Skip to content
Post Views: 6,781
மொத்த குடும்பமும் அங்குதான் நின்றிருந்தது கனகசபை ஒரு ஓரமாக அமர்ந்திருக்க அவர் அருகில் அமர்ந்திருந்தார் பழனிசாமி, சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த ராஜகுமாரனின் விழிகள் மனைவியின் மேலே படிந்திருந்தது.
Advertisement
மாமனாரின் அழைப்பை ஏற்று அவள் வந்தபோது கையில் பெரிய கட்டு தலையில் கட்டு, கழுத்துப் பட்டையோடு படுத்திருந்தார் ராக்காயி.
Advertisement
Advertisement
“என்னாச்சு மாமா” என்று அவள் நெருங்க.
Advertisement
“சொந்தத்துல ஒரு மஞ்சள் நீராட்டு… போயிட்டு ஊருக்கு வந்து சோளக்காட்டு வழியா வந்திட்டிருந்தோம் உச்சி வெயிலு ஆள் நடமாட்டமில்ல சரியா காட்டுலயிருந்து மேட்டுல ஏறி ரோட்டுல கால் வெச்சோம் அவ்ளோதான் தெரியும்”.
“எங்கேயிருந்து வந்தானுங்கன்னு தெரியல திடீர்ன்னு அவ கழுத்துல கிடந்த சங்கிலியோடு தாலிக்கொடியையும் இழுத்துட்டானுங்க சங்கிலி சுளுவா அவனுங்ககிட்ட போய்டுச்சு தாலிக்கொடித்தான் அவ கழுத்தோட அப்படியே இழுத்துடுச்சு, அவ தடுமாறி கீழ விழுந்துட்டா பேச்சு மூச்சே இல்ல நான் பதறிட்டேன்”.
“அந்தப் பக்கம் வந்த ஆளுங்கதான் உடனே வந்து தூக்கினாங்க அதே வண்டில அப்படியே இங்க கொண்டுவந்துட்டோம் இவனுங்களுக்கு போட்டா எடுக்கல” என்க சரியாக ராஜா அழைத்துவிட்டான்.
கனகம் விஷயம் சொல்ல உடனே கிளம்பியும்விட்டான், கனகசபையிடம் பெரிதாகப் பணம் இருக்காது வரவுச் செலவு எல்லாம் ராக்காயி கையில் தான் வெளியில் செல்வதால் ஆயிரம் ரூபாய் மட்டும் கையில் வைத்திருந்தார் கணிசமான தொகை கட்ட வேண்டும் மருத்தவமனையில்.
ஒருமணி நேரத்தில் வந்துவிட்டான் ராஜகுமாரன், கணவன் வந்தவுடன் அதைக் கூறி பணத்தை கட்ட வைத்துவிட்டாள், அதற்குள் போலீசிற்கு தகவல் சென்றிருக்க அவர்கள் வந்து வாக்குமூலம் வாங்கிக்கொண்டனர்.
கண்டுபிடிப்பார்கள் என்று பெரிதான நம்பிக்கையெல்லாம் இல்லை அவர்களின் ஒரு கடமை முடிந்தது அவ்வளவே அடுத்த அரைமணியில் யோகனும் வந்துவிட்டான் பின்னாலே மாணிக்கம் ராஜலட்சுமி செல்லியம்மா செவ்வந்தியும் வந்துவிட்டனர்.
தொண்டைவலி உயிர் போனது பேசவே முடியவில்லை ஆனாலும் கஷ்டப்பட்டு அந்த வார்த்தைகளை விட்டார் ராக்காயி “இவ புள்ள உண்டான நேரம் நான் இப்படி வந்து படுத்திட்டேன்” என்று.
அவர் முடிக்கும்முன் “அம்மா” என்று அதட்டலாக வந்தது ராஜாகுமாரின் குரல், மாணிக்கம் மனைவியை முறைத்துவிட்டு மாமியாரை முறைத்தான் செல்லியம்மாவும் பழனிசாமியும் இதுவும் பிரச்னையாகுமோ என்று அஞ்சி நின்றனரே தவிர்த்து எதுவும் கூறவில்லை.
