Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தூது செ(சொ) ல்லாயோ மெல்லிசையே

தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 10_02

“ஷ்யாம்!” கிட்டதட்ட அலறினேன் நான்.

“லவ்காக என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொன்னே. இப்போ குழந்தையை கொடுன்னு சொன்னா இப்படி அலறுறே?”

“இல்ல இல்ல ஷ்யாம். ப்ளீஸ் ஷ்யாம்” எனது தொனியில் அப்படி ஒரு கெஞ்சல். குழந்தையை பிரிவது என்பது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பயங்கரமாக தோன்றியது.

“என்னோட லவ்க்காக, உங்களோட நிம்மதிக்காக என்னுடைய மனசை உள்ளேயே புதைச்சிட்டு நான் உங்களையே சாருக்கு விட்டுத்தரேன். அதுக்கு மேலே நான் உங்களை எந்தத் தொந்தரவும் பண்ண மாட்டேன். உங்க கண்ணிலேயே படாம குழந்தையோட நான் எங்கேயாவது போயிடுவேன் அதுதான் என்னாலே முடியும் “ என்றேன் தவிப்புடன்.



Advertisement

“ஆனா அப்பா யாருன்னு கூட தெரியாம என்  குழந்தையை உன் கூட இருந்து தவிக்க விட நான் தயாரா இல்லை. குழந்தை பிறந்ததும் அதை நான் வளர்த்துக்கறேன். நீ உன் வாழ்க்கையை பார்த்துக்கோ”

அவன் சொல்லி முடிக்க “எப்படி? எப்படியாம் அது? குழந்தை வேண்டும். அம்மா வேண்டாமாமா?” சுறுசுறுவென ஏறியது எனது கோபம். இருந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

“இல்ல ஷ்யாம் நான் ஒத்துக்க மாட்டேன்” என்றேன் மெதுவாக.

Advertisement

“ஒத்துக்க வைப்பேன்” என்றான் கொதிக்கும் குரலில்.

Advertisement

“குழந்தை என்னோட பொக்கிஷம் ஷ்யாம். நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்” எனது குரலில் நிறைய உறுதி.

“நீ என்ன கொடுக்கிறது? என்னாலே சட்டபடி உன் மேலே கேஸ் போட்டு குழந்தையை பிடுங்கிக்க முடியும். முதலிலேயே சித்தாராகிட்டே இது முழுக்க முழுக்க ஆராய்ச்சிக்குத்தான்னு கையெழுத்து வாங்கி, டாகுமென்ட்ஸ் வெச்சிருக்கேன். அதுக்கு மேலே நிரஞ்சனாவை பிடிச்சு மத்த எல்லா ரிபோர்ட்சும் வாங்கி உன்னை கதற கதற வெச்சி குழந்தையை தூக்கிட்டு போகும் தைரியம் எனக்கு உண்டு” உச்சக்கட்ட கோபத்தில் அவன் உறும அவனையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்த எனது கண்களில் கண்ணீர் துளிகள்.

அடுத்த நொடி சடக்கென திரும்பிக்கொண்டான். அங்கே இருந்த குளிர்சாதன பெட்டியின் அருகே சென்று அதிலிருந்து தண்ணீரை எடுத்து வாயில் கவிழ்த்துக்கொண்டான். பொங்கிப் பொங்கி வெடிக்கும் கோபத்தை  தணிக்க முயலுகிறான் என்று புரிந்தது.

Advertisement

அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் கேட்ட கேள்விகள் எல்லாமே நியாயமாக இருந்தாலும், நான் எந்த நிலையிலும் குழந்தையை விட்டுத்தருவதாக இல்லை.

தவறோ சரியோ யாரையும் நம்பி நான் இந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் வரும் சாதக பாதகங்களை நானே சந்திப்பேன் என்ற உறுதி மட்டும் எனக்குள்ளே இருந்தது.

சற்று முன்பு கூட சொன்னானே “இல்ல பாப்பா. ரெண்டு நாளா நான் நானாகவே இல்லை பாப்பா. உன் கண்ணீர் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது” என. இப்போதும் எனது கண்ணீரை பார்ப்பதை தவிர்கிறானே அவன்.

