Skip to content
Post Views: 555
கைலாஷ் தன் வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்.
சரவணன் தலையை பிடித்தபடி ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான்.
Advertisement
“என்கிட்ட சர்க்கரை மாதிரி பேசிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவளை கொல்லணும் எனக்கு..” என்று கத்தினார்.
“உங்களுக்கும் அந்த கனகவதிக்கும் நடுவுல என்ன பிரச்சனைன்னாவது சொல்லுங்கப்பா. பிரச்சனை தெரிஞ்சாதான் என்னால ஏதாவது பண்ண முடியும்..” என்றான் சரவணன்.
Advertisement
Advertisement
“அவ உயிரோடு இருப்பதே பிரச்சனை. இது போதாதா உனக்கு? அவ நிம்மதியா இருக்கவே கூடாது. எனக்கு தேவை அது மட்டும்தான்..” என்று கத்தினார்.
அவரின் மனைவி காப்பியோடு அங்கே வந்தாள். “அந்த பொண்ணு அந்த வீட்டுக்கு போனதே அவளுக்கான தண்டனைதான். கொஞ்சமாவது யோசிங்க. அந்த பொண்ணை அவ கொலை பண்ண பார்த்திருக்கா. கிட்டத்தட்ட அந்த பொண்ணு சாவை தொட்டுட்டு வந்திருக்கு. ஏற்கனவே அவங்கப்பா சாவுக்கும் அவதான் காரணம். அந்த பொண்ணு அவளை பழி வாங்கதான் அந்த பையனை கல்யாணம் பண்ணி போயிருக்கா. அந்த பொண்ணை வீட்டுல வச்சிக்கிட்டு கனகவதி நிம்மதியா இருப்பாளா?” எனக் கேட்டாள்.
Advertisement
கைலாஷ் அடுத்ததாக உடைக்க எடுத்த பொருளை டேபிள் மீதே வைத்து விட்டார். ‘அதுதானே? அவள் எப்படி நிம்மதியாக இருக்க விடுவாள்?’ இவருக்கு மாயாவின் மீது நம்பிக்கை இருந்தது.
மாயா கனகவதியை காவு வாங்காமல் விட மாட்டாள் என்று புரிந்து குரூர புன்னகையோடு சோஃபாவில் அமர்ந்தார். மனைவி கொடுத்த காபியை பருக ஆரம்பித்தார். காப்பி கூட டபுள் மடங்கு தித்திப்பாக இருப்பது போலிருந்தது இவருக்கு.
தந்தையின் திடீர் மாற்றத்தை பார்த்த சரவணன் எழுந்து நின்றான். இந்த பகை என்னவென்று தெரியாமல் நம்மால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று அவனுக்கு தெரிந்து விட்டது.
சரவணன் அங்கிருந்து கிளம்பி சென்ற பிறகு கைலாஷின் முன்னால் வந்து அமர்ந்தாள் அவரின் மனைவி.
“எதுக்கு இந்த மாதிரி பண்ணிட்டு இருக்கிங்க? முடிஞ்சதை விட்டு தொலைங்க. யார் எப்படி போனா நமக்கு என்ன?” எனக் கேட்டாள்.
முடியாதென்று தலையாட்டியவர் “என்னை அவ எவ்வளவு அவமானப்படுத்தி இருக்கா தெரியுமா? அவளையும் அவனையும் சித்திரவதை பண்ணி சாகடிக்கணும்..” என்றார் இவர்.
“நீங்க பட்டுதான் திருந்துவிங்க..” என்றவள் எழுந்து போய் விட்டாள்.
இவர் சிவந்த கண்களோடு சுவரை வெறித்தார். தீராப் பகையை என்றைக்கு தீர்ப்போமோ என்று வெறியோடு யோசித்தார்.
மாயா மறுபடி கண் விழித்தபோது சாத்திய கதவின் மீது முதுகு சாய்ந்து நின்றபடி இவளை பார்த்துக் கொண்டிருந்தான் விக்னேஷ்.
“குட் ஈவினிங்..” என்று சொல்லி பக்கத்தில் வந்தான். அவளின் கேசத்தை வருடியவன் “சிங்கத்தின் குகையில் தூங்கும் புள்ளிமான் மாதிரி எங்கம்மா இருக்கும் அதே வீட்டுல எவ்வளவு நிம்மதியா தூங்குற நீ?” என்று ஆச்சரியப்பட்டான்.
“நான் உன்னை நம்பி வந்தேன் விக்கி. நீ எனக்கு புல் புரடெக்ஷன் தருவன்னு நம்பிக்கை இருக்கு..” என்றாள்.
