Skip to content
Post Views: 4,047
நான் தேடும் காதல் நீ….8
அன்று தான் தன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார் செல்வம்.அந்த பிரம்மாண்டமான வீட்டின் வரவேற்பறையில் தனியாக விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருக்க,
“ஹாய்…..எப்ப வந்தீங்க சொல்லவேயில்லை….”என்று முழு அலங்காரத்துடன் வந்தார் லதா.அவரை பார்த்து கசந்த முறுவல் ஒன்றை உதிர்த்தவர்,
“எங்க கிளம்பிட்ட அதுவும் காலையிலேயே….”
Advertisement
“எனக்கு கிளப்புல மீட்டிங் இருக்கு….ஓகே நான் கிளம்புறேன்…நீங்க பாருங்க…அப்புறம் நீங்க வந்தவுடனே அப்பா உங்களை பார்க்கனும் சொன்னார்…டையம் இருந்தா அவரை பாருங்க….ஓகே பைய்….”என்றுவிட்டு செல்வத்தின் பதிலை கூட எதிர்பாராமல் அவர் சென்றுவிட,
“ம்ம்…எதை பத்தியும் இவளுக்கு கவலையில்லை….எப்படி தான் இப்படி இருக்காளோ….”என்று தன் தலையில் அடித்துக் கொண்டு தன் மாமனார் இருக்கும் அறை நோக்கி சென்றார்.
மருத்துவ உபகரணங்கள் ஒருபக்கம் இருக்க தன்னை பார்க்க யாரேனும் வரமாட்டார்களா என்று பார்த்தபடி படுகையில் கிடந்தார் ராஜாங்கம்.ஒருகாலத்தில் ராஜாவாக வலம் வந்தவர் தான் இன்று அனைத்தும் இருந்தும் எதுவும் இல்லாதது போல் கிடந்தார்.மனைவி இருந்தவரை தன்னை ஓரளவேனும் பார்த்துக் கொண்டார் அவர் சென்ற பிறகு தன்னை பார்க்க கூட யாரும் வருவதில்லை.
Advertisement
தன்னை கண்டாலே முகத்தை சுழிக்கும் மகளை கண்டு அவருக்கு கண்களில் கண்ணீர் கரைந்தோடும் இவளுக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் ஆனால் இன்று தன்னிடம் மருந்து வாசனை வருகிறது என்று கூறி தன்னை ஒதுக்கி வைப்பவளை பார்க்கையில் நெஞ்சம் விட்டு போனது அந்த பெரிய மனிதருக்கு. திறந்திருந்த கதவையே பார்த்தவர் தன்னை யாரும் பார்க்க வரப்போவதில்லை என்று மீண்டும் விட்டத்தை வெறிக்க தொடங்க,
Advertisement
“மாமா…”என்று அழைத்தபடி வந்தார் செல்வம்.ஒற்றை கை,கால் செயலிழந்து ஒற்றை கையில் தன் ஊன்று கோலை பிடித்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.
“வாங்க மாப்பிள்ளை….”என்று ராஜாங்கம் எழ முயற்சி செய்ய,வேகமாக அவரிடம் நெருங்கிய செல்வம்,அவரை சாய்வாக அமர வைத்துவிட்டு எதிரில் இருந்து இருக்கையில் தானும் தளர்வாக அமர்ந்தார்.
ராஜாங்கம் தன் கையில் இருந்த ரிமோட்டை அழுத்த வேலையாள் ஒருவர் வந்தார் அவரிடம்,
Advertisement
“எங்க இரண்டு பேருக்கும் இஞ்சி போட்டு டீ எடுத்துட்டு வா….”என்று பணித்தார்.அவர் சற்று நேரத்தில் இருவருக்கும் டீயை எடுத்து வந்து கொடுத்துவிட்டு செல்ல,இருவரும் டீயை பருகியபடியே உரையாடினர்.
“எப்ப மாப்பிள்ளை வந்தீங்க….எனக்கு யாரும் சொல்லலை….”
“நேத்து மிட் நைட் வந்தேன் மாமா….”
“சரி மாப்பிள்ளை டாக்டர் என்ன சொன்னாங்க….”
