Skip to content
Post Views: 5,468
✨நிறம் பாராத காதல்✨
✨அத்தியாயம். 7
அர்த்தஜாமத்தில் மயங்கி விழுந்த வைதேகியை சாய்வு இருக்கையில் படுக்க வைத்த மாறன் அவள் முகத்தில் தண்ணீரை தெளிக்க, மயக்கத்திலிருந்து கண் விழித்தவள் பயத்தில் உடல் நடுங்கி தன்னை சுற்றி நின்று இருந்த அனைவரையும் பார்த்துச் சற்று முன்னே அவள் முன்னால் வந்த கருப்பு உருவத்தைத் தேடினாள்.
“அம்மாடி வைதேகி என்னாச்சு? நீ ஏன் இந்த நேரத்துல உன் ரூம்ல இருந்து கீழே இறங்கி வந்த? வந்தவ ஏன் சத்தம் போட்டு மயங்கி விழுந்த?” என்று வேதநாயகி புரியாமல் கேட்டுக்கொண்டே வைதேகியின் பக்கம் வந்து அமர்ந்துக் கொண்டார்.
Advertisement
“அங்க… அங்க ஒரு உருவம்.. அங்க ஒரு கருப்பு உருவம்..” என்று வைதேகி குரல் உடைந்து கைகள் கால்கள் உதறல் எடுத்த நிலையில் அவள் கண்ட உருவத்தை நினைத்துப் பயந்து நடுங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.
“ஐயோ வைதேகி என்னமா ஏன் அழற? மாப்புள்ள என்னாச்சு வைதேகிக்கு?” என்று வேதநாயகி புரியாமல் வைதேகியை கட்டியணைத்துக் கொள்ள, “இந்தாங்க சம்மந்தி திருநீர் வச்சி விடுங்க, எதாவது கெட்ட கனவு கண்டு பயந்து இருக்கானு நினைக்கிறேன்.” என்ற கீதா விபூதியை வேதநாயகியிடம் கொடுத்தார்.
“கெட்ட கனவு வந்தா அதுக்கு ஏன் மாடியில இருந்து கீழே இறங்கி வரணும்?”என்று மாயா கேக்க, “க.. கனவெல்லாம் இல்லை, நான் இங்க ஒரு கருப்பு உருவத்தைப் பார்த்தேன், வெளிய.. வெளியே ஒரு காருல ஒருத்தன் ஒரு பொண்ணை தூக்கி வீசினான்.” என்று வைதேகி திக்கி திணறி அவள் கண்ட காட்சியினை சொல்லி முடித்தவள் முகமெல்லாம் வியர்வை துளி பூத்து இருந்தது.
Advertisement
“என்ன சொல்ற நீ!? காரு, பொண்ணு, உருவம், என்னமா எதாவது பேய் கதை படிச்சியா?” என்று கீதா கேட்டதும், “அம்மா சும்மா இருங்க, வைதேகி என்னாச்சு உனக்கு? இங்க நம்ம தான் இருக்கோம், வாசல்ல நம்மளோட கார் நிக்குது தான், ஆனா நீ சொன்ன மாதிரி நம்ம காருல எந்தப் பொண்ணுமே இல்லையே”
என்ற மாறன் வாசல்வரை சென்றவன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரைப் பார்த்தப்படி வைதேகிக்கு சமாதானம் கூறினான்.
Advertisement
“இல்ல இல்ல நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன். நான் தூங்கிகிட்டு இருக்கும்போது என் காதுக்கு ஒரு பொண்ணு அழற சத்தம் கேட்டுச்சு, நான் என்ன சத்தம்னு ஜன்னல் வழியா பார்த்தப்போது ஒரு பொண்ணை கருப்பான ஒரு உருவம் தோளில் தூக்கி வந்து காருக்குள்ள வீசினதை நான் பார்த்தேன்.” என்ற வைதேகியின் வார்த்தையைக் கேட்டு அனைவரும் குழம்பி போனார்கள்.
