Skip to content
Post Views: 4,645
“நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளை செவ்வை ஆக்குவேன்”
அது போல தான் ஆகிற்று.
அந்த வழிசல் பேர்வழி கட்டிங் மாஸ்டர் அவள் அங்கு போன போது லீவில் இருந்தான்.
Advertisement
“சொல்லிக்காம லீவ் எடுத்து விட்டிருக்கிறான், எங்காச்சும் குடிச்சுட்டு கூத்தடிச்சுட்டு இருப்பான், இங்க ப்ரொடக்சன் பத்தின கவலை, பொறுப்பு கொஞ்சம் கூட இல்லாம!” அந்த கார்மென்ட் உரிமையாளரான அந்தப் பெரியவர் கடும் எரிச்சலில் இருந்தார்.
வித்யாவை கொஞ்சம் சாம்பிள் கட் பண்ண சொல்லிப் பார்த்து விட்டு திருப்தியாகி, அன்றே, உடனே ஜாயின் பண்ண சொல்லி விட்டு, அன்றைய ப்ரொடக்சனுக்கு அவளையே வெட்டவும் சொல்லி விட்டார்!
இது அந்த வாரம் முழுவதும் தொடர்ந்தது.
Advertisement
அந்த வழிசல் பேர்வழி, திரும்பி வந்து ஓனரிடம் “நான் இல்லன்னா உன் ப்ரொடக்சனே நடக்காது” என்று திமிர் பேச்சு பேச, வாய் வார்த்தை முற்றி அவன் வேலையை விட்டே போய் விட்டான்!
Advertisement
பெரியவருக்கு வித்யாவின் மேல் ஏதோ ஒரு நம்பிக்கை!
அவளையே கட்டிங் மாஸ்டர் ஆக்கி விட்டார்!
வீட்டிற்கு போன வித்யா, ராகவின் படத்தைப் பார்த்து, “ரொம்ப தாங்க்ஸ் மாமா, நான் பயந்த அந்த ஜொள்ளு பார்ட்டி வேலையை விட்டே போய்ட்டான் மாமா!
Advertisement
நான் ரொம்ப பயந்துட்டே இருந்தேன், தினமும் கந்தசஷ்டி கவசம் படிச்சுட்டு தான் வேலைக்கே போவேன், இப்ப அந்த பயம் போயே போச்சு! நீ என் கூடவே இருக்கும் போது எனக்கு என்ன மாமா பயம்!”
இப்பவும் ஹாலில் இருந்த முருகன் படத்தில் இருந்த “யாமிருக்க பயமேன்” அவள் கண்ணில் பட்டது!
இந்த விஷயம் மட்டுமில்ல, எல்லாவற்றிலும் அவளுக்கு இப்படி ஏதேனும் ஒரு சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருந்தன, அவளின் நம்பிக்கையை குலைத்து விடாமல்!
அமெரிக்கா சென்று இருந்த லதா இரண்டு வருடங்கள் கழித்து சென்னை வந்திருந்தார், அவரின் மூத்த மகள் வாணியோடு.
வித்யாவின் வீட்டில் வாணியால் கொஞ்ச நேரம் கூட ஏசி இல்லாமல் இருக்க முடியவில்லை, ஏன் லதாவினாலும் தான்!
அமெரிக்க குளிருக்கும், வசதிகளுக்கும் பழகிப் போயிருந்த அவர்களால்!
வித்யா, “அம்மா.. கொஞ்சம் இரும்மா, தெரு முனையில கறவைப்பால் கூட கிடைக்குது, நான் போய் வாங்கிட்டு வந்து உனக்கு பில்டர் காபி போட்டுத் தரேன்” என்று சொல்லி கிளம்பியிருக்க, அவள் வெளியே சென்றவுடன் லதாவிடம் பல்லைக் கடித்தாள் வாணி.
“ஏம்மா, என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு எடுத்துட்டு வர மாட்டியா? நீ இப்ப மயூவுக்குக் கொடுத்த அந்த ஹான்ட் பாக் சார்ல்ஸ் கீய்த்(Charles Keith) பாக்!
