Skip to content
Post Views: 3,609
போனில் கனகு சொன்ன விஷயங்களைக் கேட்ட ஊர்மியும் அதிர்ந்து தான் போய்விட்டிருந்தாள்.
அவள் அண்ணன் கெட்டவன் என்று நன்றாகவே தெரியும்.
ஆனால் இத்தனை வயதாகியும் கூட அந்த குணம் இன்னுமும் கொஞ்சம் கூட மாறாமல், அப்படியே பணத்தாசைப் பிடித்த ஒரு மிருகமாகவே இன்னமும் இருப்பதை அறிந்து மிகவும் மனம் நொந்தாள்!
Advertisement
தன்னை வைத்து சாதிக்க முடியாததை, இப்போது ஜான்வியை வைத்து சாதிக்க நினைக்கிறான்!
அன்று ஜான்வியின் அம்மாவின் வாழ்க்கையைக் கெடுத்து, இந்த சொத்தை அபகரிக்க நினைத்தவன், இன்று ஜான்வியின் வாழ்க்கையை அழித்து இந்த சொத்தை அபகரிக்க நினைக்கிறான்!
அதற்கு அன்று பலியாடு மாதிரி நடந்துக் கொண்ட இந்த ஜகதீஸ், இன்றும் சந்தீப்பின் சதியைப் பற்றி அறியாமல், மகள் பாசத்தில், தப்பிற்கு மேல் தப்பு செய்து கொண்டிருக்கிறார்!
Advertisement
அவரின் ஆசை மகள், அவள் ஆசைப்பட்ட படி, அவள் காதல் கணவனுடன் வாழ இந்த மனுசனே இப்படி தடையாய் இருக்கிறாரே!
Advertisement
அவரின் இந்த பாசத்தை முதலாக்கிக் கொண்டு, இந்த சந்தீப், இன்னமும் அவரைத் தன் கைப்பாவையாக ஆக்கிக் கொண்டிருப்பது புரியாமல்!
விடக்கூடாது! விடவே கூடாது!
அன்று ஏமாந்தோம் விபரம் தெரியாமல், எதிர்க்க சக்தி இல்லாமல், நன்றாக இருந்த அழகான குடும்பம் அழிந்து போக, விஜி தீதியின் வாழ்க்கை இல்லாமல் போக காரணமாகி விட்டோம்!
Advertisement
இன்று நம் நிலைமை வேறு, சக்தி வேறு, விஜி தீதி கொடுத்த படிப்பு இன்னமும் தைரியத்தைக் கொடுத்து இருக்கிறது! எல்லாவற்றிற்கும் மேலாய், தன் மகன்களின் துணை இருக்கிறது!
அதற்கும் மேல் கனகு பாட்டியின் துணை மிகப்பெரிய பலமாக இருக்கிறது!
சந்தீப் தான் இப்படி என்றால், இந்த நிகில், ச்சே. இன்னொருத்தன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும் அடையத் துடிக்கும் அவனை எல்லாம் அப்படியே கொன்னு தான் போடணும்!
மனதிற்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா!
அம்மாவின் முகத்தில் இருந்து அவளின் வேதனைகளைப் புரிந்து கொண்டு விட்டார்கள் ஊர்மியின் மகன்கள் சுனிலும், சுதீசும்!
கனகுப் பாட்டி சொன்ன விஷயத்தை சொன்னாள் ஊர்மி!
கேட்டு அதிர்ந்தவர்கள், அவர்களே கனகுவிடம் பேசினார்கள்.
கனகுவின் யோசனைப்படி அவர்கள் சந்தீப்பை நேரில் சென்று பார்த்து பேசினார்கள்!
“மாமா, நீங்க பண்றது கொஞ்சமும் சரியில்ல, எங்கப்பா தான் அவர் பொண்ணுக்கு தான் ஹாஸ்பிட்டல் தலைமைப் பொறுப்பு என்று அந்த ஜான்விக்கு எல்லாத்தையும் தூக்கிக் கொடுக்கிறார் என்றால், இப்படி நீங்களும் அவர்க்கு துணை போறது சரியில்ல!” என்று ஆரம்பித்தான் சுனில்.
“ஆமா மாமா, உங்களுக்கு உங்க தங்கச்சிப் பசங்கள விட அந்த மதராசி பொண்ணு முக்கியமா போய்ட்டா இல்ல?” என்று அடுத்து வந்தான் சுஷில்!
