Skip to content
Post Views: 4,028
நான் இன்னமும் ஷ்யாமின் முகத்தை நேராக பார்க்கவில்லை. ஆனாலும் பெற்றவரை விட்டு வேறு யாரிடமோ சென்றுவிட்ட குழந்தை தாயிடம் திரும்பி வர தவிக்குமே ஒரு தவிப்பு, எனது பார்வைக்காக அவன் அப்படி ஒரு தவிப்பு தவித்துக் கொண்டிருந்ததை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
மெதுவாய் அவன் பக்கம் திரும்பினேன். ஒரு ஆழ் மூச்சுடன் புன்னகைதான் அவன்.
“குழந்தையை வாங்கிக்கோங்க மிசஸ் சந்தியா ஷ்யாம்”. சொன்னான் என்னவன்.
கண்டிப்பாக இதையெல்லாம் நம்பவே முடியவில்லை என்னால்.
Advertisement
குழந்தையை நீட்டினான் அவன். அவன் அறியாமல் அவன் உயிர் திருடி எனக்குள் சேர்த்து, சிறிது சிறிதாக நான் வளர்த்து வைத்த எனது பொக்கிஷம் எனக்கே எனக்காக எனது கை சேர்ந்தது. நான் எடுத்த பிறவிப் பயன் கிடைத்த பேரானந்தம் எனக்கு
எனது மகனை எனது நெஞ்சோடு சேர்த்துக்கொண்டேன் நான். கண்களில் கண்ணீர் மழை. அந்த நிமிடத்தை முழுவதுமாக அனுபவிக்க அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தேன் அங்கிருந்த எல்லரிடமுமே நெகிழ்ச்சி மௌனம்.
சில நொடிகள் கழித்து அவன் அருகில் வந்து அவனது தோள்களை அணைத்துக் கொண்டான் அவனது உயிர் நண்பன்
Advertisement
“மிசஸ் சந்தியா ஷ்யாம். அப்படி சொல்லுடா கண்ணா. திருப்தியா அப்படி சொல்லு” விழிகளில் வியப்பு மேலோங்க நான் அவர்கள் இருவரையும் பார்த்தேன்
Advertisement
“உனக்கு இதுக்கெல்லாம் நான் என்ன செய்யப் போறேன்னு தெரியலைடா” தழுதழுத்தான் ஷ்யாம்.
“நீ என் ஷ்யாம்டா” என்றான் தனா. “அது ஒண்ணே எனக்கு போதும்”
“எனக்கு மிஸ்டர் ராகவேந்தரை பார்க்கணும்டா” கேட்டான் ஷ்யாம்.
Advertisement
“கண்டிப்பா. ரெண்டு மூணு நாளிலே அவரும் சென்னை வரார். எல்லாரும் மீட் பண்ணுவோம். அவர் ரெண்டு மாசத்திலே யூ. எஸ் போக வேண்டியதா இருக்கு. கூடவே சாருவையும் கூட்டிட்டு போக விசா ப்ராசெஸ்க்காக, அவங்க வீட்டிலே இப்போவே கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ணிடலாம்னு கேட்டுட்டு இருக்காங்க. நான்தான் உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் சரியாகட்டும் பார்த்தேன். இப்போ எல்லாம் சரியாகிடுச்சு. அடுத்த வாரம் ரெண்டு கல்யாணமும் ரெஜிஸ்டர் பண்ணிடலமா டா?”
என்னை ஒரு முறை திரும்பி பார்த்தான் ஷ்யாம். பேச்சென்ன மூச்சே எழவில்லை எனக்கு. சத்தியமாய் நடப்பவைகளை நம்பவே முடியாமல் நான் அமர்ந்திருக்க ஷ்யாமே அமோதிப்பாய் தலையசைத்தான்.
“நம்ம வீட்டிலேயே நடந்திடுவோம்டா.. ரிஜிஸ்ட்டரார் வீட்டுக்கே வராரா கேட்போம்” என்றான் அவன்.
