Skip to content
Post Views: 2,218
அத்தியாயம் 27
தான் பேசியதால் அவள் ரொம்பவும் மனம் வருத்தம் கொண்டுவிட்டாள் என்று எண்ணியவன், “திவி, நாபிக்கு கால் பண்ணி கேளேன். நைட் வீட்டுக்கு வராளா இல்லையான்னு” என்று சொல்ல, திவ்யாவுன் சிரத்தையாக நாபியின் கைப்பேசிக்கு அழைத்தாள்.
‘ஸ்விச்ட் ஆஃப்’ என்று வந்தது. திரும்பவும் முயற்சித்தவள் வாட்ஸ்ஸப்பில், ‘நாபி வென் ஆர் யூ கமிங் ஹோம்?’ என்று செய்தி அனுப்பிவிட்டு பரணியிடம் விஷயம் தெரிவித்தாள்.
Advertisement
“ஃபோன் ஸ்விச்ட் ஆஃப்னு வருது. மெசேஜ் பண்ணியிருக்கேன்.” என்று கூற, பரணியின் புருவங்கள் லேசாக முடிச்சிட்டன. அவன் முக மாற்றத்தைக் கவனித்தவள், “ஏ, விடு பரணி. ரெண்டு நாள்ல சரியாகிடுவா.”
“ஆனா இன்னும் வீட்டுக்கு வரலையே!” என்று கவலையாகவே கூறினான் பரணி.
“இப்போ வொர்க் ஃப்ரம் ஹோம் தானே! அதனால அங்க இருந்தே வேலை பார்க்கலாம்னு நினைச்சுட்டு போயிருக்கலாம். அதான் வீட்டுக்கு வரலையா இருக்கும். எங்க போயிருவா. வந்துருவா பரணி” என்று சமாதானம் செய்தாள்.
Advertisement
“திவ்யா சொல்லறது கரெக்ட். வீக்கெண்ட் முழுங்க அவ ஃப்ரெண்ட்ஸ் கூட ஊர் சுத்தினாலும், மண்டே காலையில கேப் மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு, சண்டே நைட்டே வீட்டுக்கு வந்துருவா. இப்போ வீட்டில இருந்து தானே வேலை பார்க்க போறோம்னு, அங்கையே இருந்துட்டாளோ என்னவோ. அதான் திவ்யா மெசேஜ் பண்ணியிருக்காள்ல. ரிப்ளை பண்ணுவா” என்று யஷ்வந்தும் தன் பங்கிற்கு பரணியின் கவலையைப் போக்க முயற்சித்தான்.
Advertisement
“எப்படியும், நாளைக்கு காலையில ஆபீஸ் ஐடில லாகின் பண்ணுவால்ல. அப்போ பார்த்துக்கலாம்.” என்று ஆளாளாக்கு இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு உறங்கச் சென்றனர்.
அடுத்த தினம் காலையில் வழக்கமான வேலைகள் முடித்து, எட்டு முப்பதிற்கு அலுவலக ஐடியில் லாகின் செய்து வேலை செய்யத் துவங்கியிருக்க, பரணியின் மனம் நாபி-ஜூன் லாகின் செய்துவிட்டாளா என்று அவ்வப்போது நோட்டம் விட்டபடிக்கே இருந்தது.
அவள் பெயரின் அருகே எரியும் பட்டன், சிகப்பில் இருந்து எப்போது பச்சைக்கு மாறும் என்று காத்துக் கொண்டிருந்தவன், பத்து மணி ஆகியும் நாபி இன்னமும் தன் ஐடியில் லாகின் செய்யாதது கண்டு கொஞ்சம் கவலை கொண்டான்.
Advertisement
திவ்யாவின் அறைக்குச் சென்று அவளிடம் இது பற்றி கேட்கலாம் என்று செல்ல, அவளோ, கிளையண்ட் காலில் பிசியாக இருந்தாள்.