“நான் என்ன பண்ணினேன்? எனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை! எல்லாம் உங்க அப்பாவோட முடிவு!”
சந்தீப் அவ்வளவு சீக்கிரம் வருவானா என்ன?
“அப்பாவோட முடிவு தான்! ஆனா அந்த ஜான்விக்கு இதில் பெரிசா இஷ்டம் இல்ல, அவ தான் அந்த பரணியைக் கல்யாணம் பண்ணிட்டு அங்கேயே செட்டில் ஆக ஆசைப்படுறா.
இந்த சொத்தில் மேல் அவளுக்கு ஆசை எதுவும் இல்ல! அப்படி இருக்க, நீங்க ஏன் அவளை அந்த பரணிகிட்ட இருந்து பிரிச்சு, இங்க கூட்டிட்டு வந்து நிகில் கூட கல்யாணம் பண்ணனும் நினைக்கறீங்க?” போட்டு உடைத்தான் சுனில்!
“ஏ.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..” சந்தீப் சமாளிக்கப் பார்க்க,
“என்ன மாமா சொல்றீங்க? அப்பா அந்த பரணிக் கிட்ட இதப் பத்தி பேசினதா அவரே சொன்னார்!”
“அவரே சொன்னாரா? எப்போ?”
“நாங்க ரெண்டு பேரும் அந்த ஜான்விக்கு ஹாஸ்பிடல் தலைமைப் பொறுப்பை விட்டுக் கொடுக்கணும்னு சொன்னார்!
அவளே கல்யாணம் ஆகி அங்க தமிழ்நாட்டுல இருக்கா, அவ எப்படி இங்க வருவா, இத ஏத்துப்பா, கண்டிப்பா அந்த பரணி அவன் பேமிலிய விட்டுட்டு இங்க வரவும் மாட்டான்!
அவளை இங்க விடவும் மாட்டான்! அப்படின்னு நாங்க கேட்டப்போ, டாடி தான் சொன்னார், அவன் என்ன என் பொண்ணை அனுப்ப மாட்டேன்னு சொல்றது? நான் அவன் கிட்ட இருந்து என் பொண்ணுக்கு டிவோர்ஸ் வாங்கிட்டு வந்து நிகிலோட கல்யாணம் பண்ணி வச்சு, அவளை இங்கயே வச்சுப்பேன், அதனால நீங்க ஒண்ணும் அதப் பத்திக் கவலைப் பட வேணாம்!
இந்த ஹாஸ்பிட்டல் அவளுக்கு தான்! உங்களுக்கு என்னோட வேற சொத்துக்கள் இருக்கு! அதை தரேன்னு சொன்னார்!” என்று சொல்லி விட்டு சந்தீப் முக மாற்றத்தைக் கவனித்தார்கள் இருவரும்!
“என்ன மாமா இன்னும் யோசிக்கிறீங்க? எங்கம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த ஜான்வியோட கல்யாணத்தை எங்கப்பா தடுக்காம பார்த்து, அவளை அங்கேயே செட்டில் ஆக்கி, இங்க சொத்துக்குப் பங்குக்கு வராம பண்ணினாங்க.
நீங்க இப்படி பண்ணி, அத எங்களுக்கு கிடைக்க விடாம பண்றீங்களே? நாங்க தானே உங்க மருமகன்கள், உங்க ரத்த சம்மந்தம் உள்ளவங்க? எங்கள விட அந்த ஜான்வி தான் உங்களுக்கு முக்கியமா?”
இது என்னடா, புது டிவிஸ்டு? நான் இவனுங்கள பத்தி யோசிக்கவே இல்லையே? அது சரி, இந்த ஊர்மிக்குள்ள இப்படி ஒரு எண்ணமா?
நான் கூட அவளை என்னமோன்னு நினைச்சேன்!
அது சரி.. இவ்வளவு வருஷம், இத்தனை வசதி வாய்ப்போட இருந்துட்டா இல்ல? அப்ப அவளும் மாறி இருப்பா! என்று மனதிற்குள் கணக்கு போட்டவன், இவர்களையும் நம்மோட கூட்டு சேர்த்துக்கணும்.
காரியம் முடிஞ்சவுடனே அப்புறமா கழட்டி விட்டுடலாம் என்றும் தீர்மானித்து,
“அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல, இந்த கல்யாணம் எல்லாம் ஒரு கண் துடைப்பு தான்!
