Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் செல்ல சீமாட்டி

என் செல்ல சீமாட்டி 9

அத்தியாயம் 9

ருக்மணி இரவிற்கு இவர்கள் மூவருக்கும் ரொட்டியும் சப்ஜியும் செய்து உணவு மேஜையில் வைத்துவிட்டு அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.



Advertisement

“ஏன் பாட்டி, நைட் துணைக்கு அவங்களை இருக்க சொல்லலாமே? தினமும் தனியாவா தூங்குவீங்க?” என்று அருணா கேட்டதற்கு, “ருக்மணிக்கு மூன்று பெண் குழந்தைகள். அவங்களை பார்க்கனும் இல்லையா? அதனால சரியா ஏழு மணிக்கு ஓடிடுவா. அதுவும் இல்லாமல் ரொம்ப வருஷமா தனியா தானே இருக்கேன், எனக்கு ஒரு பயமும் இல்லை. கரிஷ்மா இருந்தாலும் அவங்க மேலே தான் இருப்பாங்க. கீழே என் தனி ராஜாங்கம் தான்” என்றார் பாட்டி சிரித்துக்கொண்டே.

பின், இரவு உணவை மூவரும் சேர்ந்து உண்டார்கள்.

Advertisement

Advertisement

குரு ‘பாட்டி அருணாவிடம் என்ன கேட்பாரோ? அதை அருணா எப்படி எதிர்கொள்வாளோ?’ என்று பதற்றமாகவே அமர்ந்திருந்தான்.

பாட்டியும் அருணாவும் உள்ளூர் நிலவரம் முதல் உலக அரசியல் வரை பேசினார்கள். ஆனால் பாட்டியும் அருணாவிடம் நேரடியாக எதுவும் கேட்கவில்லை, அருணாவும் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை.

Advertisement

சில மாதங்களே பழகியிருந்தாலும் இருவருக்கும் இடையில் அழகான நட்பு உருவாகி இருந்தது.

ஆங்கிலத்தில் ‘ரீடிங் பெட்வீன் தி லைன்ஸ்’ என்பார்களே, அது போல இவர்கள் பொதுவான விஷயங்கள் பேசுவதை போல இருந்தாலும் தங்கள் கருத்துகளை மறைமுகமாக கூறி கொண்டிருந்தார்கள்.

“ருக்மணி எப்பவும் சொல்லுவா, உங்களை மாதிரி படிச்சிருந்தா நான் நல்ல வேலைக்கு போய் என் பிள்ளைகளை இன்னும் நல்லா பார்த்திருக்க முடியும் இல்ல அப்படின்னு” என்றார் பாட்டி.

“படிப்பு இல்லை என்றாலும், வைராக்கியத்துடன் வேலை பார்த்து பிள்ளைகளை வளர்க்கிறாங்களே பாட்டி, இதோ பிள்ளைகளை பார்க்க எப்படி ஓடி போறாங்க, அது எவ்வளவு பெரிய விஷயம்” என்றாள் அருணா.

இவர்களின் பேச்சு  வார்த்தையில் குரு தான் நொந்து போனான். அவனுக்கு புரிவதை போலவும் இருந்தது, புரியாததை போலவும் இருந்தது.

இரவு உணவை முடித்துக்கொண்டு, இரு பெண்களும் அனைத்தையும் ஒதுங்க வைத்தனர். வேலையை முடித்து இருவரும் வந்து பார்க்கும் போது, குரு  நீளிருக்கையில் அமர்ந்தவாக்கிலே தூங்கியிருந்தான்.

“எழுப்பி உள்ளே போய் படுக்க சொல்லு அருணா.”

“கொஞ்ச நேரம் தூங்கட்டும் பாட்டி. இப்படி அசந்து தூங்கி ரொம்ப நாள் ஆச்சு. நானாவது மாத்திரை மருந்து உபாயத்துல தூங்கிடறேன். இவர் என்னை பார்த்துகிட்டே சரியான தூக்கம் இல்லை. நம்ம இரண்டுபேரும் வெளியே ஒரு வாக் போலாமா? இங்கே ஒன்னும் பயம் இல்லையே? உங்களால முடியும்னா போகலாம்” என்றாள் மெதுவான குரலில்.

