Skip to content
Post Views: 2,488
நீயறியாத மழைத்துளி ரகசியங்கள் என் உள்ளங்கைக்குள் மறைந்திருக்க
மழைவான காலத்தில் ஒற்றை குடைக்குள் உன்னுடன் நான்!
அவனது கேள்வியில் சில்லென்று குளிரெடுத்தது எனக்கு.
“இந்த ஹோட்டல்லே ரொம்ப குளிருது இல்ல ஷ்யாம்?” பேச்சை மாற்ற முயன்றேன் நான். அந்த கனவை சாதாரணமாக விட முடியவில்லை அவனால்.
Advertisement
“பொதுவா எனக்கு நிறைய கனவு வரும். ஆனா இந்த கனவு எனக்கு என்னமோ சொல்லுது பாப்பா. உள்ளுணர்வு என்னமோ சொல்லுது” அவன் என் கண்களுக்குள் பார்த்துக்கொண்டே சொல்ல சொல்லி வைத்தார் போல் என வயிற்றுக்குள்ளே ஆனந்த அசைவுகள்.
“ஆமாம். ஆமாம். உன் அப்பாதான். சும்மா இருடா கொஞ்ச நேரம்.”. மனதிற்குள் சொல்லிக்கொண்டு என் வயிற்றுக்குள் இருக்கும் எனது மகனிடம் அவனது அப்பாவை அடையாளம் காட்டினேன் நான்.
“என்னவா இருக்கும் நீ சொல்லு” அவன் என்னை பார்வையால் ஊடுருவினான். அவனது கனவும் கேள்வியும் எனக்கு நிறையவே வியப்பு. கோபத்தின் மறு உருவத்தை ஒரு தந்தையாக பார்த்த ஆச்சரியம் எனக்கு.
Advertisement
என்ன சொல்ல அவனிடம்? நீ அறியாமல் நான் உனக்கு செய்த துரோகம்தான் உன் குழந்தை என் வயிற்றில் வளர காரணம் என்று சொல்வதா?
Advertisement
ஆறு மாதம் முன்பு அப்படி ஒரு செயலை செய்ய எங்கிருந்து எனக்கு தைரியமும், வேகமும் வந்தது என்பது இன்று வரை எனக்கு தெரியவில்லையே.
அதை அவனிடம் எப்படி சொல்லி விளக்க. அப்படியே சொல்லிவிட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவனிடம் இருக்கிறதா என்ன?
“அது.. வந்து… எனக்கு தெரியலையே ஷ்யாம்” நான் தடுமாற சித்தாரா என்னை கைப்பேசியில் அழைத்து காப்பாற்ற
Advertisement
“சொல்லு சித்தாரா” அவனை விட்டு பார்வையை விலக்கி கொண்டேன் நான்.
அங்கிருந்து ஆயிரம் நலம் விசாரிப்புகள். எல்லாவற்றுக்கும் ஒற்றை வார்த்தை பதில்களையே நான் கொடுத்துக் கொண்டிருக்க, என்ன பக்கத்திலே ஷ்யாம் இருக்கானா கேட்டும் விட்டாள் அவள்.
“ம். ஆமாம்” இது நான்.
“பேசாம சொல்லிடு அவன்கிட்டே. இதெல்லாம் ரொம்ப நாள் வேலைக்காகாது” சித்தாரா சொல்ல
“எல்லாம் ஆகும். நீ இப்போ கொஞ்சம் போனை வை.” சொல்லிவிட்டு நிமிர்ந்தேன் நான். என்னையே பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.
“சித்தாராக்கு நீ இங்கே வந்தது தெரியுமா? ரொம்ப விசாரிக்கிறா உன்னை?” அவன் பார்வை எனக்கு கொக்கி போட்டது. அந்த நேரத்தில் அங்கே வந்து அமர்ந்தாள் சங்கீதா.
இருவரும் அவளை பார்த்து நட்பாக புன்னகைக்க, அவள் அருகருகே அமர்ந்திருந்த எங்கள் இருவரையும் ரசனையுடன் பார்த்தாள். இங்கே வந்திருக்கும் எங்கள் துறையை சேர்ந்த பலருக்கும் எங்கள் இருவரையும் சேர்த்து பார்த்ததில் நிறையவே மகிழ்ச்சி.
“உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்த்து ஆறு மாசம் இருக்குமா?. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ப்ரோக்ராம்லே மலரே மௌனமா உண்டா? உண்டா என்ன? வேணும். கண்டிப்பா வேணும். நீங்க பாடலைன்னா நான் விட மாட்டேன்”
“தெரியலை ஷ்யாம் என்ன நினைக்கரார்னு. ஒரு வேளை உங்க கூட பாடுவாரோ என்னமோ?” என் தொனி அவனுக்குள் ஊசி ஏற்றியது போல் நிமிர்ந்தான். என்னை சற்றே முறைத்துத் திரும்பினான் கோபக்காரன்.
“கண்டிப்பா பாடுவோம் சங்கீதா” அவளிடம் சொன்னான் அவன். நான் ஷ்யாமை பார்த்து செய்த புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள்.
“தாங்க் யூ ஸோ மச்” சொன்னாள் சங்கீதா.
மூவரும் சாப்பிட்டு முடித்ததும் அவள் விடைப்பெற்று கிளம்ப
“நீ சீக்கிரம் போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா. உன்னை ஒரு ஸ்பெஷல் பிளேஸ்க்கு கூட்டிட்டு போறேன்” என்னிடம் சொன்னான் ஷ்யாம்.
“இந்த ட்ரெஸ்க்கு என்ன ஷ்யாம்?”
“ஸாரி எல்லாம் அங்கே வேலைக்கு ஆகாது. வேறே ஜீன்ஸ் மாதிரி ஏதாவது மாத்திட்டு வா”
“அய்யோ.. ஏன் ஷ்யாம்?” பதறித்தான் போனேன் நான்.
“ஹலோ.. எதுக்கு இப்போ டென்ஷன் ஆறே. வேறே ட்ரெஸ் மாத்திட்டு வான்னா மாத்திட்டு வர வேண்டியதுதானே?”
“அப்படி எங்கே போறோம் ஷ்யாம்?”
“சொல்றேன் சொல்றேன் டென் மினிட்ஸ்லே ரெடியாகி வா” ஆணையிட்டு முடித்துக்கொண்டான் அவன்.
அவனுக்கெங்கே புரிகிறது எனது கவலை. அதே நேரத்தில் எனக்குள்ளே நிறையவே மகிழ்ச்சி தோரணங்களும் ஊஞ்சலாடின. அவனுடன் வெளியில் செல்வது எனக்கு பேரானந்தம் அல்லவா? சட்டென சொல்லொண்ணாத ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது என்னை.
நல்ல வேளையாக கைவசம் இரண்டு சல்வார்கள் கொண்டு வந்திருந்தேன். சற்றே தொளதொள வகைதான் அவை. அதை வைத்து சமாளிக்க முடிவு செய்தேன்.
அறையை அடைந்து, அதில் ஒன்றை அணிந்து துப்பட்டாவை மடிப்புகள் வைத்து சற்று சரித்து வளைத்து வயிற்றை மறைத்து பின் செய்துக்கொண்டு எல்லாவற்றையும் திருப்தியாய் சரி பார்த்துக்கொண்டு பத்தே நிமிடங்களில் கீழே இறங்கினேன் நான்.
“சரியா இருக்கா ஷ்யாம் ட்ரெஸ்” கேட்டும் வைத்தேன் அவனை. அவனுக்கு எதுவும் தவறாக தெரியவில்லை என்பதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டி இருந்தது எனக்கு.
“அழகா இருக்கு பாப்பா” என்றான் புன்னகையுடன்.
என் முகத்தில் நிறைவும், துளியே துளி வெட்கமுமாய் ஒரு புன்னகை. அவனுக்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை என்பதில் கொஞ்சம் திருப்தி.
