Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

29.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 29.2

.

 



Advertisement

வெயில் சற்று இறங்கியிருக்கப் பாறைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தான் கௌதமன். பெரிய பாறையால் ஆன குன்றும், அதைச் சுற்றி சிறிதும் பெரிதுமாகப் பாறைகள் இருந்த அந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. ஒரு பெரியவர் ஒரு பாறையில் அமர்ந்திருக்க அவர் கையிலிருந்து ஒழுகிக் கொண்டிருந்த குச்சி ஐசை பார்த்துக் கொண்டே அவர் அருகே அமர்ந்திருந்தது ஒரு குரங்கு. அவர் அதை நீட்ட, பறித்துக் கொண்டு அது ஓட்டம் பிடித்தது. அதைப் பார்த்து அவராகவே சிரித்துக் கொண்டார்.

அடுத்த நிமிடமே மற்றொரு குரங்கு அவர் கையிலிருந்த மாசா பானம் இருந்த பாட்டிலைப் பிடுங்க வந்தது. “உனக்கு ஏன் கஷ்டம்? இந்தா” என அதை நீட்டவும் அதைப் பிடுங்கிக் கொண்டு ஓடியது.

Advertisement

Advertisement

“நீங்க கொடுக்க கொடுக்க எல்லாத்தை உருவிட்டு தான் அது போகும்! மனுஷன விட மோசம்!” என்றான் கௌதமன், அவர் அருகே அமர்ந்து கொண்டே.

சிரித்தார். “மனுஷன விட மோசமா இருக்காது! ஆனா நீ சொல்றத வச்சு பார்த்தா உன்ன சுத்தி நல்ல மனுஷங்க இருக்காங்கன்னு நினைக்கிறேன்” என்றார் புன்னகை முகமாய்.

Advertisement

“ம்ம்.. அப்படியும் சொல்லலாம்!” என்றான் தோளைக் குலுக்கி.  

குரலின் அழுத்ததைக் கவனித்தவர் திரும்பி கௌதமனை பார்த்தார். மெல்லத் தலையைக் குலுக்கி கண்களை மூடி திறந்தவர் மீண்டும் அவனை ஆழப் பார்த்தார். அவனை யார் எனத் தெரியவில்லை. ஆனால் அந்தக் குரல்… மனிதனை நொறுக்கி கண்களைக் கலங்கச் செய்தது.

தலையை உலுக்கியவர், “உன் பேரு என்ன பா?” என வாஞ்சையோடு கேட்க, “கௌதமன்” என்றான் இன்முகமாக.

“டெல்லி பக்கமா வீடு?” என்றவரை பார்த்தவன், “இல்ல சென்னை” என்றான்.

எந்த எதிர்பார்ப்பில் இதை எல்லாம் கேட்டார் என அவருக்குத் தான் வெளிச்சம். “ஓஹ்” என ஆழ மூச்சை இழுத்து விட்டவர் அவன் கரத்திலிருந்த யானை சிற்பத்தைப் பார்த்தார்.

“நல்லா இருக்கே. என் பொண்ணும் இத மாதிரி ஒண்ணத் தான் தேடினா. ஆனா யானைக்குள்ள யானை கிடைக்கலன்னு பெரிய யானை வாலச் சின்ன யானை பிடிச்சுட்டு இருக்க மாதிரி வாங்கி கொடுத்தேன். ரெண்டு கட ஏறி இறங்கி அவ கேட்டத வாங்கி தரலன்னு அவ கையில் இருந்த ஐசையும், ஜூசையும் என் கையில கொடுத்துட்டு கிளம்பிட்டா.” என்றார் பெருமூச்சோடே.

அவர் அருகில், பிரிந்து கிடந்த காகிதத்தின் மேல் அவர் வாங்கியிருந்த அழகான குட்டி கருங்கல் யானை ஆதரவற்று கிடந்தது.

“பக்கத்து சந்துல இருக்க ரெண்டாவது கடையில் இருக்குங்க. கட வாசல் பூரா மஞ்சள், சிகப்பு கலர்ல்ல தோரணம் தொங்கும்.” என்றான்.

“இருக்கட்டும் தம்பி, அவ ஆச பட்டதை எல்லாம் இந்த அப்பாவால வாங்கி தர முடியாதுன்னு அவளுக்கு தெரியணுமில்ல… இருக்கட்டும்” என்றார் மகள் சென்ற பாதையை வெறித்துக்கொண்டே.

