Skip to content
Post Views: 2,883
அத்தியாயம் 19
பூவிடைப் பனித்துளிகள்
அவளுக்கு கோபமோ, எரிச்சலோ, ஏன் பதட்டமோ எதுவுமே தோன்றவில்லை. “இவனா? இவன் என்னை காதலிக்கிறானா? எதை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறான்?” என்று கேள்விகள் மட்டுமே மண்டையைக் குடைந்தன.
Advertisement
“திவ்யா, நான்னு நீன்ன சாலா சாலா நச்சு. நுவண்டே நாக்கு சாலா இஷ்டம். நேனு நின்னு ப்ரேமிஸ்துன்னானு” என்று காற்றில் வெடவெடத்த ரோஜாக்களை அவள் பக்கமாக நீட்டிக் கொண்டே மொழிய, திவ்யா அமர்ந்திருந்த காரிலிருந்து வேகமாக இறங்கினாள்.
“வருண். ப்ளீஸ் பிஹேவ் யுவர்செல்ஃப். ஐம் ரியலி சாரி! யு ஆர் ஜஸ்ட் மை குட் ஃப்ரெண்ட். அதுக்கு மேல எனக்கு உன் மேல துளி இண்டிரெஸ்டும் இல்ல” என்று தெளிவாக அவன் கண்களைப் பார்த்துக் கொண்டு கூறினாள்.
வருணுக்கு இது ரொம்பவும் வலித்திருக்க வேண்டும். “மீக்கு அர்த்தம் கா லேது திவ்யா. நூவண்டே நாக்கு சாலா இஷ்டம் திவ்யா. எனக்கு உடம்பு சரியில்லாதப்போ, நீ என்னை நல்லா பார்த்துக்கிட்ட, என்னை கேர் பண்ணிக்கிட்ட. இந்த கேர் அஃபெக்ஷன்லாம் எனக்கு எப்பவும் வேணும் திவ்யா. ஆஃப்டர் வீ கோ டு இந்தியா, நான் உங்க வீட்டில வந்து பேசறேன் திவ்யா” என்று அவன் போக்கில் திரும்ப பேசிக் கொண்டே இருக்க, திவ்யா அவனை கையமர்த்தினாள்.
Advertisement
“ஸ்டாப் வருண், ப்ளீஸ் ஸ்டாப். எனக்கு அந்த மாதிரி எந்த ஐடியாவும் உன் மேல இல்லை. உனக்கு உடம்பு சரியில்லாதப்போ உன்னை நான் தனியாவா கேர் பண்ணிகிட்டேன். வீட்டில நாலு பேருமே தான் உன்னை பார்த்துகிட்டோம். யு ஆர் மிஸ்டேக்கன் வருண். ப்ளீஸ். வண்டியை எடு. போலாம்” என்று பொங்கிவிட்டாள்.
Advertisement
அவள் ஆத்திரமாக கத்தியதைக் கண்டு பயந்து போன வருண், வேறு எதையும் பேசாமல் வண்டியை வீடு நோக்கி செலுத்தினான். வீட்டை அடைந்து பொருட்களை உள்ளே எடுத்துப் போகும் சமயம், “நீ என்கிட்ட ப்ரபோஸ் பண்ண விஷயத்தை இத்தோட மறந்திடு வருண். யார்கிட்டையும் சொல்லி சீன் க்ரியேட் பண்ணிகிட்டு இருக்காத. ப்ளீஸ்!” என்று அமைதியான, ஆனால் அழுத்தனமான குரலில் கூறியிருந்தாள். வருண் சம்மதமாக ஒரு முறை தலையை மட்டும் அசைத்துவிட்டு, வாங்கி வந்த பொருட்களை உள்ளே எடுத்துக் சென்றான்.
