Skip to content
Post Views: 3,844
அத்தியாயம் 12
மஞ்சுளாவுக்கு பி.பி. அதிகமாகி வேலை செய்யும் இடத்தில் மயக்கமாகி விட்டார். உடன் வேலை செய்பவர்கள் அருகில் உள்ள மருத்துவமணைக்கு அழைத்து சென்று அட்மிட் செய்து ஆனந்தனுக்கு அழைத்து விஷயத்தை தெரியபடுத்தவும், பதறிக்கொண்டு மருத்துவமணைக்கு விரைந்தார்.
Advertisement
அதிகமான மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை ஏகத்திற்கும் ஏற்றிவிட்டிருந்தது.
இரண்டு நாட்கள் மருத்துவமணையில் ஓய்வு எடுத்த பின்னரே, சற்று தேறினார் மஞ்சுளா.
Advertisement
அவரை பார்ப்பதற்காக அஞ்சனா குடும்பத்துடன் தஞ்சாவூர் வந்திருந்தார்.
Advertisement
“வாடிம்மா… வாங்க மாப்பிள்ளை.. வாங்க அண்ணி.. வாங்க பசங்களா..” என்று பாரு பாட்டி தான் வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றார்.
Advertisement
“என்ன அம்மா? மஞ்சுக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே நுழைந்தார் அஞ்சனா.
“எல்லாம் உன் மருமக பார்த்த வேலை தான். என் மருமக இப்படி படுத்துட்டா. இத்தனை வருஷத்துல, ஒரு நிமிஷம் கூட இப்படி அவ சோர்ந்து படுத்து நான் பார்த்ததில்லை” என்று மூக்கை உறிஞ்சினார் பாரு பாட்டி.
“டேய்.. அண்ணா.. எப்படிடா? ஆரம்பமே அமர்க்களமா இருக்கே. இந்த பாட்டி இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை. ஏதாவது அரசியல் கட்சியில சேர்த்து விட்டிருக்கணும்“ என்றாள் அபிநயா அபிநந்தனிடம்.
ஆனந்தன் அமைதியாக தலை அசைத்து அனைவரையும் வரவேற்றார். மகளும் மாப்பிள்ளையும் சொல்லாமல் எங்கேயோ சென்றது அவருக்கு மிகவும் வேதனையாக இருந்தது. எவ்வளவு வெறுத்து போயிருந்தால், இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார்கள். வேலையையும் விட்டுவிட்டு, பணத்தையும் கொடுத்துவிட்டு எங்கே சென்றார்களோ? என்று அவர் மனம் பதைபதைத்தது. எப்பொழுதும் மகளை கரித்து கொட்டிய மனைவியிடமும் அம்மாவிடமும் அவர் பேசுவதையே நிறுத்தி விட்டார். அதனுடன் சேர்ந்து மனைவியின் உடல் நல கோளாறு அவரை மிகவும் தளர செய்திருந்தது.
“என்ன அண்ணா நீங்க? ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க? மஞ்சுக்கு ஒன்னும் ஆகாது” என்று அண்ணன் அருகே சென்று அமர்ந்து அவர் கையை பிடித்துக்கொண்டார் அஞ்சனா.
மஞ்சு மெதுவாக ரூமில் இருந்து எழுந்து வெளியே வந்து அனைவரையும் வரவேற்று நீளிருக்கையில் அமர்ந்துகொண்டார்.
“உடம்பு இப்ப பரவாயில்லையாம்மா?” என்றார் சொர்ணம் பாட்டி.
“என் பொண்ணு பண்ண காரியத்துக்கு எப்படி நல்லா இருக்க முடியும் அத்தை?” என்று அழுக தொடங்கினார் மஞ்சுளா.
அப்பொழுது தான் குளித்துவிட்டு வெளியே வந்தாள் ரித்விகா. அமைதியாக அபிநயா பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டாள்.
“நீ எதுக்கு அழுகுற மஞ்சு. எதுக்கு உன் உடம்பை கெடுத்துகிற. நம்மள வேண்டாம்ன்னு போனவங்க பத்தி நாம எதுக்கு கவலைப்படணும் சொல்லு?” என்றார் அஞ்சு.
“நான் தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு உங்க அண்ணன் சொல்றாரு. என் பொண்ணு நல்லா வாழ கூடாதுன்னு நான் நினைப்பேனா, சொல்லு அஞ்சு?” என்று மூக்கை உறிஞ்சினார்.
இவர்கள் டிராமாவை ஆரம்பிக்கவும், சத்தமின்றி ஆனந்தன் வடிவேலுவை அழைத்துக்கொண்டு வெளியே சென்று விட்டார். அவர்களை தொடர்ந்து தாத்தாவும் வெளியே சென்றுவிட்டார்.
