Skip to content
Post Views: 12,425
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!…
அத்தியாயம் 2
மறுநாள் மித்ரனே தானாக சென்று அக்கா மகளை பள்ளிக்கு அழைத்து வந்தான்.
“இருக்கட்டும் மித்து.. உங்க மாமாவுக்கு இன்னைக்கு வேலை எதுவும் இல்லை. அவரே கூட்டிட்டு போயிடுவார்…” என்று இரண்டாவது அக்கா சுமித்ரா சொல்ல,
Advertisement
“மாமாவ வேணாம் சொல்லி சுமி. பேபிய, நானே ட்ராப் பண்றேன். நாளைக்கு நீங்க பார்த்துக்கோங்க…” என்றவன், பிள்ளையோடு நகர்ந்து விட்டான்.
இன்றும் அதே நேரத்திற்கு காரை கிளப்பி செல்ல.. அவன் எதிர்பார்த்தது போலவே முன் பக்கம் பிரவீனா ஸ்கூட்டி சென்றது. மித்ரன் நேற்று போலவே ஆரன் அடிக்க, லேசாக திரும்பி பார்த்தவள்.. இவன் வண்டியை கண்டதும், தன் ஸ்கூட்டியை ஓரம் கட்டி விட்டாள்.
“போ ராசா போ.. நீ ரோட்டுல ஃப்ளைட் கூட ஓட்டு.. உன் வழிக்கே நான் வரல…” நினைத்து கொண்டே பிரவீ இறங்கி விட..
Advertisement
“அது…” என்ற மந்தகாச புன்னகையில் முன் சென்றான் மித்ரன்.
Advertisement
பிரவீனா, அவன் யாரோ என்ற ரீதியில் பிள்ளையை மட்டும் வகுப்பில் விட்டு முன்னே செல்ல,
“நேத்து ரோட்டுல இருந்து அரசாங்கம் வரைக்கும் ரூல்ஸ் பேசுனா மேடத்தை பார்த்தீங்களா பிரவீனா…” என்று நக்கலாக கேட்க.
“நல்லது சொன்னாலும், நமக்கு கிடைக்கிறது என்னமோ தண்டனை தான். என்னைக்காவது ஒரு நாள் குட்டி சுவத்தில் போய் முட்டுவீங்க.. அன்னைக்கு தெரியும்! நான் ஏன் மெதுவா போக சொன்னேன்னு…” கடுப்பாக பிரவீணா சொல்ல,
Advertisement
“பரவாயில்லைங்க மேடம் உங்கள நீங்களே குட்டிசாவர் என்று சொல்லிகிறாங்களே!.. உங்களுக்கு ரொம்ப பெருந்தன்மை.. ஏன்னா எனக்கு முன்னாடி போறது நீங்கதானே!..” என்று மீண்டும் கேலி செய்து சிரித்தான் மித்திரன்.
அவனை முறைத்து விட்டு வேகமாக ஆபீஸ் ரூம் சென்று விட்டாள். உண்மையில் மித்ரனுக்கு பெண்களை இப்படி கேலி செய்வது வராது. மித்ரன் எப்போதும் திறந்த புத்தகம் தான். என் வாழ்க்கை இதுதான் என்று தைரியமாக காட்டிக் கொள்வான். அவனுக்கு கல்யாணத்தில் நம்பிக்கை கிடையாது. அதற்காக மற்றவர்களின் கல்யாண வாழ்க்கையை கேலியாக நினைக்கவில்லையே… நான் இப்படித்தான்.. எனக்கு இது தான் பிடித்திருக்கிறது. அதை ஒழித்து மறைத்தெல்லாம் செய்யவில்லை..
கட்டுப்பாடுகள் அற்ற கமிட்மென்ட் இல்லாத சுதந்திரமான ஒரு வாழ்க்கையை மித்ரன் விரும்புகிறான். அதே போல கொள்கையுடைய பெண்களோடு மட்டுமே அவனது நட்பு.. மித்ரன் வாழ்க்கை முறை அவனை அறிந்த எல்லோருக்குமே தெரியும். அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பலரும் சகஜ மன நிலையில் தான் அவனோடு பழகுவார்கள் முதல் முறையாக உன் வாழ்க்கை முறை ஒழுக்கக்கேடு என்று விமர்சித்தது பிரவீணா மட்டும்தான்.