‘ஷ்யாமுக்கு என் கண்ணீரை பார்க்கும் தைரியம் கண்டிப்பாக இல்லை. நான் உயிருடன் இருக்கும் வரை எனது கண்ணீரை மீறி அவனால் குழந்தையை என்னிடமிருந்து பிரித்துக்கொண்டு போக முடியாது. அதனால் இந்த விஷயத்தில் அவனுடன் அதிகம் போராட வேண்டி இருக்காது’ எனத் தோன்றியது.எனக்கு.

சில நொடிகளில் என்னை நிலைப்படுத்திக்கொண்டு அவனருகில் சென்று நின்றேன்.

“நிரஞ்சனாகிட்டே என்ன கேக்குறது. நானே எல்லா ரிபோர்ட்சும் கொடுக்கிறேன். உங்களாலே எந்த கோர்ட்டுக்கு போக முடியுமோ போங்க. என்ன தீர்ப்பு வேணும்னாலும் வரட்டும். நீங்க முதலிலே சாருவை நல்ல படியா கல்யாணம் பண்ணிக்கோங்க. அதுக்கு அப்புறமும் உங்களாலே குழந்தையை என்கிட்டேர்ந்து பிரிச்சு கொண்டு போக முடிஞ்சா பார்த்துக்கலாம். அது உங்களாலே கண்டிப்பா முடியாது” என்றேன் அவன் கண்களுக்குள் பார்த்து.

“நீ என்ன டயலாக் அடிச்சாலும் குழந்தை எனக்குத்தான். நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அடுத்த ரெண்டு மாசத்திலே எனக்கும் சாருக்கும் கல்யாணம் இருக்கும். அதுக்கு அப்புறம் குழந்தையை எடுத்திட்டு போய் நாங்க ரெண்டு பேரும் வளர்க்க போறோம். உன் மனசை அதுக்கு தயார் படுத்திக்கோ.” அவன் கோபச் சூடு பல டிகிரிகள் குறைந்திருந்தது.

“அந்த நேரத்தில அதெல்லாம் பார்த்துக்கலாம் ஷ்யாம். இப்போ ரொம்ப யோசிக்காம தூங்குங்க. குட் நைட். குழந்தை கண்டிப்பா நல்லபடியா எந்த பிரச்னையும் இல்லாம வளரும். அந்த உறுதியை நான் உங்களுக்கு கொடுக்கறேன்” கன்னங்களில் மீதமிருந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு கட்டிலில் சென்று படுத்துவிட்டிருந்தேன் நான்.

அவன் அங்கேயே சோபாவில் சாய்ந்திருந்தான். அடுத்து என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை எனக்கு. உறக்கம் பக்கம் வரவில்லை. அவனால் குழந்தையை பிரித்துக் கொண்டு போக முடியாது என உறுதியான நம்பிக்கை இருந்தது.

ஆனால் ஒரு வேளை வேறே மாதிரி ஏதாவது நடந்து நானே மனமுவந்து எனது பிள்ளையை அவனிடம் கொடுத்துவிடுவேனோ”

இந்த எண்ணம் திடீரென வந்து போக எனது உடலும் மனமும் மொத்தமாக அதிர்ந்து ஓய்ந்தது. எனது கரத்தால் எனது வயிற்றை பற்றிக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டேன் நான்.

எப்போது உறங்கிப்போனேன் என தெரியவில்லை. மறுநாள் காலை நான் கண்விழித்த போது சோபாவில் அமர்ந்து கைப்பேசியை உருட்டிக்கொண்டிருந்தான்.

“குட் மார்னிங் ஷ்யாம்”

‘நான் என் ரூமுக்கு போறேன்.” சொல்லிவிட்டு எழுந்திருந்தான் சோபாவை விட்டு.

ஆயிரம் கோபம் இருந்தாலும் உறங்கிக் கொண்டிருக்கும் என்னை தனியே விட்டுச் செல்லும் மனமில்லை அவனுக்கு என்பது எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. அது உள்ளிருக்கும் அவனது மகனுக்காக கூட இருக்கலாம். இருந்தாலும் புன்னகைத்துக் கொண்டேன் நான்.

