“இந்த அண்ணாவை வேற அரைவேக்காடுன்னு சொன்னோம்ல?” என்று அவளுக்கு உறைக்க, “குரங்கன்ன விட்டுட்ட?” என்று தினேஷ் எடுத்துக் கொடுக்க, பயத்துடன் சென்று தனது கணினியில் அமர்ந்தாள் திவ்யபாரதி. அவளது இடது பக்கத்தில் தினேஷ் அமர்ந்து கொண்டான்.
Advertisement
சலசலவென்று கம்மிய குரலில் பேசிக் கொண்டிருந்த மாணவர்களின் சப்தம், ஹெச்.ஓ.டி வேல்முருகன் தன் இருக்கையில் இருந்து சற்றே எழுந்து மீண்டும் அமரவும் சட்டென அடங்கிப் போயிற்று.
“ஸ்டூடெண்ட்ஸ்! இன்னைல இருந்து டி.பி.எம்.எஸ் லேப்போட இன்சார்ஜ் மிஸ்டர் பரணிதரன் தான். சப்ஜெக்டையும் அவர்தான் ஹேண்டில் பண்ணுவார். ஹி இஸ் அவர் அலுமினி. ப்ளீஸ் வெல்கம் ஹிம்!” என்று சொல்லி, அத்தோடு தன் கடமை முடிந்த களிப்பில் இருக்கையை விட்டு எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
ஹெச்.ஓ.டி வெளியே சென்றுவிட, ‘செத்தோம்’ என்று மனதினுள் திவ்யா நினைத்துக் கொண்டாள். அதே நேரம் தன் தொண்டையைச் செருமிக் கொண்டு பரணிதரன் பேசத் துவங்கினான்.
Advertisement
அவன் பேச ஆரம்பிக்கவும் அவன் முகத்தில் தயக்கத்துடன் கண் பதித்தாள் திவ்யா. முழுக்கை சட்டையில் ஒடிசலாக இருந்தான். கை மணிக்கட்டின் பொத்தான்களை இருமுறை சரி செய்துவிட்டு தெளிவாகப் பேசலானான் பரணி.
Advertisement
“ஹாய் கைஸ்! ஐம் பரணிதரன்! ஃபர்ஸ்ட் என்னை பத்தி சின்ன இன்ட்ரோ கொடுத்தறேன். நான் உங்க சூப்பர் சீனியர், ‘எலக்ட்ராமெக்’ கம்பெனில ப்ளேஸ் ஆகியிருக்கேன். இன்னும் கம்பெனில இருந்து கால் லெட்டர் வரலை. உங்க லேப் அசிஸ்டெண்ட் மேம் லீவ்ல போனதால, அவங்க ப்ளேஸ்ல டெம்ப்ரவரியா ஜாயின் பண்ணியிருக்கேன்.” என்று ஹெச்.ஓ.டி அவனைப் பற்றி சொல்லாமல் விடுத்த விஷயங்களைக் கோர்வையாக கூறினான்.
அவ்வப்போது சாதாரணமாக அவன் கண்கள் திவ்யா, தினேஷ் அமர்ந்திருந்த பக்கம் வந்து மீண்டாலும், ஒரு நொடிக்கும் மேல் அவர்களிடம் அவன் பார்வை நிலைக்கவில்லை.
தன்னைப் பற்றி சொல்லி முடித்தவன் மாணவர்களைப் பேசத் தூண்டாமல், “ஹாஸ்டல் பாய்ஸ் பேர்லாம் எனக்கு கொஞ்சம் தெரியும். கேர்ள்ஸ் அண்ட் டேஸ்காலர் பசங்க பேர் போகப் போக தெரிஞ்சுக்கிறேன். வித் அவுட் டிலே ஷேல் வி ஸ்டார்ட் த க்ளாஸ்?” என்று சொல்லிவிட்டு, ப்ரொஜெக்டர் எரிய விட்டு விளக்குகளை அமர்த்தினான்.
Advertisement
மாணவர்களுக்குத் திரையில் காட்டப்பட்ட ப்ரோக்கிராமை முதலில் விளக்கியவன், அதனுடன் சேர்ந்து தெளிவான அதன் தியரி கான்செப்டையும் சேர்த்து விளக்கினான்.
“தெளிவா சொல்லித் தர்றார்ல? எனக்கே புரியுதுன்னா பார்த்துக்கோ…” என்று தினேஷ் முணுமுணுக்க,
திவ்யாவும், “அதனால தான் கேம்பஸ்ல ப்ளேஸ் ஆகியிருக்கான்.” என்று ஆமோதிப்பாக பதிலளித்தாள்.
