Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தூது செ(சொ) ல்லாயோ மெல்லிசையே

தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 12_01

உன் கண்ணுக்கெட்டாத தூரத்தில் வாழும் அடிமை சாசனம் தருகிறாய் நீ

உனது கைச்சிறையில் அடைப்பட்டிருக்கும் சுதந்திரம் கேட்கிறேன் நான்.

நான் உள்ளே சென்று தயாராகி வெளியே வர இருவரும் காரில் ஏறி கிளம்பினோம். சாலையை பார்த்துகொண்டு வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான் அவன்.

கடந்த மூன்று மாதங்கள் காற்றாய் பறந்து போனதைப் போல் ஒரு எண்ணம். அவன் வீட்டுக்கு வரவே கூடாது என்றுதானே முதலில் நினைத்தேன் ஆனால் மூன்று மாதங்கள் என்னை தரையில் கூட நடக்க விடாமல் தாங்கி இருக்கிறான் இந்த கோபக்காரன்.



Advertisement

கோபக்காரன்தான் என்றாலும் என் மேலான அவனது கோபம் அதிக பட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடித்தது இல்லையே.

பொதுவாக கருவுற்றிக்கும் நேரங்களில் ஒரு பெண்ணுக்கு தனது தாயின் துணை கண்டிப்பாக தேவை என்பார்கள். ஆனால் இந்த மூன்று மாதங்களில் எனது தாயின் நினைவு என்பது கூட எனக்கு வராமல் தாங்கியிருக்கிறான். அவன் நிலையில் நான் இருந்திருந்தால் இதையெல்லாம் செய்திருப்பேனா தெரியவில்லை எனக்கு.

“நாளை நான் அவனை விட்டு கிளம்பியாக வேண்டும்” அந்த நிதர்சனத்தை நான் ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்.

Advertisement

 “ஷ்யாம்”

Advertisement

‘ம்”

“இந்த மூணு மாசம் என்னை கண்ணுக்குள்ளே வெச்சு தாங்கி இருக்கீங்க. தேங்க்ஸ் ஷ்யாம்” நான் சொல்ல மெல்லத்  திரும்பி என்னை இரண்டு நொடிகள் பார்த்தான் அவன்.

பின்னர் “அப்படியா?” என்றான் சாலையின் மீது பார்வையை திருப்பிக்கொண்டு. “இப்போ அப்படிதான் .இருப்பேன். குழந்தை பிறந்த பிறகு பாரு உன்கூட எப்படி சண்டை போட்டு, எப்படி குழந்தையை பிடுங்கிட்டு போறேன்னு” அவன் சொன்ன சொல்லில் இந்த முறை ஏனோ அத்தனை உறுதி இல்லைதான்

Advertisement

“ஆனா என்னாலே உங்க கூட சண்டை போட்டு குழந்தையை பிடுங்கிட்டு போக முடியாதே ஷ்யாம்.” சொல்லியும் விட்டேன் நான்.

வியப்புடன் திரும்பி எனது முகம் பார்த்தான் அவன்.

எப்படி சொன்னேன் என்று தெரியவில்லை. .ஆனால் சொன்னேன்.. நிஜமாகவே அப்படித்தான் தோன்ற ஆரம்பித்திருந்தது எனக்கு.

அடுத்த அரை மணி நேரம் கடந்திருந்தது.  ஸ்டூடியோவில் அமர்ந்திருந்தோம் நாங்கள். எங்கள் வேலைகள் ஓரளவு முடிந்திருந்த நேரத்தில் அந்த திரைப்படத்தின் காட்சிகளை திரையில் பார்த்துக்கொண்டிருந்தோம் நாங்கள்.

அப்போது வந்தது அந்தக்காட்சி. திரைப்படத்தின் கதாநாயாகி  பிரசவ வலியில் துடிக்கும் காட்சி. அந்தக் காட்சியுடன் இன்னும் இசை சேர்க்கப் பட்டிருக்கவில்லை. அதனால் அவளது அலறல் மட்டும் தனியாக எதிரொலித்தது அங்கே.

அதை இமைக்காமல் பார்த்திருந்தான் ஷ்யாம். அலறி துடித்து கடைசியில் அவள் இறந்தே போவதாக இருந்தது அந்தக் காட்சி. அத்தனை தத்ரூபமாக நடித்திருந்தார் அந்த கதாநாயகி.

எனக்குள்ளே லேசான அதிர்வலைகள் பரவினாலும் அந்தக் காட்சி என்னை அத்தனை தூரம் பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் முகம் முழுவதும் திகில் பரவியிருக்க அந்தக் காட்சி முடிந்த பிறகும் திரையை விட்டு பார்வையை விலக்காமல் அமர்ந்திருந்தான் ஷ்யாம்.

