Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பூவிடைப் பனித்துளிகள்

poovidai panithuligal 30(2) by Aruna Kathir

‘நைட் வரைக்கும் நானும் திவியும் வீட்டுக்கு வரலைன்னா, யஷ்வந்தோ, வருணோ போலீஸ்க்கு சொல்லுவாங்க. போலீஸ் தேடி வரும்’ என்ற குருட்டு நம்பிக்கை மட்டுமே அவனுக்கு. அவன் எதிர்பார்த்தது போல விக்டர் ஆலன் எதுவும் தானாக பேசிடவில்லை.

கட்டப்பட்டிருந்த மூவரையும் ஒரு குரூர திருப்தியுடன் பார்த்துக் கொண்டு திரும்ப சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டான். பரணியின் வாய் பிளாஸ்திரி சற்றே இளக்கப்பட்டிருந்தால் அவனால் முன்னை விட சிரமமில்லாமல் மூச்சு விட முடிந்தது.

“விக்டர் ப்ளீஸ் லீவ் அஸ். உனக்கு என்ன வேணும்? எங்களை ஏன் பிடிச்சு வச்சிருக்க?” என்று பரணி கேட்க, விக்டர் எதுவும் சொல்லப்போவதில்லை என்று தான் முதலில் நினைத்தான். ஆனால் சோஃபாவில் படுத்திருந்த விக்டர் மிக மெல்லிய குரலில், “ஐ டோண்ட் நோ” என்று சொல்வான் என்று கொஞ்சமும் பரணி எதிர்பார்க்கவில்லை.

கரகரப்பான குரலில், “எனக்கு தெரியவில்லை” என்று பதில் சொன்ன விக்டரை ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்து தான் ஏறிட்டான் பரணி. “தெரியலைன்னா, என்ன பதில் இது? எங்களை ஏன் பிடிச்சி வச்சிருக்க? எங்களை என்ன செய்ய போற?” என்று பரணி கேட்க,



Advertisement

இம்முறையும், “தெரியலை” என்று மீண்டும் சொன்ன விக்டர் அதன் பிறகு பரணி கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. சோஃபாவில் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு மீண்டும் அமைதியாகப் படுத்தவனிடமிருந்து சற்று நேரத்தில் மெல்லிய குறட்டை சப்தம் வெளிப்பட, அடுத்து என்ன செய்வது என்று புரிபடாமல் பரணி யோசனையில் ஆழ்ந்தான்.

‘விக்டரை பேச வைத்து, கொஞ்சம் காலதாமதம் செய்து, வெளியே இருந்து உதவி வரும் வரை காத்திருக்க வேண்டும்’ என்ற யோசனையுடன் இருந்த பரணிக்கு, விக்டர் எதுவும் பேசாமல் அமைதியில் ஆழ்ந்து போனது, பயத்தை அதிகரித்தது. ‘என்ன செய்யன்னு தெரியாம இருப்பவன் என்ன வேணா செய்ய முற்படுவான்’ என்ற எண்ணம் அச்சுறுத்தியது.

தலையில் அடித்தது வின்வின்னென்று வலியெடுக்க, அயற்சி மேலோங்கிய போதும், உறங்கிவிடாமல் சுற்றிலும் பார்த்துக் கொண்டு படுத்திருந்த பரணியின் கண்கள் ஜன்னல் திரைச்சீலையில் நிலைத்தன. இந்த வீட்டின் வெளியே நின்று உள்ளே நோட்டம் விட ஜன்னல் ஒன்று தான் வழி. ஆனால் அனைத்து திரைச்சீலைகளும் முழுவதுமாக இழுத்துவிடப்பட்டிருக்க, வெளியே இருந்து பார்த்தால் எதுவும் தெரியப்போவதில்லை.