அவளுக்காக வாங்கியிருந்த ரோஜா கொத்தையும் சேர்த்து அவன் உள்ளே எடுத்துச் செல்ல, “ஏ, வாட்! பொக்கே ஆஃப் ரெட் ரோசஸ்! யாரு யாருக்காக வாங்கிட்டு வந்திக்கீங்க?” என்று யஷ்வந்த் கேட்க, வருணுக்கு சட்டென பதில் சொல்ல வரவில்லை. அவன் திரும்பி திவ்யாவைப் பார்க்க, இந்த பார்வை பரிமாற்றத்தை சோஃபாவில் அமர்ந்திருந்த பரணியும் கவனித்தான்.
பரணியின் பார்வை திவ்யாவை நோக்கி கேள்வியுடன் நீளவும், சுதாரித்த திவ்யா, “நா…நான் தான் வாங்கினேன். பூலாம் நல்லா பெருசு பெருசா இருந்துச்சு இல்லையா. அதான் நம்ம ஃப்ளவர் வேஸ்ல வைக்கலாமேன்னு வாங்கினேன். அழகா இருக்கில்ல.” என்றாள் சமாளிப்பாக.
Advertisement
“அழகா தான் இருக்கு! ஆனா, எதுக்கு ஃப்ளவர் வேஸ்ல வைக்க, ஃபுல் ரெட் ரோஸ் பொக்கே வாங்கின. கலர்ஃபுல்லா வாங்கியிருக்கலாமே!” என்று யஷ்வந்த் திரும்ப கேள்வி கேட்க,
“அது அது, இதான் சீப்பா இருந்துச்சு. ஜஸ்ட் ரெண்டு டாலர் தான். மத்த பொக்கேலாம் நாலு டாலர். சரின்னு சீப்பா இதையே வாங்கிட்டேன். இந்தா ஃப்ளவர் வாஸ்ல தண்ணி ஊத்தி போட்டு வை, நான் க்ராசரி அடுக்கறேன்” என்று கூறிக் கொண்டே யஷ்வந்தின் கையில் பூங்கொத்தை திணித்துவிட்டு, எதுவும் பாதிக்காதவள் போல சென்றாள்.
அவளையும், அவள் தடுமாற்றத்தையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த பரணிக்கு, ‘என்னமோ மறைக்கறா!’ என்பது மட்டும் புரிந்தது. அதிலும், வந்ததும் வராததுமாக வருண் ஹாலில் நிற்காமல் கையில் இருந்த க்ராசரி பைகளை கிச்சன் ஐலாண்டில் கிடத்திவிட்டு நெடுநெடுவென தன் அறைக்குள் செல்வதேல்லாம் அவன் வழக்கத்திற்குப் புறம்பானது.
எப்போதும் மளிகை, காய்கறி வாங்கி வரும்போது, “டேய் அப்பறமா எடுத்து வைக்கலாம் வாடா” என்று யஷ்வந்தோ, பரணியோ சலித்துக் கொண்டாலும், “நூவு வெல்லண்டி. ஐ வில் அரேஜ்ன் திஸ் அண்ட் கம்” தனி ஆளாக, அனைத்து சாமான்களையும் பக்குவமாக அடுக்கி வைத்த பின்பே வருண் நிமிர்வான். ‘நான் ஒரு ஜென்டில்மேன்’ என்ற கர்வம் மிளிர அவன் பணிகள் சுத்தபத்தமாக இருக்கும்.
அப்படிப்பட்டவன், அதிலும் திவ்யாவுடன் க்ராசரி ஷாப்பிங் சென்று வந்ததும், அதிலும் கையில் ஒரு கொத்து காதல் ரோஜாவுடன் வந்ததும், நேரே தன் அறைக்குச் செல்வதென்றால் ஏதேனும் சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும்.
‘இவ என்னடான்னா, திருட்டுத்தனமா முழிச்சுட்டு சிரிச்சு சமாளிச்சு ரோஸை யஷ்வந்த் கையில் திணிச்சுட்டு, சம்பந்தமே இல்லாம சாமான் அடுக்க உட்கார்ந்திருக்கா. பாரு, பாரு, ஜூஸ் வைக்கற ட்ரேல தக்காளி பழத்தை பிரிச்சு கொட்டி வச்சுக்கிட்டு இருக்கா! ஆள் வேற கொஞ்சம் நர்வஸா, டென்ஷனா தெரியறாளே! என்ன விஷயமா இருக்கும்?
