Skip to content
Post Views: 977
அம்மையப்பன் 33
கிருஷ்ணகுமார் வேதனையுடன் தன் மனைவியின் தோளில் கரத்தை பதித்து அழுத்த.. அது தன்னிலை அடைந்த மணிமேகலை தன் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்தவாறு மேற்கொண்டு சொன்னார்..
Advertisement
கலையரசி சொன்ன மாதிரியே அடுத்த ரெண்டு நாள்ல உங்க மாமாக்கும் எனக்கும் காட்டுக் கோவில்ல கல்யாணம் நடந்துச்சு.. நடைபினமா இருந்தேன்.. என் உணர்வுகள் மொத்தமும் செத்துப்போச்சு..
எப்படியாவது எங்க மாமன் உயிரை காப்பாத்துட்டு, என்னோட வாழ்க்கையை முடிச்சுக்கணும்னு நினைச்சேன்.. ஆனா உங்க மாமா என்னை, என் காதலை, ஏன் என் பெண்மையை கூட காப்பாத்தி கொடுத்தார்.. என கண்ணீர் திரல்களுடன் திருச்செல்வம் அவள் காலில் விழுந்ததிலிருந்து அதி பிறப்பின் முறை வரை அனைத்தையும் கூறினார்..
Advertisement
Advertisement
அகத்தியன் அமுதன் இருவரும் திருச்செல்வத்தை நினைத்து நெகிழ்ந்து போனார்கள்.. தன் காதலிக்கு மனதால் மட்டுமின்றி உடலாலும் தூய்மையாக இருக்க வேண்டும் என நினைத்து அவர் எடுத்த முயற்சிகளை எண்ணி பெருமையும் கர்வமும் கொண்டனர்..
எங்க மாமாவும் சென்னையில இன்னொரு வீட்டுல இருந்தார்.. அங்க உள்ள ஒரு ஹாஸ்பிட்டல்ல தான் அவருக்கு ஆப்ரேஷன் நடக்க இருந்தது.. எங்க அத்தை இங்க கொஞ்சநாள் அங்க கொஞ்ச நாள்ன்னு இருந்தாங்க..
Advertisement
அதி எனக்குள்ள கொஞ்ச கொஞ்சமா வளர ஆரம்பிச்சா.. என்னோட தனிமைக்கும் மன அழுத்ததுக்கும் அவதான் மருந்தா இருந்தா.. என்னை அறியாமயே அவகிட்ட பேசிக்கிட்டே இருப்பேன்.. ஏன்னு அப்போ புரியல.. இப்பதான் தெரியுது..
வளர்ந்த பிறகு அவ என் முகத்தை கூட பார்க்கமாட்டான்னு தான்.. அப்போவே அவ்வளவு பேசியிருக்கேன் போல என அவர் அழுகையும் தேம்பலுமாக கூற.. மற்றவர்களுக்கும் கண் கலங்கி விட்டது..
அவ பிறந்தபிறகு திருச்செல்வம் சார் மாதிரி என்னால அவளோட நெருங்கி பழக முடியல.. அவளும் அவரும் இருக்கிறத பாக்கும்போது எனக்கும் என் பொண்ணை அள்ளியெடுத்து கொஞ்ச ஆசையா இருக்கும்.. ஆனா என்னால அது முடியாது.. ஏன்னா இது நிரந்தரமான உறவு இல்லையே..
நான் அவளை விட்டு பிரியப்போறவ.. கொஞ்ச நாளுக்கு மட்டும் எதுக்கு அம்மா பாசத்தை காமிச்சு அவளை கஷ்டப்படுத்தனும்ன்னு நினச்சு என் மனச கல்லாக்கிட்டேன்…
நான் வெறும் வாடகை தாய், அவ மேல எனக்கு உரிமை கிடையாதுன்னு என்னையே நான் சமாதானம் செஞ்சுக்கிட்டேன்..
என் மாருல போட்டு அவளுக்கு பாலுட்டும் போது என்னையே அறியாம நான் அவளை வருடி தலை கோதும் போதெல்லாம் அவ என்னை பார்த்துக்கிட்டே இருப்பா.. சிரிப்பா.. மனசுக்குள்ள பூரிச்சுப்போவேன்.. ஆனா வெளில காமிச்சுக்க மாட்டேன்..