அது நான் பிரன்ட் ஒருத்திக்கு ப்ரெசென்ட் பண்ண வாங்கிட்டு வந்தது! மயூவுக்கு இங்கேயே சரவணா ஸ்டோர்ஸ்ல நல்லதா ஒரு பாக் வாங்கிக் கொடுக்கலாம்னு இருந்தேன்.
நீ அதுக்குள்ள.. போம்மா, அவளுக்கு எதுக்கு இப்படி பிராண்டட் பாக் எல்லாம், அவ கார்மென்ட் கம்பெனியில தானே வேலைப் பார்க்கிறா?
அது மட்டுமா, மித்துவுக்குன்னு பெரிய அசார்டட் சாக்லேட் பாக்கெட் வாங்கியிருந்தேன் ஏர்போர்ட்டில் வச்சு, நீ அதைக் கொண்டு வராம, இந்த பெர்ரேரோ ரோச்சர் பாக்சை கொண்டு வந்திருக்கிற? என்கிட்ட கேக்காம நீ ஏன் இப்படி பண்ணுன?”
“என்னடி இது, அவளுக்கு ஹான்ட் பாக்ன்னா ரொம்ப பிடிக்குமேன்னு தான் கொடுத்தேன்! அதுவும் இல்லாம மித்துவுக்கு இந்த சாக்லேட் ரொம்ப பிடிக்கும்!”
“அம்மா. மயூ இப்ப இருக்கிற நிலைமையில மித்துவுக்கு இப்படியெல்லாம் பழக்கப்படுத்தினா எப்படி? அவங்கவங்க நிலைமைக்குத் தகுந்த மாதிரி தான் பிள்ளையை வளர்க்கணும்!”
“நீ சொல்றது ரொம்ப சரிக்கா..” பின்னால் இருந்து கேட்டது வித்யாவின் குரல்!
வாணிக்கு “என்ன கூல் ட்ரிங்க்ஸ் வேணும்” என்று கேட்க திரும்பி வந்த வித்யா எல்லாவற்றையும் கேட்டு விட்டு சொன்னாள்!
“இல்ல.. அது வந்து..”
“இப்ப என் நிலைமைக்கு இந்த பாக் ரொம்ப ஜாஸ்தி தான்!” என்று சொல்லி அவளிடம் அந்த பாகை எடுத்து வந்து திருப்பிக் கொடுத்து விட்டாள் வித்யா!
வாணி தயங்க, “உனக்கு தெரியுமா அக்கா, என்கிட்ட லூயி உட்டான்(Louis vuitton) பேகே இருக்கு! என் மாமா அப்பவே எனக்கு வாங்கிக் கொடுத்தது! அதோட விலை இதை விட பல மடங்கு அதிகம்! சில பல லட்சங்கள்!
நீ சொல்ற மாதிரி என்னோட நிலைமை இப்ப கொஞ்சம் சரியில்ல, ஆனா எப்பவுமே இப்படியே இருந்திட மாட்டோம்.
எங்களுக்கு என்ன தகுதின்னு நீங்க தீர்மானிக்க வேணாம்” என்று சொல்லி, “மித்தூ..” என்று உள்ளேப் பார்த்துக் குரல் கொடுக்க, கையில் அந்த சாக்லேட் டப்பாவோடு வெளியே வந்தான் மித்து!
ரெண்டையும் லதாவின் கையில் வைத்தாள் வித்யா!
“ஏய். ஏண்டி இப்படி சாக்லேட்டைக் கூட..” லதா தவிக்க,
“இல்லம்மா, தொண்டைக்குக் கீழே போய் விட்டால் அதுக்கு என்ன பேருன்னு என் பையனுக்கு நல்லாவே தெரியும், அவன் ஒண்ணும் ஏங்கிட மாட்டான்! நீ ஒண்ணும் நினைக்க வேண்டாம்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டாள் வித்யா!
அவர்கள் போனவுடன், மித்து தூங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டு ராகவின் படத்தின் முன் நின்று விக்கி விக்கி அழுதாள்.