அதில் அந்தக் கதாநாயகன் அவளை மடியில் வைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தான்.

“ஷ்யாம்” மெதுவான குரலில் அழைத்தேன் நான். திடுக்கிட்டு குலுங்கி திரும்பினான்.  முகம் முழுவதும் பய ரேகைகள் அவனுக்கு.

“என்னாச்சு ஷ்யாம்?” நான் கேட்க

“உனக்கு இப்படி எல்லாம் வலிக்காது இல்லையா பாப்பா?” பயக்குரலில் கேட்டான் அவன்.

“ஏன் ஷ்யாம் திடீர்னு?” நீண்ட நாட்களுக்கு பிறகு, எனது மகனைத் தாண்டி அவன் என் மீது அவன் காட்டிய அக்கறை எனக்கு பேரானந்தம்.

“இல்ல உனக்கு இப்படியெல்லாம் வலிக்க வேண்டாம் பாப்பா. நீ தாங்க மாட்டே சின்ன பொண்ணுடா நீ” அவன் குரலில் அத்தனை கவலை. அவனது அன்பில் மனம் எனது முழுவதும் நெகிழ்ச்சி.

“சின்ன பொண்ணா? இருபத்தி எட்டு வயசாச்சு எனக்கு”

‘இல்ல அதுவும் சின்ன வயசுதான். நாம சித்தாராவை சிசேரியன் பண்ண சொல்லிடுவோம்” என்றான் அவசரமாக.  மெல்ல சிரித்தேன் நான்.

“சிரிக்காதே நான் சித்தாராகிட்டே பேசறேன்” சொன்னான் அவன். அவனை இழுத்து என்னோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது எனக்கு.

“குழந்தை பிறந்ததும் முதல்லே உங்ககிட்டேயே கொடுக்க சொல்றேன். அப்போ என்ன  பண்ணுவீங்க ஷ்யாம்?” அவனை ரசிப்புடன் பார்த்தபடியே கேட்டேன் நான்.

“அப்படியே தூக்கிட்டு ஓடிடுவேன் பாரு” அவன் சொல்ல எப்போதும் வரும் கோபம் எனக்கு இப்போது வரவில்லை.

“அப்படியா பார்க்கலாம்” மெல்ல சிரித்தேன் நான். அப்போது ஒலித்தது அவன் கைப்பேசி.

என்ன செய்தியோ மிகவும் மகிழ்ச்சியாக பேசியவன் “பாப்பா!” கூவினானே பார்க்கவேண்டும்.

“உனக்கு நேஷனல் அவார்ட் வந்திருக்கு பாப்பா. இப்போதான் ப்ரெஸ் மீட்லே அறிவிச்சிருக்காங்க. அப்ளை பண்ணதை. நான் மறந்தே போயிட்டேன்.”

என்ன நடந்திருக்கிறது என்பதை நான் புரிந்துக் கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தன எனக்கு. நாங்கள் சென்ற வருடம் இசையமைத்த கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்த அந்தத் திரைப்படத்திற்காக இந்த விருது.

தனது பேன்ட் பேக்கட்டை துழாவி அதற்குள் இருந்த ஒரு சாக்லேட்டை வெளியே எடுத்தான்..

“ஜனாதிபதி கையாலே அவார்ட் வாங்கலாம். சாதிச்சிட்டே பாப்பா. உங்க அம்மாவோட ஆசையை நிறைவேத்திட்டே. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு” என்றான் சாக்லெட்டை பிரித்து என்னிடம் கொடுத்தபடியே.

அதில் பாதியை  எடுத்துக்கொண்டு மீதியை அவனிடம் கொடுத்தேன். எனது ஷ்யாமின் இந்த அன்பு எனக்கு எனது வெற்றியை விட இனித்தது.

“உங்களுக்கும் சேர்த்துதானே ஷ்யாம் அவார்ட். நாம ரெண்டு பேரும் சேர்ந்துதானே கம்போஸ் பண்ணோம். கங்க்ராட்ஸ் ஷ்யாம்” சொன்னேன் நான்.

“எனக்கும் சேர்த்துதான் பாப்பா. ஆனா இது முழுக்க முழுக்க உனக்கான அவார்ட்தான் பாப்பா. இது உன்னோட திறமை, உழைப்பு” அவனது குரலில் அத்தனை மகிழ்ச்சி.