சென்னைக்கு சென்றவுடன் மிகப்பெரிய பிரளயம் வருவதற்கான அறிகுறிகள் கண்டிப்பாக தென்பட்டன எனக்கு. எல்லாவற்றையும் சித்தாராவிடம் சொல்லி வைப்பது கூட நல்லதே எனத் தோன்ற உடனேயே அவளை அழைத்திருந்தேன் நான்.

கண்டிப்பாக வாய்க்கு வந்த படி என்னை திட்டி வைப்பாள் என நினைத்துக்கொண்டேதான் அவளை அழைத்தேன்.

“குட் மார்னிங்” என்று காலை புத்துணர்வுடன் சொன்னவளிடம் மூச்சு விடாமல் அத்தனையையும் சொல்லி முடித்தேன் நான்.

“அறிவிருக்கா உனக்கு? சிங்கப்பூர் வேண்டாம் சிங்கப்பூர் வேண்டாம்னு உனக்கு. படிச்சு படிச்சு, படிச்சு படிச்சு சொன்னேன். கேட்டியா நீ? அதோட ஐம்பத்தி ஏழாவது மாடிக்கு வேறே ஏறி போயிருக்கே”

“லிஃப்டிலேதான் போனேன்”

“ஓ.. இதிலே உனக்கு படி ஏறி போகலைன்னு வேறே குறையாக்கும். நான் அவனை தப்பே சொல்ல மாட்டேன். எல்லா தப்பும் உன்னோடது. நீ அனுபவி”

“சரி சரி தாயே. புராணம் படிக்காதே. இப்போ என்ன செய்ய சொல்லு?”

சில நொடிகள் மெளனமாக யோசித்தவள் “குட். வெரி குட்” என்றாள் நிதானமாக

“என்ன வெரி குட்?”

“எப்படியும் அவனுக்கு ஒரு நாள் தெரியணும். இப்போவே தெரிஞ்சது வெரி குட். நீ பெரிய விளக்கம் எதுவுமே கொடுக்காமல் அவனே நீ செஞ்சது எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டது வெரி வெரி குட்”

“அவனுக்கு குழந்தை வேணுமாம். அது புரிஞ்சதா உனக்கு?” நான் அவளை உலுக்க

“ஏன் அவன் உன்னை கல்யாணம் பண்ண மாட்டானாமா? குழந்தை மட்டும் வேனுமாமா?” கொக்கிப் போட்டாள் என்னிடம். இதுவரை அவளுக்கு சாரு விஷயம் தெரியாதே!

“அதெல்லாம் மாட்டான். குழந்தை மட்டும் வேணுமாம்”

“அது இன்னும் வெரி வெரி குட். கொடுத்திடு. ஒரு அப்பனா அவனே வளர்க்கட்டும் ” என்றாளே பார்க்க வேண்டும். பற்றிக்கொண்டு வந்தது எனக்கு.

“என்ன விளையாடுறியா நீ? அதுக்கா இத்தனை போராட்டம் எனக்கு?. என் குழந்தை என்னோட பொக்கிஷம் தெரிஞ்சுக்கோ. அதை எல்லாம் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்” படபடத்தேன் நான்.

“எனக்கென்னமோ குழந்தை பிறந்ததும் அவன் கையிலேதான் நீ தூக்கி கொடுப்பேன்னு தோணுது. சில விஷயங்கள் எனக்குத் தோணினா நடக்கும்”

“உன் வாயை கொஞ்சம் மூடறியா? என் உயிர் இருக்கும் வரை அப்படி எல்லாம் நடக்காது தெரிஞ்சுக்கோ.”

“சரி சரி உடனே செண்டி ஆகாதே. நாளைக்கு வந்ததும் எப்படியும் எங்க அப்பா அம்மா எல்லார் முன்னாடியும் ஒரு பஞ்சாயத்து வைப்பான். சரி எல்லாத்தையும் சந்திப்போம். நீ பத்திரமா வந்து சேரு” முடித்தாள் எனது தோழி.