எல்லாரும் கைகுழந்தைக்கு அம்மான்னு தான் மொதல்ல சொல்லி தருவாங்க.. ஆனா எனக்கு அதுக்கு கூட கொடுப்பினை இல்லை.. என அவர் தன் கரம் இரண்டையும் மார்போடு அழுத்தி கதறியழுதார்..
அதிக்கு ஆறுமாசம் இருக்கும் போது திருச்செல்வம் சார் எங்களுக்கு கல்யாணம் பண்ணிவச்சுட்டார்.. என் பொண்ண பிரியிற நேரம் வந்துடுச்சு.. உயிரே போற மாதிரி வலிச்சுச்சு.. என்னால முடியாம திருச்செல்வம் சார்கிட்ட அவளை வளர்க்க முடியாத சூழ்நிலை வந்தா என்கிட்ட கொடுக்க சொன்னேன்.. ஆனா அவர் பதில் சொல்லாம சிரிச்சுட்டு போயிட்டார்.. அதுலயே என்னோட மொத்த நம்பிக்கையும் போயிடுச்சு.. இதுதான் என் பொண்ண கடைசியா பாக்குறதுன்னு நினைச்சேன்.. என விரக்தியாக சொன்னவர் சற்று நேரம் அமைதியாக இருக்க.. கிருஷ்ணகுமார் பிறகு நடந்தவைகளை சொன்னார்..
எனக்கு மொதல்ல இந்த விஷயம் எதுவும் தெரியாது தம்பி.. இவங்க கல்யாணம் நடந்த பின்னாடி தான் எங்கம்மா நடந்தத சொன்னாங்க.. என்னால தாங்கிக்கவே முடியல.. ஆப்ரேஷன் வேணா மேகலைய கூட்டிட்டு வந்துடலாம்னு எங்கம்மாகிட்ட கெஞ்சுனேன்.. ஆனா அவங்க மறுத்துட்டாங்க..
அவ உனக்காகதாண்டா இதுக்கு ஒத்துக்கிட்டா.. அவ முயற்சிய நிழலுக்கு இறைச்ச நீரா மாத்திறாதடா ராசா என காலுலயே விழுந்துட்டாங்க.. என்னால அவங்கள மீறி எதுவும் செய்ய முடியல.. என வேதனையும் வருத்தமும் ஆக கூறினார்
இன்னொருத்தரோட மனைவியா என் கண் முன்னாடி வர இவளும் விரும்பல.. ஒவ்வொரு தடவையும் இவள வர சொல்ல சொல்லி அம்மாகிட்ட கெஞ்சுவேன்..
அதிப்பிறந்த ஆஸ்பத்திரியில தான் நானும் இருந்தேன்.. அம்மா தூக்கிட்டு வந்து காமிச்சாங்க.. ரோஜா பூக்கு கை கால் முளைச்ச மாதிரி அவ்வளவு அழகா இருந்தா குட்டி பொண்ணு.. என் மேகலையோட குழந்தை எனக்கும் குழந்தை தான்.. என்னோட முதல் பிள்ளையா தான் அதிய நான் பார்த்தேன் என நெகிழ்வாக கூறினார்..
எனக்கு ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சாலும் சில காம்ப்ளிகேஷன் இருந்தது. அதெல்லாம் சரியாகுறதுக்கு ஆறு மாசம் ஆயிடுச்சு.. திருச்செல்வம் சாரும் எங்களுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டார்..
அவர் மாதிரி ஒரு மனுஷன பாக்குறது ரொம்ப கஷ்டம்.. உங்க வீட்டுல உள்ளவங்களுக்கு அவரோட இந்த கல்யாணம் தெரிஞ்சாலும் பெருசா எதுவும் நடந்துருக்காது.. காலம் முழுக்க மேகலைய இன்னொரு வீட்டுல வச்சு அவர் பார்த்திருக்கலாம்.. குடும்பத்துக்காக வாரிசுக்காகன்னு காரணம் சொல்லி தன்னை நல்லவனா காட்டியிருக்கலாம், ஆனா உங்க மாமா மனதால் மட்டுமின்றி உடலாலையும் உங்க அக்காக்கு உண்மையா இருந்திருக்கார்.. மேகலையோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்திருக்கார்.. எனக்கு கல்யாணமும் செஞ்சுவைச்சு ஒரு வேலைக்கும் ஏற்பாடு செஞ்சுட்டு தான் அதியை கூட்டிட்டு மேட்டுப்பாளையம் போனார்..
