வேகமாகப் பாய்ந்த அந்த சொகுசு பேருந்து ஒரு வழியாக அதன் வேகத்தை குறைத்து சாலை ஓரத்தில் நின்ற மரங்களின் நிழல்களில் ஒதுங்கி நின்றது. மழை தூரல் இருந்ததால் வெயிலின் உஷ்ணம் சற்று குறைவாகவே இருந்தது. பஸ் நின்ற நிலையில் தேவிகாவும் கண் விழித்தாள். அவள் கண் விழித்த போது அவள் தலை சாய்த்து இருந்தது சீட்டிலே தான். சூரியாவின் தோளில் சாய்ந்து தூங்கியது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவள், சூரியாவை பார்க்க அவன் கொண்டுவந்திருந்த சாப்பாட்டு பொதியலை எடுத்து நீட்டினான்.
“எனக்கு வேணாம்ங்க பசிக்கல,” என்றாள் தேவிகா.
“இன்னும் மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும் பட்டணத்தை சென்றடைய அதனால் நீ கொஞ்சமாவது சாப்பிடு,” என்றான். முதல் முதலாக அவன் வார்த்தைகளில் அவளுக்கென எழுத பட்ட அன்பை உணர்ந்தாள்.
“எனக்கு கொஞ்சம் போதும்.. பசிக்கவில்லை,” என்றாள் அவள். சூரியாவின் வார்த்தைக்காக தான் ஒத்துக்கொண்டாள் போலும்.
“ஏன்?” என வினவினான் அவளின் சுருங்கிய முகத்தை பார்த்து.
“ஒன்னும் இல்லை. நீங்கள் சாப்பிடுங்கள் அதில இருந்து கொஞ்சம் எடுத்து சாப்பிடுகிறேன்,” என்றாள் தேவிகா கொஞ்சம் தயங்கியவாறே.
பாதி சாப்பாடு ஒதுக்கி வைத்து அதை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினான். சாப்பாட்டில் பகிர்ந்தவனுக்கு வாழ்க்கையை பகிர ஏன் இந்த தடுமாற்றம்? அவளையும் உணவு உண்ண வைத்தான். அவனின் அன்பு மழையில் நனைந்தவளின் கனத்த இதயம் கொஞ்சம் லேசானது.
அப்போது தேவிகாவின் கண்கள் கலங்கிட அதை கவனித்த சூர்யாவும், “என்ன நீ உங்க வீட்ல இருந்து கல்யாணம் முடிஞ்சு வந்த போது கூட நீ இப்படி கண் கலங்கினது நான் பார்க்கவில்லை. இப்போது என்ன திடீர்னு இப்படி கண் கலங்குற,” என்று சூர்யா கேட்டான்.
தேவிகா கண்ணீரை கீழே விழாது கண்களை இமைத்துவாறு இமைகளிலே தக்க வைத்துக்கொண்டவள், “என் அப்பா உங்கள் குடும்பத்தை பற்றி நிறைய சொல்லிருக்காங்க அதனால எனக்கு இன்னொரு வீட்டுக்கு போறோம் என்ற எண்ணம் இல்லை. அவங்க சொன்னது போலவே தான் உங்கள் வீட்டில் எல்லாருமே இருந்தாங்க ஆனால்…… ” என்றவளின் கண்களில் அடக்கி வைத்திருந்த துளிகள் மெதுவாக அவள் கன்னத்தை நனைத்தது.
அவள் என்ன சொல்லவருகிறாள் என புரிந்தும், “நீ அழாதே! உனக்கு நான் இருக்கிறேன்,” என்று சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை.” அதான் உன்கிட்ட கைபேசி இருக்குதுல அதுல பேசிக்கோ இல்லைனா வீட்டுக்கு திரும்பி போறியா?” என்று கேட்டான்.
எல்லாம் சரி தான், ‘வீட்டுக்கு போறியாவா? இந்த நிலையும் மாறும் சூரியா,’ என்று மனதில் நினைத்துக்கொண்டவள், “நான் போனுலயே பேசிக்கிறேன்,” என்றாள். சூரியாவோ புன்முறுவல் பூண்டான் அவள் ஜன்னலின் வழியே வெளியே பார்த்தபோது.
