“ஏய்!! யாரு ரௌடி?” என்று நெப்போலியன் எகிறிக் கொண்டு வர, ஆர்கழி பயம்கொள்ளவே இல்லை.
அவள் விழிகளில் மொத்தமாக அலட்சியமும் உதாசினமும் நிறைந்திருக்க,
“நீதான் நீ பண்றதுக்குப் பெயர் என்ன?” என்று நெப்போலியனை நேருக்கு நேர் கண்டு சொல்ல
நெப்போலியனின் தோற்றமும், அவன் முத்துவேலை அடித்ததைக் கண்டிருந்த ரஞ்சித்துக்கு அக்கா எதாவது பேசி ப்ரச்சனை ஆகிடுமே என்று பயந்தான்.
“அக்கா! விடுக்கா நமக்கு என்ன?” என்று அவள் கையைப் பிடிக்க
“நீ சும்மா இரு ரஞ்சி, இவன் அடிச்சு..அவன் விழுந்து அடிப்பட்டிருந்தா இவனுங்களை எல்லாம்” என்று கோபம் கொள்ள
“என்ன பண்ணுவ நீ? இவனுங்களா? மரியாதை தெரியாதா உனக்கு?” என்று நெப்போலியன் கோபமாகப் பேச, முத்து இதுதான் சாக்கு என்று ஓட பார்த்தான்.
கடைக்கண்ணால் முத்துவைப் பார்த்த நெப்போலியன் பின்னால் கையை விட்டு அவனை முன்னால் இழுத்து கையை முறுக்கிக் கொண்டே,
“சொல்லு என்ன பண்ணுவ நீ?” என்று நெப்போலியன் பிடிவாதம் கொண்டு கேட்க
“அண்ணா! வண்டியில தீடீர்னு வந்து விழவும் அக்கா கோவமா பேசிட்டாண்ணா, சாரிண்ணா” என்று ரஞ்சித் நெப்போலியனைப் பார்த்தான்.
“ஹேய்! நீ எதுக்கு சாரி கேட்குற? கலாட்டா பண்றது இவன்” என்று அப்போதும் நெப்போலியனை மரியாதை இல்லாது பேச, அவனுக்கு அங்கமெங்கும் தங்கு தடையில்லாமல் கோபம் பெருகியது. அதற்குள் மாஸ்கோ ஓடிச்சென்று ட்ராவல்ஸில் இருந்து வரதராஜனை அழைத்து வர,
“என்ன டா இது எல்லாம்…?” என்று வரதராஜன் வந்ததும் நெப்போலியனை சத்தம் போட
“நீ சும்மா இரு வரதா! இவ என்னமோ பண்ணுவாளாம்…என்ன செய்வா இவ…?” என்று கத்த, அதற்குள் மாணிக்கவாசகமும் வண்டியை விட்டு மெதுவாக தன் வாக்கிங் ஸ்டிக்கோடு இறங்க , ரஞ்சித் உடனே போய் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
“தம்பி! முதன்முதலா ஊருக்கு வரவும் இப்படி ஆச்சினதும் பொண்ணு கோபமா பேசிட்டா, விட்டுடுங்க தம்பி” என்று மாணிக்கவாசகம் அமைதியாக பேச
அவர் நிலைக் கண்டவனுக்கு பாவமாக இருக்க, ஆர்கழியை முறைத்தவன்,
“உன்னால தான் டா, வா உன்னை கவனிக்கிறேன்..” என்று முத்துவேலை இழுத்துக் கொண்டு நடந்தான்.
ஆர்கழியிடம் வரதராஜன்,
“அவன் காசு வாங்கி குடிச்சிட்டு ஏமாத்துவான்மா, அதான் பையன் கோபப்பட்டுடான். நீங்க போங்கம்மா” என்று சொல்ல,
ஆர்கழிக்கு மனதில்,
‘அவன் குடிகாரன்னா, இவர் பையன் என்னவாம்’ என்று எண்ணம் வளர்ந்த போதிலும் அவர் வயதுக்கு மரியாதைக் கொடுத்து வாயைப் பூட்டிகொண்டு வீட்டின் பூட்டைத் திறந்தாள்.
அனைவரும் மெதுவாக உள்ளே சென்றனர். பொருட்களை எல்லாம் வண்டியில் இருந்து ரஞ்சித் இறக்கி வைக்க, மாணிக்க வாசகத்தை முதலில் ஒரு நாற்காலிப் போட்டு ரஞ்சித் உட்கார வைக்க, காயத்ரியும் ஷாலினியும் பாத்ரூம் போய் விட்டு வந்தவர்கள் அப்படியே தரையில் உட்கார்ந்து கொண்டனர்.