நாளை காலை ஐந்தரை மணிக்கு சென்னைக்கு விமானம். இன்று மாலை நேற்றைய நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியும், விருந்தும் உண்டு.  நான் குளித்து தயாராவதற்குள் சங்கீதா வந்திருந்தாள்.

அதனால் அதன் பிறகு அவன் எனது அறைக்கு வரவில்லை. மாலையில், நிகழ்ச்சிக்கும் நான் சங்கீதாவுடனே சென்றேன். இன்றும் இருவரும் இணைந்து பாடினோம் என்றாலும் அதில் ஒரு உயிர்ப்பு இல்லை என்பதைப் போலவே ஒரு எண்ணம். என்னைப் பார்த்து ஒற்றை புன்னகை கூட செய்யவில்லையே அவன்!

அந்த ஒரு மயக்கம் வராமல் இருந்திருக்கலாம் என்று  தோன்றியது. அப்படி அது வந்திருக்கவில்லை என்றால் அவன் பாதையில் அவன் சென்றிருப்பான் என் பாதையில் நான் பயணித்திருப்பேன். அழகாக முடிந்திருக்கும் இந்தப் பயணம்.

மாலையில் தனாவும் சாருவும் மலேசியாவுக்கு புறப்பட்டிருந்தனர். அதிகாலை நான்கு மணிக்கு விமான நிலையத்தை அடையும் வரை என்னுடன் பெரிதாக பேசிவிடவில்லை ஷ்யாம். ஆனாலும் எனக்கேற்றார் போல் சற்றே மெதுவான நடையுடனே என்னுடன் வந்து கொண்டிருந்தான் அவன்.

எங்களது போர்டிங் பாஸ்களை வாங்கிக்கொண்டு நாங்கள் இருக்கைகளில் காத்திருந்த நேரத்தில் அவனருகில் வந்து விளையாட ஆரம்பித்தது ஒரு அழகு குழந்தை. அதனுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் அவன் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

அந்த குழந்தை விலகி சென்றவுடன் ஒரு நொடி சட்டென என் பக்கம் திரும்பியவனின் பார்வை தனது வாரிசை கண்களால் அளந்துவிட தவித்ததைப் போலத் தோன்றியது எனக்கு.

இன்று எனது வழக்கமான தொள தொள வகை சல்வார் அணிந்து, துப்பாட்டவை மடித்து, எனது சற்றே மேடிட்ட வயிறு வெளியே தெரியாத வண்ணம் அணிந்திருந்தேன் நான்.

அவனது விழிகளில் ஏமாற்றம் பரவ திரும்பிக்கொண்டான் அவன். இருந்தாலும் அவனது மனதிற்குள் இருக்கும் அந்த ஆர்வம் குறையவில்லை போலும். அவ்வப்போது ஓரக்கண்ணால் என்னை அளப்பதுவும் திரும்பிக் கொள்வதுமாக இருந்தவனை பார்க்க பாவமாகவே இருந்தது எனக்கு.

சில நொடிகள் கழித்து மெதுவாக எழுந்தேன் நான். “இருங்க ஷ்யாம். பாத்ரூம் போயிட்டு வந்திடறேன்”

திரும்பி வரும்போது எனது துப்பட்டாவை அவனுகேற்றார் போல் சற்றே சரி செய்து கொண்டு நான் அவனை கடந்து  நடந்து வந்த போது அவன் கண்களில் அப்படி ஓர் அவசரத் தவிப்பு. முகம் கொள்ளா பரவசத்துடன் பார்வையாலேயே வருடி அணைத்துக்கொண்டான் எனது வயிற்றுக்குள் இருக்கும் தனது மகனை.

சில நொடிகள் இடைவெளி விட்டு நான் அவனருகில் வந்து அமர்ந்துக்கொள்ள மெல்ல திரும்பி எனது கண்களுக்குள் பார்த்த அவனது விழிகளுக்குள் ஒரு சொட்டு நன்றியின் பாவம் இருந்ததைப் போன்றொதொரு சந்தேகம் எனக்கு.