ஆணுக்கு ஆண் திருமணம் செய்வதையும்.. பெண்ணோடு மற்றொரு பெண் சேர்ந்து வாழ்வதையும் அவரவர் உரிமை என்று அங்கீகரிக்கும் சமூகத்தில் இருந்து கொண்டு, தன்னை நோக்கி ஒழுக்கு கேடு என்று விமர்சித்த பிரவீணா மேல் அப்படி ஒரு கோபம் மித்ரனுக்கு… இவள் யார் என்னை சொல்ல?… என்னை மாதிரி லீவ் இன் ரிலேஷன்ஷிப்பை விரும்பும் பெண்களோடு தானே என்னுடைய நட்பு. இவளை நாம் ஏதாவது சொன்னோமா என்ன!.. உண்மையில் மித்ரனுக்கு அவள் விமர்சித்த ஒழுக்க கேடு என்ற வார்த்தை மிகவும் பாதித்தது. அவன் மனதிலே அப்படி ஒரு எண்ணம் இருந்ததோ என்னவோ.. அவள் மேல் அன்றிலிருந்து வெறுப்பு தான்.
மித்ரன் நன்கு அறிவன் பிரவீணா திருமணமான பெண் என்றும், ஐந்து வயது மகனுக்கு தாய் என்றும்… என் வாழ்க்கை முறையை விமர்சித்தாய் அல்லவா!.. அப்போது நான் பேசுவதையும் கேட்டுக் கொள் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவளை சீண்டிப் பார்த்துக் கொண்டே இருப்பான். பட்டென்று பேசிவிடும் பிரவீனாவிற்கும் தொடர்ந்து வாக்குவாதம் செய்யும் திறன் கிடையாது. முறைத்துக் கொண்டே ஒதுங்கிப் போக இவன் மேலும் மேலும் சீண்டி கொண்டே இருப்பான்.
மித்ரன் நின்று கொண்டே யோசிக்க, தாயைத் தேடி வந்தான் மகன். அவனை பார்த்ததும் தெரிந்தது இவன் பிரவீணாவின் ஜெராக்ஸ் காப்பி என்று…
“ஹாய் ஐ அம் மித்து..” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
மித்ரனை ஆச்சரியமாக பார்த்த அந்த சின்ன வாண்டு அவனைப் போலவே “ஹாய் ஐ அம் அத்து…” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டது.
பல் தெரியும் அளவு விரிந்து சிரித்தவன், “நான் யுவி மித்ரன்” என்றான்.
“நான் ஆதிரன்…” என்றது சின்ன வாண்டு.
“சோ ஸ்வீட்..” என்று அவனின் குண்டு கன்னத்தை கிள்ளியவன், பெரிதாக தும்மல் போட்டான். மித்ரன் தும்மிய அடுத்த நொடி ஆதிரனும் தும்ம… இருவருக்கும் சிரிப்பு வந்தது. ஒரே நேரத்தில் இருவரும் ஹை ஃபை கொடுத்து, சிரித்து கொண்டார்கள்.
“உனக்கும் ஜலதோசமா?…” என்று மித்ரன் கேட்க.
“ஆமா, அங்கிள்..” என்றான் அத்து.
“என்ன ஆங்கிளா? நோ.. நோ.. நான் பியூர் சிங்கிள். சோ, நோ அங்கிள். கால் மீ மித்து..” என்று அவனோடு நட்பாகி கொண்டான்.
பிரவீணா மகனுக்கு ஃபீஸ் கட்டிவிட்டு வெளியே வர, அத்து, மித்ரனோடு சிரித்து பேசுவதை கண்டு அருகில் வந்தாள். ஆதிரன், மித்து என்று அழைத்துப் பேசவும்.. இவன் எப்படி தன் மகனோடு நட்பாகலாம் என்றதை மறந்து..
“அத்து என்னடா பழக்கம் இது? உன்ன விட மூத்தவங்கள பேர் சொல்லி கூப்பிடுறது. ஒழுங்கா அங்கிள் சொல்லு…” என்று அதட்டல் போட,
“அவனைத் திட்டாதீங்க பிரவீணா மேடம். நான் தான் என்னை அங்கிள் சொல்லாத சொன்னேன்…”
“ஏன் சார்?…” புரியாமல் கேட்டாள்.