Advertisement

அவன் படுத்திருந்த இடத்தின் மேலே ஒரு ஜன்னல் இருந்தது. அதன் திரைச்சீலை அவன் தலைக்கு ஒரு அடி மேல் தான் தொங்கியது. பரணியின் வாய் பிளாஸ்திரி எடுக்கப்பட்டிருந்ததால், சற்றே வலியைப் பொறுத்துக் கொண்டு இழுக்க வேண்டும், மதுவின் மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த விக்டர் சப்தம் கேட்டு எழுந்துவிடக் கூடாது. இதையெல்லாம் எண்ணிய பரணி, கழுத்தை மெல்ல மெல்ல எம்பி, படுத்திருந்த நிலையில் இருந்து எழுந்து அமர முற்பட்டான். சப்தம் எழுப்பக் கூடாது என்று எவ்வளவு கவனமாக இருந்த போதும் சரக் சரக்கென்ற ஒலி எழத்தான் செய்தது. அதைவிடவும், விக்டர் உதைத்த இடத்தில் நிச்சயம் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வேண்டும். வலி உயிரை தின்றது.

Advertisement

விக்டரின் போதை மயக்கம் தெளியும் வரை தான் சமயம். அதன் பிறகு சந்தர்ப்பம் கிடைக்காது என்று புரிந்து போக, வலியை புறம் தள்ளிவிட்டு, மெல்ல மெல்ல ஜன்னல் திரைச்சீலையை பற்களைக் கொண்டு கடித்து சற்றே விலக்க எத்தனித்தான்.

திரைச்சீலையின் வளையங்கள் கம்பியில் உரசி ஒலி எழுப்பத்தான் செய்தது. ஆனால் விக்டர் அசைவில்லாமல் தான் சோஃபாவில் கிடந்தான் என்ற தைரியத்தில் இன்னமும் இன்னமும் என வெகுவாக முயன்று திரைச்சீலையை சில இன்சுகள் விலக்கினான். வெளியே மாலை நேரம் ஆகியிருக்க வேண்டும், அல்லது அடுத்த தினம் காலையா? தெரியவில்லை. மிக மங்கிய ஒளி ஜன்னலின் வழியாக ஊடுருவியது.

அதற்கு மேல் ஜன்னலை விலக்கினால் ஆபத்தாக முடியும் என்று உணர்ந்த பரணி, அமைதியானான். இந்த திரைச்சீலை விலக்கி வைத்தால் என்ன பயன் இருக்கும் என்று அவனுக்கும் தெரியவில்லை. சில இன்ச் அளவு ஒதுங்கப்பட்ட ஜன்னல் வழியே என்ன செய்துவிட முடியும்? ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கு, ஏதோ ஒரு சிறு முயற்சி என்னும் அளவில் தான் நினைத்திருந்தான் பரணி.

Advertisement

***

ஆனால், அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. வெளியே அந்த விட்டைச் சுற்றிலும் வளைத்து நின்றிருந்த வெர்மெளண்ட் காவலர்களுக்கு அந்த சின்ன ஜன்னல் திரைச்சீலை ஒதுக்கம் உள்ளே இருக்கும் நிலையை காட்டிட பெரிதும் உதவியது என்று.

வீட்டின் உள்ளே நிலவரம் என்னவென்று தெரியாமல் அதிரடியாக உள்ளே நுழைய இயலாமல் வெளியே சுற்றி வளைத்து நின்றுவிட்ட காவலர்களுக்கு ஏதுவாக வீட்டின் ஒருபக்கம் ஜன்னல் திரைச்சீலை விலகிட அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், பின்கதவை இடித்து தள்ளிக் கொண்டு திமுதிமுவென கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தனர் பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள்.

“எஃப் பி ஐ. டோண்ட் மூவ்” என்று முதலில் வந்த காவலன் கத்திக் கொண்டே உள்ளே வர, திடீர் அரவம் கேட்டு சோஃபாவில் இருந்து விழித்த விக்டர் முதலில் தேடியது அவன் வேட்டை துப்பாக்கியைத் தான். நெஞ்சின் மீது பிடித்திருந்த துப்பாக்கி, இவன் சட்டென எழுந்த வேகத்தில் கீழே சரிந்திருக்க, அதைக் குனிந்து எடுக்க சந்தர்ப்பம் ஏற்படும் முன்னர், அவன் கால்களின் அடியில் இருந்த துப்பாக்கியைத் தட்டி சில தூரம் தள்ளிவிட்டிருந்தான் ஒரு காவலன்.

