3..2..1 Episode 5. கதிரும், நிலவும்
காலையில் கதிரவன் அழகான கதிர்களை வீச, அதை உதாசீனப்படுத்திவிட்டு, ஃபோன் கடிகாரத்தின் துணையைக்கொண்டு விடியலை அங்கீகரிக்கின்றனர் அன்றாட மனிதர்கள்.
கதிரவனோடு மௌனத்தில் கருத்தாடுவது கார்த்திக்கு மிகவும் பிடித்திருந்ததால், தனது அறையின் பால்கனியில் நின்று கதிர்களுடன் கதைத்தபடி கடிகாரத்தைக் கண்டுகொள்ளாமல் அதைக் காயப்படுத்தியபடியே அவள் நிற்க, “க்ளாஸுக்கு நேரமாச்சு. இன்னுமா நீ கிளம்பாம இங்க நின்னுக்கிட்டிருக்கிற!”, அவளுடன் அறையில் வசித்த வசந்தி வகுப்புக்குத் தயாரானபடி கூறினாள்.
வசந்தியின் வார்த்தைகள் கார்த்தியைக் கதிரவனிடமிருந்து மீட்டு பூமிக்குள் இழுத்து வந்தன. வேகவேகமாக வகுப்பிற்குத் தயாராகத் தொடங்கினாள் கார்த்தி.
இருவரும் விடுதியை விட்டு ஓடியவாறே, அருகிலிருந்த டிஃபன் சென்டரில் அவசர அவசரமாக இரண்டு இட்லிக்களை விழுங்கிவிட்டு, வகுப்பறையை நோக்கி நடந்தார்கள். வேகமாக அவர்கள் சென்றுகொண்டிருந்த போது, திடீரென ஒருவன் அவர்கள் முன் ஓடினான். அவனைத் தொடர்ந்து இன்னொருவன் பின் தொடர, அவர்கள் சற்றும் எதிர்பாராத நொடியில் துரத்திக்கொண்டிருந்தவன் கார்த்தி மீது மோத, அவள் நிலைகுலைந்து போனாள். அவள் உடம்பு நடுங்கத் தொடங்கியது.
Advertisement
மோதியவன் ஒரு நொடி அவளைக் கண்டு நிற்க, மறுநொடி நண்பன் கையில் வைத்திருந்த காகிதத்தை எடுக்க ஓடிச்சென்றுவிட்டான். ”அகாடெமில ஓடிப்பிடிச்சு விளையாடுறானுங்க. விவஸ்தைக் கெட்டவனுங்க!”, வசந்தி திட்டியவாறு, கார்த்தியைப் பார்க்க, அவளது உடல் நடுக்கத்தைக் கண்டு பயந்துபோனாள்.
”என்னாச்சு கார்த்தி? இந்த தண்ணிய முதல்ல குடி. நேத்து ராத்திரியும் சரியாத் தூங்கலை. வந்த முதல்நாளே உடம்பு எப்படி நடுங்குது பாரு!”, வசந்தி கூறிக்கொண்டே தண்ணீர் பாட்டிலைக் கார்த்தியிடம் கொடுக்க, அவள் தண்ணீர் அருந்தியதும் கொஞ்சம் நிதானமானாள்.
“வந்ததுலயிருந்தே ஏதோ அபசகுணமாவே நடக்குற மாதிரி தெரியுதுடி. எனக்கு ஊருக்கே திரும்பிப் போயிடலாமான்னு தோணுது!”, கார்த்தி கவலையோடு கூற, “ரொம்ப நல்ல முடிவு. இன்னிக்கு ராத்திரிக்கே ஊருக்கு டிக்கெட் போட்டுட்டு கிளம்பிடு. ரேஸ்ல ஒரு குதிரை அவுட்”, சேது சிரித்தவாறே கூற, கார்த்தியும், வசந்தியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
Advertisement
“பின்ன என்ன? நாளைக்குக் கலெக்டராகப் போற பொண்ணு, சகுனம்லாம் பார்த்துட்டு இருந்தால், நல்லாவா இருக்குது? வகுப்புக்கு நேரமாச்சு. இங்க காலேஜ் மாதிரி மணிலாம் அடிக்கமாட்டாங்க. நாம நேரத்துக்குப் போனால், க்ளாஸை கவனிக்கலாம். இல்லைன்னா, நமக்கு தான் க்ளாஸ் மிஸ் ஆகும். யாரும் அதைப் பத்திக் கவலைப்பட மாட்டாங்க. கண்டு கொள்ளவும் மாட்டங்க!”, சேது கூற மூவரும் அவசர அவசரமாக வகுப்புக்குள் நுழைய, முன் வரிசைகளில் அனைத்து இருக்கைகளும் நிறைந்திருக்க, பின் இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்.
Advertisement
முதல் வகுப்பாக “இந்திய அரசியலமைப்பு” அமைய, அதைக் கற்பிக்க, அகாடெமியின் முன்னாள் மாணவனான பாலா வகுப்பின் முன் நின்றிருந்தான். “ஹை ஆல். நான் பாலா, மூணாவது அட்டெம்ப்ட்ல மெய்ன்ஸ் பாஸாகி, இண்டெர்வியூக்காக காத்திருக்கிறேன். நம்ம வகுப்புக்குப் போறதுக்கு முன்னாடி, இந்திய அரசமைப்பு பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்னு எனக்குத் தெரியணும். நான் கொஞ்சம் கேள்விகள் கேட்குறேன். தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க.