ஒரு வேளை வருண் இவளுக்கு ரெட் ரோஸ் கொடுத்து ப்ரபோஸ் பண்ணிட்டானா? இல்ல, இவ ரோஸ் கொடுத்து அவன் வாங்கிக்கலையா? வேற யாருக்காவது கொடுக்க சொல்லி அவன்கிட்ட குடுத்திருப்பாளோ? அதென்ன வேற யாருக்காவது? எனக்கு கொடுக்க சொல்லி வருண்கிட்ட கொடுத்திருப்பாளோ? அதனால அவன் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லி திட்டியிருப்பானோ? திட்டுயிருந்தா அவ தானே அப்செட்டா ரூமுக்கு ஓடணும். வருண்ல ஓடியிருக்கான்! அப்போ இவ தான் என்னமோ சொல்லி திட்டியிருக்கணும். கண்டு பிடிக்கறேன்’ என்று நினைத்துக் கொண்டான்.
இங்கே நடக்கும் விஷயங்கள் பற்றி எதுவுமே கண்டு கொள்ளாத யஷ்வந்த், சிரத்தையாய் ஒரு கண்ணாடி ஜாடியில் தண்ணீர் பிடித்து, அதனுள் ரோஜாக்களை அடுக்கிவிட்டு, ‘ஈஈ, ஊஊ’ என்றெல்லாம் அந்த பூக்குவளையை சுற்றி செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தான்.
பரணி தன்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருப்பது திவ்யாவிற்கு அப்பட்டமாக புரிந்தது. ‘இந்த வருண் விஷயம் மட்டும் பரணிக்கு தெரிஞ்சது, அவ்வளோ தான். அவனையும் ரிஜெக்ட் பண்ணிட்டா! பெரிய உலக அழகின்னு நினைப்புன்னு நினைச்சுக்குவான். ஐய்யோ இவன் நம்மளை குறுகுறுன்னு வேற பார்க்கறானே’ என்று எண்ணிக்கொண்டே, “என்ன?” என்று பரணியைப் பார்த்து சற்றே கோபமாக வினவினாள்.
“ஒண்ணுமில்லையே, நீ அடுக்கு அடுக்கு” என்றானே தவிர அவன் பார்வையை விலக்கிக் கொள்ளவில்லை. அவன் விழிகளின் வீச்சு அவளுக்கு அசௌகரியத்தைக் கொடுக்க, “வேற வேலை ஒண்ணும் இல்லையா? இங்க என்ன ஃப்ரிட்ஜ் அடுக்கற ஷோவா நடக்குது. வேடிக்கை பார்த்துட்டு இருக்கறதுக்கு?” என்று சம்பந்தமில்லாமல் பரணியிடம் சற்றே பொங்கியிருந்தாள். ஆனால், அந்த பொங்கல் அவளுக்கே எதிராக பொங்கி வழியும் என்று எதிர்பார்க்கவில்லை.
“வேலை தானே ஏன் இல்லாம! இந்தா போறேன்… என் நண்பன் அங்க சமாதானப்படுத்த ஆளில்லாம தேம்பிட்டு இருப்பான். என்ன விஷயம்னு கேட்டா அருவி மாதிரி கொட்டுவான் தெரியுமா?” என்று இவள் முகம் மாறுவதைப் பார்த்து உள்ளூர உவகையுடன்,
“மடை திறந்து பாயும் நதியலை நீ…
மனம் திறந்து கூவும் என் குயில் நீ…
சிஸ்டம் கலைஞன் உன் ஆசைகள் ஆயிரம் என்னிடம் சொல்லடா” என்று இவனாகவே வார்த்தைகளை மாற்றிப் போட்டு, திவ்யாவை பார்த்து சீண்டலாகப் பாடிக் கொண்டே தலையை வெட்டி வெட்டி ஆட்டிய வண்ணம், வருணின் அறை நோக்கி நகர்வான் என்று திவ்யா எதிர்பார்க்கவில்லை.
