் நீங்கன்னு அவங்களுக்கு சொல்லுங்க. உங்க மனம் போலவே நல்ல வாழ்க்கை உங்க மகளுக்குக் கண்டிப்பா அமையும் ஐயா.” என்றான்.
அவன் கரத்தை இறுகப் பற்றியவர், “எனக்கு உன்ன மாதிரியே… எனக்குத் தோள் கொடுக்க உன் வயசு பையன் இருந்தான். மகனா… மருமகனா… என் ஃப்ரெண்டா இருந்தான். நீ பேச ஆரம்பிச்சதும் அவனே என் கிட்ட இருக்க மாதிரி ஒரு பிரம்மை. அவன் இருந்து இருந்தா… ப்ச்… அதுதான் அவன் கிட்ட பேசற மாதிரி உங்கிட்ட எல்லாத்தையும் கொட்டிட்டேன்” என்றார் கண்கள் பனிக்க.
இது என்ன இழப்புகளின் எண்ணிக்கை ஏறிக் கொண்டே போகிறது? கௌதமன் மனம் ‘ஓஹ்’ என இரைச்சலிட்டது.
“அதுக்கென்னங்க ஐயா…. அவராவே என்னை நினைச்சுக்கோங்க” என்றான் வரவைத்த புன்னகையோடே.
அவர் மனம் குளிர்ந்து போயிருக்க வேண்டும். புன்னகைத்தவர், அவர் நெஞ்சில் கைவைத்து “சகல சௌபாக்கியங்களோட நல்லா இரு பா!” என்றவர், அவர் கரத்தை அவன் தலை மீது வைத்தார். “மனசுல இருந்த சுமை எல்லாம் கடவுள்கிட்ட இறக்கி வச்ச மாதிரி மனசு லேசாகிடுச்சு. வரேன் பா” எனக் கிளம்பினார்.
திரையில் யசோதரா முறைத்துக் கொண்டிருக்க, “முறைக்காத மா. அப்பா கிளம்பிட்டேன். நீ கேட்ட யானை சிற்பம்…” என்று மகளிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டே சென்றவரை திரும்பி ஒரு முறை பார்த்தான். மனதிற்குள் பாரமாகவும்… அதே சமயம் இதமாகவும் இருந்தது.
எழுந்து செல்ல மனம் இல்லாது சுற்றி வேடிக்கை பார்த்தான். வேறு ஒரு குட்டி குரங்கு பழம் ஒன்றை உண்டு கொண்டிருந்தது. யாரிடமோ இருந்து பிடுங்கிய சிப்சை கொறித்துக் கொண்டிருந்த குரங்கின் முன் ஒருவன் பயந்து கொண்டே குனிந்து கைகூப்பி வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டிருந்தான். பெரியவர் காட்டிய பாறையின் மேல் ஒரு ஜோடி அமர்ந்து தங்கள் பெயரை கிறுக்கிக் கொண்டிருந்தனர். அடுத்த மழையில் அவர்கள் பெயர்கள் அழிந்துவிடும் என்று தெரிந்தும் ஆசையோடு கிறுக்கிக் கொண்டிருந்தனர்.
மனம் உல்லாசமாக உணர ஆரம்பிக்கப் பாறையில் அப்படியே மல்லாந்தான். தாக்ஷாயினியின் பெயரோடு தன் பெயரை சேர்த்து மனம் எனும் பாறையில் கிறுக்க முற்படும் வேளை… அவன் குழந்தை யாழினியாள், தன் பற்கள் அனைத்தையும் காட்டி சிரித்தாள்.
கைப்பேசியை எடுத்தவன் அவசர அவசரமாக அழைத்தான் அன்னைக்கு.
“இன்னும் இல்ல பா. யாழி தூங்கிட்டு இருக்கா. நாங்க இன்னும் பத்து நிமிஷத்துல ஹோட்டல்ல இருப்போம் கௌதமா” என அன்னை கூறவும் அரக்கப் பரக்கக் கிளம்பினான் கௌதமன்.