அவளின் இதழில் மென்மையாக தன் இதழை உரசி நகர்ந்தான்.
“டீ குடிக்க போகலாமா?” எனக் கேட்டான்.
கீழே இறங்கினாள்.
“டூ மினிட்ஸ்..” என்று சொல்லி பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.
சரியாய் இரண்டு நிமிடத்தில் வந்து விட்டாள். ஈர முகத்தை துடைத்துக் கொண்டவள் “போலாம்..” என சொல்லி அவனின் கையை பற்றினாள்.
இரண்டு பேருமாக கீழே வந்தபோது கனகவதி மட்டும் தனியாக அமர்ந்திருந்தாள். யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தவள் வந்தவர்களை பார்த்து விட்டு காலை கட் செய்தாள்.
மாயாவை முறைத்தாள்.
“என் பையனை மயக்கிட்டன்னு ஓவரா ஆடாத. உன் ஆட்டம் ஒரு வாரம் கூட செல்லாது..” என்றாள்.
“உங்க பையனுக்கு லவ் போர்ஷன் தந்து மயக்கி இருக்கேன். நீங்க பார்த்திங்க.. போம்மா அங்கிட்டு..” என்று எரிந்து விழுந்தவள் “எனக்கு ஒரு காப்பி வேணும்..” என்று கணவனிடம் சொன்னாள்.
அவனும் கிச்சனை பார்த்து “இரண்டு காப்பி. ஒன்னுல சர்க்கரை இல்லாம..” என்றான்.
“யாருக்கு சர்க்கரை இல்லாம?” மாயா குழப்பமாக கேட்டாள்.
“எனக்குத்தான். உன்னை பார்த்துக்கிட்டே குடிச்சா காப்பி ரொம்ப ஸ்வீட்டாகிடும். அதனால்தான் முன்னெச்சரிக்கையா சர்க்கரை போடாம குடிக்கிறேன்..” என்றான்.
வெட்கப்பட்டவள் “காதல் பொறுக்கி நீ..” என்றாள்.
அவளின் கன்னம் கிள்ளியவன் “உன்னை பார்த்தா அப்படிதான் மாற தோணுது..” என்று குழைந்தான்.
கனகவதியால் இதையெல்லாம் பார்க்க முடியவில்லை. எழுந்து தன் அறைக்கு போய் விட்டாள்.
“உங்க மம்மி ஏன் போயிட்டாங்க?” இவள் சிணுங்கலாக கேட்க, “சின்ன பிள்ளைகளை தொந்தரவு செய்ய கூடாதுன்னு போயிட்டாங்க..” என்றான் இவன்.
காப்பி வந்தது. இருவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்தபடி காப்பியை பருகினர்.
“உன்னை பார்த்து குடிச்சா நிஜமாவே காப்பி இனிக்குது..” என்று அவள் கண்களை பார்த்து சொன்னாள்.
“நான்தான் தம்பி சர்க்கரை போட்டு கொண்டு வந்தேன்..” என்றாள் பணிப்பெண்.
இவன் திரும்பி பார்த்து “ஏன்க்கா?” என்றான்.
“உங்க அண்ணனும் என்கிட்ட வந்து காப்பியில் சர்க்கரை போடாம கொடுங்கன்னு இரகசியமா சொல்லிட்டு போவாரு. அப்புறம் ஒரு வாய் குடிச்சிட்டு மறுபடியும் சர்க்கரை கேட்பாரு. அதெல்லாம் ஒருமுறை பழக்கப்பட்டாலே எனக்கு புரிஞ்சிடும் தம்பி..” என்றாள்.
இவன் உதட்டை கடித்தபடி மனைவியை பார்த்தார்.
“பரவால்ல குடிங்க தம்பி. பொண்டாட்டியை இம்ப்ரஸ் பண்ண இதை விட நல்லதா ஆயிரம் வழி இருக்கு..” என்று கிண்டல் செய்து விட்டு போனாள் அந்த பெண்மணி.
மாயா தலைகுனிந்து சிரித்தாள்.
விக்னேஷின் போன் சத்தமிட்டது. எடுத்தான். “அண்ணன் பண்றான்..” என்றவன் போனை காதில் வைத்து “சொல்லுங்க ப்ரோ..” என்றான்.
“கல்யாணம் பண்ணிட்டு அங்கே ஏன்டா போனிங்க? அம்மா ஏற்கனவே அவ மேல கொலை வெறியில் இருக்காங்க. நீங்க இன்னும் கடுப்பை கிளப்பிட்டு இருக்கிங்களா? யோசிக்காம அவளை கொன்னுடுவாங்கடா..” என்றான் தருண்.