சில நொடி யோசித்தவன், அவர்களது பொதுவான ஹெச்.ஆர் மேனேஜரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டான். “நாபி ஜூன் லீவ் எதுவும் சொன்னாங்களா? ஏன் இன்னும் லாகின் பண்ணலைன்னு தெரியலை. லீவ் அப்ளை பண்ணியிருக்காங்களா?” என்று வினவ,
“நோ! ஐ காட் நோ மெயில் ஃப்ரம் ஹர்.” என்ற பதில் தான் கிட்டியது. பரணிக்கு சுத்தமாக அதன் பிறகு இருப்பே கொள்ளவில்லை. தன் மீது அதீத கோபம் காரணமாக, நாபி விடுமுறை எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு தராதரமின்றி பேசிவிட்டோமா என்ற குற்ற உணர்வும். அத்தோடு சேர்த்து, ‘அவ பண்ணது தப்புன்னு கொஞ்சமும் புரியலை பாரேன்’ என்ற கோபமும் ஒன்று சேர எழுந்தது.
நேரே திவ்யாவின் அறைக்கு திரும்பச் சென்றவன், “அந்த நாபி பொண்ணு ஃப்ரெண்ட்ஸ் காண்டாக்ட் நம்பர் எதுவும் இருக்கா?” என்று வினவ, திவ்யா இல்லை என்று தலையசைத்தாள்.
“அவ பாய்ஃப்ரெண்ட் நம்பர் இருக்கா?”
“இல்ல”
“அவங்க வீடாச்சும் எங்க இருக்குன்னு தெரியுமா?” என்று அவன் மீண்டுமாய் கேட்க இம்முறை கொஞ்சம் போல அவனை முறைத்தவள், “எதுக்கு இதெல்லாம் கேட்கற இப்போ?”
“நாபி இன்னும் ஆபீஸ் ஐடில லாகின் பண்ணலை.”
“சரி அதுக்கென்ன, இன்னைக்கு லீவ் போட்டிருக்காளோ என்னவோ?” என்று திவ்யா பதிலளித்தாள்.
“நாம திட்டினதுக்காக இவ்வளோ ஃபீல் பண்ணி லீவ் போட்டு மனசை சமாதானாப்படுதற அளவுக்கு பேசிட்டமா என்ன?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அவசரமாக அந்த அறைக்கு வந்த வருண், “பரணி, திவ்யா கம் டவுன் நவ்” என்று பதட்டமாக சொல்லிவிட்டு யஷ்வந்தை அழைக்க அடுத்த அறைக்குச் சென்றான்.
“என்ன வருண்?” என்று கேட்டுக் கொண்டே பரணியுடன் மற்றவரும் கீழே வந்திருக்க, அங்கே நாபியின் காதலன் சியோங்-மின் ஹாலில் அமர்ந்திருந்தான். சில முறை நாபி-ஜூனை வீட்டில் கொண்டு வந்து விடும் போதும், அழைத்துச் செல்லும் போது அவனைக் கண்டிருந்த பரிட்சயத்தில் திவ்யா மையமாய் சிரித்தாள்.
சோஃபாவில் அமர்ந்திருந்தவன், இவர்கள் வரவும் எழுந்து நின்று பாதி வரை உடலை வளைத்து வணக்கம் வைத்துவிட்டு, “கேன் ஐ சீ நாபி? வேர் இஸ் ஷி?” என்று வினவ, அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வீட்டினர் நால்வரில் முதலில் மீண்டது பரணி தான். “நீ இங்க நாபியை பார்க்க வந்திருக்கியா?” என்று ஆங்கிலத்தில் வினவ, அவன் குழப்பத்தோடு நின்றிருந்த அனைவர் முகத்தையும் ஏறிட்டுவிட்டு, ஆமாம் என தலையசைத்தான்.