அவன் சென்று சேர்ந்த ஐந்தாவது நிமிடம் மகிழுந்து வந்து சேர்ந்தது. இவர்களுக்காகக் காத்திருந்த நேரத்தில் அறைக்கு அருகில் இருந்த நீச்சல் குளத்தைச் சுற்றி நடந்து கொண்டே விக்ரமிடம் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான் கௌதமன்.
அறையின் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வந்த வாசுதேவன் தோளில் படுத்திருந்த யாழி, பட்டாம் பூச்சியைக் கண்டதும் தாத்தாவை விட்டு கீழே இறங்கினாள்.
“யாழி பேபி” என்ற சத்தம் கேட்டுத் திரும்பிய மகள், தந்தையைப் பார்த்தாள். கீழ் இதழ் பிதுங்கியது. கண்கள் ஈரம் கொள்ள ஆரம்பித்தன. பொங்கி வந்த அழுகையை இதழுக்குள் பூட்டி சிலையாய் நின்றுவிட்டாள் குழந்தை. இது என்னவிதமான எதிர்வினை எனத் தந்தைக்குப் புரியவில்லை.
“பேபி, அப்பா டா பேபி” என அழைத்துக் கொண்டே கரம் நீட்டி வரும் தகப்பனைக் கண்ட மகள், “அப்பா அப்பா மை அப்பா” என அடித்து பிடித்துக் கொண்டு அப்பாவின் கரத்தினுள் துள்ளிக் குதித்தாள்.
“அப்பா நானுக்கு. மை அப்பா” எனக் கொஞ்சும் மழலையில் அப்பாவைக் கொஞ்சுவதும்… கண்ணீர் வழிய அப்பாவிற்கும் முத்தம் கொடுப்பதும்… கோவம் தாளாது அப்பாவைப் போட்டு அடிப்பதுமாக யாழி உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவிக்க, மகளை நெஞ்சோடு அணைத்தவன், தலையோடு முதுகையும் வருடினான்.
அவரவருக்கு அவரவர் மக்கள் பொக்கிஷம் தானே? பெரியவரின் தவிப்பும் மகள் மீதான பாசமும் கௌதமனை தாக்கியது. ‘அந்த பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையணும்’ என மனதார ஆசைப்பட்டான்.
“அப்பா எங்க போயி? ஆலி பேபி தேடி” தான் அப்பாவைத் தேடி அழுததை எப்படியாவது கூற நினைத்து வார்த்தைகள் கிடைக்காது தவிக்கும் மகளின் தவிப்பு தகப்பனுக்கு இடம் மாறியது.
அப்பாவின் கலங்கிய விழிகளைப் பார்த்த மகள் பற்கள் காட்டி சிரித்து, கன்னத்தில் முத்தங்கள் பதித்து கண்ணீர் வழிய, “போடும் அப்பா?” எனத் தலையை மேலும் கீழுமாக அசைத்துக் கேட்கும் மகளிடம் என்ன கூறுவான் தகப்பன்?
“ரொம்ப தேடினியா பேபி?” என்றவன் கலங்கிய விழி ஒரு சொட்டு கண்ணீரை வெளி அனுப்ப, “நோ கையிங் அப்பா. நானுக்கு குட் பேபி” எனத் தகப்பன் கண்ணீரைத் தன் குட்டி கைக் கொண்டு துடைத்து ஆறுதல் படுத்தினாள் கௌதமனின் குட்டி தேவதை.
‘சாரி சாரி சாரி’ என மனதில் ‘சாரி’களோடு ‘அப்பா இனி மேல் என் யாழி பேபிய விட்டுட்டு இப்படிப் போகவே மாட்டேன். சாரி… சாரி டா பேபி’ என உள்ளுக்குள் சூளுரைத்தவன் மகளின் கன்னம் அழுந்த முத்தங்கள் கொடுத்தான்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே
போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின்
அன்பும் தந்தை அன்பின் பின்னே
-கவிஞர் நா முத்துக்குமார்
…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.