Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் செல்ல சீமாட்டி

என் செல்ல சீமாட்டி 3

அத்தியாயம் 3

மறுநாள் காலை அருணாவை பரிசோதித்த மருத்துவர் “இன்னிக்கு மதியமே  டிச்சார்ஜ் ஆகிக்கோங்க. நல்ல சத்தானதா சாப்பிடுங்க. ஒரு மாசத்துக்கு ரெஸ்ட் எடுத்துக்கோங்க, அதிகமான வெயிட் தூக்க கூடாது” என்று மேலும் சில அறிவுரைகளை கூறிவிட்டு சென்றார். 



Advertisement

‘நாங்க ஹாஸ்பிடல் வருகிறோம்’ என்று கூறிய பெரியவர்களை, “எல்லோரும் அலையை வேண்டாம். நானே கூட்டிட்டு வந்துடறேன்” என்று விட்டான் குரு.

“எனக்கு அவங்க யாரையும் பார்க்க வேண்டாம்” என்றாள் அருணா.

Advertisement

Advertisement

“நம்ம இனி சேர்ந்து எல்லாரையும் பேஸ் பண்ணுவோம் அருணா. நீ என்ன முடிவு எடுத்தாலும், இனி நான் உனக்கு துணையா எப்பவுமே இருப்பேன். நடந்ததை  நம்மளால மாத்த முடியாது. ஆனால், இனி நடப்பதை நேர் செய்வோம்“ என்றான் உறுதியான குரலில் கந்தகுரு.

ஹாஸ்பிடலில் எல்லா சம்பிரதாயங்களும் முடித்துவிட்டு, கனத்த மனதுடன் மனைவியை அழைத்துகொண்டு வீடு திரும்பினான் குரு. இருவருக்கும் நடந்த நினைவுகளின் தாக்கம் அதிகம் இருந்தது. ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு மெல்ல வீட்டிற்கு வந்தனர்.

Advertisement

“அருணா…”

“வாடம்மா..”

“ராஜாத்தி..”

“தங்கம்..”

என்று கலங்கிய கண்களுடன் வரவேற்றனர் பெற்றோர்கள்.

மெல்ல அவளை நடத்தி கூட்டிவந்து நீளிருக்கையில் அமர வைத்தான்.

மஞ்சுளா விரைந்து சென்று, சாத்துக்குடி ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்.

அருணா வேண்டாம் என்று தலையசைத்து மறுத்துவிட்டாள்.

“பால், ஹார்லிக்ஸ் ஏதாவது தரட்டுமா ராஜாத்தி” என்றார் அஞ்சனா.

அதற்கும் மறுப்பாக தலையசைப்பு மட்டுமே.

கனத்த அமைதி நிலவியது.

“நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று குரு உள்ளே சென்றான்.

“உங்க ஆபிஸில் லீவு சொல்லிடீங்களா? எத்தனை நாள் லீவு கொடுப்பாங்க?” என்று ஆரம்பித்தார் மஞ்சுளா.

“மிஸ்கேரேஜ்க்கு இப்ப எல்லாம் இரண்டு மாசம் கொடுக்கிறாங்க மஞ்சு” என்றார் அஞ்சனா.

பிள்ளையை பறிகொடுத்த மனம் பச்சை ரணமாய் இருக்கையில், அருணாவால் இந்த பேச்சுக்களை சகித்து கொள்ள முடியவில்லை.

அவளது முகம் காட்டிய உணர்வுகளை பார்த்த ஆனந்தன், ”கொஞ்சம் நேரம் பொறுங்க, இப்ப தானே வந்திருக்கா, மெல்ல பேசுவோம்” என்றார்.

“இப்படியே உட்கார்ந்து இருக்க முடியுமா? அப்படி உட்கார்ந்தா போன பிள்ளை வந்துடுமா?” என்றார் மஞ்சுளா விடாது.

“அதானே, அடுத்து என்னன்னு பார்க்க வேணாமா?” ஒத்து ஊதினார் அஞ்சனா.

குளிக்க சென்ற குரு, குளிக்காமல் இவர்கள் பேச்சு சத்தம் கேட்டு, துண்டோடு  வெளியே வந்துவிட்டான்.

“என்னடா குளிக்கலயா?” என்றார் அஞ்சனா மகனிடம்.

“நிம்மதியா குளிக்க கூட முடியல. ஆமா, என்ன கேக்கறீங்க அருணாவை?”

என்றான் பதிலுக்கு எரிச்சலாக.