“நம்ம பிள்ளைக்கு, அந்த சாக்லேட் சாப்பிடக் கூட தகுதி இல்லையா மாமா?”
“யார் சொன்னா?” என்பது போல விடிந்தது அடுத்த நாள்!
சியாம், அவன் மனைவியுடன் அவளைப் பார்க்க வந்தான்.
அவர்கள் பாமிலியோடு பாரின் டூர் போய் விட்டு வந்திருக்க, இவர்களுக்கும் நிறைய பரிசுப் பொருட்கள்!
அதில் முக்கியமாக இருந்தது வாணி வாங்கி வந்ததைக் காட்டிலும் பெரிய சாக்லேட் டப்பா!
இதே போல இன்னொரு விசயம்.
அவள் குடியிருப்பது சியாமின் மனைவியின் பிளாட்!
அதற்கு அவன் வாடகை ஒன்றும் வாங்குவது இல்லை, அவள் நல்ல நிலைமைக்கு வரும் வரை அங்கேயே தங்கிக் கொள்ள சொல்லியிருந்தார்கள்.
வாடகை இல்லை, ஆனால் மெயின்டெயினன்ஸ் சார்ஜ்!
அதை அவள் தானே கொடுக்க வேண்டும்!
ஒரு சமயம் அதற்கே பணம் இல்லாது அவள் கஷ்டப்பட்டாள்.
“மாமா, ப்ளீஸ் ஏதாச்சும் பண்ணு..” அவள் வேண்ட,
அடுத்த நாள், அதே பிளாட்டில் வேறு ப்ளோரில் இருக்கும் நபர் அவளைத் தேடி வந்தார்!
“மேடம், உங்க பார்க்கிங்கில் நீங்க உங்க டூ வீலரை மட்டும் தானே நிறுத்துறீங்க? நான் என்னோட சின்ன காரை அங்கே நிறுத்திக்கட்டுமா? உங்களுக்கு மாசா மாசம் ஒரு அமவுண்ட் ரென்டா கூட பே பண்ணிடறேன்” அவர் கேட்டார்.
“நான் சியாம் அண்ணா கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுட்டு சொல்றேன்” என்று அவருக்கு பதில் சொல்லி விட்டு சியாமிடம் கேட்டாள்.
“நீ இருக்கிற வரை அது உன் வீடு, நீ என்ன பண்ணனுமோ அதை பண்ணிக்கோ” என்று சொல்லி விட்டான்!
அவளின் மெயின்டெயினன்ஸ் சார்ஜ் பிரச்சினையும் தீர்ந்தது.
—
அவள் வேலை செய்த கார்மெண்ட்ஸ் ஓனர் அவள் மீது மிகவும் நம்பிக்கை, நல்லெண்ணம் கொண்டிருந்தார்.
அவரின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் சிறப்பாகவே அந்த வேலையை செய்தாள் வித்யா!
ஏற்கனவே இருந்த அவளின் அந்த கணக்குத் திறமை, துல்லியமாக அளவுகள் எடுத்து கட் பண்ண உதவியது!.
கட்டிங் வேலை என்று மட்டுமில்லாமல் எல்லா வேலைகளையுமே இழுத்துப் போட்டு செய்தாள். ஓனர் இல்லையென்றாலும் கூட ப்ரொடக்சன் சுணக்கமில்லாமல் நடந்தது வித்யாவின் தலைமையில்!
கொஞ்ச நாளில் வயதான அந்த கார்மெண்ட்ஸ் ஓனரும் இறந்து விட, அவரின் வாரிசுகளுக்கு பாக்டரியை தொடர்ந்து நடத்த விருப்பமில்லாமல், வித்யாவிடமே கொஞ்சம் குறைந்த விலைக்கு விற்று விட்டார்கள்!
கம்பெனியின் பேரை மட்டும் மாற்றக் கூடாது என்ற வேண்டுகோளோடு!
அவள் ஏன் மாற்றப் போகிறாள்?
காரணம் அந்த கம்பெனியின் பெயர் ஸ்ரீ ராகவேந்திரா கார்மெண்ட்ஸ்!
ராகவின் பெயரையே கொண்டிருந்தது அந்த கம்பெனி!
