Skip to content
Post Views: 1,569
அத்தியாயம் – 6
திருச்சி அருகே என்று கூறியிருந்த போதும், அங்கிருந்து ஒரு மணி நேரப் பயண தொலைவில் சந்திரனின் ஊர் இருந்தது. கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத ஊர் அது. தேவையான வசதிகளும் போக்குவரத்து வசதி உட்பட அனைத்தும் அந்த ஊரில் இருந்தது. ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் பழமைவாதிகளாகத் தான் இருந்தனர்.
சிறிது தாமதம்தான் என்றாலும் திட்டமிட்டபடி மாலை சந்திரன் வீட்டில் விளக்கேற்ற மணமக்கள் சென்று விட்டனர். நேரமின்மையால் வந்ததும் சடங்குகள் நடைபெற, சத்யாவினால் மணமகள் கோலத்தை மாற்றக் கூட முடியவில்லை.
சந்திரனின் வீட்டில் சடங்குகள் முடியும்போதே திருமணத்திற்கு வர முடியாதவர்கள் வந்துவிட, அவர்களை அறிமுகம் செய்து, ஆசீர்வாதம் வாங்கி என நேரம் பறந்தது. வந்தவர்களுக்கு இனிப்பு, பலகாரம் எடுத்துக் கொடுத்து, இன்னும் நெருங்கிய சில உறவினர்களை இரவு விருந்துக்கு இருக்கக் கூறியது என சந்திரன் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் அனைவரும் வேலையாக இருந்தனர்.
Advertisement
ஆண்கள் எல்லோரும் வெளியில் பந்தலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பெண்கள் உள்ளே ஜமுக்காளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சத்யாவும் அங்கேயே அமர வைக்கப்பட்டு இருக்க, மணமகள் அலங்காரம் இடைஞ்சலாகவே இருந்தது. சத்யாவின் பிறந்த வீட்டினரும் அவளோடே அமர்ந்து இருந்தனர். அவர்களுக்குத் தேவையான காப்பி, சிற்றுண்டி எல்லாமே சரியாக வந்தது. ஆனால் சந்திரன் வீட்டினர் யாருக்கும் பயணம் செய்து வந்தவர்களுக்கு ஓய்வு தேவை என்று தோன்றவில்லை. அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. அவர்களுக்குமே நேரம் கிடைக்கவில்லை.
மெட்ராஸ் வாழ்க்கையில் சத்யா வீட்டினர் இந்த அளவு எல்லாம் உறவுகள் ஒரே நேரத்தில் சேர்ந்து பார்த்தது இல்லை. திருமணத்தின் போதும் அநேக சொந்தங்கள் மண்டபத்தோடு கிளம்பி விட்டனர். மிகவும் முக்கியமான சிலர் மட்டுமே சத்யா பிறந்த வீட்டில் தற்போது இருக்கப் போவதாகக் கூறியிருந்தார்கள். அவர்களும் கூட இரவு இரயிலில் சென்று விடுவார்கள்.
சத்யா பெற்றோரின் உதவிக்கு அவளின் மாமா, மாமி மட்டுமே தங்குகின்றனர். அதனால் இந்தக் கூட்டம் எல்லாம் சத்யாவின் அத்தை, மாமாவிற்கு அதிசயம் தான் என்றால், சத்யாவிற்கும் அவளின் சகோதரிக்கும் பேரதிசயம் தான்.
Advertisement
சந்திரனின் சகோதரிகள் வந்திருந்த எல்லோரையும் முறை வைத்துப் பேசினார்கள். அந்த உறவு முறை எல்லாம் சத்யாவிற்கு பாதிக்கு மேல் புரியக் கூட இல்லை.
Advertisement
முதல்நாள் இவர்களின் ரிசப்ஷனுக்கு வந்திருந்த யாரையும் சந்திரனுக்குத் தெரியாது தான். ஏன் அவள் பெற்றோருக்குக் கூட அப்போது தான் தெரியும். ஆனால் அவர்களை பெயர் நினைவு வைத்துக் கொண்டால் மட்டுமே போதுமானது. கூட ஒரு சர், மேடம் சொன்னால் போதும். ஆனால் இங்கே இந்த உறவுகளின் பெயர்களோடு, முறையையும் வேறு நினைவில் வைத்திருக்க வேண்டுமே என சத்யாவிற்குப் பயமாகவே இருந்தது.