“நம்ம நாட்டுல ஜனாதிபதி, அதாவது ப்ரெசிடெண்ட் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்”, பாலா கேட்டு நிறுத்த, பதில் கூற பலர் கைகளை உயர்த்தினார்கள். கார்த்தி பதில் தெரியாமல், வசந்தியைப் பார்க்க வசந்தியும் பதில் தெரியாமல் விழித்தாள்.
யாருக்கும் காத்திருக்காமல், முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு மாணவி, “இந்திய அரசியலமைப்பின் 54வது பிரிவின்படி, ஜனாதிபதி ஒரு தேர்தல் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்…”, அவள் சரளமாகக் கூறி முடிக்க கார்த்திக்கு மிரட்சியாக இருந்தது. அடுத்தடுத்த கேள்விகளை பாலா கேட்க, பதில் தெரியாமல் கார்த்தி விழிக்க, முதல் வரிசை மாணவி அனைத்து கேள்விகளுக்கும் அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்தாள்.
Advertisement
வகுப்பு முடியவும், கார்த்தியின் முழு நம்பிக்கையும் சிதறியிருந்தது. அடுத்த வகுப்புத் தொடங்கும் முன் வந்த இடைவெளியில் கார்த்தி, வசந்தி, சேது மூவரும் வகுப்பறைக்கு வெளியே வந்தார்கள். “சேது, நீ சொன்னது மாதிரி, நான் ஊருக்குக் கிளம்பினாக் கூட, ரேஸ்ல அவுட் இல்லடா. நான் ரேஸ்க்கு உள்ளேயே இல்ல. உள்ளே இருந்தால்தானே அவுட் ஆக முடியும்!”, கார்த்தி புலம்ப, “என்னாச்சு கார்த்தி. இன்னிக்கு முதல்நாள் தானே. அப்படித்தான் இருக்கும். போக போகப் பழகிடும்”, வசந்தி தானும் நம்பிக்கையிழந்திருந்தாலும், கார்த்தியைச் சமாதானம் செய்ய முயன்றாள்.
“இல்லை வசந்தி, பாலா சார் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட எனக்கு பதில் தெரியல. இவ்வளவு வருஷமா, இந்தியாவோட ஜனாதிபதியை எப்படி தேர்வு செய்யுறாங்கன்னு கூடத் தெரியாம இருந்திருக்கேன். என்னை நினைச்சால், எனக்கே வெட்கமா இருக்குது. பத்து இலட்சம் பேரை எதிர்த்துப் போட்டியிட்டு பெரிய கலெக்டராகப் போறேன்னு, என்னையே ஏமாத்திட்டு, எல்லார்கிட்டயும் சண்டைப் போட்டு வந்திருக்கேன்! தேவையில்லாம இங்க வந்திட்டேனோன்னு தோணுது”, கார்த்தி மீண்டும் புலம்பித் தவிக்க, “நீங்க எப்போ ஆரம்பிச்சீங்க?”, புதிதாக ஒரு குரல் அருகிலிருந்து கணீரென வர மூவரும் திரும்பினார்கள். எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்த அந்த முதல் வரிசை மாணவி அவர்கள் அருகில் நின்றிருந்தாள்.
“ஐ அம் மிருணாளினி, லாயர். சட்டம் முடிச்ச கையோடு, போட்டித் தேர்வுக்குப் படிக்க வந்துட்டேன். நீங்க எப்போ போட்டித் தேர்வுக்குப் படிக்க ஆரம்பிச்சீங்க?”, அவள் ஆர்வமாகக் கேட்க, “நான் கார்த்தி, இவங்க வசந்தி, சேது. போட்டித்தேர்வுக்கப் படிக்க இப்போதான் ஆரம்பிக்கிறோம்”, கார்த்தி அமைதியாகக் கூறினாள்.
“இப்போதானே ஆரம்பிக்குறீங்க. அப்போ எப்படி எல்லாம் அதுக்குள்ள தெரியணும்னு எதிர்பார்க்குறீங்க. இங்கே இருக்கிற பலரும் ஒரு வருஷமாகப் படிச்சிட்டிருக்காங்க. இந்திய அரசியலமைப்பு நான் கல்லூரியில முதல் மதிப்பெண் வாங்குன பாடம். அதனால, மத்தவங்கக்கூட தேவையில்லாம உங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறதை நிறுத்திட்டு, உங்களுக்கான பாதையை நீங்களே உருவாக்குங்க. இந்திய அரசியல் சாசனத்தில என்ன சந்தேகம் வந்தாலும், என்கிட்ட தயங்காம கேளுங்க. எனக்கு மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடுப்பது ரொம்ப பிடிக்கும்”, மிருணாளினி கூறிக்கொண்டே போக, “சொல்லித் தர்றது ரொம்ப பிடிக்கும்னா, நீங்க ஏன் டீச்சர் ஆகக்கூடாது?”, சேது குறுக்கிட அவள் முறைத்தவாறே, “சிரிப்பு சுத்தமா வரல” என்று கூறிவிட்டு அவள் தோழிகளிடம் சென்றாள்.