“அம்மா.. வைதேகிக்கு இது புது இடம், அதனால தான் இப்படி எல்லாம் பயந்து போயிருக்கா, அத்த..பேசாம நீங்க இன்னைக்கு நைட் வைதேகியை உங்க ரூம்ல படுக்க வச்சிக்கோங்க” என்று மாயா சொன்னதும், “வா வைதேகி, வந்து என்கூட படுத்துக்கோ” என்ற கீதா பயத்தில் இருந்த பெண்ணைத் தன்னுடன் அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.
“என்ன மாப்புள்ள, வைதேகி ரொம்ப பயந்த சுபாவமா?” என்று வேதநாயகி கேக்க, “மாயா சொன்ன மாதிரி புது இடம் தானே அத்த. போகப் போகப் பழகிடும். நீங்கப் போய்ப் படுங்க.” என்று மாறன் சொல்ல, வேதநாயகியும் அவர் அறைக்குச் சென்றார்.
Advertisement
“மாமா..வைதேகிக்கு என்னாச்சு?” என்று மாயா கேட்டதும், “நீ தானே சொன்ன, புது இடமும்னு, அதான் பயந்து இருப்பா. சரி பாப்பா தனியா தூங்குறா நீ போ நான் இதோ வரேன்.” என்ற மாறன் பெரிய பங்களாவிலிருந்து வாசலுக்கு வந்தவனின் எதிரே நின்று இருந்த காரைச் சந்தேகமாகப் பார்த்தான்.
மாறன் காரை நிறுத்திய அதே இடத்தில் அவன் கார் நின்று இருக்க, ரணதீரனின் கருப்பு நிற ஜீப் எங்கே என்று மாறன் தேட, மாமரத்து பக்கத்தில் மறைவாக அந்த ஜீப் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
“கார், ஜீப், ரெண்டுமே இங்க தான் இருக்கு, அப்போ வைதேகி சொன்னது எந்தக் காரைப் பற்றி?” என்று மாறன் யோசித்தவன், எதிரே இருக்கும் ரணதீரனின் சின்னப் பங்களாவை முறைத்து பார்த்தவன் பெருமுச்சுடன் மீண்டும் தன் அறைக்குள் சென்று மனைவி பிள்ளையோடு படுத்துக்கொண்டான்.
கீதாவின் அறையில் பயத்துடன் படுத்து இருந்த வைதேகிக்கு என்ன பிரச்சனை என்று கேட்கும் ஆவல் கீதாவின் மனதில் எழுந்தாலும் வீணாகச் சென்று வழக்கைத் தன் மீது வாங்கிக் கொள்ள வேண்டாம் என்று நினைத்துக் கீதா வைதேகி அருகே கட்டிலில் நல்ல பிள்ளையைப் போலப் படுத்து இருந்தார்.
சற்றுமுன் வைதேகி கண் முன் வந்த உருவத்தைப் பற்றியும்,எதிர் பங்களாவிலிருந்து ஒருவன் ஒரு பெண்ணைத் தூக்கி காரில் வீசியதை பற்றியும் நினைத்துப் பயந்த வைதேகி தனக்குத் தானே சமாதானம் செய்த படி கண் மூடியவள் நீண்ட நேரம் உறங்கிக் கொண்டு இருந்தாள்.
மறுநாள் காலைப் பொழுது அழகாக விடிந்தது. கீதா குளித்து முடித்துக் கண்ணாடி முன்னே நின்று,
“உலக அழகி நான் தான்.. உலக அழகி நான் தான்… பூம் பூம் மாட்டுக்காரா..” என்ற பாடலைப் பாடிக்கொண்டே சிகை அலங்காரம் செய்து கொண்டு இருந்தவரின் அறைக்கதவை வேகமாக யாரோ தட்டும் சத்தம் கேட்டு,
“இதோ வரேன்” என்று கதவைத் திறக்கக் கீதாவின் எதிரே கையில் தேநீர் கோப்பையுடன் நின்று இருந்தது என்னவோ ரணதீரன் தான்.