“கைஸ், எல்லாரும் ப்ரோகிராமை உங்க அப்சர்வேஷன் நோட்ல காபி பண்ணிட்டு, சிஸ்டம்ல ட்ரை பண்ணுங்க.” என்று கூறி, விளக்குகளை எரிய விட்டவன், “அவங்க அவங்க நோட்ல தானே எழுதுறீங்க? இல்லைன்னா இப்போவே சொல்லிடுங்க.” என்று சரியாக திவ்யாவையும் தினேஷையும் பார்த்துக் கேட்டிருந்தான்.
மாணவர்கள் கணினியை உயிர்பிக்கத் துவங்கியிருக்க திவ்யாவிற்கு தர்மசங்கடமாக இருந்தது. இதற்கு மேலும் அமர்ந்திருந்தால் எங்கே திட்டிவிடுவானோ என்று அச்சமாக இருந்தது. அவள் திரும்பி தினேஷை பார்க்க, அவனும் தலையசைத்தான். இருவரும் எழுந்து வைட் போர்டின் அருகில் நின்றிருந்த பரணியை நோக்கி நடந்தனர்.
“வாட்?” என்று முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது வினவினான் பரணி.
“அப்சர்வேஷன் நோட் கொண்டு வரலை சார். இவ அப்சர்வேஷனையும் சேர்த்து வீட்டுல வச்சுட்டு வந்துட்டேன்.” என்று தினேஷ் தன் தவறை ஒப்புக் கொண்டான்.
“டேஸ்காலரா?” என்று பரணி தினேஷை பார்த்து வினவ, தினேஷ் தலையசைத்தான்.
“பேர் என்ன?”
“தினேஷ்”
“உன் பேரு?” என்று இவள் பக்கம் திரும்பியவனிடம், “திவ்யபாரதி” என்று மெல்லமாக முணுமுணுத்தாள். ஏதேனும் சொல்லி ஏசுவானோ என்று உடனே தலையைத் தாழ்த்திக் கொள்ள,
“சரி, சரி போ… நாளைக்கு எழுதிட்டு வந்து சைன் வாங்குங்க.” என்றவன், “மத்தவங்க முன்னாடி என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசு என்ன? எல்லாரும் என்னை மாதிரி அரைவேக்காட்டுத் தனமா இருக்க மாட்டாங்க.” என்று சிறிய புன்முறுவலுடன் சொல்லவும், திவ்யாவிற்கு அப்பாடா என்றிருந்தது.
சின்ன தலையசைப்புடன் அவன் அறிவுரையை ஏற்றுக் கொண்டவள், “சாரி சார்!” என்று மறவாமல் சொன்னாள். அவளைத் தொடர்ந்து தினேஷும் மன்னிப்பு கோரிவிட்டு, அவரவர் இருக்கைக்கு வந்தனர்.
“பரவாயில்ல, நல்லவர் தான். எதுவும் சொல்லல.” என்ற திருப்தி தினேஷின் முகத்தில். ஆனால் திவ்யாவின் மனமோ, ‘முதல் நாளே படிக்கும் மாணவியான தன் நற்பெயர் கெட்டுவிட்டதே!’ என்ற பெரும் கவலையில் தவித்தது. இழந்த பெயரை சற்றே சரி செய்ய எண்ணியவள், தன் மனதை கணினியிடம் செலுத்தினாள்.
‘மத்தவங்க முடிக்கறதுக்கு முன்னாடி, நான் முதல்ல அவுட்புட் காட்டிடணும். படிக்கிற பொண்ணுங்கற என் பேரை கெடுத்துக்கக் கூடாது. சே, மொத நாளே புது சார்கிட்ட கெட்ட பேர் வாங்கிட்டேன்.’ என்று வேகவேகமாக ப்ரோகிராமை அடிக்கத் துவங்கினாள்.
அவள் கைகளும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க, அவள் பின்னால் கடந்து சென்ற பரணியின் மனம் அந்த நொடி அவளைப் பற்றித்தான் எண்ணியது.
கண்டதும் காதல் கொள்கின்ற ரகமெல்லாம் பரணி இல்லை தான். அவனுடன் படித்த பெண்களில் அவனுக்கு நெருங்கிய தோழிகளுண்டு. அதே போன்று சில இன்ஃபேக்ட்சுவேஷன்ஸ் உண்டு. ஆனால், பார்த்ததும் சிலரைப் பிடிக்கும் அல்லவா? காரணங்கள் ஏதும் இன்றி சட்டென ஒரு நெருக்கமும் உரிமை உணர்வும், நீண்ட நாள் பழகியது போன்ற எண்ணமும் தோன்றும் அல்லவா? அதுபோல் தான் திவ்யாவின் மீது ஒரு அபிப்பிராயம் தோன்றியிருந்தது.