“எங்கே போறோம் ஷ்யாம்” முதுகில் தொங்கும் ஒரு பேக் பேகுடன் நடந்தான் அவன். அவனுடன் நடந்துக்கொண்டே நான் கேட்க
“ஒரு காட்டுக்குள்ளேன்னு வெச்சுக்கோயேன். உனக்கு நிஜமா பிடிக்கும் பாப்பா” சொன்னவனின் முகத்தில் அத்தனை அன்பு.
அடுத்த சில நிமிடங்களில் எங்கள் கேப் சிங்கப்பூரின் சாலைகளில் வழுக்கிக்கொண்டு கடந்துக்கொண்டிருந்து. சாலையின் இரு பக்கங்களிலும் மண் தரையே இல்லாமல் புற்களே நிறைந்திருந்தன.
இரு சக்கர வாகனங்களை விட நான்கு சக்கர வாகனங்களே அதிகம் கண்ணில் பட்டன. எல்லாரிடமும் ஒரு சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டு இருந்தது. ஒருவரை ஒருவர் முந்திச்செல்லும் பழக்கம் கூட தென்படவில்லை. ஹார்ன் சத்தம் கூட அதிகம் கேட்கவில்லை.
இருவருமே சற்று ஆயாசமாக பின்னால் சாய்ந்து அமர்ந்திருந்தோம்.
நான் சாலையில் பார்வையை வைத்துக்கொண்டே பயணித்துக்கொண்டிருந்த நேரத்தில் என்ன தோன்றியதோ என்னை திரும்பிப் பார்த்து புன்னகைத்தான் எனதருகில் அமர்ந்திருந்த ஷ்யாம்.
ஆறு மாதத்துக்கு முன்னால் இந்த கோபக்காரன் ஆடிய ஆட்டம்தான் எனக்கு ஞாபகம் வந்தது.
“அந்தப் பாட்டு எனக்கு ரொம்ப சென்டிமென்டான பாட்டு. அதை ஷ்யாமோட மட்டும்தான் பகிர்ந்துக்க முடியும்” அன்று அந்த விழாவில் நான் சொன்னேனே, அந்த வார்த்தைகளை நான் சொல்லி முடிந்தவுடன் அப்பட்டமாக மாறிப்போனது ஷ்யாமின் முகம்.
வீட்டுக்கு திரும்பும் நேரத்தில் அவன் காரை செலுத்திக்கொண்டிருக்க அப்படி ஒரு கோபம் அவனுக்குள் பொங்கிக் கொண்டிருப்பதை என்னால் நன்றாகவே உணர முடிந்தது. இதில் இன்னொரு பெரிய விஷயம் என்னவென்றால் அன்று எங்களுடன் அந்த விழாவுக்கு சித்தாராவும் வந்திருந்தாள் என்பது.
மூவரும் அவன் வீட்டுக்கு வந்து இறங்கினோம். உள்ளுக்குள் ஏறிக்கொண்டிருந்த கொதிப்பை அடக்க வழி தெரியாது வீட்டுக்குள் இங்குமங்கும் நடந்து கொண்டே இருந்தான் ஷ்யாம்.
நானும் சித்தாராவும் சோபாவில் அமர்ந்து அவனையே பார்த்திருந்தோம். அவனது கடந்த கால வலிகள், அதனால் அவனுக்கு “கொலைக்காரன்” என்ற பட்டம் இவையெல்லாம்தான் அவனது இந்த கோபத்துக்கும், மறுப்புக்கும் காரணம் என்றே நாங்கள் நினைத்தோம்.
சாருவுக்காக அவன் தனாவிடம் கொடுத்திருக்கும் அந்த வாக்கை பற்றி அப்போது எங்கள் இருவருக்குமே தெரியவில்லை,
‘அப்படி என்ன தவறு செய்து விட்டேன் நான்?’ எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். ‘காதலிப்பது ஒன்றும் அத்தனை பெரிய குற்றமில்லையே?’
என்னை அவன் நேரடியாக கேட்டால் ஆமாம் என்று ஒப்புக்கொள்வது என்றே முடிவு செய்திருந்தேன்.