“நான் உங்களையும் என்னையும் எப்போவும் பிரிச்சு பார்த்ததில்லை ஷ்யாம்” நான் சொல்ல சில நொடிகள் மௌனம் அங்கே

அதன் பிறகு சுதாரித்தான் “இன்னும் இருபது நாளிலே ஃப்ங்க்ஷன் இருக்கும் பாப்பா டெல்லிலே. அதுக்குள்ளே குழந்தை பிறந்துடுமா?”

“பிறந்திடும்னு நினைக்கிறேன். இல்லன்னா நீங்க மட்டும் போய் வாங்குங்க இப்போ என்ன?” தோன்றியதை சொல்லி விட்டேன் நான். அவனுக்கு கொஞ்சம் கோபம்தான் அந்த பதிலில்.

“ஏன் பாப்பா இப்படி பேசறே? நீ வரலன்னா நானும் போய் வாங்க மாட்டேன் சொல்லிட்டேன்.”

“சரி சரி வரேன் விடுங்க” சமாதானப் படுத்தினேன் நான்.

கைப்பேசி மூலம் நிறைய வாழ்த்துக்கள், நிறைய மகிழ்ச்சிகள் என அன்றைய மதிய பொழுது நகர்ந்தது.

அடுத்த சில மணித்துளிகள் கடக்க நாங்கள் சித்தாராவின் கிளினிக்கில் இருந்தோம். அவள் என்னை பரிசோதித்துக்கொண்டிருக்க அங்கே ஒளிர்ந்துக்கொண்டிருந்தத மானிட்டரின் திரையை விட்டு தனது பார்வையை நகர்த்தவே முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான் எனது சங்கீதக்காரன்.

நான் திரையில் தெரிந்த எனது மகனை பார்க்காமல் அவனது தந்தையையே ரசித்திருந்தேன்.

“இதுதான் கையா சித்து? இது காலா? ரொம்ப துறுதுறுன்னு அழகா இருக்கான் இல்ல?” அவன் ரசிப்புடன் சொல்லிக்கொண்டே போக நானும் சித்தாரவும் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாக சிரித்துக்கொண்டோம்.

“அப்படியே என்னை மாதிரியே  இருக்கான்” அவன் சொல்ல

“உனக்கு  ஸ்கேன்லே ஜாடை எல்லாம் தெரியுதாக்கும்?” என்றாள் சித்தாரா நக்கலாக.

‘அதெல்லாம் தெரியுது” சொன்னான் ஷ்யாம் பரவசமாக.

“எப்போ சித்து டெலிவரி இருக்கும்?” அவன் கேட்க

“அதுதான் நான் யோசிக்கிறேன்.” என்றாள் திரையை பார்த்தபடியே இது ஒன்பதாம் மாசம் முதல் வாரம். குழந்தை முழுசா வளர்ந்துட்டான். இனிமே கொஞ்சம் கவனமாதான் இருக்கணும் போலிருக்கு” என்றாள் பரிசோதனைகளை முடித்துக் கொண்டபடியே

இப்போது என் முகத்தை பார்த்தவனின் முகத்தில் அப்போது நான் ஸ்டுடியோவில் பார்த்த அதே பாவம்.

“அப்புறம் சித்து சிசேரியன்தானே பண்ணுவே?” கேட்டே விட்டான் அவன்

“ம்?” புருவங்கள் வளைய நிமிர்ந்தாள் அவள்.

“இல்ல இவளுக்கு வலியெல்லாம் வேண்டாம் சித்து பாவம்.”

‘ஆஹான்.. சாருக்கு என்ன இவ மேலே திடீர் அக்கறை?” என்றாள் சித்தாரா உடைகளை சரி செய்து கொண்டு வந்த என்னை பார்த்தபடியே.

“எனக்கு இவ மேலே எப்பவும் அக்கறை உண்டு. சந்தியாக்கு வலிக்கணும்ன்னு நான் எப்பவும் நினைச்சதே இல்லை. வலியிலே இவளுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா என்னாலே கண்டிப்பா தாங்கிக்க முடியாது சித்து”

“ஹேய்.. ச்சீ வாயை மூடு” வெடித்தாள் அவள் “அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. எப்படியும் பிளான்டு சிசேரியன்தான் இருக்கும். கவலைப்படாதே. அதுவும் இன்னும் ரெண்டு மூணு நாளிலே பண்ணிட்டா கூட நல்லதுதான். பையன் கொஞ்சம் அவசர படறான் போலத் தெரியுது” என்றாள். “நான் ரிபோர்ட்ஸ் சீனியர் டாக்டர்கிட்டே காட்டிட்டு உனக்கு நாளைக்கு சொல்றேன்.”

