Skip to content
Post Views: 6,871
போன் கால்கள் வரத் தொடங்கி விட்டன!
வித்யுத் ராகவிற்கு மொட்டையடித்து காது குத்தும் வைபவம் வைத்திருந்தாள் மயூ!
இரண்டு நாட்கள் முன்பே குலதெய்வம் கோவிலுக்கு சென்று குழந்தைக்கு மொட்டையடித்து கோவில் சிறப்பு பூஜை எல்லாம் செய்துவிட்டு வந்திருந்தார்கள்!
நிலாவின் வீட்டிலிருந்து எல்லோரும் கோவிலுக்கு வந்துவிட்டு, நேரே அவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள்.
Advertisement
காதுகுத்து இங்கு ஒரு மண்டபத்தில் ஏற்பாடு செய்து இருப்பதால், இனி தான் எல்லாம் வீட்டிற்கு வருவார்கள்!
இப்போது வித்யுத்திற்கு மூன்று வயது தொடங்கியிருக்கிறது!
இந்த இரண்டு மூன்று வருடங்களில் தான் எத்தனை மாற்றங்கள் அனைவரது வாழ்க்கையிலும்!
Advertisement
காரணம் மயூ!
Advertisement
செல்வத்திற்கு திருச்சியில் ஒரு தனியார் தொழிற்பேட்டையில் இடம் பிடித்துக் கொடுத்து, சொந்தமாகவே ஒரு பேப்ரிகேசன் கம்பெனி தொடங்கி கொடுத்தாள்!
இதில் அவன் அம்மா சுசீலா அப்படியே ஆப் ஆகிவிட்டார்! அவருள்ளும் நல்ல மனமாற்றம் மயூவைக் கண்ட பிறகு!
மதிக்கு ஒரு பொட்டிக்!
Advertisement
வளர்மதிக்கு சொந்தமாக ஒரு பெரிய யூனிசெக்ஸ் பியூட்டி பார்லர் தொடங்க உதவினாள்!
அன்புக்கு சில லோட் ட்ரக்குகள் வாங்க உதவி செய்து, அவன் இப்போது சொந்தமாக ஒரு பார்சல் சர்வீஸ் நடத்துகிறான்!
ராகவ் பேரில் ஒரு சாரிட்டி ட்ரஸ்ட் அமைத்து, அதன் மூலம் கிராமத்தில் இருக்கும் நல்ல அத்தலெட்களை ஊக்கப்படுத்தும் உதவிகளை செய்தாள்!
அதற்கு சுதா தான் ட்ரஸ்ட்டி!
அதே மாதிரி அவள் அப்பா தமிழரசு பேரில் ஒரு ட்ரஸ்ட் அமைத்து. தமிழில் முதல் மதிப்பெண் பெறும் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை கொடுக்க செய்தாள்! அதற்கு வசந்தா ட்ரஸ்ட்டி!
சோம்பேறி அருணையும் அவள் விட்டுவிட வில்லை!
அவருக்கென்று ஒரு ஆண்கள் சர்ட் பிராண்ட் ஒன்றை ஆரம்பித்து, அந்த யூனிட்டிற்கு அவரையே ப்ரொடக்சன் மேனேஜர் ஆக்கி விட்டாள்!
அவருக்கு சம்பளம் என்று கொடுக்காமல், ஒர்க்கிங் பார்ட்னர் அந்தஸ்தில் வைக்க, நெகிழ்ந்து போய் விட்டார் அவர்!
எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு அவருள் மாற்றங்கள்!
ரொம்பவும் பொறுப்பாக அந்த யூனிட்டைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்!
இப்படி தன் மகனின் உறவுகள் அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொடுத்தாள்!
கூடப் பிறந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பது ஒன்றும் ஆச்சர்யப்படும் விசயமே இல்லை!
ஆனால் எதுவரை என்றால், ஆணோ, பெண்ணோ கல்யாணம் ஆகும் வரை தான்!