“டோண்ட் ட்ரை எனிதிங். நீ சுற்றி வளைக்கப்பட்டு விட்டாய்” என்று சொல்லிய காவலனைக் கண்டு அரண்டு போன விக்டர், அங்கேயே மண்டியிட்டு கைகளைத் தூக்கியிருந்தான். எந்த எதிர்ப்பும் இல்லாமல் விக்டர் அவ்வாறு மண்டியிட்டு விட, காவலர்கள் இருவர் அவனைத் தரையோடு படுக்க வைத்து, அவன் பின்னே கைகளை மடக்கி விலங்கு கொண்டு பூட்டினர்.

“எவ்ரிதிங் அண்டர் கண்ட்ரோல். செண்ட் த மெடிக்கல் டீம் இன். த்ரீ பீபிள் இஞ்சூயர்ட். ஐ ரிப்பிட் த்ரீ பீபிள் இஞ்சூயர்ட்” என்று ஒரு காவலன் வாக்கிடாக்கியில் கூற, அவன் பின்னூடே முன்னர் இவர்களை விசாரித்த பெண் அதிகாரிச்சியும், நீலக்கண் அதிகாரியும் நின்றிருந்தனர்.

இதற்குள் மெடிக்கல் ஆம்புலன்ஸ் வீட்டின் சமீபத்தை அடைந்திருக்க, அதிலிருந்து வெளிப்பட்ட மருத்துவ உதவியாளர்கள், பரணி, திவ்யா மற்றும் நாபி-ஜூனை ஸ்டெச்சரில் வைத்து தூக்கி கொண்டு வெளியேறினர்.

***

இரு நாட்கள் கழித்து,

பரணி மருத்துவமனையின் சிகிச்சை பிரிவில் இருந்தான். அவன் இடது விலா எலும்பில் சிறிய ஏர் கிராக் எனப்படும் மெல்லிய ஃப்ராக்சர் ஏற்பட்டிருந்தது. அதற்கான சிகிச்சை மேற்கொண்டிருந்தனர். அவன் படுக்கையின் அருகே போடப்பட்டிருந்த சோஃபாவில் திவ்யாவும் யஷ்வந்தும் அமர்ந்திருக்க, அந்த அறையின் மற்றொரு நாற்காலியில் வருண் உட்கார்ந்திருந்தான்.

பரணியின் படுக்கைக்கு பக்கவாட்டில் மற்றொரு படுக்கையில் நாபி-ஜூன் அனுமதிக்கப்பட்டிருந்தாள். பரணியைக் காட்டிலும் நாபி தெளிவாகவே காணப்பட்டாள். அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அவள் காதலன் சியாங்-மின் உடனிருந்தான்.

பெண் அதிகாரிச்சியும், நீலக்கண் அதிகாரியும் அறையினுள் நுழைய, மற்றவர்கள் சம்பிரதாயமாக எழுந்துகொள்ளப் பார்த்தனர். “வீ வோண்ட் டேக் மோட் டைம். மன்னிக்கவும்.” என்று இருமுறை சொல்லிவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் இருவரும் அமர்ந்தனர்.

“உங்க ஸ்டேட்மெண்ட் எடுக்க தான் வந்திருக்கோம். டோண்ட் வர்ரி” என்று சொன்ன பெண் அதிகாரிச்சி, நாபியிடம் தான் முதலில் விசாரித்தாள். இரு தினங்களில் நன்றாக உடல் தேறியிருந்த நாபி-ஜூன் தைரியமாக பேசினாள்.

“வீட்டில எல்லாரும் ஜாகிங் போனதுக்காக என்னைத் திட்டி வீட்டில இருக்க வேண்டாம்னு சண்டை போட்டாங்க” என்று சொல்லிவிட்டு அனைவரையும் பார்த்துவிட்டு மேலே தொடர்ந்தாள்.