சில நிமிடங்கள் கழித்து, கோபத்துக்கு ஒரு வடிகால் தேடி வழக்கம் போல் சதுரங்க அட்டையில் காய்களை அடுக்கலானான் ஷ்யாம். ஏதோ ஒரு உந்துதலில் நானும் அவனெதிரில் சென்று அமர்ந்தேன். மௌனமாக விளையாடிக் கொண்டிருந்தோம் நாங்கள். அவன் முகத்தில் இருந்த இறுக்கம் மட்டும் தணியவே இல்லை.
சதுரங்கம் எனக்கு பழகியிருந்தது. பல நேரங்களில் அவன் ஜெயித்து விடுவான் என்றாலும் சில நேரங்களில் நான் அவனை ஜெயிக்க பழகியிருந்தேன்.
அன்றும் அவனை நான் ஜெயித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில்
“யார் ஜெயிச்சிட்டிருக்காங்க?” என்றபடியே அருகில் வந்து அமர்ந்தாள் சித்தாரா
“நான்தான்” அவளைப் பார்த்து கண் சிமிட்டினேன் நான்.
“அப்படியா? உன்னை தோற்கடிச்சு காட்டட்டுமா?” என்றாள் என்னையும் குடையும் பார்வையுடன்.
“அதெல்லாம் முடியாது” என்றேன் நான் வீராப்பாக.
“இப்போ நான் ஒரு கேள்வி கேக்கறேன். நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா இல்லையா?”
விருட்டென ஒரு சேர நிமிர்ந்தோம் நாங்கள் இருவரும்.
“இப்போ ஷ்யாம் ஜெயிச்சா நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்கனு அர்த்தம். நீ ஜெயிச்சா உங்க ரெண்டு பேருக்குள்ளே எதுவுமே இல்லைன்னு அர்த்தம். பார்க்கலாமா?”
தனது பங்குக்கு குட்டையை குழப்பி விட்டு மீன் பிடிக்கக் காத்திருந்தாள் அந்த ராட்சஸி. நாங்கள் இருவரும் சிலையானதைப்போல் அமர்ந்திருந்தோம் சில நொடிகள்.
அதன் பின்னால் அவன் விழி நிமிர்த்தி என் முகம் பார்த்தான். அந்த பார்வையில் சில நூறு நெருப்புத்துண்டுகள். அப்போது காய் நகர்த்துவது என்னுடைய முறை. விரல்கள் அசைய மறுத்தன. இருந்தும் எனக்குள்ளே ஒரு சின்ன வீம்பு.
அவன் முகத்தையும் என் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் சித்தாரா.
சதுரங்க அட்டையில் முன்னேறிக்கொண்டிருந்த எனது ராணி மெல்ல பின் வாங்கினாள். எனது ராணியால் கட்டபட்டிருந்த அவனது ராஜா என்னை நோக்கி முன்னேறினான். விரும்பியே தோற்றேன் அவனிடத்தில். அவனை விரும்பியே தோற்றேன் அவனிடத்தில்.
கைதட்டி உற்சாகமாக கூவினாள் சித்தாரா. “சீக்கிரம் “ஐ லவ் யூ” சொல்லி கல்யாணம் பண்ணிக்கோங்க பசங்களா”
பெரிய மனுஷியாய் எங்கள் இருவர் தலையிலும் குட்டிவிட்டு அகன்றாள் அவனது அத்தை மகள். ஏதோ எங்கள் இருவருக்கிடையில் இருந்த ஒரு மௌனத்திரையை கிழிதெறிந்து விட்டத்தைப் போன்றதொரு திருப்தியில் சென்றுவிட்டிருந்தாள் அவள்.
அவள் அகலும் வரை கோபத்தை உள்ளுக்குள் புதைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு கோபக் குன்றாய் அமர்ந்திருந்தான் ஷ்யாம். பின்னர் தன்னை சமன் படுத்திக்கொண்டு
“உன்கிட்டே கொஞ்சம் பேசணும் சந்தியா” என்றான் நிதானமாக. பால்கனிக்கு நடந்தவனை தொடர்ந்தேன் நான்.