பேருந்தும் புறப்பட்டது. ஆங்காங்கே உள்ள மேடு பள்ளங்களில் பேருந்து சென்ற போது இருவரின் தோள்களும் உரசியது. இவர்களின் மனங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் தருவாய் மிக தொலைவில் இல்லை என்பதை இவர்கள் அறிவார்களா?
அன்று மாலை பட்டணம் வந்தடைந்தனர். அவன் குடியிருக்கும் அந்த நான்கு மாடி அப்பாட்மேன்டின் கீழ் தளத்தில் தான் அவன் தங்கியிருந்தான். சமையலறை, ஹால் மற்றும் ஒரு படுக்கையறையுடன் கூடிய போர்ஷன் அது இருவர் தங்க போதுமானதே.
இரண்டு வாரம் சூர்யா வீட்டில் இல்லாததால் அறைகளில் ஒட்டடை படிந்து கிடந்தது… தேவிகாவிற்கு அதைத் துடைத்து சுத்தம் செய்து முடிக்கவே அன்று இரவானது. பின், இரவு உணவிற்காக சூரியாவிற்கு சப்பாத்தி தான் ரொம்ப பிடிக்கும் என தெரிந்து கொண்டவள் வீட்டிலிருந்து வரும் போதே கோதுமை மாவு, பன்னீர் முதலியவற்றை கொண்டு வந்தாள். அவற்றை வைத்து சப்பாத்தியும், பன்னீர் கிரேவியும் செய்தாள். சூர்யாவும் எந்தவித தயக்கமும் இல்லாமல் தேவிகா சமைத்து கொடுத்ததை ருசித்து சாப்பிட்டான். தேவிகாவும் அவனுடனே சேர்ந்து உணவு உண்டாள்.
பின் சூரியாவும் தேவிகாவும் படுக்கையறை வந்தனர். அவள் பையிலிருந்த அந்த இரண்டு ஓவிங்களையும் எடுத்து ஒன்றை ஹாலிலும் மற்றொன்றை படுக்கையறையிலும் வைத்தாள். இந்த ஓவியங்கள் பற்றி சூரியாவிடம் கேட்கலாமா வேண்டாமா என்று பல நாள் எண்ணிவளுக்கு இன்று கேட்டுவிடலாம் என்று தோன்றவே, மொபைல் போனை பார்த்துக்கொண்டிருக்கும் சூரியாவும் இவளை பார்க்க, “ஒன்னும் இல்லை. இந்த ஓவியங்கள் மிகவும் அருமையாக கற்பனை திறன் மிகுந்து காணப்படுகிறது.. நீங்கள் இப்போது வரைவது இல்லை என்று கேள்வி பட்டேன். நீங்கள் ஏன் தொடரகூடாது மறுபடியும்? உங்கள் திறமையை புதைத்து விடாதீர்கள்,” என்றாள்.
“ஒருகாலத்தில் பிடித்தது, வரைந்தேன். இப்போது எதுவுமே பிடிக்கவில்லை விட்டுட்டேன்,” என்று சாதாரணமாக பதிலளித்தான்.
அவனிடம் என்ன கூறினாலும் இப்போது அவன் மூளையை சென்றடைய போவதில்லை என்பதை உணர்ந்து “ம்ம்ம்,” என்றவள், “நாளை அலுவலகம் செல்ல வேண்டும் அல்லவா? உணவு மதியத்திற்கும் சேர்த்து காலையில் சமைத்துவிடவா?” என்று வினவினான். பயண களைப்பு தூக்கத்தை வரவேற்று கொண்டிருந்தது ஒருபுறம்.
“நாளை காலை உணவு மட்டும் காலையில் செய்தால் போதும். மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்துவிடுவேன்,” என்றான்.
“உங்கள் அலுவலகம் பக்கத்தில் தான் உள்ளதா?”
“ஆமா,”
பின் சற்றே நேரத்தில், இருவரும் பயணக் களைப்பினால் இருந்தவர்கள் படுத்ததுமே தூங்கி விட்டனர்…
மறுநாள் காலை, சூரியா அலுவலகம் செல்லும் முன்னே, தேவிகா குளித்து முடித்துவிட்டு சமையலறை சென்று காலை உணவு தயார் செய்து அவனுக்கு கொடுத்தாள்.
