Skip to content
Post Views: 4,611
அத்தியாயம் 4
இரவு அனைவரும் தூங்கிய பின், அருணா குருவிடம் ”நாம எல்லாத்தையும் விட்டுட்டு போய்டலாம். எங்கயாவது போய்டலாம். இவங்க படிப்பு, பணம் எதுவும் வேண்டாம் “ என்றாள் மெல்ல கந்தகுருவிடம்.
Advertisement
“ரொம்ப களைப்பா இருக்க அருணா, எனக்கும் முடியலை, நாளைக்கு யோசிப்போம். எதுவா இருந்தாலும் சேர்ந்து முடிவெடுப்போம். சேர்ந்து சாமாளிப்போம். இப்ப தூங்குவோமே?” என்றான் சோர்வாக.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் கண்களை மூடிக்கொண்டாள்.
Advertisement
Advertisement
எத்தனை பெரிய மகிழ்ச்சியோ, துக்கமோ, எத்தனை நாட்கள் தூங்காமல் விழித்திருக்க முடியும். அவர்களை அறியாமலே இருவரையும் நித்திரை ஆட்கொண்டது.
காலை ஏழு மணிக்கு தான் இருவரும் எழுந்தனர். தூங்கி எழுந்தது இருவருக்கும் சற்று தெளிவை கொடுத்தது. “எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கலை. நான் வெளியே வரலை” என்றாள் அருணா.
Advertisement
அவளை வற்புறுத்தாமல், குரு மட்டும் வெளியே வந்தான். நால்வரும் கிளம்பி தயாராக இருந்தனர்.
“நாங்க புறப்படறோம் குரு. இரண்டு பேரும் உடம்பை பார்த்துக்கோங்க. எவ்வளவு கோபமா இருந்தாலும் பேசாம இருக்காதீங்க. நீரடிச்சி நீர் விலாகாது” என்றார் வடிவேலு.
‘சரி’ என்று தலை அசைத்து கொண்டான்.
ஆனந்தன் ஒன்றும் கூறாமல் குருவின் கையை மட்டும் பிடித்து கொண்டார்.
“சாரி மாமா, நடந்தது எங்களை ரொம்ப பாதிச்சிடுச்சு. எங்களை மீறி வார்த்தைகள் வந்துடுது.” என்றான் அவனாகவே.
“மகளை சரியாக பார்க்காமல் விட்டுவிட்டோமோ? தேவைப்படும் போது அவளுக்கு துணை நிற்காமல் போய் விட்டோமோ?” என்று குற்றவுணர்ச்சியில் கண்கள் கலங்கியது அவருக்கு.
“என்னைவிட அவளுக்கு காயம் அதிகமா இருக்கு மாமா. மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி, நான் பத்திரமா பார்த்துக்கிறேன் மாமா. அவளுக்கு தேவையான ஸ்பேஸ் நாம கொடுக்கத்தான் வேண்டும்” என்றான் குரு.
குருவின் வார்த்தைகள் ஒருவிதத்தில் ஆனந்தன் மனதிற்கு ஒரு நிம்மதியை கொடுத்தது என்பது தான் நிஜம். மகளை மருமகன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை வந்தது அந்த தந்தைக்கு.
‘சரி’ என்று அமைதியாக தலை அசைத்துக்கொண்டார்.
அம்மாக்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை. நாங்கள் என்ன செய்துவிட்டோம்? என்று ஆதங்கம். குருவும் இருவரிடமும் பேசி கொள்ளவில்லை.
‘அருணா வெளியே வருகிறாளா’ என்று ரூம் கதவையே திரும்பி திரும்பி பார்த்தனர்.
“நைட் அவ ரொம்ப நேரம் கழிச்சு தான் தூங்கினா. எழுப்ப வேணாமே?” என்றான் பொதுவாக.
“ரொம்ப சப்போர்ட் பண்ணாத குரு. என் பொண்ணை பத்தி எனக்கு தெரியும். முழிச்சிட்டே தான் உள்ளே உட்கார்ந்துட்டு இருப்பா. நாலு நாள் தாக்கு பிடிக்கிறாளான்னு பார்க்கிறேன். முடியலன்னு என் கிட்ட தான் வந்து நிக்கனும்“ என்றார் மஞ்சுளா மகள் வெளியே வராத கடுப்பில். இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில், மகள் தன்னிடம் ஆறுதல் தேடவில்லையே என்ற நிதர்சனம் அவருக்குள் ஒரு இயலாமையை கொடுத்தது.