ரணதீரனை பார்த்ததும் தன் கூந்தலை அள்ளி முடிந்த கீதாவிற்கு வாயிலிருந்து வார்த்தை வெளிவராமல் இருக்க, வாசல் கதவை மறைத்தபடி நின்று இருந்தவரை,
“ஏன் உங்க ரூம் குள்ள நான் வரக்கூடாதா? ” என்று கோவமாகக் கேட்டான் ரணதீரன்
“ஐயோ… ரூம்குள்ள மட்டுமில்ல, நீங்க இந்தப் பங்களாவில் இருக்கிற மூலை முடுக்கெல்லாம் வரலாம். இது உங்க பங்களா. வாங்க மாப்பிள்ளையுள்ள வாங்க” என்ற கீதா விட்டா போதும் என்று தன் அறையிலிருந்து வேகமாக வெளியேறி இருந்தார்.
நீண்ட நேரம் பயத்தில் உறங்காமல் இருந்த வைதேகி விடிந்தது கூடத் தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை பார்த்து ரணதீரனுக்கு ரத்தம் கொதித்தது.
“என் தூக்கத்தை கெடுத்துட்டு இப்படி நிம்மதியா தூங்குகிறாளே!! எந்த ஜென்மத்துல இவளுக்கு நான் கடன் பட்டு இருக்கேன்னு தெரியல இப்போ நான் இவளுக்குச் சேவை செய்யணும்னு என் அம்மா எனக்கே தண்டனை கொடுத்திருக்காங்க” என்று புலம்பிய ரணதீரனுக்கு வைதேகியின் கள்ளமில்லா முகத்தைப் பார்த்து இம்மி அளவும் பாவம் எழ வில்லை.
“மேடம்… மேடம் எழுந்திடுங்க” என்று வைதேகியை அமைதியான குரலில் எழுப்பினான் ரணதீரன்.
“இன்னும் கொஞ்ச நேரம் டார்லிங்” என்ற வைதேகி தூக்கத்தில் திரும்பிப் படுத்தவளின் வார்த்தையைக் கேட்டு ரணதீரன் முகம் இறுகினான்.
“ஏய்.. எழுந்துடு மேல” என்று ரணதீரன் சத்தமாகக் கத்தியதும் கட்டிலிலிருந்து வாரிசுருட்டி எழுந்து அமர்ந்த வைதேகி முன்னே கையில் தேநீர் கோப்பையுடன் நின்று இருந்த ரணதீரனின் கண்கள் இரண்டும் ஆத்திரத்தில் சிவந்து இருந்தது.
“துரையம்மாக்கு இன்னும் விடியலையா?”என்றவனின் கேள்வியில் வைதேகி பதறிப்போய் எழுந்து நின்றவள் முன்னே தேநீர் கோப்பையை நீட்டியவன்,”சீக்கிரமா குடிச்சிட்டு கிளாசை கொடு நான் உனக்குக் காலைல டிபன் செஞ்சு வைக்கணும்.” என்ற ரணதீரன் அவனே தேநீரை தயார் செய்து வைதேகிக்கு எடுத்து வந்திருந்தான்.
ரணதீரன் நீட்டிய கோப்பையைக் கையில் வாங்காமல் தவித்து நின்றிருந்த பெண் அவளைப் பார்த்து, ” ஏன் துரையம்மாவை என் மடியில போட்டுத் தாலாட்டிச் சீராட்டி இந்த டீயை உங்க வாயில ஊத்தனா தான் குடிப்பிங்களோ?” என்று கோபமாக அவன் கேட்டதும், “இன்னும் பல்.. பல் துலக்கல” என்று தயக்கத்துடன் சொன்னாள் வைதேகி.
