மெய்யெனக் கொள்வாய் – 7.2
அத்தியாயம் – 7.2
சத்யாவிற்கு என்னவோ போலிருக்க, முகம் வாடிப் போனது. அதைக் கவனித்த சந்திரன் “சத்யா, எங்கம்மா சொன்னதுக்காக அவர் பேசறார். நீ ஏதும் மனசில் வச்சிக்காத.” என்றான்.
“பெரியப்பா நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனால் ஒண்ணுமே இல்லாம அம்மா ஏன் இப்படிப் பேசிட்டு இருக்காங்கன்னு தெரியல. நான் என்னனு பார்க்கறேன்” என்று சொல்ல, பெரியாப்பவும் “பார்த்துக்கோப்பா” என்று கூறி அனுப்பி வைத்தார்.
சந்திரனின் பெரியப்பா வீட்டில் இருந்து கிளம்பிய பின், இருவரிடத்திலும் மௌனம் மட்டுமே. திருமணம் முடிந்து இன்று வரை இருவருக்குள்ளும் எந்த சங்கடமும் வந்தது இல்லை. அவர்களுக்கு இடையேயான உறவு தாம்பத்தியம் தாண்டி கருத்துப் பகிர்தலும் நல்ல முறையிலேதான் இருந்தது.
Advertisement
இராணுவத்தில் தன் பணி, சந்திரனுக்குக் கிடைக்கும் சலுகைகள் என தன்னைப் பற்றித் தெளிவாகவே சத்யாவிற்கு கூறியிருந்தான். தற்போது சந்திரனுக்குக் குடியிருப்பு வசதி கிடைத்தாலும், சில வருடங்கள் போகட்டும். அதன் பின் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்கலாம் என்று கூறியதற்கு சத்யாவும் சம்மதித்தாள்.
சந்திரனின் தம்பி படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்த பிறகு என்று காரணம் கூறினாலும், உள்ளுக்குள் அடுத்து தங்களுக்கு குழந்தை என்று வந்துவிட்டால் தெரியாத இடத்தில் சத்யா சமாளிப்பது கடினம் என நினைத்துக் கொண்டான். சத்யாவிற்கு துணையாக யாரையும் வரச் சொல்வது கடினம். சந்திரன் பணியிட சூழ்நிலை வீட்டின் பெரியவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது. மொழிப் பிரச்சினையும் இருக்கும்.
சத்யா சமாளித்துக் கொள்வாள் என்றாலும், பெரியவர்கள் துணை தேவைப்படும் சமயத்தில் எல்லோருக்கும் சிரமம் தான். உடன் வேலை செய்பவர்கள் வீட்டுப் பெண்கள் படும் கஷ்டம் எல்லாம் பார்ப்பதால் சந்திரனின் எண்ணம் தற்காலிகமாக சத்யா தன் வீட்டிலேயே இருக்கட்டும் என்பதாகவே இருந்தது.
Advertisement
சத்யாவும் எடுத்த உடன் சந்திரனோடு செல்ல முடியும் என்று எண்ணவில்லை. மிலிட்டரி ப்ரொசீஜர்ஸ் தனி என்பது எல்லாம் தெரியும். இவர்கள் திருமணம் முடிந்த காலக்கட்டத்தில் தனிக்குடித்தனம் எல்லாம் அத்தனை எளிது கிடையாது. வெளியூரில் வேலைப் பார்க்கும் மகன்களுக்கு மட்டுமே அந்தச் சலுகை. அப்போதும் வாரம் ஒருமுறை வந்து செல்லும் தூரமாக இருந்தால், பிள்ளையைப் பெற்றவர்கள் தங்களோடு மருமகள் இருக்கட்டும் என்றே எண்ணுவார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பேர் மட்டுமே தனிக் குடித்தனம் செய்தார்கள்.
Advertisement
திருமணம் முடிந்த முதல் சில நாட்களிலே தங்களைப் பற்றி பேசியிருந்தவர்கள், அதன் பின் சந்திரன் அவனின் சம்பளம், குடும்பத்திற்கு அனுப்பும் பணம், செலவுகள், தங்கைக்களின் திருமணக் கடன் எல்லாம் அடைத்து விட்டாலும், அதற்கு பிறகு செய்முறைகளுக்காக வாங்கிய சிறு கடன்கள் பற்றிய விவரம் அனைத்தும் சத்யாவிற்கும் கூறியிருந்தான். இருவரும் வருங்காலம் பற்றியும் ஓரளவு திட்டமிட்டு இருந்தனர். தவிரவும் வேலையைப் பற்றிய சுவாரசியமான விஷயங்களும் இருவரும் பேசிக் கொண்டனர். இதனால் தனிமைப் பொழுதுகளில் தம்பதிகள் குரலில் சிரிப்பும், கேலியும், சந்தோஷமும் நிறைந்து இருக்கும்.