‘அவனே இவனேன்னு எல்லா பிரொஃபசரயும் நான் எப்படி கலாய்ச்சிருப்பேன்? அதுக்கு தண்டனை தானா இது? கர்மாடா பரணி! வேலைக்கு வந்த மொத நாளே, ‘அரைவேக்காடு, குரங்கன்னு’ பேர் வாங்கிட்டேன். ஆனா பரவாயில்ல, அவனே இவனேன்னு சொல்லாம கொஞ்சம் டீசண்டா, சேர்பல்லி, சோத்துப்பானை, அரைவேக்காடுன்னு கொஞ்சம் ரசனையா தான் பேர் வச்சிருக்கு இந்த பொண்ணு.’ என்று தோன்றியது.
அதனால் தானோ என்னவோ, திவ்யபாரதியை இன்னமும் பிடித்தது. இத்தனைக்கும் அவள் ஆளை அசரடிக்கும் அழகெல்லாம் இல்லைதான். அவளை விடவும் அழகான பெண்கள் பலர் அங்கே பயின்றனர். ஆயினும் அவள் முகத்தில், அவள் செய்கையில், அவள் குரலில் என ஏதோ ஒன்று பரணியை ஈர்த்திருந்தது. அவனையும் அறியாமல் அவள் அமர்ந்திருந்த திசையை நோக்கி கால்கள் நகர்ந்திருந்தன.
அவள் பின்னால் சில நிமிடம் நின்று அவள் கணினி திரையை ஆராய்வது போல் பார்த்தவன், வேகவேகமாக கீபோர்டில் இயங்கும் அவள் விரல்களைக் கவனித்தான். இடது கையில் மருதாணி சிவப்பு சற்றே மங்கலாய் தெரிந்தது. ஒரு கை விரலில் மட்டும் நகப்பூச்சு. வலது கையில் ஒரு மோதிரம் என வேகமாக உலாவிய அவள் கைகள் அவன் மனதில் பதிந்தது.
‘எதுக்கு இவ்வளோ வேகமா டைப் பண்றா? தப்புத்தப்பா ஏதாவது அடிச்சு வைக்க போறா.’ என்ற யோசனையுடன் அங்கிருந்து நகர்ந்தான்.
சிறிது நேரம் செல்லவும் திவ்யா தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றாள். தயக்கம் இருந்த போதும் அவள் முகத்தில் ஒரு சிறு நிம்மதி படர்ந்திருந்தது. அவள் திசையில் பரணி திரும்ப, “சார், அவுட்புட்.” என்று அவனிடம் கூறினாள்.
“அதுக்குள்ளயா?” என்ற கேள்வியுடன் அவள் அருகில் வந்தவன், கணினி முன் குனிந்து அவள் ப்ரோகிராமை பரிசோதனை செய்து, திருப்தி வந்தபின் தலையசைத்தான். அவள் அருகாமையில் நிற்கவும் அவள் மெல்லிய செண்ட்டின் நறுமணம் வீசியது. நாசி முழுக்க அவ்வாசம் தானாக நிரம்ப, ஆழ உள்ளிழுத்து சுவாசித்தவன் இதழ்கள் அவனையறியாமல் புன்னகை சிந்தின.
‘டேய் பரணி கண்ட்ரோல்டா! நீ இப்போ காலேஜ் ஸ்டூடெண்ட் இல்ல. பொறுப்பான பதவில இருக்க லெக்சரர். உன்னை நம்பி வேலை குடுத்திருக்காங்க. டீச்சர், ஸ்டூடெண்டை இப்படி அப்பட்டமா சைட் அடிக்கறது தப்புடா.’ என்று அறிவு புத்திமதி சொல்லியது. தலையைச் சிலுப்பி தன்னை சமன் செய்து கொண்டான்.
“குட்! நாளைக்கு வந்து நோட்ல சைன் வாங்கிக்கோ.”
“பேப்பர்ல எழுதிட்டேன் சார். நாளைக்கு என் நோட்ல ஸ்டிக் பண்ணிடுறேன்.” என்று தான் ஏற்கனவே எழுதி முடித்திருந்ததை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவள் செய்கையில் ஒரு குழந்தைத்தனம் மிளிர்ந்தது.
‘யார் முதலில் எழுதுவீங்க பார்ப்போமா?’ என்று பள்ளிக் குழந்தைகளிடம் கேட்டால், ‘நான்… நான்…’ என ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு வேகமாக எழுதுமே, அது போன்றதொரு அழகு தென்பட்டது.
மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு கையெழுத்திட்டான். “எழுதியும் முடிச்சுட்டியா? வெரி குட்! நாளைக்கு நோட்ல ஸ்டிக் பண்ணிட்டு வந்து காட்டு. நீயும் தான் தினேஷ்.” என்று தினேஷிடமும் சொல்லிவிட்டு, அவளை விட்டு நகர்ந்து மற்ற மாணவர்களைக் கவனிக்கலானான்.
ஒற்றை வார்த்தை தான் என்றாலும் அவன் வாய்மொழியாக அவளைப் பாராட்டிய பின்புதான், திவ்யாவிற்கு முழுவதுமாக சமாதானம் ஆனது.
‘அப்பாடா! சார் என்னை பத்தி ரொம்ப தப்பா நினைக்கலை. இன்டர்னல்ல ஒழுங்கா எழுதி இதே நல்ல பேரை மெயின்டெயின் பண்ணிக்கலாம்.’ என்ற நிம்மதி தோன்ற, அதன்பிறகே ஆசுவாசமாக மூச்சு விட்டாள்.
அடுத்து வந்த நாட்களில் பரணி மீதான திவ்யாவின் ஆர்வம், தன்னைத் தவறாக எண்ணிவிட்ட பேராசிரியரிடம் நற்பெயர் வாங்கிவிட வேண்டும் என்ற அளவிலேயே இருந்தது.
‘என்னை எப்படி இவரு தப்பா நினைக்கலாம்? நான் கேர்லெஸ் ஸ்டூடண்ட்னு என் மேல தவறான அபிப்பிராயம் வந்திருக்கும். அதனால க்ளாஸ்ல அவர் கேட்குற கேள்விக்கு டான் டான்னு பதில் சொல்லி என்னோட டிக்னிட்டிய காப்பாத்திக்குவேன்.’ என்று முடிவெடுத்திருந்தாள் திவ்யா.
ஆனால் பரணி அதுபோல் அவள் நடந்து கொள்ள அனுமதிக்கவில்லை. வகுப்பில் ஏதாவது கேள்வி கேட்பான். “கமான் ஸ்டூடெண்ட்ஸ்! வாட் இஸ் த ஆன்சர்?” என்று பொதுவாகத் தான் வினவுவான். அவன் கேள்விக்கான விடை திவ்யாவிற்குத் தெரிந்திருக்கும்.
பதில் சொல்ல விருப்பம் தெரிவித்து, திவ்யா கையை உயர்த்துவாள். ஆனால் பரணி அவள் அமர்ந்திருக்கும் திசையில் திரும்பக் கூட மாட்டான். கையைக் கையை உயர்த்தி திவ்யா தன் இருக்கையில் இருந்து எழ எத்தனிக்கும் போதெல்லாம், கேள்வியை வேறு ஆளிடம் திருப்பியிருப்பான் அல்லது அதற்கான விடையை அவனே சொல்லியிருப்பான்.
அவன் செய்கை கண்டு திவ்யாவின் மனம் துவண்டு போகும். “வேணும்னே அவாய்ட் பண்ணறார்டி. எனக்கு இதுக்கு ஆன்சர் தெரியும்டி.” என்று அவள் அருகில் அமர்ந்திருக்கும் தோழி நர்மதாவிடம் வருத்தப்படுவாள்.
அன்றைய தினம் முழுக்கவே திவ்யாவின் மனதில் இந்த ஒரு விஷயம் தான் ஓடிக்கொண்டே இருக்கும். வகுப்பிலும் விடுதி அறையிலும் என, தன்னிடம் பேசும் அனைவரிடமும் இதைப் பற்றியே புலம்புவாள்.
“ஏன்டி அந்த மனுஷன் என்னை அப்படி இன்சல்ட் பண்ணாரு? அவர் யாருன்னு தெரியாம ஃபர்ஸ்ட் அப்படி நான் பேசினது தப்பு தான். அந்த மரமண்டை தினேஷுக்கு ஹெல்ப் பண்ண போயி நான் அவஸ்தை படறேன்.” என்று கேட்பவரிடம் கொட்டித் தீர்ப்பாள்.
அவளது புலம்பலை சகிக்க மாட்டாமல், “நீ அடுத்த தடவை அவரோட பர்மிஷன்காக வெயிட் பண்ணாத. அவர் கேள்வி கேட்ட உடனே நீ டக்குனு ஆன்சர் சொல்லிடு. கையெல்லாம் தூக்கிட்டு இருக்காத.” என்று நர்மதா யோசனை சொன்னாள்.