அதன் பிறகு தனாவும் சாருவும் கிளம்பிச்சென்று விட்ட நிலையில் நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க ஷ்யாம். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு சித்தாரா எங்களுக்கு தனிமை கொடுத்து விலக முற்பட
“ஹேய்.. நான் கிளம்பறேன் வீட்டுக்கு” ஏனோ பரபரத்தான் ஷ்யாம் “நாளைக்கு வீட்டுக்கு வந்திடுவா இல்ல அப்புறம் பேசிக்கலாம்”
அவன் சென்றவுடன் நான் சித்தாராவின் கையை பிடித்துக்கொண்டேன்.
“தயவு செய்து உப்பு போட்டு சாப்பிடு இனிமே”
“உங்க ரெண்டு கல்யாணமும் நடக்கும் போது கண்டிப்பா சாப்பிடுவேன்” புன்னகைத்தாள் எனது தோழி.
மறுநாள் ஒரு வழியாக அவன் வீட்டுக்கு வந்திருந்தேன் நான். அவன் கையில் குழந்தையோடு நின்றிருக்க, நான் அவன் அருகே நின்றிருக்க சித்தாராவின் அம்மா ஆர்த்தி எடுக்க குழந்தையுடன் உள்ளே நுழைந்தோம் நாங்கள் இருவரும்.
குழந்தையை எடுத்துக்கொண்டு சென்று நேராக அவனது மாமாவின் கையில் கொடுத்து அவர் பாதம் தொட்டு வணங்கினான் ஷ்யாம். நானும் அவனுடன் இணைந்துக் கொண்டேன்.
“என்னடா கண்ணா? என் மேலே இருந்த கோபமெல்லாம் போயிடுச்சா?” சிரிப்புடன் கேட்டார் சித்தாராவின் தந்தை..
“நான் உங்களை எதாவது தப்பா பேசியிருந்தா ஸாரி மாமா” என்றவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் அவனது தாய் மாமன். “நீயும் எனக்கு ஒரு மகன்தான்டா”
அவர் அன்று அப்படி பேசியிருக்காவிட்டால் அவன் எனது வயிற்றில் இருந்த காலங்களில் எனது மகனுக்கு கிடைக்க வேண்டிய தந்தையின் அரவணைப்பு கிடைக்காமலே போயிருக்கும் என்றுதான் தோன்றியது எனக்கு.
அன்று அவர் வேண்டுமென்றே அப்படி பேசினாரோ என்று கூட தோன்றியது எனக்கு.
“தேங்க்ஸ் பா” நான் அவர் முகம் பார்த்து சொல்ல கண் சிமிட்டி சிரித்தார் அவர்.
இத்தனை நடந்து முடிந்த பிறகும் இன்னமும் ஷ்யாம் எனதருகில் நின்று எதுவும் பேசவில்லை. அது ஏனென்று தெரியவில்லை. இன்னமும் என் மீது கோபம் மிச்சமிருக்கிறதா தெரியவில்லை. நானாக பேசவும் துவங்கவில்லை. இதனிடையே குழந்தைக்கான தேவைகளை மட்டும் மிக அழகாக பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தான்.
பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில் இரண்டு திருமணங்களையும் பதிவு செய்யும் ஏற்பாடுகளை முடித்திருந்தான் தனா.
இரண்டு திருமணங்களும் பதிவு செய்யும் அதே நேரத்தில் வீட்டிலேயே எனக்கும் ஷ்யாமுக்கான சம்பிரதாய திருமணமும் நடத்தி விடுவதாகவும் முடிவு செய்தனர். அதன் பின்னர் பெரிய அளவில் வரவேற்பு ஒன்றை ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் முடிவானது.
இத்தனை வருடங்கள் இப்படி ஒரு நாள் வந்து விடாதா என நான் தவமாய் தவமிருந்த அந்த நாள். மிக அழகாக விடிந்திருந்தது. ஆனாலும் இந்த நிமிடம் வரை என்னிடம் எதுவும் பேசியிருக்கவில்லை ஷ்யாம்.