இன்றைக்கு முதல் முறையாக அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தனர். இதுவரை குடும்பத்தினர் பற்றிய பொதுவான விஷயங்கள் தவிர்த்து அவர்களின் குணம் பற்றியெல்லாம் இருவரும் பேசியதில்லை. சந்திரனுக்கு அவனின் அம்மா செய்வது எல்லாம் கோபம் தான். ஆனால் அவரின் பாசம் மட்டுமே அவனை வாய்மூடி நிற்க வைத்து விடும். அவ்வப்போது வெடுக்கென்று பேசி விடுவான் தான். அதற்கு மேல் அவனால் காமாட்சியிடம் சண்டையிட முடிந்தது இல்லை.
இன்றைக்குப் பெரியப்பா பேசியதைப் பார்க்கும்போது தன் மனைவியோடு அம்மாவிற்கு ஒத்துப் போவது கஷ்டமோ என்று தோன்றியது. அவன் இத்தனை நாட்களில் கண்டுகொண்ட வரை சத்யாவும் எதையும் பொறுத்துப் போகும் பெண் அல்ல. அவளின் படிப்பும், வெளியுலக பழக்கங்களும் தைரியமான பெண் என்று நன்றாகவேத் தெரிந்தது.
Advertisement
தன் நாத்தனார்களை அனாவசியமாக அலைகிறார்கள் என்று மாமியாரிடம் நேராகப் பேசிய போதே சந்திரன் அதைத் தெரிந்துக் கொண்டான். அவை எல்லாம் சந்திரனைச் சுற்றி நடக்கும் செயல்கள் என்பதால் பொருட்படுத்தவில்லை. தற்போது நேரடியாக சத்யாவைப் பற்றிப் பேசியிருப்பதை அவள் பொறுத்துக் கொள்ள மாட்டாள் என்று புரிந்தது.
வீட்டிற்கு போவதற்குள் இதைப் பற்றி சத்யாவிடம் பேசிவிடலாம் என்று எண்ணிய சந்திரன், போகும் வழியில் இருந்த கோவில் அருகே தனது புல்லட்டை நிறுத்தினான். வண்டி நின்றதைக் கூட கவனியாமல் சத்யா அமர்ந்திருந்தாள்.
“சத்யா” என்று சந்திரன் குரல் கொடுத்தான். திடுக்கிட்டுப் பார்த்தவள், அதன் பின்னே சுற்றுமுற்றும் பார்த்து விட்டு வண்டியில் இருந்து இறங்கினாள். ஏன் என்பது போல பார்த்தாலும், கோவிலுக்குச் செல்லும் வழியில் சந்திரன் வண்டியை நிறுத்தி விட்டு வரக் காத்து நின்றாள்.
திருமணம் முடிந்த அடுத்த நாள் முதலே சத்யாவோடு உள்ளூரில் ஏன் தங்கைகள் வீடிருக்கும் பக்கத்து ஊருக்குக் கூடச் செல்வது இந்த புல்லட்டில் தான். அந்த புல்லட் சவாரி சத்யாவிற்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்பதை வாயால் மட்டுமின்றி செயல்களாலும் உணர்த்தி இருந்தாள்.
ஆனால் இன்றைக்கு அதைக் கூட உணராத அளவிற்கு சத்யாவின் நடவடிக்கை இருக்கவே, சிறு கவலையோடு அவள் அருகில் வந்தான் சந்திரன். பின் இருவருமாக கோவில் உள்ளே சென்று கடவுளைத் தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்த மண்டப படிகளில் அமர்ந்தனர்.
இவர்கள் சென்றது வார நாட்களில் நடுவில் ஒரு நாள். பொதுவாக வெள்ளி, சனிக் கிழமைகளில் இருக்கும் கூட்டம் வார நாட்களில் அதிகம் இருப்பது இல்லை. செவ்வாய் அன்று மட்டும் ராகு காலத்தில் விளக்கேற்றுவது என்று ஒரு கூட்டம் இருக்கும். மற்றபடி அவ்வப்போது ஒரு சிலர் வந்து செல்வார்கள் அவ்வளவு தான்.