“என்ன சொல்லுவாங்க இனி ஒரு கை,ஒரு கால் தான் எனக்குனு சொல்லிட்டாங்க….”என்று விரக்கத்தியாக கூற,
“எல்லாம் என்னால நான் அன்னைக்கு உங்களை அழைச்சிக்கிட்டு போயிருக்க கூடாது….”என்று வருத்ததுடன் கூறினார்.இரண்டு வருடங்கள் முன்பு இருவரும் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி விட,ராஜாங்காத்திற்கு பலத்த அடி அதில் அவரின் இரு கால்களும் எடுக்கப்பட்டது.செல்வத்துக்கும் ஒற்றை கை மற்றும் காலில் பலமான அடிபட்டதில் அவராலும் இனி நடக்கமுடியாது என்று இதோ மருத்தவர்களும் கூறிவிட மொத்தமாக மனதுடைந்து போனார்.
“விடுங்க மாமா….எல்லாம் நான் செஞ்ச பாவம்…அது தான் இப்ப என்னை தாக்குது…..நான் என் அப்பா,தங்கை,என் மருமகளுக்கு செஞ்சது தான் இப்ப என்னை கொஞ்சம் கொஞ்சமா கொன்னுகிட்டு இருக்கு…..மொத்தமா இந்த உயிர் போறதுக்குள்ள நான் எதாவது செய்யனும் மாமா….”என்று கூற,
“நானும் கேட்பார் பேச்சை கேட்டு என் பிள்ளைகளை தவிக்க விட்டேன்….இனி அதை பத்தி பேச கூட எனக்கு அருகதை இல்லை….”என்ற ராஜாங்கத்தின் முகத்தில் மிதமிஞ்சிய கோபமும்,வருத்தமும் இருந்தது.செல்வத்துக்கும் அவர் தன்னை தான் மறைமுகமாக கூறுகிறார் என்று புரிந்தது.ஆம் செல்வம் தான் காரணம் வைதேகி திருமணத்திற்கு ராஜாங்கத்தை சம்மதிக்க வைத்ததுக்கு கூட ஒரு காரணம் இருந்தது.
தன் தங்கை என்றால் தனக்கு கீழ் இருப்பாள் அது போலவே அவளின் பிள்ளைகளையும் தனக்கு கீழ் வைத்துக் கொண்டால் தனக்கு லாபம் என்று தான் செல்வம் கணக்கிட்டிருந்தார்.அதற்கு நிரஞ்சனும் தன்னால் முடிந்த வரை உதவியும் செய்துவிட்டான் அவனின் ஊதாரிதனத்தால்.
வைதேகியும் அவனை விட்டு பிரிந்து சென்றவுடன் இன்னும் அவனின் உண்மை குணங்கள் வெளிவர துவங்க செல்வம் நினைத்தது போல் நிரஞ்சன் தன் வீட்டிலேயே செல்லா காசாகிவிடட்டான். அவனை வீடு மற்றும் தனது தொழிலிருந்தும் வெளியேற்றி விட்டார் ராஜாங்கம்.இதை எதிர்பார்த்திருந்த செல்வம் நிரஞ்சன் மீண்டும் உள் நுழையாதபடி செய்துவிட்டார்.ஆள் பலமும்,பண பலமும் செல்வத்திடம் இருக்க நிரஞ்சனால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
மொத்தமாக அனைத்தையும் இழந்த நிலையில் இருந்த நிரஞ்சன் மீண்டும் தன் மனைவியிடம் செல்ல பார்க்க நாச்சியப்பனோ அவரை ஆட்களை வைத்து மிரட்டியே அனுப்பிவிட்டார்.அதன் பின் நிரஞ்சன் என்பவன் எங்கு சென்றான் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியாது.
“பணம் மட்டும் இருந்தா போதும்னு நினைச்சேன்….உறவுக்கு முக்கிய கொடுக்காம இருந்தேன்….நான் நினைச்ச மாதிரி நிறையவே சம்பாதிச்சிட்டேன்….ஆனா எனக்கு மன நிம்மதியை அந்த பணம் தரலை மாமா….நம்ம நேசிக்கிற உறவுகள் தான் இன்னைக்கு நமக்கு இருக்குற மிகப் பெரிய பொக்கிஷம்….நான் அந்த பொக்கிஷத்தை இழந்துட்டேன்…..”என்று கூறியவர் தேம்பி அழுதுவிட,அவரை வெறுமையாக பார்த்த ராஜாங்கம்,
“எல்லா தப்பையும் நான் உங்க மேல மட்டும் சொல்ல முடியாது மாப்பிள்ளை என் மேலயும் தப்பு இருக்கு….தொழில் தொழில்னு அதை பார்த்த நான் வீட்டை பார்க்க தவறிட்டேன்…..இனி இதை பத்தி நாம பேசி பிரயோஜனம் இல்லை….இப்ப நடக்குறத பார்ப்போம்…..நிமலன் எங்க….”என்று பேரனை கேட்டார்.