“நான் சியோங்-மின் ரூம்ல அடுத்த தினம் ஸ்டே பண்ணிக்க வரேன்னு சொல்லிட்டு, சனிக்கிழமை காலையில வழக்கம் போல ஜாகிங் போனேன்” என்று கூற, பக்கவாட்டில் இருந்து, “பாகல்!” என்று மெல்லமாய் முணுமுணுத்தான் யஷ்வந்த.

“வழக்கமான டிரையல்ல தான் ஜாகிங் போனேன். போயிட்டு திரும்ப வரும்போது, அங்கிருந்த மரத்தோட வேர் தடுக்கி, விழுந்துட்டேன்.” நாபி சொல்ல,

“நல்லா வேணும்” என்று யஷ்வந்த் அதே மென்குரலில் சொன்னான். அவனருகே அமர்ந்திருந்த திவ்யா கண்களை பலமாக உருட்ட, மெளனமாய் நாபி சொல்வதை கவனித்தான்.

“நான் கீழே விழுந்த இடம், விக்டர் வீட்டுக்கு பக்கத்துல இருந்தது. விக்டர் அந்த நேரம் அவனோட பேக்யார்ட்ல விறகு வெட்டிட்டு இருந்தான். நான் விழுந்ததைப் பார்க்கவும் வேகமா வந்து எனக்கு ஹெல்ப் பண்ணான். விழுந்ததில எனக்கு கால்ல நல்ல சுளுக்கு. எந்திரிச்சு நிக்க முடியலை. இதை கவனிச்ச விக்டர், ‘உங்க வீட்டுக்கு தூரம் கொஞ்சம் ஜாஸ்தி. என் வீட்டில கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஐஸ் டீ குடிச்சுட்டு, உங்களுக்கு கால் ஓகே ஆனதும் வீட்டுக்கு போலாமேன்னு அன்பா கூப்பிட்டான்” என்று நாபி சொல்லி நிறுத்த,

“உடனே நீயும் ஹேப்பியா போயிட்டியா? ஒரு ஐஸ் டீக்கு ஆசைப்பட்டு உயிரை விட பார்த்தியேடீ” என்று யஷ்வந்த் ஹிந்தியில் கூற, அவனை திரும்பவும் திவ்யா அடக்கினாள். அவளுக்கு யஷ்வந்தின் வார்த்தைகள் சிரிப்பைக் கொணர்ந்தன. அந்த நேரத்தில் சிரித்து தொலைக்க வேண்டாம் என்று எண்ணி அவனை அடக்கினாள்.

நாபி மேலும் தொடர்ந்தாள். “முதல்ல விக்டர் வாஸ் ஸோ குட். எனக்கு ஐஸ் டீ குடுத்து, என் சுளுக்கு காலுக்கு ஐஸ் பேக் வச்சுன்னு ஒரு ஹாஃப் அன் ஹவர் நல்லா இருந்தான். ரெண்டு பேரும் நல்லா பேசினோம். என் ஊர் பத்தி, அவன் குடும்பம் பத்தி அவன் வேலை, அமெரிக்கா க்ளைமேட், கொரோனான்னு ஒரு மணி நேரம் போனதே தெரியலை. ஒன் ஹவர் கழிச்சு நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னதும், விக்டர் திரும்பத் திரும்ப, ‘ப்ளீஸ் ஸ்டே சம் மோர் டைம்… இன்னும் கொஞ்ச நேரம் இருங்க. ஐ ஃபீல் சோ குட்ன்னு’ சொல்ல ஆரம்பிச்சான். அப்போ தான் எனக்கு புரிஞ்சது விக்டர் ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணறான்னு. சோ இன்னும் ஒரு அரை மணி நேரம் அங்க ஸ்பெண்ட் பண்ணேன். மணி அப்போவே ஒன்பது ஆகியிருந்தது.