அதற்கு பின்னும் அது தொடர தடையாக இருப்பது பெரும்பாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தாம்!
அதன் காரணமாக தன் மகன் ஜீவாவின் சொந்தங்கள் விலகி விடக் கூடாது என்று நினைத்தவள், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வேலையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டாள்!
சும்மா எல்லோரையும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக இருக்க செய்து, அவர்களையும் வாழ வைக்க முடியும் வித்யா இப்போது இருக்கும் வசதிக்கு!
ஆனால் மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக்கொடு என்பார்களே அது போல , அவர்கள் சொந்தக்காலில் நிற்பது தான் அவர்களுக்கும் கவுரவம் என்றே நினைத்தாள் மயூ!
அவர்களும் இயல்பிலேயே கடும் உழைப்பாளிகள், ஒரு துருப்புக் கிடைத்தவுடன் பற்றிக் கொண்டு மேலே வந்து விட்டார்கள்!
ஜீவாவும் மயூவும் எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்!
அவர்கள் இப்போது இருக்கும் நிலைக்கு எப்படி எப்படியோ வாழலாம்! ஆனால் அவர்கள் இந்த வாழ்க்கையையே ரசித்து வாழ்ந்தார்கள்!
இப்போது ஜீவாவின் சாப்ட்வேர் கம்பெனி, இப்போது அமெரிக்காவின் பங்கு சந்தையான நாஸ்டாக்கில் இடம்பெற்று விட்டது!
அதற்கு துணையாக இருந்தது வாகீசன்! ஜீவாவின் தாய்மாமன்!
வித்யாவுக்கு அண்ணனாக அவன் இதுவரை ஒன்றுமே செய்திருக்க வில்லை!
ஆனால் அவள் ஒரு நாளும் அதை சொல்லி காட்டியதே இல்லை!
இப்போது அவனுக்கும் ஜீவாவின் கம்பெனியில் கவுரவப் பதவிக் கொடுத்திருந்தான் ஜீவா, அம்மாவின் சொல்படி!
அதனால் இப்போது வாகீசன் அதற்கு பரிகாரமாய் அவனின் ஒட்டு மொத்த தொழில் அனுபவத்தையும் அப்படியே ஜீவாவுக்குள் இறக்கி விட்டான்!
பணம் காசு சீராய் கிடைப்பதை விட மிகப்பெரிய சீராக வித்யா இதை தான் கருதினாள்!
பயன்?
போன மாதம் இளம் தொழிலதிபர் விருதை அவனும், சிறந்த பெண் தொழிலதிபர் விருதை வித்யா மயூரியும் என்று அம்மாவும் பிள்ளையும் ஒரே விழா மேடையில் விருதுப் பெற்றது அனைத்து சோசியல் மீடியாவிலும் வைரலானது!
வெண்ணிலாவும் அவள் வேலையை விட்டு விட்டாள். இப்போது மாமியாரின் கார்மென்ட் பிசினஸ்களில் அவளும் ஒரு முக்கிய அங்கம்!
“ஹாய். பெரியப்பா!” என்ற பேரனின் குரல் கேட்டு நிமிர்ந்தாள் மயூ.
நிலா வீட்டில் இருந்து எல்லோரும் வந்து விட்டார்கள்!
“ஹாய் நிவிண்ணா, அக்கா! என்று ஓடிச்சென்று அக்கா அண்ணன்மார்களை கட்டிக் கொண்டான் வித்யுத்!
வீடே அல்லோகலப்பட்டது உறவுகளால்!
நிலாவின் முகத்தில் ஒரே உற்சாகம்!
அடுத்து வாகீசன் குடும்பமும் வாணியின் குடும்பமும் லதாவோடு வந்து விட்டார்கள்!
உறவுகள் வந்தால் இந்த பிளாட் பத்தாது என்று அடுத்த ப்ளாட்டையும் விலைக்கு வாங்கியிருந்தாள் மயூ!
ஏனோ அவளுக்கு தனியாக பெரிய வீட்டுக்குப் போக மட்டும் விருப்பமே இல்லை!