அப்போது எனதறைக்குள் வந்தாள் சித்தாரா. அவள் கையில் இருந்த புது புடவையையும் சில நகைகளையும் என்னிடம் நீட்டினாள்.
“ஷ்யாம் உனக்காக வாங்கியிருக்கான். இதெல்லாம் போட்டுட்டு ரெடி ஆகு” சட்டென ஒரு சந்தோஷ மின்னல்
சித்தாரா இன்னமும் பழைய உடையிலேயே இருக்க “நீயும் நல்லா ட்ரெஸ் பண்ணிக்கோ சித்து” என்றேன் நான் கெஞ்சலாக.
“இன்னைக்கு கல்யாணம் முடிஞ்ச உடனே” சொல்லிவிட்டு எனது கன்னம் தட்டிவிட்டு அகன்றாள் எனது உயிர் தோழி. அவள் சொன்னால் சொன்னதுதான்.
மிக நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். எனது சார்பாக ஒன்றிரண்டு தோழிகள் மட்டுமே. குழந்தையை பற்றிய தேவை இல்லாத கேள்விகளுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை யாரும்.
“ஒரு தடவை ஆடம்பரமா கல்யாணம் பண்ணி எல்லார் கண்ணும் பட்டு அது தழைக்காம போச்சு. இது சிம்பிளா நடந்தாலும் நிலைச்சு நிக்கும்டா” சொல்லியிருந்தான் தனா.
கைகளிலும், கால் பாதங்களிலும் மருதாணி சிவப்பேறியிருக்க, அரக்கு வண்ண பட்டுப் புடவை ஜொலிக்க, மெலிதான அலங்காரத்துடனும் நான் தயாராகி அறையை விட்டு வர, ஆடம்பரமான அலங்காரங்கள் என்று இல்லாமல் மல்லிகை முல்லை சம்பங்கி மலர் தோரணங்களால் பூக்காடாய் மாறியிருந்த பூஜையறையும், கூடமும் என்னை வரவேற்றன.
ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருந்த மெலிதான புல்லாங்குழல் இசை வீட்டை நிறைத்திருந்தது. அங்கே பூஜையறையில் குத்து விளக்கு ஒளிர்ந்துக் கொண்டிருக்க அங்கே இருந்த ஒரு தட்டில் எங்களுக்கான மாலைகளும், தாலியும் மெட்டிகளும் காத்திருந்தன. பூஜை அறைக்கு சற்று முன்னே ஒரு அம்மிக்கல்.
இரண்டு மூன்று நாட்களாக இந்த ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்க இதில் என்னை எந்த வேலையும் செய்ய விடாமல் கை மேல் வைத்து தாங்கியிருக்கிறார்கள்
கூடத்தில் அலங்கரிக்கப் பட்ட தொட்டில் ஒன்று காத்திருந்தது எனது மகனுக்காக. இன்றே அவனுக்கு பெயரும் சூட்டி விட திட்டம்.
ராகவேந்தரும் அவன் குடும்பமும் வந்திருக்க அவர்களை பார்த்த மாத்திரத்தில் அனைவருக்கும் பிடித்து போனது. பல நாள் பழக்கம் போலவே நிறுத்தாமல் கலகலவென பேசிக்கொண்டிருந்தான் ராகவேந்தர்.
ஷ்யாமை மட்டும் தேடிக்கொண்டேயிருந்தன எனது அலைபாயும் விழிகள். ஒரு கட்டத்தில்நான் நான் சட்டென திரும்ப தடுமாறி பின்னால் நின்ற ஷ்யாமின் மீது சாய்ந்து சமாளித்து நிமிர்ந்தேன்.