“என்ன நடக்குதுன்னு பார்க்கணும் அண்ணா. எதுவுமே ஓரளவுதான். அதுக்கு மேல யாராலும் எதுவும் பண்ண முடியாது..” என்றவன் மாயாவை அங்கேயே விட்டுவிட்டு வாசலுக்கு கிளம்பினான்.
“அம்மா இவளை கொல்ல டிரை பண்ணதே அவங்க வாயாலேயே சொன்னாங்க. ஆனா அந்த டைம்ன்னு பார்த்து என்னால ரெக்கார்ட் பண்ண முடியாம போயிடுச்சி. எதுக்கும் நீ அண்ணிக்கிட்ட விசாரி, ஒருவேளை அம்மாவே கூட அண்ணியோட கையையும் பிடிச்சி கட் பண்ணி விட்டிருக்கலாம்..” என்றான்.
“அப்படி நடந்திருக்காது..” என்றான் தருண்.
“உன் லவ்வையும் லைப்பையும் நீ எப்படி வேணா கையாண்டுக்க. ஆனா என் லவ் லைப்பை நான் எனக்கு தெரிஞ்ச மாதிரிதான் கையாளுவேன்..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
வீட்டுக்குள் இருந்த மாயா காப்பி கோப்பையோடு சமையல் கட்டுக்கு சென்றாள். இரண்டு பெண்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருத்தி நடுத்தர வயது பெண்மணி. சேலை கட்டி கொண்டையில் மல்லிகையை முடிந்திருந்தாள். அவள்தான் காப்பி கொண்டு வந்து தந்தவள். பார்க்க அப்பாவியாக இருந்தாள்.
மற்றொருத்தி இவள் வயது இளம்பெண்தான். சிடுசிடுவென்ற முகத்தோடும் நிறம் தீர்ந்த சுடிதாரோடும் இருந்தாள். சுறுசுறுப்பாக வேலை செய்தாள்.
இவள் வந்ததும் அந்த இருவரும் திரும்பி பார்த்தார்கள்.
“ஏதாவது வேணுமா பாப்பா?” எனக் கேட்டாள் பெரியவள்.
“உங்களுக்கு என்னை பார்த்து வெறுப்பு வரலையா? உங்க முதலாளியம்மாவுக்கு என்னை பிடிக்காது..” என்றாள்.
“எல்லார் வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை உண்டு பாப்பா. நீங்க இன்னைக்கு சண்டை போடுவிங்க. நாளைக்கு சமாதானம் ஆகிடுவிங்க. அதுக்காக நாங்களும் அதே போல் கோபத்தை காட்ட முடியுமா? எங்களுக்கு அவங்களும் முதலாளிதான். நீங்களும் முதலாளிதான்..” என்றாள் பெரியவள்.
சின்னவள் வாயே திறக்கவில்லை.
“நல்ல பாலிசி..” என்ற மாயா “உங்க பேர் தெரிஞ்சிக்கலாமா?” எனக் கேட்டாள்.
“நான் பொன்னம்மா. இவ ரேவதி..” என்று பெரியவள் அறிமுகப்படுத்தினாள்.
“நான் மாயா..” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் இவள்.
“தெரியும். ரதிம்மா மாதிரியே அழகா இருக்கிங்க..” என்றாள் பொன்னம்மா.
ரேவதியின் முகம் கடுகடுப்பானது. “ஆக்கி போடுறதுக்கு மட்டும்தான் இங்கே சம்பளம் தராங்க. நீங்க தேவையில்லாம எங்க டைமை வேஸ்ட் பண்ணாதிங்க. இதை முடிச்சிட்டு நான் வேற வீட்டுக்கு வேலைக்கு போகணும்..” என்றாள்.
“சரியான ஊசி பட்டாசா இருக்காளே!” என்று முனகிய மாயா அங்கிருந்து நடந்தாள்.
விக்னேஷூம் போன் பேசி முடித்து விட்டு வந்தான்.
அம்மாவும் அந்த நேரத்தில் வெளியே கிளம்பலாம் என்று ஹேண்ட் பேக்கோடு வெளியே வந்தாள்.
“அம்மா..” என அழைத்தான் விக்னேஷ்.
நிமிர்ந்து பார்த்தாள்.
“இன்னைக்கு எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட். இவளை கொஞ்சம் ரெடி பண்ணி விடுறிங்களா?” எனக் கேட்டான்.