“உங்க அப்பாவும் மாமாவும் நீங்க வர வரைக்கும், எங்க இரண்டு பேரையும் பேசவே கூடாதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க. இப்ப நீ குளிக்காம உன் பொண்டாட்டிய எங்க கிட்ட இருந்து காப்பாத்த ஓடி வர. என்னடா இது?” என்று ஸ்ருதி ஏற்றினார் அஞ்சனா.

“ஏன்? எங்களுக்கு அருணா மேல அக்கறை இல்லையா? உரிமை தான் இல்லையா?” என்றார் மஞ்சு.

வழக்கம் போல இருவரும் மாறி மாறி கச்சேரியை தொடங்கினார்கள்.

“என்ன எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு வில்லி பட்டம் கட்ட பார்க்குறீங்களா?”

“அதானே! நாங்க என்ன வில்லீங்களா?”

“நீங்க இரண்டு பேரும் இப்ப ஒரே கட்சியா?” என்றான் குரு ஆயாசமாக.

“என்னடா கட்சி அது இதுன்னு மரியாதை இல்லாம பேசுற” என கண்டித்தார் அன்னை. 

“ஆமா, உங்க இரண்டு பேருக்கும் எப்பவும் நல்லவங்கன்னு பேரு வேணும். மனசுல ஆயிரம் வச்சுக்கிட்டு எல்லார் முன்னாடியும் அஞ்சு… மஞ்சு…ன்னு கொஞ்சி குலாவ வேண்டியது. வருச கணக்கா எப்படி உங்களால நடிக்க முடியுது? அரசியல் வாதி எல்லாம் உங்க கால் தூசி வர மாட்டான்.

இது தெரியாம உங்க வலையில விழுந்து நானும் அருணாவும் மூணு வருஷமா, நல்லா வச்சு செஞ்சீங்க இரண்டு பேரும். உங்க ஈகோவுக்கு எங்க வாழ்க்கை தீனியா போச்சு இல்ல? நான் பெருசா நீ பெருசான்னு நேர்ல சண்டை போடாம. எங்க மூலமா தீர்த்துக்கிட்டிங்க இல்ல, உங்க உள்ளத்து பகை எல்லாத்தயும்?” என்றான் தன்  பல நாள் மனக்குமுறலை.

“டேய், என்னடா இப்படி எல்லாம் பேசுற?” என்றார் அஞ்சனா பாவமாக.

“உங்க மேல இருக்க அக்கரையில தானே எல்லாம் செஞ்சோம். என்ன குரு இப்படி சொல்லிட்ட?” என்றார் மஞ்சு வருத்தத்துடன்.

“அன்னைக்கு நீங்க இரண்டு பேரும் பண்ண டென்ஷன்ல தான் இது எல்லாமே” என்றான் சற்றும் இரங்காமலே.

“அவங்க வேணும்ன்னு  செய்யல குரு, நடந்தது ஒரு விபத்துப்பா. இப்படி பேசக்கூடாது “ என்றார் வடிவேலன்.

“ஆமாம் குரு, வாய் துடுக்கா பேசுவாங்க தவிற, அவங்க கெட்டவங்க இல்ல குரு. இந்த பழிச்சொல்லை அவங்க மனசு தாங்காது. கோபத்துல வார்ததையை விடாதாப்பா” என்றார் ஆனந்தன்.

“நீங்க இரண்டு பேரும் பேசுவீங்களா? ஓ..உங்க பொண்ண்டாட்டிகளை சொன்னதும் வாய் வந்துடுச்சு போல. எங்களை அவங்க படுத்தும் போது கண்டும் காணாமலும் தானே இருந்தீங்க? ஏன், எங்க மனசு வலிக்காதா? இல்ல எங்க இரண்டு பேருக்கும் மனசுன்னு ஒன்னு இல்லவே இல்லயா?” என்றாள் மாமனையும் தகப்பனையும் பார்த்து அருணா.

“குழந்தைக்கு இப்படி ஆயிடுச்சுன்னு நாங்க எவ்வளவு வருத்தப்படறோம் தெரியுமா?” என்று கண்ணை கசக்கினார் மஞ்சுளா. உடனே அஞ்சனாவும் இணைந்து மூக்கை உறிஞ்சினார்.

“கீழே தண்ணி சிந்தி இருக்குன்னு எங்களுக்கு ஆன்லைன்ல எப்படி தெரியும்? கவனமில்லாமல் நீங்க இருந்துட்டு எங்களை சொல்ல எப்படி மனசு வருது?” அழுகையினூடே கூறினார் மஞ்சுளா.

