Skip to content
Post Views: 8,704
நான் தேடும் காதல் நீ…..1
சென்னை,
அந்த அதிகாலை வேளையில் நாச்சியப்பன் டீகடையில் வேலைகள் பரபரப்பாக தான் நடந்து கொண்டிருந்தது.இன்னும் சற்று நேரத்தில் மண்டி திறந்துவிடும் அதற்குள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தன் வேலைகளை மும்மரமாக செய்து கொண்டிருந்தாள் சிவதீர்த்தா.கைகள் வேலையை செய்தாலும் மனது நேற்று நடந்த நிகழ்விலேயே நின்றது.
தான் கேட்டதும் தவறுதான் இருந்தாலும் அவன் கூறிய பதில் தான் கடுமையாக இருந்தது.இது முதல் முறை அல்ல அவனிடம் இப்படி திட்டு வாங்குவது இருந்தாலும் இம்முறை ஏனோ மிகவும் வலித்தது.
Advertisement
“உனக்கு இப்படி தான் பதில் வரும்னு தெரியும் தான அப்புறம் எதுக்கு அவன் கிட்ட போய் கேட்ட….அப்ப நல்லா வேணும் உனக்கு……இந்த திட்டு உனக்கு தேவை தான்….”என்று மனசாட்சி அவளை காரி உமிழ,மனமோ அவனிடம் போனால் நிச்சயம் தன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் அதனால் தானே போனேன் என்று வக்காலத்து வாங்கியது.
“அப்ப முதல்ல உன் பிரச்சனையை தான் நீ சொல்லியிருக்கனும் அதை விட்டுட்டு நீ உன் ஆசையை நிறைவேத்திக்க தான் பார்த்திருக்க அப்படிதான…..”என்று மீண்டும் மனசாட்சி கேள்வி எழுப்ப இந்த முறை அவள் மனது ஆம் நான் என் ஆசை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தேன் தான் என்று உரக்க கூறியது அதோடு அது நிறைவேற வாய்ப்பே இல்லை என்றும் கூற தன்னையும் அறியாமல் அவளின் கண்ணீர் துளி அவளின் கைகளில் பட்டு தெரிக்க தன் சுயப் பெற்றவள்,
“போச்சு போ இப்படியே இருந்தா பொழப்பு விளங்கிடும்….இருக்குற பிரச்சனை பத்தாதுனு இப்ப நானே வாயை விட்டு பிரச்சனை இழுத்துவிட்டுருக்கேன்…ம்ஹம் இது சரி வராது இன்னைக்கு பேசிட வேண்டியது தான்…..அப்ப தான் நான் நானா இருப்பேன்…..”என்று தனக்குள் கூறி ஒரு தெளிவிற்கு வந்த பின் தான் தீர்த்தாவிற்கு மனது சமநிலை அடைந்தது எனலாம்.
Advertisement
காலை பத்து மணி,
Advertisement
“செந்தாக்கா இந்த கிளாஸை கழுவிட்டு சாதத்தை பாருங்க நான் வந்துடுறேன்….”என்று கூறிவிட்டு வீட்டின் உள்ளே வந்தவள் அன்றைக்கு எலுமிச்சை சாதம் கிளறுவதற்கு தேவையான எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு வர,அப்போது அவளின் கடையை கடந்து சென்றது அந்த புல்லட்.அதை ஓட்டி செல்பவனின் பார்வை ஒரு நொடி ஒரே ஒரு நொடி இவளின் கடையை ஆராய்ந்துவிட்டு தான் சென்றது.அதை தீர்த்தாவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.அவளின் கைகள் அவனிற்கான தேநீரை கலந்து கொண்டிருந்தது.அவள் கலந்த முடித்த அடுத்த இரு நிமிடத்தில்,
“பூரி ஸ்டராங்கா ஒரு டீ போடு……” என்று எதிரில் நின்றவனிடம் முறைத்துக் கொண்டே டீயை நீட்டினாள் தீர்த்தா.
“என்னா முறைக்கிற பூரி…..அடுத்தது சாப்பாட்டுக்கு வருவேன்….”என்று நக்கலாக கூற அவனின் முன்னே இருந்த சுடு தண்ணியின் பக்கம் தீர்த்தாவின் கை போக,
Advertisement
“இல்ல இல்ல சிவா…..சிவதீர்த்தா…போதுமா…..”