அவன் வாய் திறக்கவில்லை. முன்பென்றால் ‘நீ எல்லாம் என்ன தகப்பன்?’ என்றிருப்பான். ஆனால் இன்று? ‘அது என்னவோ சரி தான்’ என்றது மனது. இவனும் முயல்கிறான் மகளுக்கு எல்லாமாக இருக்க. ஆனால் இன்று போல் சில நேரங்களில் முடிவதில்லை. கேட்டதெல்லாம் கொடுத்துப் பழக்கினால் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளத் தெரியாத பெண்ணாக வளர்ந்து நிற்க மாட்டாளா? சற்று நேரம் மௌனமாகச் சுற்றும் முற்றும் பார்த்து அமர்ந்திருந்தனர்.

குரங்கு சப்பு கொட்டி ஐஸ் குச்சியை விழுங்கிக் கொண்டிருந்தது. மற்ற குரங்கு பாட்டிலை எக்குத் தப்பாகத் திருப்பிப் பாதிக் குளிர்பானத்தைக் கீழே ஊற்றிப் பின் மீதியைத் தொண்டைக்குள் இறக்கிக் கொண்டிருந்தது.

“முடிச்சுட்டு அடுத்து யார்கிட்ட இருந்து என்னத்த புடுங்கலாம்ன்னு சுத்துது பாரு!” என்றார் முதல் குரங்கை கைகாட்டி.

“நம்ம வயிற கெடுத்தது பத்தாதுன்னு அதுங்க டேஸ்ட் பட்டையும், வயிறையும் கெடுத்துட்டு இருக்கோம்” என்றான் புன்னகை வழிய.

சுற்றியிருந்த பிள்ளைகளின் கரங்களில் இருந்த ஜூஸ், சிப்ஸ் வகைகளின் எண்ணிக்கையைப் பார்த்தவர், “சரியா சொன்ன! சமீபக் காலமா தான் அடங்காம போயிட்டு இருக்கோம்!” என்றார் ஒரு பெருமூச்சோடே.

குரங்கு ஒரு சிறுவனிடமிருந்து சிப்ஸ் பேக்கெட்டைப் பிடுங்கி, சமத்தாக ஒவ்வொரு சிப்சாக கொறிக்க ஆரம்பித்தது.

“ம்ம்ம் உண்மைத் தான். பசிக்குச் சாப்பிடுறத தாண்டி ருசிக்கு அடிமை ஆகிட்டோம்! அதுவும் எல்லாத்துலயும் அளவுக்கு அதிகமான உப்பு இல்ல சக்கர!” எனத் தலையசைத்தான்.

உப்பு கலந்த வெப்பக் காற்று வீசியது. பெரியவர் பார்வை இலக்கில்லாது எதையோ வெறித்தது. அவன் பெரியவரைக் கவனித்தான். பெரியவர் எதையோ நினைத்து அவ்வப்போது பெருமூச்சு விட, அந்தப் பெரியவரைத் தனியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை கௌதமிற்கு.

இவனது ஆறாவது வகுப்பு தமிழ் வாத்தியாரை இவனுக்கு மிகவும் பிடிக்கும். மாலையில் அவரிடம் டியூஷன் சென்ற காலம் அது. அவரும் வீட்டில் இருக்கும் வேளைகளில் இவரைப் போலவே வெளிர் நிறச் சட்டையும் கருப்பு வேட்டியும் அணிந்திருப்பார். இவன் மருத்துவமனையில் இருந்த வேளைக் காலமானர் எனக் கேள்விப்பட்டான். ஏனோ இவரைப் பார்த்ததும் ‘குட் மார்னிங் இல்ல… வணக்கம் ஐயான்னு சொல்லணும்’ எனக் கற்பித்த தமிழ் வாத்தியார் நினைவில் வந்து சென்றார்.

சற்று நேரம் அவன் அருகே இருந்த யானைச் சிற்பத்தை வேடிக்கை பார்த்தான். அம்மா யானை வாலைப் பிடித்துக் கொண்டு குட்டி யானை நின்றிருந்தது. “என்ன அழகா செதுக்குறாங்க இல்ல?” எனக் கேள்விக்குள்ளே பதிலைத் தேக்கியிருந்தவன், “இது தான் உங்களுக்கு முதல் தரமா இங்க?” என்றான் பேச்சுக் கொடுக்கும் விதமாக.