“எங்க வீட்ல மட்டும் என்ன? நண்டு சிண்டு எல்லாம் என்னை தான் குறை சொல்லுது. நான் தான் அவங்களை நிம்மதி இல்லாமல் துரத்தி விட்டுட்டேன்னு”
“நம்ம அப்படி என்ன பண்ணிட்டோம் அஞ்சு”
“எனக்கும் புரியலை மஞ்சு. அவங்க நல்லத்துக்கு தானே பார்த்து பார்த்து செஞ்சோம்”
“அபி அண்ணா, இவங்க இரண்டு பேரு கூட இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாலும் நமக்கு பயித்தியம் தான் பிடிக்கும். வாங்க, நாம ரூமுக்கு போலாம்” என்று ரித்விகா அபிநந்தனையும் அபிநயாவையும் அவள் அறைக்குள் சத்தமின்றி அழைத்து சென்றுவிட்டாள்.
பாரு பாட்டி மகள், மருமகள் இருவரையும் ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
இவர்களிடம் பேசுவது வீண் என்று நினைத்த சொர்ணம் பாட்டி, அடுப்படிக்குள் சென்று பார்த்தார். சமையல் வேலை செய்யும் அம்மா, ஒற்றை ஆளாக தடுமாறி கொண்டிருந்தார்.
“காய்கறி நறுக்க வேண்டியதை கொடும்மா, நான் நறுக்கி தருகிறேன்” என்று கேட்டு அவருக்கு உதவ தொடங்கினார் சொர்ணம் பாட்டி.
“அஞ்சு, நம்ம எப்படியாவது அவங்களை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரணும்”
“ஆமாம் மஞ்சு. கூட்டிட்டு வந்து, அவங்க கொடுத்த காசு நகை எல்லாத்தையும் திருப்பி கொடுத்திட்டு, இனி உங்க விசயத்துல தலை இட மாட்டோம்னு சொல்லிடனும்”
“சரியா சொன்ன அஞ்சு. நமக்கு எதுக்கு இந்த வீண் பழி. அவங்க வாழ்க்கையை பார்த்துக்கட்டும், நாம் அவங்ககிட்ட எல்லாத்தையும் திருப்பி கொடுத்திடனும். அப்ப தான் நமக்கு நிம்மதி”
“ஆனா, எங்கன்னு போய் தேடறது?”
“நான் அவங்க அனுப்பின லெட்டர் எடுத்து பார்த்தேன். நாக்பூர்ல இருந்து தான் போஸ்ட் பண்ணி இருக்காங்க”
“நானும் நோட் பண்ணுனேன.. ஆனா நாக்பூர் எதுக்கு போயிருப்பாங்க?”
“எல்லாம் என் பொண்ணோட ஐடியாவா தான் இருக்கும். குரு இப்படி எல்லாம் யோசிக்க மாட்டான்”
“அருணா சொன்னா, இவன் எல்லாம் கேட்டுப்பானா? பார்த்த இல்ல, குழந்தை இறந்ததுக்கு நாம தான் காரணம்ன்னு எப்படி பேசுனான். இரண்டு பேரும் சேர்ந்து தான் எல்லா வேலையும் பார்த்து இருக்காங்க”
“அதுவும் சரிதான் அஞ்சு. இப்ப நம்ம என்ன செய்றது?
ஹாலில் அஞ்சுவும் மஞ்சுவும் எப்படி குருவையும் அருணாவையும் கண்டுபிடித்து அழைத்து வருவது என்று தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
“ரித்து, உனக்கு எப்ப ஸ்கூல்?” என்றாள் அபிநயா.
“இன்னும் இருபது நாட்கள் இருக்கு அபி. அதை விடு, உங்க இரண்டு பேருகிட்டயும் முக்கியமான விஷயம் சொல்லணும். அதுக்கு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றாள் ரித்விகா ரகசிய குரலில்.
அவளது மடிக்கணினியை திறந்து, நாக்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் என்று அவள் சேகரித்த குறிப்புகளை காட்டினாள்.
“எதுக்கு இப்ப நாக்பூர் பத்தி காட்டுற?” என்றான் நந்தன்.
“அண்ணா, அக்காவும் அத்தானும் அனுப்பின லெட்டர் நாக்பூர்ல இருந்து தான் போஸ்ட் ஆயிருக்கு. என் கணக்கு படி நம்ம மம்மீஸ் இப்ப நாக்பூர் போய் அவங்களை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரததை பத்தி தான் பேசிட்டு இருப்பாங்க. நாமளும் அவங்க கூட சேர்ந்துக்கலாம். அப்ப சுத்தி பார்க்க தான் இந்த விவரம் எல்லாம் “ என்றாள் ரித்விகா தீவிரமாக.
“அடப்பாவி” என்று ரித்விகாவை பார்த்தனர் இருவரும்.
“நம்ம அவங்களை மாட்டி விடக்கூடாது இல்ல, பாவம் அண்ணாவும் அண்ணியும்“ என்றான் நந்தன்.
“நீங்க என்ன இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க? நாக்பூர்ல இருந்து லெட்டர் வந்தா அவங்க அங்க தான் இருப்பாங்களா? அப்படியே இருந்தாலும் நம்ம மம்மீஸ் என்ன போலீஸா? இரண்டுபேருக்கும் நல்லா பேச தெரியும். ஆனா ஆட்ளை தேடி கண்டு பிடிக்கிற அளவிற்கு எல்லாம் கெப்பாஸிட்டி இல்ல”
“இப்ப என்ன சொல்ல வர?” என்றாள் அபிநயா.