கல்யாணம் ஆன கொஞ்ச நாள் நாங்க சென்னையிலதான் இருந்தோம்.. மேகலைக்கு அதி நினைப்பாவே இருந்தது.. இப்படியே இருந்தா இவளுக்கு ஏதும் ஆகிடுமோனு பயம் வந்துடுச்சு.. அதனால நான் அம்மா மணிமேகலைய கூட்டிட்டு மும்பைக்கு போயிட்டேன்.. போறதுக்கு முன்னாடி திருச்செல்வம் சார்கிட்ட சொல்லிட்டு தான் போனோம்..
அங்க என்னோட சினேகிதர் மூலமா ஒரு வேலை வாங்கிட்டேன்..
மேகலையும் நானும் சாதாரணமா வாழ ஆரம்பிக்கவே எங்களுக்கு சில மாதங்கள் தேவைப்பட்டுச்சு.. அப்புறம் ஊருல உள்ள வீட்டை வித்துட்டு, அந்த பணத்துல சின்ன துணிக்கடை ஆரம்பிச்சேன்.. எல்லாம் நல்லா போயிட்டு இருந்துச்சு. எங்களுக்கு மித்ரன் பிறந்தான்.. மகிழ்ச்சியா இருந்தாலும் அதி இல்லாததால் எங்களால் அத முழுமையா அனுபவிக்க முடியல.. எங்களோட எல்லா சந்தோஷத்திலயும் அதி இல்லைங்கிற வருத்தம் எங்களுக்கு இருக்கவே செஞ்சது..
சில வருஷம் கழிச்சு திருச்செல்வம் போன் பண்ணி இருந்தார்.. அதிய எங்க கூட வச்சுக்க முடியுமான்னு கேட்டாரு எங்களால அத நம்பவே முடியல.. சந்தோஷமா இருந்தாலும் அங்க அதிக்கு எதுவும் ஆயிடுச்சோ, என்னாச்சோ ஏதாச்சோன்னு கொஞ்சம் பயமாவே இருந்துச்சு.. ரெண்டு நாள் கழிச்சு அதியையும் கூட்டிகிட்டு திருச்செல்வம் மும்பை வந்திருந்தார்..
ஒரு குட்டி தேவதை மாதிரி இருந்தா அதி என சொல்லி கொண்டிருந்தவரின் விழிகளுக்குள் அந்நினைவுகள் எல்லாம் படமாக ஓடியது..
கிருஷ்ணகுமார் ஆரம்பித்த துணிக்கடை மிகவும் லாபகரமாக சென்று கொண்டிருந்தது.. 5 வருடத்தில் அதன் முன்னேற்றம் அசுர வளர்ச்சியாக தான் இருந்தது..
அப்போதுதான் அவர் ஒரு வீட்டையும் கட்டி இருந்தார்.. கிருஷ்ணகுமாரும் மணிமேகலையும் பதட்டமும் பரவசமுமாக வீட்டின் வாசலிலேயே நின்று கொண்டிருந்தனர்.. இன்னும் சற்று நேரத்தில் அதி வரவிருக்கிறாள்.. அதனால் தான் இந்த பரபரப்பு..
மாமா அதி நல்லா வளர்ந்திருப்பாள்ல.. என் பொண்ணு இனி என் கூடத்தான் இருக்க போறா, என பரவசமாக கிருஷ்ணகுமாரின் கையை பிடித்து சொன்னவர், சற்று நேரத்திலேயே முகம் சோர்ந்து போனார்..
என்னாச்சு மேகலை..