“இல்ல பா, முன்னமே ஒரு தரம் வந்திருக்கோம். சொந்தக்காரங்க இங்க இருக்காங்க. கல்யாணம் ஆன புதுசுல திருச்சில இருந்து விருந்துக்கு வந்தோம். மகளக் கூட்டிட்டு வரணும்ன்னு சொல்லிட்டே இருப்பா என் மனைவி… இப்போ தான் முடிஞ்சுது! என்ன… அவ தான் இல்ல.” என்றவரின் குரல் கமர, கனைத்துக்கொண்டார்.

‘ஏனாம்? ஏன் அவர் வரவில்லை? என்ன ஆனது இவரின் மனைவிக்கு?’ கௌதமிற்கு நா வரை வந்த கேள்விகளை அடக்க முயன்று கொண்டிருந்தான்.

நேற்றிலிருந்தே நடக்கும் காரியங்கள் அவரின் அழுத்தத்தை அதிகமாக்கி இருக்க, அவருக்கு மனைவியின் நினைவு அதிகமாகத் தாக்க அது முகத்தில் தெரிந்தது. தவிப்பும் சோகமும் கலந்த கலவையான முகபாவம். பாரத்தை இறக்க மனைவியின் மடி இல்லாது மனிதன் துவண்டு போயிருந்தார். இப்படியே போனால் மீண்டும் இதயத்தைப் பிடித்துக் கொண்டு சாய்ந்துவிடுவேனோ என்ற பயம் ஒருபுறம்.

“அவங்க…” என அவன் இழுக்க, எங்கோ பார்த்தார். “அதோ அந்தப் பாறையில தான் உக்காந்து கதைப் பேசினோம். அடுத்த மழைலயே கலைஞ்சுடும்ன்னு தெரிஞ்சும் குட்டி ஹார்ட் வரைஞ்சு அதுக்குள்ள சிஎ-ன்னு சுருக்கமா எங்க பேர எழுதி வச்சோம். பாறையும் இருக்கு, நானும் இருக்கேன்.” என்றார்.

‘அச்சோ’ என அந்தப் பாறையை பார்த்தான். வாலிப வயது இவரையும், இவர் மனைவியையும் தாங்கியிருந்த பாறை இவரைப் போல் மாறியிருக்கவில்லை. எத்தனை எத்தனை மனிதர்களைப் பார்த்திருக்கும் இந்தப் பாறை? எத்தனைக் காதல் கதைகள் இருக்கும் அதற்கு உரைக்க? அவன் கவனத்தை மீண்டும் அவரே இழுத்து வந்தார்.

“நல்ல அழகி என் மனைவி. அதிகம் படிச்சவ. அறிவாளி. மனுஷங்கள இனம் காண அவளுக்கு நல்லா தெரியும். அவ இருந்து இருந்தா இன்னைக்கு இங்க வந்து என் மனசு ஒடிஞ்சு உக்காந்து இருக்க மாட்டேன்.” என்றார்.

‘எல்லா வரியையும் இப்படிச் சஸ்பன்சாகவே முடிக்கணுமா பெரியவரே! கௌதமனுக்கு அவர் ஏன் மனம் ஒடிந்து அமர்ந்திருக்கிறார் எனத் தெரிந்தாக வேண்டும். “என்னாச்சு?” என்றான்.

ஆதரவான அழுத்தமான குரலுக்குச் சொந்தக்காரனைப் பார்த்துப் புன்னகைத்தார். அவனும் அவரை பார்த்தான். முகத்தில் பொலிவு இல்லை. மிகவும் சோர்ந்திருந்தாலும் மனிதர் பார்க்க நன்றாகவே இருந்தார். 

அவரின் சோகம் கலந்த அந்தப் புன்னகை முகம் அவனை வெகுவாக அசைத்தது. அவர் மேல் துளிர்க்கும் அன்பை அவனால் உணர முடிந்தது. ஏன் எனத் தெரியவில்லை. 

“என்னங்க ஐயா சிரிக்கிறீங்க?” என அவனும் புன்னகைத்தான்.