“அவன் யூஸ்ல தான் மாமா இருக்கான்….நம்ம கிளைண்ட் அங்க ஒருத்தர் இருக்கார் அவரோட இன்னைக்கு மீட்டிங் இருக்கு….அதை முடிச்சிட்டு நாளைக்கு தான் வரான்….”
“ம்ம்….சரி நான் கொஞ்சம் படுக்குறேன்…என்னால உட்கார முடியலை….முடிஞ்சா சாய்ந்தரம் வந்து பார்த்துட்டு போங்க….”
“மாமா….வா சொன்னா வந்துட்டு போறேன்….”என்றுவிட்டு அவர் வெளியேற,
“எல்லா தப்பையும் செஞ்சிட்டு இப்ப அதுக்கு பரிகாரம் செய்யலாம்னு பார்த்தா முடியுமா நாம செஞ்சது தப்பில்லை பாவம் அதான் கொஞ்சம் கொஞ்சமா நம்மளை கொன்னுகிட்டு இருக்கு…இதுல என் பேரன் வாழ்க்கையும் போயிடக் கூடாது அது தான் என் கவலை….”என்று தனக்குள் கூறிக் கொண்டே கண்களை மூடியவரின் முன் கோபமான முகத்துடன் தன்னை முறைத்துக் கொண்டே வெளியேறிய தன் பேத்தி தீர்த்தாவின் முகம் மின்னி மறைந்தது.
“உன்னை பார்க்காம இந்த கட்டை வேகாது குட்டிமா….உன்கிட்ட மன்னிப்பை யாசிச்சிட்டு உனக்கு ஒரு நல்ல வழி செஞ்சிட்டு தான் என் உயிர் போகனும்….கடவுளே அதுக்கு எதாவது ஒரு வழி வகை பண்ணு….”என்று கடவுளிடம் முறையிட்டபடி கண்ணயர்ந்தார் ராஜாங்கம்.
தனது மாமனாரின் அறையிலிருந்து வெளியில் வரவும் செல்வத்தின் கைபேசி இசைந்தது அவரின் மேலாளர் தான் அழைத்திருந்தார்.
“ஹலோ சார்….ஹவ் ஆர் யூ….”
“ஐ ம் பைன்…மோகன்….எதுக்கு கூப்பிட்டீங்க…நான் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆபிஸ் வந்துடுவேன்னு உங்க கிட்ட தான் முன்னாடியே சொன்னேனே….”
“தெரியும் சார்….இது ஒரு முக்கியமான விஷயம் அதான் உங்க கிட்ட சொல்லலாம்னு போன் பண்ணேன்….”
“சொல்லுங்க….”என்றவருக்கும் புரிந்தது ஏதோ முக்கியமானது என்று இல்லையென்றால் மோகன் தனக்கு அழைக்கமாட்டார் என்று புரிந்துவிட என்ன என்று கேட்டார்.மோகன் தீர்த்தா உங்களை பார்க்க இரண்டு முறை வந்துவிட்டு சென்றாக கூற செல்வம் பரபரப்பானார்.மோகன் நீண்ட வருடங்களாக இவர்களுடன் இருப்பதால் அவருக்கு தீர்த்தா யார் என்ற விபரம் தெரியும்.
“என்ன சொல்லுறீங்க மோகன் தீர்த்தா வந்தாளா….உங்களுக்கு நல்ல தெரியுமா அது அவ தான்னு….”
“சார் தீர்த்தா என் பொண்ணோட பிரண்ட்…அதனால எனக்கு நல்ல தெரியும்….நீங்க இன்னைக்கு தான் வரீங்கனு சொன்னேன் அதனால ஆபிஸ்க்கு வரேன்னு சொல்லுச்சு….அதான் உங்க கிட்ட சொல்லாம்னு போன் பண்ணேன்….”