வந்தவர்களை பக்கத்து பிளாட்டில் தங்க வைத்தாள்.
அடுத்த நாள் காது குத்து விழா!
விழாவில் வீட்டு ஆட்களாக வரிந்து கட்டிக் கொண்டு சகலைகள் உதவினார்கள்!
வான்மதி, வளர்மதி இருவரும் வெண்ணிலாவுக்குப் பக்கத் துணையாக இருந்தார்கள்!
வாணி, இவர்களோடு ரொம்பவும் ஒட்டவில்லை என்றாலும், குறைவாகவும் நினைக்க வில்லை!
காரணம் அவளுக்கும் காலம் தந்திருந்த மனப்பக்குவம், மற்றும் யாரையும் இப்போது இருக்கும் நிலையை வைத்து குறைவாக எண்ணி விடக்கூடாது என்ற அனுபவப் பாடம்!
இப்போது வித்யாவின் செல்வநிலை, வாணியால் ஏணிப் போட்டு ஏறினாலும் எட்ட முடியாத உயரம்! ஆனாலும் வித்யா அதே வித்யா தான்!
விழாவிற்கு சியாம் குடும்பம், ராகவின் பெரியப்பா குடும்பம், ராகவின் பழைய நண்பன் சாப்பாடு தூதுபோன கணேஷ், கெவின் குடும்பம், அவனது மாமனார், என்று அனைவரும் வந்து வாழ்த்தினர்!
செலின் தமிழ்செல்வனும், மாமியும் அவர்கள் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்!
விழா எந்த குறைவும் இல்லாமல் நல்லபடியே நடந்து முடிந்தது!
இரவு எல்லோரும் உணவு முடித்து, ரொம்ப நேரம் வரை அரட்டைக் கச்சேரி நடந்தது!
மாமியும் கூட ரொம்ப நேரம் அவர்களோடு பேசிக்கொண்டிருந்து விட்டு, “மயூ சுத்திப் போடணும்டி” என்று சொல்லி முழு பூசணிக்காய் கொண்டு வர சொல்லி எல்லோரையும் உட்கார செய்து திருஸ்டி சுத்திவிட்டு அவர்கள் வீட்டு டிரைவரை வரச்சொல்லி, யாருக்கும் பாதகமில்லா இடத்தில் கொண்டுபோய் உடைக்க சொல்லி அனுப்பினார்!
பின் அவரும் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு தூங்க சென்றார்!
இரவு வெகு நேரம் வரை சகலைகளின் அரட்டைக் கச்சேரி, சீண்டல்கள், கலாய்த்தல்கள் நடந்தன!
பின் வாகீசன் குடும்பமும் வாணியின் குடும்பமும் பக்கத்தில் இருக்கும் இன்னொரு பிளாட்டிற்கு தூங்க சென்றுவிட, இங்கே அனைவரும் ஹாலில் இருக்கும் சோபாவை நகர்த்தி விட்டு, நீளமாக பாய்களை விரித்து படுத்துக் கொண்டு இன்னமும் பேசிக் கொண்டே இருந்தார்கள்!
வான்மதி, வளர்மதி, வெண்ணிலா, வசந்தா, சுதா ஒரு பக்கம் என்றால், செல்வம், நட்ராஜ், அன்பு, ஜீவா ஒரு பக்கம்!
குழந்தைகள் நிவின், நிவேதாவோடு மதியின் இரட்டையர்கள் நிகிலன் அகிலன், அன்புவின் மகள் ஸ்ரீயும் படுத்துக் கொண்டிருந்தார்கள்!
இப்போது பக்கத்து பிளாட்டிற்கு தூங்க சென்ற வாகீசனின் பேரன் அஷ்வந்த்தும் ஒரு தலையணையை எடுத்துக் கொண்டு இங்கேயே வந்து விட்டான்!
அருண் மட்டும் ஒரு சோபாவில் தூங்கினார்!