“நீ என்னை லவ் பண்றியா?” என்றான் பால்கனியின் கைப்படி சுவற்றில் கை ஊன்றி நின்றுக்கொண்டு.
“ஏன் ஷ்யாம் தப்பா?” என்றேன் நான் எனது மோதிரத்துடன் விளையாடியபடியே.
“தப்புதான்” என்றான் அவன் அழுத்தமாக.
“எனக்குத்தெரியும். நீங்க உங்க கடந்த காலத்தை பத்தியே யோசிச்சிட்டு இருக்கீங்க. அதை மறக்கறதுக்கு நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.” நான் அவசரமாக சொல்ல என்னை தீர்கமாக பார்த்தான் ஷ்யாம்.
“உன் மனசிலே இந்த மாதிரி எண்ணங்கள் வந்ததுக்கு எந்த வகையிலேயாவது நான் காரணமா இருந்திருந்தா என்னை மன்னிச்சிடு. என்னாலே உன்னை மனைவியா ஏத்துக்க முடியாது சந்தியா. தயவு செய்து உன் மனசை மாத்திக்கோ”
கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்துக்கேட்டேன் “முடியாதுன்னா என்ன பண்ணுவீங்க?”
“இந்த ஜென்மத்துக்கு உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்” சொன்னான் அவன் உறுதியாக.
“அதையும் பார்க்கலாம் அது உங்களாலே கண்டிப்பா முடியாதுன்னு நான் சொல்றேன்.” என்றேன் நான் வீம்பாக. ”நான் என் மனசை மாதிக்கறதா இல்லை”
“இதுக்கு மேலே நான் உன்கிட்டே பேசறதா இல்லை. இனிமே உன்கூட பாடறதாவும் இல்லை. தயவுசெய்து இங்கிருந்து கிளம்பு” முடித்திருந்தான் அவன்.
அதன் பிறகு மொத்தமாக தவிர்த்திருந்தான் என்னை. எனது கைப்பேசி அழைப்புகளை கூட ஏற்கவில்லை அவன். நாங்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்த திரைப்படத்தின் பாடல்களை சங்கீதாவுடன் இணைந்து பாடினான்.
அடுத்து வந்தது ஒரு இசை நிகழ்ச்சி. நான் அழைக்கப்படவில்லை. இருந்தாலும் டிக்கெட் வாங்கிக்கொண்டு சென்று அமர்ந்தேன். மேடையில் வந்து நின்றது என்னிசை. எனக்கே எனக்கான என்னிசை.
வழக்கமான கரகோஷங்கள் அங்கே நிரம்பிக் கிடக்க மேடை மேலே நின்றவனின் பார்வை என்னைத்தொட தவறவேயில்லை. நான் இல்லாமலே இசைக்க ஆரம்பித்தான். எப்போதும் போல் வெள்ளமாய் அவனிசையும், அவன் குரலும் என் உயிர் அள்ளிச்சென்றது.. ஷ்யாமுக்கு இணையாக சங்கீதா இசைத்துக்கொண்டிருந்தாள்.
அடுத்து நான் எதிர்ப்பார்த்ததைப் போலவே துவங்கியது மலரே மௌனமான. நான் உடைந்து போவேன் என தெரிந்தும் சங்கீதாவுடன் ரசித்து ரசித்து உருகிக்கொண்டிருந்தான் ஷ்யாம். அவளது குரல் குழைவுகளை மெலிதான கைதட்டல்களால், மற்றும் கண் அசைவுகளால் பாராட்டிக்கொண்டிருந்தான்.
அதே நேரத்தில் எனக்கே எனக்கு சொந்தமான அவனது இசையும் அவனும் என்னை விட்டு வெகு தூரம் போய்விட்டதைப் போன்றதொரு உணர்வில் எனது உள்ளத்தின் ஒவ்வொரு இழையாய் அறுந்து போய்க்கொண்டிருந்தது.