“சும்மாவே இருக்கமாட்டியா அந்தப் புள்ள போய்ச் சொல்லுச்சா அவனுங்ககிட்ட அறுத்துட்டு போங்கன்னு, நீ நகையை வாரிபோட்டுட்டு ஊருக்கே காமிச்சிட்டு வந்திருக்க நோட்டம்விட்டு எவனோ பின்னாடியே வந்து அடிச்சுட்டு போயிருக்கான்”.
“பஸ்ல போகும்போது இப்படி நகை வாரிப் போட்டுட்டு போகாதான்னு எத்தனை தடவை சொல்றது, இன்னொரு தடவ இப்படி பேசின இங்கேயே இருன்னு விட்டுட்டு போய்டுவேன்” என்றான் ராஜா.
செவ்வந்திக்கு கண்கள் கலங்கியது கணவன் ஒன்றுமே பேசாமல் நிற்பதை பார்த்து, கனகம் இப்பொழுது மாமியாரை முறைத்து நின்றாள்.
“டிஸ்சார்ஜ் பண்ண ரெண்டு நாள் ஆகும் கால்ல நல்ல அடி நடக்க கஷ்டம் கொஞ்ச நாள் பெட் ரெஸ்ட்ல இருக்கட்டும், வயசும் இருக்கறதால கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க” என்றார் மருத்துவர்.
வீட்டிற்கு அழைத்துச்சென்றபிறகு எப்படி பார்த்துக்கொள்ள என்ற குழப்பம் இப்பொழுது அனைவருக்கும், செவ்வந்தி அங்கில்லை… இருந்தாலும் அவளால் செய்ய முடியாது சின்ன மருமகளும் இல்லை மகளை அழைக்கலாமா என்று கனகசபை யோசனை செய்துகொண்டிருக்க.
“என்னம்மா நீ பன்னெண்டு வர்ஷம் கழிச்சு நான் உண்டாயிருக்கேன் உன்கிட்ட வந்து கொஞ்ச நாள் சீராடலாம்னு நினச்சா நீ இப்படி படுத்துட்ட” என்றாள் ராஜலட்சுமி.
“ஆத்தி நிசமாவா! ஒத்த புள்ளயோட நின்னு போய்டுமோன்னு நான் வேண்டாத தெய்வமில்லை” என்று கஷ்டப்பட்டு அத்தனை சந்தோஷத்தோடு பேசினார் ராக்காயி.
அவர் மாமியாராக இல்லாமல் போயிருந்தால் வண்ணவண்ணமாகக் கேட்டிருப்பாள் கனகம் ‘உன் மகள் உண்டான நேரம் மட்டும் நல்ல நேரமா மகளின் பிள்ளையை ஒன்றும் சொல்லவில்லை மருமகளை மட்டும் என்ன ஏச்சு’ அவள் விழிகள் அப்படியே கணவனிடம் திரும்ப நெற்றியை நீவிக்கொண்டான்.
“என்ன மாப்ள இதைக்கூட எங்ககிட்ட சொல்லல” என்றார் கனகசபை ஆதங்கமாக.
“உறுதி படுத்திகிட்டு சொல்லுவோம்னு இருந்தோம், நாங்களும் அதுக்குதான் ஹாஸ்ப்பிட்டல் வந்திருந்தோம் நீங்களும் இப்படின்னு கூப்டீங்க” என்றான் அவன்.
மாணிக்கத்தை தோளோடு அணைத்துக்கொண்டு “வாழ்த்துக்கள்” என்றான் ராஜா, அனைவரும் இருவருக்கும் வாழ்த்தைக் கூறினர்.
“இப்போ என்ன பண்றது சின்னவனே உங்க அக்காளை வந்து நிக்க சொல்லலாம்னு நினச்சேன் உங்க அம்மாவைப் பாத்துக்க, இப்போ எப்படி சரியாவரும்” என்றார் அவர்.
அன்னையை ஒருமுறை திரும்பிப் பார்த்தவன் “நர்ஸ் யாரையாவது வெச்சுப்போமா” என்க.
