விழிகள் 1
விழிகள் 1
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
Advertisement
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
Advertisement
என தன் கணீர்க்குரலால் சிவமந்திரத்தை கூறிகொண்டிருந்தார் சுந்தராம்பாள். மஞ்சள் பூசிய முகத்தில் வைரமூக்குத்தி மின்ன, ஐம்பத்தி ஆறு வயதினிலும் ஓங்குதாங்கான தோற்றத்தில் அம்மன் சிலைப்போல் கம்பீரமாய் இருந்தார்.
Advertisement
அவர் தீப ஆராதனையை முடித்து, பூஜை தட்டுடன் வெளியே வர. வீட்டினர் அனைவரும் ஆரத்தியை தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டனர். கணவன், மகள்கள், மருமகன்கள், மகன், பேரப்பிள்ளைகள் என அனைவரையும் பெருமையாக ஓர் பார்வை பார்த்தவர்,
Advertisement
”ஹ்ம்ம் எல்லாரும் சீக்கிரம் தயாராகுங்க. நல்ல நேரம் முடியுறதுக்குள்ள பொண்ணு வீட்டுக்கு போகணும்.” என அவர் தன் வெண்கல குரலில் கூற. அனைவரும் தயாராகச் சென்றனர்.
அவங்க ரெடியாகட்டும். அதுக்குள்ள இவங்கள பத்தி கொஞ்சம் சொல்லிடுறேன்.
சிவம் இல்லத்தின் மூத்த தம்பதியர், சுந்தராம்பாள்-சதாசிவம். தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய ஊர்களில் வெள்ளி மற்றும் வெண்கலப் பொருட்களுக்கான கடை வைத்திருக்கின்றனர்.
மூன்று தலைமுறையாக வெண்கலப் பொருட்களை இவர்களே தயாரித்து மொத்த விற்பனை செய்கின்றனர். அதோடு இவர்களின் பூர்வீக கிராமமான மகிழங்கோட்டையில் நிலம், தோட்டம் துறவு என பல ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்கின்றனர்.
சுந்தராம்பாள் சதாசிவம் தம்பதியற்கு ஐந்து மகள் மற்றும் ஒரு மகன்.. மூத்தவள் ஆதிலட்சுமி, அதற்கடுத்தவள் கஜலட்சுமி, மூன்றாவது சந்தான லட்சுமி, நான்காவது விஜயலட்சுமி, கடைசி மகள் தான்யலட்சுமி, அதற்கடுத்து நான்குவருட இடைவெளிக்கு பிறகு சில பல வேண்டுதல்களுடன்.. மிகுந்த எதிர்பார்ப்புடன் பிறந்தவன் தான் நம் கதையின் நாயகன் தனஞ்ஜெயன்..
சுந்தராம்பாளிர்க்கு ஆண் வாரிசில் மிகுந்த நாட்டம் உண்டு. அதற்காக பெண்பிள்ளை பிடிக்காதவர் என்று இல்லை. தனக்கு பிறந்த அடுத்தடுத்த பெண் மகவுகளுக்கு அஷ்டலட்சுமிகளின் பெயரை வைத்து மிகுந்த பாசத்துடன் தான் வளர்த்தார்.
ஆனால் பெண்பிள்ளைகள் மற்றொரு குடும்பத்தின் வம்சத்தை தான் தழைக்க வைப்பார்கள். அவர்கள் தன் குடும்பத்தின் நேரடி வாரிசு ஆக முடியாது. ஆண் வாரிசின் பிள்ளைகள் தான் தன் குடும்பத்தின் அடுத்த தலைமுறை, என்ற எண்ணம் அவருக்கு. ஆனால் ஒவ்வொரு முறையும் பெண் பிள்ளைகள் பிறக்க சற்று மனம் வருந்தினார். ஐந்து பிள்ளைகளுக்கு அடுத்து நான்கு வருட இடைவெளி வந்துவிட, அவ்வளவு தான் என நினைத்து வருந்தியவரின் எண்ணத்தை போக்க தனஞ்ஜெயன் பிறந்தான்.
அதனால் அனைவரையும் விட தனஞ்ஜெயன் அவருக்கு ஒரு படி மேல்தான். பெண்பிள்ளைகளுக்கு திருமண வயது வந்ததும், தங்கள் அளவிற்கு இல்லாது ஓர் படி கீழே உள்ள குடும்பத்தின் பிள்ளைகளை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தார். அதுவும் வாயில்லா பூச்சியாக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தார்.