“ஏன்னா? என்ன சொல்ல.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. நான் சிங்கிள் தானே.. என்ன போய் எப்படி அங்கிள் சொல்லலாம்…”
“சார் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா.. உங்களைவிட எனக்கு வயசு கம்மி, எல்லாரும் என்னை ஆண்டி சொல்றாங்க.. உங்களை அங்கிள் சொன்னா என்னவாம்.. நீங்க வயசுல மூத்தவர் தானே…” இதில் என்ன இருக்கு என்று பார்த்தாள் பிரவீணா.
“உங்களை அம்மானு சொல்ல பையன் வந்த மாதிரி.. என்னை அப்பான்னு சொல்ல பொண்ணு வரட்டும், நான் அப்போ அங்கிள் ஆகிக்கிறேன்…” விடாமல் சொன்னான் மித்ரன்.
“நீங்க அம்பது வயசு வரைக்கும் கூட கல்யாணம் ஆகாம இருப்பீங்க. அது வரைக்கும் உங்களை அங்கிள் சொல்லக்கூடாதாமா?…”
“ஆமா பிரவீணா மேடம். எப்போ வரைக்கும் நான் மிங்கிள் ஆகாமல், சிங்கிளா இருக்கேனோ.. அப்போ வரைக்கும் நான் அங்கிள் ஆக மாட்டேன்…” என்றவன்,
“பை அத்து.. நாளைக்கு மீட் பண்ணலாம்..” என்று நகர,
“முன்ன பின்ன தெரியாதவர் கூட உனக்கு என்னடா அவ்வளவு பிரண்ட்ஷிப்.. இனிமே அவர்கிட்ட பேச்சு வச்சுக்க கூடாது நீ…” என்று பிரவீணா அதட்ட, அவள் வார்த்தைகள் மித்ரன் காதில் விழுந்தன.
அன்றும் கால் மணி நேரம் தாமதமாக பிரவீணா செல்ல, மித்ரன் பெரிதாக ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. இந்த மேல் அதிகாரிகள் எல்லாம் தங்களுக்கு சாதகமாக நடந்தால் தான் நல்லவர்கள் போல என்று நினைத்துக் கொண்டாள் பிரவீணா.
வேலைகள் தொடங்க, எப்பவும் போல மித்ரன் தனது ஒரு காதை பிரவீணா வாய் அருகே வைத்து கொண்டான். அவளுக்கு மிகவும் நாசுக் பார்க்க வராது. மெல்ல பேசினாலும், பக்கத்தில் இருப்பவர்களுக்கு லேசாகவாது கேட்கும்.
“இன்னைக்கு என்ன பிரவீ லஞ்ச்?..” என்று ஶ்ரீ கேட்க.
“வீட்டுல யாரும் இல்லை ஶ்ரீ. எனக்கும், அத்துக்கும் மட்டும்தான். அவனுக்கு வேற நல்ல சளி. உங்க மாமா எப்பவும் சொல்லுவாரு குழந்தைகளுக்கு உடம்பு முடியலன்னா, முதல்ல கை வைத்தியம் பாக்கணும். அப்புறமும் சரியாக போனால் தான் டாக்டரை பாக்கணும்ன்னு..”
“ அவர் சொல்லை, நான் எங்க தட்டி இருக்கேன். டாக்டர் கிட்டலாம் போகல.. வெத்தலைச் சாறு, தூதுவளை சாறு எடுத்து ரசம் வச்சிருக்கேன். வெறும் ரசமா வச்சா அவன் சாப்பிட மாட்டான். அதான் கொஞ்சம் உருளைக்கிழங்கு ப்ரை அவனுக்கு.. எனக்கு மட்டும் பூண்டு தொக்கு பெருசா ஒன்னும் இல்ல…” என்று அவள் சொல்லி கொண்டு இருக்க..
“பிரவீணா மேடம்..”
“என்னங்க மித்ரன் சார்..”
“எனக்கும் பயங்கர சளி, தும்மல் மேடம். கொஞ்சம் உங்க மாமா சொல்ற கை வைத்தியத்தை, எனக்கும் கொஞ்சம் குடுங்களேன்…” என்று சொல்ல,
அவன் தன்னைக் கேலி செய்கிறானா என்று நிமிர்ந்து பார்த்தாள் பிரவீணா. ஏனென்றால் எப்பவும் அவள் மாமா பற்றி பேச்சு எடுக்கும் போது எல்லாம் நக்கல் பார்வை பார்ப்பவன் இவன்… அவன் முகத்தில் ஒன்றும் தெரியவில்லை. கேலியாகவும் தெரிந்தது, சீரியஸாகவும் தெரிந்தது கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள் பிரவீணா.