“அப்படி நீங்க வந்தா ஏன் வந்தீங்கன்னு நாங்க யாரும் கேக்க மாட்டோம். அதனால முடியலைன்னா யோசிக்காம கிளம்பி வந்து சேருங்க” என்றார் அஞ்சனா அவர் பங்கிற்கு.
பின் நால்வரும், குருவிடம் விடைபெற்று கிளம்பினார்கள்.
அதன் பின்னரே, அருணா எழுந்து வந்தாள். “இரு அருணா நான் போய் பால் வாங்கிட்டு வந்துடறேன்” என்று கிளம்பினான்.
இவனை பார்த்ததும், அக்கம் பக்கம் இருப்பவர்கள் வந்தார்கள். என்ன உதவி வேண்டும் என்றாலும் கேட்குமாறு கூறிச் சென்றார்கள். அன்றைய காலை உணவு எதிர்த்த வீட்டு கன்னடத்து அம்மா கொடுத்து சென்றார்.
அன்று உதவி செய்த மூதாட்டி, பத்து மணி போல வந்தார். அப்பொழுது தான் அவரது பேத்தியும் அவள் கணவனும் அலுவலகம் சென்றனர்.
அந்த பாட்டியின் பெயர் கம்லா. கம்லா பாட்டிக்கு ஒரே ஒரு பெண் மட்டுமே. அவரது மகள் வயிற்றில் இருக்கும் பொழுதே அவரது கணவர் இறந்துவிட்டார். அவரது மகள் கரிஷ்மாவிற்கு இரண்டு பிள்ளைகள். ஆரவ், அனன்யா. அனன்யா தான் இவர்கள் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டில் இருப்பவள்.
ஐந்து வருடங்கள் கழித்து கர்ப்பமாக இருக்கிறாள் அனன்யா. அதனால் அவளது பெற்றோர்கள் உடனிருந்து அவளை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களது மகனும் மருமகளும் அமெரிக்காவில் இருக்கின்றனர். மருமகளுக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர்கள் மூன்று மாதம் அங்கே சென்றிருக்கிறார்கள். அவர்கள் வரும்வரை பாட்டி பேத்திக்கு துணைக்கு நிற்கிறார்.
பேத்தி வேலைக்கு சென்ற பிறகு அருணாவை பார்க்க வந்துவிட்டார் கம்லா பாட்டி.
அப்பொழுது தான் கந்தகுருவும், அருணாவும் எதிர்த்த வீட்டில் இருந்து வந்த உணவை உண்டு முடித்து அமர்ந்தனர்.
(பாட்டியுடனான சம்பாஷணைகள் ஹிந்தியில் நடந்தது)
பாட்டி பொதுவாக நலம் விசாரித்து வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தார். பின் வீட்டு வேலைக்கு வரும் பெண்ணை அழைக்க சொன்னார் குருவை. நிலைமையை அழகாக கையில் எடுத்துக்கொண்டார். அருணாவை அழைத்து கொண்டு, அவளுக்கு குளிக்க உதவி செய்தார்.
இலகுவான காட்டன் நைட்டி அணியச்செய்து தலையை அவரே சீவி விட்டார். மருந்து மாத்திரை இருந்தால் கொடுக்கும்படி குருவிடம் கூறி, அவளை ஹாலில் அமர சொன்னார். அதற்குள் குருவும் குளித்து வந்திருந்தான்.
பின் குருவை படுக்கை விரிப்பு, திரை சீலைகள் என்று எல்லாம் மாற்ற செய்தார். அதற்குள் வேலை செய்யும் பெண் வரவும், அவளை வீட்டை பெருக்கி, துடைக்க சொன்னார்.
பின், துணிகளை எல்லாம் மெஷினில் போடுமாறு கூறினார். துவைத்த துணிகளை வேலை செய்யும் பெண்மணி காய போட்டார். அதற்குள் குருவை சென்று காய்கறிகள் வாங்கி வருமாறு அனுப்பினார்.