சோ, நான் கிளம்பறேன்னு மறுபடியும் சொன்னப்போ, விக்டர் முகம் ரொம்ப மாறிடுச்சு. கொரோனா துவங்கி, ஊரடங்கு போட்டதில இருந்து இப்போ வரைக்கும் யார்கூடவும் பேசாம தனியா பயத்தோட வாழ்ந்திருந்த விக்டருக்கு எங்கிட்ட பேசறது தெம்பா இருந்திருக்கு போல. அதனால தான் என்னை இரு இருன்னு சொல்லியிருக்கான். நான் வம்பா கிளம்பறேன்னு சொல்ல, அவனுக்கு நிமிஷத்துல கோவம் வந்துருச்சு. ப்ளீஸ் இருன்னு என் கையை பிடிச்சு இழுத்த வேகத்தில நான் அங்கிருந்த டெஸ்க் எட்ஜ்ல முட்டி கீழ மயக்கமா விழுந்துட்டேன். அவ்வளோ தான் ஞாபகம் இருக்கு” என்று சொல்லி நிறுத்தினாள்.

அதன் பின் கண்விழித்த போது, விக்டரின் வீட்டில் படுக்கை அறையின் மூலையில் ஒரு நாற்காலியில் கைகளும் கால்களும் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டு கண் விழித்திருக்கிறாள். சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்கள் அந்த அறையிலேயே சிறை வைக்கப்பட்டிருக்கிறாள். அதன் பிறகான விவரங்களை பெண் அதிகாரிச்சி விவரிக்கலானார்.

“விக்டர் ஆலன் ஒரு கார்பெண்டர். அவனோட வைஃப் சில வருஷம் முன்னால அவங்க லவ்வர் கூட ஓடிட்டாங்க. அவங்க பொண்ணையும் கூட்டிட்டு போயிட்டாங்க. அப்போ இருந்தே விக்டர் ரொம்ப உடைஞ்சு போயிட்டான். குடிப்பழக்கம் ஜாஸ்தியானதுனால வெளிய வேலையும் கிடைக்கலை. கிடைச்ச வேலைய செஞ்சுட்டு, குடிச்சுட்டு திரிஞ்சான்.

அப்போ தான் மைக்கில்சன்ஸ் மேன்ஷன்ல கேர் டேக்கர் வேலை காலியா இருந்தது. மைக்கல்சன்ஸ் ஃபேமிலி இங்க வரப்போ அவங்களோட வேலையாட்களோட இருப்பாங்க. அவங்க இல்லாத மாசங்கள்ல எஸ்டேட்டை பராமரிக்க, மரக்குப்பைகளை அகற்றன்னு சின்ன சின்ன வேலைகள் செய்ய விக்டரை வேலைக்கு வச்சுக்கிட்டாங்க.

அதனால தான் விக்டரால மேன்ஷன் கேட் வழியா உள்ள போக வர முடியும். மேன்ஷனோட மெயின் ஹவுஸ் லாக்ட். அந்த அவுட் ஹவுஸ்ல புல்வெட்ட மிஷின், ஆயில் கேன் அது இதுன்னு போட்டு வச்சிருந்த வீட்டை அப்பப்போ விக்டர் யூஸ் பண்ணுவான்.

கொரோனா பயத்தில ரொம்ப மெண்டலி அன்ஸ்டேபிளா இருந்த விக்டர், நாபி அவன் கூட இருந்த ரெண்டு மணி நேரத்தில் ரொம்ப பாதுகாப்பா மகிழ்ச்சியா உணர்ந்திருக்கான். அதனால தான் நாபியை அங்க இன்னும் கொஞ்ச நேரம் இருக்க சொல்லி கம்பல் பண்ணியிருக்கான். அவன் ஃபோர்ஸா இழுத்ததுல, நாபி தடுமாறி அவ நெத்தி டெஸ்க்குல மோதி மயங்கி விழுந்ததுக்கு அப்பறம், விக்டருக்கு என்ன பண்ணறதுனு தெரியலை.