அவன் குரலும், அவன் அழைப்பும் அவர் குரல்வளையை ஏறி இறங்கச் செய்தது. அவனை இழுத்து அணைத்துக் கொள்ள மனம் ஆசை கொண்டது. 

“சொல்லு நீ என்ன பண்ற? வேலைக்குப் போறியா?” என்றார் வாஞ்சையாக.

“இல்லங்க ஐயா, காலேஜ்.” என்றவனை அவர் பார்த்த பார்வையில் அத்தனை ஆச்சரியம்.

“என்னங்க ஐயா பார்வ இது?” என அவன் புன்சிரிப்பை உதிர்க்க,

“உன் உடம்ப பார்த்ததும் நீ படிச்சு முடிச்சிருப்பன்னு நினைச்சேன்.” என்றார் அதே புன்னகையோடே.

“அது… என் வீட்டிலேயே ஜிம் இருக்கா… அம்மா கூடச் செய்வேன். நானும் என் ஃப்ரெண்டும் ரெகுலரா இன்டென்ஸ் வர்க் அவுட் செய்யறோம். ஃபுட் பால்… வாலிபால்ன்னு விளையாடுவோம். அதுதான் இப்படி…” எனப் புஜத்தைத் தூக்கிக் காட்டினான்.

“என்ன 15 இன்ச் இருக்குமா?” என்றார் அதைப் பார்த்து.

“16.5! இன்னும் 0.5 ஏத்தணும்.” என்றான் கையை முறுக்கிக்கொண்டே.

“இப்போவே பாக்க கண்ணுக்கு நிறைவா இருக்க. இப்படியே மெயின்டெயின் பண்ணு போதும் ரொம்ப எல்லாம் ஏத்தாத.” என்றார்.

“ம்ம்ம்” எனப் புன்னகைத்தான். ஆம், அப்படித் தான் இருந்தான். தலைக் கொள்ளா கேசமும், மின்னும் கண்களும், களையான முகமும், வசீகரிக்கும் நிறத்தோடு கட்டுக்கோப்பாக, தேக்கு கட்டைப் போல் திடமாக… நன்றாகவே இருந்தான்.

“நானும் சின்னதுல இந்த வேலை எல்லாம் செய்வேன். முளக் கட்டின மூக்கு கடல என்ன… ஊற வச்சப் பயிற சாப்பிடுறது என்ன… தண்டாள் எடுக்கிறது என்ன…” புன்னகைத்தவர், “எல்லாம் அந்தக் காலம்.” என்றார்.

“இப்போவும் நல்லா இருக்கீங்க ஐயா,” என்றான் உண்மை மறையாது.

புன்னகையோடே, “அப்பிடியா?” என்றவர், “நல்லா பேசற” என்றார். “இருபது… இருபத்தி ஐஞ்சு வருஷம் முன்ன இருந்தேன் உன்ன மாதிரி. எல்லாம் அப்போ அவளுக்காக…” எனச் சிரித்தார்.

“லவ்வா?” என அவனும் சிரித்தான்.

“அப்போ நாங்க ஃப்ரெண்ட்ஸ் மூணு பேர். ஒரு வீட்டு மாடில தங்கிப் படிச்சோம். பாதி மாடிக்கு வீடு இருக்கும். மீதி மாடியில ஹௌஸ் ஓனர்ப் பொண்ணு அஞ்சாறு தொட்டில ரோஜா செடி வச்சிருப்பா, அத தவிர மாடி ஃபிரியா இருக்கும். வீட்டுல இருக்கும் போது, எங்க சாயாங்கலம்… காலைப் பொழுதுன்னு அந்தக் காலி இடத்துல தான் இருக்கும்.

பக்கத்து வீட்டுல தான் அவ இருந்தா. முதல் முதலா அவ கோலம் மூலமாத்தான் அறிமுகமானோம். பெரிய பெரிய கோலம் போடுவா. கலர்க் கலரா அவ்வளவு நேர்த்தியா… அவ்வளவு அழகா இருக்கும். அவள மாதிரியே…” லயித்துக் கூறினார் மனிதன்.

“அவ கோலம் போடற அழகப் பார்த்துட்டே இருக்கலாம் காலம் பூரா…” கண்கள் மூடியிருக்கப் புன்னகைத்தார்.

“பாத்ததும் காதலா?” என்று அவரின் கனவைக் கலைத்தான்.