கேட்காமலே உதவி செய்யும் குணம் எத்தனை பேரிடம் இருக்கும். பாட்டியின் செயலில் இருவரும் நெகிழ்ந்து இருந்தனர்.
பின் அவரே பாசிப்பருப்பு, அரிசி, வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம் எல்லாம் சேர்த்து குழைவாக கிச்சடி செய்தார். நெய் ஊற்றி, சற்று ஆறவைத்து அருணாவிற்கு கொடுத்தார்.
நீங்களும் சாப்பிடுங்கள் என்றதற்கு, “அங்கே ரொட்டி இருக்கு” என்று மறுத்துவிட்டார். குழந்தை விஷயம் தவிர்த்து பொதுவாக கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அவருக்கு தமிழ்நாட்டு வழக்கம் தெரியவில்லை என்றாலும், அவரது அனுபவம் இவர்களுக்கு பெரும் துணையாக அமைந்தது.
நான் போய் சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வு எடுக்கிறேன். இரவு அங்கேயே சமைத்து கொடுத்து விடுகிறேன் என்றார் பாட்டி.
“ரொம்ப தேங்க்ஸ் பாட்டி. இன்னிக்கு நீங்க துணையா இருந்தது எங்களுக்கு ஒரு பெரிய தெம்பா இருந்தது. இனி நானே பார்த்துக்கிறேன் பாட்டி. நீங்க கொஞ்சம் என்ன செய்யனும் எப்படி செய்யனும்னு அப்பப்ப சொன்னாலே போதும் பாட்டி” என்றான் மனமார உணர்ந்து.
என்ன மாதிரி உணவு கொடுப்பது என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அவர் , உப்பு காரம் குறைவாக, குழைவாக, அதிகம் சூடு இல்லாமல், கொடுக்க சொன்னார்.
இருவரையும் சற்று ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு சென்றார்.
அன்றைய தினம் அப்படியே அமைதியாக சென்றது. இரவும் எளிமையாக உண்டுவிட்டு இருவரும் தூங்க சென்றனர்.
நல்லிரவில், அருணாவிற்ரு பால் கட்டிக்கொண்டது. வலி அதிகமாகி காய்ச்சல் வந்து அனத்த தொடங்கினாள் அருணா.
அதில் விழித்த கந்தகுரு பயந்துவிட்டான். என்ன செய்வது என்று புரியவில்லை. எழுந்து சென்று முகம் கழுவிக்கொண்டு வந்து அருணாவை மெல்ல எழுப்பினான்.
பால் வற்றுவதற்கு மருத்துவர் மாத்திரைகள் கொடுத்திருந்தார். இருந்தாலும், இப்படி ஆக வாய்ப்பு உள்ளது என்று சொல்லியே இருந்தார்.
மருத்துவர் கூறியிருந்த படி, சூடு நீர் வைத்து இருவரும் சேர்ந்து கட்டிய பாலை மெல்ல வெளியே எடுத்தனர்.
“நம்ம தங்கத்துக்கு ஒரு தடவை கூட இதை கொடுக்க முடியாம போச்சே குரு” என்று வெடித்து அழுதாள் அருணா.
குருவிற்கு மனதை யாரோ கை கொண்டு கசக்கி பிழிவது போல வலித்தது.
“ஏற்கனவே காய்ச்சல் அடிக்குது அருணா. அழுகாதாம்மா, ப்ளீஸ்” என்று மனைவியை தன் வயிற்றோடு கட்டி அணைத்து கொண்டான்.
பாலை வெளியேற்றியதில் வலி சற்று குறையுவும், காய்ச்சலும் குறைந்தது. அப்படியே அமைதியாக படுத்துவிட்டனர் இருவரும்.
எப்பொழுது முடியும் இந்த வலியும் வேதனையும் என்று தெரியவில்லை இருவருக்கும். எப்படி இதை கடந்து வரப்போகிறோம் என்று அஞ்சினார்கள்.
மறுநாளும் கம்லா பாட்டி சற்று நேரம் வந்து துணை இருந்தார்.