‘ஆனால் யாருக்கு என்னென்ன நடக்க வேண்டுமென விதி இருக்கிறதோ அதுதானே நடக்கும்’ ஏனோ அப்படித் தோன்றியது எனக்கு.

இரவு உணவை அங்கேயே முடித்துக்கொண்டு நானும் ஷ்யாமும் கிளம்பினோம். கிளம்பும் போதே மழை கொட்டத் துவங்கியது.

“குழந்தை ரொம்ப ரொம்ப அழகா இருக்கான் பாப்பா” மறுபடியும் சிலாகித்துக் கொண்டான் ஷ்யாம்.

“ம்?. பின்னே உங்க பையன் அழகா இல்லாம எப்படி?” அவன் முகம் ரசித்தபடியே சொன்னேன் நான்,

“அப்படியா?”  திரும்பினான் என் பக்கம். மறுபடியும் அந்த திரைப்பட காட்சிகள் மனதில் வந்ததோ என்னவோ.

“உனக்கு சிசேசிரியனே பண்ணிடுவோம் சந்தியா. அதுவும் ரெண்டு மூணு நாளிலே அப்படின்னா என்னமோ பயமாதான் இருக்கு.” என்றான் மறுபடியும்.

“பயமா? நானே பயப்படலை, நீங்க ஏன் பயப்படறீங்க?” எனது வளையலுடன் விளையாடிக்கொண்டே மெல்ல சிரித்தேன் நான்.

“சரி அது இருக்கட்டும் உனக்கு ஏதாவது வேணும்னா உடனே கேளு வாங்கித்தரேன்”

“எனக்கா? நிஜமா சொல்லுங்க. எனக்கா உங்க பையனுக்கா?” கொக்கி போட்டேன் நான்.

“ரெண்டு பேருக்கும்தான் சொல்லு” என்றான் சாலையில் பார்வையை வைத்தபடியே.

“கண்ணாடி வளையல் கொஞ்சம் வாங்கித்தறீங்களா?” எப்படித் தோன்றியதோ தெரியவில்லை. கேட்டு விட்டேன் நான்.

 “கண்ணாடி வளையலா?”  அவன் எனது முகம் ஊடுருவ

‘”எனக்கில்லை ஷ்யாம்.” என்றேன் அவசரமாக. எனக்கென்றால் ஒரு வேளை வாங்கித்தராமல் விட்டு விடுவானோ என ஒரு கலக்கம் எனக்கு.

“கண்ணாடி வளையல் போட்டுகிட்டா குழந்தைக்கு அந்த சத்தம் ரொம்ப சந்தோஷத்தை கொடுக்குமாம். அதனாலேதான் கேட்டேன். அதனாலேதான் எல்லாரும் வளைகாப்பு எல்லாம் பண்றாங்க தெரியுமா?”

“ஏன்? உனக்குன்னு சொன்னா நான் வாங்கித்தர மாட்டேனா?” என் முகம் பார்த்து நிறுத்தி நிதானமாக கேட்டான் அவன்.

பதிலில்லை என்னிடத்தில்.

ஒரு கடையை கவனித்து அதன் எதிரில் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தினான். மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது.

“உடனே வாங்கணும்னு இல்லை ஷ்யாம். நாளைக்கு கூட வாங்கிக்கலாம்”

“எனக்கு உடனே வாங்கணும்” என்னை பார்த்து புன்னகைத்துவிட்டு,

“இங்கேயே உட்கார்ந்திரு வந்திடறேன். மின்னல் அடிக்குது பத்திரமா இரு.” சொல்லிவிட்டு  சாலையை கடந்து மழையில் ஓடினான் ஷ்யாம்.

அடுத்த சில நிமிடங்களில் வந்த அவன் கரங்களில் முல்லைப் பூ சரமும், நிறைய கண்ணாடி வளையல்களும்.

“அங்கே இருந்தவங்களுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சிடுச்சு. சமாளிச்சிட்டு வர்றதுக்குள்ளே லேட் ஆயிடுச்சு”

நிறையவே  நனைந்திருந்தான் ஷ்யாம். காரில் இருந்த துண்டை எடுத்தேன்.

“முதலிலே தலையை துடைங்க”

“நீ வளையல் போடு” என்றபடியே தலையை துடைத்தான் ஷ்யாம்.

அடுத்த ஒரு நிமிடத்துக்குள் இருநூறு  முறை யோசித்து விட்டு .”ஒண்ணு கேட்டா கோபப் பட மாட்டீங்களே” என்றேன்.