“கேளு…” என்றவர், “விடிஞ்சும் விடியாத காலை நேரம் அது. பால் வாங்க சைக்கிள் எடுத்துட்டுக் கிளம்பினேனா, அப்போ மாடில இருந்து ஒரு தடியன், ‘டேய் அரவிந்தா’ன்னு கூப்பிட்டானா, ‘என்ன டா’ன்னு மாடிய பார்த்துட்டே சைக்கிள ஓட்டிட்டுப் போனேனா… அப்போ தான் அவ அழகா கலர்க் கோலம் போட்டு… நடுவுல சாணி வச்சு அதுக்கு பூசணி பூவெல்லாம் வச்சுட்டு எழுந்தா. நானும் மாடில இருக்கவன் வாயப் பார்த்துட்டே நேரா சைக்கிளச் சாணிமேல விட்டுட்டேன். ஒரே சருக்கா சருக்கி நேரா அவ கால்ல விழுந்தேன்!”

அவர் முடிக்கும் முன் கௌதமன் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தான். “அப்போ விழுந்தவன் எழுந்திரிக்கவே இல்ல” என அவனோடு அவரும் இணைந்து கொண்டார்.

“அப்பறம்?”

“அப்பறம் என்ன? அவ கைல இருந்த தொடப்ப, பக்கெட், கலர் போடி எல்லாம் என் தலையில!”

ஏனோ இருவராலும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. “அப்போ எனக்குப் பொண்ணுங்கனாலே பாக்கத் தூண்டுற வாலிப வயசு. அந்தத் தெரு பூரா கோலம் போட்டுகிட்டு வயசு பொண்ணுங்க. என் மானமே போச்சு!” கூறிக்கொண்டே சிரித்தார்.

“’அச்சச்சோ…’ன்னு அவ சொல்லி முடிக்கதுக்கு முன்ன அவ வாயப் பொத்திட்டு கண்ணுல கண்ணீர் வரச் சிரிக்க… நான் அசடு வழிய… ஹாஹாஹா.” என வாய் விட்டு மனிதன் சிரித்தார்.

“ம்ம்ம் அப்பறம்?” அவனால் அடக்கவே முடியவில்லை உடல் குலுங்குவதை.

“அப்பறம் என்ன… பொங்கலுக்கு ஊருக்குப் போயிட்டு வந்த அடுத்த நாள் அவ எழுந்துக்கதுக்கு முன்னமே ஊரெல்லாம் தேடி, சாணிய அள்ளிக்கிட்டு… எனக்குத் தெரிஞ்ச மாதரி கோலம் போட்டு சாணிக்கு ரோஜா பூ வச்சுட்டு வந்தேன்!”

“அவங்க இம்ப்ரெஸ் ஆகிட்டாங்களா?” இன்னுமே சிரிப்புத் தான் கௌதமனுக்கு.

“அன்னைக்கு அவங்க வீட்டு வாசல்ல மட்டும் தான் கேவலமான கலர்க் கோலமும்… சாணியும்!”

“ஏன்?”

“மார்கழி மாசம் முடிஞ்சா யாரு காலையிலயே கலர்க் கோலம் போடுவா? என்னைத் தவிற?”

“திரும்பவும் பல்பா?”

“அப்படியும் சொல்லலாம். இல்லன்னும் சொல்லலாம்… ஏன்னா அதனால தானே என்னை ஆர்வமா கவனிச்சா அவ!” கூறியவர் அவர் மனைவியின் நினைவில் மூழ்கிப் போனார்.

“அவ வீட்டுக்கு அடுத்து இருந்த அந்த வீட்டுக்கு வாடகைக்குப் போன புதுசுல, சாயங்காலம் அவ சரிகம-ன்னு ஆரம்பிச்சாலே பஞ்சிய காதுல வச்ச நானே அந்தக் குரலுக்கு ஒரு நாள் அடிமையாவேன்னு நினைக்கல.”

“ஓஹ்… பாடுவாங்களா?”