“வர சொல்லுங்க மோகன் நான் இதோ கிளம்பிட்டேன்….பத்து நிமிஷத்துல வந்துடுவேன்….”என்றவருக்கு உள்ளுக்குள் படபடப்பு,தீர்த்தா எதற்கு வருகிறாள் என்று.தன் தந்தை இறந்த பிறகு எத்தனை தடவை தீர்த்தாவை பார்க்க முயற்சி செய்தார் செல்வம் ஆனால் அவள் அதற்கு சம்மதிக்கவில்லை.அவளின் கஷ்டம் உணர்ந்து செல்வம் மோகனின் மூலம் மறைமுகமாக உதவ முனைய அதை எப்படியோ அறிந்து கொண்டவள்,
“இவரு யாரு எனக்கு உதவி செய்ய….நாங்க கேட்டோமா எங்களுக்கு உதவி வேணும்னு….தேவையில்லாத வேலை பார்க்க வேண்டாம்னு சொல்லுங்க…திரும்பியும் இப்படி செஞ்சா நான் சும்மா இருக்கமாட்டேன்….அவ்வளவு தான் சொல்லிட்டேன்….”என்று அவரிடம் திட்டி அனுப்பிவிட்டாள்.அதன் பின் செல்வமும் அவளை தொந்திரவு செய்யவில்லை.இந்த சின்ன வயதில் எத்தனை பக்குவமாக பேசுகிறாள் என்று தீர்த்தாவின் மீது நன்மதிப்பு கூடி தான் போனது.
தனது இருசக்கர வாகனத்தை அந்த பெரிய வளாகத்தின் உள் நுழைத்தாள் தீர்த்தா.RR டெக்டைல்ஸ் இன்று சென்னையில் மட்டும் மூன்று கிளைகளுடன் இயங்கி கொண்டிருந்தது.இத அல்லாமல் அயல்நாட்டிலும் இப்போது ஒரு நிறுவனத்துடன் கைகோர்க்க போகிறது என்று நாளிதழில் படித்தவளுக்கு ஒரு விதத்தில் செல்வத்தை நினைத்து வியப்பாக தான் இருந்தது.எப்போதும் தீர்த்தாவின் மனதில் தோன்றும் எண்ணம் தான் இன்றும் தோன்றியது,
“நிச்சயம் திறமையுள்ள மனிதர் தான்….இல்லையென்றால் ஒரு நிறுவனத்தை மூன்றாக பெருக்கமுடியுமா…. அதுவும் தனியாளாக இருந்து….அவர் தன் தங்கை,தகப்பனுக்கு செய்தது துரோகம் தான் அதை மன்னிக்க முடியாது தான் ஆனால் தொழில் துறையில் அவர் முன்னோடி அதை மறுப்பதற்கு இல்லை….”என்று தனக்குள் கூறிக் கொண்டே கட்டிடத்தின் உள்ளே நுழைய இவளுக்காகவே காத்திருந்தது போல்,
“வாம்மா தீர்த்தா…இப்ப தான் மாமா பேசினாங்க…இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க….நீ உட்காரு….”என்று மோகன் கூற,
“சரி அங்கிள்….”என்று கூறிவிட்டு அவர் கை காட்டிய இடத்தில் அமர்ந்தவள் வேகமாக சதாசிவத்திற்கு அழைக்க,அவர்
“ஹலோ தீர்த்தா….நான் அங்க தான் வந்துகிட்டு இருக்கேன்…நீ வெயிட் பண்ணு….”
“சரி அங்கிள் நான் வந்துட்டேன் அதை சொல்ல தான் உங்களுக்கு போன் பண்ணேன்….சீக்கிரம் வாங்க அங்கிள்….”என்று கூறி வைத்துவிட்டாள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்று காலையில் மண்டியை திறக்கும் போதே சற்று நேரம் கடந்து தான் விட்டது.அதிலேயே சற்று கடுப்புடன் தான் அமரன் வந்தான்.இதில் தீர்த்தாவின் கடையும் மூடியிருக்க,
“எங்கடா போனா இவ….அன்னைக்கு என்னடானா என்கிட்ட ஒண்ணும் சொல்லாம கிளம்பிட்டா….இன்னைக்கு இன்னும் கடை திறக்கலை….போ என்னனு பாரு…..”என்று கதிரை விரட்ட,
“இவிங்க சண்டையில என் மண்டை தான் காயுது….”என்று புலம்பி கொண்டே வந்தவன் தீர்த்தாவின் வீடும் பூட்டியிருக்கவும்,
“எங்க போனா இவ….சொல்லாம போகமாட்டாளே….”என்று யோசனையுடனே மண்டியினுள் வர,
“எங்கடா….”என்று கிட்டதட்ட இறைந்தான் அமரன்.காலை எழுந்தது முதலே இன்று எல்லாம் காலம் கடந்திருக்க காபி கூட குடிக்காமல் வந்திருந்தான்.