உள்ளே ஒரு ரூமில் தன் கொள்ளுப் பாட்டியோடு தூங்கிக் கொண்டிருந்த வித்யுத் கூட இப்போது நிவின் கூட படுக்க வந்துவிட்டான்!
“பாருடி.. உன் பேரனை, அவனும் அங்க போய்ட்டான்” என்றார் லதா!
“போகட்டும் விடும்மா.. நான் உன் மடியில கொஞ்ச நேரம் படுக்கட்டுமா?” என்று சொல்லி லதாவின் மடியில் தலை வைத்துப் படுத்தாள் வித்யா!
என்ன தான் அவளே பாட்டியாகி விட்டாலும் கூட லதாவுக்கு அவள் கடைக்குட்டி செல்லம் தானே!
“ம்மா.. நான் எதுவும் உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா என்னை மன்னிச்சுடும்மா” என்றாள் வித்யா திடீரென்று!
“நீ என்னடி தப்பு பண்ணின? உன்னை மன்னிக்க? நான் தாண்டி உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்! எனக்கே ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியா தான் இருக்கு! நீ கஷ்டப்படும் போதெல்லாம் கூட இல்லாம, இப்ப நீ நல்லா ஆனப்புறம் உன்கிட்ட வந்திருக்கிறது!” என்றார் உண்மையான வருத்தத்துடன் லதா!
“அப்படியெல்லாம் இல்லம்மா, நீயா போன? நான் தானே விடாப்பிடியாக உன்னை அனுப்பி வச்சேன்! நீ என்ன பண்ணுவ?” என்றாள் வித்யா!
“உன்னோட மனசு யாருக்கும் வராதுடி மயூ..” என்று அவளின் தலையைக் கோதினார் லதா!
“சரிம்மா, நீ தூங்கு, உனக்கு கால் வலிக்கும்! நான் என் ரூமுக்குப் போறேன்” என்று சொல்லிவிட்டு சென்றாள் மயூ!
அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தார் லதா!
அவள் ரூமுக்குப் போனாள் வித்யா!
கட்டிலில் படுத்தவளுக்கு மனம் முழுக்க நிறைவு!
“மாமா, இன்னிக்கு தான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் மாமா!
மித்துவோட கல்யாணத்தை எப்படியெல்லாம் நடத்தணும்னு நான் ஆசைப்பட்டேனோ, அத எல்லாம் இந்த காதுகுத்துல நடத்திட்டேன் மாமா!
அங்க பார்த்தியா மாமா? நம்ம மித்துவுக்கு இப்ப எவ்வளவு சொந்தங்கள்!
என்னை மாதிரியே பார்த்துக்கிற பொண்டாட்டி, அழகான பையன்!
கூடப் பிறக்காத பிறப்பா சகலைகள்! மச்சினிக்கள்!
அப்பா அம்மா ஸ்தானத்தில் மாமனார் மாமியார்!
இந்த பக்கம் வழிக்காட்டியாக தாய் மாமன்!
செலின் அக்கா, சலீம் அண்ணா, சியாம் அண்ணா கெவின் அண்ணா மற்றும் மாமி குடும்பம் மாதிரி நல்ல நட்புக்கள்!
மித்து இப்ப தனியாள் இல்ல மாமா!
எனக்கு மனசு ரொம்ப நிறைவா இருக்கு மாமா!”
என்றவள் கையில் இருந்த மினி ஆடியோ சிஸ்டத்தில் பாட்டு போட்டு கூடவே மிக மெல்லிய குரலில் பாடினாள்!
“குறையொன்றுமில்லை மறை மூர்த்திக் கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா!
….
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா!
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும்
எனக்குக் குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!
வேண்டியதை தந்திட வேங்கடேசன் நீயிருக்க
வேண்டியது வேறில்லை..! என்று அவள் அந்த கண்ணனை நினைத்துப் பாடவில்லை!
அவள் கணவனை நினைத்து அவளின் மாமா ராகவை நினைத்துப் பாடினாள்!
