Skip to content
Post Views: 4,394
“சின்ன ரூம் தான். மூணு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ இயல்.” அந்த சிறிய சேமிப்பு அறை ஒற்றை ஜன்னலுடன் தாராளமாக ஒருவர் தூங்கி எழும் அளவுக்கு இருந்தது. வீட்டுக்கூடத்தில் வந்திருப்பவர்களை அவன் அன்னை கவனிக்க, அவனே இயலணி தங்க அறையைக் காட்டினான்.
அதுவரை ஏதோ யோசனையில் இருந்தவள் சட்டென சுதாரித்து, “இந்த ரூம் போதும் சார் எனக்கு.” என்று அறைக்குள் நுழைந்து புன்னகை முகமாய் விளித்தவளை பார்த்து தானும் புன்னகைத்தான் அறிவழகன்.
“பாத்ரூம் பின்னாடி இருக்கு, ஃபிரஷ் ஆகிக்கோ. இங்க எல்லாம் காமன் தான், போகும் போதே துண்டெல்லாம் எடுத்துட்டு போயிடு. வேற எதுனாலும் தயங்காம அம்மாகிட்ட கேளு.”
“சரி சார். நான் இருந்துப்பேன், வீட்டுக்கு நிறைய பேர் வந்திருக்காங்க. நீங்க போய் பாருங்க.” சம்மதமாய் தலையசைத்து தான் பார்த்துக்கொள்வதாய் இயலணி சொல்லவும் அந்த அறையைக் கடந்து அதனருகே இருந்த தன் அறைக்குச் சென்றான் அறிவழகன்.
Advertisement
தோளில் மாட்டியிருந்த முதுகுப்பையை கழற்றி கீழே வைத்தவள் அறையை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே ஒரு ஓரமாய் சுவரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்தாள். இரண்டு மணி நேர பயணம் தான் எனினும் காலையே எழுந்து கிளம்பி வந்தது சோர்வைக் கொடுத்தது. கண்களை மூடி சுவரில் சாய்ந்து நீண்ட மூச்செடுக்க, சென்ற வருடம் குடும்பத்துடன் கொண்டாடிய பொங்கல் நினைவு வந்து அலைக்கழித்தது. எத்தனை இனிமையாக கழிந்தது என்றெண்ணும் போதே மனமெல்லாம் பாரம்.
‘ம்ச்… இன்னும் கொஞ்ச நாள் தான் எல்லாம் சரியாகிடும்.’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் ஏதோ நியாபகம் வந்தவளாய் வேகமாக எழுந்து அறிவழகனை தேடிச் சென்றாள். கூடத்தில் அனைவரின் குரலும் கேட்க, அவள் தங்கியிருக்கும் அறைக்கு அடுத்து இருக்கும் அறையைப் பார்த்தாள். அது பூஜையறையாய் இருக்க, சற்று தள்ளி பின்புறம் சென்றாள். அங்கு அறைகள் இரண்டு இருக்க, இரண்டும் ஆளின்றி திறந்து கிடந்தது. யோசனையுடன் பின்கட்டுக்குச் செல்ல, அப்போது தான் குளித்துவிட்டு இடையில் துண்டுடன் பக்கவாட்டில் இருக்கும் செடிகளில் பார்வை பதித்து தலையை துவட்டிக்கொண்டே காலை எட்ட வைத்து வேகமாக நடந்து வந்தான் அறிவழகன்.
சோர்வெல்லாம் நீங்கி புத்துணர்ச்சியாக மலர்ந்த முகத்துடன் வந்தவனைக் கண்டு நொடி நேர சலனம் கொண்டவளாக கொல்லைப் படியில் அப்படியே நின்றுவிட்டாள் இயலணி. அத்தனை நாட்கள் அவள் பார்த்திராத ஒரு பொலிவு அவன் முகத்தில் வசீகரத்தை கூட்டியதோ அவள் மனம் வேகமாக அலசியது. அவள் முடிவுக்கு வரும்முன் அவளை நெருங்கியிருந்தவன், “என்ன இங்க நிக்குற? அங்க லெப்ட்ல பாத்ரூம் இருக்கு.” கழிப்பறை தேடிக்கொண்டு வந்திருப்பாள் என்று அவனாக யூகித்து கைகாட்டிவிட்டு அவளை தாண்டிக்கொண்டு செல்லப்பார்க்க,
Advertisement
“இல்லை… போன் பண்ணனும். நான் உங்களோட இங்க கிளம்பி வந்ததை வேந்தன் சாருக்கு சொல்லவே இல்லை.” என்று அவனை நிறுத்தியிருந்தாள் இயலணி.