சத்யாவின் பயந்த முகம் கண்ட சந்திரனின் பெரிய தங்கை அமுதா அருகில் வந்து “அண்ணி, ஒண்ணும் யோசிக்காதீங்க. எல்லா உறவு முறையும் உள்ளூர்காரங்க தான். அடுத்து அடுத்து விஷேச வீடு வரும்போது பார்த்துத் தெரிஞ்சிக்கிடலாம்.“ என்றாள்.
“இல்லைங்க” என்றவளுக்கு அவளை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. வயது இருவருக்கும் மாதக்கணக்கில் தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் இங்கே பெயர் சொல்லி அழைத்தால் என்ன சொல்லுவார்களோ என்று யோசித்தாள்.
Advertisement
அமுதாவே “அமுதான்னு பேரைச் சொல்லுங்கண்ணி” என்றாள்.
சரி என்று தலையசைத்த சத்யா “இல்லை அமுதா. இன்னிக்கு நீங்க கூட இருக்கீங்க. இவங்களும் வேலைக்குக் கிளம்பிட்டா, யாருன்னு எனக்குத் தெரியாதே. அத்தைகிட்டே கேட்டா தப்பா நினைச்சுக்குவாங்களோன்னு தோணிச்சு. ” எனக் கேட்டாள்.
“என்னை இந்த உறவு முறைலே தான் கட்டிக் கொடுத்து இருக்காங்க. இங்கே உள்ள எல்லோரும் எங்க வீட்டிலே உள்ளவங்களுக்கும் உறவு தான். அதனால் இங்கே என்ன விசேஷம்னாலும் நாங்க வந்துடுவோம். சொல்லப் போனா நான் பேருக்குத் தான் வெளியூர்காரி. மாசம் பதினைஞ்சு நாளு இந்த ஊரில் தான் குப்பை கொட்டிக்கிட்டு கிடப்பேன். அதனால் கூட இருந்து நான் பார்த்துக்கறேன்.” என அமுதா கூறினாள்.
“தாங்க்ஸ் அமுதா” சிறு புன்னகையோடு கூறினாள் சத்யா.
சத்யாவின் உறவுகளுக்கும் லேசாக அந்தப் பயம் இருந்தது தான். சந்திரன் இராணுவத்தில் பணியாற்றுகிறான். திருச்சி சொந்த ஊர் என சத்யாவின் பெற்றோர் கூறியதை வைத்து ஓரளவு நகர வழக்கைக்கு ஏற்றவாறு இருப்பார்கள் என்று தான் எண்ணியிருந்தனர். திருமணத்தின் போது அணிந்திருந்த அணிகலன்கள் கூட சற்றுக் காடியாக தெரிந்தாலும், அது எல்லாம் குடும்ப வழக்கமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டனர்.
இவர்கள் ஊருக்கு வந்த பிறகு தான் ரொம்பவே வித்தியாசம் தெரிந்தது. வந்திருந்த ஊர்ப் பெண்கள் புடவைக் கட்டுக்கள் கூட பழைய கண்டாங்கி முறையில் இருந்தது. சந்திரனின் தங்கைகள் சாதாரணமாக புடவை அணிந்து இருந்தது மட்டுமே லேசான ஆறுதல். இவை எல்லாம் சத்யா எப்படி சமாளிக்கப் போகிறாள் என்றே யோசனை ஓடியது. இருந்தும் நாமாக எதுவும் சொல்வதை விட, அவளே இங்கே சமாளிக்கக் கற்றுக் கொள்ளட்டும் என்று வெறுமே பார்த்து இருந்தனர். அமுதாவின் பேச்சு அவர்களுக்கு சிறு ஆறுதலைக் கொடுத்தது.
அதற்குள் அங்கே இரவுச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் பற்றி உறவுப் பெண்கள் பேச ஆரம்பிக்க, சத்யாவிற்கு தலை நிமிர்த்த முடியவில்லை. என்ன நினைத்தாளோ சத்யாவின் சகோதரி, நேராக சத்யா மாமியாரிடம் சென்றாள்.