“ஆடு மாடு எல்லாம் பல் துலக்கிட்டா காலையில சாப்பிடுது?அப்படி நினைச்சு டீய குடிச்சுட்டு கிளாசை கொடு” என்று கோபமாக அவன் சொன்னதும்
அவன் கையில் இருந்த கோப்பையை வாங்கியவள் மடக்கு மடக்கென்று டீயை குடித்து முடித்து அவன் முன் கிளாசை நீட்டினாள்.
“மேடமுக்கு காலையில என்ன டிபன் தேவை? இட்லி,தோசை, பொங்கல் இப்படி எது வேணும்னாலும் சொல்லுங்க. எங்க அம்மா உங்களுக்குச் சேவை செய்வதற்காகத் தான் என்னைப் பெத்து வச்சிருக்காங்க.” என்று குத்தலாக ரணதீரன் சொன்னதும் வைதேகி தன் கையைப் பிசைந்து கொண்டு அவன் முன் பாவமாக நின்றிருந்தாள்.
“சொல்லுங்க மேடம் என்ன சாப்பிட போறீங்க? இட்லியா? தோசையா? பொங்கலா? உங்களுக்கு என்ன பிடிக்கும்?” என்று வேண்டா வெறுப்பாகக் கேட்டான்.
“எனக்கு..எனக்கு இடியாப்பம்னா ரொம்ப பிடிக்கும்.” என்று இவளும் ஆசையாகச் சொன்னவள் சட்டென்று தன் தலையில் தானே தட்டிக் கொண்டாள்.
“ஓ இடியாப்பம்…ம்… மணமேடையில் பல பேர் எதிர்ல யாரோ ஒரு மாப்பிள்ளையை வேணான்னு சொல்லி, அவன் வாழ்க்கையில இடிய இறக்கிட்டு ஓடி வந்த உங்களுக்கு நான் இடியாப்பம் செஞ்சு கொடுக்கணுமா!? ம்… கொடுக்குறேன், கொடுக்குறேன். எல்லாம் என் தலை எழுத்து” என்று முனங்கிக் கொண்டே கீதாவின் அறையிலிருந்து வெளியே சென்ற ரணதீரனின் முதுகை வெறித்துப் பார்த்து நின்றிருந்தாள் வைதேகி.
தன் அம்மா கொடுத்த தண்டனையைச் செயல்முறைப்படுத்தும் ரணதீரனுக்கு இருக்கும் கஷ்டத்தை விடவே இந்தத் தண்டனையால் வைதேகிக்கு தான் அதிகப்படியான மனச்சஞ்சலம் நேர்ந்தது.
காலை நேரம் குளித்து முடித்த வைதேகி மாயா கொடுத்த புத்தாடையை அணிந்துக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தவளின் அழகை ரசித்தபடி அமர்ந்திருந்தார் வேதநாயகி.
வீட்டினுள் இருக்கும் சாமி மாடத்தை வணங்கிய வைதேகி சிரித்த முகத்துடன் வேதநாயகியின் அருகே வர, “குட் மார்னிங் அத்தை” என்ற சிறுமி மயிழினி வைதேகியை கட்டி அணைத்துக் கொண்டாள்.
“குட் மார்னிங் பாப்பா.” என்று வைதேகி சொல்ல, “என்னமா நல்லா தூங்குனியா?” என்று கேட்ட வேதநாயகி தன் கரங்களால் தொடுத்த மல்லிசரத்தை வைதேகியின் கூந்தலில் சூட்டி அழகு பார்த்தார்.
“என்ன வைதேகி நைட்டெல்லாம் கத்தி மயக்கம் போட்டு எங்களைத் தூங்க விடாம, நீ நல்லா தூங்கி எழுந்து இருக்க போல!?” என்று சிரித்துக்கொண்டே மாயா கேட்க, “அது… ஏதோ பயத்துல கத்திட்டேன் சாரி அக்கா.” என்றாள் வைதேகி தயக்கத்துடன்.