Advertisement
“நான் சொல்லிக்கிறேன் இயல்.”
“இல்லை… அவங்களை கேக்காம எங்கேயும் வெளிய போகவேண்டாம்னு சொல்லியிருந்தாங்க. நீங்க கூப்பிடவும் நானும் சொல்லாம வந்துட்டேன்.” என்று தயங்கியபடியே அவள் சொல்ல,
“நாலு நாள் உன்னை அங்க தனியா விட்டுட்டு வர முடியாதுனு தான் இங்க கூட்டிட்டு வந்தேன். சொன்னா புரிஞ்சிப்பான். இங்க உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. பயப்படாம இரு. பொங்கலை கொண்டாடிட்டு ஊருக்கு போயிக்கலாம்.” அவசரமாக ஒரு சமாதானம் அவனிடம்.
Advertisement
இயலின் தலை வேகமாக ஆடியதுடன் அவனுக்கு வழிவிடவென இரண்டடி பின்சென்றது கால்கள். அவள் நகர்ந்ததும் இவன் முன்செல்ல, அவள் விழிகள் அகல விரிந்துகொண்டது. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த சிறு இடைவெளியில் பாம்பு ஒன்று லாவகமாக புகுந்து சென்றது. வெகு அருகே அது ஊர்ந்து சென்றதில் பயந்தவளாய் அலறிக்கொண்டு அவன் முழங்கையை பிடித்து துள்ளிக் குதித்துவிட, ஒன்றும் புரியாத அறிவழகன் கரங்கள் அனிச்சையாய் உயர்ந்து அவள் தோள்களை பற்றியது.
“என்னாச்சு இயல்?” என்று அவன் கேட்கும் போதே, சத்தம் கேட்டு கூடத்தில் இருந்த அனைவரும் பதறிக்கொண்டு வந்தனர்.
“பாம்பு.” என்று அவள் பயத்தில் தந்தியடிக்க, எங்கே என்று அவளை தாண்டிக்கொண்டு அவன் பார்க்க, “ஐயோ வேண்டாம்.” என்று பயத்தில் அவன் தோள் பற்றி பின்னே இழுத்திருந்தாள் இயலணி. அதுவரை அவர்களின் நெருக்கத்தை உணராதவன் அவளது கரங்கள் தன் வேற்றுத் தோள்பட்டையை அழுந்தப் பற்றவும் சுதாரித்து பின்நகர்ந்து அவள் கரத்தை பிடித்து இறக்கிவிட, தவறுதலாக அவன் கையில் அகப்பட்டிருந்த அவள் வளையல் உடைந்து போனது.
“என்ன நடக்குது இங்க?” என்று வேற்றுக்குரல் கேட்கவும் தடுமாறினாள் இயலணி. பயத்தில் அவனை பிடித்தது மட்டுமின்றி நெருக்கமாக அவனை உரசிக்கொண்டு நின்றது நினைவுவந்து அனைவர் முன்பும் அசவுகரியமாக உணர்ந்தாள்.
“பாம்பு பாத்து பயந்துட்டா மாமா. அது கொல்லைக்கு போய்டுச்சு.” என்று இயல்பாய் கூறி அவன் உள்நுழையப் பார்க்க,
“பாம்பு பாத்ததுக்கா இப்படி?” என்று சந்தேகமாய் கேள்வி எழுப்பி நிறுத்தினார் உமாவின் சித்தப்பா.
நல்ல விஷயம் பேசுவதற்கு என்று கூடியிருக்கும் வேளையில் இப்படி நிற்க வைத்து அவர் சந்தேகம் கொண்டு பேசுவது கோபத்தை கொடுக்க, “பாம்பை புடிச்சிட்டு வந்து காமிக்கவா?” என்று சீறிவிட்டான் அறிவழகன்.