“ம்ம்ம்… ரொம்ப அழகா. எப்போ அவளப் பிடிக்க ஆரம்பிச்சுதுன்னு தெரியல. ஆனா அவளப் பிடிக்க ஆரம்பிச்சப் பிறகு தான் தெரிஞ்சுது அவள மாதிரியே அவ குரலும் அழகுன்னு. அதுக்கு ஒரு கூட்டமே அந்தத் தெருவுல சுத்துன்னும் அப்பறம் தான் தெரிய வந்தது. தினமும் சாயங்காலம் ஆனா அவ வீட்டு மொட்டை மாடில வேப்ப மரத்து நிழல்ல உக்காந்து குட்டி பசங்களுக்குப் பாட்டு சொல்லித் தருவா… நான் எங்க வீட்ட ஒட்டி இருக்கச் சிமெண்ட் மேடைல உக்காந்து கேப்பேன். கண்ணன் பாட்டு அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். தன்னையே மறந்து பாடுவா. கண்ண மூடி கேக்க ஆசையா இருந்தாலும் அவளப் பாக்க கிடைக்கிற சான்ச விடமுடியாதே. அவ கண்ண மூடி கண்ணன ரசிக்க, நான் அவள!” கூறிக்கொண்டிருந்தவர்க் கண்கள் திறந்திருந்தாலும் அவர் முன் அந்தப் பெண்மணி தான் தெரிகிறாரோ எனக் கௌதமனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

“அவங்கட்ட உங்க விருப்பத்த சொன்னீங்களா?”

“ப்ச் ப்ச்… அவ்வளவு தைரியம் எல்லாம் இல்ல. அவளுக்கு என்னைத் தெரியாது. திடீர்ன்னு போய் என்னன்னு சொல்லுவேன்?”

“அப்பறம் எப்படித் தான் அவங்களுக்கு உங்க விருப்பம் தெரிஞ்சுது?”

“படிப்ப முடிச்சுட்டு ஒரு நாலு மாசம் சொந்த ஊருக்குப் போயிருந்தேன். வேலைக் கிடச்சு திரும்பி வந்த மறுநாளே எங்க வீட்டுக்காரங்க வீட்டுல கொலுன்னு மாடில குடியிருந்த எங்க மூணு பேரையும் கூப்பிட்டிருந்தாங்க. அங்க போய் என்னத்த பாக்கன்னு கடுப்பா இருந்தாலும் பாசமான வீட்டுக்காரங்களாச்சே… போகாம இருக்க முடியுமா?” கேள்வியை முன்வைத்தவர், நிறுத்திச் சிரித்தார்.

“ஹாஹா… என்ன கத விடுறேன் பாரேன். பாசம் எல்லாம் ஒரு சாக்கு. காபிக்கு, சுண்டல் தருவாங்களேன்னு போனோம்.” என அவர் வாய்விட்டுச் சிரித்தார்.

“அப்போ போனிங்களா?” என இவன் ஆர்வப் பார்வைப் பார்க்க, “தேங்கா மாங்கா போட்ட சுண்டல் வாசம் வந்த பிறகும் போகாமலா? போனோம்.” எனப் புன்னகைத்தார்.

“வீட்டுக்குள்ள நுழையும் போதே கண்ணன் பாட்டு காதுல விழுந்துது. அதே கரகரத்த குரல். பாடிட்டு இருந்தவ மேல இருந்து என் கண்ண எடுக்கவே முடியல. கண்ண மூடிட்டுப் பாடிட்டு இருந்த அந்த முகத்துல என்ன ஒரு முகபாவம்ன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல. கண்ணனோட காதலி கூட அப்படி ஓர் உணர்வ முகத்தில காட்டி இருக்க மாட்டா!

கண்ணனத் தொலச்ச ஒரு உணர்வோட பாடிட்டு இருந்தவகிட்ட இருந்து என்னால கவனத்த திருப்ப முடியல.

‘கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்

கண்ணனழகு முழுதில்லை

நண்ணு முகவடிவு காணில் – அந்த

நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்

கண்கள் புரிந்து விட்ட பாவம்

உயிர்க் கண்ணன் உரு மறக்கலாச்சு

பெண்கள் இனத்தில் இது போலே

ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ.

ஆசை முகம் மறந்து போச்சே

இதை ஆரிடம் சொல்வேனடி தோழி…’ன்னு பாடிட்டே இருந்தவ சட்டுன்னு என் இருமல் சத்ததில கண்ண திறந்தா… அவ பார்வ என் கண்ணுல வந்து நின்னுச்சு.