ஆர்கழி மாலையில் சீக்கிரமாகவே அலுவலகத்தில் இருந்து வந்து, அவர்கள் ஊரில் இருந்து டெம்போவில் ஏற்றி வந்த சாமான்களை எல்லாம் அவர்களை வைத்தே வீட்டினுள் வைக்க சொல்லி விட்டாள்.
அந்த சாமான்கள் எல்லாம் அப்படி அப்படியே இருக்க, சமையலறைக்குள் சென்றவள் அங்கிருந்த பாக்ஸைப் பிரித்து நாலு பாத்திரங்களை எடுத்தவள் , அவர்கள் நால்வருக்கும் காஃபி போட்டுத் தர, காயத்ரியோ,
“எனக்கு காஃபி வேண்டாம். பூஸ்ட் தானே நான் குடிப்பேன்” என்று ஆரம்பித்தாள்.
ஆர்கழிக்குத் தலைவலி தான். அவளே காலையில் சீக்கிரமாக எழுந்து வரதராஜனிடம் சாவியை வாங்கிக் கொண்டு, பின் அலுவலகம் சென்று, அங்கிருந்து மீண்டும் பொருட்களை இறக்கி வைக்க வீடு வந்து, வீட்டிலிருந்து பேருந்து நிலையம் சென்று ஒற்றை மனுஷியாக இவ்வளவும் பார்த்திருக்க, ஏற்கனவே நெப்போலியன் அவளிடம் எகிறியதில் வேறு கோபமாக இருந்தவள் வாய்த் திறக்கப் போக
அதற்குள் மாணிக்கவாசகம்,
“இப்ப தானே டா காயு வந்தோம். நாளைக்கு அக்கா பூஸ்ட் வாங்கித் தருவா, இப்ப காஃபி குடிடா..” என்றார்.
“சரி பெரியப்பா..” என்று வேண்டாவெறுப்பாக அவள் சொல்ல, ஆர்கழி தந்தையை முறைக்க,
“விடுடா” என்பதாக அவர் வாயசைக்க, காஃபி குடிக்கும் வரை மௌனமாக இருந்தவள்,
“ரஞ்சி முதல்ல இந்த கட்டிலை ஃபிக்ஸ் பண்ணிடலாம். உனக்கு முடியும் தானே..?” என்று தம்பியிடம் கேட்டாள்.
“செஞ்சிடலாம்கா, நான் டூல்ஸ் பாக்ஸ் வைச்சிருக்கேன்” என்று சொல்லி பொருட்களை எல்லாம் ஒதுக்கி வைக்கத் தொடங்கினர். அதுவரை வீட்டின் வெளியே இருந்த காலி இடத்தில் நாற்காலியைப் போட்டு மாணிக்கத்தை உட்கார வைத்துவிட்டனர்.
காயத்ரி கட்டில் போடப்பட்டதும், அதில் ஒரு பெட்ஷிட்டை விரித்துப் படுக்க போக,
“என்ன காயு நீ? எழுந்திரு முதல்ல! வீடு ரெடி பண்ணிட்டா ஃப்ரீயா படுத்துக்கலாம். ஒரு தடவ கழுவிடலாம், அப்புறம் நீ ரெஸ்ட் எடு..” என்று ஆர்கழி சொல்ல
“ப்ச், நாளைக்கு சனிக்கிழமை லீவ் தானே? நாளைக்குப் பண்ணலாம். காலையில் இருந்து பஸ்ல வந்தது டயர்டா இருக்கு…” என்று காயத்ரி புலம்ப,
“இப்ப செஞ்சா நான் உதவி பண்ணுவேன். நாளைக்கு எனக்கு வேலை இருக்கு” என்றாள் ஆர்கழி.
“என்னக்கா வேலை?” என்று ரஞ்சி கேட்க
“அது ப்ளேஸ்மெண்ட் ட்ரெயினரா ஒரு இடத்தில வொர்க் பண்றேன் டா. வீகெண்ட் மட்டும் பார்க்கிறேன்” என்றாள்.