அதற்கு பணமும் தானாகவே வந்தது அவளுக்கு!
ராகவ் வாங்கிப் போட்டு விட்டு விற்க முடியாமல் இருந்த, விரைவில் ரோட் எக்ஸ்டென்சனுக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சொல்லப் பட்ட, அந்த ப்ராஜெக்ட் பல வருடங்கள் கிடப்பில் போடப்பட்டு, இரண்டு வருடங்கள் முன்பு தான் அரசு அந்த நிலங்களைக் கையகப்படுத்தியது!
அரசு நிர்ணயித்த விலை குறைவாக இருந்தாலும், அரசு எடுத்துக் கொண்டது போக மீதி இருந்த நிலத்தின் விலை தாறுமாறாக ஏறி விட, அதை விற்ற போது நல்ல லாபத்தையேக் கொடுத்தது!
அதைக் கொண்டு தான் இந்த பாக்டரியை வாங்கினாள் வித்யா!
அதன் பின் ஏறுமுகம் தான் அவளுக்கு!
அடுத்து வந்ததை அதிர்ஷ்டம் என்பதா, இல்லை விதி என்பதா இல்லை வினோதம் என்பதா?
ஆனால் வந்ததே!
ஆனானப்பட்ட ஈஸ்வரியின் கண்களிலே மண்ணைத் தூவி விட்டு ராஜேந்திரனின் பரம்பரை சொத்துக்கள் கொஞ்சம், ஆனால் அதுவே பல ஏக்கர் நிலபுலன்கள், அவர்களின் உறவினர்கள் வசம் இருந்தன!
அதனால் தான் அவர்கள் ரொம்பவும் ஈஸ்வரி விசயத்தில் தலையிடாமல், ராகவிற்காக நியாயம் கேட்கவும் வராமல் கமுக்கமாகவே இருந்து வந்தார்கள்!
ஆனால் விதி வசத்தால் அந்த சொத்துக்கள் பற்றிய விசயங்கள் தமிழ்ச்செல்வன் கவனத்துக்கு வந்து விட்டிருந்தன, அதே ஊரில் இருந்த வேறு ஒரு வழக்கை கவனிக்கும் போது!
ஏற்கனவே ராகவ் கேஸ் விசயத்தில் பணம் விளையாடி அவரின் தோல்விக்கு காரணாமாகி அவரின் ஈகோவை காயப்படுத்தி இருந்தது.
மேலும் அவர் மனைவி செலின் வித்யாவின் நெருங்கியத் தோழி!
வித்யாவை தனது தங்கையைப் போல நினைத்திருந்த அவருக்கு, இதை தோண்டித் துருவ வைத்தது இந்த நிலம் பற்றிய விவரம்!
“இங்கே இவ்வளவு ப்ரோபர்ட்டிய எவனோ தின்னுட்டு இருக்க, அங்க வித்யா வெயில் மழைன்னு பார்க்காம வண்டியோட்டிக்கிட்டு வேலைக்குப் போயிட்டு இருக்கு, இத விடக் கூடாது” என்று மேலும் விசாரித்தார்.
பேசி அவர்களை வழிக்குக் கொண்டு வந்து மித்துவின் பேருக்கு மாற்றி வித்யாவை கார்டியனாக்க முற்பட்ட போது, மூக்கு வேர்த்தது போல வந்து விட்டாள் ஈஸ்வரி!
அதில் ராஜேந்திரன் பங்கும் அவளுக்குப் பிறந்த மகனின் பங்கையும் கேட்டு!
வந்ததோடு மட்டுமில்லாமல் நஞ்சை நிலம் தான் அவர்களுக்கு வேண்டும் என்று கறாராக பேசி வாங்கிக் கொண்டும் விட்டாள்!
ஆனால் வித்யாவுக்குக் கிடைத்த புஞ்சை நிலம் தான் விலை ஏறியது!
அது குடியிருப்பு நிலமாக அறிவிக்கப்பட்டு விட்டது!
வித்யாவின் கூடவே இருந்து அதற்கு DTCP RERA போன்றவற்றில் அப்ர்ரூவல் வாங்கித் தந்தார் தமிழ்செல்வன்!