அவனுக்கு இன்னொரு மனிதன் கூட இருக்கறது ரொம்ப தெம்பு குடுத்திருந்த காரணத்தினால, மயக்கமான நாபியை தன்னோட அறைக்கு எடுத்துட்டு போய் படுக்க வச்சிருக்கான். ஆனா, அவ கண்முழிச்சா திரும்ப போயிடுவாங்கற பயத்தில யோசனையில்லாம, அவளை கட்டி போட்டு வச்சிருக்கான்.” என்று அந்த அதிகாரிச்சி சொல்லி முடிக்க, அனைவருமே நாபியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சியோங்-மின் நாபியை ஆதரவாக கட்டிக் கொண்டான். “விக்டர் வீட்டில இருந்த நாபி, எப்படி மேன்ஷனுக்கு போனா?” என்று வருண் கேட்க, அதற்கு பதிலாக அந்த நீலக்கண் அதிகாரி பரணியையும் திவ்யாவையும் பார்த்தான்.

“விக்டருக்கு நாபியை மேன்ஷனுக்கு கொண்டு போற ஐடியாவே இல்ல. நாபியைக் கட்டி போட்டு வச்சிருந்தானே தவிர, அவன் நாபியை எந்த விதத்துலையும் துன்புறுத்தலை. முக்கியமா அவளை செக்ஷுவலா ஹராஸ் பண்ணலை. ஜஸ்ட் அவ அந்த வீட்டில இருக்கறது அவனுக்கு ஒரு தெம்பு குடுத்திருக்கு.

நேரா நேரத்துக்கு சாப்பாடு குடுத்திருக்கான். பாத்ரூம் போக அலவ் பண்ணியிருக்கான். நைட் பெட்ல தூங்க அனுமதிச்சிருக்கான். ஆனா, அவனுக்கு போலீஸ் விசாரணை பண்ணிட்டு வந்த நாள்ல இருந்தே பயம் தான். அவனோட பயத்தை இவங்க ரெண்டு பேரும் நேத்து தூண்டி விட்டுட்டாங்க.” என்று சொல்லிய நீலக்கண் அதிகாரி, மேலே தொடர்ந்தான்.

“எஸ். பரணியும் திவ்யாவும் விக்டரோட வீட்டை நேத்து நைட் நோட்டம் போட போயிருக்காங்க. ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு அவங்க, ட்ரெண்ட்ஸ் வீட்டோட பின்பக்கம் கொஞ்ச நேரம் நின்னு பார்த்துட்டு விக்டர் வீட்டை நோக்கி நடந்தது, ட்ரெண்ட் வீட்டில இருந்த சிசிடிவி கேமரால பதிவாகியிருக்கு. அதாவது, அவங்க வீட்டை பார்த்தபடிக்கு மரத்தின் மேல கண்பார்வைக்கு தெரியாதபடி இருந்த கேமரால ரெக்கார்ட் ஆகியிருக்கு” என்று சொல்லிவிட்டு பரணியைப் பார்த்தான்.

பரணி மெல்லிய குரலில், “சாரி ஆபிஸர்ஸ். நான் நாபிகிட்ட அன்னைக்கு ரொம்ப ஹார்ஷா வீட்டைவிட்டு போன்னு சொன்னது எனக்கு குற்ற உணர்வா இருந்துச்சு. அதனால மத்த வீடுகள்ல சர்ச் பண்ணி பார்க்கலாம்னு நானும் திவ்யாவும் போனோம்.”

“இட்ஸ் ஓகே. சோ, நீங்க ஏற்கனவே பயத்துல இருந்த விக்டரை இன்னமும் ட்ரிகர் பண்ணியிருக்கீங்க. எங்க நீங்க திரும்ப அவன் வீட்டை சோதனை போட வருவீங்களோன்னு பயந்து அடுத்த நாள் அதிகாலை அவனோட சின்ன தள்ளுவண்டியில நாபியை ஏத்திட்டு போய் மைக்கில்சன்ஸ் மேன்ஷனோட அவுட் ஹவுஸ்ல பத்திரப்படுத்தியிருக்கான். அவனுக்கு நாபியை என்ன பண்ணறதுன்னு ஒரு ஐடியாவே இல்ல. அவளா கொஞ்ச நாள்ல மனசு மாறி, அவன் கூட இருக்க ஒத்துக்குவான்னு நினைச்சிருக்கான்.” என்று கூறினாள் பெண் அதிகாரிச்சி.