சுந்தராம்பாளின் கணவர் கூட முதலில் இதற்கு ஒப்பவில்லை. நமக்கு சமமான இடத்தில் சம்பந்தம் பேசலாம் என்றார். ஆனால் சுந்தராம்பாள் பிடிவாதம் பிடித்து தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டார். அவரின் கடைசி மகள் தான்யலட்சுமிக்கு மட்டும் காதல் திருமணம். மாப்பிளை அவர் எதிர்பார்த்தது போல் இருந்ததால் ஒத்துக்கொண்டார்.
அதற்கு இரண்டு முக்கிய காரணம். ஒன்று தன் பிள்ளைகளுக்குள் ஒற்றுமை வேண்டும். மாப்பிளைக்கும் சரி மகள்களுக்கும் சரி நீ பெருசா நான் பெருசா என்ற பிரிவினை வரக்கூடாது.
இரண்டு, மாப்பிள்ளை முறுக்கு என்ற பெயரில் தனஞ்ஜெயனிடம் யாரும் மதிப்பின்றி நடக்கக்கூடாது. அதற்காகத்தான் தங்களுக்கு கீழ் அடங்கி இருப்பவர்களை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தார்..
பெண்களுக்கு நகை கொடுத்து.. சீரும் சிறப்புமாய் திருமணம் செய்து வைத்தார்.. ஐந்து பெண்களுக்கும் சொகுசு பங்களா, வயல், தோட்டம் என மகள்கள் பெயருக்கு எழுதி வைத்தார்..
குடும்பத்தொழில் மற்றும் பூர்வீக சொத்து அனைத்தும் ஆண் வாரிசுக்கு.. அதில் பெண்களுக்கு பங்கில்லை.. இறுதிவரை அவர்களுக்கான சீரு அனைத்தும் உடன்பிறந்தவனாய் தனஞ்ஜெயன் செய்வான். என முதலிலேயே பெண்களிடம் கூறி பத்திரம் எழுதி வாங்கிவிட்டார்..
ஒவ்வொரு பாத்திரக்கடையையும் ஒரு மாப்பிள்ளையின் பொறுப்பில் விட்டு.. மாதம் ஒரு தொகையை அவர்களுக்கான சம்பளமாக அவர்களின் வங்கிகணக்கில் செலுத்தினார். மேலும் அந்த வருடத்தில் வரும் லாபத்தின் ஒரு பங்கையும் அவர்களுக்கு கொடுத்துவிடுவார்..
இவ்வாறு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து திட்டமிட்டு செய்து. மொத்த குடும்பத்தையும் தன் கரத்தினுள் வைத்திருக்கிறார். அதனால் இன்றுவரை அவர்களுக்குள் எவ்வித சண்டை சச்சரவும் வந்ததில்லை.
தனஜெயன் தலையெடுத்த பின்பு அவனையும் தொழிலில் புகுத்தினார்.
தனஜெயனுக்கு இருபத்தியாறு வயதில் வியாழ நோக்கம் வந்துவிட்டது. அதனை விட்டால் அடுத்து முப்பத்தியிரண்டு வயது தாண்டிதான் திருமணம் நடக்கும், என கூறிவிட்டதால், தனக்கான மருமகளை தேடத்தொடங்கி விட்டார்..
மருமகள் பெரிய இடத்திலிருந்து வந்தால்… மகள்களை மதிக்க மாட்டாள். மகனின் மனதை கெடுக்கும் எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது என பலதும் யோசித்து. தன் மகள்களை அனுசரித்து போகக்கூடிய பெண்ணாக இருக்க வேண்டும் என்பதால். மத்தியதர குடும்பத்திலிருந்து.. பெண்ணெடுக்க முடிவெடுத்து. ஆறுமாதமாய் அலசி ஆராய்ந்து தனக்கான மருமகளையும் கண்டுபிடித்துவிட்டார்.
இப்பொழுது அந்த பெண்ணை நிச்சயம் செய்து பூ வைப்பதற்காகத்தான் அனைவரும் பெண் வீட்டிற்கு செல்கின்றனர்.
சுந்தராம்பாளும் அவர் பெண்களும் பட்டும் வைரமுமாய் தயாராகி இருந்தனர்..
சுந்தரம்பாள் ”விஜயா.. தம்பி இன்னும் கீழ வரலையே என்னாச்சுன்னு போயி பார்த்துட்டு வாத்தா” என அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே தனஞ்ஜெயன் வர.