இவன் கழுத்தை, ‘புலிக்குட்டி தம்பி பூனைக்குட்டி’ ஸ்டைலில் இரு கைகளையும் கழுத்தருகில் கொணர்ந்து வெட்டி வெட்டி நடந்து கொண்டே படி ஏற எத்தனிக்கும் சமயம், திவ்யா ஃப்ரிட்ஜின் அருகேயிருந்து சட்டென எழுந்து மாடிப்படியின் முன்னால் பரணியை ஏற வழிவிடாமல் மறித்து நின்றாள்.
“என்ன?” என்று சிரிப்பு மாறாமல் பரணி கேட்கவும், “எங்க எங்க போற?” என்று சற்றே திணறலுடன் கேள்வி கேட்டாள் திவ்யா.
“நான் போகிறேன் மேலே மேலே… நீ போக போற காலின் கீழே…” என்று சற்றும் சுருதி இல்லாமல் பாடினான் பரணி.
“வந்து… வந்து எனக்கு ஃப்ரிட்ஜில பொருள் அடுக்க ஹெல்ப் பண்ணு வா” என்று என்னமாவது சொல்லி அவன் மேலே செல்வதை தடுக்கலாம் என்று இவள் நினைத்து பேச, பரணி பேசும் முன்னர், படிகட்டில் இருந்து வேகமாக இறங்கி வந்த நாபி-ஜூன், “வருண் அப்செட். ஐ நாக் டோர். பட் ஹீ நாட் ஓப்பன்” என்று குண்டு தூக்கி போட, ஒரு நொடி திவ்யாவிற்கு மூச்சே நின்று போயிற்று.
“ஐயோ! கையை காலை அறுத்து தொலைச்சுக்க போறான்.” என்று சொல்லியவள், நாபி ஜூனைத் தள்ளிக் கொண்டு மேலே ஏற முற்பட்டாள். இவள் பின்னாலேயே பரணியும் வருவது சற்றே ஆறுதல் அளித்த போதும், ‘போச்சு! இந்த தெலுங்கு தேவாங்கு என்னை வசமா இவங்கிட்ட மாட்டிவிட போகுது. தெலுங்குல டி.ஆர் பாட்டு போட்டு, ஒரு தலை ராகம்னு பாடப்போகுது’ என்று எண்ணிக் கொண்டாள்.
வருணின் அறைக்கதவு மூடியிருக்க, “வருண் வருண்” என்று திவ்யா பட் பட்டென்று கதவை தட்டிக்கொண்டே அழைத்தாள்.
“திறக்க மாட்டேங்கறான்” என்று பாவமாக அருகே நின்றிருந்த பரணியிடம் மொழிய, அவனும், “டேய், வருண்… ஓப்பன் த டோர்” என்று கதவை தட்டினான்.
இதற்குள் அரவம் கேட்டு, பூங்கொத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த யஷ்வந்த் அந்த பூங்கொத்தை தூக்கிக் கொண்டே மேலே வந்துவிட்டிருக்க, அழகிய சிவப்பு நிற ரோஜாக்களைப் பார்க்கவும், திவ்யாவிற்கு எரிச்சலாக இருந்தது. வருண் கதவைத் திறக்காதது நினைத்து பயமாகவும் இருந்தது.
கையை அறுத்துக் கொள்வானோ? தூக்கு மாட்டிக் கொள்வானோ? என்றெல்லாம் கண நேரத்தில் இதயம் ஆயிரம் தேவையற்ற விஷயங்களை யோசித்து கண்முன் அவற்றை நிழற்படங்களாகக் காட்டி அச்சுறுத்தியது. தூக்கு மாட்டிக் கொள்ள இந்த ஊரின் எந்த அறையிலும் மின்விசிறி இருக்கவில்லை என்பது சற்றே நிம்மதி கொடுத்தது. மணிக்கட்டை அறுத்துக் கொண்டால், எத்தனை நேரத்தில் உயிர் போகும்? அதற்குள் இந்த ஊரில் மருத்துவமனையைத் தேடிப்பிடித்து வருணுக்கு சிகிச்சை அளித்துவிட இயலுமா?