மெல்ல சிரித்துக்கொண்டேன் எனக்குள்ளே “எனது சங்கீதகாரனை ஒரு தந்தையாகவும் பார்த்துவிட்ட திருப்தி எனக்கு”

‘அப்படியே என்னவனின் தோளில் சாய்ந்து கொண்டால் எப்படி இருக்கும்?’ மனதோரத்தில் ஒரு ரகசிய ஆசை.

“பசிக்குதா? ஏதாவது சாப்பிடறியா?” மெதுவாக கேட்டான் என்னவன். குழந்தைக்காக சொன்னானோ எனக்காக சொன்னானோ அந்த “பசிக்குதா?” என்ற ஒற்றை வார்த்தையில் பேரானந்தம் எனக்குள்ளே.

‘இல்ல ஷ்யாம் இப்போ எதுவும் வேண்டாம்”

“நான் உனக்காக கேக்கலை. வயித்திலே இருக்குற என் குழந்தைக்காக கேட்கறேன்”

“என் குழந்தைக்கு எப்போ என்ன குடுக்கணும்ன்னு உங்களை விட எனக்கு நல்லா தெரியும்” நான் சொல்ல முகத்தை சில நொடிகள் ஆழமாக பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான் அவன்.

‘பாவம்தான் அவனும்’ எனக்குள் சொல்லிக்கொண்டேன் நான்.

“எனக்கென்னமோ குழந்தை பிறந்ததும் அவன் கையிலேதான் நீ தூக்கி கொடுப்பேன்னு தோணுது. சில விஷயங்கள் எனக்குத் தோணினா நடக்கும்” சித்தாராவின் வார்த்தைகள் இப்போது என்னை கொக்கியில் மாட்ட லேசான பயம் எனக்குள்.

“போகும் போக்கை பார்த்தால் ஒரு வேளை அப்படியும் நடந்துவிடுமோ? நான் நினைத்து முடிப்பதற்குள் எனது வயிற்றுக்குள் படபட அசைவுகள்.

“இல்லைடா இல்லைடா கண்ணா. அம்மா உன்னை அப்படியெல்லாம் கொடுத்திட மாட்டேன்டா கண்ணா” சொல்லிக்கொண்டேன் எனது மகனிடம்.

அடுத்து விமானம் ஏறும் நேரம் வர, நான் படிக்கட்டில் கால் வைத்த நேரத்தில் “பார்த்து வா” என்று நான் பற்றிக்கொள்ள தனது கையை நீட்டினான் ஷ்யாம். தனது  குழந்தை  மீது அத்தனை அக்கறை அவனுக்கு.

விமானம் வானத்தில் மிதந்துக்கொண்டிருந்தது. அது மேலே ஏறும் போது எனக்கு ஏற்பட்டிருந்த சின்னச் சின்ன அசௌகரியங்கள் இப்போது சற்றே சமன்பட்டிருந்தன. ஷ்யாம் சீட்டை தளர்த்திக்கொண்டு கண் மூடியிருந்தான். நான் அவன் முகத்தையே பார்வையால் குடித்துக்கொண்டிருந்தேன்.

இப்போது எனக்குள்ளே சின்னதாய் ஒரு ஆசை. அவன் கன்னத்தில்  ஒரே ஒரு முறை முத்தமிட்டு விட வேண்டுமென்று ஒரு ஆசை. அடுத்து அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்காது என்பது எனக்கு நன்றாகவேத் தெரியும்

‘உறங்கிவிட்டானா?” பரபரத்தது என்னுள்ளம். அப்படித்தான் தோன்றியது எனக்கு. சற்றே அவன் பக்கமாக நான் சாய்ந்து உட்கார சடக்கென கண் திறந்து என் பக்கம் திரும்பினான் அவன்.

“எதுவும் ப்ராப்ளமா?”

“இ..இல்ல ஒண்ணுமில்ல” சரியாக அமர்ந்துக்கொண்டேன்.