“நாபி-ஜூன் உங்க கூட இருக்கான்னு நாங்க நினைச்சுட்டு இருக்கோம். அவ சாடர்டே காலையில ஜாகிங் போனா, அப்படியே உங்க ஃப்ளாட்டுக்கு வந்துட்டான்னு நினைச்சுட்டு இருக்கோம். அவ அங்க வரலையா?” என்று யஷ்வந்த் கேட்க, சியோங்-மின், இல்லை என்று தலையசைத்தான்.
அவன் முகத்தில் அப்பட்டமாக அதிர்ச்சி ரேகைகள் தென்பட்டது. படபடப்புடன் நால்வரையும் மாறி மாறி பார்த்தவனிடம், “கடைசியா நீ எப்போ நாபிகிட்ட பேசின?” என்று பரணி கேட்க,
“ஃப்ரைடே நைட் பேசிட்டு தான் படுத்தோம். மார்னிங் என்னை ஒரு பதினொரு மணிக்கு இங்க வந்து அவளை பிக்கப் பண்ணிக்க சொன்னா, பட், காலையில ஏழு மணிக்கு ஒரு வாட்ஸ்ஸப் மெசேஜ் அனுப்பி, இங்க ப்ராப்ளம் சால்வ்ட், என்னை வரவேண்டாம்னு டெக்ஸ்ட் பண்ணா. ரெண்டு மூணு தடவை கால் பண்ணி பார்த்தும் கால் வாய்ஸ் மெயிலுக்கு தான் போச்சு. அப்பறம், ‘வொர்க் பிஸி, அப்பறமா கால் பண்ணறேன்னு திரும்ப டெக்ஸ்ட் பண்ணிணா’ தட் வாஸ் த லாஸ்ட் மெசேஜ்.” என்றவன் தன் கைப்பேசியை திவ்யாவிடம் நீட்டினான்.
அதில் அவன் சொன்னவாறு தான் இருந்தது. சனிக்கிழமை மாலைக்கு மேல் அவளிடமிருந்து எந்த செய்தியும் வந்திருக்கவில்லை. வெள்ளியன்று ஃபோனில் பேசியதோடு சரி. அதன் பின்னர் அவளுக்கு அழைத்த கால்கள் எல்லாமே வாய்ஸ் மெயிலிற்குச் சென்றிருக்கின்றன. இந்த கணக்குப்படி பார்த்தால், நாபி-ஜூனை சனிக்கிழமை காலை முதலே காணவில்லை. திவ்யாவிற்கு நெஞ்சம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது.
‘எவ்வளவு கவனக்குறைவாக, நமக்கு எதுவும் நடக்காது என்ற அசட்டு தைரியத்தில் இரண்டு நாட்களைப் போக்கியிருக்கிறோம்?’ என்ற அச்சம் மேலோங்க, “இப்போ என்ன பண்ணறது பரணி? நாபியை சனிக்கிழமை காலையில இருந்தே காணலை. இன்னக்கு திங்கள் மதியம் ஆகிடுச்சு. இவ எங்க போயிருப்பா? யாராவது கடத்தி கொண்டு போயிருப்பாங்களோ?” என்ற பயம் தான் பிரதானமாகத் தோன்றியது.
“இரு யோசிக்கவிடு” என்று பரணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சியோங்-மின் தன் கைப்பேசியில் இருந்து 911 எண்ணிற்கு அழைத்து விஷயத்தை சொல்லியிருந்தான்.
சில மணித்துளிகளிலேயே போலீஸ் பேட்ரோல் வண்டி ஒன்று அவர்கள் வீட்டின் முன் நின்றிருந்தது. அதிலிருந்து ஒரு பெண் அதிகாரியும், ஒரு ஆண் அதிகாரியும் இறங்கி வீட்டிற்குள் வந்திருந்தனர். நடந்த நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் அனைவரும் ஒன்றின் பின் ஒன்றாக சொல்லியிருக்க, அதனை அந்த பெண் அதிகாரி ஒரு சிறிய நோட்பேடில் குறிப்பெடுத்துக் கொண்டாள்.