நான் தான் அவ அம்மான்னு சொன்னா என்ன ஏத்துப்பாளா மாமா.. ஏன் என்ன இதுவரைக்கும் பார்க்க வரலைன்னு கேட்டா என்ன மாமா சொல்றது.. அவ அப்பான்னு உங்கள காமிச்சா என்ன கேட்பா.. என்னன்னு நினைச்சுக்குவா.. அவளுக்கு நம்மள புரியவைக்க முடியுமா என பரிதவிப்பாக கேட்டார்.. நேரம் செல்ல செல்ல அவருக்கு அதியின் மனம் குறித்து பதட்டமும் பயமும் அதிகரித்தது..
அப்பொழுது கால்டாக்சி ஒன்று வர.. அதிலிருந்து திருச்செல்வம் இறங்கினார்.. அவரைத் தொடர்ந்து தோளில் குட்டி பேக்குடன் ப்ளூ கலர் கவுனில் மொச்சை கொட்டை விழிகளை விழித்தவாரு அதி இறங்கினாள்..
மணிமேகலை விழியெடுக்காது தன் மகளையே பார்த்து கொண்டிருந்தார்.. தலை முதல் பாதம் வரை பார்வையால் அவளை வருடி கொண்டிருந்தார்.. விழிகள் ஆனந்த கண்ணீரை சொரிய.. பார்வை மங்கியது.. அதனை பொருக்காது வேகவேகமாக தொடைத்தவர் கால்கள் நடுங்க அதியை நோக்கி சென்றார்.. மெல்ல அவளிடம் நெருங்கியவர் அவள் உயரத்திற்கு அமர்ந்து நடுங்கும் விரல்களால் அவள் முகத்தை வருடினார்..
கிருஷ்ண குமார் நெகிழ்ச்சியுடன் அவர்களை பார்த்து கொண்டிருந்தார்..
அதியை மார்போடு அணைத்து கொண்டு அவள் கன்னம் இரண்டிலும் வேகமாக முத்தமிட சின்னவள் பயந்துவிட்டாள்.. அவள் உடனே தந்தையின் கரத்தை பிடித்து அவர் பின் மறைந்து கொள்ள.. மணிமேகலை தவித்து போனார்.. தன்னை அவளுக்கு பிடிக்கவில்லையோ என அவர் நினைக்க,
மேகலை, திடிர்னு நீ இப்படி பண்ணினதும் புள்ள பயந்துடுச்சு.. நீ வேறேதும் நினைக்காத என சமாதானம் செய்தவர்.. திருச்செல்வத்தை வாங்க என அழைத்தார்..
அதி மணிமேகலையை புரியாது பார்த்தவாறே உள்ளே சென்றாள்.. திருச்செல்வம் அதி என இருவரின் முகமும் சோர்ந்து காணப்பட்டது.. அதுவும் திருச்செல்வத்தின் கண்ணில் உயிர்ப்பே இல்லை..
மணிமேகலை அதியை பார்த்தவாரே நின்று கொண்டிருக்க.. கிருஷ்ணகுமார் என்ன பார்த்துட்டு இருக்க மேகலை, போய் குடிக்க ஏதாவது கொண்டு வா என மெலிதாக கண்டித்தார்..
மதுமா உனக்கு குடிக்க என்னடா வேணும் என அதியின் தலையை வருடி கேட்க..
தன் தந்தையை ஒரு பார்வை பார்த்த அதி பிஸ்தா மில்க் என்று சொல்ல, அந்த ஒற்றை சொல்லிலே பூரிப்படைந்த மேகலை மீண்டும் அவள் நெற்றியில் அழுத்த முத்தமிட்டு சமையலறைக்குள் சென்றார்..
ஜீனி சேர்க்க வேண்டாம்மா, நாட்டுசர்க்கரை இருந்தா அது போடுங்க என மெல்லிய குரலில் திருச்செல்வம் சொல்ல.. மேகலை தலையசைத்தார்..
திருச்செல்வத்திற்கு இஞ்சி டீயும், அதிக்கு பிஸ்தா பொடியும் நாட்டுசர்க்கரையும் கலந்து இளஞ்சூடாக பால் கொண்டு வந்து கொடுத்தார்..
கிருஷ்ணனுக்கு திருச்செல்வத்தின் முகத்திலிருந்தே அவர் பெரும் துயரத்தில் இருப்பது போல் தெரிந்ததால், மேற்கொண்டு எதுவும் கேட்காது அவரை அறையில் சற்று ஓய்வெடுக்க கூறினார்..