சோர்ந்து இருந்த இருவரிடமும், “பிறப்பும் இறப்பும் நம்ம கையில் இல்லை. ஆண்டவரிடம் உங்கள் கவலையை ஒப்படைத்துவிடுங்கள். காலம் தான் உங்க காயத்திற்கு மருந்து. நான் இரண்டு மாத கருவை சுமந்திற்கும் போது என் கணவர் என்னைவிட்டு போய்விட்டார். ‘பால்வித்வா’ அப்படின்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க. ஆனால், நான் வீட்டிற்குள் முடங்கிவிடாமல் படித்தேன். பல எதிர்புகளை தாண்டி படித்தேன். ஆசிரியராக வேலை செய்து, என் மகளை வளர்த்தேன். துக்கத்துல துவண்டு போகக்கூடாது. அதில் இருந்து மீண்டு வரனும். பெண் சக்தியின் சொரூபம். நிச்சயம் உங்கள் மகள் உங்களுக்கு சக்தியை கொடுத்து விட்டு தான் சென்றிருப்பாள். தைரியமாக இருக்கனும்” என்று அருணாவிற்கும் கந்தகுருவிற்கும் ஆறுதல் கூறினார்.
பாட்டியின் ஆறுதலும் அனுபவமும் இருவரையும் தாங்கி பிடித்தது.
அன்று மாலை, அருணா “நான் சொன்னதை யோசிச்சு பார்த்தீங்களா குரு” என்றாள்.
“யோசிச்சேன் அருணா, எங்காவது போகனும்னா, ஆன்சைட் கேட்டு பார்ப்போமா ஆபீஸ்ல? அப்படியே கிடைச்சாலும் இரண்டு பேருக்கும் கிடைக்குமா தெரியலையே? ஒருத்தருக்கு கிடைச்சாலும் நம்ம லெவெல்க்கு கிடைக்கும் சம்பளம் இரண்டு பேருக்கும் அங்கேயே இருக்க போதுமா?”
“நான் கேட்டது உங்களுக்கு புரியலை. நமக்கு இந்த வேலை, பணம் எதுவுமே வேணாம். வேற எங்கயாவது போய்டலாம்”
“அம்மாங்க நேத்து பேசினது மனசுல வச்சி சொல்றீயா? படிக்க வச்சது அவங்க தான், ஆனாலும் நம்ம நம்ம உழைப்பால தானே சம்பாதிக்கிறோம். அவங்க பேச தெரியாம பேசுறாங்க. விடு அருணா”
“இல்ல குரு, எனக்கு யார் மேலயும் கோவம் இல்ல. எனக்குள் ஒரு வெறுமையை உணர்றேன். கை, கால் எல்லாம் விலங்கு பூட்டுன மாதிரி இருக்கு. மூச்சு முட்டுது. எல்லாத்துல இருந்தும் தூரமா ஓடனும் போல இருக்கு. எப்படி சொல்றதுன்னு தெரியல. இந்த விலங்குகளை எல்லாம் உதறி தள்ளிட்டு போய்டணும் போல” என்று பரிதவிப்புடன் கணவனை பார்த்தாள்.
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை அருணா. உன்கூட துணையா இருக்கனும்னு மனசார நினைக்கிறேன். ஆனாலும் எல்லாத்தையும் விட்டிட்டு எங்க போறது?”
“யோசிப்போம் குரு, ஒரு வழி கிடைக்கும். முதல்ல எல்லாத்துல இருந்தும் வெளிய வரனும். நம்ம அக்கௌண்ட்ஸ் எல்லாம் பார்ப்போம். எவ்வளவு லோன் இருக்கு? எவ்வளவு சேவிங்ஸ் இருக்கு? இந்த வீடு கார் எல்லாத்தையும் வித்தா எவ்வளவு கிடைக்கும்? ஆபீஸ்ல பேப்பர் போடனும். பேப்பர் போட்ட உடனே ரிலீவ் ஆகா முடியுமா? எல்லாம் பார்ப்போம் “ என்றாள்.
அடுத்த மூன்று நாட்கள் இது அனைத்தையும் சரி பார்த்தனர் இருவரும்.
அருணா ஏற்கனவே மட்டர்னிட்டி லீவில் செல்ல இருந்ததால், அவளிடம் பெரிய பொறுப்புகள் இருக்கவில்லை. அதனால் அவளை உடனே ரிலீஸ் செய்யலாம் என்று கூறினார்கள். குரு தான் செய்து கொண்டிருந்த வேலைகளை மற்றொருவரிடம் ஒரு வாரத்தில் ஒப்படைத்து விட்டால், அவனும் செல்லலாம் என்று கூறினார்கள்.