அதன் பின் ரியல் எஸ்டேட் ஆட்கள் மொய்க்கத் துவங்கி விட்டார்கள் வித்யாவை!
வித்யா பயந்தாள்.
அப்போதும் ராகவிடம் தான் புலம்பினாள்.
“மாமா எனக்கு பயமா இருக்கு, அவங்க எல்லாம் அந்த துறையில் பல காலமாக இருக்காங்க, எங்க ஏமாந்துடுவேனோன்னு பயமா இருக்கு, எனக்கு அவங்க கிட்ட பேசவே பயமா இருக்கு, அவங்க நீங்க சொல்லுங்க மேடம், உங்க லாயர் இருக்கட்டும், ஓனர் நீங்க தானேன்னு என்னையே பேச கூப்பிடறாங்க மாமா!”
அவள் அந்த ரியல் எஸ்டேட் கம்பெனி ஆட்களை சந்திக்க போகும் போது வழக்கம் போல அவள் கண்ணில் பட்டது பைபிள் வாசகம்!
“நான் உன் வாயோடவே இருந்து நீ பேச வேண்டியதைப் போதிப்பேன்!”
“எப்படி மாமா இப்படி?” என்று ஆச்சரியப் பட்டாள் வித்யா!
அங்கு போய் அவர்களிடம் இவள் அதிகம் பேசாது அவர்களை பேச விட்டு மவுனமாகவே கவனித்தாள்!
அவளின் மவுனமான அந்த கவனிப்பு, அவர்களை ஒரு லெஜிடிமேட் அக்ரிமென்ட் போடவே வைத்தது!
இப்படி இவளுக்கு ஏறுமுகமாக இருக்க, அங்கோ ஈஸ்வரி செய்த பாவங்கள், அதன் விளைவைக் காட்டத் தொடங்கி இருந்தன!
முதலில் அவள் பிடுங்கி சென்ற அந்த நஞ்சை நிலங்கள் தண்ணீர் இல்லாத காரணத்தால் முள்ளுக் காடாகி விட்டன!
அவளுக்கோ நிறைய ஆரோக்கிய பிரச்சினைகள்!
அவள் மகனோ அவனை விட ஆறு வயது பெரிய பெண்ணுடன் லிவ் இன்னில் இருந்து விட்டு பின் அவளையே கல்யாணமும் செய்து கொண்டு வந்து விட்டான்!
உண்மையில் அது லிவ்இன் கூட இல்லை! கல்யாணமான ஒரு பொண்ணோடு தான் அவனின் கள்ளக்காதல்! இவன் அவளை வீட்டிற்கு கூட்டி வந்த பின் தான் அவளின் முதல் கணவனிடம் டிவோர்ஸ் பெற்றாள் அவனின் காதலி!
இதை ஈஸ்வரியால் தடுக்கவே முடியவில்லை!
ராகவிற்கு கல்யாணம் ஆகக் கூடாது என்று தடுத்த பாவத்துக்குத் தண்டனை!
இராஜேந்திரன், ராகவ் இறந்த பின் சரியான மனநிலையில் இல்லை!
அதை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஈஸ்வரி!
இப்போது அவளுக்கும் கர்ப்பப்பை கேன்சர்! நந்தினியை மனம் நோக வைத்ததன் பலன்!
அதுவும் அருகே வந்தால் கடும் துர்நாற்றம் அடிக்கும் அளவு இருந்தது!
அவள் பயன்படுத்திய கழிவறையை , பின் அடுத்தவர்கள் உள்ளே போனால் போனவர்கள் மூர்ச்சையாகி விடும் அளவு துர்நாற்றம் வரும்!
இதில் தோல் நோய் வேறு! அவளால் அடுத்த சில மாதங்களில் சேலைக் கூடக் கட்டிக்கொண்டிருக்க முடியவில்லை!
துணி உடலின் மேலே பட்டாலே காந்தியது!
அதனால் எப்போதும் நெஞ்சு வரை ஏற்றிக் கட்டிக்கொண்ட ஒரு உள்பாவாடையோடு தான் இருப்பாள்!
