Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மெய்யெனக் கொள்வாய்

மெய்யெனக் கொள்வாய்- 6.2

அத்தியாயம் – 6.2 

அலாரம் சத்தம் கேட்டு கண் முழித்த சத்யா, தான் இருக்கும் நிலை கண்டு மௌனமாகச் சிரித்தாள். பின் எழுந்து அமர, அந்த அசைவில் சந்திரனும் விழித்துக் கொண்டான். அறையின் மெல்லிய வெளிச்சத்தில் கடிகாரத்தைப் பார்த்து

“ஏன் அதுக்குள்ளே எழுந்துட்ட வதி?” என்றான்.

“மத்த உறவுக்காரங்க எல்லாம் எழுந்து வரதுக்குள்ளே குளிச்சிட்டு வந்துடுன்னு அத்தையும், எங்க அக்காவும் சொன்னாங்க. அதான்” 



Advertisement

“அப்படின்னாலும், ஆறு மணிக்கு நீ கீழே போனா போதும். இப்போ மணி நாலரை தான் ஆகுது”

“இல்லை. கீழே யாரும் வரமுன்னே குளிச்சிட்டு வரணும். இப்போ போனா சரியா இருக்கும்”

“குளிக்க ஏன் கீழே போகணும்?”

Advertisement

“பாத்ரூம் பின் பக்கம் தானே இருக்கு. நேத்திக்கு அங்கே தான் ரெஃப்ரெஷ் பண்ணிக்கிட்டேன்”

Advertisement

“அது எல்லோரும் உபயோகப்படுத்தறது. அத்தோட கீழே அட்டாச்டு பாத்ரூம் வீட்டிற்குள்ளே கட்டுறது அப்பா, அம்மாக்குப் பிடிக்கலை. ஆனால் நம்ம ரூமிற்கு அட்டாச்ட் பாத்ரூம் தான்” என்று சந்திரன் கூறினான்.

“ஓஓ. நல்ல வேளை. இன்னிக்கு சீக்கிரம் எழுந்துக்கிறது ஓகே. தினமும் எப்படி பண்ணப் போறேனோன்னு பயந்தேன். ஏன் இதை யாரும் சொல்லலை?”

“அம்மாக்கு அது எல்லாம் நியாபகம் இருந்திருக்காது.”

Advertisement

“அமுதா கூட சொல்லலையே”

“நான் சொல்வேன்னு நினைச்சிருப்பாள்”

“இப்போ நான் டிரஸ்க்கு என்ன பண்ணுவேன்? கீழே உள்ள ரூமில் தான் திங்க்ஸ் எல்லாம் வச்சிருந்தாங்க”

“அட என்ன கவலை உனக்கு. நைட் நாம சாப்பிடும்போது உன் திங்க்ஸ் எல்லாம் அமுதா இங்கே கொண்டு வந்து வச்சிட்டா”

“ஓ. இதோ போய் குளிச்சிட்டு வரேன்”

“கொஞ்சம் நேரம் போகட்டும் வதி. ஐஞ்சரைக்கா குளிச்சிட்டுப் போகலாம்”

“அத்தை எல்லாம் முழிச்சு இருப்பாங்களே?”

“எல்லாம் கல்யாண அசதியில் தூங்குவாங்க. நீ பேசாம இங்கேயே இரு”

“அது வரை என்ன பண்ணுறது.?

“ம். இவ்ளோ நேரம் என்ன செய்தயோ அதையேச் செய் “

சத்யா இரவு கொண்டாட்டத்தைக் கூறுகிறானோ என்று வெட்கத்தோடு பார்க்க, சந்திரன் அவளின் தலையில் தட்டி “எனக்கு ஓகே தான். பின்னாடி இன்னிக்கு முழுதும் நீதான் கஷ்டப்படுவ. பேசமால் தூங்கு” என்று தன்னோடு சேர்த்துப் படுக்க வைத்தான்.

அவனின் செயலில் சிறு வெட்கம் கொண்டாலும், ஒரு மணி நேரம் படுத்து எழுந்தாள் சத்யா. சந்திரன் கூறிய நேரம் வரை எல்லாம் தூங்காமல், ஐந்து மணிக்கு எழுந்தவள், அடுத்த அரை மணி நேரத்தில் குளித்து, உடை மாற்றிக் கொண்டு கீழே சென்றாள்.

