Skip to content
Post Views: 5,648
நிறம் பாராத காதல்
அத்தியாயம். 6
“அவ பண்ண தப்புக்கு நீங்க எனக்குத் தண்டனைக் கொடுப்பீங்களா?” என்ற ரணதீரனின் கோவத்தைக் கண்டு மேலும் பயந்தாள் வைதேகி.
“ராணா..முதல்ல வைதேகியை நீ மரியாதை இல்லாம பேசாத. உன்னைக் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுடா இவள். உனக்கு அவள் மேல கொஞ்சம் கூட அன்பே இல்லையா?” என்று கோவமாகக் கேட்டார் வேதநாயகி.
Advertisement
“நீங்கத் தான் கல்யாண கதையெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க. எனக்கும் அதுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.” என்ற ரணதீரனின் வார்த்தையைக் கேட்டு வேதநாயகியின் முகம் மாறியது.
“ராணா.. நேத்து நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? அம்மாகிட்ட இப்படியெல்லாம் பேசாத புரியுதா?” என்ற மாயாவை பார்த்து ரணதீரன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“இங்க பாரு ராணா.. வைதேகி தான் உனக்குப் பொஞ்சாதி. இது நான் எடுத்த முடிவு. ஆனா இப்போ அது விஷயம் இல்லை. நீ எப்படி வைதேகியை கை நீட்டி அடிப்ப? பொம்பள பிள்ளைகளை அடிக்கக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா? இல்லை பொம்பளைங்கள அடித்தால் அவங்க திருப்பி உன்னை அடிக்கமாட்டாங்கன்னு ஆம்பளை திமிர்ல வைதேகியை அடிச்சியா?” என்ற வேதநாயகியின் வார்த்தையில் அப்படியொரு கோவம் தெரிந்தது.
Advertisement
“எனக்கு ஆம்பள திமிர் எல்லாம் இல்ல.
ஆனா சில பெண்களுக்கு நான் தான் அழகு என்ற திமிரு இருக்கு, அந்தத் திமிர்ல தான் பல ஆம்பளைங்க பாவத்துக்கு இவங்கெல்லாம் ஆளாகப் போறாங்க.” என்றான் ரணதீரன்.
Advertisement
“இப்போ ஏன் நீ சம்மந்தம் இல்லாம பேசுற? நீ வைதேகியை அடிச்சது தப்பு. உன் தப்புக்கு தண்டனையா நாளையிலிருந்து அடுத்த ஐந்து நாளும் நீ தான் வைதேகிக்கு தேவையான எல்லா விஷயத்தையும் அவளுக்குப் பண்ணிக் கொண்டுக்கணும்.” என்ற வேதநாயகியின் தண்டனையைக் கேட்டு வைதேகிக்கு நெஞ்சு வலியே வந்தது போல இருந்தது.
“என்ன!! நான் பண்ணனுமா? என்ன விளையாடுறிங்களா?” என்ற ரணதீரன் கோவமாக வைதேகியை முறைத்தான்.
“நான் விளையாட எல்லாம் இல்ல, நாளையிலிருந்து இந்த வீட்டுல வைதேகிக்கு தேவையான சாப்பாடு, காபி, டீ, அப்புறம் நீ கம்பெனிக்குப் போகும்போது அவளை உன்கூடவே அழைச்சிட்டு போறது, அப்புறம்”என்று வேதநாயகி அடுக்கிக்கொண்டே போனதும்,
“அம்மா அம்மா இருங்க.”
என்ற ரணதீரனை பயத்துடன் பார்த்து இருந்தாள் வைதேகி.
Advertisement
“என்னால இதெல்லாம் பண்ண முடியாது.
அதுவும் என் கம்பெனிக்கு எல்லாம் இவளை என்னால அழைச்சிட்டு போகவே முடியாது.”என்ற ரணதீரன் அங்கிருந்து செல்ல எத்தனித்தான்.