“மூணு வருஷமா எங்க வீட்ல என்ன நடக்கனும், எப்படி நடக்கனும்ன்னு எல்லாம் உங்க கைபேசியில் நடத்த தெரிஞ்சுதா? நாங்க பண்ற தப்பு எல்லாம் அதுல நல்லா தெரிஞ்சுதா? எங்களை அரட்ட தெரிஞ்சுதா? டென்ஷன் பண்ண தெரிஞ்சுதா?” என்று மூச்சு வாங்க பேசினான் குரு.

“விடு குரு, இழப்பு உங்களுக்கு மட்டும் இல்லை. உங்களுக்கு பிள்ளைன்னா, எங்களுக்கு பேரபிள்ளை” என்றார் வடிவேலு.

“ஆமா, எல்லாரும் விடுங்க. நீ போய் ரெஸ்ட் எடு அருணா” என்றார் ஆனந்தனும்.

யார் என்ன சொன்னாலும் அடங்குவதாக இல்லை அம்மாக்கள்.

“அஞ்சு, நான் அருணாவை ஊருக்கு கூட்டிட்டு போய்டுறேன். அங்கே வச்சு பாத்துகிறது தான் சுலபம்” 

“இல்ல மஞ்சு, அங்க  எங்க அம்மாக்கும் அருணாக்கும்  தான் ஓத்தே போகாதே. இப்ப அருணா இருக்கிற மனநிலைக்கு அம்மாவும் மல்லுக்கு நிப்பாங்க. எங்க வீட்டுக்கே கூட்டிட்டு  போய்டலாம். எங்க மாமியார் பக்குவமா  பார்த்துப்பாங்க. என்ன சொல்ற?”

வழக்கம் போல அவர்களே முடிவு எடுக்க நினைத்தனர்.

“நான் எங்கேயும் வரலை” என்றாள் அருணாளினி.

“என்ன அருணா இது? சின்ன பிள்ளை மாதிரி பிடிவாதம்?” என்றார் ஆனந்தன் சலிப்பாக.

“இந்த பிடிவாதம் நான் முன்னமே பிடிச்சிருந்தா, என் பாப்பா போயிருக்காது அப்பா” என்றாள் கண்ணீருடன்.

“திரும்ப திரும்ப நாங்க தப்புன்னு சொல்லக்கூடாது” என்றார் தந்தை சற்று கண்டிப்புடன்.

“நான் ஒரு முறை சொல்றதே கேக்க முடியலையாப்பா. மூணு வருஷம். உங்க பொண்டாட்டியும் தங்கச்சியும், எங்களை சொல்லிட்டே இருந்தாங்களே, நாங்க எது செஞ்சாலும் தப்பு கண்டுபிடிச்சிட்டே இருந்தாங்களே?அப்ப நீங்க கோமால்ல  இருந்தீங்களா அப்பா?” என்றாள் நக்கலாக.

“அப்பாகிட்ட என்ன பேச்சு அருணா இது?” என்றார் அன்னை.

“இது தான் இனி என் பேச்சு. நாங்களே பார்த்துக்கிறோம். கிளம்புங்க எல்லோரும்.” என்றாள் ஆவேசமாக.

“ஆப்பரேஷன் பண்ண உடம்பு, உன்ன யார் பார்த்துப்பாங்க?” என்றார் அஞ்சனா.

“என் புருஷன் பார்த்துப்பார்”

“இரண்டு பேரும் வீட்ல உட்கார்ந்தா எப்படி வேலைக்கு போறது? எப்படி சம்பாரிக்கிறது? எப்படி சாப்பிடறது? எதையும் யோசிக்கிறதே இல்லை” என்றார் அஞ்சனா.

“அது எங்க பிரச்சனை. இனி நாங்களே எங்களை பார்த்துக்கிறோம். உங்களுக்கு சிரமம் வேண்டாம்” என்றான் குருவும் பதிலுக்கு சூடாக.

“கொஞ்சம் பொறுமையா இருங்க எல்லோரும். அங்க பாட்டி இருக்காங்க குரு,  பக்குவம் சொல்லுவாங்க. அங்க அனுப்பிடு” என்றார் வடிவேலு.

“நாங்க பாட்டியை கொஞ்ச நாள் கூப்பிட்டுகிறோம்னு கேட்டப்போ. உங்களை மட்டுமே பார்க்க முடியுமா? எங்க வீட்டை யார் பார்க்கிறதுன்னு கேட்டாங்க அம்மா. அப்ப பக்குவம் சொல்ல நீங்க யோசிக்கலையே அப்பா. வேணாம் நாங்களே பார்த்துகிறோம்.” என்றான் தந்தையிடமும்.