அதிலும் இந்த ஊரில் மருத்துவ உதவி என்பது உயிர் போகும் விஷயங்களுக்கு மட்டுமே உடனடியாக கிடைக்கும். சில வாரங்களுக்கு முன்னர், கண்டதையும் இரவில் தின்று தீர்த்த யஷ்வந்திற்கு தீராத வயிற்று வலியும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டிருந்தது. யஷ்வந்தை அருகே இருக்கும் வெர்மெண்ட் ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றால், “காத்திருங்கள்” என்று சொல்லிவிட்டு அவன் வரலாறு, அவன் தாய் தந்தையர் வரலாறு, இந்தியாவின் வரலாறு என்று அனைத்தையும் கேட்டு எழுதிக் கொண்ட செவிலி,
“யு ஆர் நாட் அமெரிக்கன் சிட்டிசன்ஸ். யுவர் பில் வில் நாட் பி கவர்ட் பை மெடிக்கல் இன்ஸ்ஸுரன்ஸ்” என்று பதிலளித்திருந்தாள். வேண்டுமென்றால் தனியார் மருத்துவரிடம் காட்டிக் கொள்ளுங்கள் என்று தயவு தாட்சண்யமே இல்லாமல் சொல்லிவிட்டு, அடுத்த நபரிடம் வரலாறு விசாரிக்க சென்றிருந்தாள்.
சரி, தனியார் மருத்துவமனைக்குச் செல்லாலம் என்று முடிவெடுத்து விசாரித்தால், அவர்கள் இரு வாரங்கள் கழித்தே அப்பாயிண்மெண்ட் இருப்பதாகத் தெரிவித்தனர். அதற்கும் ஆகும் செலவைக் கேட்டவுடன் நன்றாக இருந்த இவர்களுக்கே வயிற்றுப் போக்கு ஏற்பட்டுவிடும் அளவிற்கு இருந்தது. அதன் பின்னர், வருணுக்குத் தெரிந்த அவனது ஊர் தெலுங்கு டாக்டர் ஒருவரிடம் பேசி, அவர் மூலமாகவே பிரிஸ்கிரிப்ஷன் வாங்கி, மருந்தகத்தில் மாத்திரை பெற்றுக் கொடுத்து, ஒருவழியாக யஷ்வந்தின் வயிற்றுப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அமெரிக்காவில் மருத்துவ உதவிக்கு அதிகம் செலவாகும் என்பதும், அதனாலேயே இங்கிருக்கும் சாமானியர் தங்களது உடலை நல்ல முறையில் பேண, வாக்கிங், ஜிம் போன்று உடற்பயிற்சி மேற்கொள்வர் என்று தெரிந்தது. சாதாரண வயிற்றுப் போக்குக்கே இத்துனை பாடு பட்டுவிட, இதோ இப்போது வருண் கையை அறுத்துக் கொண்டு மயங்கி விழுந்திருந்தால் என்ன செய்வது என்ற பெரும் கேள்வி திவ்யாவை பிடித்துக் கொண்டது.
அவளது படபடப்பு அவள் முகத்தில் தாண்டவமாட, மேலே நடந்த அரவம் கேட்டு மெல்லமாக, “வாட் ஹேப்பண்ட்?” என்று கேட்ட யஷ்வந்த் மேல் தேவையில்லாமல் கோபம் வந்திருந்தது. திவ்யா காட்டமாக பதில் பேசும் முன்னர், நல்ல வேளையாக வருண் தன் அறையின் கதவைத் திறந்திருந்தான்.