“நான் என்ன நாதியத்தவளா… ரெண்டு ஆம்பள புள்ள பெத்து அருமை பெருமையா வளத்து கல்யாணமும் கட்டிவெச்சேனே இன்னைக்கு நான் படுத்ததும் என்னய பாத்துக்க ஆளு இல்லாம அனாதையா போனேனே” என்று ஒப்பாரியை தொடங்க.
“சம்பந்தி என்ன பேசுறீங்க செவ்வந்தி முழுகாம இருக்கா அவளால செய்ய முடியாது சின்னவ இருக்கும்போது நீங்க இப்படி பேசலாமா, குடும்பனா சண்டை சச்சரவு வரும் போகும், அவங்க தனியா போனதே எங்களுக்குப் பிடிக்கல மாப்ள சொல்லவும் கேட்டுக்கிட்டோம் அவ்ளோதான்”.
“இப்போகூட வந்து செய்யமாட்டேனு சொல்லிடுவாளா அவ” என்று செல்லியம்மா உக்கிரமாகச் சின்ன மகளை முறைக்க அவள் நிர்மலமான முகத்தோடு நின்றிருந்தாள் இங்கு வந்து சேர்ந்த நொடியே அவளுக்குத் தெரியும் பலியாடு தான்தான் என்பது.
செவ்வந்தி வருத்தத்தோடு தங்கையைப் பார்த்தாள், ராக்காயி முகத்தில் வெற்றி புன்னகை மிதப்பாக மருமகளை பார்த்தார் அவரை அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை, பார்க்காமலே அவர் விழிகளின் கேலி அவளைக் குத்தியது.
“இங்கவா” என்று கனகத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியில் சென்றார் செல்லியம்மா.
“அகம் புடிச்ச கழுத என்ன அவளோ திமிரு மாமியார் இப்படி கிடக்குறாங்க வாயத்தொறந்து நான் பாத்துக்குறேன் மாமான்னு சொன்ன உன் கிரீடம் இறங்கிடுமோ, அவங்க மனசு நோகாம நடந்துகிட்டு நல்ல பேரு எடுத்துப் புகுந்த வீட்டில வாழப்பாரு”.
“ஊர் வாயில விழுந்து எழ முடியல நீதான் பாத்துக்கணும், மாப்ள சொல்றதெல்லாம் கேட்டுகிட்டு ஆடாத ஆம்பளைங்களுக்கு ஆயிரம் நினைப்பிருக்கும் அதுக்கு தக்க பொம்பள துள்ளுனா அப்புறம் குடும்பம் வீதியிலதான் துள்ளிக்கிட்டு தெரியணும்” என்றார் அவர்.
“செஞ்ச தப்பை திருத்திக்கப்பாரு கனகம் ஒழுங்கா மாப்பிளையை கூட்டிட்டு வீட்டுக்குப் போ” என்றார் பழனிசாமியும் இருவரையும் ஒருமுறை ஏறிட்டு பார்த்தவள்.
“எனக்கும் என் மாமியாருக்கும் தனிப்பட்ட எந்தப் பிரச்னையும் கிடையாது பெத்து வளத்தவரை அவங்க கேவலமா பேசவும் பாசமும் ரோஷமும் பொங்கிடுச்சு பெத்தவருக்காக அவங்ககிட்ட வம்புக்கு நின்னுட்டேன்”.
“ஆனா நீங்க என்கிட்டே முன்னாடியே சொல்லியிருக்கலாம் அவங்க எங்களைச் செருப்பால அடிச்சா கூட நாங்க பொம்பள பிள்ளையைப் பெத்துட்டோம்னு வெக்கம் மானமே இல்லாம வாங்கிப்போம் அதனால நீ எதுவும் எங்களுக்காகப் பேசக் கூடாது”.
“அதே மாதிரி உனக்கும் மானம் ரோஷம் எதுவும் இருக்க கூடாதுன்னு, பொம்பளையா பிறந்துட்ட ஒரே காரணத்தால தப்பே செய்யலானாலும் தலதாழ்ந்து போகணும்னு நீங்கச் சொல்றதைத்தான் தாங்க முடியல”.