அந்த ஜான்வி இங்க வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமா அவள் கிட்ட இருந்து எல்லாத்தையும் பிடுங்கிட்டு அவளைத் துரத்தி விட்டுடலாம்! இது தான் எங்க பிளானே!
அதனால நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க, எனக்கு ஜான்விய இங்க கொண்டு வரதுல ஹெல்ப் பண்ணுங்க!
உங்கப்பா சொத்து அந்த ஜான்விக்கு போகாது! மாமாவை நம்புங்க!”
“சூப்பர் மாமா, எங்களுக்கு இதில டபுள் ஓகே தான்!” ஓடி வந்து மாமாவைக் கட்டிக் கொண்டார்கள் இருவரும்!
இந்த அப்டேட்ஸ் கனகுவுக்கு போனது!
அடுத்து ஊர்மியின் முறை!
தன் வீட்டுக்கு வந்த சந்தீப்பிடம் நேரிடையாகவே கேட்டுவிட்டாள் ஊர்மிளா!
“அண்ணா, நீ பண்றது சரியில்ல. அன்னிக்கு அழகான குடும்பமா இருந்த விஜி தீதி குடும்பத்தை உன் பணத்தாசை காரணமா, என்னை வச்சு அழிச்ச! குருவிக் கூட்டை கலைக்கிற மாதிரி!
இன்னிக்கும் நீ கொஞ்சம் கூட மாறவே இல்லை! ஆசை ஆசையாய் காதலிச்சு கல்யாணம் பண்ணி இருக்கிறவங்கள பிரிக்கிற பாவத்தையும் இப்ப செய்ற!
இத்தோட நிறுத்திடு. அன்னிக்கு நீ பார்த்த உன் அப்பாவி தங்கச்சி ஊர்மிளா இல்ல இப்ப நான்!
ஜான்வியும் என்னோட பொண்ணு தான்! அவ வாழ்க்கைய நீ அழிக்கறத நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்!
எக்காரணம் கண்டும் உன் வீட்டுக்கு ஜான்வி மருமகளா வந்திடக் கூடாதுன்னு தான் நான் அந்த ஒம்காரீஸ்வர் கிட்ட வேண்டாத நாள் இல்ல!
நல்ல வேளையா என் பேட்டி, பரணிய கல்யாணம் பண்ணிட்டா!
நீ நினைக்கிறது ஒரு நாளும் நடக்காது! உன்னால அவங்கள பிரிக்க முடியாது, பிரிக்க நான் விடவும் மாட்டேன்!”
“என்னடி வாய் ரொம்ப தான் நீளுது! என்ன பெரிய டாக்டரோட பொண்டாட்டின்னு திமிரா? ஆனா அந்த டாக்டரே என்னோட பாக்கெட்ல!
அன்னிக்கும் சரி. இன்னிக்கும் சரி! நான் ஆட்டி வைக்கிற பொம்மை தான் உன் புருஷன்!
உன்னை அவனுக்கு கட்டி வச்சி இந்த சொத்த அடையலாம்னு நினைச்சுருந்தேன்!
ஆனா அவன், யாரோ ஒரு மதராசிய கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னான்!
சரி அவ்வளவு தான்னு நினைச்சப்போ, பகவான் எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்தாரு!
அதான் அந்த விஜிக்கும் ஜகதீஸ்க்கு இடையே இருந்த சாதாரண பிரச்சினைய, யூஸ் பண்ணி, டிராமா பண்ணி, உன்னை அவனுக்கு கட்டி வச்சேன்!
ஆனா நீ என்ன பண்ணின? என்னை வீட்டுக்குள்ளயே விடாம பண்ணிட்ட!
அப்பயும் விடலையே! என் பையன அந்த ஜான்விக்கு கட்டி வச்சு சொத்த அடையலாம்னு நினைச்சேன்!
அதையும் நீ நடக்க விடல! அவளுக்கு அந்த பரணியோட கல்யாணம் பண்ண உதவி பண்ணின!
எனக்கு இந்த சொத்து வேணும் முழுசா! அதுக்கு நான் எந்த எல்லைக்கும் போவேன்! அது தான் உன் புருஷன் மண்டைய கழுவி, ஜான்விய அவ புருசன்ட்ட இருந்தே பிரிச்சு கொண்டு வரப் போறேன்!