இதற்குள் இயல்பாக வீட்டைச் சுற்றிப் பார்ப்பவன் போல, அந்த வீடு முழுவதையும் ஒரு சுற்று சுற்றி வந்திருந்தான் நீலக் கண்கள் கொண்ட ஆண் அதிகாரி. கால் மணி நேரத்தில் இரு அதிகாரிகளும் வீட்டை மீண்டும் ஒரு முறை சுற்றிவந்தனர். அபீஷியல் கம்ப்ளைண்ட் வாங்கிக் கொண்டனர்.
“அந்த ரன்னிங் ட்ரையல் எங்க இருக்குன்னு வழிகாட்டுங்க” என்று கேட்ட நீலக்கண் அதிகாரியை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்னால் சென்றான் வருண். வீட்டின் பின்னால் அவ்வளவாக பனிபொழிவை நீக்கியிறாத காரணத்தினால், கணுக்கால் முழுகும் அளவிற்கு பனி போர்த்தியிருந்தது. அங்கிருந்து அந்த பாதையைக் கண்டுபிடிக்க கஷ்டமாகவே இருந்தது வருணிற்கு.
அவனுடன் துணைக்கு வந்திருந்த யஷ்வந்த், “சார், நாங்க லாக்டவுன் ஆரம்பிச்சதுக்கு அப்பறம் வீட்டை விட்டு வெளிய வரது ரொம்ப குறைவு. வீட்டோட பின்பக்கமா நாங்க ஸ்னோ க்ளீன் பண்ண கூட வரலை. இங்க இருக்க டிரெக்கிங் டிரையல் பத்தி எங்களுக்கு நாபி சொல்லி தான் தெரியும்” என்று கூறினான்.
இருவரின் பேச்சையும் கூர்ந்து கவனித்த நீலக்கண் அதிகாரி, “டு யூ ஹேவ் எனி டவுட்ஸ் ஆன் த பாய் ஃப்ரெண்ட்?” என்று இவர்களிடம் திரும்ப வினவ, இருவருமே திருதிருவென்று பார்த்துக் கொண்டனர்.
நீலக்கண்ணன் என்ன சொல்கிறான்? நாபி கடத்தப்பட்டாள் என்றா? இல்லை கொலை செய்யப்பட்டு விட்டாள் என்றா? நாபியின் பாய் ஃப்ரெண்ட் சியோங்-மின் மீது இவர்களுக்கு ஏன் சந்தேகம் வரவேண்டும். அதிலும் அவளுக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கிறான் என்ற மட்டிலும் தான் இருவருக்கும் தெரியும். அவன் பெயர் கூட இன்று தான் தெரியும் என்கின்ற போது, ‘அவன் மீது சந்தேகம் கொள்கிறீர்களா?’ என்று கேட்டால் என்ன சொல்வது?
கேள்விகளுக்கான பதிலை எதிர்பார்க்காமல், இருவரையும் அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு, நீலக்கண்னன் அந்த ஒற்றைப் பாதை போன்ற பனி படலத்தில் சற்றே சருக்கலாகத் தெரிந்த வழியைப் பின்பற்றி சிறிது தூரம் நடந்தான். அங்கிருந்து பாதை செங்குத்தான காடுகளை நோக்கித் திரும்பியிருந்தன. அது வரையிலும் நடந்து சென்றவன், கீழே துழாவிக் கொண்டே தான் சென்றான்.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தவன், “பிட் பேட்ரோல் கம்மின் லைன்…” என்று வாக்கி டாக்கியில் சொல்லிவிட்டு, “ஐ நீட் பேக்கப் டு சர்ச் த டிரையல்” என்று கூறி, வரப் போகும் காவலர்களுக்கு வீட்டின் அடையாளத்தைச் சொல்லிவிட்டு வாக்கி டாக்கியை அணைத்தான். இருவரையும் வீட்டின் பின்பக்கம் விட்டு, வீட்டை சுற்றிக் கொண்டு முன்னால் வந்துவிட்டான் நீலக்கண்ணன்.