“நான் பெரியவங்கள மதிக்காதவளா குடும்பத்தை நடத்த தெரியாதவளா சமைக்க தெரியாதா வேலை செய்யத் தெரியாதா இல்ல உறவைதான் கட்டி இழுக்க தெரியாதா இது எல்லாத்தயும் விட முக்கியமான ஒண்ணுதான் எனக்குத் தெரியாம போச்சு, சோத்துல உப்பு போட்டுச் சாப்பிட கூடாதுன்னு மட்டும் இவ்ளோ நாள் தெரியல” என்றவள் அப்படியே தளர்ந்து அந்த நீள்விருக்கையில் அமர்ந்துவிட்டாள்.
இத்தனைக்கு பிறகும் தன்னைத்தானே குற்றம் சொல்கிறார்கள் ஒரு பெண்ணிற்கு சுயகௌரவம் இருக்கக்கூடாதா? தப்பென்றால் தப்பென்று அவள் சொல்லக்கூடாதா வாயை மூடிக்கொண்டு இருந்துவிடவேண்டுமா.
அவளின் ஒரு சொல் மட்டுமே குடும்பத்தைப் பிரித்துவிட்டதாகக் கூறி அவளை வலிக்க வலிக்க வார்த்தைகளால் அடிக்கிறார்களே அவள் பேசக் காரணமான பெரிய மனுஷியை யாரும் கேள்வி கேட்கவில்லையே, கணவன் உடன் நிற்கும்போதே இத்தனை ஏச்சுக்கள் இதில் கணவனும் தன்னுடன் நிற்காமல் போயிருந்தால் தன் நிலை தான் என்ன என்று சிந்தனையில் தலை வலித்தது.
“நாங்க என்ன சொல்றோம் நீ என்ன பேசுற பெரியவங்க நாலு வார்த்தை பேசினா பொறுத்து போகணும் நீ என்ன அல்லிராணியா தனியா ராஜ்யம் பண்ண, ஏன் அவங்க நகையைப் பத்தி பேசினா இந்தக் கடைலதான் வாங்கினோம் அத்த பில்லுகூட அப்பாகிட்ட இருக்கும் நீங்க உரசி பாக்குறதுன்னா பாருங்க அப்படின்னு தள்ளி நிக்க வேண்டியதுதானே, உனக்கு எதுக்கு இந்த வாய்க்கொழுப்பு” என்றார்.
அவளுக்கு மண்டை வெடித்தது ‘அப்படிதான் சொல்லியிருக்க வேண்டுமோ தான் அவசரப்பட்டுப் பேசிப் பிரச்சனை செய்துவிட்டேனோ, அவரை அவர் வீட்டிலிருந்து பிரித்துக் கொண்டுபோய்விட்டேனோ அவருக்கும் என்மேல் அந்தக் கோபம் இருக்குமா’ என்றெல்லாம் அவள் மனது அல்லாடத் தொடங்கியது.
அவளைக் குற்றவாளி ஆக்கினார் செல்லியம்மா “ஏன் உன் அக்கா நிக்கல… அவ அந்த வீட்டிலதானே இருந்தா அவ பேசாம இருக்கல இதுக்கே அவ புருஷன் அவளை எப்படி வெச்சிருக்காருன்னு உனக்கே தெரியும், உன் புருஷன் கொஞ்சம் அனுசரணாயா இருக்கவும் ராங்கிக்காரிக்கு திமிர் ஏறிப்போச்சு”.
“குறுக்கால மிதிக்கிறவனா இருந்திருந்தா இப்படி பேசியிருப்பியா இல்ல அந்தப் படியைத்தான் தாண்டியிருப்பியா, ஏதோ புருஷன் நமக்குத் துணையா நிக்குறாருன்னு நினச்சு ஆடாத எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் நாளைக்கே அவர் மனசு மாறலாம்”.