“ஏன்டா கத்துற…அவ வீட்டுல இல்ல…”
“எங்க போனா….”
“என்னை கேட்டா….என்கிட்ட சொல்லலை….”என்று கதிர் கூற,அமரன் அவனை நம்பா பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
“அடேய்….சத்தியமா என்கிட்ட எதுவும் சொல்லலை….எனக்கு எதுவும் தெரியாது….”என்றுவிட்டு கணக்கு நோட்டை எடுக்க,நோட்டு புத்தகம் ஒன்று கதிரின் கைகளை பதம் பார்த்தது.
“ஆஆஆ….ஏன்டா….”என்று கத்திக் கொண்டே பாவமாக பார்த்தான் கதிர்,
“என்ன நோன்டா….போன் போடு….”
“யாருக்கு….”என்று கதிர் திருதிருவென விழிக்க,
“அவளுக்கு தான்….”என்று எதிரில் அடைக்கப்பட்டிருந்த கடையை கண் காட்ட,
“ஏன் உன் போன்லேந்து போடுறது….”என்றவன் அமரன் அடுத்து கனமான நோட்டில் கை வைக்கவும்,
“இரு இருடா…போடுறேன்…அடிச்சே கொன்னுடாத….”என்றுவிட்டு தீர்த்தாவிற்கு அழைக்க,அவளோ இருமுறை அவனின் அழைப்பை துண்டித்துவிட,
“கட் பண்ணுறாடா…வெளில ஏதோ வேலையா இருக்கா போல….அப்புறம் கூப்பிடவா….. ”என்று கூற,அமரனின் முறைப்பில் மீண்டும் அழைத்தான்,
“யம்மா தாயே…போனை எடுத்துடுமா….இல்லை இவன் இன்னைக்கு என்னை கொன்னாலும் கொன்னுடுவான்…..”என்று கடவுளிடம் வேண்டியவாரே அழைத்துக் கொண்டிருக்க அழைப்பை ஏற்ற தீர்த்தா,
“டேய் போனை எடுக்கலானா….நான் முக்கிய வேலையா இருக்கேன்னு உனக்கு தெரியாது….”என்று காட்டு கத்தலாக கத்த தொடங்க,அவள் அழைப்பை ஏற்றவுடன் பேசியை பிடுங்கியிருந்த அமரனின் முகத்தில் அதுவரை இருந்த இறுக்கம் விலகி குறும்பு புன்னகை மிக மெல்லியதாக அதை யாரும் அறியா வண்ணம் தன் கற்றை மீசைக்குள் அடக்கியவன்,
“அப்படி என்ன வேலை….எங்க இருக்க நீ….”என்ற அமரனின் அழுத்தமான குரலில் மறுபுறம் அமைதி,இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை அவள் கதிர் தான் அழைக்கிறான் என்று அவனிடம் கத்தியவளுக்கு அமரனிடம் எதுவும் பேசமுடியவில்லை.அவளின் அமைதியில் துணுக்குற்றவன்,
“தீர்த்தா….”என்று அழைக்க,
“வேலையா இருக்கேன்…அப்புறம் கூப்பிடுறேன்….”என்று கூறி அவள் வைத்துவிட்டாள்.அணைந்த பேசியை காதில் வைத்தபடி நின்றவனுக்குள் அத்தனை கோபம் மூண்டது கையில் உள்ளதை வீசி சுவற்றில் அடுத்துவிட கைபேசி சுக்குநூராக உடைந்து நொறுங்கியது.
“டேய் ஏன்டா…அச்சோ போச்சே என் போன் போச்சே….”கதிர் புலம்ப அதில் சுயம் பெற்றவனுக்கு அப்போது தான் தான் செய்த காரியம் புரிய தலையில் அடித்துக் கொண்டே தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.புரியாத மௌனம்,புதிரான தருணங்கள் இனி தொடரும் ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்ளும் வரை.
error: Content is protected !!