விஜயா ”அம்மா அதோ அவனே வந்துட்டான் பாருங்க” என அவர் கூறியதும். அனைவர் பார்வையும் தனஞ்ஜெயன் மேல் விழுந்தது.
அரக்குநிற சட்டை வெண்ணிற வேட்டியில், வாட்ட சாட்டமான தோற்றத்தில், கைசட்டையை மடக்கிவிட்டவாறு வரும் தன் மகனின் அழகைக் கண்டு பூரித்து போனவர்.. ”ஆத்தி எம்மவன் எம்புட்டு அழகு” என அவன் முகத்தை வழித்து திருஷ்டி கழிக்க. சிரிப்புடன் தன் தாயை பார்த்தான்.
தனஞ்ஜெயன் மிகவும் மென்மையானவன் ஐந்து சகோதரிகளுடன் பிறந்ததாலோ என்னவோ பெண்களிடத்தில் மரியாதையும் மதிப்பும் கொண்டவன்.. சகோதரிகளுக்கும் தாய்க்கும் ஒன்றென்டால் மிகவும் துடித்துவிடுவான். அப்படியொரு பாசம். மச்சான்களிடமும் தோழமையாய் பழகுவான்.. மொத்தத்தில் எந்த வம்பு தும்புக்கும் போகாது வீட்டுக்கு அடங்கிய அக்மார்க் நல்லபையன்..
சதாசிவம் ”சுந்தராம்பா போதும் உம்மவன கொஞ்சுனது. வா நேரமாச்சு” என அதட்டல் போட்டு அனைவரையும் கிளப்பினார்..
*****************************************
”கற்பகம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க.. சீக்கிரம் வா” என பதட்டமும் பரபரப்புமுமாய் வெளிவாசல் வந்தார்.. அந்த வீட்டின் தலைவர் ராமநாதன்.. அவரைத் தொடர்ந்து வந்த அவரின் சகதர்மினி கற்பகமும், மாப்பிளை வீட்டினரை கைக்கூப்பி வரவேற்றனர்..
சுந்தராம்பாள் சதாசிவம் குடும்பத்தினர் அனைவரும் பதில் வணக்கம் வைத்து வீட்டினுள் நுழைந்தார்கள்.. இருப்பக்க நெருங்கிய உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர்..
சுந்தராம்பாள்.. வீட்டையும் வீட்டில் உள்ள மனிதர்களையும் தன் பார்வையால் எடைப்போட்டுக் கொண்டிருந்தார்..
ஆதிலட்சுமி ”அம்மா.. பொண்ணு வீடு ரொம்ப மரியாதை தெரிஞ்சவங்களா இருக்காங்க..”
சந்தானலட்சுமி ”ஆமாக்கா… அதுவும் பொண்ணோட அம்மாவும் சரி அப்பாவும் சரி அதிர்ந்து கூட பேச மாட்டாங்களாம்..”
கஜலட்சுமி ”ஹ்ம்ம் அந்த பொண்ணு இருக்குற இடம் தெரியாதாம்.. அப்படியொரு அமைதி..” என அவர்களும் தனிப்பட்ட முறையில் விசாரித்ததைப்பற்றி கூறிகொண்டிருந்தார்கள்.. இதையெல்லாம் கேட்ட சுந்தராம்பாளிர்க்கு பரம திருப்தி..
ராமநாதன் அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார்… ஆறு மாதத்திற்கு முன்புதான் மதுரையிலிருந்து இங்கு மாற்றலாகி வந்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு மதுரை தான் பூர்வீகம்.. அங்கு இரு வீடும் சில நிலங்களும் உள்ளன.. இங்கு ஒரு வீடும் இருக்கிறது.. இவர்களுக்கு ஒரே மகள்.. பெயர் அல்லிமலர்.. இந்த வருடம் தான் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முடித்தாள்.. அடுத்த சில மாதங்களில் நல்ல சம்பந்தம் வரவும் திருமணத்தை நடத்தி விடலாம் என முடிவெடுத்துவிட்டனர்..