பளீர் என்ற பட்டு வேட்டி சட்டையில் நின்றவனை விட்டு என்னால் விழிகளை அகற்றவே முடியவில்லை. மெலிதான சந்தோஷ தூறல்கள் எனக்குள்ளே. அவனது கரங்களில் இருந்த சிறிய மெத்தையில் கையையும் காலையும் படு வேகமாக அசைத்து விளையாடிக்கொண்டிருந்தான் எனது மகன்.
எத்தனை நேரம் எனது பின்னால் நின்றிருந்தானோ தெரியவில்லை. ஒரு ரசிப்பான புன்னகையுடன் என்னை பார்த்தவனுக்கு சட்டென என்ன தோன்றியதோ தலையை குலுக்கிக்கொண்டு அங்கிருந்து விலகினான் எனது சங்கீதக்காரன்.
முதலில் கையெழுத்து போட்டது ராகவேந்தரும், சாருவும். அது முடிந்ததுமே ஷ்யாமின் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி பிரவாகம்.
அவர்கள் இருவரையும் கைகுலுக்கி வாழ்த்தியவனின் அருகில் வந்து தோள்களை அணைத்துக்கொண்டு அழைத்து வந்தான் தனா.
“நீ சைன் பண்ணுடா”
எனது முகம் பார்த்த ஷ்யாமின் முகத்தில் நிறையவே மகிழ்ச்சி ரேகைகள். பலவித அழுத்தங்களில் இருந்து வெளி வந்து விட்ட தெளிவின் பாவம். பழைய ஷ்யாமை மறுபடியும் பார்த்த உணர்வு எனக்கு.
சந்தோஷ சிரிப்புடனே கையெழுத்திட்டான் என்னவன். அடுத்து கையெழுத்து போடுவது எனது முறையாக, எங்கள் திருமணத்திற்கொரு சாட்சி போலவே பார்த்திருந்தான் எனது மகன்.
“குழந்தையை இப்படி குடு ஷ்யாம்” தனா வாங்கிக்கொள்ள பூஜையறையில் மிளிர்ந்து கொண்டிருந்த குத்து விளக்கின் முன்னே நாங்கள் இருவரும் அமர்ந்தோம். அவன் கரம் சேர்ந்த மாலை எனது தோள் சேர எனது உள்ளமெங்கும் பொங்கி பொழியும் ஆனந்த மழையுடன் அவன் தோள் சேர்ந்தது எனது கரத்தின் மாலை,
நினைக்கவில்லை. எனது கனவு இப்படியெல்லாம் நிறைவேறும் என்று நான் நினைத்தே இருக்கவில்லை. பூஜை அறையில் வீற்றிருந்த இறைவன் சாட்சியாக, அந்த குத்து விளக்கின் சுடர் சாட்சியாக, சித்தாராவின் அப்பா அம்மா உட்பட அழகான நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களுடனும், முகம் நிறைந்த புன்னகையுடனும் எனது கழுத்தில் தாலி கட்டினான் ஷ்யாம்.. அதன் மற்ற இரண்டு முடிச்சுகளை போட்டாள் எனது உயிர் தோழி.
மகிழ்வுடன் கையையும் காலையும் உதைத்துக்கொண்டிருந்தான் எங்கள் மகன். எங்கள் மீது பொழிந்து வழிந்தது எல்லாரும் தூவிய பூமழை.
அடுத்து புன்னகையுடன் எனது முகம் பார்த்தபடியே மருதாணி சிவப்பேறிய எனது பாதத்தை கையில் ஏந்தி அம்மியின் மீது வைத்தான் எனது சங்கீதக்காரன். அவன் விரல்கள் எனது பாதம் வருட நான் சிலிர்க்க, சிலிர்க்க எனது விரல்களில் இடம் பிடித்தன மெட்டிகள்.
“இப்போ ரெண்டு பேரும் மலரே மௌனமா பாடியே ஆகணும்” ஆணையிட்டாள் சித்தாரா.
“ஹேய்.. சும்மா இரு” நான் அவளை அடக்க
“எஸ் எஸ் கண்டிப்பா பாடணும்” சுற்றிலும் கோரஸ் குரல் எழுந்தன.