“ஓடி போயிடு….இல்ல என்கிட்ட அடிவாங்கி சாகாத….”என்று காளி போல அவள் கண்ணை விரிக்க,
“அச்சோ காளியாவே மாறிடுட்டா….விடு சூட்….”என்று டீயை எடுத்துக் கொண்டு எதிரில் இருக்கும் பாண்டியன் காய்கறி மண்டியினுள் நுழைந்தான் கதிர்.
“இவங்க சண்டையில என்னை தான் வருத்தெடுக்குறாங்கப்பா….நல்ல வேலை தூரமா நின்னேன் இல்ல…”
“உன் மூஞ்சி வெந்துருக்கும்….”என்று அழுத்தமான குரலில் கதிரின் வாக்கியத்தை நிறைவு செய்தான் அமரதேவன்.வார்த்தைகள் எத்தனை அழுத்தமாக இருக்கிறதோ அதே அளவு அழுத்தம் அவனின் முகத்திலும்,உடலிலும் இருக்கும்.அதைவிட அவனின் முகத்தில் முன் நெற்றியில் இருக்கும் அந்த தழும்பு பலரை பயம்கொள்ள வைக்கும்.நன் நடத்தையும்,வார்த்தைகளில் தெளிவும் இருந்தால் ஒருவனின் வாழ்வு எவ்வளவு தாழ்ந்து போனாலும் அந்த தாழ்வையே ஏணியாக மாற்றி ஏறி நின்றுவிடுவார்கள் அதற்கு அமரன் ஒரு உதாரணம்.இல்லை என்றால் பதினாறு வயதில் தன் தந்தை இறந்த பின் அவரின் மண்டியை தனியாக நடத்தி இன்று நிலைநிறுத்தியிருக்க முடியாதே.
“ஹிஹி….சும்மா இந்தா டீ….நான் வரேன்….”என்று ஓட பார்த்தவனை,
“போய் உன் தம்பியை காலேஜ்க்கு கிளம்ப சொல்லு நான் பீஸ் கட்டிட்டேன்….இனி அவன் இங்க வரக்கூடாது….”என்று கூற கதிர் அமைதியாக தன் தம்பி சரவணை பார்த்துவிட்டு வெளியில் சென்றுவிட,
“நான் காலேஜ்க்கு வேணா போறேன் ஆனா இங்க வரக்கூடாதுனு மட்டும் சொல்லாதண்ணே…..இந்த மண்டி தான் எனக்கு எல்லாம் இது,அப்புறம் நீ இல்லாம நான் இருக்கமாட்டேன்….”என்று அழுது கொண்டே கூறினாலும் அழுத்தமாக கூறினான் சரவணன்.அவன் இதை தான் கூறுவான் என்று தெரிந்த அமரனும் தன் நெற்றி தழும்பை தடவிய வாரே அமர்ந்திருக்க,
“நீ எதுக்குடா அனுமதி கேட்குற….இது உன் இடம் நீ எப்போதும் வரலாம் போயிட்டு வா…..”என்று கூறியபடி வந்தாள் தீர்த்தா.அவள் கூறிவுடன் சிரித்த சரவணன் பாவமாக அமரனை பார்க்க,அவனோ தீர்த்தாவை அழுத்தமாக பார்த்துவிட்டு சரவணனிடம் திரும்பி,
“போ…..”என்றுவிட
“சரிண்ணே….நான் வரேன்…..”அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை திருப்பியது அவனின் அழுத்தமான குரல்.
“ப்ச் வந்த வேலையை பார்த்துட்டு கிளம்பு….”என்ற சலிப்பான குரலில் கூறியவனை முறைத்துக் கொண்டே அவன் தந்த கிளாஸை எடுத்தவள் பார்வை எப்போதும் போல் அவனை துளையிட்டு செல்வது போல் தான் தோன்றியது அவனிற்கு.அதுவும் அவளின் விருப்பம் தெரிந்து தான் மறுத்த பின் அவளின் பார்வை பிடிக்கவில்லை அதை அவன் கூறியும் விட அவள் தான் மாறவில்லை.அவன் கூறுவதை கேட்பது என்பது தான் அவளின் அகராதியிலேயே இல்லையே.
“உன்னை நான் பார்க்க கூடாது நினைச்சீனா சொல்ல வேண்டியது தான அதுக்கு எதுக்கு மென்னு முழுங்குற….”என்றவளின் வார்த்தையில் திடுக்கிட்டு ஏறிட தீர்த்தா தான் அவனின் எதிரில் தோரணையாக நின்றாள்.