மனம் முழுக்க சந்தோசம்! நிறைவு! சந்தோஷம் அதிகமானா, இப்படி நெஞ்சை முழுக்க அழுத்துமா என்ன? யாரோ முழங்கால்கள் இரண்டையும் வைத்து அவள் நெஞ்சில் அழுத்துவது போல ஒரே அழுத்தம்!
புரண்டு புரண்டுப் படுத்தாள்.
“மாமா, வர்றியா, இப்பவாச்சும் வா மாமா, வந்து என்னைக் கூட்டிட்டு போ! அதான் மித்து நல்லா செட்டில் ஆகிட்டானே! இன்னும் எத்தனை நாளா நான் உன்னை விட்டுட்டு இருக்கிறது?”
“வரேண்டி மயிலு..”
“மாமா வரும் போது நீ பாட்டுக்கு காரை எடுத்துட்டு வந்திடாதே! பைக்கில் வா மாமா, நான் அப்படியே உன்னைக் கட்டிக்கிட்டு வருவேன்!
இப்படி நாம பைக்கில் போய் எவ்வளவு நாள் ஆச்சு! சீக்கிரம் வா மாமா!”
“என்ன இப்படி வலிக்குது!” வித்யா புரண்டு புரண்டு படுத்தாள்!
“மித்துவைக் கூப்பிடலாமா!”
“அவனே இன்னிக்கு பங்க்சன் ஓடியாடி வேலை செய்துட்டு, இப்ப ரொம்ப நேரம் அரட்டை வேற அடிச்சுட்டு இப்ப தான் கண்ணயர்ந்து இருப்பான், அவனை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்!
நீயே மேனேஜ் பண்ணு!”
“என்ன ஆச்சு மாமா, இவ்வளவு நேரம்!”
“இதோ வந்திட்டேண்டி, வா வந்து ஏறிக்கோ”, கால்களைக் கீழே ஊன்றிக் கொண்டு பைக்கில் இருந்தவாறே பேசினான் ராகவ்!
“மாமா, நீ மட்டும் இன்னும் அப்படியே இருக்கே, நான் பாரு பாட்டியாகிட்டேன்!”
“நானும் இப்ப தாத்தா தான்! ஏறு வண்டியில!”
ஏறிக் கொண்டாள்! அவள் மாமாவைக் கட்டிக்கொண்டே வண்டியில் சென்று விட்டாள் ராகவின் மயில்!
—
“மயூம்மா இன்னும் எழுந்திரிக்கலங்க..” என்றாள் நிலா!
“விடு நிலா தூங்கட்டும். நேத்து அவங்களுக்கு டயர்டாகி இருக்கும்!” என்றான் ஜீவா!
“இல்லைங்க, அப்படின்னாலும் இவ்வளவு நேரம் தூங்க மாட்டாங்க!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வித்யுத் அழுதுக் கொண்டே வந்தான்!
“ம்மா. மயூம்மா எழுப்ப எழுப்ப தூங்கிட்டே இருக்காங்க, வா வந்து எனக்கு பிரஷ் பண்ணி விட சொல்லு!”
பேரன் எழுப்பியும் அவள் எழவில்லையா, ஜீவாவுக்கு ஏதோ தப்பாக பட,
“மயூ..” என்று அவனும் சென்று எழுப்பினான்!
பதிலில்லை!
இன்னும் வேகமாக கன்னத்தைத் தட்டி எழுப்பியும் எழாமல் இருக்க, பதட்டமானான்!
இப்போது எல்லோரும் அங்கு வந்து விட்டார்கள் இவன் சத்தம் கேட்டு!
வசந்தாவிற்கு புரிந்து விட்டது!
அவர் வாயைப் பொத்தியபடி வெளியே வர, லதா அலறினார்!
“ஏன்மா, மயூவுக்கு என்னாச்சு?”
அதற்குள் மாமி, வாகீசன், வாணி எல்லோரும் வந்து விட,
மாமியின் கணவர் டாக்டருக்கு போன் செய்து விட்டார்.