“இவங்க என்னோட அண்ணன் அண்ணி.. அண்ணன் மதுரையில சொந்தமா ஜவுளிக்கடை வச்சிருக்கார். கூடவே பைனான்ஸும் பண்ணுவார்.. அவருக்கு ரெண்டு பசங்க இருக்காங்க.. மலர் அண்ணன் வீட்டுல இருந்துதான் படிச்சா.. அவ கொஞ்சம் பயந்த சுபாவம்.. நாங்க ரெண்டுபேரும் வேலைக்கு போயிடுவோம்.. என் பொண்ணு வீட்டுல தனியா இருக்கவே பயப்படுவா.. அதான் அண்ணன் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டார்.. அப்பொறம் இது என்னோட மச்சான் சென்னைல இருக்கார்.. சின்னதா ஒரு பேக்ட்ரி வச்சு நடத்துறார்.. அவங்களுக்கு ஒரு பையன்.. கல்யாணமாகிடுச்சு அமெரிக்கால இருக்கான்.. இது என் கொழுந்தியா.. மதுரையில தான் இருக்காங்க.. கொஞ்ச வருஷம் முன்னாடி தான் அவ புருஷன் தவறிட்டார்.. இவளுக்கும் ஒரு பொண்ணு தான்.. என் மச்சான் பையனுக்குதான் கல்யாணம் பண்ணி கொத்துருக்காங்க..” என தன் சொந்தங்களை அறிமுகம் படுத்தினார்..
சதாசிவமும் தன் மகள் மற்றும் மாப்பிளைகளை அறிமுகம் படுத்தினார்.. பிறகு தன் நெருங்கிய உறவுகளை அறிமுகம் செய்தார்.. “அப்பொறம் என் மச்சான் ஒருத்தர் இருக்கார்.. அவங்க குடும்பத்தோட திருப்பதி போயிருக்காங்க.. அதான் அவங்களால வரமுடியலை..”
பலகாரங்கள் அனைத்தும் பரிமாரப்பட்டது.. சுந்தராம்பாள் பெரிய மகளை ஓர் பார்வை பார்த்தார்.. அதன் அர்த்தம் புரிந்தவள்.. கற்பகத்திடம் பெண்ணை அழைத்து வரச்சொன்னாள்..
ரோஸ்நிற மென்பட்டு புடவையில் உயிருள்ள தாமரைப்பூவாய் தரைக்கு நோகாமல்.. அடி மேல் அடி வைத்து வந்தவளைக் கண்டு இமைக்க மறந்தான்.. தனஞ்ஜெயன்..
வந்தவள் சபையினர் முன்பு.. கரம் குவித்து வணக்கம் வைக்க… சுந்தராம்பாள் அவளை தன் பக்கத்தில் அமர்த்தினார்..
“உன் பேரு என்னம்மா..”
அல்லிமலர், என்று மெல்லிசாய் வந்தது… குயிலின் காணமோ என்று எண்ணினான் அவன்..
“ஹுக்கும்.. ஆத்தா மலரு கொஞ்சம் சத்தமா பேசு.. மாப்பிளை வீட்டுக்காரவங்க உனக்கு பேச தெரியாதுன்னு நினைச்சுக்க போறாங்க.. இந்த பொண்ணு ரொம்ப அமைதிங்க.. வீட்டுல இருக்கிறதே தெரியாது.. ஏன் இவங்க வீட்டுல இருந்து ஒரு சண்ட சத்தம் வெளில வந்தது இல்லையே.. இவங்க அம்மா கற்பகமும் அப்படித்தான் சிரிச்ச முகமாத்தான் இருப்பாங்க” என எதிர்வீட்டு பெண்மணி சிலாகிப்பாய் கூற.. சுந்தரம்பாளிர்க்கு பரமதிருப்தி..
“வேலைக்கு போற எண்ணம் ஏதாவது இருக்கா..” என்ன சுந்தராம்பாள் கேட்டதும்,
மிரட்சியாய் அவரை நோக்கி ஓர் பார்வை பார்த்தவள் இல்லை என்பதாய் தலையசைத்தாள்.. அதில் தாய்க்கு திருப்தியோ இல்லையோ.. அவளின் அஞ்சனம் பூசிய மருண்ட மான்விழியை பார்த்த மகனிற்கு திருப்தியோ திருப்தி..
“எங்க மலருக்கு அதிர்ந்து கூட பேச வராது.. இதுல எங்க அவ வேலைக்கெல்லாம் போறது..” என அவளின் சித்தி கேலியாக கூற.. அனைவரும் சிரித்தனர்.. அதில் அஞ்சன விழியாளுக்கு சற்று சிணுங்கல் உண்டானது.. அதை அவள் அருகில் உள்ள சுந்தராம்பாள் கூட கண்டிருக்க மாட்டார்.. தூரம் உள்ள மகன் கண்டு கொண்டான்..