ஆனாலும், மதியம் உணவு உண்ண செல்லும் பொழுது அவளுக்கு மனம் ஒரு மாதிரியாக இருந்தது. வாய் விட்டு உணவு கேட்டு விட்டானே!.. அவன் எப்படி கேட்டாலும் இவளுக்கு கொடுக்காமல் இருக்க மனமில்லை. அதுவும் உணவு விஷயத்தில்… மித்ரன் எங்கே என்று பார்க்க அவன் தனியாக ரஞ்சன் உடன் அமர்ந்து இருந்தான்.
“மித்ரன் சார்..”
“என்னங்க பிரவீணா மேடம்”
“இந்தாங்க சார் நீங்க கேட்ட ரசம்…” என்று கொடுக்க,
வியந்து பார்த்தான் மித்ரன். அவன் ஏதோ இவள் மாமா புராணம் பாடவும் கிண்டலாக தான் கேட்டான். உணவு எங்கவும் உண்மையில் கொண்டு வந்து விட்டாள் பிரவீணா. அக்கறையோடு கொடுக்கும் உணவை மறுப்பது சரியில்லை. அத்தோடு எப்பொழுதும் தன்னை கண்டால் முகத்தை தூக்கிக் கொண்டும் ஒதுங்கும் பெண்.. தானாக உணவு கொடுக்கும் பொழுது தட்டிக் கழிக்கவும் விருப்பமில்லை. நன்றி சொல்லி வாங்கிக் கொண்டான்.
பிரவீணா, அவன் கொண்டுவந்த உணவை ஒரு மாதிரியாக பார்க்க.. என்னவென்று பார்த்தவனுக்கு விஷயம் புரிய, கொஞ்சம் அசடு வழிந்தான். அவன் கொண்டு வந்தது காய்கறி சாதம். இதில் எங்கு ரசம் சேர்த்து சாப்பிட.. இவள் புரியாமல் பார்க்க..
“நான் சும்மாவே குடிக்கிறேன் மேடம்…” என்றான்.
“எப்படி சார். சாப்பாட்டோடு சாப்ட்டா தான் நல்லா இருக்கும். என்கிட்ட சாதம் இருக்கு…” என்று தன் உணவை எடுத்து வந்து தர,
“அப்ப சரிங்க மேடம். எங்க வீட்டு உணவை நீங்க டேஸ்ட் பண்ணி பாருங்க… அவன் கொண்டு வந்த உணவை நகர்த்தி வைத்தான்..”
பிரவீணா முகம் மாறி விட்டது. “வேண்டாம் சார். நீங்க கேட்டீங்க, நான் கொடுத்தேன். அவ்வளவு தான். நான் ஶ்ரீ கூட ஷேர் பண்ணிக்கிறேன்…” என்று வேகமாக நகர்ந்து விட்டாள்.
மித்ரனுக்கு ஒன்றும் புரியவில்லை. நன்றாக பழகக்கூடிய பெண் போலத்தான் தெரிகிறாள். அப்புறம் ஏன் பட்டென்று சுருங்கி கொள்கிறாள். புரியாமல் பார்த்தான்.
“நாடு விட்டு நாடு போய் வந்தாலும் தமிழன் தமிழன் தான்டா மச்சான்” என்று கமெண்ட் அடித்தான் ரஞ்சன்.
“என்னடா சொல்ற…” என்று மித்ரன் பார்க்க.
“அதான் மச்சான் அடுத்து வீட்ல குழம்பு வாங்குறது. இப்படி கொஞ்சம் சாச்சு விடு…”
“டேய்! இது வெறும் ரசம்டா…”
“இருக்கட்டும் மச்சான் அடுத்து வீட்டு குழம்பு வாசனையே தனி..” என்று சொன்னாலும், உண்மையில் ரசம் அருமையாக இருந்தது.