“நாத்தான் தனியா போலாம் சொன்னேன் உனக்கு எங்க போச்சு புத்தி ஒன்னாவே இருக்கலாம்னு சொல்லவேண்டியதுதானேன்னு உன்னையவே கேப்பாரு” என்க.
“போதும்” என்ற கர்ஜனையில் பதறித் திரும்பினர் தம்பதியர்.
“பேசி முடிச்சிடீங்கன்னா கிளம்புங்க” என்றான் ராஜகுமாரன் அவர்களை அழுத்தமாகப் பார்த்து, அன்று தான் அத்தனை பேசியும் இன்று இப்படி அவளைக் கொத்தி திங்கிறார்களே என்று அவ்வளவு ஆத்திரம்.
“மாப்ள” என்ற பழனிசாமியை கை நீட்டி வேண்டாம் என்று தடுத்தவன் “என் பொண்டாட்டிகிட்ட பேசணும் நீங்கப் போங்க” என்றான் மனைவியை மட்டுமே பார்த்துக்கொண்டு.
அவர்கள் விலகிச்செல்ல அவள் அருகில் அமர்ந்தவன் நடுங்கும் அவள் விரல்களைக் கோர்த்துக்கொண்டான், கனகாம்பரம் ஒரு சிறு கேவலோடு அவன் தோள் சாய்ந்தாள் அவளை அப்படியே தன்னோடு இறுக்கமாக அனைத்துக்கொண்டவன் அவள் உச்சியில் இதழ் பதித்தான்.
“பேசறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்க எல்லாத்தயும் மனசுல ஏத்திக்கவும் வேண்டாம் பதில் சொல்லவும் வேண்டாம், தனிக்குடித்தனம் போறது உன் முடிவு இல்ல என் முடிவு, அதுவும் என் அம்மா சொன்ன அப்புறம்தான் அந்த முடிவு… அது எனக்குத் தெரியும் வேற யாருக்கும் நீ விளக்கம் குடுக்க வேண்டிய அவசியம் இல்ல”.
“உன்கூட தனியா வந்துட்டேன்னு ஒரு நாள் கூட நான் வருத்தப்படல சண்டைக்கோழி, உன் கூட ஒவ்வொரு நிமிஷமும் ரசிச்சு ருசிச்சுத்தாண்டி வாழறேன் அதை மத்தவங்களுக்கு படம் போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் எனக்கில்ல, தனியா வந்ததுக்கு அப்புறமும் ஒரு மகனா என் கடைமைல இருந்து நான் தவறவும் இல்ல”.
“உனக்குப் புரியுதுதானே என்னை… என் சந்தோஷத்தை…” என்றான் அவள் விழி பார்த்து, கலங்கிய விழிகளோடு “ஆம்” என்றாள் தலை அசைத்து.
“அம்புட்டுதான் அதைவிடு அது நம்ம ரகசியம் இப்போ வீட்ல நர்ஸ் வெச்சுக்கலாமா” என்றவனை உடனே தடுத்தாள் கனகம்.
“வேண்டாம் நானே பாத்துக்குறேன்” என்க.
“இல்ல உனக்கு…” என்றவனை பேசவிடாமல் தடுத்தவள் “எனக்குக் கடமை இருக்கு என் புருஷனோட அம்மா யாருக்காக இல்லனாலும் உங்களுக்காகப் பாப்பேன்”.
“எல்லா பொம்பளைகளும் அப்படிதான் எங்க மனசாட்சியே எங்களை விடாது, நிம்மதியா ஒரு வாய் சோறு திங்க விடாது தூங்க விடாது உலகத்திலேயே பெரிய பாவத்தை நாங்க செஞ்சுட்டதா அது எங்களைக் குத்தி கிழிக்கும், அத்த மாமா ஏன் பெரிய மாமா என் அக்கா நாளைக்கு அவங்களுக்கு பொறக்குற பிள்ளைங்க அண்ணா அண்ணி கார்த்தி இப்போ வயித்துல இருக்குற பிள்ளை எல்லாமே எனக்கும் சொந்தம்தான்”.