அவள் இங்க கூட்டிட்டு வந்தப்புறம், அவ கிட்ட இருந்து எப்படி இந்த சொத்தை வாங்குறதுன்னு எனக்கும் என் பொண்டாட்டி பிள்ளைக்கும் நல்லாவே தெரியும்! எல்லா பிளானும் பக்காவாக ரெடி!
இனி நீ ஒண்ணும் பண்ண முடியாதுடி என் பிரிய தங்கச்சி!” என்று சொல்லி அவளின் கன்னத்தை தட்டினான் சந்தீப்!
“நான் உயிரோட இருக்கிறவரை அதை நடக்க விட மாட்டேன்டா” என்றாள் ஊர்மியும் கோபத்தோடே!
“அப்ப உன் உயிரை எடுக்கவும் தயங்க மாட்டேண்டி!” என்று கோபமாக ஊர்மியின் கழுத்தைப் பிடித்து அழுத்தினான் சந்தீப்!
ரொம்ப சரியாக அதே நேரம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் ஜகதீஸ்!
ஊர்மியின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் சந்தீப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்து, “ஹேய் .. யூ.. என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கத்தினார்.
அந்த நேரம் அவரை எதிர்பார்க்காத சந்தீப், கொஞ்சம் அதிர்ச்சியடைந்தான்!
ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு,
“பாருங்க ஜகதீஸ்! இவ என்ன சொல்றா தெரியுமா? இந்த ஹாஸ்பிட்டல் மொத்தமும் அவ பெத்த பிள்ளைங்களுக்கு தான் சேரணுமாம்!
அந்த ஜான்விக்கு கொடுக்க கூடாதாம்!
அதனால தான் ரொம்ப ப்ளான் பண்ணி ஜான்விக்கு அங்கேயே ஒருத்தன கல்யாணம் பண்ணி வச்சாளாம்.
இப்ப நீங்களும் நானும் அதை கெடுக்கிற மாதிரி அவளை இங்க கொண்டு வரத ஒரு நாளும் விட மாட்டாளாம்!
நீங்க போட்ட இந்த வாழ்க்கைப் பிச்சையில வாழ்ந்துட்டு, இப்ப உங்களுக்கே துரோகம் நினைக்கிறா பாருங்க!
அதான் எனக்கு அவளை அப்படியே கொல்லணும் போல கோபம் வந்திருச்சு ஜகதீஸ்!”
ஊர்மியைப் பார்த்து கடுங்கோபப் பார்வை பார்த்தார் ஜகதீஸ்!
“இவன் சொல்றத நம்பாதீங்க, ப்ளீஸ்.. கொஞ்ச முன்னாடி நீங்க வந்திருந்தா தெரிஞ்சிருக்கும் இவன் யோக்யதைப் பத்தி!” ஊர்மி ஜக்தீசை பார்த்து கெஞ்சினாள்.
“யார் யார் எப்படின்னு எனக்கு இப்ப நல்லாவே தெரிஞ்சுடுச்சு! நீ ஒண்ணும் சொல்ல வேணாம்!
நான் ரொம்பவும் நம்பின எல்லோரும் என்னை ஏமாத்திட்டீங்க!
என் கண் முன்னாடி நிக்காதீங்க போங்க!” என்று சொல்லி கோபமாக அவர் அறையில் புகுந்து கொண்டு கதவை அறைந்து சாத்தினார் ஜகதீஸ்!
செயலற்று நின்ற ஊர்மியை வெற்றி சிரிப்போடு நக்கலாக பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினான் சந்தீப்!
——-
அடுத்த நாள்.
காரில் மவுனமாக வரும் ஜக்தீசை பார்த்தாள் ஊர்மிளா!
இப்போது அவர்கள் ஏர்போர்ட்டில் இருந்து பரணியின் கிராமத்திற்கு தான் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஜகதீஸ் முகம் இறுக்கமாக இருந்தது.
நேரே இருவரும் சென்று இறங்கியது ஜானகியின் வீட்டில்!
திடீரென்று வந்து நிற்கும் அவர்களைக் குழப்பத்துடன் பார்த்து உள்ளே வரும்படி அழைத்தார் ஜானகி!
வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணம் ஜானகியின் காலில் விழுந்தார் ஜகதீஸ்!
அவர் ஜானகியின் காலில் விழுந்ததைக் கண்ட ஊர்மியும் அவருடன் சேர்ந்து ஜானகியின் காலில் விழுந்தாள்!
இருவரையும் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் பார்த்தார் ஜானகி!
error: Content is protected !!