“நாங்க இங்க இருக்கறது எப்படி உங்களுக்கு தெரிய வந்துச்சு?” என்று வினவினாள் திவ்யா.

“அதுக்கு நீங்க வருணுக்கும் யஷ்வந்துக்கும் தான் நன்றி சொல்லணும். காலையில உங்களை வீட்டில காணோம்னு யஷ்வந்தும் வருணும் எங்களுக்கு கால் பண்ணி சொன்னாங்க. அது மட்டுமில்லாம, ஸ்னோல உங்க கால் தடம் பார்த்து அது பின்னாலையே வந்து, கால் தடம் மேன்ஷனோட பின்னாடி மறையறதைக் கவனிச்சு, பனிபொழிவுல கால்தடம் அச்சு மறைஞ்சு போறதுக்கு முன்னாடி ஃபோட்டோ எடுத்து செண்ட் பண்ணது மிஸ்டர் வருண் தான்.

மேன்ஷன் பின்னாடி இருந்த உடைஞ்ச மரத்தடுப்பு முதற்கொண்டு ஃபோட்டோ எடுத்து செண்ட் பண்ணாங்க. நாங்க மேன்ஷனோட சிசிடிவி செக் பண்ண நினைச்சப்போ அது ஆஃப் ஆகியிருந்தது. கடைசியா காலையில விக்டர் மேன்ஷன் சிசிடிவி வயரை கட் பண்ண உள்ள வந்திருக்கான். அவன் உள்ள வர்ற வரைக்கும் ரெக்கார்ட் இருக்கு” என்று நிறுத்திய நீலக்கண் அதிகாரி,

“விக்டருக்கு உங்களை கொல்லற ப்ளான்லாம் இல்ல. ஹீ இஸ் மென்டலி டிஸ்டர்ப்ட். கொரோனால வீட்டுக்குள்ளையே அடைஞ்சு கிடந்து, பேச்சு துணைக்கு ஆள் இல்லாம மெண்டலி அன்ஸ்டேபிள் ஆகிட்டான். நாபியைத் தேடி நீங்களும் திவ்யாவும் மேன்ஷனை நோட்டம் விடறது தெரிஞ்சு ரொம்ப பயந்து போய் தான் உங்களையும் உள்ள கட்டி போட்டுட்டான். அப்போதைக்கு தப்பிச்சா போதும்னு மட்டும் தான் அவன் எண்ணம். உங்களை காயப்படுத்தறதோ, கொலை பண்ணறதோ கிடையாது. இன்னைக்கு நைட்டோ, நாளைக்கோ பேட்ரோல் போலீஸை ஏமாத்திட்டு இந்த இடத்தை விட்டு தன் கார்ல தப்பிச்சு போக ப்ளான் பண்ணியிருக்கான்.

ஆனா, அப்படி தப்பிச்சு போக சந்தர்ப்பம் இல்லாம, இங்கேயே இன்னும் ரெண்டு நாள் ஆகியிருந்தா, உங்களை என்ன பண்ணறதுன்னு தெரியாம உங்களை அவன் கொலை பண்ணி கூட புதைச்சிருக்க வாய்ப்பிருக்கு” என்று சொல்லி நிறுத்த, அதிர்ந்து போய் தான் அனைவரும் அந்த நீலக்கண் அதிகாரியை ஏறிட்டனர்.