இதனால் முகம் சுளித்தாள் மருமகள்!
ஆமாம் இப்போது அன்று ஈஸ்வரி செய்தது போலவே இப்போது அவளின் மருமகளும் அவளின் பெற்றோரையும் இங்கே கூட்டி வந்து விட்டாள்!
“என் அப்பா சங்கடப்படுறார், உங்க அம்மா எப்ப பார்த்தாலும் இப்படியே பாவாடைக் கட்டிக் கொண்டு ஹாலில் உட்கார்ந்து இருந்தா?” என்று புருசனைக் கண்டபடி திட்டினாள்.
“அவனும் உள்ளே போம்மா” என்று அவளை விரட்டத் தொடங்கி இருந்தான்.
அடுத்து வந்த கொஞ்ச நாட்களில், இராஜேந்திரனும் தன் நிலை மறந்து வேஷ்டி அவிழ்வது கூட தெரியாத நிலைக்குப் போக ஒரு மன நலக் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார்.
ஈஸ்வரிக்கு முடியாமல் போனால், அவளை இலவச ஆம்புலன்சில் ஏற்றி ஜிஹெச்க்கு அனுப்பி விடுவதும், கொஞ்ச நாளில் அவர்கள் “உங்கள் வீட்டுக்கே கூட்டிப் போய்விடுங்கள்” என்று திருப்பி அனுப்புவதும் வாடிக்கையாகிவிட்டது.
அப்படி அவள் ஹாஸ்பிட்டலில் இருக்கும் போது கூட அவள் மகன் அவளைப் பார்க்கவே வர மாட்டான்.
நர்ஸ்கள் தான் இரக்கப்பட்டு அவளுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொடுத்துப் பார்த்துக் கொண்டார்கள்.
ஒரு நாள் அவள் ஹாஸ்பிட்டலிலேயே இறந்தும் விட்டாள்.
அனாதையாக ரெண்டு நாள் மார்ச்சுவரியில் இருந்த பின் தான் அவள் மகன் வந்து கையெழுத்துப் போட்டு நேரே கொண்டு போய் சடங்குகளை முடித்து விட்டான்!
இதுவும் அவள் செய்தப் பாவம் தான்!
ராகவ் இறந்த போது, திவ்யா அப்பா, இராஜேந்திரனுக்குப் போன் செய்து கேட்டார்.
“இங்கே இந்த அப்பார்ட்மெண்ட் வசதிப் படாது, கீழ் வீட்டில் வேறு கல்யாணம் வைத்து இருக்கிறார்கள், நான் பாடியை உங்கள் வீட்டுக்குக் கொண்டு வரட்டுமா” என்று கேட்டதுக்குக் கூட ஈஸ்வரி பேயாட்டம் ஆடி விட மறுத்து விட்டாள் அன்று.
வீடு இத்தனைக்கும் ராகவ் பேரில் இருந்தது! அதில் அவன் பிணத்தைக் கூட அனுமதிக்கவில்லை அவள்!
அந்த பாவம் எல்லாம் சும்மா விடுமா?
இப்படியே காலங்கள் செல்ல, பின் ஒரு நல்ல நாளில் வித்யாவின் கேஸ் முடிவுக்கும் வந்தது!
நந்தினியின் சொத்துக்கள் முழுவதும் ராகவிற்கு தான்! அவன் இறந்து விட்டதால் மனைவியான வித்யாவிற்கும் மகன் ஜீவமித்திரனுக்கும் தான் என்றும் தீர்ப்பாகி விட்டது!
மேலும் ஈஸ்வரி அபகரித்த இராஜேந்திரனின் பரம்பரை சொத்துக்களிலும் இவர்கள் இருவருக்கும் பங்கு உண்டு என்றும் விரைவில் கோர்ட் ஆர்டர் கொண்டு அவற்றையும் கையகப்படுத்தி உரியவர்களிடம் ஒப்படைக்கவும் சொல்லி தீர்ப்பு வந்தே விட்டது!