பாடல் முடிய நான் எனது அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருக்க எனது பக்கம் பார்த்தானே ஒரு பார்வை. உனக்கும் எனக்குமான சொந்தமும் பந்தமும் இதோடு முடிந்தது என சொல்லி சென்றது அது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இரண்டு மூன்று இசை நிகழ்ச்சிகள். எதற்கும் எனக்கு அழைப்பு இல்லை. ஆனால் எல்லாவற்றிலும் மலரே மௌனமா தவறாமல் இடம்பெற்றது.
அவன் என்னை விட்டு விலகியதா? அல்லது அவனிசை என்னை விட்டு விலகியதா? எது என்னை அதிகமாக பாதித்தது என்பது எனக்கே தெரியவில்லை. ஆனாலும்
என்னுடைய வேதனைகளுக்கு மருந்தாய் மறுபடியும் அவன் இசையையே நாடினேன். என் காதுகளுக்குள் எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்களில் அவனை பார்த்துக்கொண்டேயிருந்தேன். அதற்கு மேல் எனக்கு முழு ஆறுதல் சித்தராவாகத்தான் இருந்தாள்.
அவள் வீடு, அவள் வீட்டு அருகில் இருந்த அவளது சின்ன ஆராய்ச்சிக் கூடம் என நான் இந்த இரண்டு இடங்களில் மட்டுமே அடைந்துக்கிடந்தேன் நான்.
“கொஞ்ச நாள் எனக்கு டைம் குடு. நான் அவன்கிட்டே பேசி சரி பண்றேன்” சொல்லிக்கொண்டேதான் இருந்தாள் அவள். அப்போதுதான் திடீரென எனக்கு தெரிய வந்தது அந்த விஷயம்.
“ஹேய்.. தூங்கிட்டியா பாப்பா. எழுந்திரு இறங்கணும்” பழைய நினைவுகளில் கண் மூடி சாய்ந்து கிடந்தவளை கலைத்து எழுப்பியது ஷ்யாமின் குரல். நாங்கள் சாங்கி படகுத்துறைக்கு வந்து சேர்ந்திருந்தோம்.
“போட் லே போறோமா ஷ்யாம்?” விழிகள் விரிய கேட்டேன் நான்.
“எஸ்” புன்னகைத்தான் அவன்.
மொத்தம் பன்னிரண்டு பேர் பயணம் செய்யக்கூடிய அந்த பம் போட்டில் ஏறி அமர்ந்தேன் நான். என்னருகில் ஷ்யாம். கிளம்பியது படகு. கடல் அவ்வளவு ஆர்ப்பரிப்பு இல்லாத்தால் அலைகளில் அலட்டல் இல்லாமல் மேலும் கீழுமாக தவழ்ந்துகொண்டிருந்தது படகு.
இளம் பச்சை நிற கருப்பு கோடுகள் போட்ட டி.ஷர்டும், அதற்கேற்ற கருப்பு நிற பேண்டும், தலையில் மாட்டப்பட்ட குளிர் கண்ணாடியுமாய் அருகே அமர்ந்திருந்தவனை மனதார ரசித்தேன் நான்.
எப்போதும் சிங்கப்பூரை கொளுத்தி எடுக்கும் வெயில் அன்று இல்லை. கடல் காற்று முழுவேகத்தில் என் முகம் மோத, தலையை அந்த சின்ன ஜன்னலுக்கு வெளியே நீட்டி ஆழ்ந்து ஸ்வாசித்துக்கொண்டேன்.
அதற்குள் என் மகனுக்கு அவசரம். உள்ளுக்குள் சுழன்றானோ, மிதந்தானோ தெரியவில்லை வயிற்றுக்குள் அடுத்ததடுத்து நிறைய அசைவுகள். தகப்பனுடன் ஒன்றாக பயணிக்கும் ஆனந்தமா அவனுக்கு? தெரியவில்லை.
இந்த ஆனந்த நொடிகளை எனது மனக்கண்ணில் படம் பிடித்து வைத்துக்கொண்டேன். பிற்காலத்தில் எனது தனிமை காலங்களில் புரட்டிப்பார்க்க உபயோகப்படலாம்.
“ஒரு போட்டோ ஷ்யாம்?” அவனது அனுமதியுடன் அந்த நொடியை கைப்பேசியிலும் பதித்துக்கொண்டேன்.