“எதுக்குமா சாரி எல்லாம் கேக்குற, அதுவும் இல்லாம உனக்கு நான் அத்தை, மாறன் மாப்புள்ள அண்ணன், அப்போ மாயா உனக்கு அண்ணி தானே!? இனிமே அழகா உறவு முறையைச் சொல்லிக் கூப்பிடு. அப்பதான் நமக்குள்ள ஒரு நெருக்கம் ஏற்படும்.” என்று வேதநாயகி சொல்லும் தருணம் காலை உணவை மேசையில் எடுத்து வந்து வைத்த ரணதீரன் வைதேகியை கடுப்பாக முறைத்துக் கொண்டு இருந்தான்.
“என்ன மச்சான் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” என்று கேட்டுக்கொண்டே மாறன் தன் அறையிலிருந்து வெளியே வர, “மாமா.. இன்னைக்கு நம்ம வீட்டுல இடியாப்பம், அதுவும் நம்ம வைதேகிக்கு பிடிச்ச சாப்பாடு” என்றாள் மாயா.
“என்ன? இடியாப்பமா!! எனக்குக் கூட இடியாப்பம் ரொம்ப பிடிக்கும்.” என்ற மாறன் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தவன் அருகே மாயாவும் அமர்ந்துக் கொள்ள, இவர்கள் எதிரே வைதேகி, கீதா,வேதநாயகி என்று அனைவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.
காலை உணவை அவரவர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் தருணம் வைதேகி மட்டும் சாப்பிடாமல் தட்டைத் தடவிக்கொண்டு இருந்தாள்.
“என்ன மேடம் இடியாப்பம் சாப்பிடலையா? ஏன் உங்களுக்கு இதையும் நான் தான் ஊட்டி விடணுமா?” என்று கிண்டலாக ரணதீரன் கேட்டதும் வேகமாக வைதேகி சாப்பிட ஆரம்பித்தவளை பார்த்து மாயாவுக்கு சிரிப்பு வந்தது.
“ராணா.. நீ சாப்பிட்டதும் வைதேகியையும் சம்மந்தியையும் உன் கம்பெனிக்கு அழைச்சிட்டு போ.” என்று வேதநாயகி சொன்னதும், “கண்டிப்பா அழைச்சிட்டு போறேன் அம்மா” என்ற ரணதீரனின் இந்தத் திடீர் அடக்கத்தைக் கண்டு மாறனுக்கு சந்தேகம் எழுந்தது.
“வைதேகி நீ ராணாகூட போய் நம்ம டீ எஸ்டேட், கம்பெனி அப்புறம் நம்மளோட கார்மெண்ட்ஸ்ன்னு எல்லா இடத்தையும் சுத்தி பார்த்துட்டு வாமா” என்று வேதநாயகி சொன்னதும் “ம்..” என்று தயக்கத்துடன் வைதேகி சம்மதம் சொல்ல,
அனைவரும் காலை உணவை உண்டு முடித்தார்கள்.
“அண்ணா.. இவங்க என்ன என்னை உங்க மச்சான் கூட வெளியே போகச் சொல்லுறாங்க, இந்த ஊருல என்னைத் தெரிந்தவர்கள் யாராவது என்னைப் பார்த்துட்டா பிரச்சனை வருமே” என்று வைதேகி பொறுமையாக மாறனை கேட்க, அவளின் இதழ் அசைவைத் தூரத்தில் நின்றுக்கொண்டு உன்னிப்பாகக் கவனித்தான் ரணதீரன்.
“அதெல்லாம் யாரும் பார்க்கமாட்டாங்க, ஏன்னா நம்ம இடத்துல வெளி ஆளுங்க யாரும் வேலை பார்க்கல, எல்லோரும் நம்ம ஊர்காரங்க தான். அதுவும் இல்லாம நீ போறது ரணதீரன் கூட, என் மச்சான் முன்னாடி யாரும் அவனை ஏறெடுத்துக் கூடப் பார்க்கமாட்டாங்க” என்ற மாறனின் வார்த்தையை நம்பி வைதேகியும் இன்று ரணதீரனுடன் வெளியே செல்ல ஆய்த்தமாகி இருந்தாள்.