சூரியா அலுவலகத்திற்கு செல்லும் போது, “கதவு பூட்டி கொண்டு இரு,” என்ற சொல்லிக்கொண்டே திரும்பி பார்க்காமல் சென்றான். தேவியோ அவன் தலை மறையும் வரை வாசலில் நின்று அவனை பார்த்தவாறு நின்றாள்.
தன் பெற்றோரிடம் மட்டுமல்லாமல் கெளரி, சௌந்தர்யாவிடமும் போனில் பேசினாள். பின்னர், மதிய உணவு சமைக்க சென்றாள்.
அவன் சொன்னது போலவே மதியம் வேளை வந்தான். சாப்பிட்டு முடித்தவுடனே வேலை நிறைய இருக்கிறது என்று கிளம்பி விட்டான். இவ்வாறே நாட்களும் உருண்டது .ஒருவர் கேட்டால் மற்றொருவர் பதில் சொல்லும் அளவிற்கு அவர்களுடைய உறவு மேன்பட்டது..நாளடைவில், ஒருவருக்கொருவர் சகஜமாகப் பேசிக் கொள்ளும் நிலையை அடைந்தனர் இருப்பினும் சூரியாவிற்கு ஞாயிறு மட்டும் விடுமுறையிருந்தும் அவன் இதுவரைக்கும் தேவிகாவை வெளியே அழைத்து செல்லவில்லை. அவளும் அவனிடம் கேட்கவில்லை. எல்லாம் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் நாட்களை கடத்தினாள்.
சூர்யா எப்போதும் எட்டு மணி என்றால் வீடு திரும்பி விடுவான் ஆனால் அன்றோ பதினொன்று மணி ஆகியும் வீடு திரும்பவில்லை தேவிகா பலமுறை சூர்யாவின் மொபைல் போனைத் தொடர்பு கொண்டும் அவன் பதில் அளிக்கவில்லை. ஒரே பதற்றம் அவளுக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை? அவளுக்கு விசாரிப்பதற்கு கூட யாரும் தெரியாது? அண்ணணிடமோ அல்லது கௌதம் மாமா விடமோ உதவி கேட்கலாம் அல்லவா? ஐயோ! அங்கிருந்து அவர்களால் என்ன செய்ய இயலும் பதறி விடுவார்கள் அல்லவா என்று எண்ணியவள் வாசலை எதிர்நோக்கி காத்துக் கொண்டே நின்றாள். பன்னிரண்டு மணி ஆக அவளுக்கு படபடப்பு அதிகமாகி உடல் நடுங்க ஆரம்பித்தது. அவள் வணங்கும் தன் குலதெய்வத்திடம் தன் கணவனுக்கு ஒன்றும் ஆகாதபடிக்கு தனக்கு தாலி பிச்சை போட மன்றாடினாள்.
வாசலையும், போனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ கார் சத்தம் கேட்க ஒரு நிமிடம் தன் மனது வெடித்து போல ஆகிவிட்டது அவளுக்கு. பைக்கில் சென்றவர் காரில் வாருகிறாரா? அவருக்கு என்ன நேர்ந்தது? சூர்யாவை இருவர் கைத்தாங்கலாக கொண்டு வீட்டில் விட்டனர். அவன் கை, கால், உடம்பு நலமுடன் இருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவன் கொஞ்சம் போதையில் இருப்பது தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தாள் தேவிகா. அவனைக் கொண்டு வந்து சேர்த்த அந்த இருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு கதவை பூட்டியபின் இவனை தன் தோளில் தாங்கியவாறு ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்த்தினாள்.
அவளுக்கு கண்கள் குளமானது. அவனோ அரை போதை மயக்கத்தில், “ஐம்….வெரி..சாரி…..தேவிவிவி….மா,” என்று உளறினான். மின்விசிறியை வேகமாக சுழல செய்தாள். அவனது காலில் கிடந்த ஷூ மற்றும் சாக்ஸை கழற்றினாள். பின், அவன் சட்டையை கழற்றி விட்டு, கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவனது முகத்தில் தெளித்தாள். அவனுக்கு கொஞ்சம் நினைவு வரவே, “நான்…. தான்……..அப்ப்…அப்பவே……சொன்னேன்ல…..தேவிமா……உனக்கு ……எஎஎஎஎஎ…..என்….