அந்த நிமிஷம் எனக்குள்ள என்ன நடந்துதுன்னு இன்னுமே எனக்குத் தெரியல. நீர்த் திரையிட்டிருந்த அந்தக் கண்ணும், துக்கத்திலக் கரகரத்த அந்தக் குரலும்… அவ என்னை நினைச்சுத் தான் பாடினான்னு யாருமே எனக்குச் சொல்ல வேண்டியிருக்கல. அந்தப் பார்வை மனசுக்குள்ள நங்கூரமா இறங்கிப் போச்சு! அவளும் தான்!”

“அப்போ உங்களது ஒன் சைட் காதல் இல்லையா? தேங்க் காட்!” என அவரைப் பார்த்தான். அவர் அவரின் காதலியின் நினைவில் அமர்ந்திருந்தார். காதல் இத்தனை அழகானதா என நினைத்தான். அவன் கனவில் வரும் காதல் போல் இவர் காதலும் ஆழமும் அழுத்தமாகவும் தோன்றியது. அவரின் காதல் போல்… அவர் மனைவியின் மீது அவர் கொண்டிருந்த அந்த ஆழமான காதல் போல், தன் காதல் என்று மாறும்?

“அவங்க தான் உங்களுக்கானவங்கன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“உலகத்திலேயே அழகான இடத்தில தங்கினாலும்… எந்தன காஸ்ட்லி ஹோட்டல்லத் தங்கினாலும்… நம்ம வீட்டுக்குள்ள நுழையும் போது ‘அப்பாடா… வந்துட்டோம்’ன்னு ஒரு நிறைவு கிடைக்கும் தெரியுமா? அந்த நிறைவ அவட்ட உணர்ந்தேன். என் நிறைவு… நிம்மதி என் மனைவி” என்றவர் நா தழுதழுத்தது.

நெஞ்சுக்குள் ஏதோ பிசைய, அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான் கௌதமன்.

“எங்க வாழ்க்கையோட பரிபூரணமா… கண்ணுக்கு அழகா… எங்க ரெண்டு பேரையும் உரிச்சு வச்சு, புத்தம் புது மலரா என் மக பிறந்தா. பேபி பிங்க்ன்னு சொல்லுவாங்களே… அப்படி ஒரு நிறத்தை முதல் முதலா பார்த்தேன். என்னை அப்பான்னு கூப்பிட போற அந்தக் குட்டி ரோஜா நிற வாய என் கன்னத்தோட வச்சுகிட்ட அந்த நோடி இருக்கே… ஆஹ்!

குட்டி பாப்பா என் கைக்குள்ள அடங்கிப் போனா. என்னை இறுக பிடிச்சுக்கிட்ட அந்தக் குட்டி கைக்குள்ள என் உலகம் அடங்கிப் போகும்ன்னு நான் நினைக்கவே இல்ல. என் மகள என் கையில ஏந்தின அந்த நிமிஷம்… அந்தக் குட்டி கண்ண விரிச்சு என்னைப் பார்த்த அந்த நிமிஷம்… என் உணர்வ என்னால சத்தியமா வார்த்தையால சொல்லவே முடியாது. உனக்கும் ஒரு நாள் நான் சொல்றது புரியும்.” எனப் புன்னகைத்தார்.

அவன் குட்டி யாழியின் குட்டி கொட்டாவியும், கண்களைத் திறக்காமலே அவன் விரலை இழுத்துச் சூப்ப முயன்றதும், குட்டி குட்டி கண்கள் உருட்டி அவனைப் பார்த்ததும், அவனுள்… அவன் கதகதப்புக்குள் ஒண்டிக் கொண்டதும் என அனைத்தும் அவன் கண்முன் வர மகளை முதன் முதலாகக் கையில் ஏந்திய தினத்திற்குச் சென்று வந்தான் கௌதமன்.

உடல் புல்லரிக்க அவனும் புன்னகைத்தான். “என் மகளுக்கு ரெண்டர வயசாகுது ஐயா” என்றவனை நம்பாத பார்வைப் பார்த்தவர் முகத்தில் ஆச்சரியப் புன்னகை.

“உண்மைங்க ஐயா” எனக் கைப்பேசியில் இருந்த மகளின் புகைப்படத்தைக் காட்டினான்.