கோவில் உள்ளேயும், மண்டபத்திலும் ஆள் அரவமற்று இருக்க, சந்திரன் “சத்யா” என்று அழைத்தக் குரல் உரக்கவே கேட்டது.
சத்யா திரும்பிப் பார்க்கவும் “சத்யா, பெரியப்பா பேசினது உனக்குச் சங்கடமா இருந்து இருக்கும். அவரைத் தப்பா நினைக்காத“ என்று சமாதானப் பேச்சில் முதல் படி எடுத்து வைத்தான் சந்திரன்.
“சே. அவரை என்னாலே புரிஞ்சிக்க முடியுது சந்துரு. கொஞ்சம் பழமையில் ஊறிப் போயிருக்கிறாரே தவிர, எல்லாரையும் முக்கியமா பெண்களை மதிப்பாதான் பாக்கிறார். ஆனா ..” என்று நிறுத்தினாள்.
சத்யாவின் சந்துரு என்ற அழைப்பில் முகம் மலர்ந்தாலும், கடைசியில் ஆனால் என்று நிறுத்தியதும் சந்திரனுக்கு லேசான பதட்டம் வந்தது.
“சொல்லுமா”
“உங்க அம்மாவச் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. ஒண்ணும் இல்லாத விஷயத்தைப் பெரிசு படுத்தறாங்களோனு இருக்கு. அவங்களுக்கு நீங்க முக்கியம் தான். உங்க மேலே பாசமும் அதிகம் தான். ஆனால் அதுக்காக மத்தவங்கள உங்களுக்கு அடிமை மாதிரி ஆக்கிறது என்ன நியாயம் இருக்கு?“
சத்யாவின் கடினமான இந்த வார்த்தைகள் வருத்ததைக் கொடுத்தாலும், சந்திரனே சில சமயம் தன் அன்னையிடம் இதைக் கூறியிருக்கிறான் தானே. அந்த உண்மையை எப்படி மறுக்க முடியும்.
“அம்மா அப்படி இருந்தாலும், என் மனதில் அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை சத்யா. என் தங்கச்சிகளோ, தம்பியோ செய்வது பாசத்தில் தான் தவிர என்னை ஒரு எஜமானன் மாதிரி நினைச்சு எல்லாம் செய்யல” என சந்திரன் பதில் கூறினான்.
“நான் அப்படி எல்லாம் சொல்லலை சந்துரு. இப்போ பாசத்தில் செய்யறது, இதே உங்க அம்மா தொடர்த்து செஞ்சுட்டு இருந்தா, உங்க மேலே வெறுப்பை வளர்த்து விட்டுடும். அதைத் தான் நான் சொல்ல வந்தேன்” என்றாள் சத்யா.
“அம்மா என்னைப் பத்திப் பேசறது வேணா அதிகப்படியா இருக்கலாம். அவங்க அன்பு எல்லார்கிட்டேயும் ஒண்ணு போல்தான் இருக்கும். உனக்கு இப்போ தான் அவங்க பழக்கம். அதனால் புதுசாத் தெரியலாம். ஆனால் மத்தவங்களுக்கு அவங்க குணம் நல்லாத் தெரியும் சத்யா”
“உங்க தம்பி, தங்கச்சிங்க விஷயத்தில் நீங்க சொல்றது சரியா இருக்கலாம். ஆனால் என் விஷயத்தில் அவங்க நடந்துக்கிறது அதிகமாத் தோணுது சந்துரு.”
“அம்மாக்கு சின்ன விஷயத்தையும் பெரிசா யோசிக்கிற குணம். கொஞ்ச நாளில் உன்னைப் புரிஞ்சிக்குவாங்க. இப்போதைக்கு அவங்கப் பேசினதை மனசில் வச்சுக்காத. நான் ஊருக்குப் போற முன்னாடி அவங்களுக்கு எடுத்துச் சொல்லிட்டுப் போறேன்” என சந்திரன் கூறவும், சரி என்று தலையாட்டினாள்.
ஏனோ சந்திரன் சொல்லுவது நடக்கும் என்று தோன்றவில்லை. சந்திரன் அவன் அன்னையோடு இருக்கும் நேரம் மிகவும் குறைவு. அந்த நேரங்களிலும் காமாட்சியின் கவனம் முழுதும் சந்திரன் சவுகரியங்கள் சார்ந்து இருக்கும் என்பதால், மற்றவரிடத்தில் வெளிப்படும் அவரின் குணம் பற்றி சந்திரனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
-தொடரும்-