‘உன் மகனுக்கு ஒன்றுமில்லை. கண் மூடி தூங்கு’ சொல்லவேண்டும் போல் தோன்றியது எனக்கு. ஆனாலும் சொல்லிக்கொள்ளவில்லை.’ மறுபடி கண் மூடிக்கொண்டான் எனது சங்கீதக்காரன்,

மெல்ல எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவன் முகத்தை மறுபடி ரசிக்கலானேன். .அவன் என்னை காதலிக்கவில்லை என்ற கோபம் துளியும் இல்லை எனக்கு.

அவன் நிலையை, அவனது கடந்த காலத்தை நன்றாக அறிந்த என்னால் எப்படி அவன் மீது கோபப்பட முடியும்?

”தனா என்னோட உயிர்மா. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாவே விளையாடி, ஒண்ணாவே படிச்சு, ஒண்ணாவே வளர்ந்து அவனில்லைன்னா நான் இல்லை அப்படிங்கிற மாதிரித்தான் இருந்தோம் பாப்பா. என் மேலே அவனுக்கு எப்பவும் நிறைய நம்பிக்கை உண்டு. அதனாலேதான் அவன் தங்கையை எனக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்தான்” சொன்னானே அவன். அதுதான் உண்மை.

அவனது கடந்த காலத்தை பற்றி சித்தாராவும் சொல்லி இருக்கிறாள் என்னிடம். நான் அவனை நேரில் சந்தித்திராத காலமது. அவனது ரசிகையாய் நான் அவனை ரசித்திருந்த காலமது.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னால் ஊரறிய, பத்திரிக்கைகளும் டி.வி அலைவரிசைகளும் செய்திகள் வெளியிட மிக பிரம்மாண்டமாகவே நடந்தது இவனுக்கும் தனாவின் தங்கை ரஞ்சனாவுக்குமான திருமணம்.

தனாவுக்கு அப்பா இல்லை. தனா மலேசியாவில் வேலை பார்த்துக்கொண்டிருக்க அவர்கள் குடும்பம் அவர்கள் சொந்த ஊரான சேலத்தில் இருந்தது. மிக அருமையான குடும்பம் என்று சொன்னால் மிகையில்லை. திருமணமும் சேலத்தில்தான் நடந்தது.

சித்தாராவின் மூலமாக எனக்கும் அழைப்பு வந்த போதிலும் அம்மா என்னை அந்தத் திருமணதிற்கு செல்ல அனுமதிக்கவில்லை.

“கல்யாணம் வெளியூரிலே. அதுவும் சினிமாக்காரன் வீட்டு கல்யாணம். இதுக்கெல்லாம் நீ போகணும்னு கனவு காணாதே சொல்லிட்டேன்.”

“சித்தாராதான் இருக்காளேமா. என்னோட இன்னும் ரெண்டு மூணு ஃப்ரெண்ட்சும் வாராங்கம்மா”

“யார் வந்தாலும் நீ அங்கே எல்லாம் போகக்கூடாது சொல்லிட்டேன்” முடித்துவிட்டாள் அம்மா.

அப்படி எல்லாம் கட்டுப்பாடுகள் போட்டு என்னை வளர்த்த அம்மா, இன்று வானத்தில் ஒரு வேளை நான் செய்து வைத்திருக்கும் இந்தக் காரியத்தை பற்றி அறிந்தால் உள்ளுக்குள் எப்படித் துடிப்பாள் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

சரி நாம் திருமண கதைக்கு வருவோம். சேலம் மாநகரையே திக்கு முக்காட செய்துதான் நடந்தது இந்தத் திருமணம். நானும் ஏதாவது ஒரு டிவி. சேனலிலோ அல்லது ஏதாவது ஒரு சமூக வலைத்தளத்திலோ அவனது திருமணத்தின் புகைப்படம் கிடைத்துவிடாதா என நாள் முழுவதும் தேடிக்கொண்டிருந்தேன்.

ஆனால் மறுநாள் காலையில்தான் எனக்கு கிடைத்தன அந்த அதிர்ச்சிகரமான புகைப்படங்களும்,  செய்திகளும்.

                                                          தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!