கூட……. செட்….ஆஆகாது…..போயிருனு,”
அவனை கூட்டிக்கொண்டு படுக்கையில் படுக்க வைத்தாள். அவனுக்கு ஓரளவு நினைவு இருந்தது. அவள் தூங்கவே இல்லை மறு பக்கம் திரும்பிக் கொண்டு அழுதவாறே படுத்திருந்தாள். அவளுக்கு ஏற்கனவே சூர்யா கூறியது ஞாபகம் வந்தது. தான் கொஞ்சம் அவ்வப்போது குடிப்பதாக கூறியது அவள் நினைவிற்கு வரவே, காதலியின் ஞாபகம் வந்ததால் குடித்து இருப்பாறோ என்று நினைத்து மனம் வருந்தினாள். நாளுக்கு நாள் சூரியாவின் மேல் அவளது காதல் அதிகமாகிவிட்டதால் அவளால் முன்பு போல் இதை சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மூன்று மணி இருக்கும் அவள் கண்கள் லேசாக அசந்தது. ஐந்து மணி அளவில் ஏதோ ஒரு பலத்த சத்தம் கேட்டு அவள் திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தபோது சூர்யா வாந்தி எடுப்பதை பார்த்த அவள் ஓடிச்சென்று சூர்யாவின் முதுகை தடவினாள். பின் அவனுக்கு குடிப்பதற்கு வெந்நீர் காய்த்து கொடுத்தாள் அதை குடித்துவிட்டு அப்படியே படுத்து உறங்கிவிட்டான்.
விடியற்காலையில் குளிர் ஆட்டி படைக்க அவன் மீது போர்வையை எடுத்து மூடினாள். பின் அவளுக்கு உறக்கம் ஏது? இன்னும் சூரியாவின் மனதில் அவனுடைய காதலி தான் இருக்கிறாளோ? என்னால் இதை தாங்கி கொள்ளவே முடியவில்லையே. மனசு ரொம்ப பாரமாக இருக்குது. நான் என்ன செய்வேன் என்று நினைத்தவளின் கண்களில் நீர் பெருக்கெடுத்து அவள் ஆடையை நனைத்தது.
மறுநாள் காலை,
அவன் உடம்பெல்லாம் யாரோ மூன்று பேர் சேர்ந்து அடித்துப்போட்டது போல வலி. அவனால் கண்களை திறக்க முடியவில்லை. ஒருவழியாக கொஞ்ச நேர போராடத்திற்கு பின் கண் விழித்து பார்த்த போது மணி பத்து இருக்கும். அனைத்து காலை நேர வேலைகளையும் செய்து முடித்துக் கொண்டு அந்த நாற்காலியில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள், தேவி.
இவனுக்கு அப்போது தான் ஒன்றொன்றாக ஞாபகம் வந்தது. அங்கு பார்ட்டிக்கு சென்றது, பின் இருவரிடம் உதவி கேட்டு வீடு வந்தது, பின் இரவு வாந்தி எடுத்தது என ஒவ்வொன்றாக ஞாபகம் வரும்போது அவன் மனது ஏனோ வலிக்க ஆரம்பித்தது. அவனுக்கு ஏனோ உள்ளூர குற்ற உணர்ச்சியாகவே தோன்றியது. அவளிடம் தான்
அவ்வப்போது குடிப்பது உண்டு என்று முன்னமே கூறியது தானே என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டாலும் அவனுக்கு மனம் சரியாகவில்லை. ஏன் இவ்வாறு மனம் இறுக்கமாக உள்ளது? அவள் தன்னை விட்டு செல்லவேண்டும் என்று தானே எண்ணியிருந்தோம் ஆனால் ஏன் இப்போது அவள் முகத்தை கூட பார்க்க மனம் சக்தியற்றது? ஏன் அவளை பற்றிய சிந்தனை என்னை ஆட்டிபடைக்கிறது? அவள் மீதுள்ள அன்பு காதலானதா?