அங்கே அந்த பெண் அதிகாரி நாபி-ஜூனின் காதலன் சியோங்-மின்னிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். “இந்த வீட்டில இருக்க நாலு பேர்ல யாராவது நாபியை ஏதாவது செஞ்சிருப்பாங்கன்னு சந்தேகம் இருக்கா?” என்று கேட்க, சியோங்-மின் குழப்பத்துடன் இல்லையென்று தலையசைத்தான்.
“நாபி இவங்க கூட ஒரு வருஷத்துக்கும் மேல தங்கியிருக்கா. இவங்களைப் பத்தி தப்பா எதுவும் சொன்னதில்லை. ஆல் ஆர் வெரி குட் ஃப்ரெண்ட்ஸ்னு தான் சொல்லியிருக்கா?”
“பட் சமீபமா இவங்களைப் பத்தி வேற மாதிரி சொல்லியிருந்தாங்க இல்லையா?” என்று அந்த பெண் அதிகாரி, தூண்டில் போட்டுக் கொண்டிருக்க,
“எஸ் மேம். பட் அவங்க கோபப்பட்டதுக்கு நியாயமான காரணம் இருக்கு. நாபி இஸ் வெரி அத்லடிக். அவனால ஒரு நாள் கூட ஜாகிங் போகாம இருக்க முடியாது. லாக்டவுன் அப்போ கூட இந்த ஜாகிங் டிரைலை கண்டுபிடிச்சு சிக்ஸ் கிலோ மீட்டர்ஸ் ஜாக் பண்ணுவா. இது ஆபத்தானது, நீயும் வெளிய போகாதன்னு தான் இவங்க சண்டை போட்டிருக்காங்க” என்று தன் வரையில் வீட்டினர் பற்றி நல்லவிதமாகவே சொல்லியிருந்தான் சியோங்-மின்.
“தே ஆர் ரைட். கொரோனா இஸ் வெரி டேஞ்சரஸ். இந்த சமயத்தில ஜாகிங் போகறது பெரிய தப்பு.” என்று முன்மொழிந்த பெண் அதிகாரி, தன் குறிப்பேட்டில் என்னவோ கிறுக்கிக் கொண்டாள்.
சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின், அந்த நீலக்கண் ஆண் அதிகாரி அழைத்திருந்த பேக்கப் வண்டியில் இன்னும் இரு காவலர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களை வீட்டின் பின்னே அழைத்துச் சென்று அந்த டிரெக்கிங் போகும் பாதையைக் காட்டிட, அவர்கள் சற்றே சிரமத்துடன் என்ற போதும் லாவகமாக் பனியில் கால் ஊன்றி அந்த பாதையில் முன்னேறினர்.
டிரெக்கிங் டிரையிலைப் பார்வையிடச் சென்ற அதிகாரிகள் திரும்பி வந்துவிட, “அந்த டிரைலை நல்லா தேடிட்டோம். நோ மிஸ்ஸிங் பர்சன் தேர். டிரையல் நடுவில ஒரு பழைய லாட்ஜ் இடிஞ்சு போய் இருக்கு. அங்கையும் சர்ச் பண்ணியாச்சு. யாரும் இல்ல. அண்ட் அந்த லாட்ஜ்ல சமீபமா யாரும் வந்து போனதுக்கான அடையாளம் இல்ல. எல்லாமே தூசியா தான் இருக்கு.” என்று தகவல் சொல்லியிருக்க, எல்லாருக்குமே கவலை படர்ந்தது.
தேவையான விசாரணையை முடித்துக் கொண்டு அங்கிருந்து காவலர்கள் கிளம்பும் வரையிலும் பதட்டமாகவே இருந்தது நால்வருக்கும். சியோங்-மின்னும் தளர்ந்து போயிருந்தான். அவன் முகத்தில் நாபிக்கு என்னவாகியிருக்குமோ என்ற பயம் அதீதமாக இருந்தது.