“அப்போ உனக்கு லீவே கிடையாதாக்கா?” என்று ஷாலினி கவலையாக கேட்க
“கிடையாது ஷாலு. அதனால தான் சொல்றேன். நாளைக்கு காலையில போனா நைட் ஆகிடும் நான் வர” என்று ஆர்கழி சொல்லவும் இதையெல்லாம் வெளியே உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த மாணிக்கத்துக்கு மனமெல்லாம் மலையளவு வலியும், வருத்தமும்.
ஏழு நாட்களும் தன் பெண் இப்படி வேலை வேலை என்று ஓட, தன்னால் அவளுக்கு உதவ முடியவில்லையே என்று மனதுக்குள் மறுகினார்.
அவர்களது சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வாடிகாடு என்ற கிராமம். விவசாயமே ப்ரதானம். சிதம்பரம் லட்சுமிக்கு மூன்று மகன்கள். அதில் மூத்தவர் தான் மாணிக்கவாசகம், அவர் மனைவி வள்ளி.
அடுத்து இளங்கோவன் முல்லைக்கொடி. அவர்கள் பிள்ளைகள் தான் ரஞ்சித்தும் காயத்ரியும்.
சிதம்பரத்தின் கடைசி மகன் சுப்ரமணியன். அவரின் மனைவி ஆனந்தி. அவர்களின் பெண் ஷாலினி.
இவர்கள் போக மாணிக்கத்திற்குப் பின் ஊர்வசி என்ற பெண் வேறு. அவருக்குத் திருமணமாகி குடும்பத்தோடு வேப்பங்குளவாசி ஆகிவிட்டார்.
காலம் நன்றாக இருக்கும் வரை கால் நன்றாகத்தான் இருந்தது மாணிக்கத்திற்கும். ஒரு விபத்தில் கால் போனது…மனைவி போனாள். படுத்த படுக்கையானார். ஒரு கால் முற்றிலும் எடுக்க வேண்டியதாகி விட, இன்னொரு காலும் அப்போது தேறவில்லை.உடல் எல்லாம் பயங்கர அடி.
மிகுந்த சிரமத்திற்குப் பின் ஒரு நாலைந்து வருடம் கழித்து தான் ஒற்றைக்காலால் ஊன்று கோலோடு நடக்க முடிந்தது. பி.ஏ படித்து முடித்தவர் அதுவரை ஒரு மில்லில் சூப்பர்வைசராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இப்படி ஆனதும் வேலையும் போய் விட்டது. அவர்களுடையது கிராமம் என்பதால் பெரிதாக வசதியும் அப்போது இல்லை. நன்றாக இருப்பவர்களுக்கே வேலை என்ற நிலை.
ஆனாலும் ஒற்றைக்காலோடு வயலில் தன்னால் இயன்ற வேலைகளைப் பார்ப்பார். இளங்கோவன் அரசு பேருந்தில் ஓட்டுனராக இருக்க, சுப்ரமணியன் தேங்காய் பிஸினஸ் பார்க்கும் ஒருவரிடம் வேலைப் பார்த்தார்.
மாணிக்கத்துக்கு இப்படியானதும் இளங்கோவனும் சுப்ரமணியனும் தான் குடும்பத்தை தாங்கினர்.
வயலிலேயே அவர்களுக்குத் தேவையான நெல் விளைந்துவிடும். அதுதவிர உளுந்தும் கடலையும் மாற்றி மாற்றி போடுவர். சிதம்பரம் சாகும் வரை வயலில் கிடந்து பாடுபட்டார். அதன்பிறகு மாணிக்கத்தால் தனியாக விவசாயம் பார்க்க முடியவில்லை.
அனைத்திற்கும் ஆள் தேவைப்பட்டது. அவரால் மடைக்கட்ட முடியவில்லை, பாத்திக் கட்ட முடியவில்லை. மகன் சிரமப்படுவது தாங்காத லட்சுமி இருந்த அந்த ஒரு ஏக்கரையும் குத்தகைக்கு விட்டுவிட்டார்.
மாணிக்கம் வேலைக்குப் போகும் வரை கான்வெண்டில் படித்துக் கொண்டிருந்த ஆர்கழி அதன் பின் அரசுப்பள்ளியில் படிக்கத் தொடங்கினாள்.
சிதம்பரம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ஆர்கழி கேட்கவே இல்லை. அவளுக்குக் குடும்ப சூழல் தெரியும், தன் தந்தையால் குடும்பத்திற்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் தன்னால் எந்த கஷ்டமும் அவர்களுக்கு வருவதை அவள் விரும்பவில்லை.