ஒருவழியாக தன் சிந்தனையை தொலைத்து விட்டு வெளியே சென்றான். தேவிகா அவனை பார்த்ததும் கண்டு கொள்ளாதவளாய் நாற்காலியில் இருந்தாள். அவன் ஒரு சில விநாடிகள் அதிலேயே நின்றபின்னும், அவள் இவனது முகத்தை பார்க்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சமையல் அறையில் போய் தண்ணீரை அருந்தி விட்டு மறுபடியும் வந்தான். இவளை ஏன் சமாதானம் செய்ய மனம் ஏங்குகிறது?
“தேவி இங்கே பாரு,”என்றான் அவள் முன்நின்று. அவளின் சிவப்பு படர்ந்த கண்களை விரித்து அவனை நோக்கினாள் அதில் சொல்லப்படாத பல ஏக்கமொழிகள் உண்டு என்பதை இவன் அறிவானோ?
” என்கிட்ட பேசாம இருக்காத,” என்று நிறுத்திக் கொண்டான்.
அவள் மௌனத்தை களையாதவளாய் அப்படியே இருந்தாள். அவளை இப்படி பார்க்க முடியாத சூரியாவோ, “நேற்று தீடிரென பார்ட்டி அரேன்ஜ் பண்ணிட்டாங்க. நான் சீக்கிரம் வந்துரலாம்னு தான் உன்கிட்ட தகவல் சொல்லல தேவி. கொஞ்சமாக குடிச்சது என்பது உண்மைதான் ஆனால் கூல்ட்ரிங்ஸ்ல போதை கலந்து இருப்பது எனக்கு தெரியாது. அதை நான் குடித்துவிட்டு மயங்கி விட்டேன் அதனால தான் இப்படி ஆயிடுச்சு. இனி இப்படி நடக்காம பார்த்துக்குறேன்,” என்றான் அவன்.
அவளுக்கு மனது லேசானதாக உணர்ந்தாள். சூரியா உண்மை தான் சொல்லுவான் என்ற அளவுகடந்த நம்பிக்கை அவளுக்கு உண்டு அதனால் வீண் சிந்தனைகளை தூக்கி எறிந்தாள்.
அந்த சம்பவத்திற்கு பிறகு சூர்யாவிற்கு தேவிகா மீது கொஞ்சம் பாசம் அதிகரித்தது அவனுக்கு அவள் அருகில் இருப்பது மிகவும் பிடித்தது. அவன் அலுவலகத்திற்கு சென்றாலும் இவளை போனில் தொடர்பு கொண்டு மதியம் உணவு எடுத்துக்கொண்டு வர சொல்லும் சந்தர்ப்பத்தில் இவளிடம் பேசிவிடலாம் என அழைப்பான். சில சமயங்களில் அவனே வீட்டுக்கு வந்துவிட்டு சமாளித்துக் கொள்வான். பல சமயங்களில் அவள் அவனுக்காக உணவு எடுத்துக்கொண்டு அலுவலகம் வருவது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அவனுக்கும் அது நாளுக்கு நாள் பிடித்துபோயிற்று. மீண்டும் அவளுக்காக ஓவியங்கள் வரைய ஆரம்பித்தான். அவள் மீது காதலில் விழுந்தவன் தன் காதலை வெளிபடுத்துகிறானா அல்லது தேவிகா கண்டுக்கொள்வாளா?
*********
இப்படியே ஒரு வாரம் நகர திடீரென்று எதிர்பாராமல் சூர்யாவின் குடும்பத்தினர் பட்டணத்திற்கு வருகை தந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
வாசல் கதவை தேவிகா திறந்த போதே, “ஹப்பி பர்த்டே டு யு! ஹப்பி பர்த்டே டு தேவி,” என கௌரி, கௌதம், சௌந்தர்யா, ஆதிரா குதூகலமாக பாட. சிதம்பரமோ அனைவரைக்கும் மேலாக, “ஹப்பி பர்த்டே மருமகளே,” என வாழ்த்த, சூரியாவோ, ‘ஐயோ! தேவிக்கு பிறந்தநாளா? இது கூட தெரியாம இருந்திருக்கியே டா!” என தன்னை அவனே கடிந்துக்கொண்டான். பின்னர் ஈ ஈ ஈ என்று சிரித்தபடியே அனைவரையும் உள்ளே வரவேற்றனர்.
“சித்தி……” என ஆதிரா துள்ளி குதித்தாள். ஆதிராவை தன் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சினாள்.