“ஒரு அரைமணி நேரம் போகலாம். இங்கே பயம் எல்லாம் இல்ல அருணா. ஆனால் பனி பெய்யும். ஸ்கார்ப் ஸ்வெட்டர் போட்டுட்டு வா. நானும் போய் போட்டுட்டு வந்துடறேன்”

“அவ்வளவா குளிரல பாட்டி, எனக்கு வேண்டாம்”

“ஆபரேஷன்  பண்ண உடம்பு, இன்னும் இரண்டு மாதம் ஆகலை, போட்டுட்டு  வந்தா போலாம், இல்லனா வீட்லயே இருப்போம்” என்று விட்டார்.

“பாட்டி, நீங்க ரொம்ப கண்டிப்பான  டீச்சர் தான் போங்க” என்று கூறிவிட்டு உம்மென்று சென்று ஸ்வெட்டர் ஸ்கார்ப் அணிந்து வந்தாள்.

பின் சத்தமில்லாமல் வீட்டை வெளிப்பக்கம் பூட்டிவிட்டு இரு பெண்களும் தெருவில் இறங்கி நடந்தனர்.

“குரு எல்லாம் சொல்லிட்டாரா பாட்டி”, என்று ஆரம்பித்தாள் அருணா.

“என்கிட்ட சொல்ற அளவு மட்டும் தான் சொல்ல சொன்னேன். ஆனா மிச்சசம் இல்லாமல் எல்லாத்தையும் சொல்லிட்டான் உன் புருஷன்னு தான்  நினைக்கிறன்”

“நீங்க கேட்டிருக்காட்டியும் அவரே சொல்லிருப்பாரு பாட்டி. ரொம்ப நல்லவரு. பெரியவங்ககிட்ட எதையும் மறைக்க கூடாதுன்னு நினைப்பாரு. எங்க வீட்டுக்கும் லெட்டர் போட்டுட்டாரு. எங்க இருக்கிறோம்னு சொல்லல, பத்திரமா இருக்கோம்ன்னு சொல்லிட்டாரு”

“உன்னோட இந்த முடிவு சரின்னு நினைக்கிறியா அருணா?”

“இது முடிவு இல்ல பாட்டி, புது ஆரம்பம்”

“நல்லா  பேசுற, புத்திசாலி பொண்ணு நீ. என்னை பொறுத்தவரை இந்த முடிவு முட்டாள்தனம்னு தான் சொல்லுவேன்”

“பாட்டி, இது சரியா தப்பான்னு நான் யோசிக்கலை. ஒரு தாயின் தார்மீக கோவம் இது. என் குழந்தை இறக்க காரணமா நான் நினைக்கிற எல்லா விஷயத்தையும் விட்டுட்டு வரனும்னு தோனுச்சது, அவ்வளவுதான்”

“சரி, அந்த ஊர், அவசர வாழ்கை, வீடு, அப்பா, அம்மா எல்லாத்தையும் விட்டாச்சு.  ஆனால் வாழ வழி வேணுமில்லை, வேற ஊருக்கு போய் வாழ்க்கையை புதுசா ஆரம்பிக்கிறது சரி. இப்படி படிப்பும் வேணாம்ன்னு பணமும் வேணாம்ன்னு நிக்கிறது சரியில்லையே?”

“பாட்டி, நாங்க காசு கொடுத்து படிக்க வச்சோம்ன்னு எப்பவுமே சொல்லி சொல்லி காண்பிப்பாங்க. ஆனால் உண்மை என்னனா, இந்த படிப்பு எங்க மேலே திணிக்கப்பட்டது. நானாவது பரவாயில்லை, வீட்ல எதிர்த்து பேசுவேன். ஆனா, குரு அவங்க அம்மா சொன்னா செய்வான். வேற வழியும் இல்லை. அவனுக்கு இந்த வேலையில நாட்டமே இல்லை. கடமையா செய்வான். பிடிச்சு செய்ற வேலை சுமையா இருக்காது. எங்க இரண்டு பேருக்கும் சாப்ட்வேர் வேலையில சுத்தமா இன்டெரெஸ்ட் இல்லை. ஆனால், அதுல தான் நல்லா சம்பாதிக்க முடியும், அது தான் உங்களுக்கு சரி என்று சொல்லி அதை செய்ய வச்சாங்க. இது நாங்க கடமையா சுமந்த வேலை. அதனால அதையும் விட்டுட்டு இங்க வந்துட்டோம்”

“கைல இருந்த காசையும் எதுக்கு கொடுத்துட்டு வந்தீங்க?”