கீதாவும் தலையெழுத்தே என்று இவர்களுடன் கருப்பு நிற ஜீப்பின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தவரை தொடர்ந்து வைதேகியும் ஏறப் போக, “வைதேகி.. நீ முன் இருக்கையில் உக்காகரு” என்ற வேதநாயகி இவர்களை வழி அனுப்ப வைக்கச் சிறுமி மயிழினியுடன் வாசல்வரை வந்தார்.
ரணதீரன் தங்கி இருக்கும் சின்னப் பங்களாவின் வாசலில் கட்டியிருந்த மூன்று கருப்பு நிற வேட்டை நாய்களுக்கும் அங்கே பணிபுரியும் டிரைவர் வேலு மாமிசத் துண்டுகளைத் தூக்கி வீசியவனை வைதேகி சந்தேகமாகப் பார்த்துக்கொண்டே ஜீப்பில் ஏறி அமர்ந்து இருந்தாள்.
“மேடம்.. சீட் பெல்ட் நீங்கப் போடுவிங்களா? இல்ல அதையும் நான் தான் போடணுமா?” என்ற ரணதீரனின் கேள்வியில் வைதேகி தன் சீட் பெல்டை போட்டுக்கொண்டவள் மீண்டும் டிரைவர் வேலுகை உற்றுபார்த்தாள்.
“நேத்து நைட் இவரு தானே ஒரு பொண்ணை காருக்குள்ள தூக்கி வீசுனாரு?” என மனதில் வைதேகி எண்ணிக்கொண்டு இருந்த தருணம் ரணதீரன் தன் ஜீப்பை அவன் கம்பெனியை நோக்கி விரட்டினான்.
வைதேகியும் ரணதீரனும் ஜீப்பில் ஜோடியாகச் சென்ற பாதையை மனம் மகிழ்ந்து பார்த்து இருந்த வேதநாயகியின் முகத்தில் பேரானந்தம் பெருகியது.
“அத்த.. நானும் கிளம்புறேன். மாயா அத்தையை பார்த்துக்கோ.” என்ற மாறனும் சிறுமி மயிழினியின் நெற்றியில் இதழ் பதித்து வெளியே சென்றவன் நேராகப் போனது என்னவோ ரணதீரனின் சின்னப் பங்களாவை நோக்கித் தான்.
வாசலில் வேட்டை நாய்களுடன் நின்றிருந்த டிரைவர் வேலுவின் எதிரே போய் நின்ற மாறன், “நேத்து நைட் இங்க என்ன நடந்துச்சு?” என்று கோவமாகக் கேட்டான்.
“ஐயா.. எத பத்தி கேக்குறீங்க?” என்று பவ்யமாகக் கேக்கும் டிரைவர் வேலு கடந்த நான்கு வருடங்களாகத் தான் நெல்சன் எஸ்டேட்டில் டிரைவராக வேலை செய்கின்றான்.
“நேத்து நைட்டு நீ என்ன பண்ணியோ அதைப் பற்றித் தான் கேட்கிறேன்.” என்று மாறன் சொல்ல,
‘ஐயா எனக்கு எதுவும் புரியலையே, எதுவா இருந்தாலும் தெளிவா கேளுங்க நான் பதில் சொல்கிறேன்.” என்ற வேலுவின் பார்வை மாறன் காலுக்குக் கீழே உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள் இருப்பதை கவனித்தது.
“இன்னும் எனக்கு எதைப் பற்றியும் தெளிவா தெரியாதனால தான் உன்னை நான் சும்மா விட்டு வச்சிருக்கேன், நான் சந்தேகப்பட்டது மட்டும் சரியா இருந்துச்சுன்னா கண்டிப்பா நீ பெரிய பிரச்சனையைச் சந்திக்க வாய்ப்பிருக்கு வேலு ஜாக்கிரதையா இருந்துக்கோ.” என்று இயல்புக்கு மாறாக மாறன் கோபமாகப் பேசியவன் அங்கிருந்து தன் வெள்ளை காரில் ஏறி வேகமாகப் பக்கத்து ஊருக்குப் பறந்து சென்றவனை பார்த்து வேலு ஏளனமாகச் சிரித்தவன் கீழே உடைந்து கிடந்த கண்ணாடி வளையல் துண்டுகளை எடுத்துக் குப்பை கூடையில் சேர்த்தான்.