“பேச்செல்லாம் தினுசா இருக்கே.” என்று அவரும் அனைத்திற்கும் பிள்ளையார் சுழி இட்டுவிட்டார்.
“இங்க பாம்பு அடிக்கடி வந்துட்டு போறது சகஜம் தான். அந்த பொண்ணு புதுசுல்ல பயந்துடுச்சு போல.” என்று மாறன் தான் முன்வந்து சமாதானம் பேசினார்.
“பயந்தாலும் இப்படியா? இதெல்லாம் சரியாப்படலை அத்தான்.” உமாவின் சித்தப்பா இடக்காக பேச, உமாவின் அப்பா, அவன் அத்தை கணவர் வாயே திறக்கவில்லை. புருவ முடிச்சுடன் இயலணியை பார்த்து நின்றார்.
“மாப்பிள்ளை உள்ள போய் பேசலாம் வாங்க.” மாறன் தங்கைக் கணவரை உள்ளே அழைத்துச் செல்லப்பார்க்க, நகரமாட்டேன் என்பது போல் நின்றவர்,
“இந்த பொண்ணை உனக்கு எப்படி தெரியும் அறிவு? அவங்க வீட்டுக்கு போகாம இங்க ஏன் வந்திருக்கு? எல்லாருக்கும் பொங்கல் லீவுதான?” என்று அறிவழகனிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
அவர் கேள்வியில் சற்று தடுமாறியவன் பின் சுதாரித்து, “என்கூட வேலை பாக்குற பொண்ணு மாமா. ஆசுரமத்துல வளந்த பொண்ணு, பண்டிகையெல்லாம் பெருசா பாத்தது இல்லைனு சொன்னா அதான் கூட்டிட்டு வந்தேன்.” என்று அடித்துவிட, விழிவிரித்து அவனை பார்த்தாள் இயலணி.
“அந்த பொண்ணு முழிக்குற முழியே சரியில்லையே.” என்ற உமாவின் சித்தப்பா அவளிடம், “ஏன்மா உங்க ஆசுரமத்துல இப்படி பசங்க கூட எல்லாம் வெளிய விடுவாங்களா என்ன?” என்று கேட்டு வைக்க, அவரின் குறுக்கு விசாரணையில் இயலணி திகைத்து விழித்தாள்.
“என்ன கேட்டுட்டேன்னு இப்போ இப்படி நிக்குற?” என்றும் கேட்டு வைத்தார்.
“இப்போ ஆசுரமத்துல இல்லை ஹாஸ்டல்ல தங்கி இருக்கா.” என்று அறிவு தான் கேள்விகளை சமாளித்தான்.
“எங்க நீ தங்கி இருக்குற ஏரியாவா அறிவு?”
அவரின் குறுக்கு விசாரணை அவன் பொறுமையை வெகுவாக சோதித்தது, “இல்லை. அவ காலேஜ்கிட்ட தங்கி இருக்கா. கேள்வி முடிஞ்சுதா நான் உள்ள போலாமா?” என்று பற்களை கடித்துகொண்டு அவன் வழிவிட சொல்லி நிற்க, மாறன் எப்படியோ சமாளித்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.
“என்ன அத்தான் அறிவு பிரெண்டுனு சொன்னா விசாரிக்காம அப்படியே உள்ள விட்டுட்டீங்க. என்ன ஆளுங்கன்னு கூட தெரியாது போல.” என்று உமாவின் சித்தப்பா வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது அரற்றினார்.
“அதெல்லாம் எதுக்கு மச்சான். ரெண்டு நாள் இருந்துட்டு கிளம்பப் போவது. இருந்துட்டு போவட்டும்.” என்று அதனை இலகுவாக எடுத்துக்கொண்டார் மாறன்.
“காலம் கெட்டுக்கிடக்கு. நீங்க என்ன இப்படி விவரம் இல்லாம இருக்கீங்க. நாளைக்கு எதுனாலும் நம்ம வீட்டு பையன் தலையை உருட்டிட போறாங்க பாத்துக்கங்க. நான் நம்ம மாப்பிள்ளை பிரச்சனையில் சிக்கக்கூடாதுனு தான் சொல்றேன்.”