அறையின் வெளியே குழுமியிருந்த நால்வரையும் மையமாகப் பார்த்தவன், தன் ஸ்வெட்டரை எடுத்து மாட்டிக் கொண்டு, “நான் ஒரு வாக் போயிட்டு வர்றேன்” என்று எவருடைய பதிலுக்கும் காத்திராமல் படிகளில் இறங்கினான்.
அவன் முகத்தில் அடிபட்ட வேதனை மண்டியிருந்தது. அவன் உற்சாகம் நொடிப்பொழுதில் முழுவதுமே வற்றியது போன்ற ஒரு தோற்றம். ‘ஒரு நிராகரிப்பு இப்படியும் மனதை வேதனைப்படுத்துமா? அதுவும் இத்தனை சீக்கிரத்தில்?’ என்ற கேள்வி தான் திவ்யாவிற்குத் தோன்றியது.
அவள் மேலே பேச ஆயத்தமாகும் முன்னர் அவளை கையமர்த்திய பரணி, “ஐ வில் ஹேண்டில் ஹிம்” என்று கூறிவிட்டு, “இரு வருண் நானும் வர்றேன்” என்று வருணின் பதிலுக்காக காத்திராமல் வீட்டின் வாசல் நோக்கி நகர்ந்திருந்தான். சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த மற்ற மூவரும் கீழே இறங்கி கிட்ச்சனுக்கு வந்திருந்தனர்.
யஷ்வந்திற்கு ஆண்களின் பின்னே செல்வதா? இல்லை இங்கே பெண்களுடன் இருப்பதா என்று ஒரே குழப்பமாகிப் போனது. ஏதாவது செய்ய வேண்டுமே என்பதற்காக, திவ்யா பாதியில் அடுக்கி வைத்திருந்த அன்றைய வார காய்கறிகளை எடுத்து ஒழுங்குபடுத்தத் துவங்கினான். நாபி-ஜூனுக்கு அங்கே நடப்பது முழுவதுமாகப் புரியவில்லை என்ற போதும், ஆயாசமாக சோபாவில் அமர்ந்த திவ்யாவுடன் ஆறுதலாக தானும் அமர்ந்திருந்தாள்.
திவ்யாவிற்கு, அடிபட்டு போன வருணின் முகமே நினைவில் தங்கியது. அதை விடவும், வருணின் முகத்தோட பரணியின் முகமும் நினைவில் வந்து துன்புறுத்தியது. சில மாத காலமே பழகியிருந்த வருணுக்கு காதலை ஏற்காத தோல்வி என்பது இத்துனை வருத்தம் கொள்ளச் செய்கிறது என்றால், பரணிக்கு அன்று எப்படியிருந்திருக்கும்? அதிலும் இவள் மீதும் தவறு இருக்கும்போது அவனுக்கு இன்னமும் வலித்திருக்கும் தானே! அவன் போகும் போதும் வரும் போதும், வகுப்பில் பாடம் எடுக்கும் போதும் என, அவன் விழி வீச்சிற்கு இணையாக அவளும் தானே பார்த்து தொலைத்தாள். அவளும் அவன் மீது ஈடுபாடு காட்டியதனால் தானே தன் காதலைச் சொல்ல பரணிக்கு தைரியம் வரப்பெற்றிருக்க வேண்டும்?
ஆனால் இந்தக் கேள்வியெல்லாம் அவளுக்கு, அன்றைய இருவது வயது திவ்யபாரதிக்கு கொஞ்சமும் தோன்றியிருக்கவில்லை. அன்றைய மனநிலையில் தன்னையும், தன் குடும்பத்தினரையும், பணத்தேவைகளையும், அக்காவின் திருமணத்தால் ஏற்பட்டிருந்த நெருக்கடியையும், இதனால் திருமணம் என்ற சொல்லே கசப்பது போலவும் தோன்றியிருக்க, தன்னைப் பற்றிய எண்ணம் தவிர வேறு எந்த நினைவுமே இருக்கவில்லை. தன் நிராகரிப்பு பரணிக்கு எத்துனை மனக்கஷ்டத்தைக் கொடுத்திருக்கும் என்று உணரவில்லை.