“அத்தை, சத்யா ரொம்ப நேரமா இங்கேயே உக்காந்துருக்கா. பாத்ரூம் போகணும் போலிருக்கு. எங்கே என்னனு சொன்னா, போயிட்டு, அப்படியே குளிச்சிட்டு அடுத்த அலங்காரத்துக்குப் பார்க்கலாம்” என்றாள் வேதா.
“அட ஆமாம். நானும் இதப் பத்தி நினைக்கவே இல்லையே.“ என்றவர், தன் மகளை அழைத்தார்.
“அமுதா இங்கே வா” என, அமுதா வரவும், “பின்னாலே இருக்கிற புழக்கடைக்கு இவங்களைக் கூட்டிக்கிட்டுப் போ. அங்கிருந்தே பின் வாசல் வழியா கீழே ரூமில் விட்டுட்டு வா. நீ அங்கேயே நிக்காம வந்துடு. உங்கண்ணன் கிட்டே பேசறது எல்லாம் உன் வீட்டுக்காரர வச்சுத்தான் பேசணும்” என்றார்.
பின் வேதாவிடம் “நீ உன் தங்கச்சிய அங்கே கூட்டிட்டு போயிடு. குளிக்கிறது இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும். இன்னும் எட்டு ஆகலையே. யாராவது வரப் போக இருப்பாங்க. அவங்க வரும்போது அமுதாவக் கூப்பிட அனுப்பறேன். அந்த நேரம் குளிச்சிக்கிட்டு இருக்கான்னு சொல்ல முடியாது” என சந்திரனின் அன்னை கூறினார். வேதா அவரிடம் சரி எனத் தலையசைத்து விட்டு சத்யா அருகில் சென்று, அவளை எழுப்பிப் பின் பக்கம் அழைத்துச் சென்றாள்.
தற்போது தான் சத்யா முகத்தில் சிறு ஆசுவாசம். என்ன தான் படித்துப் பட்டம் பெற்று இருந்தாலும், புது இடம், புது உறவுகள் என உள்ளுக்குள் படபடப்பாகவே இருந்தது. சற்றுத் தனிமையும், தன் பயத்தை வாய்விட்டுப் பேச வாய்ப்பும் கிடைத்து இருந்தால் இதைச் சமாளித்து இருப்பாள். அந்த வாய்ப்பு இப்போது கிடைக்கவே, தன்னைக் கொஞ்சம் சமாளித்தாள்.
வேதாவும், அவளின் அத்தையும் மெதுவாக சத்யாவிடம் பேச்சுக் கொடுத்தனர். சிறு குரலில் பொதுவாக குடும்பத்தை எப்படி அனுசரித்துப் போவது என்பது போல பேசியதோடு, மெட்ராசில் இருந்த வசதிகளை இங்கே எதிர்பார்க்காதே என எல்லாம் கூறினார். ஏனெனில் இன்னும் அங்கே அட்டாச்டு பாத்ரூம் எல்லாம் கட்டப்படவில்லை.
பின் நேரம் செல்லவும், எட்டு மணியளவில் வேதாவே சந்திரனின் அன்னையிடம் கேட்டு சத்யாவைக் குளித்து வரக் கூறி, மெலிதான அலங்காரம் செய்துவிட்டாள். அமுதாவும் அவள் தங்கை அகிலாவும் சேர்ந்துக் கொண்டனர். சிறு கேலி கிண்டல்களோடு அலங்காரத்தை முடிக்க, எல்லோரையும் இரவு உணவிற்கு அழைத்தார் சந்திரனின் அன்னை.
புதுமணமக்கள் இருவரையும் அருகருகே அமரவைத்து விருந்து பரிமாறினர். இரவு வேளை என்பதால் பலமாக எதுவும் இல்லாமல், இட்டிலி, இடியாப்பம் அதற்கு தொடுகறிகள் இவற்றோடு இனிப்புக்காக கேசரி செய்து இருந்தனர்.
சத்யா சந்திரன் அருகே அமரும்போது இருவருக்குமே சிறு வெட்கம் வந்தது. சந்திரனும் இந்த இடைவெளியில் குளித்து வேறு வேஷ்டி, ஷர்ட் மாற்றி வந்திருக்கவே, ஒருவரையொருவர் அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டனர்.