ஒருவரும் பேசாமல் அமைதியாக இருக்க, “ஓகே. டேக் ரெஸ்ட். பரணியை இன்னைக்கு ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. உங்க ஆபீஸ்ல உங்க கண்டிஷன் பத்தி சொல்லி, நீங்க ரெகவர் ஆகற வரைக்கும் லீவ் சேங்க்ஷன் பண்ண ரெகமண்ட் பண்ணியிருக்கோம். சோ, டேக் கேர்” என்று சொல்லிவிட்டு நிமிர்ந்த பெண் அதிகாரிச்சி,

“இனிமேல் ஏதாவது இஷூஸ்ல யார் மேலையாவது சந்தேகம் தோணினா, இன்ஃபார்ம் த போலீஸ். நீங்களா துப்புதுலக்க போறேன்னு வம்புல மாட்டிக்காதீங்க. வீ ஆர் த எக்ஸ்பர்ட்ஸ் ஹியர். இதுக்காகத் தான் நாங்க படிச்சு, டிரெயினிங் எடுத்திருக்கோம். புரிஞ்சதா? பீ ஸ்மார்ட் லைக் மிஸ்டர் வருண் அண்ட் யஷ்வந்த்” என்று மறவாமல் பரணிக்கும் திவ்யாவிற்கும் உறைப்பது போல சொல்லிவிட்டே சென்றனர் காவலர்கள் இருவரும்.

அவர்கள் சென்றதும், மெளனமாக அனைவரும் அமர்ந்திருக்க, “ஐம் ஹங்கிரி. சாப்பிட ஏதாவது வேணும்” என்று நாபி-ஜூன் கூறினாள். “ஐ வில் கெட் த நர்ஸ்” என்று ஓட்டமாக ஓடி நர்ஸை அழைத்து வந்தான் சியோங்-மின். வருணும், யஷ்வந்தும் மாலை டிஸ்சார்ஜின் போது வருவதாகக் கூறி விடை பெற்றனர்.

நர்ஸ் பரணிக்கும், நாபிக்கும் பழரசம் கொண்டு வந்திருக்க, அதை மெதுவாக நாபி குடிக்கும் வரை அவளருகே பொறுமையாக நின்று அவளை அருந்த வைத்துவிட்டு, அவள் உதட்டை துடைத்து, தலையை தடவி என்று ஆதூரமாக கவனித்துக் கொண்டான் சியோங்-மின்.

அவன் சிசுருஷைகளை கவனித்த பரணி, “பேசாம சியோங்-மின்னோட லவ்வரா இருந்திருக்கலாம். எப்படி தாங்கறான் பாரு” என்று பெருமூச்சு ஒன்றுடன் சொல்லிட, அவனை அடிக்க கையை ஓங்கிய திவ்யா, அவன் தலை வரை அடிக்கச் சென்று, உடனே விளையாட்டாக அவன் முடியை கோதிவிட்டு சிரித்தாள்.

இதற்குள் பக்கத்து பெட்டில் படுத்திருந்த நாபி எம்பி, தன் காதலன் உதட்டில் தன்னுதட்டை பொறுத்திக் கொண்டு முத்தமழையை ஆரம்பித்திருக்க, “இந்த திவ்யபாரதிக்கு பதில் நாபியோட லவ்வரா இருந்திருக்கலாம்னு தோணுதே!” என்று பரணி மீண்டுமாய் கூற, இம்முறையும் அவன் கன்னத்தில் அடிக்க கையை ஓங்கிய திவ்யா, குனிந்து அவன் கன்னத்தில் முத்தம் இட்டு, “போதுமா?” என்க,

“அவ என்ன கன்னத்துலையா குடுத்தா?” என்று கண்சிமிட்டி வினவிய பரணி, “சீ போ” என்று அவன் கன்னத்தில் செல்லமாக அடித்து தோளில் சாய்ந்து கொண்ட திவ்யாவை ஒரு பக்கமாகத் தன்னுடன் அணைத்துக் கொண்டவன் அவள் தலையில் அழுத்தமாய் உதடுகள் பதித்தான். அவன் கையணைப்பில் இன்னமும் சுருண்டு கொண்டாள் அவனது திவி.

முற்றும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!