ஆனால், இன்று வருணின் சஞ்சலத்தைக் கண்டபோது, அவளுக்கு பரணிக்கு அன்று எப்படி இருந்திருக்கும் என்ற கவலை தான் உண்டாயிற்று. நாபி-ஜூன் திவ்யாவின் அருகிலேயே அமர்ந்திருக்க, திவ்யா தன் பாட்டில் தமிழில் பேசிக் கொண்டிருந்தாள்.
“அப்போ எனக்கு அவ்வளோ மெசூரிட்டி இல்லைன்னு தான் சொல்லணும். இருந்திருந்தா அப்படி எடுத்தெரிஞ்சு வேணாம்னு சொல்லியிருக்க மாட்டேன். எந்த காரணமும் சொல்லத் தோணாம போச்சு. ஏதாவது ஒண்ணு சொல்லணும்னு, எல்லார் கூட பழகற மாதிரி தான் நீயும், உன் மேல எந்த தனிப்பட்ட விருப்பமும் இல்லைன்னு ஏதோ உளறிட்டு அப்போதைக்கு பிரச்சனை முடிஞ்சா போதும்னு எந்திரிச்சு வந்துட்டேன்” என்று கூறினாள்.
“எவ்வளோ செல்ஃபிஷ்ஷா இருந்திருக்கேன்ல. ஆனா, அன்னைக்கு அவனை பிடிக்கலைன்னு சொன்னது தப்போன்னு அதுக்கு அப்பறம் நிறைய முறை யோசிச்சிருக்கேன். ஏன்னா எனக்கு அவனை பிடிக்கும். அதுக்கு அப்பறம் அவனை காண்டாக்ட் பண்ண முயற்சி செஞ்சிருக்கலாம். என் வீட்டு நிலைமை என்னன்னு எடுத்து சொல்லி, அன்னைக்கு நான் பேசினத்துக்கு காரணம் என்னன்னு சொல்லியிருக்கலாம். ஆனா அதெல்லாம் செய்ய தைரியம் வரலை. அவனும் அதுக்கப்பறம் எங்கிட்ட பேசணும்னோ, என்னைப் பத்தி விசாரிக்கணும்னோ நினைக்கலை. எங்களுக்கு பொதுவான ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க தானே. அவனுக்கு என் மேல பிரியம் இருந்திருந்தா அவன் திரும்ப பேசியிருப்பான்னு நினைச்சேன். அவனே வேண்டாம்னு காண்டாக்ட் பண்ணாம இருக்கறப்போ நான் எப்படி வழிஞ்சுட்டு போய் திரும்ப பேசறதுன்னு விட்டுட்டேன்.
அவனுக்கு எவ்வளோ வலிச்சிருக்கும்னு அன்னைக்கு புரியலை. இன்னைக்கு அவன் கண்ணுல அந்த நிராகரிப்போட வலியை பார்த்தப்போ என்னால தாங்க முடியலை” என்று சொல்ல சொல்லவே திவ்யாவின் மனதை பெரும் பாராங்கல் அழுத்த, அவ்வழுத்தத்தில் கன்னத்தில் லேசான கோடுகள் போட்டது கண்ணீர்.
நாபிக்கு இவள் பேசியது எதுவும் புரியவில்லை. சற்றே தள்ளி அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யஷ்வந்திற்கும் புரியவில்லை. ஆனால், திவ்யாவின் மனக்கவலையை இருவரும் உணர்ந்தவர் போல, அமைதியாக அவள் புலம்பலைக் கேட்டுக் கொண்டனர். திவ்யாவின் அழுகையைக் கண்டு சற்றே திகைத்த யஷ்வந்த் அவசரமாக தேநீர் கோப்பையை அடுப்பில் ஏற்றி, சூடாக டீ தயாரித்துக் கொண்டிருந்தான். கிச்சன் மேடையில் வருண் வாங்கி வந்த பூங்கொத்து கேட்பாறின்றி கிடந்தது.
error: Content is protected !!