“அவங்களுக்கு ஒரு கஷ்டம்னா எனக்கும் வலிக்கும் கஷ்டம் நஷ்டம் சந்தோசம் துக்கம் எல்லாத்துலயும் நான் கூட நிப்பேன், என் குடும்பம் அது யாரையுமே நான் பாக்கமாட்டேன்னு சொல்லமாட்டேன் என்னைக்குமே சொல்லமாட்டேன்”.
“என் அப்பாவை மரியாதை இல்லாம பேசிட்டாங்கன்னு ஒரு ஆதங்கம் தானே தவிர குடும்பத்தை உடைக்கணும்னு நான் நினைக்கல, தனியா போய்ட்டோம் இனிமே அப்படியே இருந்திடலாம்னும் நினைக்கல”.
“என்னைக்கா இருந்தாலும் நாம அங்கதான் போகப்போறோம் ஒன்னாதான் இருக்கபோறோம் ஆனா இதையெல்லாம் இவங்களுக்கு என்னனு சொல்லி நான் புரியவைக்க அதுதான் எனக்குத் தெரியல” என்றாள் தளர்வாக.
“அம்மா சொல்லனாலும் நர்ஸ் வைக்க நானே ஒத்துக்க மாட்டேன் பாக்கமாட்டேன்னு சொல்ற அளவுக்கு மனசாட்சி இல்லாதவ இல்ல நானு” என்றவள் ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை சமன் செய்து.
“நாம வீட்டுக்குப் போய்டலாம் இனிமேலும் பிரச்சனை வேண்டாம், இந்தப் பேச்சே போதும், மருமக இருந்தும் மாமியாரை பாக்கல பாரு வளர்ப்பு சரியில்ல… அவ புருஷன் பெண்டாட்டி தாசன் ஆயிட்டான் … நாளைக்கு இவ படுக்கமாட்டாளா அப்போ இவளுக்கும் இதே நிலைமைதான்… இப்படி ஆரம்பிச்சு சின்னதா ஒரு குண்டூசி எனக்குக் குத்தினாகூட நான் செஞ்ச பாவம்னு சொல்லிச் சொல்லியே என்னைய சாவடிப்பாங்க”.
“இதுக்குமேல என்னால முடியல” என்றாள் அவளையே பார்த்திருந்தவன் “சரி” என்றதோடு தாயை அனுமத்திருந்த அறைக்குள் சென்றான்.
ராஜா உள்ளே சென்றதும் கணவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அருகில் வந்தாள் ராஜலட்சுமி அருகில் அரவம் உணர்ந்ததும் நிமிர்ந்து பார்த்த கனகம் “வாங்க அண்ணி என்னமோ யோசனை அதான் கவனிக்கல ரொம்ப சந்தோசம் அண்ணி உடம்பை பார்த்துக்கோங்க” என்றாள் உண்மையான சந்தோஷத்தோடு.
“கனகம்…” என்றவள் மீண்டும் கணவனைப் பார்க்க “இங்க என்ன படமா ஓடுது கேளுடி” என்றான் அதட்டலாக.
“என்னண்ணா ஏன் கோவப்படுறீங்க” என்றவள் “என்னண்ணி” என்க.
“இல்ல அன்னைக்கு நாதேன் அம்மாகிட்ட நகையைப் பத்தி சொன்னேன் இவ்ளோபிரச்சனையும் அதனாலதான் என்னய மன்னி…” என்க.
“ஐயோ என்ன நீங்க அப்படிலாம் இல்ல அந்த மாதிரி நடக்கணும்னு இருந்திருக்கு விடுங்க, அதைப் பத்தி திரும்ப என்னத்துக்கு பேசிகிட்டு நீங்க மனசை போட்டுக் குழப்பாதீங்க, ரொம்ப வர்ஷம் கழிச்சு புள்ள தங்கியிருக்கு மனசை சந்தோஷமா வெச்சுக்கணும்”.
“அம்மா முடியாம இருக்காங்க நம்மள யார் பொறந்த வீட்டில சீராட்ட இருக்கான்னு நினைக்காதீங்க, அது என்னைக்கும் உங்களுக்குப் பொறந்த வீடுதான் ரெண்டு தம்பிங்க அவங்க பொண்டாட்டிங்க இருக்கோம் எப்போ வரணும்னு தோனாலும் வந்திடுங்க நான் பாத்துக்குறேன்” என்றாள் உண்மையான அக்கரையோடே.