“குட்டி தேவதை மாதிரி இருக்காங்க” என்றவர் முகத்தில் புன்னகை விரிந்தது. சின்னகுட்டியின் முகத்தை வாஞ்சையோடு பார்த்தவர், “இப்படி ஓர் அழகை இருபது வருஷம் முன்ன பார்த்திருக்கேன்.” என்றார் குரல் கமர.

மகளின் புகைப்படங்களைக் காட்டி, ‘என் மக இப்படி… என் மக அப்படி’ என மகளின் பெருமைகளைப் பாடியவனை வாஞ்சையோடே பார்த்தார் பெரியவர். ‘ம்ம்’ போட்டுக் கொண்டே அவன் கூறியதை எல்லாம் சிரிப்போடே கேட்டுக் கொண்டிருந்தார்.

“அன்னைக்கு விடியற்காலையில தூங்கிட்டு இருக்கும் போது ஏதோ வாசனை. வாசனை அதிகம் ஆகவும் அடிச்சு பிடிச்சு எழுந்தா… ரூம் ஸ்பிரே மாதிரி, என் பேபி என்னோட அசாரோ மோஸ்ட் வான்டெட் பர்ஃபம்ம ரூம் பூரா அடிச்சுட்டு இருக்கா! என்னைப் பார்த்ததும், ஓடி வந்து என் மடியில் உக்காந்து  ‘அப்பா மாடியே லூமும் சூப்பல் வாச்சன’ன்னு மூக்க இழுத்து காட்டுறா! என்ன பண்ண முடியும்? நான் அழுதுட்டேன்.” என்றவன் வயிறு குலுங்கச் சிரிக்க, அவன் சிரிப்பு அவரையும் தொத்திக் கொண்டது.

யாழியின் வீர தீர சாகசங்களை கேட்டவருக்கு அவரின் செல்ல மகளின் சேட்டைகளை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்ட இந்தக் குட்டி நண்டின் மீது அலாதி ஆசை பிறந்தது. அவன் கூறியதை எல்லாம் சிரிக்கக் சிரிக்க கேட்டுக் கொண்டார் அரவிந்தன்.

நினைவு வந்தவனாக, கதை கேட்டுக் கொண்டிருந்தவன், விட்ட இடத்தை எடுத்துக் கொடுக்க, மீண்டுமாக அவர் கதையைத் தொடர்ந்தார்.

“அன்பான மனைவி, உயிர் வரைக்கும் இனிக்க வைக்கிற மக… உலகம் அதை விட அழகா இருக்க முடியுமா என்ன? உலகத்திலேயே என்னைவிட அதிர்ஷ்டசாலியோ சந்தோஷமானவனையோ பார்க்கவே முடியாதுன்னு கர்வம் கூடப் பட்டதுண்டு!” மெல்ல நகைத்தவர், “உனக்குப் புரியுது இல்ல நான் சொல்ல வரது?” என்றவரிடம், ஆம் என்பதாகத் தலை அசைத்தான்.

மனிதனின் உலகமே அவரின் மனைவியும் மகளும் தான் போலும் என எண்ணியவனுக்கு இவரைப் போலவே தானும் மாறிவிடு ஆசை எழுந்தது. அதன்பின் அவர் கதையோடு அவரையும் ரசித்தான் கௌதமன்.

அவர் பேசினார். அவன் கேட்டான். அவரின் கடந்த காலம் அவன் முன் விரிந்து ஒரு வித பிரமிப்பை ஏற்படுத்தியது. திரை உலகில் நுழைய இருப்பவனுக்கு, இப்படியான ஒரு காதலைக் காவியமாக அனைவருக்கும் காட்டத் தோன்றியது. இத்தனை ஆண்டுகள் இல்லாத ஆசையாக ஒரு காதல் காவியத்தைப் படம் எடுத்தால் என்ன என மனிதன் தோன்ற வைத்தார். அவர் மௌனமான பின்னும் அவனால் இம்மி நகர முடியவில்லை. கட்டுண்டு அமர்ந்திருந்தான். பார்த்ததும் காதல் போல், இது என்ன… இவரைப் பார்த்ததும் இப்படி ஓர் உணர்வு தனக்குள்?

அவருக்கும் அப்படி தானோ என்னவோ… வருடங்களுக்குப் பின் காணும் தோழனிடம் கடந்த காலத்தைக் கொட்டி அசைபோடுவது போல் அவனிடம் அவரின் மனதைக் கொட்டிக் கொண்டிருந்தார்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!