மாறனுக்கே இது என்னடா தலைவலி என்று தோன்றிவிட்டது. தங்கை கணவரும் தன் தம்பியை அடக்காது பேசவிட்டு வேடிக்கை பார்க்க, பிரச்சனை ஆகாமல் இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்திருந்தார். தங்களிடம் முன்கூட்டியே சொல்லாமல் மகன் ஒரு பெண்ணை அழைத்து வந்தது கோபத்தை கொடுத்தது. அனைவரும் கிளம்பவும் பேசிக்கொள்ளலாம் என்று அமைதி காத்தார்.
அதற்குள் உடையணிந்து கூடத்திற்கு வந்த அறிவு ஒரு இருக்கையில் அமர, கையோடு காபி எடுத்து வந்து கொடுத்தார் மேகலா. காபியுடன் அமர்ந்திருந்த மகனை ஒரு பார்வை பார்த்த மாறன், “வந்த விஷயத்தை பேசிடலாம்.” என்று துவங்க,
“இன்னொரு நாள் பேசலாம் மச்சான். ஏதோ சரியாப்படல.” என்று முட்டுக்கட்டை போட்டுவிட்டார் உமாவின் அப்பா.
“என்ன மாமா இது. ஆரம்பிச்சதை முடிச்சிடலாமே.” மாறனுக்கு முன்பு அறிவு முந்திக்கொண்டு பேச,
“மாப்பிள்ளைக்கு அவசரம்தான்.” மெல்லிய சிரிப்பொலி எழுந்து அடங்கியது.
அதனை கேட்டுக்கொண்டே கொல்லையிலிருந்து உள்ளே வந்தது பெண். பேசவென்று அனைவரும் உள்ளே வந்துவிடவும் தனித்து நின்றிருந்த இயலணி பயத்துடன் முகம் கழுவி தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தாள். அவளுக்கும் காபி கொடுத்தார் மேகலா. நன்றி சொல்லி அதை எடுத்துக்கொண்டவள் அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறை நோக்கி செல்ல,
“ஏன்மா நீ தங்கி இருக்கிற ஏரியா எல்லாம் வசதிப்படுமா? அங்க வீடு எதுவும் கிடைக்குமா?” என்று சம்மந்தம் இல்லாது அவளை நிறுத்தினார் உமாவின் சித்தப்பா.
இவர் ஏன் இப்படி சுற்றி சுற்றி கேள்விகளை நெய்கிறார் என்று யோசனையாக பார்த்த அறிவழகனுக்கு அவரின் போட்டு வாங்கல் புரிபடவில்லை.
“எதுக்கு கேக்குறீங்க மாமா? யாருக்காவது வீடு பாக்கணுமா?” என்று மெலிதாக நூல் விட்டுப்பார்த்தான்.
“ஆமா நீங்க காலேஜ் போறதுக்கு தோதா வீடு பக்கத்துலேயே இருந்தா எல்லாருக்கும் வசதில. உமாவும் ரொம்ப நேரம் தனியா இருக்க வேண்டாம் பாருங்க.”
உமாவின் பெயர் வந்ததும் அறிவழகன் இளகினான், “இப்போ இருக்குற வீடே வசதியா தான் இருக்கு. ரொம்ப தூரம் எல்லாம் கிடையாது. இருபது நிமிஷத்துல போயிடலாம்.”
“இப்போ இருக்குற வீடே சவுகரியமா இருக்கும். ரெண்டு பேருக்கு அது போதும். நாலு கிழமைன்னா இங்க வந்துட போகுதுங்க.” என்று மாறனும் இடையே பேசினார்.
“அப்படியா? அப்போ சரிதான்.” என்று முடித்துக்கொண்ட மனிதர் எதர்ச்சியாக கேட்பது போல், “நீயும் எங்க மாப்பிள்ளை மாதிரி வாத்தியாராமா?”
இதுவரை அவர் கேட்ட எந்த கேள்விக்கும் தான் பதில் கொடுக்கவில்லை என்பதால் சந்தேகம் கொண்டு தன்னை தோண்டி துருவுகிறார் என்று நினைத்துக்கொண்ட பெண் தலையாட்டி, “ஆமாம், ஹிஸ்டரி டிபார்ட்மென்ட்.” என்றுவிட்டது.