வைதேகி மற்றும் கீதாவை அழைத்துக் கொண்டு தன் கம்பெனியை நோக்கி ரணதீரன் அவன் கருப்பு நிற ஜீப்பை விரட்டியவன் வழியெல்லாம் அமைதியாகவே இருந்தான்.
இவர்கள் செல்லும் பாதை எங்கும் வண்ண பூக்கள் மலர்ந்து இருக்க, அந்த இடம் பார்ப்பதற்கு காட்டுப் பகுதியைப் போலத் தோன்றினாலும் இயற்கை எழிலோடு மனதிற்கும் கண்களுக்கும் குளிர்ச்சி தரும் வகையில் தான் அழகாய் அமைந்து இருந்தது.
இயற்கையை ரசித்துக்கொண்டே வந்த வைதேகியின் முகத்தில் தெரிந்த நிம்மதியை பார்க்க மனமில்லாத ரணதீரன் வண்டியை ரோட்டை பார்த்து ஓட்டாதவன் நேராகப் பள்ளத்தில் இறக்கிய வேகத்தில் சட்டென்று தன் ஜீப்பின் முன் டயர் வெடித்தும் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தியவன், “வண்டி பிரேக் டவுன் ஆகிடுது.” என்றான் கடுப்புடனே.
“என்ன நீங்கக் காதலிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பிரேக் அப், பிரேக் டவுன்னு அபசகுனமா பேசுறீங்க.” என்று கீதா எதர்ச்சயாகச் சொன்னவரைக் காரின் கண்ணாடி வழியே ரணதீரன் முறைத்துப் பார்த்தான்.
அவன் முறைப்பில் தான் தவறாகப் பேசி விட்டோம் என்று தெரிந்து கொண்டு கீதா தன் புடவை முந்தானையால் வாயை அடைத்துக் கொண்டு நல்ல பிள்ளையைப் போல் ஜீப்பின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
“இப்போதைக்கு வண்டி ரெடி ஆகாது. அத்த நீங்க வைதேகி மேடைமை அழைச்சுக்கிட்டு நம்ம டீ எஸ்டேட்டை சுற்றிப் பாருங்க. நான் வண்டியை அதற்குள் சரி செய்து எடுத்துட்டு வரேன்” என்ற ரணதீரனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு கீதாவும் வைதேகியை
நெல்சன் டீ எஸ்டேட்டை சுத்தி பார்ப்பதற்காக அழைத்துச் சென்றார்.
கொஞ்ச தூரம் நடந்து சென்ற கீதாவிற்கு மூச்சு வாங்குவதைப் போல உணர்ந்தவர்
மேற்கொண்டு நடக்க முடியாமல்
பாதி வழியிலேயே ஓரமாக இருந்த பெரிய கல்லின் மீது அமர்ந்துக் கொண்டார் கீதா.
“என்னாச்சு அம்மா தண்ணி வேணுமா?” என்று வைதேகி கேட்டதும்,
“ஆமாம்” என்ற ரீதியில் கீதா தலை அசைக்க, அருகில் ஏதேனும் வீடோ கடையோ இருக்கின்றதா எனத் தேடி வைதேகி அங்கிருந்து நடந்து சென்றவளை,
“மிஸ்.சித்ரா…” என்ற குரல் தடுத்து நிறுத்திய வேகத்தில் வைதேகி பதற்றதுடன் திரும்பிப் பார்த்தவளின் எதிரே புல்லட்டில் வந்து நின்றான் இன்ஸ்பெக்டர் விக்ரமன்.
error: Content is protected !!