எப்பொழுதும் இவர்கள் சொல்லுவதற்கு மறுப்பு சொல்லாத பிள்ளைகள் இன்று  முரண்டு பிடிக்கவும் பெற்றோர்களுக்கு நிலைமையை எப்படி சரி செய்வது என்று புரியவில்லை.

“முடிவா என்ன சொல்ல வர்றீங்க நீங்க இப்ப?” என்றார் அஞ்சனா காரமாக.

“விடு அஞ்சு, கஷ்டப்படட்டும். பட்டாதான் தெரியும். நாலு நாள்ல அம்மா முடியலைன்னு இரண்டு பேரும் போன் போட்டு கூப்பிடுவாங்க, பாரு” என்றார் மஞ்சுளா. 

“நாங்க பட்டவரைக்கும் போதும். செத்தாலும் உங்களை இனி கூப்பிடவே  மாட்டோம்.” என்றாள் எழுந்து நின்று ஆங்காரமாக அருணா.

அவள் முகமெல்லாம் சிவந்துவிட்டது.

“அருணா, டென்ஷன் ஆகாத. முதல்ல  உட்காரு” என்று குரு அவளை அமர வைத்தான்.

“என்ன குரு, அருணா தான் புரியாம பேசுதுன்னா. நீயும் எடுத்து சொல்லாம இருக்க? தனியா எப்படி சாமளிப்பீங்க” என்றார் வடிவேலு.

“உங்க இரண்டு பேரையும் பார்த்து கத்துகிட்டது  தான் அப்பா. பொண்டாட்டியை எப்படி தாங்கிறதுன்னு. முன்னமே கத்துகிட்டு இருந்திருக்கனும் ” என்றான் கடுப்பாக.

“என்னடா பேச்சு ஒரு தினுசா போகுது. நாங்க கஷ்டப்பட்டு வளர்க்காமலா நீங்க  வந்தீங்க?” என்றார் அஞ்சனா.

“நீங்க எங்க வளர்த்தீங்க?இரண்டு தாத்தா  பாட்டியும் வளர்த்தாங்க.” என்றாள் அருணா.

மாறி மாறி பேசி பேச்சுக்கள் வளர்ந்துகொண்டே சென்றது.

“நீங்க எல்லாம் நல்ல ஸ்கூல்ல  படிக்கணும், நல்ல நிலைமைக்கு வரனும்னு, அதுக்காக தான் நாங்க வேலைக்கு போனோம். நாங்க சொகுசா வீட்ல இருந்திருக்கலாமே? நன்றி இல்லாம பேசாதீங்க” என்றார் மஞ்சுளா.

“பெத்த பிள்ளைகளுக்கு செஞ்சதுக்கு கணக்கு சொல்றீங்களா?” என்றான் குரு.

“கணக்கு நாங்க சொல்லல. நீங்க தான் பெத்தவங்கலையே குறை சொல்றீங்க.  உங்களுக்கு செய்ற கடமையில் ஏதாவது குறை வச்சிருக்கோமா?” என்றார் அஞ்சனா.

“குரு, எனக்கு ஒரு மாதிரி இருக்கு. என்னை ரூம்க்கு கூட்டிட்டு  போ” என்றாள்  அருணா பலவீனமாக.

“நாங்க கொடுத்தா வீம்புக்கு ஒன்னும் சாப்பிட மாட்ட்டேங்கிறா. இப்ப என்ன பண்ண போறீங்க?”

குரு பதில் சொல்லாமல் அருணாவை மெல்ல எழுப்பினான்.

“ஒழுங்கா நாளைக்கு காலையில எங்களோடு  ஊருக்கு அனுப்பி வை அருணாவை.பேசி பேசி உடம்புக்கு இழுத்துக்க போறா.இப்ப  பேசாம படுக்க வை” என்றார் கட்டளையாக அஞ்சனா.

“முடியாது அத்தை. நான் வர மாட்டேன்” என்றாள் அருணா.

“ப்ளீஸ், எங்களை விட்ருங்க” என்றான் குரு கெஞ்சலாக.

“விடுங்கன்னா, முழுசா எங்களை தலை மூழ்கிடாலாம்னு இருக்கீங்களா?” என்றார் மஞ்சுளா.

“எல்லா வேலையையும் போட்டுட்டு  உங்களுக்காக பதறி  வந்து நிக்கிறோம்ல. நல்லா பேசுங்க” அழுகையோடு கூறினார் அஞ்சனா.