“கண்டிப்பா மாட்டேன். சொல்லு”

“நீங்க எனக்கு வளையல் போட்டு விடுவீங்களா?” எனது கேள்வியில் கொஞ்சம் திகைத்துத்தான் பார்த்தான் என்னை.

“இல்ல பிடிக்கலன்னா வேண்டாம். கம்பல்ஷன் எல்லாம் இல்லை.” பரபரத்தேன் நான்.

“நீ பூ வெச்சுக்கோ முதலிலே” என்றான் நிதானமாக. பூவை சூட்டிக்கொண்டேன் நான்

முகத்தில் புன்னகை பூக்க என் கரம் பிடித்து அணிவித்தான் வளையல்களை. இடி மேளங்கள் முழங்க, மழை அட்சதை தூவ மின்னல் ஒளி சாட்சியாக நடந்தது எந்தன் வளைக்காப்பு.

எனது மனம் முழுவதும் பரவச தோரணங்கள். இதை எனக்கு பரிசளித்தவனுக்கு கொடுக்க என்னிடம் வார்த்தைகள் கூட இல்லை.

“வார்த்தைகள்தான் இல்லை. குழந்தை இருக்கிறது’ சொன்னது எனது மனது.

எனது இரு கரங்களையும் பற்றி மெல்ல குலுக்கினான் ஷ்யாம்.

“இந்த சத்தம் பாப்பாக்கு பிடிச்சிருக்கா?” கேட்டான் அழகு புன்னகையுடன்.

“கண்டிப்பா பிடிக்கும் ஷ்யாம். இந்த விஷயம் நான் எங்கேயோ படிச்சேன்”

“நான் வயித்துக்குள்ளே இருக்கும் பாப்பாவை சொல்லலை. இந்த பாப்பாவை சொன்னேன்” அவன் என்னைப் பார்த்து கூற

“ஓ.. எனக்கா. ரொம்ப பிடிச்சிருக்கு”

மெல்ல சொன்ன எனது முகத்தில் வெட்க சிரிப்பு. சில நொடிகள் அவன் என் வெட்கத்தை ரசிப்பதாகத்தான் தோன்றியது.

கார் சாலையில் வழுக்கிக்கொண்டு நகர்ந்துக் கொண்டிருக்க அவன் எங்கள் மகனைப் பற்றியே சிலாகித்து பேசிக்கொண்டிருந்தான். திடீரென என்ன தோன்றியதோ காரை சாலையில் ஓரத்தில் நிறுத்திவிட்டு எனது முகம் பார்த்தான்.

“என்ன ஷ்யாம்?”

“ஒரு தடவை குழந்தையை நான் தொட்டு பார்த்துக்கவா பாப்பா. ஆசையா இருக்கு?” அவன் குரலில் அப்படி ஒரு கெஞ்சல் தொனி.

“கண்டிப்பா” புன்னகைத்தேன் நான்.

அவன் எனது வயிற்றில் கைவைத்த அந்த நொடியில், எனது கண்களில் மெலிதான நீர் துளிகள் சேர அந்த நேரத்தில் எனது மகன் அசைந்து விளையாட அத்தனை ஆனந்தம் அவனுக்கு. அவன் கண்களில் நெகிழ்ச்சி கண்ணீர்.

எனக்குள்ளே வார்த்தையில் வடிக்க முடியாத உணர்வுகள்

“எனக்கென்னமோ குழந்தை பிறந்ததும் அவன் கையிலேதான் நீ தூக்கி கொடுப்பேன்னு தோணுது. சில விஷயங்கள் எனக்கு தோணினா நடக்கும்” சித்தாராவின் வார்த்தைகள் இப்போதும் ஏனோ எனக்குள்ளே ரீங்காரம்.

‘ஒரு வேளை அதுதான் நடக்குமோ?’

இருவரும் சில மணி நேரங்களாக ஏதோ ஒரு மாய உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் உணர்வு. அந்த உலகில் இருந்தது நான் ஷ்யாம் எனது மகன் என்ற மூவர் மட்டுமே. ஆனால் நிதர்சனங்கள் எங்கள் அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருக்கும் போது எத்தனை நேரம் வாழ்ந்துவிட முடியும் அந்த மாய உலகில்.

சந்தோஷ மழையின் நனைந்தபடியே நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.

“சரி குட் நைட் ஷ்யாம்” நகர்ந்தவள் யோசனையுடன் நின்று திரும்பினேன் “திங்க்ஸ் எல்லாம் நாளைக்கு காலையிலே பேக் பண்ணிக்கலாம் இல்ல?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!