கடல் பயணம் எனக்குள் லேசான தலை சுற்றலையும், குமட்டலையும் விதைக்கவும் தவறவில்லை. ஆனால் அதன் பாதிப்பு அதிகமாவதற்குள், அடுத்த பத்து நிமிடங்களுக்குள் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்திருந்தது.
“வெல்கம் டு புலாவ் உபின்” எனும் பெயர் பலகை எங்களை வரவேற்றது. நான் விழிகள் விரிய அவனை பார்க்க
“இது கூட ஒரு குட்டித் தீவு பாப்பா” என்றான் அவன்.
சிங்கப்பூரின் பழமையான கிராமம் எங்கள் கண் முன்னே நின்றது.. மரங்களும், பறவைகளும் கூடிய ஒரு ஆனந்த சூழ்நிலையின் முன்னோட்டம் என்னை வரவேற்றது.
அந்த கிராமத்தின் சாலைகளில் இரு புறமும் மரங்கள் அடர்ந்திருக்க, மாங்குரோவ் காடுகளும், அழகு கடற்கரைகளும் அங்கங்கே மனம் கவரும் இயற்கை வளங்கள் கூடிய பகுதிகளும் நிறைந்த ஒரு கிராமம் இது. ஆங்கங்கே சிறு சிறு வீடுகளும் உண்டு.
அந்த பகுதியை சுற்றிக்காட்டவென இருந்த வழிக்காட்டிகள் எங்களை சுற்றிக்கொள்ள, அவர்களை அழகாக தவிர்த்துவிட்டு என் முகம் பார்த்தான்.
“நாம ரெண்டு பேர் மட்டும் அப்படியே சுத்துவோம் என்ன சொல்றே?”
எல்லையில்லா மகிழ்ச்சியுடன் நான் தலையசைக்க அவன் அந்த பகுதியின் மேப்பை வாங்கி வர செல்ல சரியாக அந்த நேரத்தில் என்னை தாக்கியது அந்த அதிர்ச்சி.
என் கண்ணுக்கெட்டும் சிறு தூரத்தில் ஆளுக்கொரு சைக்கிளில் ஏறிக்கொண்டு நகர்ந்துக்கொண்டிருந்தனர் தனாவும், சாருவும்.
“இவர்கள் எப்போது இங்கே வந்தார்கள்? இவர்களை ஷ்யாம் பார்த்தால் என்னவாகும்? கண்டிப்பாக இந்த நாளை நாங்கள் நால்வரும் ஒன்றாக கழிக்க வேண்டியிருக்கும்.” நினைக்கும் போதே எனதுள்ளம் தளர்ந்தது.
“இறைவா அவர்கள் அவன் கண்ணில் படாமல் இருக்க வேண்டும்” நான் வேண்டிக்கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் மிதி வண்டிகள் சற்றே தூரத்துக்கு சென்றுவிட என்னருகில் வந்தான் ஷ்யாம்.
“பாப்பா, இங்கே மொத்தமா பத்து கிலோமீட்டர் தூரம் இருக்கு. இதுக்கு சைக்கிள் வாடகைக்கு எடுத்திட்டு போனா நல்லா இருக்குமாம். வா உனக்கு எந்த சைக்கிள் சரியா இருக்கும் பாரு”
”சைக்கிளா? நானா?”. அலறித்தான் விட்டேன் நான். இந்த நிலையில் நான் எப்படி சைக்கிள் ஓட்ட. இதை அவனிடம் சொல்லிக்கொள்ளவும் இயலவில்லை.
“ஏன் பாப்பா. சைக்கிள்தானே? என்ன பிரச்சனை. வா சூஸ் பண்ணு” அவன் விடாமல் கேட்க, அவர்கள் இருவரையும் பார்த்த அழுத்தம் ஒரு புறம் சொல்லமுடியா எனது சூழ்நிலை மறுபுறம் இரண்டுமே சேர்ந்து எனது கண்களை குளமாக்கி விட்டிருந்தன.