ஷ்யாம் என்னைப் பார்க்க “ஒரு நிமிஷம்” என்றேன் நான். பின்னர் சித்தாராவின் பக்கம் திரும்பி
“நீ போய் வேறே நல்ல ட்ரெஸ் மாத்திட்டு வா. முதலிலே” என்றேன் அவள் காதில் “அப்போதான் நான் பாடுவேன்”
“எஸ் சித்து” ஷ்யாமும் நான் சொல்வதை புரிந்துக்கொண்டு இணைந்தான் என்னுடன் “சீக்கிரம் போயிட்டு வா. அப்போதான் நாங்க பாடுவோம்”
அடுத்த ஐந்து நிமிடந்தில் அவள் இளம் பச்சை பட்டுப் புடவையில் வர, அவள் வாயில் நான் அங்கே இருந்த தட்டில் ஒரு இனிப்பை திணிக்க
“பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ” துவங்கினான் ஷ்யாம்.
“மீதி ஜீவன் என்னை பார்த்தபோது வந்ததோ” தொடர்ந்தேன் நான்.
எங்கும் ஆனந்தம் நிரம்பி வழிந்தது.
பாடல் முடிய பெரிய ஆரவாரம் எழுந்து அடங்க “இப்போ சந்தியா ஐ லவ் திஸ் இடியட்” ன்னு கத்தியே ஆகணும் பற்ற வைத்தான் தனா.
“எங்கிருந்து வந்ததோ எனக்கு அத்தனை வெட்கம் “அய்யோ.. நான் மாட்டேன்” சிவந்து போனேன்.
“இல்ல கண்டிப்பா கத்தணும்” இது சித்தாரா.
“ப்ளீஸ்… சித்து..” நான் கெஞ்ச
“இருங்க இருங்க பாவம் என் பொண்டாட்டி. இப்போ உங்களுக்கு “ஐ லவ் திஸ் இடியட்” தானே வேணும் என ஷ்யாம் கூவினானே பார்க்க வேண்டும் ஷ்யாமின் தொனியிலும் அங்கே எழுந்த ஆராவரத்திலும் சிவந்து திக்கு முக்காடிப் போனேன் நான்.
அங்கிருந்தவர்கள் குரலில் ஆயர்பாடி மாளிகையில் பாடல் ஒலிக்க நானும் அவர்களுடன் இணைத்துக்கொள்ள அங்கிருந்த அந்த தொட்டிலுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தான் எங்கள் மகன்.
“இசைப் பிரியன்” அவன் செவிகளில் பெயரை சொன்னான் எனது சங்கீதக்காரன். பெயர் தேர்வு செய்ததும் அவனே.
எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம். இதை விட அழகாக எங்கள் திருமணம் நடந்திருக்கவே முடியாது என்று தோன்றியது எனக்கு.
இரவு வரும் வரை எங்கள் இருவருக்கும் தனிமை கிடைக்கவில்லை. இரவு அவன் அறைக்கு நான் வந்த போது பால்கனியில் இங்கமங்கும் நடந்தபடியே குழந்தையை உறங்க வைத்துக்கொண்டிருந்தான் ஷ்யாம்.
என்னதான் இத்தனை நாட்கள் ஒரே வீட்டில் இருந்திருந்தாலும் அவனுடன் ஒரே அறையில் தங்கியது இல்லை நான்.
எனது கொலுசொலியில் அவன் பால்கனியிலிருந்து அறைக்குள் எட்டிப் பார்க்க ஏதோ இப்போதுதான் அவனை புதிதாக பார்ப்பதைப் போல் ஒரு படபடப்பு. நிமிர்ந்து அவன் முகம் கூட பார்க்காமல் கட்டிலின் அருகில் ஓடி வந்து கண் மூடி சாய்ந்துக்கொண்டேன் நான்.