அவள் பதிலில் அறிவழகன் கண்களை மூடி நாக்கை கடித்தான். அவன் வேலைப் பார்ப்பது பொறியியல் கல்லூரி. அங்கு வரலாற்று பாடங்கள் பயிற்றுவிக்கப்படுவதில்லை என்று கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்துடன் அறிவழகன் கண்களை திறந்து பார்த்தான். கேள்வி கேட்ட உமாவின் சித்தப்பா அமைதியாகிவிட்டார். படிப்பு வேலை பற்றி அவருக்கு பெரிதாக தெரிந்திருக்கவில்லை என்று நிம்மதி மூச்சு விடும் சமயம் உமாவின் தந்தை விழித்துக்கொண்டார். சென்ற வருடம் தான் அவர் மகனை பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார். பொறியியல் கல்லூரி கவுன்சிலிங் சென்று அலசி ஆராய்ந்ததில் அந்த பாடம் பொறியியல் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுவதில்லை என்று தெரிந்திருந்தது.
“நீயும் லெக்சரராமா?” என்று இயலணியைக் கேட்க,
“இல்லை அட்மின் ஸ்டாப்…
ஆமாம் லெக்சரர்.” என்று இருவேறு பதில்கள் இருவரிடமிருந்தும் வர, குடிமூழ்கிப்போனது.
அடங்கிப் போயிருந்த உமாவின் சித்தப்பா முழித்துவிட்டார்.
“என்ன மாப்பிள்ளை இதெல்லாம்? யார் இந்த பொண்ணு? என்ன பண்ணுது? எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க?” என்ற எந்த கேள்விக்கும் அவனிடம் சரியான பதில்லை. ஏனெனில் அவனுக்கே தெரிந்திருக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் பத்திரமாய் தங்க வைத்துக்கொள்ளும்படி நண்பன் உதவி கேட்கவும் தங்க இடமளித்தான். அதைத்தவிர வேறெதையும் அவன் கேட்டுக்கொண்டதில்லை. அதுவே வினையாகிப்போனது.
நிலைமை விபரீதமாவது உணர்ந்த இயலணி தன்னால் அவர்களுக்குள் பிரச்சனை என்று நினைத்து, “ஒரு பாதுகாப்புக்குத்தான் சாரோட தங்கியிருந்தேன். இன்னும் கொஞ்ச நாள்ல நான் கிளம்பிடுவேன்.”
“கிளம்பிடுவேன்னா எங்கிருந்து?”
யோசியாமல், “சார் வீட்லேந்து.” என்றிருந்தது பெண். மொத்த குடும்பமும் அதிர்ந்துவிட, அதன்பின் அறிவழகன் பேச்செல்லாம் எடுபடவே இல்லை.
“எத்தனை நாளா அந்த வீட்ல இருக்க?” அறிவழகன் அத்தையே அவளைப் பிடித்து உலுக்கியிருந்தார்.
அதில் பயந்தவளாய், “மூணு மாசம்.” என்றுவிட, ஒப்பாரிதான்.
“மூணு மாசமா தனியா இருக்குற பையன் ஒரு பொண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து தங்க வைக்குறதெல்லாம் என்ன மச்சான்? எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிதான் நடக்குதா? அதனாலதான் எதுவும் கேக்காம அந்த பொண்ணை உள்ள விட்டீங்களா?” மாறன் புறமும் சரமாரியாக கேள்விகள் பறந்தது. அவர் ஒருபுறம் பதில் பேச, சலசலப்பானது.
“நீ எப்படிமா கல்யாணம் ஆகாத ஒரு பையன் வீட்ல தங்கலாம்?” என்று அவளையும் உலுக்கினர். சூழ்நிலை இப்படி மாறும் என்பதை எதிர்பார்க்காதவளாய் சொல்வதறியது விக்கித்து நின்றது பெண்.
“தங்க மட்டும் தான் செஞ்சுதா இல்லை வேற என்னமுமானு யாருக்கு தெரியும்?”
“அதுதானே? இதென்ன ஊருல இல்லாத புதுக்கதையா இருக்கு?”