அச்சோ பாவம் என் அல்லிக்குட்டி.. அவளை இப்படி கேலி செய்றாங்களே என அவன் வருத்தம் கொண்டான்..
”ம்ம்ம் மத்த விஷயமெல்லாம் பேசலாம்..” என்று சுந்தராம்பாள் கூறியதும்..
சதாசிவம் தன் தொண்டையை கணைத்து பேச ஆரம்பித்தார்.. ”இங்க பாருங்க சம்மந்தி.. இது போடுங்க அது போடுங்கன்னு எல்லாம் நாங்க கேட்க போறதில்ல.. நாங்க எப்போதுமே பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்.. அதுனால உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செய்ய விருப்ப படுறீங்களோ.. அதை செய்யுங்க..” என முடித்தவர்.. சரிதானா என்பது போல் தன் மனைவியைப் பார்க்க.. அவர் லேசாக தலையசைத்தார்..
ராமநாதன் ”உங்க அளவுக்கு எங்களால செய்ய முடியாது சம்மந்தி.. ஆனா எங்க சக்திக்குட்பட்டத என் பொண்ணுக்கு செஞ்சுடுவேன்.. என்பது பவுன் நகை போடுறோம்.. மாப்பிள்ளைக்கு கார் வாங்கி கொடுத்துடுறோம்.. அப்புறம் மத்த சீர் எல்லாம் சரியா செஞ்சுடுவோம்..” என அவர் தன்னால் முடிந்ததை கூற.. சதாசிவம் தம்பதியர்க்கு திருப்தி..
சரி அப்போ பொண்ணுக்கு பூ வச்சிடலாமா என சுந்தராம்பாள் தன் மகள்களைப் பார்த்து கேட்க.. அதில் சூசகமாய் உங்களுக்கு இதில் சம்மதமா என்ற கேள்வி இருந்தது.. அவர்களும் அதனை புரிந்து சரி என்பதாய் தலையசைத்தார்கள்..
கிழக்கை பார்த்து நில்லும்மா என அவளை பணித்த ஆதிலட்சுமி சிறு மலர்ச்சரத்தை அவள் தலையில் வைத்து திருமணத்தை உறுதி செய்தார்.. அவரை தொடர்ந்து மற்ற லட்சுமிகளும் அல்லிமலருக்கு பூ வைத்தனர்..
“எங்க பையனுக்கு இருப்பத்தாறு வயசுல கல்யாணம் பண்ணுடணும்னு ஜாதகத்துல இருக்கு.. அதுனால இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் வச்சுக்குவோம்.. கல்யாணத்துக்கு மொத நாள் நிச்சயம் வச்சுக்கலாம்.. கல்யாணம் நிச்சயம் ரெண்டுமே எங்க பொறுப்பு தான்.. இது எங்க வீட்டோட கடைசி கல்யாணம்.. தஞ்சாவூரே திரும்பி பார்க்கிற மாதிரி இருக்கனும்” என பெருமையாக கூறினார்.. சுந்தராம்பாள்..
“சரிங்க சம்மந்தியம்மா அப்படியே வச்சுக்கலாம்.. ஆனா கல்யாணத்துக்கு அப்பொறம் மாப்பிளைக்கும் பொண்ணுக்கும் மதுரையில ஒரு ரிஷப்ஷன் வச்சுடலாமே.. எங்க சாதிசனம் எல்லாம் தஞ்சாவூர் வரைக்கும் கல்யாணத்துக்கு வருவாங்களாங்கிறது சந்தேகம் தான், அதுனால ரிஷப்ஷன எங்க பொறுப்புல விடனும்.. இது எங்களோட வேண்டுகோள்..” என பணிந்து கேட்டார்.. அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டனர்..
சரி அப்பொறம் நாங்க வாரோம்.. என அவர்கள் கிளம்ப, விருந்து வைத்தே அவர்களை அனுப்பினார்கள்.. இவர்கள் குடும்பத்தில் பொண்ணும் பையனும் தனித்து பேசுவது பழக்கமில்லையென்பதால் தனஞ்ஜெயனால் அல்லியிடம் பேசமுடியவில்லை.. அன்றைய நாளின் அவனின் ஒரே வருத்தம் இதுதான்..