“நீ இன்னும் கிளம்பல…..”என்றவனின் பார்வை சுற்றத்தை ஆராய,
“யாரும் இல்ல….அதனால தான் நிக்குறேன்….என்கிட்ட சொல்ல என்ன தயக்கம் அமரா….”என்று மீண்டும் அதிலேயே நிற்க,இவனிற்கு தான் அவஸ்தையாக இருந்தது,
“சரி சரி நெளியாத நான் இனி பார்க்கல….நீ சங்கடபடாத….நான் ஏதோ என் மனசுல உள்ளதை சொன்னேன்…அவ்வளவு தான் அதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகனும்னு ஒண்ணுமில்லையே…..”என்றவள் வெளியில் சென்றுவிட அமரனுக்கு கோபம் தான் மேலோங்கியது.நேற்று அழுதபடி சென்றவள் இன்று எதுவும் நடக்காதது போல அவனின் முன் வந்து நின்றதும் சற்று ஆடி தான் போனான் அமரன்.இதுவரை அவன் கோபத்தின் முன் யாரும் எதிர்த்து நின்றதில்லை இவள் அதையும் தாண்டி வருகிறாளே என்று தான் ஆச்சிரியமாக இருந்தது.கூடவே தீர்த்தாவின் இயல்பே இது தான் என்றும் மூளை எடுத்துரைக்க தன் போல் தலையை அசைத்துக் கொண்டவனிற்கு மனதில் எழும் எரிச்சலை தான் அடக்க முடியவில்லை.
அதோடு தன்னுடைய விருப்பம் எது என்று அறிந்த பின்னும் தீர்த்தாவிற்கு தன் மேல் இருக்கும் விருப்பத்தை ஏற்க முடியவில்லை இதோ இரு முறை மறுத்துவிட்டான்.ஆம் அவனின் இருப்பதைந்தாவது வயதிலேயே தீர்த்தா தன் காதலை கூறியிருந்தாள் அப்போதே,
“இங்க பாரு தீர்த்தா….என்னோட அம்மா தான் எனக்கு எல்லாம் அதோட விரும்பம் தாமரை அதனால இதை இதோ விட்டுடு….”என்று திட்டவட்டமாக மறுத்திருந்தான்.அவளும் அதன் பின் அவனை எந்தவித தொந்திரவு செய்ததில்லை.அவள் தன்னை மாற்றிக் கொண்டுவிட்டாள் என்று இவன் நினைத்திருக்க,நேற்று நிகழ்ந்த நிகழ்வு அவனை முற்றிலுமாக மாற்றியிருந்தது.
நேற்று இரவு மண்டியை சாற்றும் நேரம்,
“அமரா….உன் கிட்ட கொஞ்சம் பேசனும்…..”என்றபடி வந்து நின்றவளை கண்டதும் என்ன என்று தான் புருவன் உயர்த்தினான்.
“ஏன் என்ன விஷயம் தீர்த்தானு கேட்டா முத்து உதிர்ந்துடுமா….”என்று அதற்கும் அவள் குதர்க்கமாக பேச அமரனின் முகத்தில் முறைப்பு கூடியது கூடவே சலிப்பும் கிளம்பும் நேரத்தில் எழரை கூட்ட வந்திருக்கிறாள் என்று புரிந்தது.அவன் கடிகாரத்தை பார்த்துவிட்டு அவளை பார்க்க,
“இப்ப என்ன நேரங்கட்ட நேரத்துல வந்து உன்னை தொந்தரவு பண்ணுறேன் அதான….”என்று அவள் கூறியதும்,
“ஆமா….”என்று அழுத்தமாக பதில் அளித்தான் அமரன்.
“இதுக்கு மட்டும் பதில் வரும்….”என்று அவனின் முகத்தில் குத்துவது போல் கை ஓங்கி இறக்கியவள் சாவகாசமாக அவனின் எதிரில் அமர்ந்து,
“அப்படி தான் வருவேன் பேசுவேன்….”என்று கூற,தன் தலையில் அடித்துக் கொண்டான் அமரன்.
“நல்லா அடிச்சுக்கோ….இப்ப தான் நிம்மதியா இருக்கு….”
“சொல்லி தொலை….”என்று கூறினாலும் அவனிற்கு நன்கு தெரியும் விஷயம் இல்லாமல் பார்க்க வரமாட்டாள் என்று. அவன் கூறியதும் அதுவரை சரலமாக பேசிய வாய் மூடிக் கொண்டது.புதிதாக தயக்கம் வந்துவிட அவளின் முகத்தில் நடுக்கம் அனைத்தையும் அவதானித்தவனுக்கு ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிய,
“தீர்த்தா….”என்ற ஒற்றை அழைப்பில் நிமிர்ந்தவள்,
“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா அமரா….”என்றுவிட்டு தலையை குனிந்து கொள்ள,இப்போது சம்பிப்பது அவனின் முறையானது.