ரெண்டு நாட்களாக மித்ரனுக்கு தொடர்ந்து சளி மூக்கடைப்பு இருந்தது. சுள்ளென்ற ரசம் அவனுக்கு மிக இதமாக இருந்தது. சாப்பிட்டு முடித்ததும் ரஞ்சன் நேரடியாகவே சொல்லிவிட்டான்,
“சிஸ்டர் ரசம் அருமை போங்க.. பிரியாணி கூட வச்சிருவாங்க. ஆனா, நிறைய பேருக்கு இந்த ரசம் மட்டும் கை வராது. உங்க ரசம் சூப்பர்.. நல்லா சுள்ளுனு இருந்துச்சு..” என்று சொல்ல,
லேசாக சிரித்துக் கொண்டவள்,
“மாமாவுக்கு கூட நான் வைக்கிற ரசம் தான் ரொம்ப புடிக்கும் ஸ்ரீ.. நான் வீட்ல இருந்தா அவருக்கு எந்த குழம்பு வச்சாலும் ரசம் இருக்கணும்..” என்று பெருமையாக சொல்ல,
சலிப்பாக பார்த்தான் மித்ரன். இவள் இந்த மாமா புராணத்தை விடவே மாட்டாளா?.. ஏற்கனவே அவள் மீது கொஞ்சம் மனசடவு தான் மித்ரனுக்கு.. ஒரே இடத்தில் வேலை பார்க்கும் பொழுது, இந்த மாதிரி உணவு பண்டங்களை ஷேர் பண்ணுவது சகஜம். இவள் கொடுப்பதை நாங்கள் உண்ணும் பொழுது, தாங்கள் கொடுப்பது ஏன் வாங்க மறுக்கிறாள்.
“ஏ மச்சான்! ஒரு பொண்ணுக்கு தாலி கட்டுறானே, அவன் யாரு?..” என்று அதிமுக்கிய சந்தேகத்தை ரஞ்சனை நோக்கி கேட்டான் மித்ரன்.
“என்னடா கேள்வி உன்னது.. ஒரு பொண்ணுக்கு யாரு தாலி கட்டுவா அவ புருஷன் தான்..”
“அப்ப புருஷனை புருஷன் சொல்லிட்டு போக வேண்டியது தானடா, அது என்ன மாமா, சோமா, அத்தான், பொத்தான்னு சொல்லி கிட்டு.. அநியாயம் பண்றாங்கடா ஒரு குருப்…”
“என்னடா மச்சான் உன் லாஜிக்கு.. புருஷனை எப்படிடா புருஷன்னு சொல்ல முடியும் நம்ம ஊரு பொண்ணுங்க.. என்னடா நீ யோசிக்கிற!. வாங்க புருசன், போங்க புருசன்னா சொல்லுவாங்க.. செல்லமா மாமா,மச்சான், அத்தன்னு தான் சொல்லுவாங்க…”
“ஆமா சொல்லுவாங்க.. ஸ்டோன் ஏஜ் கேர்ள். எண்பதுகளில் வர கதாநாயகிக்கு யாரடா வேலை கொடுத்தது. கோயில்ல குறி சொல்ற பொண்ணு மாதிரி இருக்காங்க…” என்று மித்ரன் சொல்லும் போதே எழுந்து கொண்டாள் பிரவீணா.
அவளுக்கு தெரியும் தன்னைத்தான் கேலி செய்கிறார்கள் என்று.. கண்டு கொள்ளாமல் போக தெரியவில்லை. நேருக்கு நேர் கேட்டுதான் பழக்கம்.
“உங்களுக்கு என்னோட என்ன கலாட்டா மித்ரன் சார்…” என்று பிரவீ கேட்க.
“என்னாச்சுங்க மேடம்?…” எதுவும் தெரியாதது போல அவன் கேட்டான்.
“என்னோட சொந்த அத்தை பையன். எங்க அப்பாவோட அக்கா மகன். எனக்கு மாமா தான் வேணும்.. நான் மாமா தான் சொல்லுவேன். அவர் என் மாமா. எனக்கு தான் மாமா.. உங்களுக்கு என்ன வந்துச்சு…” கடுப்பாக அவள் கேட்க.
“எனக்கு என்ன வந்துச்சு. நான் என்ன உங்க மாமாவ பங்கா கேட்டேன். உங்க மாமா தான். உங்க அத்தை மகன் தான்…” இடக்காக பதில் சொன்னான் மித்ரன்.