“ப்ளீஸ் ஷ்யாம் சைக்கிள் வேண்டாம்” எனது குரல் கூட உடைந்து போகும் எல்லையில் நிற்க
“ஹேய்.. ஹே.ய்.. பாப்பா எதுக்கு பாப்பா கண்ணிலே தண்ணி? இது ஒரு சாதாரண விஷயம். சரி இங்கே டாக்சி கூட இருக்கு. அதிலே சுத்துவோம் வா. அப்பப்போ கொஞ்ச தூரம் நடப்போம். அது முடியும்தானே உன்னாலே?” என்றான் ஆறுதலாக கண்ணீரை துடைத்துக்கொண்டு தலையசைத்தேன் நான்.
“இப்போவெல்லாம் அடிக்கடி உன் கண்ணிலே தண்ணி. அழுமூஞ்சி வா”
‘அழு மூஞ்சியாகவே இருந்து விட்டுப்போகிறேன் போ. இந்த நாளை மட்டும் எனது நினைவு பெட்டகத்தின் பொன்னாளாக மாற்றிவிடு அது போதும்” நான் எனக்குள்ளே சொல்லிக்கொண்டது அவனுக்கு கேட்டிருக்க நியாயமில்லை. டாக்சியில் ஏறி நாங்கள் முதலில் அடைந்த இடம் பட்டாம் பூச்சி குன்று.
இரு புறங்களிலும் மரங்கள். விதம் விதமான பூக்களை ஆங்காங்கே தொட்டு உரசி பறந்து செல்லும் விதம் விதமான வண்ணங்களில் வண்ணத்து பூச்சிகள், இனிமையான சங்கீதமாய் பறவைகளின் ரீங்காரங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக எனது கைக்கருகில் என்னவன். இதை விட சொர்கமொன்று இருக்கிறதா இந்த பூமியில். கண்டிப்பாக இல்லையென தோன்றியது எனக்கு.
தனாவும், சாருவும் கண்களில் தென்படாதது எனக்கு நிறையவே மகிழ்ச்சியை கொடுத்தது.
‘சாரு வந்திருக்கா ஷ்யாம். அதை நான் உங்ககிட்டே நான் சொல்லலை. தப்புதான். ஆனால் எனக்கு வேறே வழி இல்லை இன்னைக்கு. ஐ.யாம் ஸாரி ஷ்யாம்”
மனதிற்குள்ளே அவனிடம் மன்னிப்பு வேண்டிக்கொண்டே அந்த பச்சை பசேல் மேடு பள்ளங்களை சர்வ ஜாக்கிரத்தையாக கடந்துக் கொண்டிருந்தேன்.
“பார்த்து பாப்பா” நான் தடுமாறுவதை பார்த்து அவ்வப்போது அவன் என் கரம் பிடித்துக்கொண்டான். அவ்வப்போது நான் அவன் தோள்களை பற்றிக்கொண்டேன். ஆனந்தத்தின் எல்லையில் நின்றிருந்தேன் நான்.
எப்போதும் விட இன்று எனது மகனின் ஆட்டமும் சற்று அளவில்லாமல்தான் இருக்கிறது. இதையெல்லாம் ஷ்யாமிடம் சொல்லிக்கொள்ள மனம் தவித்தது. கட்டுப்படுத்திக்கொண்டேன்.
சொல்லிவிட்டால் அவன் ஏற்றுக்கொள்வானா? அவன் ஒரு புறம் இருக்க வயதிற்கு வந்த பிறகு அவன் எனக்குள்ளே வந்த கதையை என் மகன் அறிந்தால் அவன்தான் ஏற்றுக்கொள்வானா? பதிலில்லை என்னிடத்தில்.
ஆனால் நான் அந்த காரியத்தை, அவனுக்கு அப்படி ஒரு துரோகத்தை செய்யத்துணிந்த அந்த நேரத்தில் இத்தனை கேள்விகள் இல்லையே என்னிடத்தில். எது கொடுத்தது இப்படி ஒரு தைரியம். இன்று வரை புரியவில்லையே எனக்கு.
தொடரும்
error: Content is protected !!