அடுத்த ப்ளோரில் இருந்த டாக்டர் உடனே வந்து பார்த்து விட்டு, ஜீவாவின் தோளைத் தட்டிவிட்டு சென்றார்!
“ஆராரோ ஆரிரராரோ தூங்கிப் போனதாரோ!
ஆரோ ஆரோ.. என் தெய்வமே இது பொய் தூக்கமோ?”
“மயூ..” அந்த ப்ளாக்கே அதிரும்படி கத்தி விட்டான் ஜீவா!
நிலாவும் கதறினாள்!
லதா தடுமாறி கீழேயே விழுந்து விட்டார்!
“போயிட்டியாடி, உன் மாமாகிட்டயே போய் சேர்ந்திட்டியா? நீ இத்தனை வருசம் தாக்குப் பிடிச்சதே உன் பிள்ளைக்காக தான்!
அவன நல்ல நிலைக்கு ஆளாக்கிட்டோம்னு திருப்தியில போய்ட்ட!”
லதா கதறித் தீர்த்தார்!
—
எல்லாம் முடிந்து விட்டது!
கூடவே இருந்தார்கள் வெண்ணிலாவின் குடும்பமும் வித்யாவின் குடும்பமும்!
வரும் வழியில் பார்த்தான் ஜீவா, ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்! வித்யா மயூரி ராகவேந்திரன் அவர்களுக்கு என்று அவர்கள் கம்பெனி ஊழியர்கள் அடித்து ஒட்டியிருந்தது!
ஜீவா சிறுவனாக இருந்த போது அது பற்றிக் கேட்டபோது,
”நான் இறந்தாலும் இப்படி போஸ்டர் ஓட்டும் அளவு பெரிய ஆளாகியிருக்கணும், என்கிட்ட வேலை செய்றவங்க இப்படி ஒட்டணும்” என்று சொல்லியிருந்தாள்!
அது நினைவு வந்து அவன் கண்ணைக் கரித்தது!
“டேய்.. டேய்.. மித்து கண்ணா, அழாதேடா, உன் மயூ உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டா!
இங்கேயே தான் இருப்பா!
ஏன்னா ஜீவாவும் நிலாவும் அவளோட உயிர்! அவளோட ஜீவன்!
அது எங்கயும் போகாது! அவ மறுபடியும் உனக்கே மகளா பிறப்பா பாரேன்” என்றார் மாமி அழுதவாறே!
அவர் சொல்வதும் உண்மைதான்!
“அம்மா.. நீ உன் மித்துவுக்காக தான் இத்தனை நாள் உன் மாமாவை விட்டுட்டு இருந்திருக்க! இனியாச்சும் நீ உன் மாமாவோட சந்தோசமா அந்த வானுலகத்தில் வாழு!” நினைத்துக் கொண்டான் ஜீவா!
போட்டோவில் அவள் மாமாவை சேர்ந்து விட்ட சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள் வித்யா மயூரி!
குட்டி எபிலாக்
அடுத்த வருடம்.
“டேய் ஜீவா உனக்கு பொண் குழந்தை பிறந்திருக்காடா!”
நர்சிடம் இருந்து குழந்தையை முதலில் வாங்கிக் கொண்ட மாமி சந்தோசமாக சொன்னார்.
“இன்னிக்கு மகம் நட்சத்திரம்! மயூவோடதும் அது தான்! மயூவே வந்து உனக்கு பொண்ணா பிறந்திட்டாடா!”
“மகம் பிறந்த பொண்ணு ஜகத்தை ஆளுவா!”
ஜகத்தை ஆளுவாளோ இல்லையோ, நம்ம எல்லோர் அகத்தையும் (மனத்தையும்) ஆளுவாள் மயூ!
குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று நிலாவின் அருகே அமர்ந்து அவளையும் கட்டிக் கொண்டான் ஜீவா மிகவும் சந்தோசமாக!
சுபம்!
error: Content is protected !!