திருச்செல்வத்துடன் அதியும் பின்னே சென்றாள்..
என்ன மாமா இது? ஏன் அவங்கள போக சொன்னிங்க.. நான் இன்னும் அதிய சரியா பார்க்கல, பேசல என மணிமேகலை ஆட்சேபனைக் கொள்ள கிருஷ்ணகுமார் யோசனையாக அவரை பார்த்தார்..
மணிமேகலை அவரின் பார்வையின் பொருள் புரியாது என்ன மாமா என கேட்டார்..
என்னமோ பெருசா நடந்திருக்கு போல மேகலை.. திருச்செல்லம் சார் முகமே சரியில்ல.. கொஞ்ச நேரம் அவர் ஓய்வெடுக்கட்டும். அப்புறம் என்ன ஏதுன்னு கேட்டுக்குவோம்.. இனி அதி நம்மளோட தானே இருக்க போறா என தன் மனைவியை சமாதானம் செய்தார் கிருஷ்ணகுமார்..
இரண்டு மணி நேரம் கழித்து திருச்செல்வம் மட்டும் வெளியே வெளியே வந்தார்..
அப்பொழுது ஹாலில் கிருஷ்ணகுமார் மித்ரனை மடியில் அமர்த்தி அமர்ந்திருக்க, அவர்கள் அருகில் மணிமேகலை அமர்ந்திருந்தார்..
முதலில் அவரைக் கண்ட மணிமேகலை வாங்க சார் என எழுந்து நிற்க..
இல்லம்மா நீங்க உட்காருங்க.. மித்ரனை பார்த்து உங்க மகனா என திருச்செல்வம் கேட்க.. கிருஷ்ணகுமார் ஆமோதிப்பாய் தலையசைத்தார்..
இவரு எங்க வீட்டு குட்டி ராஜா சிவமித்ரன் என தன் மகனை கிருஷ்ணகுமார் அறிமுகம் செய்ய.. மித்ரன் வெட்கத்துடன் அன்னையின் மடியில் முகம் புதைத்தான்..
சிறிது நேரம் சம்பிரதாயமாக பேசிய திருச்செல்வம், சற்று தயங்கியவாரு கிருஷ்ணகுமாரை பார்த்தார்.
அவரின் பார்வையின் பொருள் புரிந்த கிருஷ்ணன் மனைவிக்கு கண் காண்பிக்க, அவள் மகனை அறைக்குள் விளையாடுமாறு சொல்லிவிட்டு வந்தாள்..
கிருஷ்ணகுமாரும் மணிமேகலையும் திருச்செல்வத்தை சங்கடப்படுத்தாமல் அவரே பொறுமையாக சொல்லட்டும் என அமைதியாக இருந்தார்கள்..
ஒரு பெருமூச்சுடன் திருச்செல்வம் பேச ஆரம்பித்தார்..
உங்ககிட்ட இந்த விஷயத்தை கேட்க எனக்கு சங்கடமா தான் இருக்கு.. ஆனாலும் எனக்கு வேற வழி தெரியல. இனிமே மதுக்குட்டிய உங்க பொண்ணா உங்க கூடவே வச்சுக்க முடியுமா என்ன மெல்லிய குரலில் கேட்டார் திருச்செல்வம்..
அவ்வார்த்தையை சொல்வதற்குள் அவர் தொண்டை குழி ஏறி இறங்கிய விதமும், அவரின் உயிர்பில்லா விழிகளுமே திருச்செல்வம் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என இருவருக்கும் புரிந்தது..
மதும்மா எங்க கூட இருக்கிறது எங்களுக்கு கிடைச்ச வரம்.. அதனால நீங்க அதை பத்தி ஏதும் வருத்தப்படாதீங்க, இப்போ மட்டுமில்ல அவ பிறந்ததுல இருந்தே அவ எனக்கும் பொண்ணு தான்.. இங்க உள்ள எல்லார்கிட்டயும் எனக்கு ரெண்டு குழந்தைகள்ன்னு தான் சொல்லிருக்கேன் என கிருஷ்ணகுமார் சொல்ல. திருச்செல்வம் அவரை அந்நேரம் கடவுளாக பார்த்தார்..
error: Content is protected !!