பின் பெரியவர்கள் அனைவரையும் நிற்க வைத்து மணமக்கள் வணங்கி எழுந்திருக்க, ஆண்கள் வெளிப்பக்கம் செல்லவும், பெண்கள் சத்யாவை மாடியில் கொண்டு விட்டனர். சந்திரனிடம் அவன் தங்கைகளின் கணவர்கள் பேசிக் கொண்டிருப்பது போல பாவனை செய்ய, பெண்கள் இறங்கி பின் பக்கம் செல்லவும், சந்திரனை அவனின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறு சிரிப்போடு தன் அறைக்குச் சென்றவன், அங்கே ஜன்னல் பக்கம் ஓரமாக நின்று இருந்த சத்யாவைப் பார்த்தான். கதவை அடைத்து விட்டு, அவளருகில் செல்ல, சத்யா குனிந்த தலை நிமிரவில்லை.
“என்னை நிமிர்ந்து பார் வதி” எனக் குரல் கேட்டது. யாரைக் கூறுகிறார் என்றபடி சத்யா நிமிர, மிக அருகே நின்று இருந்த சந்திரனின் முகம் கண்டு வெட்கம் கொண்டாள்.
சத்யாவை கைப்பிடித்து கட்டிலில் அமரச் செய்தவன், தானும் அருகே அமர்ந்துக் கொண்டான்.
“சத்யா, என்னை உனக்குப் பிடிச்சு இருக்கா?” எனக் கேட்க, தலையைச் சாய்த்துச் சிரித்தாள் சத்யா. சிரிப்பின் காரணம் புரிந்த சந்திரன் “நீ நினைப்பது சரிதான். இது இப்போது கேட்கவேண்டிய கேள்வி இல்லைதான். ஆனால் கேட்கும் சந்தர்ப்பம் இப்போதுதானே கிடைத்தது” என்றான்.
“நான் வேறு பதில் சொன்னால் என்ன செய்யறதா இருக்கீங்க?” எனக் கேட்டாள் சத்யா.
“உனக்கு என்னைப் பிடிக்க என்ன செய்யணும்னு கேட்பேன்” என்று சந்திரன் பதில் கூறவும், பெரிதாக சிரித்துவிட்டாள் சத்யா.
“உஸ். இன்னிக்கு இப்போ இங்கே யாரும் வரமாட்டாங்க தான். ஆனால் மற்ற நேரத்தில், நாளில் எல்லாம் வரலாம். ஏன்னா, இதுக்கு அந்த பக்கம் மொட்டை மாடி. வெயில் காலத்தில் காத்துக்காக அப்பாவும், சரவணன் அவனின் படிப்புக்காகன்னு வர வாய்ப்பு இருக்கு”
“சரி சரி. மெல்லவே சிரிக்கிறேன்.”
“என் கேள்விக்கென்ன பதில்?’
“என்னோட சம்மதம் கேட்டப் பிறகு தான் என் அப்பா, அம்மா கல்யாணமே பேசினாங்க”
“என் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் அவங்களுக்காக சம்மதம் சொல்றதும், என்னைப் பிடிச்சு இருக்குன்னு சொல்றதும் ஒண்ணு இல்லையே”
“பிடிச்சு இருக்கு சந்துரு” எனவும், சத்யா அழைத்த அந்தப் பேரில் சந்திரனுக்கு அவளின் பிடித்தம் தெரிந்தது. இப்போது இன்னும் நெருக்கமாக அவளருகே அமர்ந்தவன்,
“உன்னைப் பற்றி சொல்லு வதி “ என்றான்.
சத்யா தன் படிப்பு, காலேஜ் என்று பேசிக் கொண்டிருந்தவளை எந்தக் கணம் சந்திரன் தனக்குள் அணைத்தான் என்று அறியவில்லை. திடீர் என்று உடலில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ, சத்யா சந்திரனை நேராகப் பார்த்தாள். சந்திரனின் அனுமதி வேண்டியப் பார்வையில், சத்யாவும் கண்களால் பதில் கொடுத்தாள்.
இருவரும் சம்சார சாகரத்தின் அடுத்தக் கட்டத்தில் அடியெடுத்து வைத்தனர். விடியலில் இருவருக்கும் இடையில் இருந்த சிறு சிறு தயக்கங்களும், வெட்கங்களும் விடைபெற்றுச் சென்று இருந்தன.
error: Content is protected !!