“நில்லு…அதெல்லாம் முடியும். முடியனும். நாளையில இருந்து நீ தான் வைதேகிக்கு நிழலாக இருக்கனும். நம்ம எஸ்டேட்டை எல்லாம் சுத்தி காட்டு, நம்ம சிவன் கோவிலுக்கு அழைச்சிட்டு போ, அப்புறம் வைதேகிக்கு தேவையான பொருளை எல்லாம் வாங்கிக் கொடு. கிட்டத்தட்ட நீ அடுத்த ஐந்து நாளைக்கு வைதேகிக்கு நல்ல வேலைகாரனா இருக்கனும் புரியுதா?”என்ற வேதநாயகியின் வார்த்தையைக் கேட்டுக் கடுப்பானான் ரணதீரன்.
“என்ன வேலைகாரனா!? நானா!? இவளுக்கா!?” என்றவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“ஆமா நீ தான். சொன்னது நினைவு இருக்கட்டும். முதல்ல நீ வைதேகியை பெயர் சொல்லி அழைக்கப் பழகிக்கோ. இனி ஒரு முறை நீ வைதேகியை மரியாதை இல்லாமல் பேசவேக் கூடாது” என்ற வேதநாயகி நீண்ட நேரம் நின்று இருந்ததில் கால் வலி தாங்க முடியாமல் அவர் அறைக்குச் சென்று விட்டார்.
“தண்டனை அவருக்கா இல்லை எனக்கா!?” என்று மனதில் எண்ணிய வைதேகியின் முன்னே கருஞ்சிறுத்தை போல நின்று முறைத்துக் கொண்டு இருந்தான் ராணதீரன்.
“ஏண்டா மவனே.. இதெல்லாம் ஒரு தண்டனைன்னு எதுக்காக உன் மாமியாரு இப்படியொரு விஷயத்தைப் பண்றாங்கன்னு உனக்குப் புரியுதா?” என்று கீதா தன் மகன் மாறனை கேட்டார்.
“தெரியலையே அம்மா.. இந்தத் தண்டனையே ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கே, எனக்கும் ஒன்னும் புரியல. ரணதீரன் வைதேகியை அடிச்சதுக்கு வைதேகி கையால் ரணதீரனை அத்தை அடிக்க வைப்பாங்கன்னு தான் நான் நினைச்சேன். ஆனா இது வேற விதமான தண்டனையா இருக்கே.” என்று மாறன் சொன்னான்.
“அட கூறுகெட்ட குப்பா.. உன் அத்தை வைதேகிக்கும் ரணதீரனுக்கும் பயாலஜி வேலை செய்ய முயற்சி பண்றாங்க.” என்று சொன்ன கீதாவை, “என்ன பயாலஜியா!?” எனப் புரியாமல் மாறன் கேட்க,
“மாமா.. ராணாக்கும் வைதேகிக்கும் கெமிஸ்ட்ரி வருவதற்காக இப்படி எல்லாம் அம்மா பண்றாங்கன்னு அத்தை சொல்றாங்க.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் மாயா.
“ஓ..அப்படி சொல்ல வரிங்களா. அதுவும் சரியா தான் இருக்கு. அப்போ ராணாவையும் வைதேகியையும் ஒன்னு சேர்க்காம அத்தை தூங்க மாட்டாங்க” என்ற மாறனுக்கு வைதேகியை இந்த வீட்டுக்கு மருமகளாக அழைத்து வர வேண்டும் என்ற ஆசை இருக்க தான் செய்தது.
“டேய் மவனே உன் மச்சானுக்கு அந்தப் பொண்ணை பிடிக்கலையா?” என்று கீதா கேக்க, “நீங்கக் கேக்குறீங்கனு அவன்கிட்ட கேட்டுச் சொல்லவா? ” என்று மாறன் கிண்டலாகக் கேட்டான்.
“ஏன் டா வேலியில் போற ஓநாய புடிச்சு என் வாய்க்குள்ள விடுற. நான் போயி என் வேலையைப் பார்க்குறேன்.” என்ற கீதா கழுவுற மீனில் நழுவுற மீனாக அங்கிருந்து சென்று இருந்தார்.