இத்தனையிலும் சந்திரன் முழித்துக் கொள்ளாதவாறு சத்தமில்லாமல் தன் வேலைகளை முடித்தாள். முதல் முறை சிறு அசைவிற்கும் சந்திரன் முழித்ததைப் பற்றிக் கேட்ட போது, இராணுவப் பயிற்சி என்று கூறியிருந்தான். தூக்கத்திலும் புத்தி விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதிகளில் ஒன்று.  

என்ன தான் எல்லோருக்கும் கல்யாண அலுப்பு என்று கூறியிருந்தாலும், சத்யா எழுந்து சென்ற நேரத்திற்கே அவளின் மாமியார் எழுந்து வாசல் தெளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சத்தத்தில் கீழே உள்ளவர்கள் ஒவ்வொருவராய் விழித்து வர, எல்லோருக்கும் பாத்ரூம் உபயோகிப்பதில் சிரமமாக இருந்தது.

அந்த ஊரைச் சேர்ந்த ஆண்கள், அதாவது வீட்டின் மாப்பிள்ளைகள், சந்திரனின் அப்பா எல்லோரும் ஊரில் இருந்த வாய்க்கால் பக்கம் சென்றனர். பெண்களோ கிணற்றடியை உபயோகித்தனர். இதில் சத்யாவின் வீட்டினருக்குத் தான் சங்கோஜமாக இருந்தது.

சத்யாவின் அத்தான், மாமா இருவரும் பெண்கள் கிணற்றடியில் நிற்பதால், அங்கும் செல்ல முடியவில்லை. வெளியில் ஆண்களோடு செல்லவும் இயலவில்லை. அவர்களின் சிரமம் பார்த்த சத்யாவிற்கு ஆண்களை மட்டுமாவது தங்கள் அறைக்கு அனுப்பலாம் என்று நினைத்தால், சந்திரன் இன்னும் உறங்குகிறானே என்று இருந்தது.

அதற்குள் சத்யாவின் மாமியார் வந்து, “நீ விளக்கேற்றி சாமி படத்துக்கு பூ எல்லாம் போட்டு வை. சந்திரன் வந்ததும் சேர்ந்து கும்பிடலாம்” என்று விட்டு சமையலறைக்குச் சென்றார்.

சிறு தவிப்போடு சத்யா சாமியறைக்குச் செல்லும்போதே சந்திரன் மாடியில் இருந்து இறங்கக் கண்டாள். அவனிடத்தில் சத்யாவின் அக்கா கணவர், அவளின் மாமா இருவரையும் கண்ணால் ஜாடை காண்பிக்க, நெற்றி சுருக்கி யோசித்தவனுக்கு கிணற்றடி சத்தம் கேட்டு புரிந்து விட்டது.

அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தபடி “நீங்க வேணா மேலே எங்க ரூமில் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வாங்க” எனக் கூற, அவர்கள் இருவரும் சங்கோஜத்துடன் மறுத்தனர்.

சத்யாவின் மாமியார் சந்திரன் குரல் கேட்டு வந்தவர், “இரு சந்திரா. மேலே  ரூம் எல்லாம் கூட்டியப் பின்னாடி அனுப்பி வைக்கலாம். அதுக்குள்ளே அவங்களுக்கு காபி, டீ குடுத்தடறேன். “ என்றார்.

“அம்மா, எல்லாம் நானே பண்ணிட்டேன்.” என்றான் சந்திரன். அவனின் அன்னை சிறு அதிருப்தியோடுப் பார்க்க, சத்யாவோ மெச்சுதலாகப் பார்த்தாள். சந்திரன் முழித்து விடக்கூடாதே என்று தான் அவள் தன் துணிகளை மட்டும் துவைத்து விட்டு, ரூமை விட்டு வெளியில் வந்துவிட்டாள். அவனோ மற்ற வேலைகளை எல்லாம் முடித்து விட்டான். இனி அவனே தன் உறவுகளைப் பார்த்துக் கொள்வான் என்று எண்ணியபடி, தன் வேலையைத் தொடர்ந்தாள்.

அவர்களை மாடிக்கு அனுப்பியவன் மீண்டும் கீழே வரும்போது அமுதாவும், சத்யாவுமாக எல்லோருக்கும் காபி , டீ கொடுத்துக் கொண்டிருந்தனர்.

சந்திரன் வரவும் காபி கப் எடுக்கப் போகும்போது, அமுதா , “அண்ணா, முதலில் சாமி கும்பிட்டு வாங்க. அதுக்கு அப்புறம் தான் காபின்னு அம்மா சொல்லிட்டாங்க” என்றாள்.