அதற்காக குரு ஒரு வாரம் அலுவலகம் சென்று வந்தான். கம்லா பாட்டியின் துணையுடன் அந்த வாரத்தை சாமாளித்தனர்.
அருணாவின் பள்ளித் தோழி மாலினி, அருணாவின் நிலையை கேள்வி பட்டு அவளை பார்க்க வந்திருந்தாள் அன்று. பேசிக்கொண்டிருக்கும் போது, “இந்த அப்பார்ட்மெண்ட் ரொம்ப நல்லா இருக்கு அருணா. இங்கேயே ஒரு பிளாட் கிடைச்சா சொல்லு. விலை முன்ன பின்ன இருந்தாலும் பரவாயில்லை. சென்னைல இருந்து அடுத்த மாதம் என் வீட்டுக்காரருக்கு பெங்களூரு ட்ரான்ஸபர் கிடைச்சுடும். இந்த ஏரியா எனக்கு பிடிச்சிருக்கு” என்றாள்.
“நாங்களே வேற ஊருக்கு போறதா தான் இருக்கோம் மாலினி. எங்க வீடு ஓகேவான்னு பாரு”என்றாள் அருணா.
அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. குடும்பத்தாரிடம் கலந்துகொண்டு சொல்வதாக சொல்லிச் சென்றாள்.
அடுத்த இரண்டு நாட்களிலே அவர்கள் வீட்டை பார்த்து வாங்கிக்கொள்வதாக கூறினார்கள். நினைத்ததை விட அதிக விலைக்கு வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.
அதே போல அவர்களது காரையும் தாங்களே வாங்கிக்கொள்வதாக கூறினார்கள்.
வீட்டை விற்று வரும் பணம், லோன் எல்லாம் செட்டில் செய்த பின் மிச்சம் கையில் நிற்கும் அமௌன்ட், மற்ற பி.எப்..சேவிங்ஸ் எல்லா கணக்குளையும் பார்த்தால், இருவருக்கும் சேர்த்து சுமார் முப்பத்தி நான்கு லட்சங்கள் கையில் இருப்பது போல வந்தது கணக்கு.
“இந்த காசை வைத்து நாம எதாவது பிசினஸ் செய்யலாம் அருணா” என்றான் கந்தகுரு மகிழ்ச்சியாக.
“வேணாம், அவங்க மூலமா வந்த பணம் “ என்றாள் அருணா.
“இது நம்ம உழைப்பு அருணா. அதுவும் இல்லாமல் வீடு வித்த காசு படிப்புனால கூட இல்லையே? “
“நீங்க சொல்றது சரி, அதனால் இதுல இருந்து ஒரு பத்து சதவீதம் மட்டும் எடுத்துப்போம். மிச்சத்தை கொடுத்துட்டு கிளம்புவோம். வெறும் கைய வச்சு ஒன்னும் பண்ண முடியாது இல்லயா”
“பத்து சதவீதம் நாலு லட்சம். அந்த பணம் எல்லாம் பத்தாது. நீ நினைக்கிற மாதிரி இல்ல அருணா “
“போதும், முதல்ல எல்லாத்தையும் செட்டில் செய்ய ஏற்பாடு செய்வோம்”
கந்தகுருவிற்கு முழுதாக சமாதானம் ஆகவில்லை.
“அப்பா அம்மாகிட்ட சொல்லனும் இல்ல?” என்றான்.
அவனுக்கு பயம், எப்படி இதை கூறுவது என்று. சும்மாவே சாமி ஆடுவார்கள். இப்பொழுது சலங்கை கட்டி ஆடுவார்கள். நினைக்கும் பொழுதே தலை சுற்றியது.
“உங்களுக்கு லாங் டேர்ம் ஆன்சைட் கிடைச்சுடுச்சுன்னு சொல்லுங்க. பத்து வருஷம் அங்கேயே இருக்க போறோம். அதனால் இங்க எல்லாத்தையும் செட்டில் பண்ணப்போறோம்னு சொல்லுங்க” என்றாள் கூலாக..