இதற்கெல்லாம் உபயம் முல்லைக்கொடி தான். தன் கணவன் காலை முதல் மாலை வரை பஸ் ஓட்டி விட்டு வர, இந்த ஆள் மட்டும் படித்து விட்டு சொகுசாக சூப்பர்வைசர் வேலைப் பார்க்கிறாரே என்ற பொறாமை.
அது மட்டுமில்லாமல் வள்ளி பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். மிகுந்த செல்லத்தோடு வளர்ந்தவர்.அவருக்கு இருந்த ஜாதகம் காரணமாக மாணிக்கத்துக்கு மணமுடிக்கப்பட்டார்.
லட்சுமிக்குப் பெரிய மகன் என்றால் உயிர். மற்ற மகன்கள் ஊர் சுற்றிக் கொண்டு ஒழுங்காக படிக்காமல் இருக்க அந்த காலத்தில் பிஏ படித்த மகனால் கொள்ளைப் பெருமை அவருக்கு. அதுவும் அவர் மருமகள் வள்ளி பெரிய வீட்டிலிருந்து வர, வள்ளிக்கு ஒரு வேலையும் தெரியாது. லட்சுமியும் செய்ய சொல்ல மாட்டார்.
இதையெல்லாம் கண்டு முல்லைக்கொடிக்கு பொறாமை, வருத்தம் எல்லாம். அதனால் மாணிக்கத்திற்கு இப்படியானதும் காலையில் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஆர்கழியை நிற்க வைத்து அனைவரின் முன்னும் சொல்லி விட்டார்,
“இங்க பாருங்க! என் வீட்டுக்காரர் சாம்பாத்யத்துல எங்க பிள்ளைங்களைப் படிக்க வைக்கிறதே கஷ்டமா இருக்கு. இதுல பெரிய மாமாக்கு இப்படி ஆகிப்போச்சு, இவளுக்கும் சேர்த்து எல்லாம் எங்களால பீஸ் கட்ட முடியாது. அப்படி முடியலனா சொல்லுங்க…நாங்க தனியா போயிடுறோம்” என்று சொல்ல
சிதம்பரத்துக்குப் பயங்கர கோபம் வரும். அவரின் நகல் தான் ஆர்கழி. அவருக்கு இருக்கும் பிடிவாதம், வைராக்கியம் எல்லாம் அப்படியே. மருமகள் இப்படி பேசவும், பொங்கி விட்டார் சிதம்பரம்,
“என் பேத்தி அந்த பள்ளிக்கூடத்துல தான் படிப்பா. நான் அவளைப் படிக்க வைச்சிக்கிறேன். அம்மாடி ஆர்கழி! நீ போடா, குடும்பத்தைப் பிரிக்கனும்னு நினைச்சியான்னா, கொன்னுடுவேன் ஆமா” என்று மருமகளிடம் கர்ஜித்தவர் எப்படியோ கடினப்பட்டு பணம் கட்டினார்.
ஆனால் விவசாயம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. மாணிக்கத்திற்கு மருத்துவ செலவுகள், குடும்ப செலவுகள். அது இல்லாமல் மகளுக்குப் பொங்கல் சீர், தீபாவளி சீர் என்று அனைத்தும் செய்ய வேண்டும்.
மூன்று மகன்களும் சமமாக உடன்பிறந்தவளுக்கு எப்போதும் செய்வதுதான் வழக்கம். மாணிக்கம் படுத்தவுடன் சிதம்பரம் தான் அதையும் செய்ய வேண்டி ஆனது.
ஒவ்வொரு முறையும் சிதம்பரம் மிகுந்த சிரமம் கொண்டு பணம் கட்டுவதைப் பார்த்தவள் ஆறாம் வகுப்பு படிக்கையில் பிடிவாதமாக சொல்லிவிட்டாள்.
“தாத்தா! நான் எங்க படிச்சாலும் நல்லா படிப்பேன். நீ என்னை நம்புறியா? ஸ்கூல்லை நம்புறியா தாத்தா? எனக்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம் தாத்தா. உனக்கு நான் நல்லா படிக்கனும் அவ்வளவு தானே? நம்ம ஊர் ஸ்கூல்ல சேர்த்துவிடு” என்று அவ்வளவு அடம்பிடித்து சேர்ந்தவள் சொன்னது போலவே சிறப்பாக படித்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து இன்று வேலைக்கும் போகிறாள்.
அதுமட்டுமில்லாமல் விடுமுறை தினத்திலும் எந்த சந்தோஷங்களையும் அனுபவிக்காது வேலைப் பார்க்கிறாளே என்று தெரிய மாணிக்கம் கலங்கிப் போனார்.