வைதேகி வீட்டிற்கு வந்த நொடியிலிருந்து தன் அம்மா தன்னிடம் கோபம் கொண்டு பேசுவதை தாங்கிக்கொள்ள முடியாத ரணதீரனுக்கு வைதேகி மீது அதிகப்படியான கோபம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
வைதேகி கையைப் பிடித்துக் கொண்டிருந்த சிறுமி மயிழினியை பார்த்து, “பாப்பா மாமாகிட்ட வா” என்று ரணதீரன் தன் அருகே அழைத்ததும்,
“மாமா நீ பேட் பாய். நான் உன்கிட்ட பேசமாட்டேன். நீ ஏன் அத்தையை அடிச்ச? போ நான் உன்கிட்ட பேசவே மாட்டேன். அத்த வாங்க நம்ம ரூமுக்கு போகலாம். ” என்ற குழந்தையும் வைதேகியின் கையைப் பிடித்து அவள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“குழந்தையையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டியா நீ?” என்று மனதிற்குள் அர்த்தமே இல்லாமல் வைதேகி மீது வன்மத்தை வளர்த்துக் கொண்ட ரணதீரன் அதே கோபத்துடன் எதிரே இருக்கும் அவனின் பங்களாவிற்கு செல்ல, மாயாவும் மாறனும் மீண்டும் தன் வேலைகளைச் செய்யத் தொடங்கினார்கள்.
மயிழினி அறையில் கண்கள் கலங்கிய நிலையில் அமர்ந்து இருந்த வைதேகியை பாவமாகப் பார்த்துக் கொண்டு இருந்த சிறுமிக்கு அவள் கண்ணீரில் மறைந்து இருந்த ரகசியத்தைத் தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு வயது இல்லாமல் போனது.
“அத்த அழாதீங்க” என்ற சிறுமி தன் பிஞ்சு விரல்களால் அவள் கண்ணீரை துடைத்து விட, வைதேகி சிறுமியைப் பார்த்துக் கடமைக்கென்று சிரித்தவள் தன் அருகே உள்ள கண்ணாடியில் அவள் வதனத்தை பார்த்தவளுக்கு அழுது வடியும் இந்த வைதேகி புதிதாகத் தெரிந்தாள்.
ஆம்…விவரம் அறிந்ததிலிருந்து வைதேகியை யாரும் ஒரு வார்த்தைக் கூடச் சொன்னது இல்லை. கனடா நாட்டில் வாழ்ந்து வந்த வைதேகி பிறந்தது அயல் நாடக இருந்தாலும் அவளின் பெற்றோர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்.
இசை, சிலம்பம், ஓவியம், சமையல் என்று பல கலைகளை அறிந்து இருந்த வைதேகியின் பெரிய ஆயுதம் அவளின் பொறுமை தான்.
ஒருவரின் விழிகளைப் பார்த்தே அவர்களின் வலிகளை உணர்ந்துக் கொள்ளும் பக்குவம் வைதேகிக்கு இருந்தது.
பொறுமையின் பிறப்பிடம் என்றால் அது வைதேகி தான். அவளின் பலமும் பலவீனமும் அவளின் நல்ல குணங்களாக இருக்க, அந்தக் குணத்தினால் தான் இன்று ஊர் பேர் தெரியாத இடத்தில் தஞ்சம் புகுந்து ரணதீரனின் கோவத்துக்கு ஆளாகி பாவமான பாவையாக நிற்கின்றாள்.
தன் விதியை நினைத்துத் தனக்குள் நொந்து போனவளுக்கு ஆபத்பாந்தவனாக மாறன் கைக்கொடுக்க, இனி இவள் வாழ்வில் என்னென்ன நன்மைகளும் குழப்பங்களும் ஏற்பட போகிறது என்ற கவலையில் அப்படியே கண்கள் மூடினாள் வைதேகி.
இரவு நேர உணவிற்க்காக அனைவரையும் மாயா அழைக்க, “அத்த வாங்க சாப்பிடலாம்.” என்ற மயிழினியுடன் வைதேகியும் சாப்பிடும் இடத்தில் வந்து அமர்ந்தாள்.