“ஏய், நான் காபி மட்டும் குடிச்சிட்டுப் போறேன்” என, “இது நல்லாருக்கே. ரெண்டு பேருக்கும் சாமி கும்பிட்டப் பிறகு தான் காபின்னு சொல்லி, அண்ணியும் எதுவும் குடிக்காம இருக்காங்க. முதலில் போங்க” என்றாள் அமுதா.

இருவருமாக பூஜை முடித்துவிட்டு வரவும், சந்திரனின் அன்னை காமாட்சி, “ஏண்டா, சந்திரா என்னையோ, அமுதாவையோக் கூப்பிட வேண்டியது தானே ரூமைக் கூட்ட. இல்ல உன் பொண்டாட்டியக் கூப்பிட்டு இருக்க வேண்டியது தானே நீயேன் செஞ்ச?” என்றார்.

“மா, கீழே எல்லோரும் வேலையா இருந்தீங்க. அதான் நானே செஞ்சிட்டேன். இப்போ என்ன?”

“அது இல்லடா. ஆம்பள உன்னைய வீடு கூட்டுற வேலை செய்ய வச்சா, வந்திருக்கிற சொந்த பந்தம், சம்பந்தக்காரங்க எல்லாம் என்ன நினைப்பாங்க?”

“இன்னும் உன் காலத்திலேயே இருக்காதாம்மா. இப்போ எல்லாம்  புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேரும் வேலைக்குப் போற வீட்டில், ஆண்கள் சமையல்லர்ந்து எல்லா வேலையும் சேர்ந்து செஞ்சா தான் குடும்பம் நடத்த முடியும். அத்தோட நான் வேலையில் இருக்கும் போது என்னோட ரூம் சுத்தம் பண்ணுற வேலை எல்லாம் யார் செய்வா? “

“ஏண்டா, இப்போ நீதான் ஏதோ அடுத்த ஆபிசர் ஆகிட்டேன்ன்னு சொன்ன. இதுக்கு எல்லாம் ஆளுங்க கிடையாதா?”

“அதுக்கு எல்லாம் இன்னும் மூணு , நாலு படி ஆபிசர் கிரேடுக்குப் போகணும். “

“சரி அதை விடு. இதே நம்ம வீட்டு மாப்பிள்ளை, உன் அப்பா, தம்பி எல்லாம் வெளியில் வாய்க்கால் தானே போயிருக்காங்க. அவங்களை உன் ரூமில் குளிக்கச் சொல்ல வேண்டியதுதானே. நாளைக்கு மருமகன் வீட்டில் எல்லாம் என்ன பேசுவாங்க?”

காமாட்சி தன் மகனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது தான் சத்யா சமையலறையில் இருந்து அவளுக்கும், கணவனுக்குமாக டீ எடுத்துக் கொண்டு வந்தாள். மாமியாரின் பேச்சில் முகம் சுருங்கி விட, யாரும் கவனிக்கும் முன் மாற்றிக் கொண்டாள் சத்யா. 

“அம்மா, நான் இந்த மாடி எடுத்துக் கட்டி ரெண்டு வருஷம் ஆச்சு. நீதான் அப்பா, சரவணன் யாரையும் எனக்குக் கட்டினதுன்னு அந்தப் பக்கமே விடலை. மாப்பிள்ளைங்க நம்மூருக்காரங்க. அவங்களுக்கு வாய்க்கால் பழக்கம். நான் இறங்கி வரும்போது அவங்க வீட்டிலும் இல்லை. சத்யா உறவுக்காரங்களுக்கு வாய்க்கால் எல்லாம் பழக்கமில்லை. நம்ம புழக்கடையில் வீட்டுப் பொம்பளக எல்லாம் குளிக்கும் போது இவங்க எங்க போவாங்க? அதான் மாடிக்கு அனுப்பினேன்.” என்று  பேசிய சந்திரன், சத்யா கையில் இருந்து டீ எடுத்துக் கொண்டு திண்ணைப் பக்கம் சென்று விட்டான்.

இந்தப் பேச்சில் காமாட்சிக்கு மகன் தன்னை மீறியதாகத் தோன்றிவிட, லேசான முணுமுணுப்புடன் அந்த இடத்தை விட்டு தானும் சென்று விட்டார். நல்லவேளை இவர்களின் இந்தப் பேச்சுக்கள் எல்லாம் சத்யாவின் உறவினர் அறிய நடக்கவில்லை. 

-தொடரும் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!