“எங்க அப்பா கிட்டயும் உங்க அப்பாகிட்டயும் மட்டும் பேசுங்க. அம்மாக்களை முடிஞ்சளவு உள்ளே விடாதீங்க” என்றாள்.
அருணா சொன்னதை போலவே குருவும் செய்தான். அருணா காய்களை சாதுர்யமாக நகர்த்தினாள்.
மனைவியின் இந்த புது பரிமாணத்தை அவன் மிகவும் ரசித்தான்.
“தூர தேசத்துல எப்படி தனியா இருப்பீங்க?” என்று ஆரம்பித்த அம்மாக்களிடம், “இந்த வயசுல கஷ்டப்பட்டா தானே பின்னாடி நல்லா இருக்க முடியும்னு சொல்வீங்க. நாங்க அங்க சமாளிச்சுக்குவோம்” என்று அவர்களின் வார்த்தைகளையே திருப்பி சொல்லி அவர்கள் வாயை அடைத்து விட்டாள்.
அம்மாக்களின் அணைத்து கேள்விகளையும் தனது பதிலால் கிளீன் போல்ட் செய்தாள்.
“சரியான கேடி அருணா“என்றான் கந்தகுரு காதலாக.
அவனுக்கு இப்பொழுது இது சரியா தவறா என்று யோசனை இல்லை. உதவ இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. மனசு புத்துணர்ச்சியாக இருந்தது என்னவோ நிஜம்.
வேலையை விட்டது பற்றி கூறவில்லை இருவரும்.
முன் போல தங்களிடம் அனைத்தும் கேட்டு செய்யவில்லை என்ற குறை அம்மாக்கள் இருவருக்கும். இருந்தாலும், நல்ல வாய்ப்பு என்றதும், அவர்களை அவர்கள் இஷ்டத்திற்கு விட்டுவிட்டனர்.
அருணாவின் உடம்பு ஓரளவிற்கு தேறியது. மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்ற போது, “எல்லாம் நார்மலா இருக்கு. கொஞ்சம் அக்கறையா உடம்பை பார்த்துக்கோங்க. நல்ல மனநிலையும் சத்தான உணவு, உடல் பயிற்சி எல்லாம் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. ஆல் தி பெஸ்ட்” என்று விடைகொடுத்தார் மருத்துவர்.
பதினைந்து நாட்களில் அணைத்து செட்டில்மெண்ட்டுகளையும் முடித்துவிட்டனர்.
“அருணா, எல்லாம் செய்தாச்சு. அடுத்து?”
“நம்ம பேர்ல இருக்க அமௌண்ட்டை ஆளுக்கு பதினைந்து லட்சம்ன்னு உங்க அப்பா பேருக்கும், எங்க அப்பா பேருக்கும் கொடுக்கிற மாதிரி ரெடி பண்ணிடுங்க. மீதம் இருக்க நாலு லட்சம் நம்ம பேர்ல இருக்கட்டும்.”
“சரி, அடுத்து ?”
“அத முடிச்சிட்டு நாம ஊருக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு கிளம்புவோம்”
“எங்கே கிளம்பறது?”
“நீங்க நாலு ஊரு செலக்ட் பண்ணுங்க. நான் நாலு ஊரு செலக்ட் பண்றேன். சீட்டு குலுக்கி போட்டு எந்த ஊர் வருதோ அங்கே போவோம்”
“என்ன விளையாட்டு அருணா. எனக்கு நெஞ்சு பட படன்னு வருது”
“கூல், இப்ப தான் லைப் த்ரில்லிங்கா இருக்கு. அருணா இருக்க பயமேன்” என்றாள் மலர்ந்து சிரித்துக்கொண்டே.
நீண்ட வருடங்களுக்கு பிறகு அருணாவிடம் இந்த சிரிப்பை பார்க்கிறான். சிறிய குழந்தையாய் இருக்கும் போது இப்படி தான் அருணா கலகலவென எப்பொழுதும் சிரிப்பாள்.
இந்த சிரிப்புக்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று தோன்றியது கந்தகுருவிற்கு.
“தாத்தா.. நீங்க தான் நல்ல வழி காட்டனும்” என்று மானசீகமாக தாத்தாவிடம் வேண்டிக்கொண்டான்.
error: Content is protected !!