“எங்க மாயா ராணா சாப்பிட வரலையா?” என்ற வேதநாயகியின் அருகே அமர்ந்த வைதேகிக்கு ரணதீரன் பெயரைக் கேட்டாலே உள்ளுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.
“ராணா அவனோட மாளிகைக்குப் போயிட்டான் அம்மா. இனி நாளைக் காலைத் தான் வருவான்.” என்ற மாயா தன் பிள்ளைக்குச் சாப்பாட்டை ஊட்டினாள்.
“ஓ.. துரை கோவமா இருக்காரா? இருக்கட்டும் இருக்கட்டும் எத்தனை நாள் அங்கேயே இருப்பாருன்னு பாப்போம்” என்ற வேதநாயகி சாப்பிட ஆரம்பித்தவர் தயக்கத்துடன் அமர்ந்து இருந்த வைதேகியின் தட்டில் மேலும் பலகாரங்களை அடுக்கினார்.
“இல்லிங்க வேணா நான் ரொம்ப சாப்பிட மாட்டேன்” என்ற வைதேகியை கோவமாக முறைத்து, “என்ன நீ வாங்க போங்கனு கூப்பிடுற, அழகா உரிமையா அத்தைன்னு கூப்பிடு” என்று அன்பு கட்டளையிட்ட வேதநாயகி காலையிலிருந்து வைதேகி எப்போது தன்னை அத்தை என்று அழைக்கப் போகிறாளெனக் காத்து இருந்தவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
“அம்மா.. இன்னைக்கு காலையில தானே வைதேகி நம்ம வீட்டுக்கு வந்தது. போகப் போக அவளாகவே உங்ககிட்ட உரிமையா பேசிப் பழக ஆரம்பிச்சிடுவாள். இப்போ நீங்கச் சாப்பிடுங்க அம்மா” என்று மாயா சொல்ல, ஒரு வழியாக அனைவரும் இரவு உணவைச் சாப்பிட்டு முடித்தார்கள்.
“ஏன் அத்த… அப்போ நாளைக்கு நம்ம ராணாக்கூட வைதேகி கம்பெனிக்குப் போகணுமா?” என்ற மாறனை பார்த்து வேண்டாம் என்ற ரீதியில் வைதேகி ஜாடை பேச, “கண்டிப்பா போகணும் தான் மாப்புள்ள” என்றார் வேதநாயகி.
“யாரோ என்னமோ பேசுங்க நான் சாப்பிட்டு முடித்துப் பால் குடிக்க காத்து இருக்கேன்” என்று மனதில் எண்ணிக்கொண்டே இவர்கள் பேசுவதை காதில் வாங்காத கீதாவின் கையில் பணியாளர் பாலை நீட்ட, “மசாலா பால் தானே?” என்று கீதா கேட்டதும், “ஆமா அம்மா மசாலா பால் தான்” என்ற பணியாளர் சமயலறைக்கு செல்ல, “பாலில் ஏலக்காய் கம்மியா இருக்கே” என்ற தன் அம்மாவை முறைத்தான் மாறன்.
“என்ன மாப்புள்ள? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? வைதேகியை ராணாக்கூட கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறதுல உங்களுக்கு இஷ்டம் இல்லையா?” என்று வேதநாயகி கேட்டதும்,
“இல்ல அத்த.. நிச்சியம் பண்ணாம ஏன் அதுக்குள்ள இவங்க ரெண்டு பேரையும் தனியா வெளிய அனுப்பணும்னு என் அம்மா நினைக்கிறாங்க?” என்று மாறன் சொன்னதும் வேதநாயகி கீதாவை கேள்வியாகப் பார்க்க, அவரோ எதையும் காதில் வாங்காமல் மசாலா பாலை ருசித்து ரசித்துப் பருகிக்கொண்டு இருந்தார்.