இப்போதும் என் பெண்ணை இந்த காலம் கொடுமை செய்கிறதே என்ற எண்ணம் தோன்ற மாணிக்கவாசகத்தின் கண்களில் கண்ணீர் தேங்கியது. வரும் வழியில் நிறைய கடைகளைப் பார்த்தார். நகரங்களில் வாய்ப்புகள் அதிகம், வாழும் வழிகள்…அதிகம்! சீக்கிரமே எதாவது ஒரு வேலை செய்து மகளின் பாரத்தைக் குறைக்க முடிவு செய்தார்.
ஆர்கழி உட்காரவே இல்லை.
“காயு! நீ துணிபேக் எல்லாம் எடுத்து கட்டில் மேல வைச்சிட்டு ரஞ்சி கூட சேர்ந்து அந்த டேபிள் மேல எல்லாம் எடுத்து வைங்க”
“ஷாலு! நீ எங்கூட வந்து கிச்சனை சுத்தம் பண்ண வா” என்று அழைத்து அத்தனையும் அடுக்கி வைத்தாள்.
இடையே எட்டு மணி ஆனதும்,
“ரஞ்சி! இங்க வா இந்த தெருவில நேரா போனா மெயின் ரோடு வரும். அதுல ரைட்ல நிறைய கடை இருக்கு. அதுல உள்ள நல்ல ஹோட்டல் பார்த்து எல்லாருக்கும் இட்லி வாங்கிட்டு வந்திடு. எவ்வளவு இட்லி வேணும் கேட்டு வாங்கு டா. இந்தா காசு..” என்று காசைக் கொடுக்க…அவன் வாங்கிக் கொண்டு வரவும் முன்வாசலிலேயே எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தனர்.
அது இரண்டு படுக்கையறைக் கொண்ட வீடு, ஒரு படுக்கையறையையும் சமையலறையும் முழுதாக சுத்தம் செய்தவர்கள், இன்னொரு அறையில் மற்ற பொருட்களை அப்படியே போட்டு வைத்துவிட்டு, ஹாலை சுத்தம் செய்தனர்.
பின் அந்த அறை தவிர எல்லாவற்றையும் சுத்தம் செய்து கழுவி முடிக்க மணி பன்னிரெண்டு ஆனது.
“இதுக்கு மேல முடியாதுக்கா” என்று ஷாலினி அப்படியே ஈரத்தரையில் சாயப்போக
“ஷாலு! ரூம்ல போய் படுத்துக்கோ டா. நாளைக்கு மீதியைப் பார்ப்போம்” என்று சொல்லவும் ஷாலினியும் காயத்ரியும் ஓடி போய் கட்டிலில் படுத்துக் கொள்ள,
“பெரியப்பா! வாங்க படுக்கலாம்” என்று மாணிக்கத்தை அழைத்து வந்து அவர் பயன்படுத்தும் வயர்கட்டிலில் பெட்ஷீட்டை விரித்து தலையணையைப் போட்டு ரஞ்சித் சொல்ல, ஏற்கனவே மிகுந்த களைப்பில் இருந்த மாணிக்கவாசகம் படுத்தவுடனே உறங்கிப் போனார்.
நிம்மதியாக தூங்கும் தந்தையைப் பார்த்து “தேங்க்ஸ்டா “ என்றாள் ஆர்கழி.
“என்னக்கா? நான் டெய்லி செய்றது தான். நீயும் போய் அவளுங்க கூட படுத்துக்கோ அக்கா…” என்று ரஞ்சித் சொல்ல
“அவளுங்க கூடவா? வந்து பாரு, எப்படி படுத்திருக்காங்கன்னு..” என்றவள் சொல்ல, எட்டிப் பார்த்த ரஞ்சித்துக்கும் புன்னகை. அவர்கள் இருவரும் அந்த கட்டிலை அடைத்துக் கொண்டு அப்படி தாராளமாகப் படுத்து இருந்தனர்.
“நீ இங்க பாய் போட்டு படுத்துக்கோ….நான் ரூம்ல…கீழ படுத்துக்கிறேன்…” என்று சொல்லி ஆர்கழியும் உறங்கிப் போனாள். அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கே ஆர்கழி எழுந்து குளித்துவிட்டு சமையல் வேலையைப் பார்க்க,
ரஞ்சித் எப்போதுமே சீக்கிரம் எழும் பழக்கம் உள்ளவன் என்பதால் எழுந்து கொண்டான்.