சில நிமிடங்கள் கழித்து எனதருகில் வந்து படுத்துக்கொண்டான் ஷ்யாம். கண்களை திறக்கவே இல்லை நான். அவனிடமும் எந்த அசைவும் இல்லை. எங்களிடையே அடுத்த பத்து நிமிடங்களுக்கு விழுந்து கிடந்தது ஒரு மெல்லியே மௌனத்திரை.
“கலைத்துவிடு இந்த மௌனத்தை. தயவு செய்து விரட்டிவிடு. இந்த மௌனக் காற்றை” நான் கண்களை திறக்காமலே அவனிடம் மௌனமாக கெஞ்சிக்கொண்டிருக்க அவனது விரல்கள் எனது வலது கரத்தில் இருந்த, அவன் அன்று காரில் அணிவித்த அந்த கண்ணாடி வளையல்களை மெல்ல .வருடின.
விருட்டென கண் திறந்தேன் நான். அடுத்த நொடி எனது பார்வை அவனது கண்களுக்குள் விழுந்தது.
“லவ் யூ பாப்பா” என்றான் மெலிதான குரலில்.
எனது விழிகளில் மெலிதான நீர் கோடுகள்.
“லவ்… யூ… பாப்பா” அவன் மறுபடியும் நிறுத்தி நிதானமாக சொல்ல அப்படியே அவன் தோள் சேர்ந்திருந்தேன் நான்.
“எத்தனை தடவைடா.? லவ் யூ ஷ்யாம். லவ் யூ ஷ்யாம்னு” எத்தனை தடவை? ஹப்பா… அன்னைக்கெல்லாம் செத்து பிழைச்சேன் நான்” என்னை இறுக்கிக்கொண்டான் தன்னோடு.
“என் மேலே கோபம் எல்லாம் இல்லையே ஷ்யாம். இருந்தா திட்டிடுங்க மொத்தமா” எனது கண்ணீர் அவன் கன்னம் தொட என் முகம் நிமிர்த்தி கண்ணீர் துடைத்தான்..
“திட்டறதா உன்னையா.? ஒரு பொண்ணுக்கு டெலிவரி ஆகுறதை பார்த்த எந்த ஆம்பிளையும் அதுக்கு அப்புறம் எந்த ஒரு பொண்ணையும் திட்ட மாட்டான் பாப்பா. அய்யோ உன் வலியை பார்த்து செத்துட்டேன் நான்” சொன்னவனின் கன்னங்களில் அருவி.
“எனக்காக எவ்வளவு வலி. யூ ஆர் கிரேட்மா.”
“ஷ்யாம் என்ன ஷ்யாம் நீங்க” அவன் கண்ணீர் துடைத்தேன் நான்.
“போதும் நமக்கு இந்த ஒரு குழந்தை போதும் ” என்றான் என்னை இறுக்கிக்கொண்டு
ஒரு சின்ன சிரிப்புடன் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டேன்.
“எதுக்கும் கலங்காத இந்த ஷ்யாமை இப்படி கலங்கடிச்சிட்டியே பாப்பா” என்றான் எனது செவிகளுக்குள்.
“முதலிலே நீ உன்னோட காதலை சொன்ன போது முடியவே முடியாதுன்னு நினைச்சேன். உன்னை பக்கத்திலேயே சேர்க்க கூடாதுன்னு முடிவு பண்ணி என்னனமோ பண்ணேன். அதுக்கு அப்புறம் இந்த சிங்கப்பூர் ட்ரிப் வந்த போது கூட நாலு நாள்தானேன்னு சமாளிச்சிடுவோம்னு சம்மதிச்சேன். அப்போ வரைக்கும் கூட நான் ரொம்ப தெளிவா தான் இருந்தேன்.
ஆனா அன்னைக்கு ஏர்போர்ட்லே நீ “இந்த நாலு நாளும் என்னை பழையபடி பாப்பானு கூப்பிடறீங்களா? அப்படின்னு கேட்டே தெரியுமா?” எனது விழிகளை விட்டு பார்வையை அகற்ற முடியவில்லை அவனால்.