“என்ன என்ன சொன்ன….”என்று அதிர்ச்சி விலகாமல் அவன் கேட்க,அவள் மீண்டும் கூறியதையே கூற,தன் இறுக்கையில் இருந்து கோபமாக எழுந்தவன் எதிரில் இருந்த டீ பாயை எட்டி உதைத்துவிட அது எதிரில் இருந்த சுவரற்றில் உடைந்து விழுந்தது.அதுவே அவனின் கோபத்தின் அளவை காட்டியது. தீர்த்தாவிற்கு உள்ளுக்குள் நடுக்கம் தான் கோபம் வரும் என்று எதிர்பார்த்தாள் தான் ஆனால் இந்தளவிற்கு எதிர்பார்க்கவில்லை,கண்கள் எல்லாம் குளம் கட்டி கண்ணீர் உகுக்க தொடங்கியது.
“ஏய் என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ….உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது….முதல்ல கிளம்பு நீ….எதாவது உளறிகிட்டு…..”என்று மிகவும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு தான் கூறினான்.இந்தளவுற்கு தன்னை கட்டுப்படுத்துவதும் இது தான் முதல் முறை.
“அமரா…..”என்றவளின் முன் ஒற்றை கரத்தை நீட்டி தடுத்தவன்,
“நீ எதுவும் பேச வேண்டாம் கிளம்பு முதல்ல….”என்று வாசலை காட்டிவிட,அதற்கு மேல் அங்கு நிக்க முடியாமல் அவள் வெளியேற,அவளை கொன்றுவிடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தவனிற்கு சற்று நேரம் தேவைப்பட்டது தன்னை நிதானப்படுத்த.சற்று நேரம் தன் இருக்கையில் அமர்ந்தவனிற்கு எதுவும் ஓடவில்லை இது தான் முதல் முறை தீர்த்தா அவனின் கோபத்திற்கு அடங்கி செல்வது.அவனின் கோபத்தின் முன் கூட பேசக்கூடிய ஒரே ஆள் அவள் தான்.அவன் நினைத்தால் மற்றவர்களை போல் அவளை தன் பார்வையிலேயே தூர நிறுத்திவிடலாம் ஆனால் அவன் செய்யாமல் இருப்பதற்கு ஒரு காரணம் நாச்சியப்பன் தீர்த்தாவின் தாத்தா.அவனின் குரு என்று கூட சொல்லாம்.தான் சரிந்த நேரத்தில் தனக்கு பக்க பலமாக இருந்த நல்ல உள்ளம்.அவரை கொண்டு தான் தீர்த்தாவை அவன் விட்டு வைப்பது.
அம்மா அம்மா நீ..
எங்க அம்மா
உன்ன விட்டா
எனக்காரு அம்மா……என்ற பாடலுடன் அவனின் கைபேசி இசைக்க முகப்பு பக்கத்தில் அவனின் அன்னை அகிலாண்டேஸ்வரியின் முகமும் மின்னி மறைய அதுவரை இருந்த நினைவுகள் அருபட உடனே எடுத்து காதில் வைக்க,
“கண்ணா….”என்ற தேன் குழையும் குரலில்,அதுவரை இதயத்தில் எரிந்து கொண்டிருந்த தீ அணைந்து குளிர் பரவியது,
“சொல்லு ம்மா….”
“என்ன கண்ணா வேலை அதிகமா இன்னும் வரலை….”என்றவரின் குரலில் அத்தனை பரிதவிப்பு,
“இதோ கிளம்பிட்டே இருக்கேன்….வந்துடுவேன் நீங்க சாப்பாட்டை எடுத்து வைங்க….”என்று கூறி வைத்தவன் கிளம்பியும் விட்டான்,மண்டியை அடைத்துவிட்டு தன் புல்லட்டை ஸ்டார்ட் செய்தவன் எதிரில் இருந்த கடையை பார்த்தான் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது ஆனால் உள் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.தெரியும் நிச்சயம் அழுது கொண்டிருப்பாள் என்று இருந்தும் மனது இறங்கவில்லை ஏனோ கோபம் தான் அதிகரித்தது.அதுவும் தன் மீது தான் அதிகம் இவளிற்கு சற்று அதிகம் இடம் கொடுத்துவிட்டோம் என்று தன்னை தானே நொந்து கொண்டு தன் வீடு நோக்கி புறப்பட்டுவிட்டான்.
error: Content is protected !!