“யாரு கூப்பிட்டா? இப்ப உங்களை யாரு கூபிட்டா?ஆன்லைன்லேயே உங்க ஆறுதலையும் கூறி முடிச்சிருக்கலாமே?  தயவு செய்து போய்டுங்க. எங்களுக்கு யாருமே வேணாம்.” என்று கை எடுத்து கும்பிட்டாள் அருணா.

“அருணா! நீ போய் கொஞ்சம் படும்மா, அப்புறம் பேசிக்கலாம்” என்றார் ஆனந்தன். மகளை அப்படி பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

“நாங்க வேண்டாம், நாங்க ஒன்னும் செய்யலன்னு சொல்றீங்களே, நீங்க நிக்கிற இந்த நிலைமை நாங்க இல்லாம வந்துச்சோ? உங்க படிப்பு நாங்க கொடுத்தது. அது இல்லாம வேலைக்கு போக முடிஞ்சிருக்குமா?எங்களால பலன் அடைஞ்சிட்டு நாங்க வேணாம்னு சொல்றீங்களே?” என்று பொங்கினார்  அஞ்சனா. 

“அஞ்சு அமைதியா இரு என்றார்” வடிவேலு.

“அஞ்சு சொல்றதுல என்ன தப்பு? இரண்டு பெரும் ஆவேரேஜ் மார்க் தானே வாங்கினாங்க. நல்ல காலேஜூல டொனேஷன் கொடுத்து தானே படிக்க வச்சோம். அப்போ காசு எங்க இருந்து வந்துச்சு? அப்ப இந்த அம்மா அப்பா நல்லவங்க. அம்மாங்க  வேலைக்கு போனது உதவியா இருந்துச்சு. இப்ப கசக்குதோ?” என்றார் மஞ்சுவும் ஆவேசமாக.

“இப்ப நிறுத்த போறீங்களா இல்லையா?” என்று ஆனந்தன் ஒரு அதட்டலிடவும் சற்றே அமைதியாகினர் அம்மாக்கள்.

அதற்கு மேல் நிற்க முடியாமல் விழப் போனாள் அருணா.

குரு அவளை பிடித்து, ரூமிற்குள் அழைத்துச் சென்று விட்டான்.

“அவங்க தான் ஆத்தமாட்டாம பேசறாங்கன்னா, நீங்களும் விட்டு கொடுக்காம மல்லுக்கு நிக்குறீங்க. பாவம் பிள்ளையை பறிகொடுத்தட்டு  நிக்கிறாங்க. போங்க, போய் ஏதாச்சும் சாப்பிட கொடுங்க” என்றார் வடிவேலு.

“கொழுப்பெடுத்து போய் இருக்கா. நாங்க என்ன கொடுத்தாலும் வாங்க மாட்டேங்கிறா” என்று நொடித்துக்கொண்டு அம்மாக்கள் இருவரும் மற்றொரு அறைக்குள் புகுந்து கொண்டனர்.

குரு கிட்சன் சென்று, சத்து மாவு கஞ்சி வைத்தான். சத்து மாவு வீட்டிலே தயார் செய்து, முன்பு சொர்ணம் பாட்டி கொடுத்தனுப்பியது. பத்து நிமிடத்தில் கஞ்சியை ஆற்றிக்கொண்டு போய் அருணாவிற்கு கொடுத்தான்.

“எதையும் யோசிக்காம கொஞ்சம் தூங்கு அருணா” என்று அமைதியாக அவனும் மனைவி அருகில் அமர்ந்துவிட்டான்.

வடிவேலு தான், “மச்சான் நாம புறப்படுவோம். இவங்க இரண்டு பேரும் பேச்சை குறைக்க மாட்டாங்க. மேலே மேலே பேசி சங்கடம் தான். கொஞ்சம் ஆற போடுவோம். அருணாவை குரு பார்த்துப்பான். தேவைன்னா கூப்பிட  சொல்லுவோம்” என்றார் ஆனந்தனிடம்.

பின் குருவை அழைத்து, “நாளை காலையில நாங்க கிளம்பிடறோம். எதாவது தேவைன்னா யோசிக்காம என்னை கூப்பிடுங்க. நான் பாட்டியை கூட்டிட்டு வரேன். மனசை போட்டு குழப்பிக்காத” என்றார்.

குருவும் தலையசைத்து கொண்டான்.

இரவு அனைவருக்கும் குருவே ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்துவிட்டான்.

அருணாவிற்கு மட்டும் ரசம் சாதம் வைத்து கொடுத்தான். யாரும் யாருடனும் பேசவில்லை.

ஆளுக்கொரு யோசனையுடன் அனைவரும் படுத்து விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!