“அந்த வார்த்தையிலே, அந்த கெஞ்சலிலே. அந்த நிமிஷத்திலே ஏன்னு தெரியலை உன்னை அப்படியே என்னோட இழுத்து சேர்த்துக்கணும்ன்னு தோணிச்சு. உன் கன்னத்திலே மாறி முத்தம் கொடுக்கணும்னு தோணிச்சு. காலம் பூரா உன்னை பாப்பா பாப்பான்னு கூப்பிட்டுட்டே இருக்கணும்னு தோணிச்சு. காலம் பூரா உன்னை என் கைக்குள்ளேயே வெச்சுக்கணும்னு தோணிச்சு. ஆனா எதையுமே வெளியில் காமிச்சுக்காம உனக்கு காபி வாங்கிட்டு வரேன்ன்னு எழுந்துட்டேன்”
அவன் பேச்சில் இமைக்க மறந்திருந்தேன் நான்.
“என்னோட மனசை நான் வெளியில் காமிச்சுக்கலை பாப்பா. சிங்கப்பூர் ட்ரிப் முழுசும் என்னை நானே மறைசுக்க ரொம்ப முயற்சி பண்ணேன். அதுக்கு அப்புறம் நீ பண்ண தப்பு எனக்கு புரிஞ்ச போது உன் மேலே எனக்கு அப்படி ஒரு கோபம். என்னை நீ ஏமாத்திட்டே அப்படிங்கிற கோபம். அதைவிட ஏமாத்தினது நீ அப்படிங்கிற கோபம். நீ என் மேலே வெச்சிருந்தது லவ்வே இல்லை அப்படின்னு ஒரு கோபம்”
“சாரி ஷ்யாம்” மெல்ல சொன்னேன் நான்.
எனது மூக்கை மெல்ல கிள்ளினான் ஷ்யாம்
“எத்தனை சாரி சொன்னாலும் நீ பண்ணது தப்புதான் பொண்ணே. உன்னை மன்னிக்கவே கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனாலும் ரொம்ப நாள் உன் முன்னாடி என் கோபத்தை இழுத்து பிடிக்க முடியலை. நாளுக்கு நாள் உன் மேலே எனக்கு இருந்த அன்பு வளர்ந்துட்டேதான் போச்சு, கடைசியிலே குழந்தை பிறக்கும் போது நீ சொன்ன ஐ லவ் யூ…. உயிரே போயிடுச்சு பாப்பா எனக்கு.” என்றான் ஒரு ஆழ் மூச்சுடன்.
“கடைசிலே எல்லாத்தையும் தாண்டி நீ என்னை ஜெயிச்சிட்டே போ” சில நொடி மௌனத்திற்கு பிறகு எனது நெற்றி முட்டினான் ஷ்யாம்.
“தெரியலை. நீ இதெல்லாம் செய்யாம இருந்திருந்தா, சாருக்கு என்னோட லவ் புரியாம இருந்திருந்தா, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாம இருந்திருந்தா நான் என் மனசை வெளியிலே சொல்லி இருப்பேனா தெரியலை. நீ இந்த பூமியின் ஏதோ ஒரு ஓரத்திலேயும் நான் ஒரு ஓரத்திலேயும் இருந்திருப்போம். ஆனா அடி மனசிலே ஒரு ஓரத்திலே என்னோட முதல் காதலியா நீ எப்பவும் இருந்திருப்பே நீ நல்லா இருக்கணும்னு எப்பவும் நான் வேண்டிட்டே இருந்திருப்பேன்..”
அவனது வார்த்தைகளில் எனது இதழ்களில் பூத்தது மெலிதாக ஒரு புன்னகை.