பற்களை அரைத்தவள் “அவ ஏற்கனவே உன்னை மயக்கிட்டா. நீ இப்ப புதுசா நடிக்காத..” என்றாள்.
“மகனா ஒரு ஹெல்ப் கேட்டேன். அதை கூட பண்ண முடியாதுன்னு சொல்றிங்க. ரொம்ப மோசமா பீல் பண்றேன்..” என்று சொல்லி விட்டு மனைவியை அழைத்துக் கொண்டு நடந்தான் விக்னேஷ்.
கனகவதி ஒரு காப்பி ஷாப்புக்கு வந்தாள். அங்கே இவளின் வயதிலேயே மூன்று பெண்கள் அமர்ந்திருந்தார்கள்.
“என் பையன் அந்த மாயாவை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான். எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல..” என்றாள் இவள் புலம்பலாக.
“அவளெல்லாம் ஒரு ஆளுன்னு பீல் பண்ற. உன் ஆள்ல எவனுக்காவது காசை கொடுத்து அவளை போட்டு தள்ளு..” என்றாள் ஒருத்தி.
“அப்புறம் என் பையன் என்னை எப்பவும் மன்னிக்கவே மாட்டான். இப்பவே பொண்டாட்டி பேச்சை கேட்டுதான் ஆடுறான். இதை பண்ணிட்டு நான் மொத்தமாக தலையில் துண்டை போட்டுக்கிட்டு போக வேண்டியதுதான்..” என்றாள்.
“அப்படின்னா இன்னொன்னு பண்ணு. உன் பையனை போட்டு தள்ளிடு..”
ஐடியா சொன்ன தோழியை முறைத்தாள் கனகவதி. “அறிவிருந்து பேசுறியா நீ?” எனக் கேட்டாள்.
“இதுல என்ன பிரச்சினை?” ஐடியா சொன்ன தோழி அப்பாவியாக கேட்டாள்.
“என் பையனை எதுக்கு நான் கொல்லணும். அவன் என் பையன்..”
தோழி தலையாட்டினாள். “நான் சொல்ல வந்தது அப்படி இல்ல. நீ உன் பையனை போட்டு தள்ளுற மாதிரி டிரை பண்ணு. ஐ மீன்.. ஆட்களை வச்சி நீ அவன் கையை உடைச்சிடு. அவன் பொண்டாட்டிதான் அதை செஞ்சான்னு மேட்டரை முடிச்சிடு..” என்றாள்.
கனகவதி யோசித்தாள். “என் பையன் அவளை வெறுப்பானா?”
“ட்ரை பண்ணி பார்த்தாதான் தெரியும்..” என்றாள் ஒருத்தி.
இவளும் சரியென்று சொல்லிவிட்டு எழுந்தாள்.
வீட்டுக்கு வரும் வரை அவளுக்கு அது மட்டும்தான் யோசனை. பையனையும் அவளையும் பிரித்தாக வேண்டும். அவளை கொல்ல முயற்சித்தால் இந்த முறை நாம் மாட்டி விட வாய்ப்பு உண்டு. முள்ளில் பட்ட சேலையை விலக்கி விடுவது போல் இந்த பிரச்சனையை முடிப்போம் என்று முடிவெடுத்தாள்.
வீட்டுக்கு வந்த கனகவதி கிச்சனை பார்த்தாள். “பொன்னம்மா இங்கே கொஞ்சம் வா..” என்று அழைத்தாள்.
அவளும் உடனே வந்தாள். “சொல்லுங்க மேடம்..” என்றாள்.
“என்னோடு வா..” என்று தோட்டத்திற்கு அழைத்து போனாள்.
அருகில் யாரும் இல்லை. இவள் தன் பேக்கிலிருந்து பாய்சன் பாட்டிலை எடுத்து கொடுத்தாள்.
“நாளைக்கு காலையில் என் பையன் காப்பி கேட்கும்போது இந்த பாட்டில்ல இருப்பதை காப்பியில் கலந்து கொடுத்துடு..” என்றாள்.
பொன்னம்மா அதிர்ந்தாள். “விக்னேஷ் தம்பிக்கா? இதை பார்த்தா விஷம் போல இருக்கே..” என்றாள்.
“விஷமேதான். மூஞ்சியை நார்மலா வச்சி கொடு. இல்லன்னா உன்னை பார்த்தே அவன் சந்தேகப்பட்டுட போறான்..” என்றாள்.
இவள் கை நடுங்க பாட்டிலை திருப்பி தந்தாள். “இப்படி ஒரு துரோகத்தை செய்ய என்னால முடியாதும்மா..” என்றாள்.
தொடரும்.
error: Content is protected !!