“எனக்கு தெரியும் மித்ரன் சார். நீங்க என்னையும் எங்க மாமாவையும் தான் கேலி பேசினீங்க.. அவரை நீங்க பார்த்தது கூட கிடையாது. அவரைப் பத்தி நீங்க எப்படி பேசலாம்…”
“அதுதான் மேடம் நானும் சொல்றேன். உங்க மாமாவை நான் பார்த்தது கூட கிடையாது. உங்க மாமாவை பத்தி நான் ஏன் பேச போறேன். இங்க பாருங்க ரஞ்சன், ஸ்ரீ.. நான் இவ்வளவு நேரம் பேசும்போது, எப்பவாவது பிரவீணா மேடத்தோட மாமான்னு சொல்லி இருக்கேனா…”
“எனக்கு உங்கள பத்தி தெரியும் சார். நீங்க எப்பவுமே இடக்கா பேசுவீங்க… எங்க மாமா பத்தி எல்லாம் இழுக்காதீங்க…” காட்டமாக சொல்ல,
“உங்க மாமாவா நான் ஏங்க இழுக்க போறேன். நான் என்ன பொண்ணா உங்க கூட சக்காளத்தி சண்டை போட.. நான் ப்யூர் சிங்கிள் ஆண் மகன்ங்க…” என்று விடாமல் மித்ரன் பேச, பட்டென்று தன் இடத்திற்கு வந்து அமர்ந்து விட்டாள் பிரவீணா.
அவள் முகம் ஒரு மாதியாகிவிட்டது. அதை கவனித்த ரஞ்சன்,
“ஏண்டா மித்ரன் கேட்டு வாங்கி ரசம் குடிச்சு.. தெம்பா அந்த பொண்ணவே கலாய்க்கிற பாரு… அவங்க முகமே ஒரு மாதிரி ஆயிருச்சுடா. கொஞ்சம் பர்சனலா போயிருக்க வேண்டாம்னு தோணுது…” என்கவும்,
மித்ரனும் அவள் முகம் பார்த்தான். ஒரு மாதிரி மிகவும் வாடி போய் இருந்தாள் . இவனுக்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது. கொஞ்சம் ஓவராக நடந்து கொண்டோமோ என்று எண்ணமும் வந்தது. அடுத்து அவனும் அமைதியாகி விட்டான்.
பிரவீணா முகம் பார்த்து ஶ்ரீ, அவளை சமாதானம் செய்ய..
“எப்படி பேசுறான் பாருடி.. ஒரு பொண்ணு கிட்ட ஒரு ஆம்பளைக்கு அப்படி என்ன வாய்.. எப்ப பாரு ஏட்டிக்கு போட்டியா பேசிகிட்டு.. மாமா எப்பவும் சொல்லுவாரு, ஆம்பளைங்க எல்லாம் அதிகமா வாய் பேசக்கூடாது. அமைதியா, அழுத்தமா இருக்கணும்ன்னு.. இவனை பாரு யாரையாவது கேலி, கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு…” காய்ந்தாள் பிரவீணா.
வீட்டுக்கு கிளம்பும் வரை மித்ரன், அவளோடு வம்பு வளர்க்கவே இல்லை. பிரவீணா உடையும் அந்த ஐடி ஃபீல்டுக்கு பொருத்தம் இல்லாததாகவே இருக்கும். காஞ்சி காட்டன் சேலை, கழுத்தில் முகப்பு வைத்த ஒரு பெரிய செயின், கட்டையாக முதுகு வரை இருக்கும் முடியை இறுக்கிப் பின்னி இருப்பாள், நெற்றியில் கொஞ்சம் பெரிய வட்ட போட்டு மேலே சந்தன கீற்று.. பார்க்க அழகாக தெரிந்தாலும் அந்த இடத்திற்கு சற்று பொருத்தம் இல்லாமல் இருப்பாள்.
அத்தோடு அவள் கலகலப்பாக பழகவும் மாட்டாள், எளிதாக எதிலும் கலந்து கொள்ளவும் மாட்டாள். பேச்சு கூட ஸ்ரீயோடு மட்டும் தான்.. அதை குறிப்பிட்டு கேலி பேசியவன் தான் அவளை கொஞ்சம் கஷ்டப்படுத்தி விட்டான்.
பிரவீணா கிளம்பும்போதும் அவனிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் வேகமாக சென்றுவிட அவனும் ஒரு பெருமூச்சு விட்டு அடக்கி கொண்டான். என்ன இருந்தாலும் திருமணம் ஆன அடுத்த வீட்டுப் பெண். தான் அவ்வாறு பேசி இருக்கக் கூடாது என்று தோன்றியது.
error: Content is protected !!