“பழக்கமே இல்லாத பையன் வீட்ல ஒரு பொண்ணு தங்குமா? முன்னாடிலேந்து பழக்கமா இருக்கும்.”
“எத்தனை நாளா பழக்கமோ?”
“பழக்கம் மட்டும்தானா இல்லை விருப்பமுமானு தெரியலையே?”
பல்வேறு பேச்சுக்கள் திசைக்கொன்றாய் ஓட, அறிவழகனால் அனைவரின் குற்றப்பார்வையையும் போர் தாக்குதல் கேள்விகளையும் சமாளிக்க முடியவில்லை. முடியவில்லை என்பதைவிட அவர்கள் அவனை பேசவே விடவில்லை.
“ப்ளீஸ்… சாரை இப்படி பேசாதீங்க. அவர் நல்ல ஃபிரெண்ட்… என்னால பிரச்சனை வேண்டாம். நான் கிளம்பிடுறேன்.” என்று இயலணி சொல்லிப்பார்த்தாள்.
“இவ்ளோ பிரச்சனை ஆனதுக்கு அப்புறம் கிளம்புறேன்னு சொன்னா ஆச்சா?” என்று அவளையும் நிறுத்திவிட்டனர்.
“இங்க எல்லாரும் இருக்கும் போதே பின்கட்டுல அப்படி நிக்குதுங்க. யாருமில்லாத அந்த மூணு மாசம்?” என்று கொக்கியிட்டு நிறுத்த, தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தில் பொறுமை இழந்தவளாய், “இப்போ என்னங்க பண்ணனும் சொல்றீங்க? எனக்கு உதவி பண்ணப்போயி அவர் கெட்டபேர் வாங்கிட்டு இருக்கிறத பாக்க கஷ்டமா இருக்கு. இப்படி எல்லாம் பேசாதீங்க. அவர் ஒரு ஜென்டில்மேன்.”
“எங்களை விட அவனை உனக்கு ரொம்பத் தெரியுமோ?”
“ஆமாங்க தெரியும். மூணு மாசம் அவரோட இருந்திருக்கேன், நானே விரும்பி பார்த்தா கூட அவர் பார்வை தப்பாகாது.” அவனின் நற்பெயருக்கு களங்கம் வருவதை விரும்பாது அவள் கூறிய வார்த்தைகள் தீயில் எண்ணெய் வார்த்தது போலானது.
“விரும்பி பார்த்தியா?”
“நீ மட்டும் பாத்தியா அவனும் பாத்தானா?”
“ஐயோ என்ன இப்படி பேசுறீங்க. எனக்குத்தான்… எனக்குத்தான் விருப்பம். நாந்தான் அவரை பார்த்தேன். அவரில்லை.” பதட்டத்தில் அவளையும் அறியாது வந்த வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணியாகிப் போனது. அவள் யார் என்னவென்று எல்லாம் விசாரிக்கவில்லை, அவள் மனதில் அவனிருக்கிறான் என்ற ஒற்றை காரணத்தை பிடித்துக்கொண்டு அவனோடு சேர்த்து வைத்து பேச, நிலைமை கவலைக்கிடமானது.
“இதெல்லாம் வேலைக்கு ஆகாது. ஒழுக்கமான புள்ளை, வாத்தியார் உத்தியோகம் பாக்குதுனு நினைச்சா இங்க கதையே வேறையா இருக்கு. நல்ல குடும்பம்னு நினைச்சா இது சாக்கடையா இருக்கும் போலையே… ஒரு பொண்ணு மனசை கெடுத்து வீட்ல கூடவே தங்க வச்சிகிட்டு இங்க எங்க வீட்டு பொண்ணை கட்டவும் அவசரப்படுறான்…” என்று சச்சரவாகிவிட, அழுத்தத்தில் மாறன் முடிவு வேறாகிப் போனது. சபையும் கலைந்தது.
அதன்பின் அறிவழகனோ இயலணியோ பேச யாரும் வாய்ப்பளிக்கவில்லை. திருமண ஏற்பாடுகள் துவங்கி இதோ அந்த நாளும் வந்துவிட்டது.
error: Content is protected !!