ராஜலஷ்மிக்கு கண்கள் கலங்கியது அவள் பேசமுடியால் நிற்க “என் பொண்டாட்டி நல்லவதான் சேர்க்க சரியில்ல, தம்பிகளுக்குக் கல்யாணம் ஆகமா இருந்துச்சா இவ ராஜ்ஜியம்தான் அங்க இதுவரைக்கும் அப்போ அப்போ சின்னதா ஏதாவது செஞ்சிட்டு என்கிட்டே வாங்குவா இந்தத்தடவ கூட்டாளி போட்ட சாம்பிராணில கொஞ்சம் அதிகமா ஆடிட்டா”.
“அவளை நீ தப்பா நினைக்காத தங்கச்சி அவ்ளோ கெட்டவ இல்ல” என்க.
கனகம் சிரித்துக்கொண்டே “அதுசரி அவங்கள விட நீங்கதாண்ணே ரொம்ப கவலைப்படுறீங்க, என் புருஷனுக்கு அக்காவாக்கும் அப்போ அவரோட நல்லது அவங்ககிட்டயும் இருக்கும்” என்றாள்.
“அங்கேயும் உன் புருஷனுக்குத்தான் பாராட்டா” என்றான் மாணிக்கம் மூவரும் சிரித்துக்கொண்டனர்.
“நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க ரெண்டு நாள் இங்க இருக்கணும் அப்புறம் வீட்டுக்குக் கூட்டிட்டு போயிடுவோம், அதுக்கப்புறம் வந்து பாக்கலாம் வயித்துல பிள்ளையோட அலையாதீங்க அண்ணி” என்றாள் ராஜலஷ்மியிடம்.
கனகத்தின் கையைப் பிடித்துக்கொண்டு சிறிது நொடிகள் நின்றவள் “பாத்துக்கோ எதுனாலும் உடனே கூப்பிடு உன் அண்ணன் வந்திடுவார்” என்று விடைபெற்றாள், மாணிக்கமும் அவளிடம் தலைஅசைப்போடு அனைவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
“நல்லவதானேடி நீ… எந்த பேய் பிடிச்சிச்சு உனக்கு நீ சொன்னதை கேட்டு உன் அம்மா ஆரம்பிச்சு இப்போ குடும்பமே ரெண்டா கிடக்கு இதுக்குதான் ஆசைப்பட்டியா, என் பொண்டாட்டி நல்லவன்னு நினச்சு இருந்தேன் என் நெனப்புல மண்ணள்ளி போட்டுட்ட” என்று அவளிடம் பாராமுகம் காட்டியே அவள் தவறை உணரவைத்திருந்தான் மாணிக்கம்.
அவளும் அப்படி ஒன்றும் மோசமானவளில்லை ஏதோ நாக்கில் அந்த நேரம் சனி அமர்ந்துகொண்டது அவளின் தோழியும் “இப்போல்லாம் இப்படி கூட ஏமாத்தி கல்யாணம் செய்றாங்க” என்று கொளுத்தி போட்டிருக்க அது இவள் வாய் வழியே ராக்காயின் செவியை அடைந்து வெடி வெடித்தது வீட்டிற்குள்.
மறுநாள் காலை மீண்டும் ஒரு பஞ்சாயத்தை கூட்டியிருந்தார் ராக்காயி அதன் முழுமுதல் காரணம் அவர் இளைய மகன் ராஜகுமாரன்.
“அந்த வீட்டிற்கு நானோ என் மனைவியோ வர மாட்டோம் எங்கள் வீட்டிற்கு நீங்கள் வந்தால் நாங்கள் பார்த்துக்கொள்வோம்” என்று அவன் அழுத்தமாக நிற்க “மாட்டேன்” என்று அவர் நிற்க வெடித்தது பிரச்சனை.
error: Content is protected !!