“ஆதிராவுக்கு இப்போது சித்தப்பா கண்ணுக்கு தெரியல,” என கௌதம் விளையாட்டாக சொல்ல ஆதிராவும் சூரியாவும் மாறி மாறி சிரிப்பை பரிமாறி கொண்டதுடன் தேவிகாவிடமிருந்து சூரியாவிடம் சாடினாள்.
“என்ன தேவி கோவிலுக்கு போகவில்லையா?” என்று கௌரி கேட்க “இனி தான் மாமி, நம்ம எல்லாரும் சேர்ந்தே போகலாம்,” என்றாள் தேவி சமாளித்தவாறு.
“சரி, சரி அப்புறம் பேசலாம். கேக்கை கட் பண்ணு தேவி,” என்று ஒரு மேஜையில் கேக்கை அட்டையிலிருந்து பிரித்து வைத்தாள் சௌந்தர்யா.
அனைவருடைய அன்பிலும் தத்தளித்தவள் இதழ் விரிய கேக்கை வெட்டினாள். பின் சூரியாவிற்கு முதலில் ஊட்டவே, “பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவி,” என்று கூறியபடியே அவள் கையில் இருந்த மிச்சமுள்ள கேக்கை அவளுக்கு ஊட்டினான். அவனை தொடர்ந்து அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்தாள். அவளுக்கு கௌரி மற்றும் சௌந்தர்யா பரிசு பொட்டலம் கொடுத்தனர். தேவிக்கு அவர்கள் வந்ததே பெரிய மகிழ்ச்சியாக இருந்தது.
பின் அனைவரும் காலை உணவு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது சௌந்தர்யா, “தேவி, சூரியா உனக்கு என்ன பரிசு கொடுத்தான்?” என கேட்கவே தேவிகா சூரியாவை ஓரக்கண்ணால் பார்க்க அவனும் பார்க்க, “அக்கா! அவுங்க எனக்கு ஓவியம் வரைந்து கொடுத்தாங்க,” என்று மனநிறைவோடு கூறினாள். சூரியா தன் மனைவி தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசியதை எண்ணி பெருமை கொண்டான்.
“ஓஓஓ சூப்பர்! சூரியா ஓவியம் வரைய ஆரம்பிச்சுட்டானா? நல்லது தான்,” என்றான் கௌதம்.
“அம்மா, எல்லாரும் சேர்ந்து வெளிய போகனும் என்று சொன்னிங்கல. எப்போது போகனும்?” என்று ஆதிரா வினவினாள்.
“போகலாம், போகலாம் இரு,” என்றாள் சௌந்தர்யா.
“சூரியா, கோவிலுக்கு போயிற்றுவாங்க நீங்க இரண்டு பேரும் முதலில்” என்றாள் கௌரி.
“எல்லாரும் சேர்ந்தே போகலாம் அம்மா நான் மதியம் பெர்மிஷன் கேட்டு வருகிறேன். அப்புறம் வேற எங்கு போகலாம்னு ப்ளான் போட்டுவைங்க,” என்றான் அவன். அவனால் தேவிகாவிடம் தனியாக பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காலையிலிருந்தே தேவிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லதான் இன்று அவளது போன் அடிக்கடி ஒலித்ததா? சே! எனக்கு தெரியாமல் போயிற்றே என நினைத்துக்கொண்டே வேலைக்கு சென்றான்.
“அப்போது பையன் பரவாயில்லை பாத்தியா கௌரி,” என்றார் சிதம்பரம்..கௌரியின் அருகாமையில் சென்று.
“ஆமாங்க, நான் கூட பயந்துட்டேயிருந்தேன். அவன் மாறிட்டான். அவன் கண்களில் ஒளியே சொல்லுது அதை,” என கூறி மகிழ்ச்சி அடைந்தாள்.
அன்று மாலை மூன்று மணி அளவில் அனைவரும் முதலில் கோவிக்கு சென்று சூரியா தேவிகா பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு பக்கத்திலிருந்த மாலுக்கு சென்றனர். அங்கு தான் சூரியாவின் காதலியை மருபடியும் சந்திக்கிறான் அதன் பின்விளைவு என்னவாக இருக்கும்?
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.