“ஆமா மாப்புள்ள.. சம்மந்தி சொல்லுறதும் சிரிதான். நிச்சியம் பண்ணுறதுக்கு முன்னாடியே ராணாவும் வைதேகியும் தனியா வெளியே போனால் நல்லா இருக்காது.” என்ற வேதநாயகியின் சொல்லைக் கேட்டு வைதேகி நிம்மதி பெருமூச்சு விட்ட அடுத்த நொடி,
“அதனால கீதா சம்மந்தியும் இவங்க கூட நாளையில இருந்து ஒண்ணா வெளிய போயிட்டு வரட்டும்.” என்ற வேதநாயகியின் வார்த்தையைக் கேட்டு வாய்வரை கொண்டு சென்ற மசாலா பால் கோப்பையை கீழே தவறவிட்டார் கீதா.
“சம்மந்தி.. ராணாவும் வைதேகியும் சின்னஞ்சிறுசுங்க, அதனால நீங்கக் கூடவே இருந்து” என்று வேதநாயகி சொல்லும் முன்னே ” என் மகன் வேலையை நான் பார்க்கணுமா?” என்று வாய்க்குள் முணங்கிய கீதாவின் கையைக் கில்லி வைத்தான் மாறன்.
“சம்மந்தி.. நாளையிலிருந்து ராணாவுக்கும் வைதேகிக்கும் நல்ல புரிதல் ஏற்பட நீங்கத் தான் உறுதுணையா இருக்கணும். வைதேகி நம்ம வீட்டு பொண்ணு. அவ மனசு கஷ்டப்படுற மாதிரி இந்த ராணா பையன் ரொம்ப அதிகமா பேசுறான். இவங்க ரெண்டு பேரும் அடிக்கடி தனியா பழகிக்க வாய்ப்பு கிடைச்சா தான் ஒருவரைப் பற்றி இன்னொருவர் புரிந்து கொள்ள முடியும். அதனாலதான் நான் இப்படியொரு ஏற்பாடு பண்ணேன். நீங்க இவங்க கூடவே இருந்து இவங்க ரெண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கை அமைய என்ன பண்ணணுமோ அதைப் பண்ணுங்க.” என்ற வேதநாயகி பொறுப்பைக் கீதா தலையில் இறக்கி வைத்தவர் நிம்மதியாகத் தன் அறைக்குச் சென்றார்.
“ஏண்டா மகனே.. ஒரு கிளாஸ் மசாலா பாலு குடிக்கிறதுக்குள்ள என் வாழ்க்கையையே பாழாக்கிட்டியே!! இந்த வயசான காலத்துல அந்த ரணதீரன் கையால எனக்கு ஆப்பு வாங்கி கொடுக்காம நீ ஓய மாட்டியா? உன்னைப் பெத்ததை தவிர நான் வேற என்னடா பாவம் பண்ணேன்?” என்று கீதா பயத்தில் புலம்புவதை பார்த்து மாயா சத்தமாகச் சிரித்து விட்டாள்.
“மாயா சிரிக்காத அமைதியா இரு. அம்மா இப்போ ஏன் இப்படி பயப்படுறீங்க? ரணதீரன் என்ன பேயா பூதமா உங்களைக் கடிச்சு தின்ன, அவன் பாவம், அவனுடைய தாழ்வு மனப்பான்மை தான் அவன இப்படி திமிரு பிடிச்சவனா காட்டுது. அத்த சொல்ற மாதிரி நீங்க வைதேகிக்கு துணையா? ரணதீரன் கூடப் போயிட்டு வாங்க. வைதேகி நீ பயப்புடாத அம்மா உன்கூடவே இருப்பாங்க.” என்ற மாறனை பார்த்துச் சம்மதமாகத் தலை அசைத்தாள் வைதேகி.
“ஏன்டா… ராணா கூடப் போக எனக்கே ஒரு துணை தேவை, இதுல நான் வைதேகிக்கு துணையா? எல்லாம் என் நேரம் டா. மசாலா பால் குடிக்க இங்க காத்து இருந்தது தப்பா போச்சு. சைக்கிள் கேப்ல நமக்குச் சகுனம் சரியில்லாம ஆக்கிட்டாங்க.” என்று புலம்பிய கீதா தன் அறைக்குச் சென்று கவலையாகப் படுத்தே விட்டார்.