காவலர்கள் சென்ற பின்பு ஐவரும், எதுவும் பேசாமல் மெளனமாய் அமர்ந்திருக்க, “போலீஸ் கண்டிப்பா நாபியை கண்டு பிடிச்சிடுவாங்க. அவ ஃபோன் சிக்னலை டிரேஸ் பண்ண சொல்லி இருக்காங்க. அவ எங்க போனான்னு தெரிஞ்சிடும்” என்று தேறுதலாய் கூறிய திவ்யாவிற்கு ஒரு தலையசைப்பை மட்டுமாக திருப்பிக் கொடுத்தான் சியோங்-மின்.
யஷ்வந்த் இதற்குள் சூடாக பால் கலக்காத டீ போட்டு வந்தவன், “டிரிங்க். யு வில் ஃபீல் பெட்டர்” என்று தேநீர் கோப்பையை வாங்க மறுத்த சியோங்-மின்னை வற்புறுத்தி அருந்த வைத்தான். ஐவரும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்க,
“ஒரு பர்சன் காணாம போனா, அவங்களை அடுத்த 24 மணி நேரத்துக்குள்ள கண்டுபிடிச்சா மட்டும் தான் 90% உயிரோட இருப்பாங்களாம். நேரம் ஆக ஆக, அவங்க உயிரோட இருக்க சான்சஸ் குறைஞ்சுட்டே போகும்னு ஒரு ஆர்டிகல்ல படிச்சேன்” என்று அந்த நேரம் என்ன பேசக்கூடாதோ அதைப் பற்றி பேசியிருந்தான் யஷ்வந்த்.
யஷ்வந்த் சில சமயங்களில் இப்படித்தான். சொல்ல வரும் விஷயத்தை நேராக சொல்லாமல், அதற்கு சம்பந்தமுள்ள புள்ளிவிவரங்களைச் சொல்கிறேன் என்று சுற்றி வளைப்பான். இது மற்றவருக்குப் புரிந்த போதும் சியோங்-மின்னிற்கு அவன் பேச்சு அதிர்ச்சியைக் கொடுத்தது.
அதை உணர்ந்தவன் போல பரணி, “இல்ல, போலீஸ் தேடறது மட்டும் பத்தாது டைம் ரொம்ப கம்மிங்கறதால நாமளும் ஒரு பக்கம் தேடலாம்னு சொல்ல வர்றான்” என்று பதறிப்போன சியோங்-மின்னிற்கு சமாதானம் சொன்னான்.
நாபியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்ற பயம் அனைவர் மனதிலும் இருந்தது. யஷ்வந்த் போல் வெளிகாட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தனர். யஷ்வந்தின் வார்த்தைகள் அனைவரையும் திடுக்கிட வைத்திட அவனுக்குமே ஏன் இப்படிச் சொன்னோம் என்றாகிப்போனது.
“ஐ மீன். நான் நாபிக்கு ஏதாவது ஆகறதுக்கு முன்னாடி அவளை நாம கண்டுபிடிக்க முயற்சிக்கணும்னு சொல்ல வந்தேன்.” என்று சமாளிக்க எத்தனித்தான்.
“போலீஸ் விசாரிச்சுட்டு தானே இருக்காங்க…” என்று வருண் சொல்லத் துவங்க,
“அவங்க டைம்ல அவங்க விசாரிக்கட்டும். நாமளும் நமக்கு தெரிஞ்ச விதத்தில முயற்சி செய்யணும்” என்று யஷ்வந்த் சொன்னதை அங்கிருந்தோர் ஆமோதித்தனர். பரணி ஒரு பேப்பர் பேனா கொண்டு வந்து சனிக்கிழமை முதல் இன்றைய தினம் வரையிலும் நாபியிடமிருந்து வந்த குறுஞ்செய்திகளின் நேரத்தை குறிப்பெடுத்தான்.
error: Content is protected !!