“எங்க அப்பா அம்மாவை பார்க்கிற கடமை எங்களுக்கு இருக்கு. காசு எல்லாத்தையும் ஈடு செய்யாது தான். ஆனாலும், ஒன்னும் கொடுக்காம நாங்க வந்திருந்தா, ‘எங்க காசுல படிச்சிட்டு, குடும்பத்துக்கு ஒண்ணுமே செய்யாம, சுயநலமா ஓடி வந்துட்டோம்”ன்னு சொல்லுவாங்க. அதுக்காக தான்.”

“சரி, இப்ப என்ன செய்யலாம்னு யோசிச்சு வச்சிருக்க. இங்க ஊர் மட்டும் புதுசு இல்லை. மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறை, இப்படி எல்லாமே வேற இல்லயா?”

“இனிமே தான் யோசிக்கணும் பாட்டி. எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு வரத்துக்கே இவ்வளவு நாள் ஆயிடுச்சு. இப்ப மனசு கொஞ்சம் பிரீயா இருக்கு. குரு  யோசிக்கட்டும் பாட்டி, அவருக்கு என்ன தோணுதோ அதை செய்யனும்ன்னு நான் ஆசை படறேன். கொஞ்சம் நிலையா நிக்கற வரைக்கும் நான் பக்க பலமா இருப்பேன் பாட்டி” 

“படிப்பை வச்சு தேடினா வேலை கிடைக்கும் அருணா”

“கையில கொஞ்சம் காசு இருக்கு. எதுவும் சரியா வரலைன்னா அப்ப வேலைக்கு முயற்சி செய்யலாம்ன்னு நினைக்கிறன் பாட்டி. இனியாவது குரு அவனுக்கு என்ன பிடிக்குதுன்னு யோசிக்கட்டுமே ”

“எந்த நம்பிக்கையில எங்க ஊருக்கு வந்தீங்கன்னு தெரியலை. இது தான் தெய்வ சித்தமான்னு தெரியலை. ஒன்னு மட்டும் சொல்றேன், எது பண்றதா இருந்தாலும் ஒன்னுக்கு பத்து முறை யோசிச்சு செய்ங்க. நம்ம நினைக்கிற எல்லாமே நடந்திடாது. சிலது நடக்கும், சிலது நடக்காது. முயற்சி செய்ங்க, முடியாத பட்சத்துல திரும்ப ஊருக்கு போறதுல ஈகோ பார்க்கக்கூடாது. கடவுளை பிரார்த்தனை செய்து முழு மனதா முயற்சி செய்ங்க. நல்லதே நடக்கும். சரி வீட்டுக்கு போவோம் வா” என்று திரும்ப வீடு நோக்கி நடந்தனர் இருவரும்.

“பாட்டி, வாடகைக்கு வீடு கேட்டிருந்தேனே?”

“காரியத்துல கெட்டி தான் நீ. ரெண்டு மூணு வீடு சொல்லி வச்சிருக்கேன். நாளைக்கு ருக்மணி கூட போய் பார்த்துட்டு வாங்க”

பாட்டியை ஓரளவு சமாதானப்படுத்திவிட்டாள் அருணா.

பாட்டிக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் எல்லையில்லா அன்பு வைத்திருந்தார்கள். அன்பான குழந்தைகள் இருவரும். இறைவா இவர்களுக்கு ஒரு நல்ல வழியை காண்பி என்று இறைவனை வேண்டிக்கொண்டு தூங்க சென்றார் பாட்டி.

மறு நாள் காலை பாட்டி சொன்னதை போல ருக்மணி இரண்டு மூன்று வீடுகளை அழைத்து சென்று காட்டினார்.

பாட்டியின் தெருவிலே ஒரு ஒற்றை படுக்கை அறை கொண்ட வீடு இவர்களுக்கு பிடித்திருந்தது. அதையே அட்வான்ஸ் கொடுத்து முடித்துவிட்டனர்.  

ஒரு கட்டில், அடுப்பு, கொஞ்சம் பாத்திரங்கள், என்று மிகவும் தேவையான பொருட்களை பாட்டியின் அறிவுரை படி, ருக்மணியின் துணையோடு வாங்கினார்கள்.

இரண்டு நாட்கள் பாட்டியின் வீட்டில் தங்கிக்கொண்டனர். அதன் பிறகு பால் காய்ச்சி தங்கள் புது வீட்டிற்கு குடி வந்தனர் கணவனும் மனைவியும். முதலில் அருணாளினி வளைகாப்பு புகைப்படத்தை தான் ஹாலில் மாட்டினார்கள்.

“தங்கம் அப்பா அம்மாகிட்ட சீக்கிரம் வந்துடு மா” என்று இருவருமே குழந்தையிடம் மனதார கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!