“இப்போ ஏதேதோ மேஜிக் நடந்து என் பாப்பா என் கைக்குள்ளே இருக்கா. ரொம்ப சந்தோஷமா இருக்கு பாப்பா” சின்ன சிரிப்புடன் எனது நெற்றி முட்டி சொன்னவனின் சூடான சுவாசம் எனது கன்னம் தொட்டது. எனது பார்வையை பருகிக் கொண்டிருந்தான் அவன். அவனுக்குள் கரைந்துக் கொண்டே போகும் உணர்வு எனக்கு.
என்னையும் அறியாமல் எதையோ எதிர்ப்பார்த்து கண்களை மூடிக் கொண்டேன் நான். சில நொடிகள் அவனிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. சட்டென நான் கண்களை திறக்க மெல்ல சிரித்தான் என் சங்கீதக்காரன்
‘என்ன வேணுமாம் என் பாப்பாக்கு?” அவன் இதமான குரலில் கேட்டு வைக்க வெட்கத்தில் சிலிர்த்துப் போனேன் நான். “உனக்கு மூணு மாசம் ரெஸ்ட் வேணும் பாப்பா. அப்புறம்தான் எல்லாம்”
“அதெல்லாம்…. அதெல்லாம்…. ஒண்ணுமில்லை ஷ்யாம். எனக்கு உங்க மேலே லவ் எல்லாம் இல்ல. சும்மா..” நான் எப்போதும் போல் படபடக்க
“ராக்ஷஸி” எனது கன்னம் கிள்ளின அவனது விரல்கள் “சரி பாப்பாவுக்கு ஒரே ஒரு முத்தம் மட்டும்” எனது கன்னத்தில் அவனது நாசி கோலம் போட்ட அடுத்த நொடியில் அவனது காதலின் ஆழத்தை எனக்கு மென்மையாக உணர்த்த ஆரம்பித்தன அவனது இதழ்கள்.
அடுத்து சில நாட்கள் மகிழ்ச்சியாக கடந்திருக்க எங்களுக்கு அறிவிக்கப் பட்டிருந்த தேசிய விருதை பெறுவதற்காக டெல்லியை அடைந்திருந்தோம் நாங்கள் இருவரும். எங்களோடு சித்தாராவும் குழந்தையும் கூட. வந்திருந்தனர்.
முதல் நாள் நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் நடந்து முடிந்திருக்க மறுநாள் மதியம் துவங்கியது விருது வழங்கும் விழா . மாபெரும் அரசவையை போன்றதொரு அந்த பிரம்மாண்ட அரங்கத்தில் எங்கள் பெயர் பலகையின் முன்பாக அமர்ந்திருந்தோம் நானும் ஷ்யாமும்.
எங்கள் இருவரின் பெயரும் அழைக்கப்பட, நாங்கள் இருவரும் ஜோடியாக மேடை ஏறினோம்.
ஜனாதிபதி எங்கள் இருவருக்கும் விருதை கொடுக்க மொத்த நாடும் எங்கள் இருவரையும் வாழ்த்திக் கொண்டிருக்க எங்கள் இருவரையும் இந்த உயரத்துக்கு ஏற்றி விட்ட இசையை மனதார வணங்கிக் கொண்டிருந்தேன் நான்.
அடுத்து ஒரு வருடம் கடந்திருக்க சாருவின் திருமணமும் முடிந்து அவர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்தார்கள்.
எனது மகனின் முதல் பிறந்தநாளை, எனது இசையின் மூலம் கிடைத்த பணத்தில் நாங்கள் துவங்கியிருந்த அந்த ஆதரவற்றோர் பள்ளியில், அங்கிருந்த சின்னச்சின்ன குழந்தைகளுடன் கொண்டாடிக்கொண்டிருந்தோம் நானும் ஷ்யாமும். இசைப்பிரியன் அந்த குழந்தைகளுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
என்னை வாழவைத்த இசை இந்த பூமியில் இருக்கும் வேறு சில ஆதரவற்ற குழந்தைகளையும் வாழ வைப்பதை எண்ணி மகிழ்ந்து நின்றிருந்தேன் நான்.
நிறைந்தது!
error: Content is protected !!