“சேது. அவங்க எவ்வளவு தன்மையாப் பேசுனாங்க. நீ ஏன் இப்படி சொன்ன? அவங்களோட கம்பீரம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்குது. என்ன அறிவு, என்ன தெளிவு, என்ன துணிவு.!”, கார்த்தி அடுக்கிக் கொண்டே போக, சேது குறுக்கிட்டான், “போதும் நிறுத்து கார்த்தி. எனக்கென்னவோ, அவளைப் பார்த்தா, அராத்து மாதிரி தெரியுது!”
வசந்தி உடனே மறுத்தாள், “ஏன் இருக்காது சேது. ஒரு பொண்ணு, ஆளுமையோட இருந்தால், அராத்தாகத்தான் தெரியும். எந்த ஆணால தாங்கிக்க முடியும்?”, அவள் ஆதாங்கத்துடன் கூறினாள். “அப்படியெல்லாம் என்னைத் தப்பா நினைக்காதிங்கப்பா. நிஜமாவே, அந்த பொண்ண பார்த்தால், அராத்து மாதிரிதான் தோணுச்சு. சரி.. விடுங்க நாம வகுப்புக்குப் போகலாம்!”, சேது கூற, மூவரும் மீண்டும் வகுப்பிற்குள் நுழைந்தார்கள்.
புவியியல், பொருளாதாரம் என அடுத்தடுத்த வகுப்புகள் வர, எல்லாமே கார்த்திக்குப் புதிதாக இருந்தது. ஒரு புறம் ஒவ்வொரு வகுப்பும் பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், மறுபுறம் போட்டி வெறியைத் தூண்டிக்கொண்டிருந்தது.
முதல்நாள் என்பதால், வகுப்புகள் வழக்கத்தைவிட சீக்கிரமாக முடிய, வசந்தியை அழைத்துக் கொண்டு லைப்ரரிக்கு ஓடினாள் கார்த்தி. இந்திய அரசாணை, புவியியல், பொருளாதாரம், அறிவியல் என அனைத்திலும் முதல்நிலை புத்தகங்களைத் தேடி எடுத்துக்கொண்டு விடுதிக்குச் சென்றாள்.
ஒவ்வொரு புத்தகமாக நிதானமாகப் படிக்கத் தொடங்கினாள். படிக்க படிக்க ஆர்வமும், சுவாரஸ்யமும் மேலோங்க, பக்கங்களை ஆழமாகவும் வேகமாகவும் புரட்டினாள். படித்துக்கொண்டே இருந்ததால் நேரத்தைச் சட்டைசெய்யாமல் இருந்துவிட்டாள். கார்த்தி படிப்பதால் விளக்கை அணைக்காமலே, வசந்தியும் தூங்கிவிட்டாள். நான்கு பெரிய புத்தகங்களைக் கார்த்தி படித்து முடித்தபோது, மணி பன்னிரெண்டாகியிருந்தது. புத்தகங்களை மூடிவிட்டு பால்கனிக்கு வந்தாள். எதிரே ஆண்கள் விடுதி நின்றிருந்தது. அதில் பல அறைகளில் அணையாத விளக்குகள், பலர் படித்துக்கொண்டிருந்தததைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன. தான் இருந்த ஏழாவது மாடியறை பால்கனிக்கு நேரெதிரே இருந்த அறையிலும் விளக்கு எரிந்துகொண்டிருந்ததை எதேச்சையாகக் கவனித்தாள். பந்தயத்துக்குள் ஓட ஆரம்பித்ததை அவள் மனது உறுதி செய்திருந்தது. படித்த பல பக்கங்கள், மனதுக்குள் பேரிரைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. மொட்டை மாடிக்குச் செல்லலாமே என யோசித்து, எட்டாவது மாடிக்கு மேலுள்ள மொட்டை மாடிக்கு ஏறினாள். நிலவும் நட்சத்திரங்களும் புடைசூழ, இதமான குளிர்காற்றோடு யாருமில்லாது நின்றிருந்த அந்த மொட்டைமாடியில் இரவு, ஒரு தனி ரம்மியத்தை ஏற்படுத்தியது. நிலவும் அதன் ஒளிகளும் இரைந்துகொண்டிருந்த கார்த்தியின் மனதில் பேரமைதியை ஏற்படுத்தின. காலையின் கதிர்கள் கார்த்திக்கு எவ்வளவு கம்பீரம் கொடுத்தனவோ, அதே அளவு நிலவின் ஒளிகள் அமைதியையும், ஆனந்தத்தையும் கொடுத்தன. நள்ளிரவு நட்சத்திரங்களை வெறித்துப்பார்த்துக் கொண்டே, நடுசாமத்தைக் கடந்து கொண்டிருந்தாள் கார்த்தி.
கதிரும், நிலவும் இல்லாதிருந்தால், பூமி என்னவாகியிருக்கும்?
***