“வைதேகி நீ பயப்புடாம நாளைக்கு கம்பெனிக்கு வா. நானும் மாயாவும் கூட அங்க தான் இருப்போம். இப்போ போய்ப் பாப்பா ரூம்ல படுத்து நிம்மதியா தூங்கு” என்ற மாறன் தன் தோளில் உறங்கிக்கொண்டு இருந்த தன் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு அவன் அறைக்குச் செல்ல, “குட் நைட் வைதேகி” என்ற மாயாவும் மாறனின் பின்னே சென்று இருந்தாள்.
சிறுமி மயிழினியின் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்த வைதேகிக்கு விடிந்தால் ரணதீரனுடன் தான் நாளைய தினத்தைக் கடக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுதே பயத்தில் தூக்கம் வராமல் போனது.
புரண்டு புரண்டு படுத்தவள் ஒரு வழியாகக் கண்கள் அசர்ந்து உறங்கியும் போனாள்.
நடுஜாமம் இருக்கும், குளிர்ந்த காற்று ஜன்னல் வழியே வீச, நிம்மதியான தூக்கத்தில் இருந்த பெண்ணவள் காதுக்குக் கொலுசுச் சத்தம் கேட்டதும் கண்கள் திறந்து பார்த்தவள், மீண்டும் வாட்டமாக மறுப் பக்கம் திரும்பிப் படுக்க, அப்போது அவள் காதுக்குப் பெண்ணின் அழுகை சத்தமும் கேட்டது.
“என்ன இது!! யாரோ அழற மாதிரி இருக்கே?” என்று கட்டிலிலிருந்து எழுந்து சென்ற வைதேகி ஜன்னல் வழியே பார்த்ததும் அங்கே கருப்பான உருவம் ஒன்று ஒரு பெண்ணைத் தோள்மீது ஏந்தி வந்து காரில் தூக்கி வீசுவதை பார்த்து வைதேகிக்கு மூச்சே நின்று விட்டது.
இந்த நேரத்தில் யாரோ ஒருவன் ஒரு பெண்ணைக் காரில் கடத்திக்கொண்டு போகிறான் என்று எண்ணிய வைதேகி, “எதிர் பங்களா யாரோடது? அந்தக் கருப்பு உருவம் யாரு? காருக்குள்ள அவன் தூக்கி வீசிய பொண்ணு யாரு?” என்ற கேள்விகளைச் சுமந்தப்படி வேகமாகத் தன் அறையிலிருந்து கீழே ஓடி வந்தாள் வைதேகி.
கீழே வந்தவள் வீட்டு வாசலைத் தாண்டும் முன்னே,
“அங்கேயே நில்லு..இந்த நேரத்துல எங்க போற?” என்று தூரத்தில் ஒலித்த குரல் கேட்க்கும் திசையை நோக்கித் திரும்பிப் பார்த்த வைதேகியின் முன்னே திடிரென்று தோன்றிய கருப்பான பெண்ணின் உருவம், “கேக்குறேனே எங்க போற?” என்று மிக அருகில் வந்து கேட்டதும் அந்த உருவத்தைப் பார்த்த வைதேகி,
“அம்மா….” என்று அலறியவள் அதே இடத்தில் மயங்கிக் கீழே சரிந்தாள்.
வைதேகியின் குரலைக்கேட்டு மாறன், மாயா, கீதா, வேதநாயகி என்று அனைவரும் அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்து பார்க்க, இதே தருணம் எதிரே இருக்கும் மாளிகையில் ரணதீரன் ஒரு தூரிகைக்கொண்டு வைதேகியின் உருவத்தை ஓவியமாக வரைந்தவன், அவள் எலுமிச்சை நிற தேகத்திற்கு பதிலாகக் கருப்பு நிற சாயத்தைக்கொண்டு அவள் ஓவியத்தை வடிவமைத்துக்கொண்டு இருந்தவனின் ஒரு கண்ணில் கலை நயமும், இன்னொரு கண்ணில் கடும்கோவமும் அப்பட்டமாகப் பிரதிபலித்தது.
error: Content is protected !!