“நல்லா கேளுங்க, இரண்டு அம்மாக்களும் போலாம்னு சொன்னாலும் அப்பாஸ் ஒத்துக்க மாட்டாங்க. நாம மம்மீஸ்க்கு ஹெல்ப் பண்ற மாதிரி பேசி கிளம்புனா, நாக்பூர் போகலாம். தஞ்சாவூரையும் கும்பகோணத்தையும் தாண்டி நான் எங்கயும் போனதே இல்ல. இப்படி போனாதான் வேற ஊரை எல்லாம் சுத்தி பார்க்க முடியும். தனியா போன போர் அடிக்கும்ல. நீங்களும் வந்தா என்ஜாய் பண்ணலாம். அதான்” என்றாள் ரித்விகா கடகடகவென்று.
“அம்மா என்ன ஒரு திட்டம். நாங்க உங்கிட்ட டியூஷன் சேரலாம் போலயே“ என்றான் நந்தன்.
“நானும் வேற ஊர் எல்லாம் பார்த்தே இல்ல ரித்து, சூப்பர் ஐடியா” என்றாள் அபிநயா.
ரித்விகா சொன்னதை போல தான் எல்லாம் நடந்தது. யார் சொல்லியும் கேட்காமல் அஞ்சுவும் மஞ்சுவும் நாக்பூர் செல்வதாக கூறினார்கள். திட்டமிட்ட படி பிள்ளைகள் மூவரும் இவர்களுக்கு துணையாக வருவதாக கூறி இணைந்துகொண்டனர்.
என்னமோ பண்ணிக்கொள்ளுங்கள் என்று ஆனந்தனும் வடிவேலுவும் ஒதுங்கி கொண்டார்கள்.
“சொல்லாம கொள்ளாம ஓடி போய்ட்டாங்க இரண்டு பேரும். இப்ப என் பொண்ணும் மருமகளும் கஷ்டப்படறாங்க” என்றார் பாரு பாட்டி அஞ்சனாவின் குடும்பம் கிளம்புகையில்.
அதுவரை பேசாமல் இருந்த சொர்ணம் பாட்டி, “வயசுக்கு தக்க பேசுங்க அண்ணி. அவங்க என்ன திருட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா போயிருக்காங்க. புருஷனும் பொண்டாட்டியும் பிள்ளையை பறிகொடுத்திட்டு, மனசு நொந்து போய், நிம்மதிய தேடி போயிருக்காங்க. அப்ப கூட யாரும் கவலை படக்கூடாதுன்னு, பத்திரமா இருக்கோம்னு லெட்டர் போட்டுட்டு தானே போயிருக்காங்க. இனி ஒரு வார்த்தை யாரும் தப்பா பேசக்கூடாது. அவங்க எங்க இருந்தாலும் கடவுள் அருளால நல்லா இருப்பாங்க” என்று பாரு பாட்டியை பார்த்து கூறிவிட்டு, “ நீங்க தேடி போறது வேண்டாத வேலை. சொன்னா கேக்க மாட்டீங்க, ஆனா யாரும் என் பேரனயும் பேத்தியும் பத்தி இனி தப்பா பேசக்கூடாது” என்று அஞ்சு மஞ்சுவை பார்த்து கூறி முடித்தார்.
பின், “ஆனந்தா, நீ மனசை போட்டு அலட்டிக்காத. பிள்ளைங்க நல்ல மனசுக்கு எங்கே இருந்தாலும் நல்லா இருப்பாங்க. நீ கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு வேலையே பாரு. அவங்க இழப்பில் இருந்து மீண்டு வரட்டும். அப்புறம் அவங்களே நம்மளை தேடி வந்துடுவாங்க. நம்ம பிள்ளைகளை பத்தி நமக்கு தெரிய வேண்டாமா? “ என்று ஆனந்தனுக்கு ஆறுதல் கூறி, கிளம்பிவிட்டார்.
ரித்விக்காவின் பிளான் படி அம்மாக்களின் புலம்பல்களை காற்றில் விட்டுவிட்டு நன்றாக நாக்பூரை சுற்றி பார்த்துவிட்டு, வீடு திரும்பினார்கள். அதன்பின், விரைவில் அவர்களாகவே திரும்பி வரவேண்டும் என்ற வேண்டுதல்களுடன் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினார்கள் அனைவரும்.
ஆனால், பிள்ளைகளின் பிரிவினால் அஞ்சனா மஞ்சுளா இருவருக்கும் இடையில் இருந்த மனக்கசப்புகள் குறைந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தனர்.
தங்கள் கருத்துக்களை பிள்ளைகள் மீது திணிப்பதை விடுத்து இப்பொழுது பிள்ளைகளின் விருப்பத்தையும் சிறிதளவு கேட்டு நடக்கின்றார்கள்.
error: Content is protected !!