“என்னடா சீக்கிரம் எழுந்துட்ட?”
“ஊர்ல எழுந்து பழகிடுச்சுக்கா”
“காலையில பொங்கல் செஞ்சிட்டேன், சட்னி வைக்கனும். மதியம் சாம்பார் பண்ணிட்டு இருக்கேன், இப்பவே சோறு வைச்சா…நல்லா இருக்காது. எனக்கு மட்டும் கொஞ்சமா வைச்சிட்டேன், நீ மத்யானத்துக்கு வைச்சிக்கிறியாடா?” என்று கேட்க
“வைச்சிடுறேன் அக்கா. நீ எப்போ வருவ..?” என்றான்.
“ஒன்பது மணிக்கு ஃப்ர்ஸ்ட் பேட்ச் இருக்கு, இன்னைக்கு நாலு பேட்ச் உண்டு. ஆறு மணிக்கு முடியும், வீடு வர ஏழு எட்டு ஆகிடும்டா. இங்க பாரு இதுல அரிசி இருக்கு, காஃபி பவுடர் மட்டும் தான் இருக்கு, இப்ப என்ன பண்ற நீ பக்கத்துல உள்ள கடையில பால், அப்புறம் பூஸ்ட் குட்டி பாக்கெட் வாங்கிட்டு வா. நான் அப்புறமா பெரிசு வாங்கிட்டு வரேன்” என்று சொல்லி காசு கொடுத்து அனுப்ப, அவன் வந்ததும் காஃபி போட்டு முடித்தவள், தங்கைக்கும் தம்பிக்கும் கொடுத்தாள்.
தங்கைகள் இருவருமே இன்னும் எழாமல் இருக்க, மணி வேறு ஏழைத் தாண்டி விட,
“ரஞ்சி! இப்ப கிளம்பினா தான் நைன் ஓ க்ளாக் கிளாஸ்க்கு போக டைம் சரியா இருக்கும். நான் கிளம்புறேன், நீ பார்த்துக்கோ! இந்தா இந்த பணம் வைச்சிக்கோ. அவசரம்னா யூஸ் பண்ணிக்கோ, என்னோட லேப்டாப் வைச்சிருக்கேன், அட்மிஷன் ப்ரோசிஜர்ஸ்லாம் பார்த்துக்கோ. அப்ளிகேஷன் ஃபில் பண்ணனும்னா பண்ணிக்கோ, பேமெண்ட் செய்யனும்னா இந்தா என்னோட கார்ட், இதை வைச்சிக்கோ. எதாவதுன்னா கால் பண்ணுடா ஓகே” என்றவள் காலை நேர பரபரப்பில் காலில் பம்பரம் கட்டிக்கொண்டது போல் பறந்தாள்.
“அக்கா” என்று ரஞ்சித் அழைக்க
கண்ணில் நீரோடு நின்றவன்,
“தேங்க்ஸ் அக்கா” என்று சொல்ல
“போடா” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு வேலைக்குப் போனாள்.
*************************
வரதராஜன் இன்னமும் ட்ராவல்ஸில் இருக்க, நெப்போலியன் எட்டு மணி போல் போன் செய்தான்.
“வரதா வரும்போது சரக்கு வாங்கிட்டு வா…” என்ற நெப்போலியனைக் கண்டு ஆச்சரியமானார் வரதராஜன்.
“என்னடா? வாரத்துக்கு ஒரு நாள் தான் குடிப்ப….நேத்து தானே குடிச்ச” என்று கேட்க
“யோவ்! வாங்கிட்டு வாயா…” என்று இவன் எரிந்து விழ
“என்னாச்சு டா? அடிக்கடி குடிச்சா குடிகாரப்பயன்னு சொல்வாங்கன்னு சொல்லுவியேடா…” என்று அவன் சொன்னதை சொல்ல, இன்னமும் கொதித்துப் போனான் நெப்போலியன்.
“இப்ப மட்டும் என்னை குடிகாரப்பயன்னு சொல்லாம குடியரசுத்தலைவர் பையன்னா சொல்றாங்க…வாயை மூடிட்டு வாங்கிட்டு வாய்யா..” என்றவன் வேக வேகமாக தனது மனதின் வெப்பம் தீர கண்ணில் நீர் வர அந்த செயலை செய்தான்.
வீட்டிற்கு வந்த வரதராஜன் அவன் இருந்த கோலம் கண்டு பதறிப்போனார்.