அதற்குள் ஜீவா இங்கு கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு யூஎஸ்ஸில் பிஜி படித்துக் கொண்டிருந்தான்!
வித்யா அவளின் கார்மெண்ட்ஸ் பிசினசை இன்னமும் பல மடங்கு விரிவுப்படுத்தியும் இருந்தாள்.
முதலில் நைட்டி தயாரித்தவள் அடுத்து இளம்பெண்கள் உடுத்தும் குர்தி தயாரிக்க இன்னொரு யூனிட்டையும் தொடங்கி விட்டாள்!
மயூராக் என்ற மயில் லோகோவுடன் கூடிய அவளின் குர்தி பிராண்ட் ரொம்பவும் பிரசித்தம்! (இது எனது கற்பனை பிராண்ட்! யாரும் க்ளைம் பண்ணி விடாதீர்கள்!)
பின் நாட்களில் ஜீவாவும் அம்மாவுக்கு உதவ என்று எங்கு புதிய மாடல் குர்தியைப் பார்த்தாலும் டிசைன் ரெபரன்ஸ்க்கு என்று வாங்கி வந்து விடுவான்!
பாங்கில் லோன் கேட்டுப் போன போது அவளுக்கு அங்கும் அதிர்ஷ்டம் இருந்தது! அங்கு மானேஜராக இருந்தது திவ்யாவின் சித்தப்பா!
அவர் அளவுக்கு உடனே லோன் சாங்சன் பண்ணிக் கொடுத்ததோடு ஓடி(O.D) வசதியும் செய்து கொடுத்து ஊக்கப்படுத்தினார்!
ஒரு நாள் ராகவின் பிறந்த நாளைக் கொண்டாடவென்று அவள் ஒரு மனநலக் காப்பகம் சென்றாள்!
அங்கு அவள் இராஜேந்திரனைக் கண்டு அதிர்ந்தாள்.
“இப்படி இருக்கவா, எங்க வாழ்க்கையை அழிச்சீங்க? என்ன சாதிச்சீங்க?” என்று எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அவரைப் பார்த்துக் கேட்டாள்.
அவர் கண்ணில் நீர் வந்தது.
கூட வந்த பணியாளர், “இவரை யாருமே பார்க்க வர மாட்டாங்க மேடம், இவர் ஒய்ப் கூட இப்ப உயிரோட இல்லை!” என்று சொல்ல
“சரி இவருக்கு ஆகும் செலவுக்கு நான் பணம் தருகிறேன். பார்த்துக்கங்க” என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் வித்யா!
ஆனால் இராஜேந்திரன் ரொம்ப நாள் அவள் வந்து சென்ற பின் உயிரோடு இல்லை!
அவருக்கு கயாவில் போய் பிண்டம் வைத்து விட்டு வந்தாள், கூடவே அந்த ஈஸ்வரிக்கும் கூட!
ஆச்சு எல்லாம் முடிந்து சொத்துக்கள் எல்லாம் இவர்கள் வசம் வந்து செட்டிலாக இன்னும் சில வருடங்கள் ஆகிற்று.
எவ்வளவு வசதி வந்தாலும் தனியாக பெரிய பங்களாவில் போய் வாழும் ஆசை எல்லாம் அம்மா பையன் இருவருக்குமே இல்லை!
அதனால் தான் இந்த அப்பார்ட்மெண்ட் வாசம்!
ஒரு நெடிய பெருமூச்சுடன் நடப்புக்கு வந்தாள் வித்யா மயூரி!
“மயூ” என்ற மித்துவின் குரல் வெளியேக் கேட்டது!
“வரேண்டா” என்று வெளியே போனாள் வித்யா.
“மயூ.. சலீம் மாமா போன் பண்ணினார்,அவங்க வீட்டுல இன்னிக்கு இப்தார் பார்ட்டி இருக்காம்! கட்டாயம் நம்மளை வரச் சொல்லியிருக்கார்!”
“ம்ம். போவோம்டா, நிலாவையும் ரெடியாக சொல்லு, மூணு பேரும் போவோம்” என்றாள் மயூ நல்ல மாமியார் போல!
error: Content is protected !!